ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 1

ராஃபிள்ஸ்சிங்கப்பூரை வணிக மையமாக நிறுவி தமது பணியை முடித்துக்கொண்டு 1824ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி லண்டனுக்குப் புறப்பட்டார் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ். அவரையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பணியாளர்கள் மற்றும் மூன்று பெரிய பெட்டிகள் நிறைய இந்த மண்ணின் இலக்கியங்களையும் சுமந்துகொண்டு சுமாத்திராவிலிருந்து கிளம்பிய ஃபேம் என்ற கப்பல் அன்று இரவே தீப்பிடித்து எரிந்துபோனது. கப்பலில் இருந்தவர்கள் எல்லாரும் தப்பிவிட்டார்கள். ஆனால், ராஃபிள்ஸ் அத்தனை ஆண்டுகள் சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் மேற்கொண்ட ஆய்வுகள், வரைபடங்களுடன் அவர் சேகரித்த நூல்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன. “நான் சேகரித்த, படித்த மிகச் சிறந்த எல்லாமும் அழிந்துவிட்டன,” என்று தமது சகோதரிக்கு கடிதம் எழுதியுள்ளார் ராஃபிள்ஸ்.

ராஃபிள்சிடம் இங்கு எழுதப்பட்ட மலாய் நூல்கள் கிட்டத்தட்ட 360 இருக்கும் என்றும் சிங்கப்பூரில் இருந்து ராஃபிள்ஸ் கிளம்பியபோது இன்னும் பல நூல்களைத் தாம் சேகரித்துக்கொடுத்ததாகவும் எல்லாமே கையெழுத்துப் பிரதிகள் என்றும் நவீன மலாய் இலக்கியத்தின் தந்தையான முன்ஷி அப்துல்லா அப்துல் காதிர் குறிப்பிட்டுள்ளார் (ஹிக்காயட் அப்துல்லா, 1849).அவை பெரும்பாலும் மலாய் மொழி நூல்கள். இவற்றில் தமிழ் நூல்களும் இருந்திருக்கலாம்.

சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்நாட்டின் மொழிபெயர்ப்புத் துறையின் முன்னோடியாகத் திகழும் முன்ஷி அப்துல்லாவைத் தவிர்த்துவிட முடியாது. மலாய், தமிழோடு, இந்துஸ்தானி, ஆங்கிலம், சீனம், என பல மொழிகளை அறிந்திருந்த முன்ஷி அப்துல்லா.மலாயில் பல நூல்களை எழுதியதுடன் மற்ற மொழிகளில் இருந்து பல நூல்களை மலாயில் மொழி பெயர்த்திருக்கிறார் அதில் ஒன்று பஞ்சதந்திரக் கதைகள், 1835இல் hikayat Galilah dan Daminah என்ற பெயரில் வெளிவந்ததுஅந்த மொழிபெயர்ப்பு. ராஃபிள்சுக்கும் ஆங்கில ஆட்சியாளர்களுக்கும் பல மலாய் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தவர் இவர்.

சிங்கப்பூரின் முதல் அச்சுப் பதிப்பாக இருக்கலாம் எனக் கருதப்படும் ராஃபிள்சின் பிரகடனம் (Proclamation) 1823 ஜனவரி முதல் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதை ஆங்கிலத்தில் 50 பிரதிகளும் மலாய் மொழியில் 50 பிரதிகளும் அச்சடித்தவர் முன்ஷி அப்துல்லா. 19.5.1822இல் சிங்கப்பூருக்கு முதல் அச்சுத் தொழிலைக் கொண்டுவந்த டென்மார்க் கிறிஸ்துவ போதகரான ரெவரன்ட் கிளௌடிஸ் ஹென்றி தாம்சனுடன் இணைந்து இந்நாட்டில் அச்சுத் தொழிலை வளர்த்த முன்னோடி அவர். தமிழ் அச்சுக்கலை 17ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சி காணத் தொடங்கிவிட்டிருந்ததால், தமிழ் நூல்களையும் ஆரம்ப காலத்தில் முன்ஷி அப்துல்லா அச்சிட்டிருக்கக்கூடும் என்பது ஓர் ஊகம். இவரின் பழைய பெயர் சின்னச்சாமி உபாத்தியாயர் என்றுமலேசிய தமிழ் இலக்கியவரலாற்றுக் களஞ்சியம் என்ற நூலில் (1996) மா.இராமையா குறிப்பிட்டிருக்கிறார்.

காலனித்துவ ஆட்சிக்கு முன்னிருந்த இந்த வட்டாரத்தைப் பற்றிப் பேசுகிறது ‘செஜாரா மலாயு’ என்ற நூல். இதனை ‘மலாக்கா மன்னர்கள் கதை’ என்ற தலைப்பில் இராம.சுப்பையா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் இந்தப் பிரதேசத்தின் ஆற்றல்மிக்க இளவரசர்கள், குடியேற்றம், கலப்புத் திருமணங்கள், புதிய சமூகங்களின் உருவாக்கம் போன்றவற்றை விவரிக்கிறது. அதேநேரத்தில் முன்ஷி அப்துல்லா எழுதிய தன் வரலாற்றில் (Hikayat Abdullah, 1849) பழங்குடிகளின் கலாசாரத்தில் காலனித்துவ ஆட்சியின் பாதிப்பு, தொன்மை அழிக்கப்படல் போன்றவற்றைப்பற்றிப் பேசுகிறார்.

எனினும், நவீன சிங்கப்பூரின் தொடக்கம் 1819இல் ராஃபிள்ஸ் வருகையுடன்தொடங்குவதால் அதன் பின்னான இலக்கிய முயற்சிகளையே இங்கு காண்போம்.

வர்த்தகரான நாராயண பிள்ளையுடன் காடுதிருத்தி நாடு உருவாக்க மேலும் பல தமிழர்களையும் அழைத்து வருகிறார் ராஃபிள்ஸ். அப்போதிலிருந்து கிட்டத்தட்ட இரு நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியப் பாரம்பரியம் இந்த நாட்டில் தொடர்கிறது எனலாம்.

இலக்கியத்தின் முக்கியத்துவம்

வரலாறு, சமூகவியல், மானுடவியல், அரசியல், உளவியல் போன்ற துறைகள் சார்ந்தவர்களும் தற்போது ஆய்வுகளுக்கு இலக்கியத்தை அடிப்படைத் தரவாகக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். தற்போது இலக்கியம் ஒரு புதிய உண்மையாகப் பரிணாமம் பெற்றுள்ளது. நாடு, இனம், மொழி, அடையாளம் பற்றிய சிந்தனை, இலக்கியத் துறையையும் பிற சமூகவியல் துறைகளையும் இணைக்கும் ஒருவகைச் சிந்தனையாக வளர்ந்துள்ளது. எனவே, சமூக, அரசியல் மாற்றங்களையும் கால மாற்றங்களையும் உள்ளடக்கிய விரிவான தளத்தில் சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றைப் பார்க்க வேண்டியது தேவையாகிறது.

நவீன சிங்கப்பூரில் இது எட்டாவது தலைமுறைத் தமிழர்களின் காலம். சில ஆயிரம் தமிழர்கள், அதிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த 19ஆம் நூற்றாண்டுமுதல், ஏறக்குறைய 300,000 தமிழர்கள் வாழும் இக்காலம்வரையில் இங்கு ஓர் இலக்கியத் தேடலும் தொடர்ச்சியும் இருந்து வருகிறது. இந்தப் பாரம்பரியத்தை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த போதிய சான்றுகள் இல்லாதபோதிலும் ஆங்காங்கே கிடைக்கும் தடயங்கள் மூலம் அதன் எழுச்சிகளையும் சோர்வுகளையும் காணமுடிகிறது.  தொன்மையை, வரலாற்றை, இந்த வாழ்வு வழங்கும் அனுபவங்களை, அவற்றின்மூலம் கிடைக்கப்பெறும் உலகப் பார்வையை முன்வைக்கும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்கள் மேலெழுந்து வருவதற்கு உருவான பல சவால்களைக் கடந்துவர வேண்டியுள்ளது. அந்தச் சவால்களை இவ்வாறு வகுக்கலாம்:

  1. தங்கிச் செல்லும் நகரமாக சிங்கப்பூர் இருப்பது. அதனால், ஆரம்ப காலத்திலிருந்தே இந்த நாட்டுக்கும் வாழ்வுக்கும் புதியவர்களே, அதிகளவில் இலக்கிய உருவாக்கத்திலும் அதன் பாதையை நிர்ணயிப்பதிலும் பயனீட்டிலும் பெரும் பங்காற்றி வருவது.
  2. மனிதவளத்தை ஜ்மட்டுமே நம்பியிருக்கும் இந்தச் சிறு தீவு, உலகப் போட்டித்தன்மையில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் வெற்றிபெறவும் கடைப்பிடிக்கும் சிந்தாந்தங்களான பயனீட்டுவாதமும் பொருளியல்வாதமும். மற்றது மிகக் குறுகிய காலத்துக்குள்ளாகவே மறுஆய்வுசெய்யப்படும், தேவைகளுக்கேற்ப மாற்றம்காணும் இந்நாட்டின் கொள்கைகள். எ.கா: இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலைமை சில ஆண்டுகளுக்குள்ளாகவே தலைகீழாக மாறி, தற்போது குழந்தை பெறுவோருக்கு சலுகைகள் பெருகியிருப்பது.
  3. ஆழமான இலக்கிய அறிவையும் தேடலையும் உருவாக்கத் தவறும் கல்வி, வாழ்க்கைச் சூழல்கள்.
  4. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைப் படைப்பவர்களும் நுகர்வோரும் பெரும்பான்மையாக எளிய, சாதாரண மக்களாக இருப்பதுடன், இலக்கியத்தில் அறிவுசார் உலகத்தின் பங்களிப்பு போதிய அளவு இல்லாமலிருப்பது.
  5. படைப்புகளைப் பரந்த தளத்துக்கு எடுத்துச் செல்லவும் உன்னதத்தை எட்டவும் தேவையான உரையாடல்கள், விமர்சனங்கள் இல்லாதிருப்பது.
  6. தமிழ், சீன, மலாய், மொழி இலக்கியங்களுடன் ஒப்பிட, ஆங்கில இலக்கியத்தின் வளர்ச்சியும் ஆங்கிலத்தில் எழுதுவதால் கிடைக்கும் அங்கீகாரமும் மேலோங்கி இருப்பது. மக்களிடம் மற்ற மொழி இலக்கியங்கள் பற்றிய பெருமையையும் அவற்றுக்கு பரந்த அறிமுகமும் இல்லாதிருப்பது.

இவற்றையெல்லாம் கடந்துதான் இந்நாட்டில் தமிழ் இலக்கியத்துக்கான தேடலும் அதன் பதிவும் அடுத்தடுத்த நிலைகளை நோக்கி நகர வேண்டியிருக்கிறது.

நகரும் அடையாள மையங்களும் அரசாங்கச் சித்தாந்தங்களின் தாக்கமும்

ஒரு நாட்டில் குடியேறுபவர்கள் முதலில் தங்களது வாழ்வை நிலைப்படுத்துவது முக்கியமாகிறது. புதிய சமூகத்தில் தங்களுக்கான இடத்தைத் தேடும் முயற்சியில் சமூகப் பங்காற்றாலும் பங்களிப்பும் முனைப்புப் பெறுகின்றன. தங்களது சொந்த நாடுகளின் அடையாளங்களுடன் குடியேறிய நாட்டின் அடையாளத்தில் பங்குபெற்று புதிய அடையாள மையத்தை கலை, இலக்கியம், சமயம் போன்றவற்றின் வழியே அவர்கள் முன்னெடுக்கின்றனர். இந்த அடையாள மையம் என்பது நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான குடியேற்றங்களும் பல இனப் பரவலும் அதிகரித்துவிட்ட இன்றைய தேசியத்துக்குப் பிந்திய (post-national) காலத்தில், ஒருமித்த அடையாளம் சாராத புதிய வடிவிலான உடைமை உணர்வு (belonging) உருவாகிறது.

“சிங்கப்பூர் தனித்தன்மையானது. இந்நாட்டு மக்கள் பெரும் கலாசார பின்னணிகளைக் கொண்டவர்கள். எதிர்ப்படும் பிரச்சினைகள் பல காரணங்களால் சிக்கலாக்கப்பட்டுள்ளன. அந்தக் காரணிகள் ஒவ்வொன்றும் தம் விதத்தில் எழுத்தாளனின் பணியை வரையறுக்கின்றன. இலக்கியத்தைப்பற்றிக் குடியேறிகள் அக்கறை கொள்ளமாட்டார்கள். தமக்கும் தம் மக்களுக்கும் வளமான வாழ்வை உறுதிப்படுத்திக்கொள்வதே அவர்களின் அடிப்படை நாட்டம். அதற்காகவே அவர்கள் இங்கு வந்துள்ளனர். மேலும் எந்தச் சமூகமாக இருந்தாலும் அதன் வறிய கலாசார பிரதிநிதிகள் பெரும்பாலும் குடியேறிகளாவார்கள். எனினும், அவர்கள் நல்லகாலமாக கல்வி, இலக்கியம் பண்பாட்டின் உயர்நிலைகள் ஆகியவற்றின்பால் பெருமதிப்புக் கொண்டவர்களாக உள்ளனர். அவற்றின் முக்கியத்துவத்தைப்பற்றி அவர்கள் உணர்ந்தவர்களாயினும், அவற்றின்பாலான மதிப்பார்வம் எப்போதுமே மும்முரமான தொடர்ச்சியான ஈடுபாட்டுக்கு வழியிட்டுச் செல்வதில்லை,” என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் எட்வின் தம்பு (தம்பு, எட்வின் 1977).

இந்தநிலையில், அரசாங்கத்தின் சிந்தாந்தங்களும் கொள்கைகளும் இலக்கியப் போக்குகளில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உலகின் ஆகப்பெரிய, வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிதிக் குவியங்களைப் பெற்றுள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், இவ்வட்டாரத்தின் கலைகள், கலாசார மைய புரவலர்களாகவும் பயனீட்டாளர்களாகவும் ஆவதற்குத் தேவையான நிர்ணயங்களுடன் செயலாற்றுகிறது. கலையும் இலக்கியமும் பெருமைக்குரிய ஒன்றாக அல்லது நேரத்தையும் பணத்தையும் செலவிடக்கூடியவர்களுக்குமட்டுமே உரிய ஒன்றாகவே இன்றும் கருதப்படுகிறது. வெற்றி என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்களை அடைவதைவிட, அதிக சம்பளம் தரக்கூடிய நல்ல வேலையைப் பெறுவதாகவே இருக்கிறது. இத்தகைய ஒரு சூழ்நிலையிலும் இந்நாட்டில் தமிழ் மொழியும் இலக்கியமும் உயிர்ப்போடும் துடிப்போடும் நிலைத்திருப்பது பிரமிப்பூட்டும் ஒன்று.

தமிழ் மொழியின் 2000 ஆண்டுகாலத் தொன்மத்தின் பலமும் அரசியல் ரீதியான அங்கீகாரமும் முழுமையான ஆதரவுமே இதனைச் சாத்தியப்படுத்துகிறது. இந்நாட்டில் தமிழ்ச் சமுதாயம் சோர்வுறும் போதெல்லாம் இலக்கியம் சமுதாயச் சக்தியை ஒன்றுகுவித்து, புதுத் தெம்பைத் தந்து வந்திருக்கிறது.

இந்த வரலாற்றை அறிந்துகொள்வது, எதிர்காலத்தைக் கணிக்கவும், திட்டமிடவும் உதவும்.

தமிழ்ச் சமூகம் என்ற ஓர்மையான சிந்தனை உருவாக்கம்

கோ.சாரங்கபாணி

கோ.சாரங்கபாணி

மிகக் குறைந்த வருமானம் ஈட்டிய தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக்கொண்டிருந்த (கிட்டத்தட்ட 85%) தமிழ்ச் சமூகம், சாதி, சமயம், ஊர் என பல பிளவுகளால் சிதறி, தன்முனைப்போ, உரிமை உணர்வோ எதிர்காலம் குறித்த பெரிய இலக்கோ இல்லாமல் சிதறிக்கிடந்த 1920களில், எல்லாக் குடியேறிகளையும் போலவே “ஏதேனும் வேலை பார்க்கலாம், சம்பாதிக்கலாம் என்றே” சிங்கப்பூருக்குப் பிழைப்புத் தேடி வந்தவர் கோ.சாரங்கபாணி. பெரியாரின் குடியரசு பத்திரிகையைப் படித்து சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடுகொண்ட அவர், ஒத்தசிந்தனையுடைய சிலருடன் இணைந்து இந்நாட்டில் புதிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயல்பட்டார். தமிழ் முரசு நாளிதழ் மூலம் இலக்கிய மேம்பாட்டுக்கும் அதன்வழி சமூக எழுச்சிக்கும் பல முயற்சிகளை அவர் முன்னெடுத்தார்.

மொழியால் இணைந்த சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் என்ற ஓர்மையான சிந்தனை உருவாக்கம் 1930களில் உருப்பெறுகிறது.

அந்தச்சமயத்தில், தமிழ் முரசின் ஆஸ்தான எழுத்தாளராகப் பரிணமித்த ந.பழநிவேலுவின் சீர்திருத்த நாடகங்களும் கதைகளும் சிந்தனை மாற்றத்தைக் கோருகின்றன. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இங்கே சாதி வேறுபாடுகள், குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுக்கப்படுவது சமூகத்தைப் பீடித்த பெரும் நோயாக இருந்தது.(அரசரத்னம்,1967). கடைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தகரக் குவளைகள் இருந்துள்ளன. 1930, 1940களில் ந.பழநிவேலுவுடன் தமிழ் முரசில் எழுதிய சிங்கை முகிலன், எம். ஆறுமுகம், த. இராஜம்மா, வை.ராஜரத்தினம் போன்றவர்கள் சாதிப் பாகுபாடு, சீர்திருத்தத் தேவைகள் குறித்துப் பதிவிடுகின்றனர். வரதட்சணைக் கொடுமை, சாதிப் பாகுபாடு என இஸ்லாமிய மதத்தில் இல்லாத மூடப்பழக்கங்களைச் சாடி 1940-1950களில் முரசில் சீர்திருத்தக் கதைகளை எழுதிய மற்றோர் எழுத்தாளர் எம்.கே.பக்ரூத்தின். இவர் 1947ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் பேனாமுனை என்ற மாத இதழையும் நடத்தியுள்ளார். தமது இதழிலும் இவர் அத்தகைய கதைகளை எழுதியுள்ளார் (கண்ணபிரான், இராம. 1977).

தமிழ் அடையாளத்தைக் குழப்பிய இந்தியர் அடையாளம்

சிங்கப்பூர், மலாயாவில் தமிழ் என்ற ஓர்மையில் ஒருமித்த சமுதாய உருவாக்கச் சிந்தனை வலுவடைந்த நேரத்தில், இந்தியாவில் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், இந்திய மக்களை ஒன்றிணைத்த பாரத தேசம் எனும் கருத்துருவாக்கம் இந்த தமிழ்ச் சிந்தனையைக் குழப்பியது. பிறந்த ஊர், பிழைக்க வந்த ஊர் என்ற சிறிய வட்டங்களின் அடையாளங்களிலிருந்து பிரம்மாண்டமான ‘இந்தியா’ என்னும் அடையாளத்துக்குள் வந்தனர் சிங்கப்பூர், மலாயாத் தமிழர்கள். இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியர் என்ற அடையாளம் இந்த வட்டாரத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் இன அடையாளமாக வலுப்பெற்றது. இந்தியாவின் தேசிய மொழியாக அச்சமயத்தில் இந்தி பரிந்துரைக்கப்பட்டதால், 1946ல் தொடங்கப்பட்ட மலாயா இந்தியர் காங்கிரஸ் மலாயாவில் இந்திக்காகப் போராடப் போவதாகவும் இந்தியை மலாயா இந்தியர்களின் பொதுமொழியாக்கப் பாடுபடப் போவதாகவும் அறிவித்தது.

இந்தக் குழப்பங்களை, வாழ்வாதாரம் சார்ந்த விசுவாச மாற்றங்களை மா. இளங்கண்ணனின் வைகறைப் பூக்கள் நாவல் சித்திரிக்கிறது. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த மணிமேகலை, அவள் தந்தை தங்கவேலு, உறவினர் முத்தையா, தமிழ்நாட்டிலிருந்து இங்கு பிழைப்புத் தேடி வரும் அவள் மாமன் மகன் அன்பரசு எல்லாருமே ஆரம்பத்தில் காலனித்துவ ஆட்சியாளர்களிடம் வேலை செய்வதைப் பெருமையாக நினைக்கிறார்கள். நன்றி விசுவாசத்துடன் அவர்களுக்கு உழைக்கின்றனர். அதேநேரத்தில் இந்தியாவின் சுதந்திரம்பற்றிப் பேசுகின்றனர். காந்தியைப் போற்றுகின்றனர். நிலைமை மாறுகிறது. ஜப்பானியர் சிங்கப்பூரைக் கைப்பற்றுகின்றனர். முன்னர் பார்த்த அதே புல்வெட்டும் வேலையையும் சரக்குக் கிடங்கு வேலையையும் தந்த ஜப்பானிய வீரருக்கு ‘நன்றிப் பெருக்கோடு தலைதாழ்த்தி வணக்கம் தெரிவிக்கின்றனர்’. இரண்டே நாளில் முத்தையாவுக்கு ஜீப் ஓட்ட ‘கன்னத்தில் அறைந்து’ சொல்லிக்கொடுக்கும் ஜப்பானியனை அன்பரசு பாராட்டுகிறான். ‘நம் இனத்துக்கு இப்படிச் செய்தால்தான் நல்லது தொழில் கற்றுக்கொள்ள முடியும் பாருங்கள்’ என்கிறான். காந்தியைப் போற்றும் அதேநேரத்தில் நேதாஜி படத்தையும் வீட்டில் மாட்டி வைக்கிறான். நேதாஜி படையில் சேர்கின்றனர் அன்பரசுவும் மணிமேகலையும். அகிம்சையா, ஆயுதமா என்ற அடிப்படையான கேள்விகூட எழாத, அன்றைய மக்களின் மனநிலையை, சிந்தனையை இந்ந நாவலில் காணலாம்.

ஜப்பானிய ஆட்சியின்போது, ஜப்பான்காரனைப்போற்றி கவிதைகளும் கதைகளும் இன்னும் பலரும் எழுதியுள்ளனர். (கே.என்.முத்துச்சாமியின நிப்பானியர் வெற்றிமாலை, ஆர்.ஆர்.வீரய்யாவின் நிப்பானியர் ஜெயச்சிந்து) ஜப்பானியர் தோற்று, மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி வந்ததும் நல்லாட்சி திரும்பியதாகவும் எழுதுகின்றனர்.

தேசியத்தின் தோற்றமும் சிங்கப்பூரின் தனித்த தமிழ்ச் சிந்தனையும்

குடியுறிமை பிரமாணத்தில்சிங்கப்பூர், மலாயாவில் பூர்வகுடிகள், பிரிட்டி‌‌ஷ் பிர‌‌‌ஜைகள், கூலிவேலைக்கு வந்தவர்கள் என்ற அடையாளங்களுடன் வாழ்ந்த மக்களிடம் தேசியம் என்ற சிந்தனை இரண்டாம் உலகப் போருக்கும் பின்னரே உருவானது. ஜப்பானியர் ஆட்சியில் சிரமங்களுக்கு உள்ளான மலாயா மக்களுக்கு காலனித்துவ முதலாளிகள்மீதான நம்பிக்கை குறைந்து, அவர்களின் தலைமைத்துவம்மீது கேள்வி எழுகிறது. 1946 ஏப்ரலில் சிங்கப்பூர் தனி காலனியானது.  1948ல் மலாயாக் கூட்டரசு (மலாயா பெடரேஷன்) உருவானது. மலாயாவில் வாழ்ந்த தமிழர்களிடம், அடையாள உருவாக்க முயற்சிகளில் திருப்புமுனை ஏற்படுகிறது. இரட்டைக் குடியுரிமைபற்றிப் பேசி வந்த மலாயா இந்தியர் காங்கிரஸ், மலாயா குடியுரிமையை வலியுறுத்தியது. அதற்கான பல முயற்சிகளை முன்னெடுத்தது. மலாயா இந்தியர் காங்கிரசில் உறுப்பினராகக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானது.

இந்தச் சமயத்தில் இங்கு வாழ்ந்த தமிழர்களை சிங்கப்பூர் குடிமக்களாகும்படி வலியுறுத்துகிறார் சாரங்கபாணி. சிங்கப்பூர் குடியுரிமை எடுக்க விரும்புவோருக்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யவும் மற்ற உதவிகளையும் தமிழர் சீர்திருத்தச் சங்கம் இலவசமாகச் செய்து தந்தது. அப்படியும் எல்லாரும் இந்நாட்டு மக்களாகிவிடவில்லை. பிரிட்டி‌‌ஷ் குடியுரிமையைப் பெரும்பேறாகக் கருதிய இந்தியர்கள் அதை இழக்கத்தயாராக இல்லை. இந்தியக் குடியுரிமை இல்லாமல் போய்விடுமோ எனப் பயப்படுகின்றனர் பலர். 1947ல் சுதந்திரம் பெற்ற இந்தியா குடியுரிமைச் சட்டங்களை உருவாக்கிக்கொண்டிருந்த காலம் அது. இந்த வரலாறு குறித்த செய்திகளை அன்றைய தமிழ்முரசிலும் இந்தியன் டெய்லி மெயிலிலும் விரிவாகப் பார்க்கலாம்.

சிங்கப்பூர், மலாயாவின் சிறப்புகளைப் போற்றிக் கவிதைகள் எழுதிக் குவித்தாலும் தமிழ் நாடு திரும்ப வேண்டும் என்ற கனவே பலருக்கும் இருந்தது. இதனை எண்ணி, பின்னர் வருந்தியவர்கள் ஏராளமானோர். மு.சு.குருசாமியின் ‘வாழ்வு எங்கே’ சிறுகதை, முருகடியானின் ‘சங்கமம்’ கவிதைக் காவியம், அமலதாசனின் ‘தமிழர் தலைவர் தமிழவேள்’ எனப் பல படைப்புகளில் குடியுரிமை எடுப்பதில் தமிழர்களுக்கு இருந்த தயக்கத்தையும் அதனால் பின்னர் அவர்கள் பட்ட சிரமங்களையும் காணமுடியும்.

மலாயா, சிங்கப்பூர் என்ற தேசிய உருவாக்கத்தில் ஒன்று கலந்துவிடாத போதிலும், நேதாஜியின் போராட்டமும், இந்திய விடுதலையும் இங்கு வாழ்ந்த தமிழ் மக்களிடம் தாக்கம் ஏற்படுத்திய அளவுக்கு சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. நேதாஜியுடன் கைகோத்தபோதும் ஜப்பானியர்களால் தமிழர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஜப்பானியர்களுக்குக் கைக்கூலியாக இருந்து, எளிய ஏமாளித் தமிழர்களை சயாம் ரயில் பாதை அமைக்கப் பிடித்துக்கொடுத்த தமிழரின் கதையைச் சொல்லும் இந்திரஜித்தின் ‘வீட்டுக்கு வந்தார்’ சிறுகதை (வீட்டுக்கு வந்தார், 2006) அந்தத் துன்பத்தைச் சொல்கிறது.

சுதந்திர இந்தியா, இங்கு வாழ்ந்த ஏழைத் தமிழர்களை வரவேற்கவில்லை. பெரியார், ‘வாழ வந்த நாட்டின் மக்களாக வாழுங்கள்’ என்றே சொல்கிறார்கள். ‘இந்தியாவால் மலாயாவுக்கு உதவ முடியாது’ என்றார் நேரு. தனித்திராவிட நாடு கேட்டு தமிழ் அரசியலை முன்னெடுத்த அண்ணாவும் இந்நாட்டுத் தமிழர்களிடம் ‘மலாயா மக்களாகுங்கள்’ என்றே கூறினார்.

இதன் அடிப்படையில், 1950, 1960களில் இந்நாடு சார்ந்த தனித்தன்மையான தமிழ்ச் சிந்தனை பரிணமிக்கிறது. பெரியார், மறைமலையடிகளார், சோமசுந்தரப் பாரதியார், திரு.வி.க, கா.அப்பாத்துரை, மயிலை சீனி.வேங்கடசாமி, ராகவன், பாரதிதாசன், அண்ணா போன்ற ஆளுமைகளின் தாக்கம் அந்தச் சிந்தனையை உரமூட்டி வளர்க்கிறது. மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் பயிற்று மொழியாக சமஸ்கிருதத்தைக் கொண்டுவரும் இந்திய அரசாங்கத்தின் (நீலகண்ட சாஸ்திரி) முயற்சியை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் திரட்டி முறியடித்து, தமிழ் மொழியை நிலைநாட்டியதன்மூலம் தமிழ் அரசியலை இங்கு வலுப்படுத்தினார் சாரங்கபாணி. இதனால், தமிழ்ச் சிந்தனை மேலும் உரம் பெறுகிறது. அதன் தாக்கமாக, தமிழ் சார்ந்த கலை, இலக்கிய எழுச்சி ஏற்பட்டது. மொழி, பண்பாட்டு, ஒழுக்கப் பேணல்கள் படைப்பிலக்கியத்தின் இலக்குகளாயின.

ஐம்பதுகளில் தமிழ் முரசு முன்னெடுத்த தமிழர் திருநாள், எழுத்தாளர் பேரவை, ரசனை வகுப்பு, படைப்பிலக்கியப் போட்டிகள் போன்றவற்றுடன் தமிழ் நேசன், வானொலி, அந்நாளில் வெளிவந்த பல்வேறு  இதழ்கள் போன்றனவும் இக்காலகட்டத்தில் இந்நாட்டில் படைப்பூக்கத்திற்கும் ஆக்கத்திற்கும் உதவியுள்ளன. 1952ல் முரசில் தொடங்கப்பட்ட மாணவர் மணிமன்றம் சிறுவயதிலேயே எழுத்து, வாசிப்பு ஆர்வத்திற்கு வித்திட்டது. படைப்பதற்கான தளங்களும் அதுகுறித்த உரையாடல், விமர்சனங்களுக்கான தளங்களும் பரலவாக இருந்ததால் சிறுகதை, கவிதை, கட்டுரை இலக்கியங்கள் பெருகின. மிகத் தொன்மையான ஒரு மொழியின் அறிவைக்கொண்டு, சாரங்கபாணி ஒரு சமுதாயச் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தினார்.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *