லெஸ்பியன் கடவுள்

MV5BMTkxMzEyOTIwNl5BMl5BanBnXkFtZTcwMzg4MzEyMQ@@._V1_UY268_CR2,0,182,268_AL_ஒவ்வொரு மதமும் தங்களின் கடவுளைத், தங்களின் மொழி வழியாகவும்  கலாச்சாரத்தின் வழியாகவும், நம்பிக்கை வழியாகவும் தொன்று தொட்டு கட்டிக்காத்து வருகிறது. இப்படி தாங்கள் காட்டும் கடவுளே உண்மையானவர் என்றும் தங்களுடைய வேதங்களே இறைவனின் வார்த்தைகள் என்றும் பிரச்சாரம் செய்தும் வருகின்றது. இவ்வுலகம் பாவம் நிறைந்ததாகவும், இந்தப்பாவம் நிறைந்த உலகத்தைக்காப்பற்ற மதபோதகர்களால் இயலும் என்றும் அடிப்படைவாதம் நம்புகிறது. தீவிரவாத மதச் சிந்தனைகளை விதைக்கும் அடிப்படைவாதிகளின் பிரச்சாரங்களினால் மூளைச் சலவை செய்யப்படுகிறது. இதனால் இறைவனின் பெயரால் படுகொலைகளும், மனித நேயச் சிதைவுகளும் நடந்து கொண்டிருப்பதைக் காணலாம்.

வேதங்கள்  காட்டும் வழிகளை  மட்டுமே மனிதனின் பாதையாகக் காட்டும் மதப்போதனைகள் அவனுக்கு வாழ்க்கையைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை. இந்தக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்களைப் பாவிகள் என்றும், சாத்தானின் பிள்ளைகள் என்றும் மதவாதிகளின்  ஒழுக்கம் எனும் அறிக்கையில் கறுப்புப் பட்டியலிடப்படுகிறது.

மதத்தின் அடிப்படைவாதக் கட்டமைப்பைப் பேணுபவர்கள் குறிப்பிட்ட ஒரு சுவையை மட்டுமே சுவை என நம்புவதும் அதை பிறருக்குப் போதிப்பதும் தங்கள் கடமையாகக் கருதுகிறார்கள். உலகில் ஏராளமான பழங்கள் இருக்கும்போது ஆரஞ்சுப்  பழம் மட்டுமே பழம்  என நம்பினால் எப்படி இருக்கும். உலகில் ரசித்து, ருசிக்க வேறு பழங்களும் உண்டு என்ற தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்திற்காக ஆரஞ்சுப் பழத்தை மட்டுமே நம்பியிருக்கும் மதவாதிகளின் அடக்குமுறையை எதிர்க்கும் லெஸ்பியனின் கலகக் குரலாக ஒலிக்கச் செய்துள்ளது ‘Oranges Are Not the Only Fruit’.  ஆரஞ்சு மட்டுமே பழம்  கிடையாது. நம் அனுபவிப்பதற்கு சுவை மாறாத மேலும் சுவையானப் பழங்கள் உண்டு என்னும் வாழ்க்கையின் விசாலத்தையும், அதற்கான மன விடுதலைக் குறித்தும் பேசுவதாக இப்படம் அமைந்துள்ளது.

மத அடிப்படைவாதத்தில் ஊறியவள் வளர்ப்புத் தாய். மகளை இறைவனின் சேவைக் காக்க அர்ப்பணிக்க வளர்க்கிறாள். அவள் இறைவனால் தேர்தெடுக்கப்பட்டவள் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள். படத்தின் நாயகியை இரு பருவங்களாகப் பிரித்து காட்டுகிறார் இயக்குனர்.   முதல் பருவம்,     7 வயது தொடங்கி 16 வயதுவரை கதாநாயகி (ஜேஸி) கடந்து செல்லும் வாழ்க்கையை விவரிக்கிறது.

அம்மா, சர்ச்சு சமுதாயம் என்று வாழ்ந்து கொண்டிருந்த ஜேஸியின் பாலியல் அடையாளம் லெஸ்பியன் என்று தெரிய வந்தப்பின்  அவளுடைய சர்ச்சு வாழ்க்கையிலும் அம்மாவுடனான உறவுகளிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஜேஸியின் மேல் சாத்தான் குடிபுகுந்து விட்டதாக சர்ச் சமூகம் அவளை ஒதுக்கி வைக்கிறது. இரட்டை வேடம் கொண்ட சர்ச்சு சமூகத்தையும், அம்மாவின் எதிர்ப்பையும் மீறி லெஸ்பியன்  பாலியல் அடையாளத்தோடு எப்படி ஜேஸ் வாழ்க்கையைத் தொடர்கிறாள்.

பிரிட்டிஷ் எழுத்தாளர், ஜெனெட் வின்டர்சன் அரை-சுயசரிதை(semi-autobiographical)நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், பிபிசி தயாரிப்பில் தொடர் நாடகமாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டது.  பீபன் கிட்ரன்  இயக்கிய இப்படம்  60களில் நடந்த சம்பவமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. வட இங்கிலாந்தைக் கதைக்களமாக வைத்திருக்கும் படத்தில், வளர்ப்புத் தாய், சிறுமி ஜேஸ், வயதுக்கு வந்த ஜேஸ், தேவாலயப் போதகர்,தேவாலய சமூகம், ஜேஸ் காதலிகள், ஜேசின் உண்மையான தாய் போன்ற கதாபாத்திரங்கள் வாயிலாக மிகவும் எளிமையாகவும், கவனமாகவும்,  காட்சிப்படுத்தி  இருக்கிறார் இயக்குனர்  பீபன் கிட்ரன். கதாநாயகி ஜேஸ், கதைசொல்லியாக வந்து படத்தின் காட்சிப் பின்னணியிலிருந்து காட்சிகளை விளங்குவதாகப் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் லெஸ்பியன் வாழ்க்கைக்காகப் பேசும் குரல் கிடையாது. வழக்கு முறை பாலியல் உறவு போலத்தான் லெஸ்பியன் உறவும் என்பதை ஜேஸியின் கதாபாத்திரத்தின் மூலமாகப், பார்வையாளர்களிடம் விட்டுச்  செல்கிறார்  இயக்குனர். ஜென்னட் விண்டர்சன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்கான கதை-திரைக்கதையை  நாவலாசியரே எழுதியுள்ளார்.

ஒரு காட்சியில் மெலனியின் வீட்டில் பைபல் படிக்க ஜேஸ் வருகிறாள். இருவரும் பைபிலைப் படிகின்றனர். பிறகு கட்டிலைப் பகிர்ந்து கொள்கின்றனர். அங்கே இருவருக்கும் இடையே செக்ஸ் உறவு ஏற்படுகிறது. கடவுளைப் பற்றி படித்தவர்கள் அந்த இரவில் அவர்களின் மதக் கட்டுப்பாடு எதிர்க்கும் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர்.  மனதுக்குள் கலகத்தை ஏற்படுத்தக் கூடிய இதுபோன்ற பல  நுட்பமான காட்சிகளின் வழி  ஒரு சூழல் சரியா? பிழையா? என்று தீர்மானிப்பதை பார்வையாளர்களின் மனநிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறார் இயக்குனர்.

லெஸ்பியன்  பாலுணர்வு உடற்தேவையின் இயற்கையான ஒன்று என்பதை ஜேஸியின் கதாப்பாத்திரத்தின் வழி சொல்ல முயற்சிக்கிறாள் இயக்குனர்.  ஆண்களின் மேல் பாலுணர்வு ஈர்ப்பு  ஏற்படாத ஜேஸிக்குப்  பெண்களின் மேல் அந்த உணர்வு இயற்கையாகத் தோன்றுகிறது. கதையில் வரும் மார்க்கெட் தெரு காட்சியில். ஜேசி தன்னுடைய வளர்ப்புத் தாய் வின்டர்சனுடன் நடந்து செல்லும் வழியில்  ஓர் பெண்ணைப் பார்க்கிறாள். அவளின் பெயர் மெலனி . அவளுடைய அழகில் கவரப்பட்ட ஜேசி மறுமுறையும் அவ்விடத்திற்கு வருகிறாள். ஆனால் மெலனி அங்கில்லை என்பதை அறிந்து சஞ்சலம் கொள்கிறாள். பிறகு மெலனியின் சந்திப்பு கைக்கொள்கிறது. அன்று முதல் மெலனியைச் சர்ச்சு சமூகத்துடன் இணைத்துக் கொண்டு ஆவலுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தாள். இந்த நெருக்கம் பாலுறவு வரைச் சென்றது. இவர்களின் பாலுறவை கண்டிக்கும் சர்ச்சின் நிலைப்பாட்டை எதிர்கிறாள் ஜேஸ் . மெலனி உடனான காதலுக்கும் நான் கடவுள் மேல் கொண்டிருக்கும் காதலுக்கும் வேறுபாடில்லை என்பதை தன்  தாயிடம் எடுத்து இயம்புகிறாள். இந்த உலகம் நல்லது கெட்டது  என்ற இரண்டால் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற வின்டர்சன் கற்றுத் தந்த போதனைகளின் அடிப்படையில் மெலனி மேல் உள்ள காதலைப் பார்க்கத் தொடங்கினாள்.

“என்னிடம் கெட்டது இல்லை. நல்லது மட்டும்தான் உள்ளது. நான்  கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவள். மெலனி கடவுளின் பரிசு. பரிசுத்தமானவர்களுக்கு அனைத்தும் பரிசுத்தமே. பரிசுத்தம் அல்லாதவர்களுக்கு பார்ப்பதெல்லாம் பரிசுத்தமில்லை”  போன்ற வசனங்களைப் பேசும் கதைச் சொல்லியான ஜேஸ், அவள் மத போதனைக் கற்றுத்தந்த பார்வையில் மெலனி உடனான காதலைப் பார்க்கிறாள்.

மெலனியை காதலியாக ஏற்றுக்கொண்ட பின் அவளுடன் பல இரவுகளைக் கழிக்கிறாள்919rns+-qqL ஜேஸ். இவர்களின் நடவடிக்கை தேவாலயத்துக்குத் தெரிய வந்த பிறகு காதலி மெலனி ஜேசை விட்டுப் பிரிகிறாள். ஆனால் ஜேஸ்  தன்னுடைய பாலுணர்வு அடையாளம் ஒரு இயற்கையான உணர்வாகக் கருதுகிறான். கடவுளின் மேலும், தேவாலயத்தின் மீதும் அவள் வைத்திருக்கும் அன்பும் நேசமும் தம்முடைய பாலுணர்வால் பாதிக்கப்படவில்லை என்றே அவள்  நம்புகிறாள். கடவுளை நேசிப்பதைப்போல் மெலனியை நேசிக்கிறேன் என்று ஜேஸ் கூறும் காட்சிகளில் அவள் கொண்டிருக்கும் கொள்கைப்பிடிப்பின்  நேர்மையை வெளிப்படுத்துகிறது. மற்ற தேவைக்காக அவள் தன்னை மாற்றிக் கொள்ள வில்லை என்பதை அவள் கேத்தி என்பவளிடம் தொடர்பு வைத்திருந்ததைக் காட்டுகிறது.

ஏற்றுக்கொள்ளாதவர்களிடம்  ஆண்-பெண் உறவை வலுக்கட்டாயமாகத் திணிப்பது முறையற்ற நடத்தையாகும் என்று பட ஆரம்பத்தில் வரும் எழுத்தாளர் வின்டர்சனின்  எழுத்து வரிகள் லெஸ்பியன் என்பது ஓர் இயற்கையான பாலுணர்வு என்பதைக் காட்டுகிறது. மேலும் பெண்பால் ஈர்க்கப்படும் ஜேஸ் அவளின் நடத்தைக்காக யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. ஏன் அவள் அப்படி செய்தால் எனும் விளக்கமும் கொடுக்கவில்லை. ஜேஸின் லெஸ்பியன் பாலுணர்வை வளர்த்தது அவள் சார்ந்திருக்கும் சமய நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அவள் மெலனியின் மேல் கொண்டிருந்த காதலை அவள் கெட்டதாகப் பார்க்கவில்லை. அவளுக்குக்  கற்றுத்தரப்பட்ட சமய நம்பிக்கையில் இவ்வுலகம் நல்லது அல்லது கெட்டதால் மட்டுமே இருக்கிறது என்பதாகும். அவ்வகையில் அவளுடைய காதல் நல்லதாகத் தோன்றியிருக்கக்கூடும். கடவுளிடம் எதுவுமே செயற்கை அல்ல. எல்லாமே இயற்கைதான் எனும் வாசகம் அடிப்படையில் மதத்தையும் பாலுணர்வையும் அவளால் வேறுபடுத்திப் பார்க்கமுடியவில்லை. இரண்டாவது முறையாக இதே நடத்தைக்கு ஆளான ஜேஸியை தேவாலயம் புறக்கணிக்கிறது. ஆண்களின் ஆதிக்கத்தை அவள் எடுத்துக்கொண்டதால் அவள் மறுபடியும் இக்குற்றத்தைப் புரிகிறாள் எனும் குற்றச்சாட்டு அவள் மேல் திணிக்கப்பட்டது. அனைத்தும் தேவாலயம் என்று நம்பியிருந்த ஜேஸ் தாயார் உட்பட அனைவராலும் புறக்கணிக்கப்படுகிறாள்.

வேதங்களை மறுதலிக்கமுடியாத ஒன்றாகக் கருதுவதன் மூலம் சமூகத்தின் மத்தியில்  தங்களை இருத்திக் கொள்ள முயற்சிக்கும், கடவுளின் பிரதிநிதிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இவர்கள், தங்களை இருத்திக் கொள்ள கடவுள் பயத்தைக்  கையில் எடுக்கின்றனர். எது நல்லது எது கெட்டது என்பதை இவர்கள் தீர்மானிக்கின்றனர். சர்ச்சின் சக்திக்கு மீறியது எதுவும் இல்லை என்ற ஆதிக்கத்தை விளக்கும் காட்சியாக  சர்ச்சு பாஸ்டரின் நடவடிக்கைகள் மூலம் தெளிவு படுத்துகிறார் இயக்குனர். சபை நேரத்தில் சாத்தான்களின் ஆக்கிரமிப்பு குறித்து  பாதிரியார் வலியுறுத்திச் சொல்லும் காட்சிகளில் பக்தர்களிடையே பயத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளைக் காணலாம்.  படத்தில்  காட்டப்படும் ஆலயத்தின் வேனில்  எழுதப்பட்ட சொர்க்கம் , நரகம் போன்ற வாசகங்களும் பயத்தை விதைக்கும் குறியீடாகப் படத்தில் சொல்லப்படுகிறது.

சர்ச்சு உறுப்பினரான எல்சி நோரிஸ் ஜேசியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தாள் . பைபிள் மட்டுமே புத்தகமாக இருந்த ஜேசியிடம் இலக்கியங்களை (கவிதை மற்றும் வாக்னர் போன்ற பிற உலக நிகழ்வுகள்.) அறிமுகப்படுத்தினாள். இலக்கியம் ஒரு மனிதனை மனிதனாக வைத்திருக்கும். பிறரின் வாழ்க்கையைக்  குற்றமாகப் பார்க்காமல் வாழ்க்கையின் தொடர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல பல வழிகளை அது காட்டும். அந்த அடிப்படை குணங்களை இலக்கியம் வளர்கிறது. மதங்கள் மனிதனின் குற்றங்களைப்  பூதக் கண்ணாடியாக்கி அவர்களை இழிந்தவர்களாக ஒதுக்கி வைக்கிறது எனும் கருத்தாக்கத்தை எல்சி-ஜேஸ் காட்சிகளில் காணமுடிகிறது. ஜேஸ் நோய்வாய்பட்டிருந்த வேளையில்  தினமும் மருத்துவமனைக்குச் சென்று வருகிறாள் எல்சி. ஜேசி மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, அவள் அருகில் இருந்து தேவைகளைக் கவனிக்காமல், சர்ச்சில் பல வேலைகள் இருப்பதாகக் கூறி ஜேசியைத் தனியே விட்டு சென்றுவிட்டார். சர்ச் சமூகம் எதிர்ப்பதால் அவளை வீட்டை விட்டுப் போகும்படி உத்தரவிட்டாள் வின்டர்சன். ஆனால் வெளியே சென்று நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள் என்று எல்சி ஜேஸிக்கு ஊக்கம் கொடுத்தார். லெஸ்பியன் என்று தெரிந்தும் அவளை கருணையாக நடத்திய எல்சியின் மனம் கடவுளைச் சிந்தைகொள்ளும், கடவுள் நம்பிக்கையின் உதாரணமாக காட்டுகிறார் இயக்குனர்.

தன்னுடைய புதிய வாழ்க்கையைத் தேடி தேவாலயம் விட்டு வெளியேறுகிறாள் ஜேஸ் . இருப்பினும் அவளது கொள்கையில் அவள் நேர்மையாக வாழ்கிறாள். நம்பிக்கை, அன்பு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய மத ஸ்தாபனங்களின்  மேல் நம்பிக்கையை இழக்கிறாள் ஜேஸ் .  தனிமைப்படுத்துதல் முடிவல்ல என்று எண்ணும் ஜேஸ் முடிவில் அதே அன்புடன், அதே காதலுடன், அதே உணர்வுடன்  அவளுடைய தாயிடம் வந்து சேர்ந்துவிடுகிறாள்.  லெஸ்பியனாக இருந்து கொண்டு மத நம்பிக்கையுடன் வாழும் வாழ்கை முரணானது கிடையாது என்பது  ஜேசி எடுத்த முடிவில் தெரிகிறது.

சிறந்த நடிகை, சிறந்த நாடகம் எனும் பிரிவுக்கு பிரிட்டிஷ் அகாடெமி விருதைப் பெற்றிருக்கும் இக்கலைப்படைப்பைத் தந்த எழுத்தாளர் ஜெனட் வின்டர்சன் அவளுடைய சுய வாழ்க்கையில் லெஸ்பியன் என்பது இயற்கையான உணர்வு என்பதை நிரூபித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

1 comment for “லெஸ்பியன் கடவுள்

  1. Kaveri
    December 5, 2017 at 8:44 pm

    லெஸ்பியன் கடவுள் – மிகச் சிறப்பாக தமிழில் படைத்துள்ளார் சரவணதீர்த்தா. இந்த நாவலில் மற்று சிந்தனை வெளிபாட்டை அறிய முடிகிறது. இப்படியும் சிந்திக்கலாம் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வாழ்த்துகள் அய்யா.

Leave a Reply to Kaveri Cancel reply