வல்லினம் 100 விமர்சனக் கட்டுரை – ஒரு பார்வை

வல்லினம் 100′ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு விமர்சனக் கட்டுரைகளுள் சீ.முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ dகுறுநாவல்கள் தொகுப்பைக் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரையும் ஒன்று. அக்கட்டுரையைத் தவிர்த்து மற்ற ஐந்து விமர்சனக் கட்டுரைகளைக் குறித்து என் கருத்துகளை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன்.

முதலாவது, முத்தம்மாள் பழனிசாமியின்நாடு விட்டு நாடு வந்துநூல் குறித்த அழகுநிலாவின் விமர்சனக் கட்டுரை.

தற்காலத்தில் புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர் சில பத்தாண்டுகள் கழித்தும் உள்ளூரில் பிறந்துவளர்ந்தவர்களால் வெளிநாட்டவர்களாகவே பார்க்கப்படும் அதேவேளையில் பிறந்த நாட்டுக்குப் போதுமான அளவு அந்நியப்பட்டுவிடுவதும் நிகழ்வது அவர்களின் முக்கியமான ஆதங்கங்களில் ஒன்று. அதைக்குறிப்பிடும் விமர்சகர், நூறாண்டுகளுக்கு முன் வந்த முதல் தலைமுறை எதிர்கொண்ட சிக்கல்களோடு ஒப்பிடும்போது, இந்த ஆதங்கமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்கிறார். இது முக்கியமான, ஒப்பீட்டுப் பார்வை.

தன்வரலாறு தன்னைப்பற்றியதாக மட்டும் இல்லாமல் தான் சாட்சியாக நின்ற அனைத்தைக் குறித்தும் இருக்கவேண்டும் என்று விமர்சகர் குறிப்பிடுவதும் சிறப்பானது. வெற்றி பெற்றவர்களின் வரலாறுகளையே வாசித்தத் தனக்கு இந்த எளிய குடும்பத்தின் வரலாறு நெருக்கமாக இருக்கிறது என்கிறார். ஒரு வரலாறு வெறும் செய்தியாக மட்டுமே இல்லாமலிருப்பதை உணர்த்தும் இக்குறிப்பும் அவசியமானதே. உச்சகட்ட இந்திய விடுதலைப் போராட்டம் அப்போது மக்களிடம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைப் பற்றி ஏன் எந்தக்குறிப்பும் நூலில் இல்லை என்ற கேள்வியை விமர்சகர் முன்வைத்திருப்பது அவர் ஒரு தேடலுடன் நூலை அணுகியிருப்பதைக் காட்டுகிறது.

அம்மை போட்டவர்களை ஐந்தாம் நாள் விதவைகள் குளிப்பாட்டினார்கள் என்ற செய்தியை நூலில் வாசித்துவிட்டு அந்த வழக்கம் எங்கிருந்து தொடங்கியது என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு, விசாரித்து அறிந்து, விதவைகள் அம்மனின் வடிவமாகக் கருதப்படுவதால் இருக்கலாம் என்ற தகவலை விமர்சகர் கொடுக்கிறார். இது ஒரு விமர்சகரின் முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று.

‘சாதியின் பலவீனங்களை வெளிப்படையாகப் பேசியிருப்பதால் இந்த நூல் தமிழ்நாட்டில் வெளிவந்திருந்தால் சில ஆண்டுகளில் தடைசெய்யப்பட்டிருக்கும்’ என்ற ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை விமர்சகர் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நூலுக்குத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை மனதிற்கொண்டு இது எழுதப்பட்டிருக்கலாம். உண்மை யாதெனில் மாதொருபாகன் ஒருபோதும் தடைசெய்யப்படவில்லை. தடைகோரி தமிழக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆகவே இதுபோன்ற கருத்துகளை எழுதும் முன் கவனமாக இருப்பது அவசியம்.

இரண்டாவது, ‘கே.எஸ்.மணியம் : அடையாளம் காணப்படாத ஆளுமைஎன்ற விஜயலட்சுமியின் கட்டுரை.

படைப்புகளின் வழியாக ஓர் ஆளுமையைக் குறித்த விமர்சனம் எனும்போது எந்த கருத்துகளுக்காக அவர் அடையாளம் காணப்படுகிறார் என்பதை எடுத்துக்காட்டுவது முக்கியமானது. ‘புதிய புலம்பெயர் மனிதன்’ போன்ற புதுக்கருத்துகளை மணியம் வெளியிட்டிருப்பதையும் குறிப்பாக விமர்சகர் எடுத்துக்காட்டியுள்ளார். அது விமர்சனத்தில் நன்றாகச் செய்யப்பட்டுள்ளது.

தேசிய அடையாளத்தை உருவாக்குவதில், முன்பின் அறியாத ஓர் அடையாளத்துடன் ஒன்றிவிடுவது அல்லது சுய அடையாளத்துடன் மற்றதையும் ஏற்றுக்கொள்வது என இரண்டு வழிகள் உள்ளதாக மணியம் தன் படைப்புகளில் சொல்கிறார் என்பது விமர்சகரின் கருத்து. இதைப்போன்ற சாரமாகச் சுருக்கி எடுத்துக்கொள்ளப்படும் கருத்துகள் சிலசமயம் படைப்பாளி கவனத்தில்கொண்ட சிக்கலான சூழ்நிலைகளை எளிமைப்படுத்திவிடும் அபாயம் கொண்டிருந்தாலும், இப்படி ஒரு புள்ளியிலிருந்துதான் முன்பின்னாக விவாதங்களை அமைக்கமுடியும் என்பதால் அதுவும் சாதகமான அம்சமே.

ஒரே அடையாளத்தை நிறுவ முயல்வது எப்படி இனவெறியை வளர்க்குமோ அதேபோல அனைத்து அடையாளங்களையும் புறக்கணிக்கும் போக்கும் அருவருக்கத்தக்கது என்ற கருத்தை முன்வைத்து ஒரு மணியத்தின் படைப்பை விளக்கியிருக்கிறார். சொல்லவந்த விஷயத்திற்குப் பொருத்தமான உரையாடல் பகுதிகளையும் அவ்வப்போது படைப்புகளிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார். இந்த அணுகுமுறை விமர்சகர் தெளிவாகச் சிந்திக்கிறார் என்று வாசகருக்குச் சொல்கிறது. கச்சிதமான மொழியில் போதுமான தரவுகளுடன் எழுதப்பட்டுள்ள சிந்திக்கவைக்கும் கட்டுரை. குறைந்தபட்சம் இந்தியச் சமூகமாவது இவரைக் கொண்டாடவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்து முடித்திருப்பது வாசகரிடம் சில தேடல்களைத் துவக்கக்கூடும்.

மலாய் மொழியில் எழுதி தேசிய இலக்கியம் என்ற அடையாளத்தைப் பெறவேண்டும் என்பதைவிட, ஆங்கிலத்தில் எழுதிச் சுதந்திரமாகவும் பிராந்திய எல்லைகளைத் தாண்டியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தும் நோக்கத்தை மணியம் கொண்டிருந்தாரா என்பதை விமர்சகர் ஆராய்ந்திருக்கலாம். ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இப்படைப்புகளுக்குத் தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கவலை பொருளற்றதாக இருக்கும்.

மூன்றாவது, ‘மலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள்என்ற ஶ்ரீதர் ரங்கராஜின் விமர்சனக் கட்டுரை.

மலேசியாவில் நவீன இலக்கியத்தின் நிலை குறித்துப் பேசும் கட்டுரையாளர், தோட்டப்புறச் சூழலை முன்னிறுத்தும் படைப்புகள் கிட்டத்தட்ட மலேசிய இலக்கியத்தின் ஒரே அடையாளமாக மாறிவிட்டது என்று குற்றம்சாட்டுகிறார். இந்த இடத்தில் இரண்டு விஷயங்களைக் கவனப்படுத்துகிறார்; முதலாவது, ஒரு பிரச்னையை மட்டும் மொத்த இலக்கியச்சூழலும் கையிலெடுப்பது. இரண்டாவது, எல்லா இடத்திலும் உள்ள பிரச்னையை ரப்பர் காட்டிற்குள் வைத்து எழுதி அதை நவீன சிறுகதையாக்க முயல்வது.

சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளோடுதான் மலேசிய சிறுகதைகளையும் ஒப்பிடவேண்டும் என்றும், ஒருகாலத்தில் கல்வி மற்றும் தகவல்தொடர்பு இவற்றில் இருந்த இடைவெளி இன்றைய மலேசியப் படைப்பாளிகளுக்கு இல்லை என்பதால் சிறப்புச் சலுகைகள் ஏதும் வழங்கமுடியாது என்ற தொனியில் எழுதியிருப்பதும் ஏற்கத்தக்கதே. ‘அரசியலற்ற படைப்புகள் ஒரு சமூகச் சூழலில் இருக்கும்தான், ஆனால் மொத்தப் படைப்புலகமும் அரசியல் நீக்கம் செய்த படைப்புகளால் ஆனது எனும் சூழல் ஆரோக்கியமானதா?’ என்ற முக்கியமான கேள்வியையும் விமர்சகர் முன்வைக்கிறார்.

சு.யுவராஜனின் அல்ட்ராமேனில் உள்ள பத்து கதைகளையும் கிட்டத்தட்ட அடியோடு நிராகரித்து விட்டார் விமர்சகர். அவற்றில் எட்டுக்கதைகளைக் குறித்து இவை இலக்கியம்தானா என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் ஏன் அந்த சந்தேகம் எழுந்தது என்பதைக் குறிப்பிடவில்லை. அந்த எட்டிலிருந்து ஒரேயொரு கதையின் ஒரு மோசமான அம்சத்தையாவது உதாரணமாகக் குறிப்பிட்டு அதனடிப்படையில் அக்கருத்தை எழுதுவதே விமர்சன தர்மம்.

கே.பாலமுருகனின் இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள் தொகுப்பில் மூன்று கதைகள் தேறும் என்கிறார். அவற்றுக்கான சில காரணங்களையும் குறிப்பிடுகிறார். ஆனால், ‘எல்லோரும் எழுதும் பொதுவான சிக்கலின் வேறொரு பரிணாமத்தை பாலமுருகன் நுட்பமாக எழுதியுள்ளார் என்று சொல்லும்போது அது என்ன பரிமாணம், என்ன நுட்பம் என்பதைக் குறிப்பிடாமல் விமர்சகர் கடந்துபோய்விடுகிறார். இந்த இடம்தான் விமர்சனத்தின் தரத்தை அளக்கும் முக்கியமான இடம் ஆனால் இங்கும் குறிப்பாக ஏதுமில்லை.

ம.நவீனின் மண்டை ஓடி தொகுப்பின் எட்டுக் கதைகளில் ஐந்து தேறும் என்பது விமர்சகரின் கருத்து. ஆனால் அதற்கு அவர் குறிப்பிடும் காரணத்தில் குழப்பமே எஞ்சுகிறது. உதாரணமாக, ‘ஒரு விட்டேத்தியான லும்பந்தனமான கதாபாத்திரத்தின் சித்தரிப்பு மட்டுமே இக்கதையில் முக்கியமானது’ என்று விமர்சகர் மண்டை ஓடி கதையைப் பாராட்டியுள்ளார். கதாபாத்திரச் சித்தரிப்பு மட்டுமே ஒரு சிறுகதையை உருவாக்கவியலுமா என்ற கேள்வி எழுகிறது. அதைப்போலவே மேலும் நெஞ்சுக்கொம்பு கதையிலும் கதாபாத்திரச் சித்தரிப்பு, நுண்சித்தரிப்பு என்று மீண்டும் மீண்டும் அந்த ஒற்றை அம்சத்தையே சிறப்பான கதைகளின் அம்சமாக முன்வைப்பது அயர்ச்சியை உண்டாக்குகிறது. இவர் பாராட்டியுள்ள மற்ற மூன்று கதைகளைக் குறித்தும்கூட வலுவான வாதங்கள், குறிப்பான எடுத்துக்காட்டுகள் ஏதும் இல்லை.

நான்காவது, ‘இல்லாத விளக்கில் உருவாகும் ஒளிஎன்ற தலைப்பில் .நவீன் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரை.

சிங்கப்பூரின் புனைவிலக்கியவாதிகளான கமலாதேவி அரவிந்தன், ஜெயந்தி சங்கர், லதா, மாதங்கி, அழகுநிலா ஆகிய ஐவரின் சிறுகதைகளை விமர்சித்து, இவர்களின் சிறுகதைகள் பெரும்பாலும் மேம்போக்காகவும் ஜனரஞ்சக இலக்கியத்துக்கு நெருக்கமாக இருப்பதாகவும் விமர்சகர் கருதுகிறார்.

இலக்கிய விமர்சனம் ஒரு சூழலில் தகுந்த பதில்களோடு எதிர்கொள்ளப்படாமல் வசைகள் புலம்பல்கள் போன்றவற்றால் ஒருசாரராலும், கனத்த மௌனத்தால் மற்றொரு பிரிவினராலும் எதிர்கொள்ளப்படும் அவலத்தைக் கேள்வி கேட்டிருப்பதற்காக இவ்விமர்சனம் பாராட்டப்படவேண்டும். ஜெயந்தி சங்கரின் தேநீரகம் கதையில் நடந்துள்ளதாக ஒரு வரலாற்றுக் குழப்பத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பியிருப்பது பாராட்டுக்குரியது. விமர்சகர் தகவல்களைச் சரிபார்ப்பதற்காக மெனக்கெட்டுள்ளது தெரிகிறது.

லதாவின் சில கதைகளைக் குறித்துக் குறிப்பிடும்போது வேறு சில புகழ்பெற்ற படைப்புகள் நினைவுக்கு வருவதாக விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு விமர்சகருக்கு சகஜமாக நடக்கக்கூடியதே. அதைக்குறிப்பிடும்போது எந்தக் குறிப்பிட்ட விஷயத்தால் ஒப்புமை தோன்றியதோ அந்த விஷயத்தை மட்டுமே விமர்சன ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். இதை விமர்சகர் தெளிவாகக் கடைப்பிடித்துள்ளார்.

விறுவிறுப்பான ஒரு சம்பவத்தை மட்டும் நம்பி எழுதப்படுவது சிறுகதை அல்ல என்ற விமர்சகரது கோட்பாட்டை ஏற்க இயலவில்லை. சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ ஒரு சல்லிக்கட்டு சம்பவத்தை மட்டும் வைத்து விறுவிறுப்பாக எழுதப்பட்ட கதைதான். இன்றும் முக்கியமான ஒரு கதையாகவே அது நீடிக்கிறது.

‘விருதுகள் பெறும் படைப்பாளிகள் தத்தம் ஆளுமைகளைக் காட்டி மிரட்டி இளம் வாசகர் மத்தியில் கேள்விகள் உருவாகாமல் தடுத்துவிடுகின்றனர்’ என்ற விமர்சகரின் கருத்தும், அதற்கு இரண்டு படைப்பாளிகளின் பெயர்களைக் குறிப்பிடுவதும் தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்புமே தவிர வேறு நன்மைகள் ஏதும் விளையும் என்று கருத இடமில்லை. இளம் வாசகர்களுக்குக் கேள்விகள் இல்லையென்றால் அதற்கு விருதுபெற்ற படைப்பாளிகளைக் காரணம் காட்டுவது வீண்பழி சுமத்துவதாகும். இது ஓர் இலக்கிய விமர்சனத்துக்குத் தேவையற்றது.

ஐந்தாவதும் இறுதியானதுமாக, ‘மலேசிய நவீன பெண் எழுத்துமுன்னோடிகளின் கதை உலகம்என்ற தலைப்பில் .பாண்டியன் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரை.

நான்கு பெண் படைப்பாளிகளின் சுமார் 80 சிறுகதைகளை இக்கட்டுரைக்காக மீள்வாசிப்பு செய்திருப்பது விமர்சகரின் பொறுப்பைக் காட்டுகிறது.

பரிசு பெற்ற கதைகள் என்பதால் அவை வெற்றிபெற்ற  கதைகளா? என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடைதேடுவோம் என்று வாசகரையும் அழைத்துக்கொண்டு நிதானமாக அவர்களின் படைப்புலகுக்குள் நுழையும் இடத்திலேயே இவ்விமர்சனம் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறது. ந.மகேஸ்வரியின் படைப்புகள் எழுந்த 60களில், முற்போக்கு எழுச்சி உச்சத்தில் இருந்தபோதும் அதன் சாயல்கூட அவரது கதைகளில் இல்லை என்பதற்குப் போதுமான உதாரணங்கள் கொடுத்துவிட்டுத்தான் அடுத்த கருத்துக்கு நகர்கிறார்.

அன்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையை ஓ,ஹென்றியின் கிருஸ்துமஸ் பரிசு கதைக்கும், இறுதிவாக்கியம் ஒரு கதையை மிகச்சிறப்பாக ஆக்கிவிடுவதற்கு புதுமைப்பித்தனின் பொன்னகரத்தையும் விமர்சகர் ஒப்பிட்டுக்காட்டுவதன்மூலம் சொல்லவந்த கருத்தைச் சேதாரமின்றிச் சொல்லிவிடுகிறார். நாளிதழ்களில் இருந்து கிடைக்கும் ‘தகவல்களையும் செய்திகளையும் கதையாக்கி நாளிதழ்களுக்கே அனுப்பி இலக்கிய நிறைவு பெற்றுள்ளார்’ என்ற விமர்சகரின் வரி ஒரு கிண்டலையும்கூட எவ்வளவு சுவையுடன் ஆர்ப்பாட்டமின்றி சொல்லலாம் என்பதற்கு நல்லுதாரணம்.

நல்ல கதைகளாக விமர்சகர் குறிப்பிடும் கதைகள் எந்தப்பரிசும் பெறவில்லை என்பதைக் கவனப்படுத்தியிருக்கிறார். க.பாக்கியத்தின் கதைகளை நவீனப் பெண்களுக்கான பெண்ணியப் படைப்புகளாக ஏற்கமுடியாது மாறாக அவை நவீன மனப்பாங்கோடு வாழ நினைக்கும் பெண்களுக்கான எச்சரிக்கை மட்டுமே என்ற கருத்தை வலியுறுத்தி அந்த அளவில் கருத்தியல் அடிப்படையில் பலகீனமிருப்பதாக விமர்சகர் சுட்டியுள்ளது மிகவும் நுணுக்கமான பார்வை.

எஸ்.பி.பாமா படைப்புகளின் பலமான நகைச்சுவை உணர்வு, ரசனைக்குறைவாக வெளிப்படும் இடமொன்றைச் சுட்டிக்காட்டி பலமே பலவீனமாக ஆவதைக் குறிப்பிட்டுள்ளார். கணவனைப்பிரிவது என்ற ஒரே விஷயம் மனைவிகளால், இப்பெண் படைப்பாளிகளின் கதைகளில், அமைதியாகப் பிரிந்துபோய்விடுவது, தாலியைக் கழற்றி கணவன் காலடியில் வைத்துவிட்டு வெளியேறுவது, விவாகரத்து செய்வதோடு தனக்கேற்ற துணையை மறுமணம் செய்வேன் என்று கணவணிடம் சவால் விட்டுப்பிரிவது என்று  காலமாற்றத்துக்கேற்ப பிரதிபலித்துள்ளதாக விமர்சகர் சுட்டிக்காட்டுமிடம் அபாரம்.

என்னதான் குறைகள் இருந்தாலும் குடும்பச் சிக்கல்களை மையப்படுத்தும் இவர்களின் கதைகளை ‘அடுப்பாங்கரை இலக்கியம்’ என்று ஒதுக்கமுடியாது என்றும், பெண்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தும் கதைகள் என்பதால் மதிக்கப்படவேண்டும் என்றும் விமர்சகர் எழுதும்போது, நவீன இலக்கியத்தின் மீதுள்ள அதே அக்கறை விமர்சகருக்கு சகமனிதர்களின் மீதும் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த பலவீனங்களும் இல்லாத விமர்சனக் கட்டுரை.

இறுதியாக

ஒட்டுமொத்தமாக ‘வல்லினம் 100’ தொகுப்பிலுள்ள விமர்சனக் கட்டுரைகள், ஆளுமைகளை அறிமுகம் செய்வதிலும், நவீன இலக்கியப் படைப்புகளைக் குறித்த புதிய பார்வைகளை வழங்குவதிலும், முக்கியமான கேள்விகளை எழுப்பி அவற்றை விவாதங்களாக ஆக்குவதிலும் வெற்றி பெற்றுள்ளது. ஓர் இலக்கியப் படைப்பைக் குறித்த பல்வேறு பார்வைகளும் அவற்றுக்கிடையே உள்ள முரண்களும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். இலக்கிய விமர்சனத்தின் இலக்கு என்பதே அந்த விவாதம்தான். அதேநேரத்தில் அவ்விவாதங்களை விமர்சனத்திலுள்ள சில தேவையற்ற கருத்துகளும், அதீதக் கூர்மையான சொற்களும் திசைதிருப்பிவிடும் அபாயமும் உண்டு. அதை விமர்சகர்கள் கருத்தில்கொள்ள வேண்டுகிறேன்.

வல்லினம் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *