‘வல்லினம்’ தமிழ்ச் சொல்லினம்

18699871_1567629689916770_7273487555918747846_n-1எனது முதல் வெளிநாட்டுப் பயணமும் மலேசியச் செலவும் 2010 ஜனவரி  இருபத்தெட்டாம் நாள் அதிகாலை 12.05க்குச் சென்னையில் துவங்கியது. ஜெட் ஏர்வேஸ். திரும்பி நான் சென்னையில் இறங்கியது பிப்ரவரி  எட்டாம் நாள் காலை ஆறு மணிக்கு. இத்தனை துல்லியமாக ஏழாண்டுக்குப் பிறகும் நினைவிருக்குமா என்று கேட்பீர்களேயானால், எல்லாம் கடவுசீட்டில் இடப்பட்ட முத்திரிகைகள் காரணம். மொத்தம் பன்னிரெண்டு நாட்கள். இதில் பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை இடையே ஒரு தாய்லாந்து பயணமும் அடக்கம். இவற்றுள் முதல் ஏழு நாட்கள், மலேசியப் பயணத்தின்போது மட்டும், எங்கள் குழுவில் ஜெயமோகனும் இருந்தார்.

பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூசப் பெருநாள் கண்ட பிறகு, துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களின் தொகுதியான தாப்பா போய்த் திரும்பிக் கொண்டிருந்தோம். டத்தோ சரவணன் மலேசியத் தமிழர். மலேசிய நாட்டு அரசியல்வாதி, அமைச்சர், என்றாலும் தமிழ் நாட்டு மூட ஜென்மங்கள் போலன்றி, நுட்பமான மரபிலக்கிய, சமய இலக்கியத் தேர்ச்சியும் சமமான நவீன இலக்கிய வாசிப்பும் உடையவர். எங்கள் மலேசியச் செலவுக்கு மூலகாரணமும் அவரே! எங்கள் குழுவின் பிற உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், இலக்கிய சொற்பொழிவாளரும் ஆன த.இராமலிங்கம், மரபின் மைந்தன் முத்தையா, ‘கல்கி’ வார இதழின் சார்பில் சந்திர மௌலி மற்றும் இளம் படைப்பாளியான கனக்கதூரிகா வந்திருந்தனர்.

தைப்பூசத்தின் மறுநாள் என்று நினைவு. தாப்பா சென்று, டத்தோ சரவணன் பங்கேற்ற சில தொகுதி நிகழ்ச்சிகளில் சாட்சிப்பட்டு, மாலை கோலாலம்பூர் திரும்பிக் கொண்டிருந்தோம். பெருநகரை நெருங்குவதற்கு முன்பு, சாலையோரக் கிராமம் ஒன்றில் நடந்து கொண்டிருந்த தைப்பூச விழா, காண கோயில் முன்பு இறங்கினோம். அப்போது இடைப்பட்டார் ஓர் இளைஞர். சிரித்த முகத்துடனும் துடிப்புடனும் இருந்தார். எங்கள் குழு கோலாலம்பூர் நட்சத்திர  விடுதிக்குத் திரும்பிப் போக, ஜெயமோகனும் நானும் இளைஞர் காரில் பயணமானோம். பேசிக்கொண்டே வண்டி ஓட்டினார். செவிமடுத்துக் கொண்டே ஊர் சுற்றுனோம். இரவில் எங்களை விடுதி அறை கொண்டு சேர்த்த பின்னர், மறுநாள் சந்திப்பதாகக் கூறிப் போனார். மறுநாள் எங்கள் குழுவின் திட்டம் வேறாக இருந்ததனால், சந்திக்க இயலவில்லை. பின்னர், எனக்கவர் பெயரும்மறந்து போயிற்று. பள்ளி ஆசிரியராக வேலை பார்ப்பவர் என்பது மட்டும் நினைவில் இருந்தது. நான் உறவுகளைத் தொடர்ந்து பேணுவதில் ஆர்வம் அற்றவன். அதனால் நேசமற்றவன் என்றல்ல.

பிற்பாடு, அவர் ‘வல்லினம்’ இணைய இதழ் நடத்துகிறார் என்பதறிய மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாவது முறையாக நான் கோலாலம்பூர் விமானத்தளம் இறங்கியது, 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள், பிற்பகல் இரண்டரை மணிக்கு. ‘வல்லினம்’ அழைப்பின் பேரில். விமானத்தளத்திலேயே  இளம் எழுத்தாளர்கள் தயாஜி, விஜயலட்சுமி, வல்லினம் ஆசிரியர் ம.நவீன் ஆகியோரைச் சந்தித்தேன்.  2010-இல் சந்தித்த இளைஞரின் முகம், அதே சிரிப்புடனும் துடிப்புடனும் எள்ளலுடனும் அந்நியோந்நியத்துடனும். வல்லினத்தின்  எட்டாவது கலை இலக்கிய விழா  விழாவுக்கான அழைப்பு அது. அந்த முறை ஏறத்தாழ முப்பத்தாறு மணி நேரமே மலேசியாவில் இருந்தேன். தங்கிய ஓரிரவில் என்னுடன் அறையைப் பகிர்ந்து கொண்டவர் மலேசிய மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவான். அவர் ஏற்கனவே விஷ்ணுபுர இலக்கிய வட்ட ஊட்டி காவிய முகாம் ஒன்றில் கலந்து கொண்டவர்.

இம்முறை, வல்லினம் ஆண்டு விழா, மலேசிய-சிங்கப்பூர் மூத்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் வெளியீடு தாண்டியும் மலேசிய மூத்த, இளைய படைப்பாளிகளுடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான், டாக்டர் மா.சண்முகசிவா, சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ஷாநவாஸ், கண்ணபிரான், ஶ்ரீலட்சுமி  ஆகியோருடன் இலக்கியப் பகிர்வுகள், தனித்த உரையாடல்களின்போது தென்பட்ட ஒரு விடயம் இளம் படைப்பாளிகள் மூலம் நவீன மலேசிய தமிழ் படைப்பிலக்கியம் கனதூரம் தாண்டிக்கொண்டிருக்கிறது என்பது.

பல்லாண்டு முன்பு, தமிழில் ‘கசடதபற’ என்றொரு சிற்றிதழ் வந்தது. க,ச,ட,த,ப,ற எனும் ஆறு எழுத்துகளும் தமிழின் வல்லினம். ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், கிருஷ்ண மூர்த்தி, மகா கணபதி முதலானோர் நடத்திய இலக்கிய இதழ் அது. அதில் ஞானக்கூத்தன் எழுதிய கவிதைவரிகள் இப்போதும் நினைவில் உண்டு.

‘வாசன் மகனுக்கென்றால் மட்டும்

அச்சுப் பொறிகள் இயங்குமோ !

முத்துச்சாமி போன்றவர் சொன்னாய்

மாட்டேன் என்று மறுக்குமோ ?’

என்றொரு பிரகடனம் அது.

தனிநபர் தாக்குதல் என்று கொள்ளாமல், வெகுசன ஊடகங்களுக்கு எதிராக சிற்றேட்டின் அறைகூவல் என்று கொள்ளவேண்டும். ‘கசடதபற’ எனும் இதழின் பெயரில் இருந்தே ‘வல்லினம்’ என்ற பெயரும் அதன் தொடர்ச்சியாக பெறப்பட்டிருக்க வேண்டும்.

பொதுவாக, அவசியம் ஏற்பட்டாலொழிய, நான் இணையம் மூலம் வாசிப்பதில்லை. அச்சிடப்பட்ட தாள்களே என் சகவாசம். அது ‘சொல்வனம்’ என்று அடிக்கடி நான் கட்டுரை எழுதும் இணைய இதழாக இருந்தாலும் ‘வல்லினம்’ ஆக இருந்தாலும்.

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்’

என்பார் வள்ளுவப் பேராசான். வரவும் வேண்டாம் செலவும் இல்லை.

2010-ஆம் ஆண்டில் முதல் முறை மலேசியா சென்றிருந்த போது மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் எங்களுக்கு ஒரு வரவேற்பு கொடுத்தது. நாங்கள் திரைப்பட பாடலாசிரியர்கள் அல்லது திரைப்பட நடிகர்கள் என்ற பகுப்பில் வராதவர் என்ற போதிலும். அப்போது, டாக்டர் ம. சண்முகசிவா, பேராசிரியர் ரெ.கார்த்திகேசு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் இராஜேந்திரன் முதலானோர் அறிமுகம் ஆனார்கள். சை.பீர்முகம்மது ஊரில் இல்லாத காரணத்தால் சந்திக்க இயலவில்லை. எங்கள் உரையாடலின் போது ஒன்று தெளிவாகியது. டாக்டர் மா.சண்முகசிவா போன்றவர்கள் சமகால தமிழ் இலக்கியத்துடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்பதும் பேராசிரியர் ரெ.கார்த்திகேசு போன்றவர்கள் இன்னமும் மு.வ காலத்தைக் கடந்து வரவில்லை என்றும். ஆனால் இத்தகையோர்தான் உலகத்தமிழ் மாநாடுகளில் நவீனத் தமிழ் இலக்கியம் பற்றிக் கட்டுரை வாசிப்பார்கள். பஞ்சப்படி, பயணப்படி, தங்கல்படி, உணவுப்படி, தரும்படி வவுச்சர் எழுதி வாங்கிக் கொள்வார்கள். பேராசிரியர்  ரெ.கார்த்திகேசு காலமாகும் முன்பு ‘தீராநதி’யில் அவர் எழுதிய மதிப்புரை ஒன்றின் மூலம் அவர் வைரமுத்து வரையில் வந்து சேர்ந்திருந்தது வியப்பளித்தது. ‘ஆற்றில் கிடந்தும் துறை அறிய மாட்டேனை’ என்று ஆழ்வார் பாடியதும் நினைவுக்கு வந்தது.

வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக, இரவு உணவின்போது, மான் இறைச்சி வாங்கித்தந்தார் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன். அந்த நாட்டில் மான் இறைச்சி தடை செய்யப்பட்டிருக்கவில்லை. இந்தியாவில் எவரும் மான் கறி உண்ணப் பிரியப்பட்டால், அவர் சினிமா பிரபலமாக, புன் செல்வம் சேர் பெருநிதிக் கிழாவாக, மத்திய, மாநில அமைச்சர்களின் அல்லக்கையாக, முதலமைச்சரை விருந்துக்கு அழைக்கும் தரகர்களாக இருத்தல் வேண்டும். எனினும் மான்கறி வாங்கித் தின்ற காரணத்துக்காக, எழுத்தாளர் சங்கம் செய்யும் புல்லுப்பெறாத காரியங்களை நம்மால் விதந்தோத இயலாது.

2010ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்புக்கும், 2016-ஆம் ஆண்டில் வல்லினம் வாசகர் வட்ட நண்பர்களுடன் நடந்த உரையாடலுக்கும் இருந்த வேறுபாட்டை என்னால் உணர முடிந்தது. சமகால மலேசிய இளம் தமிழ்ப் படைப்பாளிகள், சமகால இந்திய, ஈழத் தமிழ் படைப்பிலக்கியவாதிகளுடன் தோள் உரசிப் பயணம் செய்ய விழைகிறார்கள். அதற்கான ஊக்கமும் ஆற்றலும் தகுதியும் பரவலாய் இன்று காணக்கிடைப்பது. திரும்புகாலில், ‘வல்லினம்’ வெளியிட்ட சில புத்தகங்களை வழியில் வாசிக்கத் தந்தனுப்பினார்கள். கூடவே, தட்டச்சு செய்யப்பட்ட தயாஜியின் இரண்டு கதைகளும். அவற்றுள் ஒன்று, வல்லினத்தில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டு, அரசின் பார்வையில் பட்டு, தயாஜியின் வேலையையும் பறித்தது. இந்திய,ஈழத் தமிழ்ப் படைப்புச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, அந்தக்கதை சற்று முதிர்ச்சியின்மையைக் காட்டியதேயின்றி, தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றன்று.

தாய்நாடு திரும்பிய கையோடு, வல்லினம் தந்து அனுப்பிய அனைத்துப் புத்தகங்களையும் வாசித்தேன். மலேசியத் தமிழ் இலக்கியம் தேங்கிப் போய்விடவில்லை என்பதோடு, அக்தோர் ஆரோக்கியமான பஞ்ச கதியில் இருக்கிறது என்பதும் புலப்பட்டது.

மறுபடியும் இவ்வாண்டில் 26 மே முதல் 6 ஜூன் வரை பன்னிரு நாட்கள் மலேசியாவில் இருந்தேன். கோலாலம்பூர், கேமரன் ஹைலெண்ட்ஸ், லுனாஸ், கூலிம், கிள்ளான் முதலிய நகரங்கள். பினாங்கு போய் வந்தோம். இருவரும் கேமரன் ஹைலண்ட்ஸ், பினாங்கு தீவு, கிளாங் துறைமுகம் தவிர்த்த இடங்களில் எமக்கு நிகழ்ச்சிகள் இருந்தன. எமக்கு என மொழியும்போது எனக்கும் ஜெயமோகனுக்கும் என்பது பொருள். எங்குச் சென்றாலும் இரவும் பன்னிரெண்டு நாட்களும் ஒரே விடுதி அறையைப் பகிர்ந்து கொண்டோம். அவர் ‘வெண்முரசு’ எழுதாத, மின்னஞ்சல் பார்க்காத, உறங்காத நேரம் எல்லாம் இலக்கியப் பேச்சுத்தான். பன்னிரெண்டு நாட்களிலும் ஒரு முறைகூட நாங்கள் காணொலிப் பெட்டியைப் பார்க்கவில்லை. தமிழ் இலக்கிய உரையாடல் எனில் அது புறம் பேசுவதல்ல. இந்திய, ஈழ, மலேசிய, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் இருந்தும் படைத்து அளிக்கப்படும் தமிழ் இலக்கியம் பற்றிய உரையாடல், விவாதம். சமகால மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றி எமது கருத்துக்கள் ஒத்துப் போவதாக இருந்தன.

கோலாலம்பூரில் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த குறுநாவல் பயிற்சி முகாம், தியான ஆசிரமம் கூலிம் குன்றின்மேல் நடத்திய மூன்று நாள் நவீனத் தமிழ் இலக்கிய முகாம் போன்ற அமர்வுகளில் எல்லாம் என்பணி மரபிலக்கியம் சார்ந்த உரையாடல். அரங்குகளிலும் படைப்பாளிகளுடன் தனித்த உரையாடல்கள் நடத்தும் வாய்ப்புகள் கிடைத்தன.

தியான ஆசிரமத்தின் மூன்று நாள் முகாமில்,ஓர் அமர்வு மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் என அமைந்தது. மேடையில் மூத்த எழுத்தாளர்கள் சீ.முத்துசாமி, கோ.புண்ணியவான் ஆகியோர் இருந்தனர். கோ,புண்ணியவான் ‘செலஞ்சார் அம்பாட்’, ‘நொய்வப் பூக்கள்’ எனும் நாவல்களையும் ‘எதிர்வினைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்புகளையும் நான் வாசித்திருந்தேன். சீ.முத்துசாமியின், ‘மண் புழுக்கள்’ எனும் நாவலும் ‘இருளுள் அலையும் குரல்கள்’ என்ற மூன்று குறுநாவல்களின் தொகுப்பினை ‘அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்’ எனும் சிறுகதைத் தொகுப்பினையும் வாசித்திருந்தேன்.

அன்றைய அமர்வில் பங்கு பெறாத பிற மலேசிய மூத்த எழுத்தாளர்கள் டாக்டர் சண்முக சிவா, சை.பீர்முகம்மது, ‘இராமனின் நிறங்கள்’ என்ற நாவல் எழுதிய கோ.முனியாண்டி போன்றவர்கள். மேடையில் இருந்த இளைய எழுத்தாளர்கள், ‘அல்ட்ராமேன்’ சிறுகதைத் தொகுப்பு எழுதிய சு.யுவராஜன், ‘மண்டை ஓடி’ (சிறுகதைகள்), ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ (கட்டுரைகள்), விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு(விமர்சனங்கள்), ‘கடக்க முடியாத காலம்’ (பத்திகள்), ‘வெறி நாய்களுடன் விளையாடுதல்’ (கவிதைகள்), ‘உலகின் நாக்கு’ (கட்டுரைகள்) போன்ற நூல்களைத் தந்த ம.நவீன் ஆகியோர்.

‘திசைகள் தொலைத்த வெளி’ மற்றும் ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியிட்ட ந.பச்சைபாலன், நாம் முன்பு பேசிய ‘ஒளி புகா இடங்களின் ஒலி’ எனும் கட்டுரை தொகுப்பின் ஆசிரியர் தயாஜி, ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ எனும் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் அ.பாண்டியன் ஆகியோர் அரங்கில் இருந்தனர். ஆனால் மேடையில் இல்லை.

‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’ எனும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு, ‘ஆப்பே கடையில் நடந்த 236வது மேசை உரையாடல்’ என்னும் இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு ஆகியவை கே.பாலமுருகன் எழுத்தில் நான் வாசிக்க நேர்ந்தவை. அவரும் அரங்கில் இருந்தார், ஆனால் மேடையில் இல்லை. டாக்டர் சண்முக சிவா, சீ.முத்துசாமி, கோ.புண்ணியவான் போன்ற முதல் தலைமுறை எழுத்தாளர்களின் ஆக்கங்கள், அவர்கள் காலத்து இந்திய, ஈழத் தமிழ்ப் படைப்புகளின் தீவிரத்தையோ உன்னதத்தையோ எட்டி இருந்தவை எனத் துணிந்து கூற இயலாது. கலந்துரையாடலின்போது, அதன் காரணங்கள் பற்றி வினவியபோது, வெளியீட்டு வாய்ப்புகள், சுதந்திரம் இன்மை, பாதுகாப்பு அற்ற அரசியல் சூழல் எனப் பதிலளித்தனர்.

ஆனால், எனது பார்வையில், வாசிப்பினால் கிடைத்த தெளிவில், நெருக்கடியான சூழலிலும் சமகால மலேசிய எழுத்து, ஈழத்தமிழ் இந்தியத் தமிழ் எழுத்துகளுடன் ஒப்பீட்டுத் தரத்தில் இருப்பதை அறிய முடிகிறது. வல்லினம் இணைய இதழ் அதற்கொரு முக்கிய பங்காற்றி உள்ளது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் ஜெயந்தி சங்கர், சித்ரா ரமேஷ், ஷா நவாஸ், அழகு நிலா போன்றவர்களும் இந்தச் சூழலில் எண்ணப்பட வேண்டியவர்கள்.

படைப்பிலக்கிய முயற்சியில் ம.நவீன், கே.பாலமுருகன், தயாஜி, சு.யுவராஜன், போன்றவர் செயல்பாடுகள் கவனிப்புக்கும் மதிப்பீட்டுக்கும் ஆதரவுக்கும் உரியவை. சென்ற 12 நாள் மலேசியப் பயணத்தின்போது, பிரசுரம் ஆகாத, தட்டச்சு பிரதிகள் சில எனக்கு வாசிக்கக் கிடைத்தன. குறிப்பாக நூலகராக பணிபுரியும் விஜயலட்சுமியின் சிறுகதை ஒன்று. ஆம் ! அவர்கள் தூரம் கடந்து கொண்டிருக்கிறார்கள்.

முகாம் நிறைவுற்ற போது, அண்மையில் காலமான எம்.ஏ.இளஞ்செல்வன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ஒன்று, ‘இளஞ்செல்வன் சிறுகதைகள்’ அவரது மனைவியால் தரப்பட்டது. பேசப்படாத படைப்பாளி என்ற ஆதங்கம் அவரது மனைவியின் குரலில் இருந்தது. எனக்கது உறைத்தது.

எந்த மண்ணில் வழங்கும் தமிழானாலும் அதனைப் பயில்வோருக்கும் படைப்போருக்கும் என நுட்பமான அடக்கு முறை அனுபவமாகும். எனக்கே சமயங்களில் நானொரு இரண்டாம் தர இந்தியக் குடிமகன் என்று தோன்றுவதுண்டு. என்றாலும், போருக்கு பின்னர், ஈழத்தமிழ் இலக்கியம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பாய்ச்சலையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஈழத்தமிழும் இந்தியத் தமிழும் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்து வருகிறது. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அதற்கான நிமித்தங்கள் தெரிகின்றன. அரசியல், பெரும்பான்மை எனப்படும் துரோகங்களுக்கு நடுவில் தமிழ்ப் படைப்புலகம் தழைத்துக்கொண்டும் தன்னைத் தக்கவைத்துக்கொண்டும் இருக்கிறது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...