சு.வேணுகோபால் பதில்கள் – பகுதி 2

கேள்வி 1: நீங்கள் எழுத்தாளராக யார் மூலம் அல்லது எதன் மூலம் வந்தீர்கள் சர்? சரியாகக் கேட்பதென்றால் எந்தப்பள்ளி? ஜெயமோகன் சு.ரா பள்ளியிலிருந்து வந்தது போல.

கேள்வி 2 : விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு எதிர்க்கொள்கிறீர்கள்? விமர்சனம் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

பாலன், மலேசியா

அன்புடன் பாலனுக்கு

இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதென்றால் இயல்பிலேயே ஒரு எழுத்தாளனாக வரவேண்டும் என்ற ஆர்வம் கண்ணதாசன் மீதிருந்த கவர்ச்சியால் ஏற்பட்டது. அவரது பாடல்களை விரும்பிக்கேட்பேன். பாடவும் செய்வேன். ஆனால் கண்ணதாசன் பள்ளியைச் சேர்ந்தவன் அல்ல நான். +2 முடிக்கும் வரை இலக்கிய வாசிப்பே கிடையாது. கல்லூரியில் இலக்கிய மாணவனாக சேர்ந்தபோது விட்டேத்தியாகத் திரிந்த என் நடத்தை தலைகீழாக மாறிவிட்டது. வாசிப்பில் படுதீவிரமாக மூழ்கிவிட்டேன். ஜெயகாந்தனின் பாதிக்கு மேற்பட்ட சிறுகதைகள், சில குறுநாவல்கள், ஒரு சில நாவல்களை ஓராண்டிலேயே படித்துவிட்டேன். 17, 18 வயதில் அவரது படைப்புகள் என்னை தீவிரமாக பாதித்தன. அந்த ஆண்டு இறுதியில் அவரின் மூன்று நாட்கள் இலக்கிய ஆட்டத்தை நேரில் பார்க்கவும் கேட்கவுமான வாய்ப்பு கிடைத்தது. அவரது நடை உடை பேச்சில் வெளிப்பட்ட திமிர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஒரு எழுத்தாளன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று தோன்றியது. படைப்பு எவை படைப்பு அல்லாதன எவை என்ற அறிதல் ஜெயகாந்தன் வழி எனக்கு உருவாகி இருக்கலாம் என்று இப்போது சொல்லத் தோன்றுகிறது. அவரின் படைப்பின்வழி படைப்பை உணர்ந்துகொள்ள முடிந்ததே தவிர படைப்பாக்கம் குறித்த சிந்தனையை உருவாக்கி விடவில்லை.

ஜெயகாந்தனைத் தொடர்ந்து தி.ஜானகிராமனைப் படிக்க நேர்ந்தது. ஜெயகாந்தனைவிட ஒரு இலக்கிய மாணவன் முதலில் படிக்கவேண்டியது தி.ஜானகிராமனைத்தான் என்று எனக்குச் சட்டென பிடிபட்டது. அவர் படைப்பாக்கம் குறித்து அதிகம் பேசியதில்லை என்றாலும் படைப்பின் நுட்பங்கள் அவரின் படைப்பிற்குள்ளே துல்லியத்தோடும் ஒருவித சகஜபாவத்தோடும் வெளிப்பட்டதை உணர்ந்தேன். அப்புறம் ஒரு சுற்று தி.ஜானகிராமன் உலகிற்குள் வலம் வந்தேன். அவர் உருவாக்கி காட்டிச் செல்லும் புறஉலகின் மீதும் உரையாடலில் வெளிப்படுத்திய நுட்பங்கள் மீதும் மனதை பறிக்கொடுத்தேன். ஜானகிராமனின் எழுத்து என்னை அதிகம் பாதித்தது என்றே சொல்ல வேண்டும்.

இந்த வாசிப்பு பாதையில் புதுமைப்பித்தன், கு.ப.ரா, நீல.பத்மநாபன், ரா.சு.நல்லபெருமாள், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் என சிலர் குறுக்காக வந்து சென்றார்கள்.

கண்ணதாசன் பெண்களை உன்னதான இடத்தில் வைத்து பார்க்க விரும்பினார். ஜெயகாந்தன் பெண்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டார். தி.ஜானகிராமன் பெண்ணைப் பெண்ணாகவே பார்த்தார். இன்று இந்த நிமிடம் இப்படி சொல்ல முடிகிறது. அன்று இளம் வாசகனாக தெளிவற்ற நிலையில் இவர்களின் எழுத்து வித்தியாசங்களை உணர்த்தியும் இருக்கலாம்.

இளங்கலையில் க.கைலாசபதியின் சமூகவியல் பார்வையை மிக உணர்ச்சிகரமாக எடுத்துச் சொல்லும் பேரா. போத்திரெட்டி எனக்கு ஆசிரியர். முதுகலையில் க.கைலாசபதி, நா.வானமாமலை வழியில் வந்த பேராசிரியர் தி.சு.நடராசன் ஆசிரியர். மார்க்சிய பள்ளியிலிருந்து வந்தவர்கள் ஆசிரியராக இருந்த அதே காலகட்டத்தில் சுந்தர ராமசாமியின் எழுத்துக்களைப் படித்தேன். கலை இலக்கியம் குறித்த பல புரிதல்களை அவரது படைப்புகளும் கட்டுரைகளும் எனக்குத் தெளிவாக்கின. சுந்தர ராமசாமியின் தொகுக்கப்படாத பல கட்டுரைகள் பல்வேறு சிற்றிதழ்களில் இருந்தன. அவற்றையெல்லாம் தேடித்தேடித் தொகுத்தேன். அவரது கட்டுரைகளின் அடிப்படை என்பதே படைப்பாக்க பார்வைதான். இந்தத் தேடலில் க.நா.சு. சி.மோகன், வெங்கட்சாமிநாதன் போன்றோரின் கலை இலக்கியம் குறித்த விவாதங்களையும் படிக்க நேர்ந்தது. சுந்தர ராமசாமியின் நூல்களில் இடம்பெறாத சில கட்டுரைகள் இரண்டு மூன்று என்னிடம் இன்றும் உள்ளன. மார்க்சிய திறனாய்வாளரான என் பேராசிரியர் தி.சு. நடராசன், சு.ரா.வின் கலை இலக்கிய பார்வை என்ன என்பதை பார் என்று ஊக்கப்படுத்தினார். சுந்தர ராமசாமியின் திறனாய்வு பார்வையை ஆய்விற்கு உட்படுத்தினேன். எனவே அவரது படைப்பாக்கம் சார்ந்த பார்வை எனக்குள் திறப்பை ஏற்படுத்தியது. மார்க்சியம் சுந்தர ராமசாமிக்கு இலக்கியம் குறித்த ஒரு பார்வையை இளம் வயதில் உண்டாக்கி இருக்கிறது. என்றாலும் அவர் க.நா.சு வழிவந்த கலைப்பள்ளியைச் சார்ந்தவர். ஐந்து ஆண்டுகால இலக்கிய வாசிப்பின் இறுதியில் சுந்தர ராமசாமியை முழுமையாக கற்க நேர்ந்தது. ஒரு வகையில் பாக்கியம் என்றே செல்லத் தோன்றுகிறது. படைப்பாக்கம் என்பது என்ன என்ற கேள்விகு சுந்தர ராமசாமியின் கட்டுரைகள் பதில்களாக இருந்தன. ஒரு தெளிவான சித்திரத்தில் மார்க்சியத்தைக் கற்றவர்கள் எனக்கு ஆசிரியர்களாக அமைந்திருந்தாலும் ஜெயமோகனைப்போல நானும் சுந்தர ராமசாமியின் பள்ளியிலிருந்து உருவானேன்.

நான் படைப்பாளியாக உருவாகவேண்டும் என்று கனன்று கொண்டிருந்த கனவிற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததும் அந்த நொடியிலேயே இறங்கி உடனடியாக ஒரு நாவல் எழுதி இலக்கிய உலகிற்குள் அறிமுகமானேன். அந்த நாவலை மார்க்சியர்கள் கொண்டாடினார்கள். பொன்னீலன், தி.சு.நடராசன், கோவை.ஞானி, ந.முத்துமோகன் போன்றவர்கள் சிறப்பாகவே வரவேற்றார்கள். சுந்தர ராமசாமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கான காரணமும் எனக்குத் தெரியும். சுந்தர ராமசாமி தமிழ்ச் சிற்றிதழ்களின் தீவிரத்தன்மையில் இயக்கியவர். எனது நாவல் சிற்றிதழ் மரபிற்கு எதிர் நிலையில் இயங்கி வந்த குமுதம் நடத்திய நாவல் போட்டியில் முதலாவதாக வந்தது; அம்மட்டும் அல்லாமல் சுஜாதா ஆசிரியராக இருந்து நடத்தியது; ஞானி என்ற மார்க்சியவாதியால் தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிய இளம் வாசகன் திடுக்கென தன் கண்முன் ஒரு நாவலாசிரியனாக எழுந்தது. இதுவெல்லாம் அவருக்கு கசப்பான விசயங்கள். குமுதம் வழி நான் எழுத்தாளனாக அறிமுகம் ஆனாலும் குமுதத்தால் தொடராக வெளியிட முடியாத ஒரு படைப்பைத்தான் தந்தேன். உண்மையில் சிற்றிதழ் வழி உருவாகி வந்திருக்க வேண்டியவன் நான். அங்கே ஆயிரம் பிக்கல் பிடுங்கள். நான்குபேர் கொண்ட குழுவில் ஐந்தாவதாக ஒருவனின் படைப்பை வெளியிடுவதில் ஒரு அகங்காரம். தன் நாலு வரி கவிதையை வெளியிட ஒரு இளம்கவிஞன் ஆசிரியரைக் கெஞ்சிக்கொண்டிருந்ததை நான் கண்ணாரக் கண்டேன். அப்போது எனக்கு கெஞ்சிக்கொண்டிருக்க நேரமும் இல்லை. அப்படியான மனநிலையும் இல்லை. சிற்றிதழ்களின் தீவிர வாசகனாக இருந்தும் வெகுஜன இதழ் தந்த ஒரு சவாலை நேர்மையாக ஏற்று வெளிப்பட்டேன். முக்கியமான விசயம் அந்த நாவல்போட்டிக்கு நடுவராக இருந்தவர் நிகழ் என்ற தீவிரமான சிற்றிதழை நடத்தியவர். இந்த வெளிப்பாடு சுந்தரராமசாமிக்கு பிடிக்கவில்லை என்பதையும் நேரில் கண்டேன். இன்னொன்று சுந்தரராமசாமியின் கலைகோட்பாடு சம்பந்தமானது. சமூகத்தின் சாரங்களை உறிஞ்சிக்கொண்டு உருவான படைப்பு அதே சமூகத்தை பாதிக்கும் படியாக இருக்கவேண்டும். சமூகம் போலவே அது ஒரு நிஜஉலகத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பது. என் நாவலை படித்த சுந்தரராமசாமிக்கு இது புனைவல்ல சு.வேணுகோபால் அவர் குடும்பத்தில் நடந்ததை அப்படியே எழுதிவிட்டார் என்று நம்பிவிட்டார். இனக்குழு சமூகம் பற்றிய தொன்மக்கதை உண்டு. அந்த நாவலில் வரும் முதன்மையான பாத்திரங்கள் எவையும் உண்மையல்ல. அதில் வரும் பெரிய காரைவீடும் உண்மையல்ல. அந்த சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை வாழ்க்கை முறைகளையும் எடுத்துக்கொண்டு புனைவின் சாத்தியங்களால் உருவானதே ‘நுண்வெளிகிரகணங்கள்,’ வாசகன் உண்மையிலேயே நடந்தது எனும்படி உருவாக்கினேன். ஒருவகையில் சுந்தர ராமசாமியையும் ஏமாற்றினேன். அது அவர் சொன்ன புனைவு உருவாக்கிய நிஜஉலகம், புன்னகையுடன் சு.ரா.விற்கு இதன் ரகசியத்தை நான் சொல்லவில்லை. இதில் ஒரு வேடிக்கையும் நிகழ்ந்தது. மார்க்சிய அறிஞரான பொன்னீலன் ‘நுண்வெளி கிரகணங்கள்’ நாவல் குறித்து எழுதிய விமர்சனத்தில் சுந்தர ராமசாமியின் அழகியல் பார்வையால் இந்த நாவலை ஓரளவு விளங்கிக்கொள்ள முடியும் என்றார். எனக்கும் சுந்தர ராமசாமிக்கும் ஐந்தாண்டு கால நேரடி இலக்கிய உறவு இருந்தது தெரியாமலே அப்படி எழுதினார்.

சுந்தர ராமசாமிக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு இலக்கிய அரசியல் காரணங்கள் இருந்தது போலவே இலக்கிய அழகியல் சார்ந்தும் இருந்தது. அவர் நவீனத்துவ அழகியலை இலக்கியத்தின் நிரந்தரத்துவமாகக் கருதி செயல்பட்டவர். நான் இந்த அழகியல் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அந்த நாவலை எழுதினேன். எனக்குத் தெரிந்த உலகத்தை எழுதினேன். இதனை பின் நவீனத்துவ எழுத்து என்றனர். பின் நவீனத்துவ அழகியல் என்றனர். இது ஒரு தற்செயல் நிகழ்வுதான். இந்த அழகியல் சுந்தர ராமசாமிக்கு உவப்பானதில்லை என்பது பின்பு புரிந்துகொள்ள முடிந்தது. தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பல இடங்கள் அந்த நாவலில் உண்டு. கெட்டவார்த்தைகள் கூட நான்கைந்து இடங்களில் உண்டு. நவீனத்துவம் தர்க்கத்தை மீறாதது. தர்க்க வழிபட்டது. இதெல்லாம் பின்னால் நான் புரிந்து கொண்டது. இந்த புராணம் அப்படியே இருக்கட்டும்.

சுந்தர ராமசாமியின் பள்ளியிலிருந்து உருவாகி ஒரு எழுத்தாளனாக மாறியபின் 1995 வாக்கில் கோவை ஞானி என்னை சந்திக்க விரும்பினார். சந்தித்தேன். பின் அவருடனான நெருங்கிய நட்பு நீண்டு தொடர்ந்தது. தொடர்கிறது. அவரது மார்க்சிய பார்வை என்னை வளர்ப்படுத்தியது. மார்க்சிய அழகியல் குறித்து மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸின் வாசகங்களை முன்வைத்து புதிதான வெளிச்சத்தில் விளக்கினார். எஸ்.என்.நாகராஜனின் கீழை மார்க்சிய சிந்தனைகளை முன்வைத்தார். உலக இலக்கியங்களை முன் வைத்து விளக்கினார். “சமூகம் மனிதனை பாதிக்கிறது என்பது உண்மையின் ஒரு பகுதியே சமூகத்தை மனிதன் பாதிப்படையச் செய்கிறான் என்பது உண்மையின் மற்றொரு பகுதி. லெனின், மார்க்ஸ், காந்தி, அம்பேத்கார் போன்றோர்கள் இந்த வரிசையில் வருபவர்கள்.” இப்படி எனக்கு பலநாட்கள் ஒரு மாணவனுக்கு சொல்வது போல எடுத்துரைத்தார். ஒருவகையில் சுந்தர ராமசாமியும் ஞானியும் இலக்கிய தளத்தில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பேன். சுந்தர ராமசாமியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதியும் ஞானியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதியும் அவை. அவற்றை ‘கலைநுட்பங்கள்’ ‘சமூகவியல் பார்வை’ என்ற சொற்களால் பொருள்படுத்திக் கொள்ளலாம். எனவே ஞானியின் பள்ளியில் பயின்றதன் பயனும் எனக்கு உரமாகி இருக்கிறது.

கேள்வி 2க்கான பதில்.

பாலன் உங்களது விமர்சனம் குறித்த இரண்டாவது கேள்வி. எனக்கு விமர்சனத்தின் மீது நம்பிக்கையும் உண்டு; அவநம்பிக்கையும் உண்டு.

பாரதி பற்றி க.கைலாசபதி எழுதிய விமர்சன கட்டுரைகள், அவரது ‘அடியும் முடியும்’ நூல் சிறப்பானவை. அக்கால அரசியல் சமூக உறவுகளிலிருந்து பாரதி என்ற கவிஞன் பண்டிதர்களுக்கு எதிரான திசையில் எப்படி செயலாற்றினான் என்பதை ஆழமான முறையில் கண்டு வெளிப்படுத்தி இருக்கிறார். அதே சமயம் புதுக்கவிதை குறித்த அவரது ஆரம்பகலை விமர்சனங்கள் அபந்தமானவை. பொக்கான கவிதைகளுக்கு வக்காலத்து வாங்குபவை. பக்கச் சார்பானவை. இந்தப் பக்கம் நின்றால் சிறந்தகவி. அந்தப் பக்கம் போனால் வக்கிரகவி, கைலாசபதி சமூகச்சாடலை  கவிதை என்று நம்பினார். கவித்துவம் குறித்த பார்வை அவரிடம் இல்லை. நா.வாவும் மிகச்சிறந்த ஆர்வாளர். அதேசமயம் சார்பானவர்களை தூக்கிக் காட்டுபவர்.

மௌனி, சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், பாரதி என பிரமிள் எழுதிய விமர்சனங்கள் தேர்ந்த இலக்கியத்தரமானவை. பின்னாளில் சு.ரா.குறித்து எழுதிய விமர்சனங்கள் காழ்ப்புணர்வின் எரிச்சல் மேவியவை. அவற்றில் சில உண்மைகள் இருந்தாலும் கூட.

சி.சு. செல்லப்பா ராமையாவின் சிறுகதைப்பாணி என்ற விமர்சன நூலை எழுதியிருக்கிறார். மூன்று நான்கு நல்லகதைகள் எழுதியிருப்பவர் ராமையா. மணிக்கொடி இதழை எடுத்து நடத்தியதற்கும் எடுத்த எடுப்பிலேயே சிறுகதைத் துறையை ஆழமாக வேரூன்றச் செய்து வளப்படுத்தியதிலும் ராமையா நம் வணக்கத்திற்குரியவர். ஆனால் அவரது கதைகள் சிறுகதை என்ற வடிவ ஒருமை கூடிவராத கதைகள். நிகழ்வுகளை தொகுத்து கதையாகச் சொல்பவர். இவரின் கதைகளை உலகத்தரத்திற்குத் தூக்கி நிறுத்தும் செல்லப்பாவின் முனைப்பு வியர்த்தமானவை. சாதாரணத்தையும் உயர்வானவை என நிறுவிடத்தான் விமர்சன பாத்தரத்தை எடுத்திருக்கிறார். நட்பிற்காகவும் செய்யப்பட்ட காரியம். அதே சமயம் கு.ப.ரா; லா.ச.ரா. குறித்து மிகச் சிறந்த திறனாய்வு கட்டுரைகளை செல்லப்பா எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தனைத் தொடவில்லை. செல்லப்பாவிற்கு மரபின் மீது நம்பிக்கை உண்டு. சிற்றிதழ்களில் பங்களிப்பு செய்யாமல் விலகி இயங்கிய தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல் குறித்து மோசமான தோல்வியுற்ற நாவல் என்று எழுத்து இதழில் எழுதியிருக்கிறார். படைப்பிலக்கியத்தில் சாதாரணமான கதைகளை எழுதிய ராமையாவை சிறந்த சிறுகதையாளராகத் தூக்கி நிறுத்தியதற்கும் தமிழின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான ‘அம்மா வந்தாள்’ நாவலை மோசம் என்று எழுதியதற்கும் நட்பு-வெறுப்பு விமர்சனத்தின் பின் நின்று செயலாற்றி இருக்கிறது என்பது என் எண்ணம். செல்லப்பாவின் ஆரம்ப காலக் கதைகளை நல்ல சிறுகதை வடிவில் செப்பம் செய்து வெளியிட்டவர் ராமையா. இவரும் ஒரு ஊர்க்காரர்கள்.

வெங்கடசாமிநாதனிடம் புனைகதையின் கவித்துவமான இடங்களை கண்டு சொல்லும் திறம் இருந்தது. ஆனால் கட்டுரைகளில் செய்கிற ஆர்ப்பாட்டமும் வளவளப்பும் மலையாக குவிந்து குப்பைமேடாக மாறிவிடுகிறது.

அ.மார்க்ஸ் ‘தமிழ் நவீனமான கதை’ என்று சிறப்பான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பாரதி தமிழை எப்படி தன் நவீனப் பார்வையால் மலர்ச்சியுறச் செய்தான் என்று அதிலே சரியாக சொல்லி இருக்கிறார். பழமலயின் ‘சனங்களின் கதை’ கவிதை நூலுக்கு மிகச்சிறப்பானதொரு ஆய்வுரையை ‘பறை’ இதழில் எழுதியிருக்கிறார். ஒரு படைப்பாளி சமூகத்தை எப்படி பார்க்கவேண்டும் மாறிவரும் சமூக இயக்கத்தை எப்படி கவனிக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் அக்கட்டுரை. என்றாலும் மனித மனத்தின் செயல்பாடுதான் படைப்பின் உயிர்த்துடிப்பு என்பதை அவர் விளங்கிக் கொள்ளவில்லை. மார்க்சிய கண்ணோட்டம் மட்டுமே மேலோக்கி இருந்தது.

பின்பு புதுமைப்பித்தன் குறித்த அவரது ஆய்வு அணுகுமுறை திட்டமிட்ட அரசியல் உள்நோக்கம் கொண்டதாக வெளிப்பட்டது. விமர்சனத்தால் வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர் பிறந்த சாதியை முன்வைத்து இலக்கிய அரசியலை தொடங்கினார். அவர் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கதைக்குள்ளும் அ.மார்க்ஸ் முன்வைத்த கருத்தை உடைக்கும் மற்றொரு பகுதியும் இருந்தது. அதை மிகத் தந்திரமாக ஒளித்து எழுதினார். உதாரணம். ‘புதிய கூண்டு’, ‘நாசகாரக்கும்பல்’.

புதுமைப்பித்தன் குறித்த நேர்மையான செறிவான வலுவான நூலை தந்தவர் ராஜ்கௌதமன். நூலின் பெயர் ‘புதுமைப்பித்தன் எனும் பிரமராசஸ்.’        இப்படி நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு படைப்பாளி குறித்து உள்நோக்கமற்ற காழ்ப்புணர்வற்ற விமர்சனங்களை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த விமர்சனங்களில் எனக்கு நம்பிக்கையும் உடன்பாடும் உண்டு. முன் தீர்மானம் கொண்டு ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை தூக்குவதும் வீழ்த்துவதுமான விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை.

பிரபஞ்சன் சென்ற ஆண்டு இந்து நாளிதழில் எழுதியவை விமர்சன கட்டுரைகளே அல்ல. மேம்போக்கான எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் முன்னிலைப்படுத்தி எழுதினார். நூல்மதிப்புரை தரத்திலானவை. இளம்வாசகனுக்கு மேலான படைப்புகளை அடையாளம் காட்டுவதற்கு பதிலாக, இப்படி நட்பிற்கு மாவு இடித்துத் தருவது இலக்கியத்திற்கு எதிரான செயல்.

சில நல்ல உதாரணங்களைத் தருகிறேன் வ.வே.சு.ஐயரின் ‘கம்பராமாயண ஆராய்ச்சி,’ தெ.பொ.மீ.யின் ‘முல்லைப்பாட்டு ஆராய்ச்சி,’ வ.சுப.மாணிக்கத்தின் ‘தமிழ் காதல்’, வையாபுரிபிள்ளையின் ‘கால ஆராய்ச்சி,’ புதுமைப்பித்தனின் ‘இரவல் விசிறி மடிப்பு’, சி.சு.செல்லப்பா குறித்து பிரமிள் எழுதிய ‘கல்தீபங்கள்,’ புதுமைப்பித்தன் குறித்து க.நா.சு. எழுதிய ‘புதுமையும் பித்தமும்’ சுந்தர ராமசாமி எழுதிய ‘க.நா.சு.வின் நட்பும் மதிப்பும்,’ ‘புதுமைப்பித்தனின் மனக்குகை ஓவியங்கள்’ ஞானி எழுதிய ‘மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்’ நூல், சிற்பி எழுதிய ‘பாரதி கைதி எண்-253’ நூல், ‘அக்கினி குஞ்சு’ கட்டுரை, தி.ஜானகிராமன் குறித்து தி.சு.நடராசன் எழுதிய கட்டுரை, தமிழ் நாவல் இலக்கியம் குறித்து சி.மோகன் எழுதிய ‘நாவல் கலையும் அதன் அவசியமும்,’ ரகுநாதன் எழுதிய ‘பாரதியின் காலமும் கருத்தும்’ ‘இளங்கோவடிகள் யார்,’ புதுமைப்பித்தன், கு.ப.ரா, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் என்று ஜெயமோகன் எழுதிய தொடர் கட்டுரைகள் என மிகச்சிறந்த 100 விமர்சன கட்டுரைகளைச் சொல்லமுடியும். இந்த விமர்சனங்கள்தான் என்னை வளப்படுத்தின. இந்த வகையில் கவிஞர்.க.மோகனரங்கனின் விமர்சனங்கள் நேர்மையானவை.

நண்பேன்டா விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

கேள்வி 3: ஐயா, உங்கள் சமகால எழுத்தாளரான ஜோ டி குரூஸ் தன் அரசியல் நிலைபாட்டை வெளிப்படையாகச் சொல்கிறார். தங்கள் சமகால அரசியல் குறித்து கருத்துகளை வெளியிட்டதை நான் கண்டதில்லை. படைப்பாளி சமகால அரசியல் சிக்கல்கள் குறித்து கருத்துரைப்பதோ தன் ஆதரவு யாருக்கு என்றோ கருத்துரைத்தல் கூடாதா?

ஆதவன், தமிழகம்

அன்புடன் ஆதவனுக்கு,

சமகால அரசியல் சிக்கல் குறித்து வெளிப்படையாகவும் ஓங்கிய குரலிலும் சொல்லவே விரும்புகிறேன். அப்படியும் எழுதியிருக்கிறேன். வெளியிடத்தான் ஆட்களைத் தேட வேண்டியிருக்கிறது. முதன் முதல் இன்று பிரபலமாய் பேசப்படும் சசிகலாவின் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றி 1995-ல் விரிவாக ஒரு கட்டுரை எழுதி தராசு என்ற ஒரு வார இதழ் வந்தது அல்லவா? அதற்கு அனுப்பினேன். அங்கிருந்து 15பைசா கார்டில். உங்கள் கட்டுரையை வெளியிட முடியாத நிலையில் இருக்கிறோம். மன்னிக்கவும் என்று அதன் ஆசிரியர் ஷியாம் கடிதம் எழுதியிருந்தார். மலை அடிவார மேட்டாங்காடுகளை ‘அனுபவ் பிளாண்டேசன்’ என்ற அமைப்பு வாரிப்போட்டதல்லவா அதற்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரை. 1998-ல் அந்த தராசு ஆசிரியர் ஷியாம் ஜெயலலிதாவுக்குச் சாதகமாக இதழைக் கொண்டு வந்தார் என்ற நினைவு.

1997-ல் தமிழக முதல்வர் பொறுப்பில் இருந்த கலைஞர். கருணாநிதியை வானளாவப் புகழ்ந்து தள்ளிய நிர்மலா பெரியசாமியை (கலைஞர் படைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவர் என்று நினைக்கிறேன். M.L.A சீட் தரப்படாததால் பின் அ.தி.மு.க.விற்குப் போனார்) விமர்சித்து ஒரு கட்டுரையை கல்கியில் எழுதினேன். ‘நான் சொல்லாததை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் வழக்குத் தொடுக்கப்போகிறேன்’ என்று கடிதம் அனுப்பினார். நானும் நீதிமன்றத்திற்கு வருகிறேன் என்று சொல்ல விவகாரம் அத்தோடு முடிந்தது. அரசியல்வாதிகளை முதலில் சக மனிதர்களாகப் பாருங்கள் கடவுளாக இட்டுக்கட்டி சென்ற ஆட்சியை ஜெயலலிதா சீரழிந்தது பத்தாதா என்பதுதான் கட்டுரையின் அடிப்படை.

கோக்கோகோலா கம்பெனியின் நீர்த்திருட்டைப் பற்றியும் பணபறிப்பைப் பற்றியும் பெரிய கட்டுரை எழுதி ஒரு சிற்றிதழுக்கு அனுப்பினேன். அதை அப்படியே கிடப்பில் போட்டார்கள்.

சன் தொலைக்காட்சி – ஜெயா தொலைக்காட்சி இரண்டும் செய்திகளை திரித்து தங்களுக்குச் சாதகமாக எப்படியெல்லாம் வெளியிட்டு மக்களை முட்டாள்களாக்குகின்றன என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதன் ஒரு பகுதி பரிட்ஷா ஞாநியின் தீம்தரிகிட இதழில் வந்ததாகச் சொன்னார்கள். அந்த இதழ் என் கைக்குக் கிட்டவில்லை.

நான் ஒரு மாடுபிடிவீரன் என்பது என் நெருங்கிய கிராமத்து நண்பர்களுக்குத் தெரியும். காங்கேயம் காளைகளை வளர்க்கிறவன் என்பது சில இலக்கிய நண்பர்களுக்குத் தெரியும். நான் விவசாயி என்பதை என் எழுத்தைப் படித்தவர்களுக்குத் தெரியும். பீட்டாவிற்கு எதிராக ஜல்லிக்கட்டுப் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்தபோது என் பார்வையை முன்வைத்து கட்டுரை எழுதி ஒரு இதழுக்கு அனுப்பினேன். யாரோ அரவிந்தனாமே, அந்த கட்டுரையை குப்பைத் தொட்டியில் போட்டார். பின் சொல்வனம் இதழில் வெளிவந்தது. மட்டுமல்லாமல் சில தொகுப்பு நூல்களிலும் சேர்த்தார்கள். கல்கியில் சிக்கல் சிவராமன் என்ற பெயரில் 97-98-ல் சில அரசியல் கட்டுரைகள் எழுதயிருக்கிறேன். மழை சிற்றிதழில் முப்பது முப்பது பக்கங்கள் கொண்ட விவசாயிகளின் பிரச்சனைகளைச் சொல்லும் மூன்று பெரிய கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். சாகதிய அகாதமியின் தேர்வு குழறிபடிபற்றி எழுதியிருக்கிறேன். அது நிகழ் வெளியீடாக வந்திருக்கிறது. நான் எழுதிய ‘செம்புழுதிபடிந்த எம் மக்கள்’ என்ற கட்டுரையின் சாரத்தை வை.கோ. அவர்கள் நடைபயண அரசியலில் தொடர்ந்து பேசினார்.

ஜெயலலிதா மரணமடைந்த அந்த தருணத்தை வைத்து ஒரு கட்டுரை எழுதநினைத்தேன். யார்போடுவார்கள் என்ற அலுப்பில்விட்டுவிட்டேன்.

ஆதவன் எனக்கும் அரசியல் நிலைப்பாடு உண்டு. மோடியின் அரசு பொதுத்துறை நிறுவன சொத்துக்களை பங்குச் சந்தையில் போட்டு போட்டு நாட்டை பயங்கரமான ஆபத்தில் சிக்கவைத்திருக்கிறது. இது அருண்ஜேட்லி போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். வறட்டுதலைகனம் பிடித்த மோடிக்கு, சிக்கலை எடுத்துச் சொல்ல ஒரு பா.ஜ.க. எம்.பி.கூட இல்லை. இதுபற்றியெல்லாம் எழுத ஆசைதான் ஆதவன். 200 வார்த்தைகளில் வரும்படி எழுதச்சொல்வார்கள் யுனிக்கோடில் தட்டச்சு செய்து அனுப்பச் சொல்வார்கள். எல்லாம் செய்து அனுப்பினால் காரம் அதிகாமாக இருக்கிறது. கொஞ்சம் பாலிஷ் செய்து அனுப்புங்கள் என்பார்கள். அப்புறம் அதற்கு சோப்புபோட்டு அனுப்ப ஒரு சோம்பேறித்தனம் வந்துவிடுகிறது.

முன்பு கைப்பிரதியாக எழுதி அனுப்பினாலே பிரசுரமாகும். இப்போது கணிணியில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். நான் அதற்கு ஒரு ஆள் பிடிக்க வேண்டும் என்தால் எழுத நினைக்கிற விசயங்களை எழுதாமல் விட்டுவிடுகிறேன்.

எனது ‘வலசை’ நாவல் யானைகளின் வழித்தடத்தை அழித்து ஆன்மீகம் பரப்பும் சாமியார்களின் மடாலயங்களைப் பற்றியும் சூழலியலை சீர்கெடுத்த கோலத்தைப் பற்றியதுதான் ஆதவன். ஓரளவு என் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதும் நான் யாருக்கு ஆதரவாளன் என்பதும் தெரிகிறதல்லவா? ஜோ.டி.குரூஸ் சாகதிய அகாதமி பரிசை பெற்றதும் பாப்புலர் ரைட்டர் ஆகிவிட்டார். நான் பாப்புலர் ஆனபின்பு வாய்புகார் வரலாம்.

ஆதவன் நீங்கள் ‘விசை’ இதழ் நடத்திய ஆதவன் தீட்சண்யாவா? அப்படி  என்றால் ஏன் உங்கள் இதழில் என்னை எழுதச் சொல்லி இதுநாள் வரை ஒரு சொல்கூட சொன்னதில்லை? இப்படித்தானே இருந்திருக்கும் மற்ற சிற்றிதழ் குழுக்களின் செயல்பாடும்.

கேள்வி 4 : கோட்பாடுகள் ஒரு படைப்பாளிக்கு அவசியமா? நீங்கள் உங்கள் படைப்புகளில் கோட்பாட்டு ரீதியில் முயன்றுள்ளீர்களா?

மித்திரன்

அன்புடன் மித்திரனுக்கு;

இலக்கிய வாசிப்பின் வழி ஒரு எழுத்தாளனாக உருவாகி வந்தபின் மார்க்சியத்தையும் அதனோடு தொடர்புடைய இருத்தலியத்தையும் படித்தேன். எல்லோரையும் போல பெரியாரியம், காந்தியம், தலித்தியம், பெண்ணியம் என்று தொண்ணூறுகளில் சூடாக பேசப்பட்டபோது படித்தேன். பூக்கோவின் மாற்று சிந்தனை எனக்கு புதிய திறப்பை உண்டாக்கியது. தாமதமாக படிக்கும்படி ஆகிவிட்டதே என்றுகூட அப்போது நினைத்தேன். இந்த கருத்தியல் சிந்தனையை முன்னெடுத்த அ.மார்க்ஸ், ரவிக்குமார் என் நன்றிக்குரியவர்கள். இந்தக் கோட்பாடுகளை மாணவர்களுக்கு நடத்தும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. சிற்றிதழ்கள் அனைத்தும் கோட்பாடுகளைக் கொண்டாடி வெளியிட்ட காலம். எனவே என் தேவை சார்ந்தும் படித்தேன். டி.ஆர் நாகராஜனின் காந்தியம், அம்பேத்காரியம் பற்றிய கட்டுரை; ந.முத்துமோகனின் மார்க்சிய கட்டுரைகள், ஐரோப்பிய தத்துவங்கள் பற்றிய நூல், பின் நவீனத்துவத்தை முன்னெடுத்த பிரேம்: ரமேஷின் கட்டுரைகள், தமிழவன், நோயல் இருதயராஜ் கட்டுரைகள் என படித்தேன்.

இந்தக் கோட்பாடுகள் இலக்கியத்தின் போக்கை மாற்றியது. சமூகத்தை வேறு வேறு கோணங்களில் நின்று எழுதுவதற்குப் பாதைகளைத் திறந்து விட்டது. கோட்பாட்டை முன்வைத்து எழுதப்பட்ட படைப்புகள் கலைவெற்றி கூடிய படைப்புகள் என்று சொல்லமாட்டேன். கோட்பாட்டு உரைகளுக்கு தோதான மாதிரி வடிவங்களாக இருந்தன. உதாரணமாக மேஜிக்கல் ரியலிச எழுத்துக்களை பின் நவீனத்துவ எழுத்து என்றனர். இதற்கு நான்தான் தாதா என்றெல்லாம் போட்டியும் நடந்தது. ஆனால் மேஜிக்கல் ரியலிசம் என்பது பற்றி என்னவென்றே தெரியாத காலத்தில் எழுதப்பட்ட மேஜிக்கல் படைப்புகள்தான் இன்றும் மிகச்சிறந்த உதாரணங்களாக அமைகின்றன. காரணம் என்னவென்றால் அவர்கள் கோட்பாடுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை. தமிழனின் வாழ்க்கைக்கும், அப்பண்பாடு உருவாக்கிய பல்வேறு கருத்தியல்கள், நம்பிக்கைகளின் ஊடாக தன் பார்வையை வீசி புனைந்தார்கள்.

இந்த சமூகத்தை மேலதிகமாகப் புரிந்துகொள்ள இந்தக் கோட்பாடுகள் உதவின. ஒரு கோட்பாட்டுக்காக படைப்பு என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. நம்பிக்கையை ஊட்டிய படைப்புகளும் மிகமிக குறைவு. கோட்பாடு சார்ந்து ஒரு புனைகதையை எழுதும்போது அதற்கு நேர்மாறான மனித உறவுகள் இருக்கும். கோட்பாட்டிற்காக அதைத் துண்டித்துவிட்டு எழுத வேண்டிய நிர்பந்தம் கோட்பாட்டுவாதிகளுக்கு. (என் விமர்சன நண்பர் ஒருமுறை இப்படிச் சொன்னார். கோட்பாட்டை சரியாக விளக்க நானே ஒரு கவிதை எழுதி,… என்று ஒரு கவிஞன் சொன்னதைப் போல என்று விளக்குவேன் என்றார்) அதை எழுதினால் கோட்பாட்டை உடைத்து விடும். மாற்று உண்மை அல்லது மனவிசித்திரங்களை மறைத்து விட்டு எழுதப்பட்ட படைப்பு கோட்பாட்டிற்கு ஊழியம் செய்யும். மானிட உலகை அவாவாது.

பல்வேறு கோட்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடிய படைப்பைத்தான் படைப்பாகக் கருதுகிறேன். அதாவது திட்டமிடாமல் தன்னியல்பால் அப்படியான தகைமையைப் பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலித்திய எழுச்சியில் பல படைப்புகள் வந்தன. இந்த கோட்பாடு வருவதற்கு முன்பு எழுதப்பட்ட பூமணியின் ‘பிறகு’ ‘வெக்கை’ நாவல்களே இன்றளவும் மிகச்சிறந்த படைப்புகளாக இருக்கின்றன. இமையத்தின் ‘கோவேறு கதைகள்’ கூட கோட்பாட்டிற்காக எழுதப்பட்டதல்ல. தலித் ஒற்றுமையை குலைக்கக் கூடியது என்று கூட பேசப்பட்டது. ஆனால் அது தலித்துகளுக்குள் நிலவும் உண்மையை-முரணை நாடியது.

நம் வாழ்க்கை ஒரு கோட்பாட்டிற்கு மட்டுமே உரியது அல்ல. வாழ்க்கை முறை கோட்பாடுகளுக்கு உதவுமே தவிர கோட்பாட்டிற்கு வாழ்க்கை உதவாது. தமிழவன், எம்.ஜி.சுரேஷ் என பலர் ஒவ்வொரு கோட்பாட்டிற்கு ஒவ்வொரு படைப்பு என்று தந்தார்கள். எம்.ஜி.சுரேஷ் கோட்பாட்டுபடைப்புகளின் காலம் முடிந்துவிட்டது என்று பின்பு எழுதினார். அப்படைப்புகள் ஏன் இலக்கிய செல்வாழ்க்கை பெற முடியவில்லை. புதிய கதை இருந்தது. ரத்தமும் சதையுமான நம் வாழ்க்கை அதில் இல்லை. அதை இந்த கோட்பாட்டு எழுத்தாளர்கள் தவறவிட்டார்கள். இந்தத் தமிழ்ப் பண்பாடு மேலானதோ கீழானதோ, சீரழிந்ததோ நாற்றமிக்கதோ, நறுமணமிக்கதோ இதுதான் என் வாழ்க்கை. என் வாழ்க்கையிலிருந்து தான் என் படைப்பு. கோடை வெயிலின் உக்கிரத்தில் அம்மை கண்ட எம் குழந்தைகளுக்கு எஸ்க்கிமோக்களின் உடையைப் போட்டுவிட மாட்டேன். நிர்வாணமாக வாழையிலையில்தான் கிடத்துவேன். இந்த வாழ்க்கையை விளங்கிக்கொள்ளத்தான் கோட்பாடுகளே தவிர கோட்பாடுகளுக்காக வாழ்க்கை என்பது ஒருவகையில் செயற்கையானது.

கோட்பாடுகள் படைப்பையும் சரி வாழ்க்கையையும் சரி மேலதிகமாக விளங்கிக்கொள்ள உதவுகின்றன. எனவே கோட்பாடுகள் அவசியம்தான். ஆனால் இந்த கோட்பாட்டிற்காக இந்த வாழ்க்கை இல்லை படைப்பு இல்லை என்றுதான் சொல்ல வருகிறேன். மனித உளவியல் பிராய்டுடன் முடிந்து விட்டதா? அல்லது யுங், லெகானுடன் முடிந்து விட்டதா? பிராய்டுக்கு தெரியாததை, சொல்லாததை கண்டு சொல்வதுதானே அறியப்படாத உளவியல். படைப்பும் அப்படித்தான் ஃபிராய்டு சொன்னதற்குத் தோதான  ஒரு புனைகதை என்றால் அதைத்தான் ஃபிராய்டு சொல்லி விட்டாரே. கோட்பாடுகளை படிப்பதென்பது மேலதிகமான பாய்ச்சலை நிகழ்த்தத்தானே தவிர கோட்பாடுகளுக்கு விளக்கக் கதை எழுதுவதல்ல. அதே சமயம் இந்த கோட்பாட்டு வாசிப்பு நம் வாழ்வின் பல்வேறு சிக்கல்களை புரிய வைத்தது என்பதும் உண்மை. பிற்கால என் படைப்பாக்கத்திற்கு மறைமுகமாக உதவியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

என் முதல் நாவலான நுண்வெளிக் கிரணங்கள் நாவலைத் தமிழின் அசலான மேஜிக்கல் ரியலிச நாவல் என்று நாகர்கோவில் கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் சொக்கலிங்கம் அண்ணாச்சி சொல்லி ஆரத் தழுவினார். உண்மையில் நான் அப்படி நினைத்திருக்கவில்லை. புகழ்பெற்ற மேஜிக்கல் ரியலிச மேலை நாட்டுப் படைப்புகளை எதையும் நான் படித்திருக்கவில்லை. அந்த நாவலின் ஒரு அத்தியாயத்தில் பேய் பிடித்த சிறுவன் வழி ஒரு உலகத்தை விவரித்திருந்தேன். கலைக்கூத்தாடிகளின் மாய வித்தை ஒரு ஒரு அத்தியாயத்தில் வருகிறது. கனவிலிருந்து ஒரு தொன்மம் ஒரு அத்தியாயத்தில் விரிகிறது. இப்படிப் பல்வேறு விசித்திரங்கள் அந்த நாவலில் கூடி வந்தன. இவற்றை எதையும் நான் பயன்படுத்த வேண்டும் என்ற துளி எண்ணம் கூட எனக்குத் தோன்றியதில்லை. இந்த வாழ்வில் அவை இருந்தன. எழுத எழுத என்னிலிருந்து என்னை எழுது என்பது போல அவை தாமாக முன் வந்து என் உள்ளத்தைப் பிளந்து புகுந்தன. எழுதிச் செல்லும் கனத்தில் தோன்றும் புதிய படைப்பு உத்தி. அதற்கு முன் எழுதிக்கொண்டிருந்த பத்தியில் கூட அப்படியொரு யோசனை தோன்றியிருக்காது. பிற தமிழ் எழுத்தாளர்களின் பேய்கள் அப்போது ஓட்கா, ட்ரிபில் பைவ் சிகரெட், வின்டேஜ் கேட்டபோது என் கதையில் வந்த பேய் கஞ்சா, பட்டை சாராயம், பூமார்க் பீடியைத் தான் கேட்டது. நுண்வெளி கிரகணங்கள் நாவல் எழுதத் துவங்கும் வரை மேலான தமிழ்ப் புனைகதைகளை மட்டுமே படித்திருந்தேன். கோட்பாடுகளைப் படித்ததில்லை. கோட்பாடுகள் பற்றிய பேச்சு காதில் விழுந்தது. படைப்பிற்கு அவை முக்கியம் இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். உதாரணமாக ‘புயலிலே ஒரு தோணி’ போல ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற கனவுதான் இருந்தது. மாறாக இருத்தலியலுக்கு ஒரு நாவல் எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை.

தீவிரமாக கோட்பாடுகள் விவாதிக்கப்பட்ட அந்தக் காலத்தில் ஒரு இளம் எழுத்தாளனாக எழுத வந்ததால் இந்தக் கோட்பாடுகள் பற்றி எட்ட நின்றாவது தெரிந்துகொள்ளவேண்டிய சூழல் உருவானது. உறுமி இசைக்கும்போது கையில் பிடித்திருக்கும் வெண்கலக்குடம் அதிர்வது போல எனக்கு உத்தி என்ற அளவில் தோன்றுவதற்கு அது உதவி  இருக்கலாம். ஆனால் அந்த உத்திகள் தமிழ்ப் பண்பாட்டு கூறுகளால் உருவானவை. ‘இருட்குகையில் விழுந்த ஒளிப்புகை’, ‘களவு போகும் புரவிகள்’ இந்த இரண்டு கதைகளை இங்கு உதாரணங்களாகச் சொல்கிறேன். ஒன்று மேஜிக்கல் ரியலிச கதை; மற்றொன்று மெட்டபார் என்று சொல்கிறோமே உருவகக் கதை. இவை என் ஆரம்பகால கதைகள். மௌனி, புதுமைப்பித்தன், லா.ச.ரா. கையாண்டு எழுதிய புதுமையான சொல்முறை, கதைகளின் இலக்கிய வாசிப்பு முன்னமே இருந்தது. அதாவது கோட்பாட்டு பேச்சு சூழலும், வாசிப்பு அனுபவமும் இணைந்து பயன்பட்டிருக்கலாம். இன்னும் துல்யமாகச் சொல்வதென்றால் பண்பாட்டு வேர்களில் இருந்த வித்தியாசமான சொல்முறையைக் கண்டதும் அதில் நவீன வாழ்வை புனைந்து சொல்ல மனம் விழைந்தது. கோட்பாட்டுக்கென்று நான் எழுதியதில்லை.

முன்னமே சொன்னதுபோல ஒரு எழுத்தாளனாக ஒரு நாவலும், சில கதைகளும், இரண்டு குறு நாவல்களும் எழுதிய பின்னே என் ஆசிரியப் பணியின் பொருட்டு கோட்பாடுகளைப் படித்தேன். கோட்பாடு என்ற வார்த்தையைவிட சிந்தனைகள், கொள்கைகள் என்று கூட சொல்லலாம்.

அதற்கு முன் க.நா.சு., சு.ரா., சி. மோகன் சிபாரிசு செய்த படைப்புகளைத் தேடித் தேடி படித்ததால் எனக்குள் வாசிப்பின் வழி ஒரு இலக்கிய குணம் உருவாகி இருக்கும் அல்லவா? அது கோட்பாட்டு வாசிப்பை விட முக்கியமானதாக இருந்து செயலாற்றுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

மார்க்சிய அறிஞரான கோவை ஞானி தமிழ் நாவல்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். 100 நாவல்கள் குறித்து எழுதியிருக்கிறார். அய்யா உங்கள் திறனாய்வின் வழி தமிழின் மிகச்சிறந்த 10 நாவல்களைக் கூறுங்கள்; என் வாசிப்பில் விடுபட்டிருந்தால் அவற்றை உடனே படித்து விடுகிறேன் என்றேன். அவரால் அப்போது உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. நானாக அவர் சிலாகித்துச் சொன்ன 20 நாவல்களை வரிசைப்படுத்தி விடுபட்ட நாவல்களை வாசித்தேன். அவற்றில் க.நா.சு. சொன்ன நாவல்கள்தான் உச்சமாக இருந்தன. க.நா.சு. கோட்பாட்டுவாதியல்ல. தீவிரமான வாசிப்பாளர் மட்டுமே. இப்போது எனக்கு ஒரு ஆசை. கோட்பாடு சார்ந்து ஒழுதப்பட்ட கலைவெற்றியை வெகு இயல்பான முறையில் எட்டிய படைப்புகளை நேர்மையான விமர்சகர்கள் யாரேனும் சொல்வார்களேயானால் எனக்குப் பயனுள்ளதாக இருக்கும். என் மனதை தூங்கவிடாமல் ஆட்டிக் குலைக்கிற படைப்பைத்தான் கலை வெற்றி என்கிறேன்.

1 comment for “சு.வேணுகோபால் பதில்கள் – பகுதி 2

  1. Soundararajan. V
    August 19, 2018 at 3:21 am

    தமிழ் இலக்கியத்தை நன்கு புரிந்த இனம் காண , சு வேணுகோபால் அய்யாவின் பதில்கள் , மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் இந்தப் பக்கத்தை நிரந்தரமாக புக்மார்க் செய்து வைத்துக்கொண்டேன்.

Leave a Reply to Soundararajan. V Cancel reply