சீ.முத்துசாமி : ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்.

சீ.மு 02யு.பி தோட்டத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் பெரியாற்றின் மேல் பரப்பில் விரிந்திருக்கும் மரக்கிளையில் இருந்து குதித்து, எல்லா சிறுவர்களும் ‘சொரப்பான்’ பாய்ந்துகொண்டிருக்க கரை ஓரமாக நீந்தியபடியே பாய்ந்த வேகத்தில் தன் நண்பர்கள் ஆற்றின் ஆழம் சென்று மீள்வதை  ரசித்துக்கொண்டிருந்த சிறுவன்தான் முத்துசாமி. ஆற்றில் ஆழ நீந்துவதில் பயம் இருந்தாலும் அதில் கால்களை நனைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லை. அவர் வீடு அன்றைய எல்லா தோட்ட வீடுகள் போலவும் சஞ்சலங்கள் மிக்கது. ஒவ்வொரு இரவும் உடன் பிறந்த ஐந்து சகோதர சகோதரிகளுடன் அப்பாவின் வருகைக்காகக் காத்திருப்பார். நுழையும்போது அப்பா பெரிய தும்மலாகப் போட்டால் கள் குடித்திருக்கிறார் என்று அர்த்தம். வீட்டில் அம்மாவுடன் சண்டை நடக்கும். மறுநாளே குடும்பத்தில் நடக்கும் சண்டைகளின் அருவருப்பை ஆறு அவருக்குள் சொரப்பான் பாய்ந்து கழுவியிருக்கும்.

அப்பா கோவக்காரராக இருந்தாலும் குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளவர். கல்வி பின்புலம் இருந்ததால் அனைத்துப்பிள்ளைகளையும் படிக்க வைத்தார். முத்துசாமியைத் தவிர மற்ற பிள்ளைகளை மலாய் பள்ளிகளில் சேர்த்தார்.  அப்பாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும் அந்தத் தொடர்பின் எதிர்வினைகளே கோபமாக அம்மாவிடம் எழுந்து குடும்பத்தில் பெரும் சண்டைகள் ஆவதும் கால ஓட்டத்தில் முத்துசாமியால் அறிந்துகொள்ள முடிந்தது.  அந்தத் தவறுகள் தனது வாழ்வில் நடக்காமல் இருக்கவே திட்டமிட்டு தனக்கான ஒரு குடும்பம், ஆசிரியர் வேலையென புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

02

ஆசிரியராக சீ.முத்துசாமி

சிறுவயதில் காணும் காட்சிகளும் கிடைக்கும் அனுபவங்களும் ஒருவரின் ஆளுமை கட்டமைப்பில் பங்கு வகிக்கின்றன. குடும்ப வன்முறைகளைப் பார்த்து வளர்ந்த முத்துசாமி, பிடிவாதமும் எளிதில் எதற்கும் சமரசம் செய்துக்கொள்ளாத இறுக்கமான இளைஞராகவும் உருவாகியிருந்தார்.  தண்டல்கள் போல செயல்பட்ட தலைமையாசிரியர்களோடு ஒத்துப்போக முடியாமல் பணியைவிட்டு நீங்கிச்செல்லும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தவருக்குக் கிடைத்த வாய்ப்புதான் காப்புறுதி தொழில். அரசு பள்ளிகளில் ஆசிரியர் தொழில் நிச்சயமான சம்பளத்தை வழங்கக்கூடியது. பாதுகாப்பான எதிர்காலத்திற்கு உத்தரவாதமானது. ஆனால் தான் யாரோ ஒருவரால் மேய்க்கப்படுவதை முத்துசாமியால் அனுமதிக்க முடியவில்லை. அடிப்படையில் கூச்ச சுபாவமும் தனிமை விருப்பமும் கொண்டவராக இருந்த அவருக்கு காப்புறுதி தொழில் தொடக்கத்தில் உவக்காவிட்டாலும் நிலவும் சங்கடமான பள்ளிச்சூழலில் இருந்து தப்பிக்க ஆசிரியர் தொழிலைவிட்டு நீங்கி தன்னை முழுமையாகவே காப்புறுதி முகவராக மாற்றிக்கொண்டார். அவரது அனுமானம் பொய்க்கவில்லை. ஆசிரியர் தொழிலைக் காட்டிலும் கூடுதலாகச் சம்பாதிக்கும் சூழல் அவருக்கு வாய்த்தது.

லௌகீக வாழ்க்கை ஒருபுறம் உற்சாகமாகப் போய்க்கொண்டிருக்க, அவர் தன்னை31 எழுத்தாளராகவும் அறிந்துகொண்டு அதற்கு தன்னை ஒப்புக்கொடுக்கவும் செய்திருந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன், நீலவண்ணன் ஆகியோருடன் இணைந்து ‘நவீன இலக்கியச் சிந்தனை’ எனும் அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் புதுக்கவிதை, சிறுகதை என படைப்பிலக்கியம் எழுதவும் அதன் புதியப்போக்குகளை அறிந்து பயிலவும் தீவிரமாகச் செயல்பட்டார். அதன் உச்சமாக முதல் புதுக்கவிதை மாநாடு ஒன்றையும் இக்குழுவினர் 1970களில் செய்தனர். 18 கவிஞர்களின் புதுக்கவிதைகளைத் தொகுத்து ‘புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்’ எனும் தலைப்பில் மலேசியாவின் முதல் புதுக்கவிதை நூல் வெளியீடு கண்டதும் அந்த மாநாட்டில்தான். அன்றைய இளைஞர்களின் அந்த முயற்சி நாடு முழுவதும் பரவலான கவனத்தை ஏற்படுத்தியது. மரபுக்கவிஞர்களின் எதிர்ப்பு, இளம் கவிஞர்களின் கூட்டணி என உற்சாகமான ஒரு தொடக்கத்தை முத்துசாமி சார்ந்த ‘நவீன இலக்கியச் சிந்தனை’ குழு ஏற்படுத்தியது.

ஒருபக்கம் காப்புறுதி தொழிலில் உச்சங்களை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த முத்துசாமியின் இலக்கிய உலகமும்  தமிழ்நேசனின் தங்கப்பதக்கம், முதல் சிறுகதை தொகுப்பான ‘இரைகள்’ வெளியீடு என ஆரோக்கியமாக நகர்ந்தது. ஆனால் கால ஓட்டத்தில் இவை எல்லாமுமே முத்துசாமியிடம் இயல்பாக வளர்ந்து விருட்சமாகிவிட்டிருந்த பிடிவாத குணங்களால் சீண்டலுக்குள்ளாகத் தொடங்கின.

10

24 வயதில் சீ.மு

மாநாடு கொடுத்த உற்சாகத்தில் மலேசியாவில் எழுந்துவந்த இளம் கவிஞர்கள் பலரும் ‘நவீன இலக்கியச் சிந்தனை’ இயக்கத்தை மையமாகக் கருதினர். அதே காலக்கட்டத்தில் ‘வானம்பாடி’ எனும் வார இதழைத் தொடங்கிய ஆதி.குமணனுக்கு இந்த இளைஞர்கள் வாசகர் வட்டம் அவசியமாக இருந்தது. புதுக்கவிதை எழுத ஆர்வமாக இருந்த அன்றைய இளைஞர்களுக்கும் பத்திரிகைகள் களம் அமைத்துக்கொடுக்காத அச்சூழலில் அக்கினி, இளங்கோவன், ராஜகுமாரன் போன்ற புதுக்கவிதை முன்னோடிகள் இணைந்து இயங்கிய வானம்பாடி ஏற்ற களம் அமைத்தது. புதுக்கவிதை என்பதை தமிழக ‘வானம்பாடி’ கவிஞர்களுடன் மட்டுமே  சம்பந்தப்படுத்திக்கொண்ட அவ்விதழ் அதுபோன்ற கவிதைகள் வெளிவர களம் அமைத்ததே தவிர புதுக்கவிதை வளர்ச்சிக்காகவோ அதன் புதிய போக்குகளுக்காகவோ பரீட்சார்த்த முயற்சிக்காகவோ எவ்வித பங்கும் ஆற்றவில்லை.

30

இரைகள் வெளியீட்டில்

நவீன இலக்கியச் சிந்தனை தொடர்ந்து புதுக்கவிதைக்காக முனைப்புடன் செயல்பட்டிருந்தால் தமிழகத்தில் கவிதைப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்களை உள்வாங்கி பெரும் வீச்சு கொண்ட இயக்கமாக உருவாகியிருக்கலாம். ஆனால், தமிழக வானம்பாடி கவிஞர்களின் பிரச்சார தொணி தாக்கத்தை தக்கவைத்துக்கொள்வதையே மலேசிய வானம்பாடி விரும்பியது. விளைவாக பெரும் வீச்சுடன் நவீன இலக்கியத்தில் நுழைந்த எம்.ஏ.இளஞ்செல்வன் ஒரு வெகுசன பத்திரிகையின் தேவைக்கு ஏற்ப எழுதும் எழுத்தாளராகச் சுருங்கினார். ஆதி.குமணன் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதும் நாட்டில் இலக்கியச் சூழல் திசைமாறியது. தீவிர இலக்கியப்போக்கை இந்நாட்டில் உருவாக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் இயங்கிய, தனக்கு பலவழிகளைக் காட்டிய இளஞ்செல்வனின்  முரண்பாடான செயல்பாடுகளால் இலக்கிய ஓட்டத்தில் இருந்து முற்றிலுமாகத் தன்னை விடுவித்துக்கொண்டார் சீ.முத்துசாமி.

அவரால் இலக்கியம் வளர்ப்பதாகச் சொல்லி உருவாக்கப்படும் தம்பட்டங்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நட்பைத் துண்டித்துக்கொண்டு தன்னைத் தனிமை படுதிக்கொண்டார்.

இந்த விட்டுக்கொடுக்காத போக்கு சீ.முத்துசாமியின் காப்புறுதி தொழிலையும் பாதித்தது. ஒரு கருத்துமுரண்பாட்டில் தனது மேலதிகாரியுடன் ஒத்துப்போகமுடியாமல் காப்புறுதி நிறுவனத்தில் இருந்தும் வெளியேறினார். கொஞ்சம் பொறுத்திருந்தால் அந்நிறுவனத்தின் முக்கியப்பதவி கிடைத்திருப்பதோடு நிலையான பெரிய வருமானமும் வரவிருந்த சூழலில் அவரது இயல்பான பிடிவாதம் எந்தச் சமாதனப் பேச்சுக்கும் இடம்தராமல் இறுக்கமாக்கியது. விளைவு அவரை கடனாளியாக்கியது. மகன்களின் வெளிநாட்டுப்படிப்பு அவரை பெரும் சுமையில் தள்ளியது. நல்ல சம்பளம் கொடுத்த ஆசிரியர் தொழிலையும் பெரும் பணம் வர இருந்த காப்புறுதி தொழிலையும் விட்டதால் அவரது குடும்ப வாழ்விலும் சங்கடங்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. சீ.முத்துசாமி தனக்குள் தன் அப்பாவின்  மரபணுக்கள் இருந்ததை அறிந்துகொண்ட இருண்ட காலங்கள் அவை. இருளும் கண்ணீரும் நிறைந்த உஷ்ணமான வெளி. அக்காலத்தை அவரது மகன்களின் தலையெடுப்பே மெல்ல மெல்ல நீக்கியது.

சீ.மு 01

பெரியாற்றின் முன்

20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் எழுதவந்த சீ.முத்துசாமிக்கு மாறியிருந்த சூழல் உற்சாகப்படுத்தியது. வயது அவரைக் கொஞ்சம் பக்குவப்படுத்தியிருந்து. நாளிதழ்களுக்கு மீண்டும் சிறுகதைகளை அனுப்பத்தொடங்கினார். அக்காலக்கட்டத்தில் மலேசிய எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த நாவல் போட்டியில் கிடைத்த முதல் பரிசும் ‘மண்புழுக்கள்’ என்ற அந்த நாவல் பரவலாகப் பெற்ற கவனமும் அவரை மீண்டும் துடிப்புடன் எழுத வைத்தது. குறுகிய காலம் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதேகாலக்கட்டத்தில் உருவான ‘காதல்’ இதழும் அதை சார்ந்து இயங்கிய இளம் எழுத்தாளர் குழுவும் சீ.முத்துசாமியைத் தங்களுக்கானவராக உள்ளிழுத்துக்கொண்டது. சீ.முத்துசாமி மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என துடிப்புடன் இயங்க ‘காதல்’,’வல்லினம்’ இதழ்கள் களம் அமைத்துக்கொடுத்தன.

இந்தக் காலக்கட்டத்தில் சீ.முத்துசாமியின் நூல்கள் தொடர்ந்து வெளிவந்தன. வல்லினத்துடன் அவருக்குச் சிறு பிணக்கு உண்டாகியிருந்தாலும் கவிஞர் பா.அ.சிவம் உள்ளிட்ட இளம் எழுத்தாளர்கள் அவரது நூல் பதிப்பிக்கும் முயற்சியை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டினர்.  துடிப்பாக இயங்க வேண்டிய 20 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட தொய்வும் தனிமையும் இன்றும் அவர் நினைத்து ஏங்கும் கால கட்டங்கள்தான். எழுதாமல் இருந்தாலும் வாசிப்பை விடாத அவரது இலக்கிய ஆர்வமே இன்னமும் அவர் எழுத்தில் கலை கைகூட காரணியாக உள்ளது.

முத்துசாமியின் எழுத்துகள் தன்னைத் தனித்து அடையாளப்படுத்திக்கொண்டது 2000க்குப் பின்னர்தான். அவரது எழுத்தை வாசிக்கும் இளம் எழுத்தாளர்கள் மூலமே அவர் மீள் கண்டுபிடிப்புச்செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் எழுதத் தொடங்கினார். அவரது இளமை பருவத்தில் சந்தித்த குடும்ப வன்முறையின் இருண்ட பகுதிகள் பலவும் அவரது எழுத்தில் கவியத்தொடங்கின. எழுத்தின் மூலமே அவர் தனக்குள் பயணித்து தன்னையே ஆராய்ந்தார். அதன் மூலமே அவர் தன்னை மீட்டெடுத்தார்.

சீ.மு 03தமிழகத்திற்கு வெளியே உள்ள எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் கௌரவத்திற்குறிய இரு விருதுகளாக இயல் விருதையும் , விஷ்ணுபுரம் விருதையும் குறிப்பிட வேண்டும். இந்த விருதுகள் ஒரு படைப்பாளியை தமிழின் தீவிர வாசகர்கள் முன் மிக எளிதாகக் கொண்டுச் சேர்க்கின்றன. மண்புழுக்கள்(நாவல்), இரைகள்(சிறுகதை தொகுப்பு) விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை (குறுநாவல்), மண்(குறுநாவல்) அம்மாவின் கொடிகயிறும் எனது காலிங்க நர்த்தனமும்(சிறுகதை தொகுப்பு). இருளுள் அலையும் குரல்கள் (குறுநாவல் தொகுப்பு) என  மலேசிய மண் சார்ந்த வாழ்வை தொடர்ந்து தன் எழுத்தில் பதிவு செய்யும் முத்துசாமியின் இலக்கியப் பயணத்திற்கான அங்கீகாரமாக இவ்வருடம் விஷ்ணுபுரம் விருது கிடைக்கவிருப்பதில் மகிழ்ச்சி. மலேசியா செம்பனை பயிரீட்டில் கவனம் செலுத்தும் நாடாக மாறி பல ஆண்டுகள் ஆனப்பின்பும் ரப்பர் தோட்டங்கள் இன்னமும் அவர் படைப்புகளில் உயிர்த்திருக்கிறது. நாமெல்லாம் மறந்துபோன ரப்பர் கொட்டைகள் உருவாக்கும் சூட்டை சீ.முத்துசாமி தனது எழுத்துக்குள் உண்டாக்கியபடி இருக்கிறார். அந்தக் கலைஞனை  வல்லினம்  வாழ்த்துகிறது.வணங்குகிறது.

2 comments for “சீ.முத்துசாமி : ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்.

  1. magendran rajendran
    December 15, 2017 at 10:19 am

    வாழ்த்துகள் சீ முத்துசாமி ஐயா.என்னை போன்ற இளைஞர்களுக்கு உங்கள் வாழ்க்கை சம்பவங்கள் ஒரு படிப்பினை யாக உள்ளது.

  2. WOTRAVATHY RAMAN
    February 12, 2018 at 11:01 pm

    ஒரு சிறந்த எழுத்தாளர் அடையாளம் காண்பித்த வல்லினம் இலக்கிய குழுவிற்கு நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...