வல்லினம் 100 நேர்காணல்கள் – ஒரு பார்வை

Untitled 01ஒரு விழாவை இத்தனை ஒழுங்கோடு ஒரு குழப்பமும் இல்லாமல் நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.இதற்கான ஏற்பாடுகளை நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன்.மூன்று மாதமிருக்கும், மலேசிய எண்ணிலிருந்து அழைப்பு. “நான் நவீன் பேசறேன்” என்றார். வல்லினம் நூறாவது இதழ் வரப்போகிறது. சிறப்பிதழாக கொண்டு வரலாம் என்று நினைக்கிறோம். சிங்கப்பூரிலிருந்து உங்களது பங்களிப்பாக படைப்புகள் அனுப்புங்கள் என்றார். தவறான விலாசம் சார் என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். எந்த நம்பிக்கையில் நம்மிடமெல்லாம் படைப்புகள் கேட்கிறார்கள், அப்போ நாம் என்ன படைப்பாளியா, நிஜ படைப்பாளியை என்ன சொல்லி அழைப்பது என தத்துவ குழப்பங்கள் உள்ளுக்குள்பொங்கி வந்தது.

நவீனுக்கு என்னுடைய அலைபேசி எண் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யாரோ கொடுத்திருக்கவேண்டும்.இதுபோன்ற சில்மிஷ வேலைகளை செவ்வனே செய்யத்தெரிந்தவர் பாண்டித்துரை மட்டுமே என நம்பினேன். பொய்க்கவில்லை, அவரேதான். படைப்புகள்னா எந்த மாதிரியான படைப்புகள் என்று நவீனிடமேகேட்டுவிட்டேன். சாய்ஸ் தேடுகிற பள்ளிக்குழந்தை மனது. யாராவது ஆளுமையோட நேர்காணல், அல்லதுசிறுகதை, கட்டுரை இந்தமாதிரி எழுதுங்கள் என்றார். உரையாடல் முடிவுக்கு வந்தாலும் யார் நமக்குத் தெரிந்தஆளுமை? எழுந்தவுடன் பார்க்கும் டீ மாஸ்டர் முதல் அடுத்த படுக்கை பெங்காலி முல்லா வரை எல்லாருமேபொருள் தேடி வந்த எளிய மனிதர்களைத்தானே பார்க்கிறோம். எங்கிருந்து தேடுவது ஆளுமையை என்ற குழப்பம்.

அடுத்து சிறுகதை வேண்டுமானால் கசக்கி உருட்டி தலைப்பிட்டு பத்து பக்கத்திற்குத் தள்ளலாம்.ஆனால் நவீனுடைய ரசனைக்கு எப்படிஎழுதுவது என்றொரு குழப்பம்.அவருடைய ரசனைக்கு நாம் ஏன் எழுதவேண்டும் என்றொரு பளீர் விழிப்பு.எதாவது அதிசயம் நடக்கும் என்று தள்ளிப்போட்ட பிறகு இயக்குனர் ராஜகோபால் நினைவுக்கு வந்தார்.வாசகர் வட்டம் நடத்திய குறும்பட போட்டியில் நடுவராக வந்திருந்தார். அவரை நேர்காணல் செய்யலாம்என்று முடிவு செய்து அவரைத்தொடர்பு கொள்ள முயற்சித்தோம். எண்ணை கொடுக்கும்போதே சித்ராஎச்சரித்தார். “அவர் ஒரு டென்ஷன் பார்ட்டி, பாத்து ஹேண்டில் பண்ணுங்க” என்றார். இயக்குனர்கள்எல்லாருமே ஏன் கோபகுமார்களாக இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அவரின் எண்கிடைத்துவிட்டாலும் தொடர்பு கொள்வதில் ஏதோ மனத்தடை இருந்துகொண்டே இருந்தது. ஒருவழியாகமனஸ்தூலம் விலகி வாட்சப்பில் மிகுதயக்கத்துடன் ஒவ்வொரு எழுத்தாக அடித்தேன் “சந்திக்கலாமா?”சுவற்றில் அடித்த ரப்பர் பந்துபோல ‘விஸ்கி’யென்று பதில் வந்தது. நேரமும் தேதியும் குறிப்பிட்டு அலுவலகம்

“வந்துடுங்க” என்றார். முடியாது என்று சொல்லியிருந்தால் கூட முயற்சித்தோம் கைகூடவில்லை என்றுபோய்விடலாம். புதுக்குழப்பம். நேர்காணல் செய்வது எப்படி என்று கூகிளவனிடம் தேடிக்கொண்டிருந்தேன்.எல்லாம் விகட பேட்டிகள்தான். இந்தக்கேள்விகளுடன் நேர்காணலை தயாரித்தால் நவீன் என்னை லகுடபாண்டியாக்கிவிடுவார். ஒருவரிடம் கேள்விகள் கேட்கவேண்டும் என்றால் முதலில் அவரைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். அவர் பேசிய காணொலிகள், அவரின் குறு/ முழுநீளப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தேன்.ஆள் கொஞ்சம் சீரியசான ஆள்தான். அவரின் திரைப்படத்தை தெரிந்து புரிந்து கதையை அறிந்துகொள்ளமுறையே கோனார், வெற்றித்துணைவன், டுயூட்டர், நோட்ஸ் பல வேண்டும். கேள்விகளை தயாரிக்க

ஆரம்பித்தேன். சீலிங் பார்த்தபடி, மெய்மறந்தபடி, ஸ்க்ரீனை முறைத்துக்கொண்டு, வெறித்துக்கொண்டுகொறித்துக்கொண்டு என இரண்டு நாட்களில் பதினைந்து கேள்விகளை தட்டானிட்டு வெற்றிப்பெருமிதத்தோடுதாளை பார்க்கும்போதுதான் அவருக்கு தமிழ் தெரியாது என்ற நினைவு உள்ளுக்குள் தட்டியது.உடனே நண்பர் மூலமாக அக்கேள்விகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச்சொல்லி கேட்டேன். உடனடியாக செய்து கொடுத்தார். அக்கேள்விகளை அவருக்கு அனுப்பிய இரண்டு நாட்கள் கழித்து சந்திப்பு நடந்தது. நானும் பாண்டியும் அவரின் அலுவலகம் சென்றோம். பாண்டித்துரை பல்லாண்டு கால பத்திரிக்கையாள அனுபவம் பெற்றவர் போல தோற்றம் உடையவர். கழுத்தில் அத்தாட்சியாக கேமரா வைத்திருந்தார். ஒரு சினிமா தயாரிப்பு அலுவலகத்தை பார்த்தது அதுவே முதல் முறை. நல்ல உயர்தரத்துடன் இருந்தது. சுவற்றில் அவர் நிறுவனம் தயாரித்த படங்களின் போஸ்டர்கள் அழகாக ப்ரேம் செய்து மாட்டப்பட்டிருந்தது. ஒருவித மிரட்சியுடன் கேள்விகளை ஆரம்பித்தோம். வெண்பொங்களின் நடுவே முந்திரி போல நடு நடுவே தமிழில் பேசினார். மலையாளக்குடும்பத்திலிருந்து வந்தாலும் தமிழ் ஓரளவுக்கு வாசிக்கவும் ஈரளவுக்கு பேசவும் தெரிந்திருந்தது. முதல்முறை என்பதால் இருவருக்குமே நா குழன்றது. அவர் சூழலை இலகுவாக்குவது போல எங்களை பேசவைத்து இயல்புநிலைக்கு கொண்டு வந்து பேட்டியை ஆரம்பித்தார். அவர் பேசப்பேச குரல்பதிவு செய்துகொண்டோம். நம் நேரம் எப்படியென்று தெரியாது ஆனால் அவரின் நேரம் பொன்னானது என்பதை அலுவலகத்தில் இருக்கும்போது உணர்ந்தேன். எவ்வித மனத்தடையும் இல்லாமல் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார். அவருடைய வரவேற்பும் விருந்தோம்பலும் திகைக்க வைத்தது. தயாரித்து வைக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்குமே தடங்கல் இல்லாமல் பதில் அளித்தார்.

அடுத்த நாள்முதல் பதில் அளித்த குரல்பதிவுகளை ஒவ்வொன்றாக ஒலிக்கவிட்டு எழுத ஆரம்பித்தேன். நினைத்த அளவுக்கு சுலபமான வேலையில்லை என்பது முதல் கேள்விக்கான பதிலை தயாரிக்க ஆரம்பித்தவுடன் உணர்ந்தேன். ஓடவிட்டதுமே அடிக்கத்தொடங்கினால் இரண்டாவது வார்த்தை அடிக்கும்போது குரல் கடந்து விட்டிருக்கும். இப்படி ஒவ்வொரு இரவின்போது ஒலிக்கவிட்டு தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். ஒருகட்டத்தில்தூக்கத்திலும் அவர் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. இத்தனை சோர்வை அளிக்கும் வேலை என்றால் ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன் என்று நினைக்கத்தொடங்கினேன். ஒருவழியாக அத்தனை கேள்விகளையும் தட்டச்சி விட்டு முழுதாக வாசித்துப்பார்த்தேன். வாக்கிய அமைப்பின் போதாமைகள் சில கண்ணில்பட்டது. அவற்றைத் திருத்தி ஓரளவு நல்ல நிலையை அடைந்ததும் நவீனுக்கு அனுப்பினேன். அனுப்பியதும் அழுத்திக்கொண்டிருந்த ஒரு துயரம் காணாமல் போன பரவசமும் அமைதியும் ஏற்பட்டது. அந்த நிம்மதியை ஒருவாரம் கூட தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. நவீனிடம் இருந்து அழைப்பு வந்தது. நேர்காணலின் வடிவம் குறித்து குறைபட்டுக்கொண்டார். இலக்கிய இதழில் வரவேண்டிய அளவுக்கான மொழியின் போதாமைகளைச் சொன்னார். நேர்காணல் முழுக்க பேச்சு வடிவத்தில் தயாரித்திருக்கிறீர்கள். நம் இதழுக்கு பொருத்தமாக இருக்காது. மொத்தமாக மாற்றி முதலில் இருத்து தயாரியுங்கள் என்றார். இடியொன்றை நேராக நெஞ்சில் இறக்கியது போன்றிருந்தது. அதிலிருந்து மீளும் முன்பே அலைபேசி வைக்கப்பட்டது. நற நறவென கடித்தபடியே பாண்டித்துரை இருக்கும் திசைநோக்கி நொந்துகொண்டேன்.

மறுபடி இரவுகளில் ஒலிப்பானை காதில் மாட்டிக்கொண்டு தட்டச்சு செய்யத்தொடங்கினேன். ஏற்கனவே எழுதியிருந்ததில் திருத்தியும் புதிதாக கேட்டும் ஒருவாரத்தில் தயார் செய்து அனுப்பினேன். இம்முறை அனுப்பிவிட்டு நிம்மதி அடையமுடியவில்லை. எந்த குண்டை வீசப்போகிறார் என்று பீதியுடன் காத்துக்கொண்டிருக்கும்போதே மின்னஞ்சலுக்கு பதில் எழுதி இருந்தார் நவீன். நேர்காணலில் உள்ள எழுத்துப் பிழைகளை, ஆங்கில வார்த்தைகளை, சொற்றொடர் பிழைகளை, சுட்டிக்காட்டி அனுப்பியிருந்தார். பிழைகளுக்கு தக்கவாறு சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் நிறங்கள் இருந்தது. மறுபடி துயரம் வந்து தோளில் ஏறிக்கொண்டது. சலிப்பாக ஒருபக்கம் இருந்தாலும் அத்தனை வேலைகளுக்கு இடையிலும் உன்னிப்பாக பிழைகளை கவனித்து குறித்து அனுப்பிய அவரின் பொறுமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. மூன்று வரிகளுக்கு இடையில் ஒரு நிறம் என நேர்காணல் முழுக்க வெவ்வேறு நிறங்களாக காட்சியளித்தது.

இப்படித்தான் என்னுடைய நேர்காணலுக்கு நிறம் சேர்த்தார் நவீன். எல்லாவற்றையும் திருத்தி அனுப்பினால் அதற்கடுத்து முன்பில்லாத நிறங்களை சேர்த்து மறுபடி திருத்தம் கோரி அனுப்பினார். இடையில் ஒருமுறை பாண்டித்துரைக்கு அலைபேசி மென்மையாக எனக்குத் தெரிந்த வசவுகளை உதிர்த்தேன். வேறு என்ன செய்ய முடியும். இப்படி மூன்று முறை நவீனிடமிருந்து மின்னஞ்சல் திரும்பி வந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து “நீங்களே இனிமேல் திருத்திக் கொள்ளுங்கள் ஒரு ஆசிரியராக உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு” என்று சொல்லிவிட்டேன்.

இதையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு வாசகர் இதழை பிரித்த உடன் அவர்களுக்குப் பிடித்தமான கவிதையோ, சிறுகதையோ, கட்டுரைகளையோ, அல்லது நகைச்சுவை துணுக்குகளையோதான் விரும்பிப் படிப்பார்கள். பிரபலம் அல்லாத பட்சத்தில் ஒருவரும் நேர்காணலை விரும்புவதில்லை. ஆனால் ஒரு நேர்காணலில் ஒரு வாசகன் தனக்கான ஆதர்சத்தை கண்டடைய முடியும் அதற்கு என் அனுபவத்தில் இருந்தே உதாரணம் சொல்ல முடியும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகனின் வலைதளத்தில் “தாடகை மலை அடிவாரத்தில் ஒருவர்” என்றொரு தொடர் எழுதினார். மொத்தமாக ஐந்தாறு பத்திகள் இருக்கும். ஒரு படைப்பாளியின் அத்தனை குணாதிசயங்களும் வெளிப்பட்ட ஒரு தொடர் அது. ஒருவகையில் நேர்காணல் வகைமையில் சேர்க்கலாம். நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி அவர்களின் ஜவுளிக்கடையில் ஜெமோவும் சுராவும் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். கோடு போட்ட உயர்தர சட்டையை கால்சராய்க்குள் நேர்த்தியாக நுழைத்து விற்பனைப்பிரதிநிதியின் புன்னகையோடு ஒருவரின் வருகை நிகழ்கிறது. ஜெமோ அவரைப் பார்த்தமாத்திரத்தில் எல் ஐ சி முகவர் என்று நினைத்து பாலிசி போடச்சொல்லி கேட்பாரோ என்று பயந்துபோய் பார்க்கிறார். இவர்தான் நாஞ்சில் நாடன் என சுரா அறிமுகப்படுத்தி வைக்கிறார். இருவரும் பரஸ்பரம் பேசிக்கொள்கிறார்கள். நாஞ்சில் பேச ஆரம்பித்ததும் அவருடைய புறத்தோற்றம் கலைந்து தோளில் ஈரிழைத்துவர்த்தும் இடுப்பில் பலராமபுரம் புளியிலைக்கரை சாய வேஷ்டியும் கட்டியபடி எதோ ஒரு முத்தாலம்மன் கோவில் திண்ணயில் வெற்றிலை போட்டபடி பேசிக்கொண்டிருக்கும் ஒருவராக மாறிவிடுவதாக எழுதுகிறார்.

“…அந்தப்பக்கமெல்லாம் அவியலிலே மாங்கா போடுக வழக்கம் கெடையாது சார்…” என்று நாஞ்சில்நாடன் சுந்தரராமசாமியிடம் பேச்சைத் தொடர்ந்தார். “ஆனா சாம்பாரிலே சேம்பங்கிழங்கு போடுவா. கல்யாணச்சமையல்ணா சேம்பக்கெழங்கு இல்லாம சாம்பார் இல்ல. காயம் கொஞ்சம் ஜாஸ்தியாப் போட்டு பருப்ப ஒரு மாதிரி  முக்காவேக்காட்டா விட்டுஅதும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கும். இங்க நம்ம தெரிஞ்ச வங்க வீட்டு சமையலுக்கு ஒருநாயர் திருவட்டாரிலேருந்து வந்தாரு. குறிப்படிகளைப் பார்த்ததுமே சேம்பங்கெழங்கு இல்லாம சமைக்கிறது பொண்ணு இல்லாம கல்யாணம் செய்யியது மாதிரில்லான்னு சொல்லிட்டாரு..”

இதுவரை வாசிக்காதவர்கள் இந்தத்தொடரை வாசித்துவிடுங்கள். ஏன் என்றால் இந்தத் தொடர்தான் நாஞ்சில் நாடன் எனும் ஆளுமையை எனக்கு அறிமுகப்படுத்தியது. ஒரு படைப்பாளியைப் பற்றி இன்னொரு படைப்பாளி இத்தனை நேர்த்தியாக எழுதிக் கண்டதில்லை. இத்தொடரை வாசித்தபிறகுதான் நாஞ்சில் நாடனின் படைப்புகளைத் தேடித்தேடி வாசித்தேன். சதுரங்க குதிரை, எட்டுத்திக்கும் மதயானை, என்பிலதனை வெயில் காயும், மிதவை, தலைகீழ் விகிதங்கள் மற்றும் அவரது சிறுகதைத் தொகுப்புகள் என கிட்டத்தட்ட அனைத்தையும் வாசித்தேன். இவரின் சதுரங்க குதிரை வாசிக்கும்போது நாராயணன் நாந்தான் என நம்பினேன். அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை. நம் வாழ்வும் கூட நாராயணன் போல மாறிப்போகும் என்று நினைத்திருந்தேன். இன்றைய தலைமுறையில் வீதிக்கு ஒரு நாராயணன்  இருக்கிறான். இதை அன்றே உணர்ந்து எழுதியிருப்பதுதான் படைப்பாளியின் சமூகப்பார்வை. இவையெல்லாம் எங்கிருந்து பெற முடிந்தது என்றால் அன்றைய ஜெமோவின் எழுத்துதான். ஒரு நேர்காணல் வாசிப்பவருக்குக் கூட தன்னையறியாமல் தன் ஆதர்சத்தை கண்டுகொள்ளும் வாய்ப்புள்ளது.

தனி உரையாடலில் டாக்டர் சண்முகசிவா அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டாராம். ஏன் உங்கள்  பெரும்பாலான கதைகளில் கஷ்டப்படும் ஒரு சிறுமி கதாபாத்திரம் வந்து விடுகிறது என்றார். இந்தக்கேள்வி அவருக்குப் புதுமையாக இருக்கிறது. எங்கள் வீட்டில் ஒரு சிறுமி வேலை செய்தாள். சிறுமிகளுக்குடைய எல்லா ஆசைகளையும் கொண்டு அவள் வீட்டு வேலைதான் செய்தாள். அவள் மேல் எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. ஒருவேளை அப்படி கதைகளில் என்னையறியாமல் வந்திருக்கலாம் என்கிறார் சண்முகசிவா. நாஞ்சில் நாடன் கதைகளில் பந்தியிலிருந்து அழுக்கு உடை காரணமாக வெளியேற்றப்படும் சிறுவனின் சித்திரம் தொடர்ந்து பதிவாகியிருக்கும். அது அவருக்கே சிறுவயதில் நிகழ்ந்தது. படைப்பாளியின் ஆழ்மனதில் ஒரு புள்ளியாக தேங்கியிருக்கும் சமயங்களில் அவனின் படைப்புகளிலும் அது வெளிப்படும். அப்படித்தான் படைப்பாளி என்பவன் இயங்குவான். அவனின் உலகை அப்படித்தான் புரிந்துகொள்ள முடியும்.

கேள்வி கேட்டு பதில் எழுதி உருவாவது ஒருவகை என்றால் ஒருவரைப்பற்றி புரிந்துகொண்டு தன்போக்கில் அவரைப்பற்றிய சித்திரம் எழுதுவது இன்னொரு வகை. ஒரு ரூபாய் டீச்சர் என்ற எழுத்தாளர் யூமா வாசுகியின் நேர்காணல் தொகுப்பு ஒன்று உண்டு. மொத்தமே ஐந்து நேர்காணல்தான் அந்த புத்தகத்தில் உண்டு. ஆனால் அதைப்போல அற்புதமான நேர்காணலை வேறு எங்குமே பார்த்திருக்க முடியாது. ஐந்து பேருமே வெவ்வேறு தளத்தில் இயங்கிய, சமூகம் கண்டுகொள்ளாத சாமானிய மனிதர்கள். இந்தப்புத்தகத்திற்கு வேறொரு சிறப்பு உண்டு. எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் அவர்களின் முழுமையான ஆத்மார்த்தமான நேர்காணல் ஒன்று உண்டென்றால் அது இந்நூலில் மட்டுமே. கோபிகிருஷ்ணன் தன் வாழ்நாளில் யாருக்கும் பேட்டி அளித்ததில்லை. கோபிகிருஷ்ணனின் படைப்புகளைத்தவிர்த்து அவரைப் பற்றி அறியவேண்டும் என்றால் இந்த நேர்காணல் தவிர வேறு வழியில்லை. அதுதவிர, வை,கோவிந்தசாமி, கவிஞர் சுகுமாரன், பிணம் எரிக்கும் தொழில் செய்யும் ஒரு பெண்மணி, மற்றும் ஒரே ஒரு ரூபாய்க்கு பாடம் சொல்லிக்கொடுத்த டீச்சர் ஒருவரின் நேர்காணல். இவைதான் அந்த ஒட்டுமொத்த புத்தகமும். ஆனால் அது ஒரு பொக்கிஷம்.

சமீபத்தில் தடம் விகடனில் கோணங்கி அவர்களின் நேர்காணல் வந்திருந்தது. தஞ்சாவூர் பக்கம் எதோ ஒரு கிராமத்தில் இருக்கும் பைரவர் கோவிலை பார்ப்பதற்காக வயல்வெளி வழியே ஒற்றைத்தடத்தில் நடந்து செல்கிறார்கள். வழியில் வளைந்தும் நெளிந்தும் பல பனைமரங்களை பார்க்கிறார்கள். பேட்டி எடுக்கச்சென்றவர் நடந்துகொண்டே கோணங்கியிடம்,  “அண்ணே ஏன் இந்த மரமெல்லாம் இப்படி வளைஞ்சு போய் கெடக்கு?” என்று கேட்கிறார்

நிமிர்ந்து பார்க்கிறார் கோணங்கி ”அது ஒண்ணுமில்லடா தம்பி அதெல்லாம் பூமிக்குள்ள ஒளிஞ்சிருக்கற நாயோட வாலுங்க” என்பார்.

ஒரு படைப்பாளியின் மனது இப்படித்தான் இருக்கும். குழந்தைத்தனமான அந்த பதிலை வேறு எவராலும் யோசித்துப் பார்க்கவே முடியாது. எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோமோ அதைப்பற்றிய சிந்தனையினாலான பதில் அது. இத்தகைய அம்சங்களை படைப்பாளின் படைப்புகளில் காணுவதைக் காட்டிலும் ஒரு நேர்காணலில் காணமுடியும்.

நவீன் என்னிடம் நேர்காணல்களைப் பற்றி பேசச்சொன்னார். நூலில் இடம்பெற்றுள்ள ஆறு பேருமே வெவ்வேறு தளங்களில் முக்கியமானவர்கள். அவர்களைப்பற்றி பதினைந்து நிமிடங்களுக்குள் என்னால் சொல்லிவிட முடியாது. அது நேர்மையும் அல்ல. ஆனால் நான் அறிந்தவரையில் நேர்காணலை எப்படி அணுகுவது, அதனால் என்ன பயன், நேர்காணலுக்கு பின்னால் உள்ளவர்களின் உழைப்பு, அது பிரசுரிப்பதற்கு முந்தைய படிநிலைகளை அது எப்படிக் கடந்து வருகிறது என்பதை உணர்த்திச்செல்ல முடியும். இந்நூலில் உள்ள நேர்காணல்களிலும் உங்களால் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டடைய முடிந்தால் மகிழ்ச்சி.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...