சு. வேணுகோபால் பதில்கள்

venugopal1ஐயா, நான் உங்கள் சிறுகதைகளை வாசித்துள்ளேன். பெரும்பாலான கதைகள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் நவீன இலக்கியத்தில் பலர் கதைகளை வாசித்து விளங்கிக்கொண்டுள்ளேன். தாங்கள் எவ்வகையில் மற்ற எழுத்தாளர்களுடன் மாறுபடுகிறீர்கள்?

மித்ரன், சென்னை

அன்புடன் மித்திரனுக்கு,

உங்கள் கேள்வியில் இரண்டு விசயங்களை முன் வைத்துள்ளீர்கள். பிறர் எழுதுகிற நவீன கதைகள் புரிந்து கொள்ளும் படியாக இருக்கின்றன. என் கதைகள் புரியவில்லை என்று. என் கதைகளில் புரிந்து கொண்ட கதைக்கும் புரிந்து கொள்ள முடியாத கதைக்கும் இடையே என்ன சிக்கல் இருக்கிறது என்று நீங்கள் சற்று யோசித்தால் சில விசயங்கள் தெளிவுக்கு வரலாம். நீங்கள் படித்த நவீன கதையாசிரியர்கள் யார் என்று சொல்லி இருந்தால் உங்கள் வாசிப்புத்தளம் எந்த இடத்தில் இருக்கிறது என்று சொல்லி விளக்க முடியும். விசயத்திற்கு வருவோம். நாம் விரும்புகிற பெண் நம்மை விரும்பாமல் விலகி ஓடும்போது அப்படியே விட்டு விடுவதில்லை. திரும்பத் திரும்ப அணுகுகிறோம் அல்லவா? விலகி ஓடியதற்குக் காரணம் பிடிபடும்போது தெளிவு கிட்டுகிறதல்லவா? கதைகளும் அப்படித்தான்.

கதைகள் எல்லாமே வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக எழுதப்படுபவைதான். வாசனுக்குப் புரிந்துவிடக்கூடாது என்று திட்டமிட்டு எழுதுகிறவன் நான் அல்ல. புரிந்து கொள்வதற்கு ஒரு சில வாக்கியங்களோ, உரையாடல்களில் ஒரு சில வார்த்தைகளோ நிச்சயம் வெளிப்பட்டிருக்கும். இரண்டாவது வாசிப்பில் அர்த்தங்கள் பிடிபட்டவுடன் கதைகள் வேறு பரிமாணத்தைத் தருகின்றன. வாசகனே அந்த மர்மத்தைத் திறந்து கொள்ளும்போது புதிய உலகைப் பார்த்து விட்ட ஓர் அனுபவத்தைப் பெறுகிறான். இது ஒரு அறிதல் முறை. வாசிப்புத்தரும் ஆனந்தம் அல்லது அதிர்ச்சி என்றும் சொல்லலாம். ஒரு கண்டுபிடிப்பு என்றும் கூறலாம்.

புரிதலுக்காக வாசகனை நினைத்து நுட்பமான இடங்களை விளக்க முற்பட்டாலே அது கலையாவதில்லை. விளக்க உரையாகி விடுகிறது. நம்முடனே இருக்கும் மனிதர்களை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறதா? நாம் கணித்திராத ஒரு வெளிப்பாட்டை திடுக்கென அவரிடம் காண நேர்கிறது அல்லவா? கதைகளும் அப்படித்தான்.

புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி போன்றோரின் கதைகளை முன்பு நான் படித்தபோது புரிந்துகொண்டதற்கும் இப்போது படிக்கும்போது புரிந்துகொண்டதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்பு பிடிபடாத பல விசயங்கள் இப்போது துலங்குகின்றன. இன்னொரு முறை வாசிக்க நேர்ந்தால் இன்னும் புதிய கோணங்கள் வெளிச்சத்திற்கு வரும். எனவே முதல் வாசிப்பிலேயே கதையின் எல்லா பரிமாணங்களும் விளங்கிவிடும் என்பதற்கில்லை. மீண்டும் மீண்டும் வாசிக்க புதிய புதிய அனுபவத்தைத் தருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் சுந்தர ராமசாமியின் ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ என்ற கதையைப் படித்தேன். தான் இழந்த வாழ்க்கையை ஆங்கில மோகத்தால் ஈடுசெய்து கொள்கிறாள் என்று தோன்றியது. இப்போது வாசிக்கிறபோது ரத்னாபாய் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு, விலக்க முடியாத ஒரு பகற்கனவில் வாழ்கிற பெண்ணாக இருக்கிறாள் என்று பட்டது. அவள் மீது அனுதாபம் தோன்றுகிறது.

ஜெயமோகனின் ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று ‘படுகை’. இந்தக் கதை நான்கு அடுக்குகளை ஒரு வடிவத்தில் மடித்து வைத்திருக்கும் கதை. நாட்டுப்புற மனிதனின் தொன்மப் பார்வை இருக்கிறது. வெள்ளைக்காரனின் நவீன குணம் இருக்கிறது. இளந்தலைமுறையின் காலமாற்றம் இருக்கிறது. இயற்கையின் சீரழிவைப் பற்றிய எழுத்தாளனின் பார்வை இருக்கிறது. இவையெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத இழைகளால் நெய்யப்பட்டு சிறுகதையின் கச்சிதாமன ஒருமையில் வெளிப்பட்டிருக்கிறது. இதற்கும் மேலாக அக்கதையில் பல்வேறு நுட்பங்கள் இருக்கின்றன. வெள்ளைக்காரன் ‘வள்ளியை நான் கெட்டாமல் விடமாட்டேன்’ என்று வஞ்சினம் கூறுவான். நதியையா, பெண்ணையா, மலைமகளையா என அதற்குத்தான் எத்தனை அர்த்தங்கள். கதை என்பது வாசகன் ஒரு காட்டுக்குள் நுழைந்து வெளியேறுவது போல. ஒரு பாறையில் நின்று பார்ப்பதல்ல.

பல நவீன கதைகளை வாசித்து விளங்கிக் கொண்டுள்ள உங்களால் என் கதைகளையும் புரிந்துகொள்ள முடியும். வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக விரித்து எழுதினால் அது அபத்தமாய் போய்விடும். மோனாலிசாவின் புன்னகைக்குப் பல அர்த்தங்கள் இருக்கும்போது கதைகளுக்கு ஏன் பல பரிமாணங்கள் இருக்கக்கூடாது! அதுதானே கதையின் வெற்றி. கதையில் தீர்வை வெளிப்படையாக எதிர்பார்ப்பதும், அவ்விதம் கதையை கட்டமைப்பதும் கலைக்கான முறையல்ல. முக்கியமாக நான் சொல்லவருவது கதை ஒரு பிறப்பைப் போன்றது. அது தனக்கான வடிவத்தில் திரண்டு வெளிப்படுவது. அந்தப் பிறப்பின் உள் அமைப்பை மருத்துவர் போல கிழித்துக் கிழித்து காட்டக்கூடாது என்று நம்புகிறேன். அது விமர்சகனின் வேலை.

மற்ற எழுத்தாளர்களிடம் நான் எப்படி வேறுபடுகிறேன் என்று அடுத்து கேட்டுள்ளீர்கள். நீங்கள் அறிந்து சொல்லவேண்டிய விசயம். போகட்டும். ஜெயகாந்தன், ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் கதையைக் கட்டமைக்கிறார். நான் வாழ்க்கையில் ஒரு புதிர் எப்படி புதைந்திருக்கிறது; எப்படி வெளிப்படுகிறது என்று தேடிச்செல்கிறேன். என் நேசத்திற்குரிய எழுத்தாளர் தி. ஜானகிராமன். முக்கியமான வாசகர்கள், விமர்சகர்கள், நண்பர்கள் என்னிடம் தி. ஜானகிராமனின் பாதிப்பே இல்லை என்று சொல்கிறார்கள். இது தான் என் தனித்துவம். என் உலகம் வேறு. ஜானகிராமன் உலகம் வேறு என்பது தான் எழுத்தின் வேறுபாட்டிற்கான காரணம். அதேபோல ஜானகிராமன் பிராமண உலகத்திலிருந்து மொழியை உருவாக்கினார். நான் குடியானவர் உலகிலிருந்து மொழியைப் பெற்றுக்கொண்டேன். இந்த உலகங்களின் வன்மை, மென்மை வேறுவேறானவை. இப்படித்தான் ஒவ்வொரு கூறுகளிலிருந்தும் நானும் வேறுபடுகிறேன். எழுத்தாளர்களும் வேறுபடுகின்றனர்.

சு.வேணுகோபால் அவர்களுக்கு, பெரும்பாலும் உங்கள் சிறுகதைகள் மனித உறவுகளை மையமாகக் கொண்டுள்ளது. அநேகமாக தமிழில் பல இலக்கியங்களும் அதையே மையப்படுத்துகின்றன? தமிழ் புனைகதைகளில் பேச வேறு விடயங்களே இல்லையா?

அன்பழகன் மணியம், மதுரை

அன்புடன் அன்பழகன் மாணிக்கத்திற்கு,
என் கதைகள் வணிக உறவுகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. புனை கதைகளில் பேச வேறு விடயங்களே இல்லையா? என்று கேட்டிருக்கிறீர்கள். நீங்கள் என் கதைகளை முழுமையாகப் படிக்கவில்லை என்று மிகத் தெளிவாகவே தெரிகிறது. என் மீது மதிப்பு வைத்துள்ள எழுத்தாளர்கள், விமர்சகர்கள் சொன்ன வாசகத்தையே திரும்பச் சொல்கிறீர்கள். நீங்களாக என் கதையுலகிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ‘தங்கமணல்’, ‘உற்பத்தி’, ‘நித்திய கண்டம்’, ‘சிதைந்த நெஞ்சு’ ‘பட்டம்மா’, ’பதனிட்ட பிஞ்சுகரங்கள்’, ‘மண்ணைத் தின்றவன்’, ‘வெகுதூரம் விலகி’, ‘மாயக்கல்’, ‘வேம்பு’, ‘களவு போகும் புரவிகள்’, ‘தருணம்’, ‘கண்ணிகள்’, ‘உயிர்ச்சுனை’, ‘நிரூபணம்’, ‘குதிரைமசால் தாத்தா’, ‘புத்துயிர்ப்பு’, ‘விழிப்புணர்வு’, ‘வாழும்கலை’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, ‘சந்தர்ப்பம்’, ‘அவதாரம்’, ‘பால்கனிகள்’, ‘இழைகள்’, இந்தக் கதைகள் எல்லாம் மனித உறவுகளை மட்டும் தானா பேசுகின்றன. எத்தனை எத்தனை விதமான மானிடப் பிரச்சனைகளை அணுகிப்பார்த்திருக்கின்றன. இந்தக் கதைகளையெல்லாம் நீங்கள் படிக்கவில்லை என்றுதானே பொருள். மானிடப் பிரச்சனைகளை மனித உறவுகளில் நெய்யத்தெரிந்தவன் என்று நீங்கள் எழுதியிருந்தால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும். இதை என் வாயால் நீங்கள் சொல்லும்படி வைத்துவிட்டீர்கள். சில முக்கியமான எழுத்தாளர்கள், விமர்சர்கள் என் எழுத்துலகை வசப்படுத்தவும், வாசகர்கள் அணுகுவதற்கான ஒரு திறப்பைக்காட்டவும் சில விசயங்களை முன்வைத்திருக்கலாம். அவர்களது வாசிப்பை உங்கள் வாசிப்பாகச் சொல்லி பாவனை செய்வது அவ்வளவு நல்லதல்ல.

தங்கள் கதைகளை அறிந்த அளவு தங்களைப் பற்றி தெரியாது. தாங்கள் சமூக ஊடகங்களிலும் இல்லை. எனக்கு உங்களைப்பற்றிய விரிவான அறிமுகம் தேவை.
சிவசுப்ரமணியம், கோலாலம்பூர்
அன்புடன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு
என்கதைகளுக்கு நான் முன்னுரையோ பின்னுரையோ எழுதுவதில்லை. அப்படி எழுதியிருந்தால் என்னைப் பற்றி சில விசயங்கள் சொல்ல சந்தர்ப்பம் உண்டாகி இருக்கும். என்னைப்பற்றி வேண்டாம் என்றே தவிர்த்தேன். வாசகன் நேரே படைப்பிற்குள் நுழையட்டும் என்று நினைத்தேன். என்னைவிட என் படைப்பின்மேல் வாசகன் அதிக கவனம் கொள்ளட்டும் என்பதால் என்னைப் பற்றிச் சொல்வதைத் தவிர்க்கிறேன். ‘பதாகை’ இணைய இதழக்கு நான் அளித்த பேட்டியில் என்னைப் பற்றிய சில சம்பவங்களைச் சொல்லி இருந்தேன். பேட்டியை வெளியிடுவதற்கு முன் பேட்டிகண்ட நண்பர்களிடம் சொல்லி அந்த சொந்த அனுபவங்களை வெளியிடவேண்டாம் என்று சொல்லி அதன்படி தவிர்த்தேன். இதில் கூச்சமோ, தன்னடக்கமோ என்பதெல்லாம் இல்லை. என்னைவிட என் படைப்பு மேலானது என்ற கனவுதான் காரணம். நீங்கள் பஷீரின் கதைகளையும் அவரின் வாழ்க்கையில் நேர்ந்த சம்பவங்களையும் படிக்க நேர்ந்தால் அவரது படைப்புகளை விட அவரது வாழ்க்கை நிகழ்வுகள் படுகவர்ச்சிகரமானதாக இருக்கும். இப்படி  ஏதும் என் படைப்புகளுக்கும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் அல்ல. அனுபவங்களின் சாரம் புனைவின் வீரியத்திற்கு பின் நின்று தொழில்படும் என்பதால் அதுபற்றி சொல்வதைத் தவிர்த்தேன். பிறத்தியாரின் அனுபவங்களை படைப்பின் அனுபவங்களாக மாற்றும் போது என் அனுபவங்கள் அதை ரத்தமும் சதையுமாக மாற்றும், படைப்புசார்ந்த விசயத்திற்காகத்தான் என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில்லை. இருப்பினும் அங்கங்கு என்னைப் பற்றி ஒன்றிரண்டுவரிகள் சொல்லி இருக்கிறேன். என்னைப் பற்றி விரிவாக இனி ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இப்போதைக்குச் சில வரிகள் மட்டும், பேருந்து வசதியற்ற அம்மாபட்டி என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில்-விவசாயகுடும்பத்தில் பிறந்தேன். 12 ஆம் வகுப்பு வரை நடந்து சென்றுதான் படித்தேன். சிறுவயதில் விளையாட்டில்தான் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. கல்லூரியில் வாசிப்பின் மீதான மோகம் முற்றும் முழுதாகக் கவிழ்ந்தது. இது ஒரு தலைகீழ் மாற்றம். என் படைப்புகளைவிட என் வாழ்க்கை சாகசங்களால் நிரம்பியவை. இந்த அளவு இப்போதைக்குப் போதும். நாம் நேரில் சந்திக்க நேர்ந்தால் என்னைப்பற்றி விரிவாகச் சொல்கிறேன்.
வல்லினத்தில் வெளியிடப்பட்ட உங்கள் சிறுகதை வழியே உங்களை அறிந்தேன். என்னால் அந்தக் கதையை புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு கதையை உள்வாங்க என்னதான் செய்ய வேண்டும்?
பிரதீபன்

வல்லினத்தில் வந்த ‘மாறுதல்’  என்ற கதை புரியவில்லை என்று எழுதியிருந்தீர்கள். மிக மிக எளிமையான கதை என்றுதான் நினைக்கிறேன். இந்தக் கதையை வல்லினத்துக்கு இரண்டு நாள் கழித்து அனுப்பியிருந்தால் வேறொரு கதையாகத்தந்திருப்பேன். நவீன் நீண்ட நாள் அவகாசம் கொடுத்தும் ஒரு அரிபரியில்தான் அனுப்ப நேர்ந்தது. அடுத்த வாரம் அதே கதையை நவீனுக்கு அனுப்பப்போகிறேன். பிரசுரிக்க அல்ல. கூடுதலான செறிவும் வீச்சும் கொண்டதாக அது எப்படி மாறியுள்ளது என்பதற்காக தட்டச்சு இன்னும் பழகவில்லை என்பதால் தாமதமாகத் தரப்போகிறேன்.

இந்தக் கதை நான்கு நண்பர்களில் ஒருவரின் சதிகாரியம் பற்றிய கதை. ஒருவனது தோட்டத்தை நாசமாக்க மணிகண்டன் திட்டம் தீட்டுகிறான். அவன் ரகுராம் என்ற ஒரு தோட்டக்காரனால் பாதிக்கப்பட்டவன். அதற்கு ஒரு நாளையும் தேர்ந்தெடுக்கிறான். அன்று ஜாலியாக சுற்றி அடித்துவிட்டு அக்காரியத்தைச் செய்ய நினைக்கிறான். வந்த இடத்தில் நண்பனின் அத்தைவீட்டு விசேசத்தில் கலந்துகொள்ள நேர்கிறது. அங்கு எதிர்பாராத ஒரு நிகழ்வு நடக்கிறது. அந்த நிகழ்வில் அவர்களும் கலந்து இருக்கிறார்கள். கைக்குழந்தையை குரங்கிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். குழந்தையின் பொருட்டு அவர்கள் அடைகிற பதட்டமும் வேதனையும் தெரிகிறது. இதில் மணிகண்டனும் அல்லாடுகிறன். ஒரு வகையில் நல்லபடியாகவே முடிகிறது. வந்த காரியம் என்ன? இங்கு நிகழ்ந்தது என்ன? மணிகண்டன் சொல்வது என்ன? ரகுராம் தோட்டத்தை நாசக்காடாக ஆக்கிக் காட்டவேண்டும். அந்த வன்மத்தை நிறைவேற்றவும் அதைக் கொண்டாடவும் நினைத்தவர்கள் வந்த இடத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அவனை மாற்றுகிறது. அந்த மாறுதலை அவனுக்குள் நிகழ்த்துகிறது. மற்ற நண்பர்கள் அது பற்றி யோசித்திருக்கவில்லை. குழந்தையைப் பறிகொடுத்தவர்கள் துடித்த துடிப்பை மணிகண்டனும் பார்க்கிறான். நாசமாக்கப்பட்ட தோட்டத்தை ரகுராம் பார்க்க நேர்ந்தால் குழந்தையை சிதைத்துப் போட்டிருப்பது போலத்தானே தோன்றும். இது மணிகண்டனுக்குள் வன்மத்திற்கு மாற்றான கனிவை தோற்றுவித்திருக்கலாம் அல்லவா? குரங்கு சம்பவம் நிகழாமல் இருந்திருந்தால் நிச்சயம் ரகுராம் தோட்டத்தை நாசமாக்கி இருப்பார்கள். சில சந்தர்ப்பங்கள் நம்மை மாற்றுகின்றன. அப்படி ஒரு சந்தர்ப்பம் நண்பர்களுக்கு வாய்க்கிறது. பிரதீபன், இந்தக் கதையை நீங்கள் இப்படி புரிந்திருந்தால் புதிய வாசிப்பு அனுபத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.

பிரதீபன், வெகுஜன இதழ்களில் எழுதப்படும் கதைகள் மிகமிக வெளிப்படையானவை. விசயம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். இந்த வாசிப்பு மரபிலிருந்து வரும்போது என் போன்றோர்கள் எழுதும் கதைகள் புரிதலில் சற்று சிரமத்தைத் தரும். கதை என்பது கட்டுரை அல்ல. பிரச்சனையின் கதை விளக்கமும் அல்ல. வாழ்க்கை தரும் அனுபவத்தைப் போன்று கதை உலகும் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. அதை வாழ்க்கையாக்கிக் காட்டுகிறது. நிஜம் போன்றே கதையும் ஒரு நிஜ  உலகை புனைகிறது. அதன் வழி இந்த உலகையும் மனிதர்களையம் புரிந்து கொள்ள வைக்கிறது. நீங்கள் பார்த்திராத – கேட்டிராத – கவனித்திராத உலகிற்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. அப்படியான காரியத்தை நிகழ்த்துவதைத்தான் படைப்பு என்கிறோம். எனவே வெகுஜன பத்திரிக்கை கதைகளில் இருந்து விடுபட்டு இலக்கியப் பூர்வமான கதைகளைப் படிக்கத் தொடங்குங்கள். அவை வாசகர் தன்மையை மேனிலைப்படுத்தும். பின் புரிதலில் பெரிய சிக்கல் ஒன்றும் ஏற்படாது.

  • சு.வேணுகோபால் அவர்கள் உங்கள் கேள்விகளுக்குப் பதில் வழங்குவார். விரைந்து உங்கள் கேள்விகளை vallinam.padaippukal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...