வல்லினம் 100 ஆய்வுக்கட்டுரைகள் – ஒரு பார்வை

‘சொல் புதிது சுவை புதிது’

வல்லினம் 100-இல் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும்சமூகத்தில் மிகத் தீவிரமாகஹ் முன்னெடுக்க வேண்டிய கூறுகள். எங்கும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடியே உணர்ச்சி மிகையில்லாமல் பதிவாக்கப்பட்டிருப்பது கட்டுரைகளின் பலம். மொழி, இனம், இலக்கியம், இதழியல், கல்வி, அரசியல் என பல்துறை சார்ந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே ஏதோ உணர்ச்சிவசப் பாயலில் முகிழ்த்தவை அல்ல என்பதையும் கட்டுரைகளின் ஆய்வுநிலை மெய்பிக்கின்றது. அனைத்து கட்டுரைகளும் ஆராய்ச்சி கட்டுரைகள். கருத்துகள் அனைத்தும் தக்கச் சான்றுகளோடு நிறுவப்பட்டு மொழி அழகியல்களில் ஒளிந்து கொள்ளாமல் ஆராய்ச்சிநிலையில் பதிவாகிறது. இவ்வொழுங்கே கட்டுரைகளுக்கு அறிவார்ந்த உரையாடல்களுக்கான தன்மையை அறிவு தளத்தில் இயங்க வழி செய்துள்ளது.

மலேசியாவில்தமிழ்த்தேசியம்தேவையா?

அ.பாண்டியனின் சமூகவியல் கட்டுரை மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா? இன்றைய உலக அரசியல் சூழலில் பிரிவினை வாதமே ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் வாழ்வாதாரத்தை உயர்த்திப் பிடிக்கிறது. மொழி, இனம், மதம், சாதி பிரிவினைகளே இன்றைய உலக அரசியலின் ஆயுதங்கள். அபாயகரமான ஆயுதங்கள். இவையெல்லாம் கடந்து மனிதத்தை மட்டும் வாழ வலியுறுத்தும் அரசியலை மனித குலம் மறுத்து விட்டது. அதைத் தேடும் ஒரு சிறு முயற்சிதான் இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரை வாசிப்பில் முதன்மையாக நிற்பது கட்டுரையாளரின் தமிழ் தேசிய எதிர்ப்பு வாதம். தமிழ் தேசியம் மலேசியாவில் மிகத் தட்டையான நிலையிலும் தெளிந்த இலக்கற்றுப் பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர். தேவையா என்று தொடங்கிய இவரது அலசல் பெரும்பகுதி தமிழ் தேசியம் எதிர்ப்புக் கருத்துகளையே முன்வைக்கின்றது. அதாவது தேவையில்லை என்பதையே வலியுறுத்துகிறது. தமிழ் தேசிய வாதம் திராவிட இந்து எதிர்ப்புச் சார்ந்தது எனவும் அது வீண் பகை வளர்ப்பதாகவும் கருதுகின்றார். இவையாவும் அந்தந்த கால அரசியல் தேவைகளுக்கேற்ப சூடு பிடித்து பின் அடங்கி பலனற்றுப் போகின்ற நிலையையும் சுட்டுகின்றார் அ. பாண்டியன்.தலைப்பு மிகப் பெரிய ஐயத்தை முன் வைத்துத் தொடங்கினாலும், கட்டுரையின் இறுதியில் கட்டுரையாளரின் இவ்விவாதம் குறித்த மனப்போக்கினை அறிய முடிகின்றது. மிக நீளமாகவும் விரிவாகவும் தமிழ் தேசியம் குறித்த பல விடயங்கள் காரண காரியத் தொடர்போடு விளக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியது.

இருப்பினும் மலேசிய தமிழர்களிடையே தமிழ் தேசிய சிந்தனையின் நோக்கமானது பிற இனத்தினரோடு பகை வளர்க்கவோ சிறுமைபடுத்தவோ அல்ல என்பதை கட்டுரையாளர் உணரவேண்டும். இங்கு முன்னெடுக்கப்படும் தமிழ் தேசிய வாதம் இந்நாட்டில் தமிழ்மொழி மற்றும் தமிழர்களுக்கான வாழ்வாதார நிலைநிறுத்தலுக்கான வாதம் என்பதை தெளிந்து கொள்ளவேண்டும். இனமதவாத அரசியல் சூழலில் முற்றாக தமிழ் தேசிய வாதத்தை இந்நாட்டில் புறக்கணிப்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பாதிப்புகளைக் கொண்டு வரும்.தமிழ் தேசியம் என்ற இன அரசியல், மலேசியச் சூழலில் ஏற்புடையற்றது என்பதனை மிகக் காத்திரமாகவும் வெளிப்படையாகவும் பதிவு செய்த கட்டுரையாளர் தமிழ் தேசிய வாதத்தின் ஏற்புடைமை குறித்தும் அலசி இருந்தால் கட்டுரையின் நீதிமை காக்கப்பட்டிருக்கும்.

குண்டர் கும்பல்கலாச்சாரமும் தமிழ்ச்சமூக மெளனமும்

குண்டர் கும்பல் சிக்கல் குறித்து இந்தச் சமூகம் கொள்ளும் மௌனத்தின் நிஜவெளிக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய கட்டுரை பாண்டியன் மற்றும் தயாஜியின் “குண்டர்கும்பல்கலாச்சாரமும்தமிழ்ச்சமூகமெளனமும்”. இக்கட்டுரையின் உள்ளடக்க விரிவாக்கத்திற்கு செல்லும்முன் தலைப்பில் இருக்கும் நெருடலை விவாதித்தல் அவசியமாகிறது. ‘குண்டர் கும்பல் கலாச்சாரம்…’என்பதே நெருடலுக்குரிய சொற்றொடர். குண்டர் கும்பல் என்பது கலாச்சாராமா? கலாச்சாரம் என்பது வடமொழிச் சொல். இதற்குச் சரியான தமிழ்ச்சொல் பண்பாடு. பண்பாடு என்பது அகச்சீர்மை. அதாவது பண்பாட்டுக் கூறுகள் போற்றுதலின் வழி மனித எண்ணங்களைப் பண்படுத்துதலே பண்பாடு. இக்கருத்தோடு தலைப்பில் பயன்படுத்தியிருக்கின்ற சொல்லைப் பொருத்திப் பார்க்கும்போது குண்டர் கும்பல் அகச்சீர்மைப்படுத்தும் நேர்மறை நடவடிக்கையாகப் பொருள் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

மலேசிய இந்தியர்களிடையே சுமார் ஐம்பது ஆண்டுகளாகத் தீர்வின்றியே தொடர்ந்து கொண்டிருக்கும் சிக்கல் குண்டர் கும்பல். இந்நாட்டில் இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல், ஒழுக்கம் போன்ற கூறுகளின் வீழ்ச்சி நிலைக்கு உயிர்நாடி குண்டர் கும்பலும் அது சார்ந்த வன்முறையும். இச்சிக்கலின் பாதிப்பு சங்கிலி தொடராக இந்தியர்களின் அனைத்துத் துறை வளர்ச்சியையும் முடக்கியுள்ளது என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது இக்கட்டுரை.

மலேசியாவில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளுக்குச் சீனர்களே வேராக இருந்துள்ளனர் என்பதைக் கட்டுரையின் வரலாற்று அலசல் நிரூபிக்கின்றது. தங்களுடைய இனக்குழுக்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்ட குண்டர் கும்பல்கள் கால ஓட்டத்தில் தடம் மாறி பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. பணம் ஈட்டும் மிக எளிய வழியாகவும் இக்குண்டர் கும்பல் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இக்குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் இந்தியர்களின் ஈடுபாடு தோன்றியதற்கு அழுத்தமான நேர்மறை காரணிகள் இல்லை என்ற கட்டுரையாளர்களின் பதிவு ஐயத்திற்குரியதாகவே அமைகின்றது. இந்தியர்கள் சீனர்களின் கைக்கூலிகளாக மட்டுமே குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் இணைந்துள்ளதாகக் கூறப்படுவது மீளாய்வுக்கு உட்பட்டது.

வரலாற்று அலசலை தொடர்ந்து, இந்தியர்களின் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் விரிவான நிலையில் பேசப்பட்டுள்ளது கட்டுரையின் பலம். மலேசியாவில் இந்தியர்களின் அரசியல் தாக்கமும் சமூக சிக்கல்களின் அழுத்தமும் இக்குண்டர் கும்பல் சிக்கலை இந்தியர்களிடையே பூதாகரமாக்கியுள்ளது. இச்சிக்கல் இன்றும் தீர்வின்றி தொடந்தும் வருகிறது. இதற்கு அரசியல் தீர்வு ஒன்றே முடிவான முடிவாக அமைந்திருக்கும் பட்சத்தில், அரசு சார்ந்தோரின் மௌனம் இச்சிக்கலுக்கு முடிவில்லா எல்லையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. குண்டர் கும்பல் தமிழ்ச் சமூகத்தின் மௌனம் அல்ல, அரசியலின்  ஆர்ப்பாட்டம்

சிற்றிதழ் , நாளிதழ்

இதழியல் பேசும் கட்டுரைகள் ‘சிற்றிதழ்’ மற்றும் ‘நாளிதழ்’. இவ்விரு கட்டுரைகளும் சிற்றிதழ் மற்றும் நாளிதழின் வரலாற்றுக் கூறுகள் அலசல் வழி தமிழ்இலக்கியம் மற்றும் தமிழ் சமூக வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினைப் பதிவு செய்கின்றது. ‘சிற்றிதழ்’ கட்டுரை இதழியல் வரலாற்று மீட்டெடுப்பு கட்டுரையாகவே நாம் காணலாம். எல்லாக் காலத்திலும் இலக்கிய வளர்ச்சிக்கு நாளிதழ்கள் ஆற்றிய பங்கினை மட்டுமே உயர்த்திப் பேசி வந்த இதழியல் சூழலில் மிகத் தீவிர இலக்கிய வளர்ச்சியை முன்னெடுத்த சிற்றிதழ்களின் பங்கு இங்கு புலனாகிறது. ‘70களில் வெளிவந்த ‘இலக்கிய வட்டம்’ என்ற சிற்றிதழ் செயல்பாடுகள் இக்கட்டுரையில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

ஆயிரம்பிரதிகளா, ஐம்பதுபிரதிகளா என்பதெல்லாம் முக்கியமான விஷயங்கள் என இந்தவட்டம் கருதவில்லை. சோதனைக்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள இப்பத்திரிகையை எழுத்தாளர்கள் இருதயசுத்தியோடு பயன்படுத்திக்கொள்வார்களா என்பதைத்தான் வட்டம் கவனித்துக்கொண்டுவருகிறது என்ற முன்னுரையின் வழி ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழின் நோக்கத்தை மிகத் தெளிவாகவே அறிய முடிகின்றது. மலேசியத் தமிழ் இலக்கிய ஆளுமைகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது இவ்விதழ். அக்கால தீர இலக்கியத்தின் அவசியத்தை முன்னிறுத்தி சிறுகதைகள், திறனாய்வுகள், கட்டுரைகள் போன்ற படைப்புகளுக்கு வழிவகுத்துள்ளது இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகள்.

இக்கட்டுரையின் பதிவில் வருத்தத்குரிய விடயமாக அமைந்தது என்னவென்றால் இலக்கிய வட்டம் சிற்றிதழ் தொடக்கத்திற்கு அடிப்படையாக இருந்த சில ஆளுமைகளே மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுக்கும் முயற்சியின்போது ‘இலக்கிய வட்டத்தை’ மறந்து போனதுதான். மறந்துபோன இலக்கிய வட்டத்தை வரலாற்றுப் பதிவில் அச்சிட்ட கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

இந்த அரிய கட்டுரை கண்டிப்பாக மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிக்கப்பட வேண்டும். மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றில் விடுப்பட்ட சில பக்கங்களை இக்கட்டுரை நிரப்பியுள்ளது.

அடுத்ததாக சரவணத்தீர்த்தாவின் ‘நாளிதழ்’ கட்டுரை. நாளிதழின் பலத்தையும் பலவீனத்தையும் இக்கட்டுரை பதிவுச் செய்கின்றது. தமிழ் நாளிதழ்களின் தோற்றம், சமூகக் கடப்பாடு, குறிப்பிட்ட சில பத்திரியாளர்களின் தாக்கம், நாளிதழின் வீழ்ச்சி, கொள்கையற்று விலை போகும் போக்கு என விரிவான நிலையில் நிறைவாக இக்கட்டுரை அமைந்துள்ளது. மலேசிய மண்ணில் அன்றைய தமிழ் நாளிதழ்கள்எழுச்சி மிக்க சமூக உருமாற்ற ஊடகமாகச் செயல்பட்ட வரலாற்றை வாசிக்கும்போது இன்றைய நிலையை எண்ணி மனம் மிக நொந்து கொள்ளவே செய்கிறது. அன்றைய தமிழ் நாளிதழ்கள் இந்தியர்களுக்கு மலேசியர் என்ற அரசியல் அடையாளம்பெற விழிப்புணர்வு கருவிகளாகச் செயல்பட்டுவந்துள்ளன. அதோடு இந்தியாவுடனான வணிகத் தொடர்பு, மலேசிய குடியுரிமை சிக்கல் முன்னெடுப்புகள், தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளி போராட்டங்களை என பல சமூக சார்ந்த சிக்கல்களை அரசியல் சாயம் இல்லாமல் மக்களுக்கு எந்தச் சமரசமும் இன்றி தமிழ் நாளிதழ்கள் வழங்கியுள்ளன. அதோடு சமூக சேவையாளர் கணபதி, கோ.சா, ஆதி. குமணன் போன்ற பத்திரிகை துறை ஆளுமைகளின் தாக்கமும் அவர்கள் கொண்டிருந்த பத்திரிகை கொள்கையும் இங்கு பதிவாகிறது. சாதியச் செய்திகளுக்கு இடம் தராமலும் அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாகச் செயல்படாமலும் நாளிதழ்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன. இது அன்றைய நிலை.

ஆதி. குமணனின் மறைவுக்குப் பின்பே மலேசிய தமிழ்ப் பத்திரிகைகள் அதன் தர்மத்தைத்தளர்த்திக் கொண்டு சமூகக் கடப்பாடற்றுச் செயல்படத் தொடங்கியுள்ளன. அரசியல் கட்சி  தலைவர்களின் நேரடி பார்வையில் செயல்படத் தொடங்கின பல நாளிதழ்கள். சமூகக் கடப்பாடுகள் மறந்து அரசியல் நாயகர்களின் வழிபாடுகள் அதிகமாகப் பிரசுரிக்கப்பட்டன. சாதிய அரசியல் செய்திகள் தலையங்கமாக ஆரம்பித்தன, நடுநிலை மறந்து ஆளும் அரசாங்கத்தின் புளுகளுரைகளின் ஆயுதமாகச் செயல்படுகின்றன இன்றைய நாளிதழ்கள்.

வணிக நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்படுகின்ற தமிழ் பத்திரிகையின் பலவீனத்தைச் சீனப் பத்திரிகைகளின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டுச் சுட்டிக் காட்டியிருப்பது சிறப்பு. மலேசிய தமிழ் நாளிதழ்கள் நடுநிலையோடும் சமூக நோக்கோடும் செயல்பட வேண்டியதின் அவசியம் கருதியே இக்கட்டுரையைப் படைத்துள்ளார் கட்டுரையாளர்.

தோங் ஜியாவ் ஸோங்

மலேசியாவில் தாய்மொழிக் கல்வியும் தாய்மொழிப் பள்ளிகளும் (சீனம், தமிழ்) நிலைத்திருப்பதற்கு ஆணிவேராகத் திகழ்ந்த தோங்ஜியாவ்ஸோங் தொடர்பான வரலாற்றையும் அதன் செயல்பாடுகளையும் குறித்து அறிமுகம் செய்யும் விதமாக அமைகிறது க.கங்காதுரையின் இக்கட்டுரை. மிக விரிவாகவும் விளக்கமாகவும் தொங் ஜியாவ் சோங் பற்றிய செய்திகள் இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசிய சீனர்களின் சமூக அரசியல் வளமான நீட்சிக்கு தோங் ஜியாவ் சோங் பங்கு அளப்பரியது. மூவினங்கள் வாழும் இனவாத அரசியல் சூழலில் மொழியும் இனமுமே மிகப் பெரிய அரசியல் ஆயுதங்கள். தோங் ஜியாவ் சோங்கின் மொழி மீட்பும் இன உரிமை காக்கும் நடவடிக்கைகளே இந்த மண்ணில் சீனர்களைப் பொருளாலும் அரசியலாலும் வலுப்பெற்றவர்களாக்கியது.

இவ்வியக்கத்தின் செயல்பாடுகளே மலேசிய மண்ணில் தமிழ்க்கல்வியையும் ஒருங்கே நிலைக்கச் செய்திருக்கக் கூடும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. தாய்மொழி சார்ந்து சிக்கல்கள் எழும்போது இவ்வியக்கமே சீனர்களுக்கு முதுகெலும்பாக இருந்து செயல்பட்ட வேளையில், தமிழ்மொழிக்காக உரக்க குரல் அப்போது கொடுக்க எந்த இயக்கமும் இல்லாதிருந்தது ஏமாற்றமே.

தமிழ் இலக்கிய சூழலில் தமிழர் அல்லாதவர்களின் கதைப் பதிவும் வாழ்வியல் பதிவும் மிக நலிந்த நிலையிலேயே இருந்துள்ளன. இந்த முன்னெடுப்புகள் இல்லாதிருந்ததே இதற்கு காரணம். தமிழ்மொழி சார்ந்த மொழி, இலக்கிய இயக்கங்கள் பிறமொழி இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தாதே காரணம். இந்த முன்னெடுப்புகள் வல்லினத்தின் வரவுக்குப் பின்பே தீவிரமாகியுள்ளது. அந்த வகையில் வல்லினம் நூறில் மூன்று பழங்குடிமக்கள்  சார்ந்த கட்டுரைகள் அச்சேற்றப்பட்டுள்ளன.

சரவாக்: கதைகளால் நிரம்பிய காற்றின் நிலம்

இக்கட்டுரையின் பலமே நோவாவின் சரவாக் மக்களோடு வாழ்ந்த அனுபவம்தான். நேரடியாகக் களத்தில் இறங்கி சரவாக் பழங்குடி மக்களோடு மக்களாகக் கலந்து கதைகளால் நிரம்பிய காற்றைச் சுவாசித்ததுதான். சரவாக் பழங்குடி மக்களின் கதைகள் வெறும் புனைவுகளோ அல்லது வெறும் பேச்சுகளோ அல்ல என்பது இக்கட்டுரை உணர்த்துகிறது. எல்லாவற்றுக்கும்ஏதாவதுஒருகதை. அந்தக்கதைகளின்வழிநாடு, நகரம், ஊர், மக்கள் வாழ்வியல், பண்பாடு போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.

பாத்துகுடீக்கதை, லெகேண்டாபூஜாங்செனாங், லெகேண்டாபுத்ரிசந்த்துபோங், லெகேண்டா பாத்துநாபாவ்

நாகரிக வளர்ச்சியில் மக்களின் நவீன திரையிடப்பட்ட வாழ்க்கைக்குப் பின்னால் இதுபோன்ற கதைகள் மட்டுமே அந்தச் சமூகத்தின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக…

விஜயலட்சுமியின் மலேசியாவும் பழங்குடிகதைகளும். இக்கட்டுரை நோவாவின் கட்டுரையைக் காட்டிலும் நிறைவுடையதாகவும் விரிவானதாகவும் அமைந்துள்ளது.

இந்தக் கதைகள்தான் எம்மக்களின் நூலகம்

ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு முக்கியமான அல்லது ஈர்பான நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனதில் வளப்பமாகிய வரலாற்றை இலைகளின் மீது நினைவகமாக்கியுள்ளது.

கதைகள் எங்கள் வாழ்க்கை, அவைஇன்னும் வாழ்கின்றன.”

(Lim Boo Liat) எனும்விலங்கியல்நிபுணரின்உருவாக்கத்தில் 1981ஆம்ஆண்டுவெளிவந்த ‘Orang Asli Animal Tales’ எனும் நூல் இக்கட்டுரையின் ஆக்கத்திற்குப் பெரிதும் துணை புரிந்திருக்கிறது.

பேராசையால்வால்தொலைந்தலெமூர்

குரல்வலைதொங்கும்மனிதகுரங்கின்கதை

விரும்பிபொய்சொன்னதால்பன்றிவால்குரங்கு

இயற்கையின் ஒரு பகுதியான விலங்கினங்களைக் கதாமாந்தர்களாக்கி கதைகள் வழி நீதிகளையும் சமூகம் சார்ந்த வாழ்வியல் விழுமியங்களையும் இக்கதைகள் அறிவுறுத்த முயற்சிக்கின்றன. இதர மனிதர்களைப்போலவே விலங்குகளையும் தங்களது வாழ்வில் ஒரு அங்கமாகக் கருதும் இப்பழங்குடிகள் தங்களுடைய அன்றாட வாழ்வில் நேரெதிர் கொள்ளும் விலங்குகளுக்கு மனிதத்தன்மையை ஏற்றி அதன் மூலம் தங்களது வாழ்வியல் விழுமியங்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.

இக்கதைகளில் இருக்கும் நீதிகளும் விழுமியங்களும் மிக நேர்த்தியாக விலங்குகளின் அடிப்படை குணாதிசியங்களுடன் பொருந்திப்போவதோடு, விலங்குகளின் உடல் அமைப்பும் கதைகள் சொல்ல வந்த நீதியை மிகதுள்ளியமாக எடுத்துரைக்கும் நிலையைக் காணமுடிவாதாகக் கட்டுரை பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்குடிகள் சார்ந்த கட்டுரைகளின் மற்றொன்று நவீன் செல்வங்கலையின் மூடப்படவிருக்கும் முகங்கள். இக்கட்டுரை கதைச் சார்ந்த கட்டுரையல்ல. பழங்குடி மக்களின் மானுடவியல் அலசல். மூடப்படவிருக்கும் முகங்கள் என்ற தலைப்பு பழங்குடிகளின் வாழ்வாதார சிக்கலை மையப்படுத்தி அமைந்துள்ளது. கால வளர்ச்சியில் பழங்குடியினர் தங்களுடைய அசலான அடையாளங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் கலப்புச் சமூகமாக உருமாறிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் அறிய முடிகின்றது.   பழங்குடிகளின் மொழி வளர்ச்சி, அதிலிருந்து கிளைத்த இன்றைய மொழிகள், அதோடு பழங்குடி மக்கள் தொடர்பிலிருந்து உருபெற்ற இன்றைய சமூகத்தினர் உருவாக்கமும் பேசப்பட்டுள்ளது. நவீன அரசியல் சூழலில் பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் பதிவு செய்த கட்டுரை. இக்கட்டுரை பழங்குடிகளின் மிக நீண்ட மானுடவியல் ஆய்வின் முகப்பு என்பதை உணர முடிகின்றது.

சிங்கப்பூர்த்தமிழ்இலக்கியம்: ஆணிவேர்களும்நீர்ப்பாசிகளும்

சிங்கையின் தமிழ் இலக்கிய தடத்தில் தமிழையும் இலக்கியத்தையும் நிலைநிறுத்தும் முன்னெடுப்புகளில் ஆணிவேர்களாகவும் நீர்ப்பாசிகள் போலவும் அமைந்த செயல்பாட்டினையும் திட்டங்களையும் விளக்கும் ஆய்வுக் கட்டுரை இது. சிங்கை எழுத்தாளரான லதாவின் சீரிய தொகுப்பு இக்கட்டுரை. நவீன மயமும் பொருள் முதல்வாதமும் போற்றுகின்ற சிங்கை வாழ்வியல் சூழலில் தமிழ் இலக்கியத்தின் தேடலும் நிலைநிறுத்தலும் பிரமாண்டத்தைத் தாண்டி நிற்கும் செயல்பாடுகள் என்றே மிகைப்படுத்தி கூற வேண்டியிருக்கிறது. தமிழ் இலக்கியத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளுக்கு அடிப்படையாகத் தமிழ் சமூகம் என்ற ஓர்மையான சிந்தனையும் தமிழ் அடையாளத்தைக் குழப்பி நின்ற இந்துவாத சிந்தனையின் தகர்ப்பையும் செய்யவேண்டியது காட்டயமாக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சியின் நடவடிக்கைகள் மிகத் தீரமான நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் கோ.சா, கண்ணபிரான் போன்றோரின் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. சீன, மலாய் இலக்கிய வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப இல்லாவிடினும் தமிழ் இலக்கிய வளர்ச்சி சிங்கை மண்ணின் தேசிய நீரோட்டத்தில் இடைவிடாது தொடர்ந்தே வந்துள்ளது எனக் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். அதிலும் மலேசிய மண்ணிலிருந்து பிரிந்து தனியாட்சி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்பு சிங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி செழித்து தனித்தன்மை பெற்று விளங்கியுள்ளதாகக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தில் பி. கிரு‌‌ஷ்ணன், மா.இளங்கண்ணன், இராம.கண்ணபிரான், நா.கோவிந்தசாமி, சே.வெ.சண்முகம், பொன்.சுந்தரராசு, பரணன், முல்லைவாணன், ஐ.உலகநாதன்மெ.இளமாறன், முருகதாசன்க.து.மு.இக்பால், அமலதாசன், பார்வதி பூபாலன் போன்ற பல சிங்கப்பூர் படைப்பாளர்கள் அந்நாட்டின் இலக்கிய தீவிர பங்காற்றுகின்றனர். சிங்கப்பூர் மண்ணின் மனம் பேசும் இலக்கிய படைப்புகள் தோன்ற ஆரம்பித்தன.

இக்காலகட்டத்திற்குப் பிறகு சிங்கை மண்ணின் இலக்கிய வளர்ச்சியில் பல தமிழக இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பு சிங்கைத் தமிழர்களிடையே மிகத் தீவிர இலக்கிய முன்னெடுப்புகளுக்குக் காரணமாகியிருக்கின்றன. இவ்வளர்ச்சிக்கான உந்துதல்களுக்குத் தமிழக ஆளுமைகளைக் காட்டிலும் மலேசிய மண்ணின் தமிழ் இலக்கியமும் அரும்பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளதைக் கட்டுரையாளர் வலியுறுத்தாதது இக்கட்டுரையில் இன்னும் சில பக்கங்கள் நிரப்பப் படாததை உணர்த்துகிறது.

இலக்கிய போட்டிகள், தொடர் இலக்கிய கலந்துரையாடல்கள், சிங்கை அரசின் தனித்த கவனம் போன்ற தொடர் முயற்சிகள் சிங்கை தமிழ் இலக்கியத்திற்கு தனித்த அடையாளத்தையும் தனிச் சிறப்பையும் கொடுத்துள்ளன. புலம்பெயர்ந்து பெரும்பான்மையாகத் தமிழர்கள் வாழும் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கீடாக சிங்கையின் தமிழ் இலக்கியமும் தனிச் சிறப்போடு உயர்ந்து நிற்கின்றது. இனியும் வானளவு உயரும் என்ற பிரமிப்பை இக்கட்டுரை பதிவு செய்கிறது.

முடிவு

இயல்பாகவே சிறுகதை, கவிதை போன்ற புனைவு சார்ந்த படைப்புகளைக் காட்டிலும் ஆய்வுக் கட்டுரை வாசிப்பென்பது சுவாரஸியமற்றது. மிக நீண்ட வரட்சி தோன்றி வாசிப்பவர்களுக்கு ஒரு வகை சோர்வைத் தந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் வாசிக்கப்படும் கட்டுரையின் தன்மை. பேசி-பேசி அலுத்துவிட்ட விசயங்களையே மீண்டும்-மீண்டும் பல ஒப்பனைகள் கலந்து உணர்ச்சிவாதத்தோடு கொடுப்பது தீவிர வாசிப்பிற்கு உகந்தது அல்ல. இந்நிலையே கட்டுரைகளின் வாசிப்புச் சுகத்தை மொண்ணையாக்கி சோர்வை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் வல்லினம் 100-இன் கட்டுரைகள் சொல்லாலும் பொருளாலும் சுவையாலும் புதியவை.

 

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...