மலேசிய இலக்கியம், மலேசிய படைப்பாளிகளின் படைப்புகள் குறித்து மிகவும் காத்திரமான விமர்சனத்தை முன் வைத்து எழுதக்கூடிய பல படைப்புகளை வல்லினத்தில் நான் படித்திருக்கின்றேன். பழம்பெரும் எழுத்தாளர்களைக்கூட தயவுதாட்சண்யம் இல்லாமல் விமர்சிக்ககூடிய சிற்றிதழாக வல்லினம் மலேசியாவில் வந்தது. அவர்களோடு எனக்கும் தொடர்பு ஏற்பட்டு இதையொட்டிய என்னுடைய கருத்துகளையும் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களின் கருத்துகளில் நேர்மையையும் தெளிவையும் பார்க்க முடிந்ததால் நானும் அவர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்துக்கொண்டேன். மலேசிய நாளிதழ்களில் வெளிவந்த மிகவும் தட்டையான சிறுகதைகளை படிக்க நிறுத்திய காலமது. 2010 என நினைக்கின்றேன். அந்தக் காலக்கட்டத்தில் வல்லினம் மூலமாக உலக நாவல்கள், உலக சிறுகதைகள் குறித்த கருத்தாடல்கள், விமர்சனங்கள், இந்திய இலக்கியம் குறித்த பேச்சு, தமிழில் மூத்த எழுத்தாளர்கள், முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விவாதம் என வல்லினம் முன்னெடுத்தது. அவர்களில் பலரை மலேசியாவிற்கு வரவைத்தும் அவர்களுடன் உரையாடல்களை நடத்திய பெருமை வல்லினத்தைச் சாரும். மலேசிய இலக்கிய வரலாற்றில் முக்கியமான மைல்கல் இந்த வல்லினம். விமர்சனங்களை முன் வைக்கும் போது அடிக்கடி நவீனிடம் நான் சொல்வது, எந்த காரணத்திற்காகவும் தனிமனித தாக்குதலாக இருக்கக்கூடாது என்பதுதான். நிச்சயமாக வல்லினம் முன்வைப்பவை இலக்கிய விமர்சனமாக இருக்குமே தவிர தனிமனித தாக்குதலாக இருப்பதில்லை. இருந்தாலும்கூட அந்த விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளாத பழம்பெரும் எழுத்தாளர்கள் குறைப்பட்டுக் கொண்டார்கள். வல்லினம் இணைய இதழ் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு, நல்ல தீவிர இலக்கியங்களை வெளி கொணர்வதற்கும் உலக இலக்கியம் குறித்து பேசுவதற்கும், இந்திய இலக்கியம் குறித்து அறிவதற்கும் ஒரு கருவியாக இருப்பதால், தொடர்ந்து மலேசிய மண்ணில் வல்லினம் செயல்பட எனது வாழ்த்துகள்.