கொழும்புக்கு வந்து சேர இரவு மணி 11 ஆகியிருந்தது. யாழ்ப்பணத்திலிருந்து தொடங்கிய பயணம் என்பதால் உடல் கடும் சோர்வடைந்திருந்தது. அன்றிரவு தங்குவதற்கான இடம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் காலை 11மணிக்கு ‘வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சி இருப்பதாக நவீன் ஏற்கனவே சொல்லியிருந்தார். பயணத்தின் போது கண்டி பேராதனை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மட்டுமே ‘வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் இருக்கும்போதுதான் நவீனுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் இலங்கையில் இருப்பதை அறிந்து மேமன் கவி அழைத்திருந்தார். கொழும்பிலும் ‘வல்லினம் 100’ அறிமுகம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாக சொல்லியிருந்தார்.
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நான்காவது மாடியில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தூக்கக் கலக்கத்தில் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு நான்கு மாடிகளை ஏறும்போது கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. அறைக்கு வந்த பிறகுதான் யாரும் இன்னும் சாப்பிடவில்லை என்பதும் ஸ்ரீதர் ரங்கராஜ் இரவில் நீரிழிவு மாத்திரை சாப்பிடவேண்டும் என்பதும் ஞாபகம் வந்தது. கீழே அருகில் கடைகள் ஏதும் இல்லை என்பதை வரும் போதே பார்த்திருந்தோம். வேறு வழியின்றி பல மைல்கள் சளைக்காமல் வாகனம் ஓட்டிவந்து களைத்துப் போயிருந்த திலிப்பை உதவிக்கு அழைத்தோம். அந்த நள்ளிரவு நேரத்தில் சரவணதீர்த்தாவும் பாண்டியனும் திலிபோடு எங்கோ சென்று உணவு வாங்கிக் கொண்டு அறைக்கு வந்தனர். அரைவயிராக சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றோம். கொழும்பு தமிழ்ச்சங்கம் சுற்றிலும் உயரமான அடுக்குமாடி வீடுகள் சூழ்ந்திருந்தன. அது காற்று சுழற்சியைப் பாதித்திருந்தது. அறையில் வெக்கை தாங்கமுடியவில்லை. குளித்துவிட்டு படுத்தாலும் வியர்வை மீண்டும் மீண்டும் எங்களை குளிப்பாட்டிக்கொண்டே இருந்தது. உடல் சோர்வு கண்ணை அயர்த்தினாலும் தூக்கம் கொள்ளவில்லை. அரைவயிறும் அரைத்தூக்கமுமாக அன்றிரவு கழிந்திருந்தது.
காலையில் சரவண தீர்த்தாவும் தயாஜியும் தயாராக இருந்தனர். நாங்கள் மூவரும் அறையை விட்டு கீழிறங்கும்போது மின்தூக்கி இருப்பதை பார்த்து நேற்றிரவு பெட்டிகளுடன் மேலேறியதை எண்ணி நொந்துக்கொண்டோம். கீழே வந்தவுடன் தமிழர்கள் உற்சாகமாக குழுமியிருந்ததைப் பார்த்தோம். பிறகு அது மின்தூக்கி திறப்புவிழாவுக்காகக் கூடிய கூட்டம் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த பழைய பாணி கட்டிடத்தில் புதிதாக மிந்தூக்கியை பொருத்தியிருந்தார்கள். அந்த மின்தூக்கியை மக்களுக்குத் திறந்துவிடும் முன் அதற்கு ஒரு திறப்புவிழா நிகழ்ச்சியை கொண்டாட்டமாக முன்னெடுத்துக்கொண்டிருந்தனர்.
எதிரே இருந்த உணவகத்தில் காலைப் பசியாறை முடித்துவிட்டு தயாராக இருந்தோம். நவீன், ஸ்ரீதர் ரங்கராஜ், பாண்டியன், விஜயலட்சுமி ஆகியோர் கீழே வந்து சேர்ந்தனர். அவர்களும் அதே உணவகத்தில் காலைப் பசியாறையை முடித்துக்கொள்ள அனைவரும் வாடகை மகிழுந்தில் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகச்சாலையை நோக்கி புறப்படத் தயாரானோம். கொழும்பு நகரம் பார்ப்பதற்கு கோலாலம்பூரும் பினாங்கும் ஒன்றிணைத்த நகரமாக தோற்றமளித்தது. இருவழி சாலையும் அதனை ஒட்டியிருந்த இரயில் தண்டவாளத்தையும் அதையடுத்திருந்த இந்தியப் பெருங்கடல் அலைகளால் கரையின் தடுப்புச்சுவரை மோதி மிரட்டிக்கொண்டிருந்தது. மகிழுந்தின் சாரதி திலிப் ஒன்பதரை மணியளவில் எங்களை கொழும்பு செட்டியார் தெருவுக்கு கொண்டுவந்து சேர்த்தார். தமிழர்கள் வாழும் ஒவ்வொரு ஊரிலும் இப்படியாக ஒரு செட்டியார் தெரு இருக்கும்போல என எண்ணிக்கொண்டேன். வாகனம் நிறுத்த இடம் இல்லாத நெருக்கடியான அந்த ஒருவழி சாலையில் மகிழுந்தை விட்டு வேகமாக இறங்கினோம். தெருவில் இறங்கிய இடத்தின் எதிர்புறம் பூபாலசிங்கம் புத்தகச்சாலை மூடியிருந்தபடியே எங்களை வரவேற்றுக்கொண்டிருந்தது. புத்தகச்சாலை இன்னும் திறந்திருக்கவில்லை. அதன் ஊழியர்கள் வெளியே காத்துக்கொண்டிருந்தனர். திறக்கும் நேரம்தான். அவர்களில் ஒருவரிடம் நவீன் பேசினார். ’வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சிக்காக வந்திருப்பதாக கூறினார். அவரும் புரிந்துகொண்டவர் போல நிகழ்ச்சி பதினோரு மணிக்கு ஆரம்பிப்பதாக சொன்னார். மேற்கொண்டு நேரம் இருந்ததால் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அந்நபர் எங்கள் பின்னாலேயே தொடர்ந்து வந்து உங்களில் யார் நவீன் என்று கேட்க நாங்கள் நவீனை கைக்காட்டினோம். நீங்கள் பசியாறிவிட்டீர்களா? இல்லையேல் வாருங்கள் முதலில் பசியாறலாம் என்றார். நாங்கள் பசியாறிவிட்டோம் என்றவுடன் அவர் மீண்டும் திரும்பிவிட்டார். அவர் பூபாலசிங்கம் புத்தகச்சாலையின் பொறுப்பாளர் ஸ்ரீதரசிங் பூபாலசிங்கம் என்பதை தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன்
தெருவிலிருந்த கடைகள் அப்போதுதான் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. வரிசைக்கு ஏற்றாற்போல கடைகள் பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு வரிசையில் நகைக்கடைகள் என்றால் மற்றொரு வரிசையில் வெண்கலச்சிலைகளும் பாத்திரங்களும் விற்பனை செய்யும் கடைகள். இன்னும் சில வரிசைகளில் வெவ்வேறு கடைகள் என செட்டியார் தெரு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அது எனக்கு பினாங்கு மார்க்கெட் ஸ்திரீட்டை நினைவுபடுத்திக்கொண்டிருந்தது. நாங்கள் சில கடைகளை ஏறி இறங்கி இறுதியாக பனைவெல்லம் மட்டும் வாங்கினோம். தயாஜி மட்டும் மாறுதலுக்காக மூக்குத்தியை வாங்கினார். வெயில் கொளுத்தியது. தொண்டைக்கு இதமாக இளநீரை பருகிக்கொண்டிருந்தோம். நவீனும் விஜயலட்சுமியும் புத்தகச்சாலைக்கு திரும்பியிருந்தனர். நாங்களும் புத்தகச்சாலைக்கு திரும்பினோம். புத்தகச்சாலையில் நுழைந்ததும் ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய புதிய மொழிப்பெயர்ப்பு நூலான ஹருகி முரகாமியின் ‘கினோ’ தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு எதிர் பதிப்பகத்தின் வெளியீடு விற்பனையில் இருந்தது. எங்கள் வல்லினம் குடும்பத்தைச் சேர்ந்தவரின் புத்தகம் அங்கே விற்பனையில் இருந்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. புத்தகச்சாலையைச் சேர்ந்தவர் அவர்தான் ஸ்ரீதர் ரங்கராஜ் என்றறிந்ததும் அவரிடம் தன் மகிழ்ச்சியையும் படைப்பு குறித்த கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார். நவீனும் விஜயலட்சுமியும் புத்தகச்சாலையின் பொறுப்பாளரிடம் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர். அவர்களோடு கருப்பு ஜூபாவை அணிந்திருந்தவர் இலக்கியம் குறித்து தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார். அவர் மேமன் கவி என்பதை பிறகு அறிந்துகொண்டேன். பார்ப்பதற்கு வடநாட்டுக்காரரைப் போலவே இருந்தார்.
பூபாலசிங்கம் புத்தகச்சாலையின் உள்ளிருப்பது பூலோகத்தின் உட்பகுதியில் இருப்பது போன்று இருந்தது. விசாரித்ததில் கொழும்பில் வெட்பம் நிலை அதிகமென கூறப்பட்டது. அதிவெட்பம் உடலை வாட்டியது. ஊழியர்களைக் கவனித்தேன். அவர்கள் பழகிவிட்டதாக கூறினர். வல்லினம் நண்பர்கள் புத்தகச்சாலையில் விற்பனைக்கு வைத்திருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தனர். ஸ்ரீதர் எனக்கும் தயாஜிக்கும் வாசிக்க சில முக்கியமான புத்தகங்களைப் பரிந்துரை செய்துகொண்டிருந்தார். அறையினுளிருந்து நவீனும் புத்தகச்சாலையின் பொருப்பாளரும் மேமன் கவியும் வெளியில் வந்தனர். நிகழ்ச்சி ஆரம்பிக்கலாமென புத்தகச்சாலையின் மேல்தளத்திற்கு அழைத்தனர். மேல்தளம் அவர்களது புத்தகக்கிடங்கு. சுற்றிலும் புத்தகங்கள் பொட்டலங்களாக கட்டிவைக்கப்பட்டிருந்தன. நடுவில் துப்பரவு செய்யப்பட்டு மேசையும் நாற்காலியும் போடப்பட்டிருந்தன. மேசையின் மீது வல்லினம் பதிப்புகள் அடுக்கப்பட்டிருந்தன. மேமன் கவி சார்பாக நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கொழும்பை சேர்ந்த இலக்கிய புரவலர் ஹாஸிம் உமர் அழைக்கப்பட்டிருந்தார். அவரோடு மேமன் கவியும் நவீனும் எங்களைப் பார்த்தவாறு முன்னுக்கு அமர்ந்திருந்தனர். வல்லினம் நண்பர்களோடு கொழும்பை சேர்ந்த கே.எஸ்.சிவகுமாரன், கலைச்செல்வன் மற்றும் புத்தகச்சாலையைச் சேர்ந்த ஊழியர்களும் நிகழ்ச்சியில் பங்குகொண்டனர்.
மேமன் கவி நிகழ்ச்சியை வழிநடத்தினார். வல்லினம் இணைய இதழின் ஆலோசகரும் எழுத்தாளருமான நவீன் குறித்து சபையில் அறிமுகம் செய்து வைத்தார். அதுபோல ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்துவைத்தபின் தொடந்து பேசினார். 2011 இல் நவீன் இலங்கைக்கு வந்தபோது அங்குள்ள எழுத்தாளர்கள் சிலரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற சில நூல்களின் மூலமாக மலேசிய தமிழ் இலக்கியம் தமக்கு அறிமுகமானதாக தெரிவித்தார். அதில் இரண்டு புத்தகங்களை தாம் வாசித்திருப்பதாக கூறியவர் அதைத் தொடர்ந்து இலங்கைக்கும் மலேசியாவுக்குமான இலக்கிய அறிமுகம் அவ்வளவாக நிகழவில்லை என வருத்தம் கொண்டார். ஆனாலும் ’வல்லினம் 100’ மலேசிய நவீன தமிழ் இலக்கியக் களஞ்சியத்தின் அறிமுகமும் அது சார்ந்த இக்கலந்துரையாடலும் மீண்டும் மலேசிய இலங்கை தமிழ் இலக்கியம் குறித்த தொடர் கருத்துப்பரிமாற்றத்திற்கு நல்லதொரு தொடக்கமாக அமையும் என தாம் நம்புவதாக குறிப்பிட்டார். இனி வந்தவர்கள் பேசட்டும் என ம.நவீனுக்கு வழிவிட்டு அமர்ந்தார்.
நவீன், இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களில் தாம் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் மேமன் கவி என்றார். 2011 ஆம் ஆண்டில் இலங்கைக்கு முதன் முதலாக வந்தபோது தாம் மேமன்கவியை சந்தித்ததாகவும் வல்லினம் வெளியீடு செய்த நான்கு நூல்களை இங்குள்ள எழுத்தாளார்களிடம் கொடுத்துவிட்டு சென்றபோது மேமன் கவி மட்டுமே பா.அ.சிவத்தின் ‘பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது’ மற்றும் தன்னுடைய ‘சர்வம் பிரம்மாஸ்மி’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்பையும் படித்துவிட்டு மிக அக்கறையுடன் அது குறித்து நீண்ட கட்டுரையை எழுதி அனுப்பியதாக கூறினார். தொடர்ந்து பேசிய நவீன், இதுவரை மலேசியாவில் இருந்து தமிழ்நாடு, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் மலேசியத் தமிழ் இலக்கியப் புத்தகங்கள் அங்கு அறிமுகம் செய்யப்படுவதைக் காட்டிலும் விற்பனைக்காகவும் அங்கிருக்கும் கூட்டங்களிடமிருந்து பணம் சேர்ப்பது மாதிரியான ஒரு தோற்றத்தை காட்டுவதாகவே இதுவரையிலும் இருந்திருப்பதாக கூறினார். அது வணிக நோக்கத்தின் காரணமாகவும் அல்லது அரசியல் நோக்கத்தின் காரணமாகவும் அமைந்திருக்கலாம். ஆனால் அச்சூழலிலிருந்து விலகி முழுக்க முழுக்க மலேசியத் தமிழ் இலக்கியத்தை இலங்கையில் சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டுமே இப்பயணம் அமைந்திருப்பாக வல்லினம் குழுவினரின் இலங்கைப் பயணத்தின் நோக்கத்தை விளக்கினார். இந்த அறிமுக நிகழ்ச்சியில் வல்லினம் 100 தொகுப்பை அறிமுகம் செய்தாலும் மலேசியத் தமிழ் இலக்கியத்தை வல்லினம் 100 மூலமாக அறிமுகம் செய்வதே பிரதான நோக்கம் என்றார். அதன் காரணமாகவே மலேசியாவில் வெவ்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் வல்லினம் குழுவினர் விஜயலட்சுமி, அ.பாண்டியன், ஸ்ரீதர் ரங்கராஜ், இரா.சரவண தீர்த்தா, தயாஜி மற்றும் கங்காதுரை(நான்) ஆகியோர் இப்பயணங்களில் இணைந்ததாக குறிப்பிட்ட நவீன் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தபோது சபையின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியது. அதுவரை நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பலகாரங்களைச் சுவைத்துக்கொண்டே நவீனது பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்தோம்.
நவீனும் விஜயலட்சுமியும் சேர்ந்து வல்லினம் 100 புத்தகத்தை அறிமுகம் செய்து வைக்க அதை இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு நவீன் சில வேண்டுகோள்களை முன்வைத்தார். வல்லினம் 100 மலேசியத் தமிழ் நவீன இலக்கியக் களஞ்சியம் புத்தகச்சாலையில் விற்பனைக்கு வைக்கும்படி பூபாலச்சிங்கம் புத்தகச்சாலையின் பொறுப்பாளரைக் கேட்டுக்கொண்டார். அதுபோல புரவலர் ஹாஸிம் உமரிடம் இந்த இலக்கிய உறவு தொடர்ந்து நீடிக்க இலங்கையின் முக்கியப் படைப்பாளிகளை மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான செலவீனங்களை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன் வாயிலாக வல்லினத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இலக்கியக் கலந்துரையாடலையும் தொடர்பையும் வளர்க்க முடியுமென நம்பிக்கை தெரிவித்துவிட்டு தன் உரையை முடித்துக்கொண்டார்.
நவீன் எங்களை அறிமுகம் செய்த காரணத்தினால் மேமன்கவி ஒவ்வொருவரையும் அவர்களது இலக்கிய செயல்பாடுகளைக் குறித்து சிறிய அறிமுகம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். எங்கள் எல்லோருக்கும் மூத்தவர் என்பதால் அ.பாண்டியன் முதலாவதாக ஆரம்பித்தார். வல்லினத்தின் பொறுப்பாசிரியராகவும் தொடர்ந்து வல்லினத்தில் கட்டுரைகளை எழுதி வருவதாக கூறிய அ.பாண்டியன் மலாய் இலக்கியம் குறித்து வல்லினம் பதிப்பகம் வாயிலாக ‘அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ கட்டுரை நூல் வெளியீடு கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டவர் மலாய் இலக்கியம் குறித்தும் சிறிது பகிர்ந்து கொண்டார். மலேசியாவின் மும்மொழி இலக்கியங்களில் தேசிய அங்கீகாரம் பெற்ற இலக்கியமாக மலாய் இலக்கியம் திகழ்வதாக குறிப்பிட்டார். அதோடு மலாய் இலக்கியத்தில் சொற்பமான இந்தியப் படைப்பாளிகளும் ஈடுபட்டு வருவதாக கூறியதோடு மலாய் இலக்கியத்தில் தீவிர இலக்கியப் போக்கு குறைவுதான் என்றாலும் யதார்த்தவியல் படைப்புகளும் சில காத்திரமான அரசியல் படைப்புகளும் படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அவரைத் தொடர்ந்து மொழிப்பெயர்ப்பாளர் ஸ்ரீதர் ரங்கராஜ் தாம் தமிழ்நாடு மதுரையைச் சார்ந்தவர் எனவும் மலேசியாவில் திருமணமாகி அங்கேயே நான்காண்டு காலமாக வசித்து வருவதாகவும் கூறினார். வல்லினத்தில் தொடர்ந்து படைப்புகளைக் கொடுத்துக்கொண்டு வருவதாகவும், இதுவரை ஹருகி முரகாமியின் ’நீர்கோழி’ சிறுகதைத் தொகுப்பு மொழிப்பெயர்ப்பும், ’கினோ’ தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பும், சமர் யாஸ்பெக்கின் பயணம்-சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி மொழிபெயர்ப்பும் ஆகியவை எதிர் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளதாகவும் கூறினார். தற்போது கார்லோஸ் ஃபுயந்தேஸ் நாவலின் மொழிப்பெயர்ப்பு அச்சில் இருப்பதாகவும், மற்றுமொரு நாவலை மொழிப்பெயர்த்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
அவரையடுத்து நூலகவியலாளரும் எழுத்தாளருமான விஜயலெட்சுமி தன்னை அறிமுகம் செய்துகொண்டு இலங்கை புறப்பாடுக்கு முன்னதாக மலேசியாவில் நடைப்பெற்று முடிந்த சடக்கு தளம் அறிமுக நிகழ்ச்சியைக் குறித்து பேசினார். சடக்கு தளம் குறித்து அதன் முக்கியத்துவத்தையும் தேவையும் அதற்கான உழைப்பையும் விளக்கிப் பேசினார். அதோடு வல்லினத்தின் துணை நிறுவனமான யாழ் பதிப்பகத்தின் பொறுப்பாளராக தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்குத் தேவையான பயிற்சி புத்தகங்களை வெளியீடு செய்வதாக கூறினார். வல்லினத்தில் தொடர்ந்து படைப்புகளைப் பங்களிப்பு செய்து வருவதாகவும், வல்லினம் பதிப்பகம் வாயிலாக ‘துணைக்கால்’ நூல் வெளியீடு கண்டிருப்பதாக கூறினார்.
விஜயலட்சுமியைத் தொடர்ந்து நான் அழைக்கப்பட்டேன். மலேசியாவின் தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் எனவும் வல்லினத்தில் தொடர்ந்து சீன இலக்கியமும் சீன சமூகம் குறித்தும் அவ்வப்போது ஆய்வு அடிப்படையிலான கட்டுரைகளை எழுதி வருவதாக கூறினேன். சீன இலக்கியம் குறித்து முதற்கட்ட ஆய்வு மட்டுமே செய்துவருவதால் சில அடிப்படை விடயங்களை மட்டுமே கண்டறிய முடிந்ததாக கூறினேன். அதைக் குறித்து கொஞ்சம் பகிர்ந்தும் கொண்டேன். மும்மொழி இலக்கியம் கொண்ட மலேசியாவில் மலாய் இலக்கியம் மட்டுமே தேசிய இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்டாலும் மலேசியச் சீனர்கள் தாங்கள் படைக்கும் படைப்புகளைத் தேசிய இலக்கியத்தின் ஒரு பகுதி என்ற கருத்தியலின் படி சீனர் மலேசிய இலக்கியம் என்றே வலியுறுத்துவதாக கூறினேன். ஒப்பீட்டளவில் மலேசியச் சீன இலக்கியம் மலாய் மற்றும் தமிழ் இலக்கியம் காட்டிலும் பின்தங்கியிருப்பதாக கூறினேன். மலேசியச் சீன இலக்கியத்தில் யதார்த்தவியல், நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவம் போன்ற படைப்புகள் படைக்கப்பட்டுள்ளன எனக் கூறினேன். அதோடு மலேசியாவில் படைக்கப்படும் சீன இலக்கியம் முழுக்க முழுக்க சீன மொழியிலேயே படைக்கப்படுவதால் அதை நேரடியாக வாசிப்பதற்கான சிக்கல் இருப்பதாகவும் அதன் பொருட்டு நமக்கு மொழிப்பெயர்ப்பு தேவைப்படுவதாகவும் கூறி எனது அறிமுகத்தை முடித்துக்கொண்டேன்.
என்னைத் தொடர்ந்து பேசிய இரா.சரவண தீர்த்தா தாம் ஒரு பத்திரிக்கையாளராக மலேசிய நாட்டு பத்திரிக்கை துறையில் சந்தித்த சில அவலங்களைப் பகிர்ந்துகொண்டார். பத்திரிக்கைகள் அறமின்றி பணத்திற்கும் அதிகாரத்திற்கும் எப்படி விலை போகின்றன என்பதை அறச்சீற்றத்துடன் பேசிக்கொண்டிருந்தார். தாம் எழுதிய சூடான அரசியல் கட்டுரைகள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க மறுத்தது குறித்தும் சபையில் பகிர்ந்துகொண்டார். தற்சமயம் தனது நண்பரின் உதவியோடு தமிழ்முரசு இணையப்பத்திரிக்கையை நடத்திக்கொண்டிருப்பதாகவும் அதில் தொடர்ந்து சுடச் சுட அரசியல் கட்டுரைகளை எழுதி வருவதாகவும் குறிப்பிட்ட அவர் அதன் காரணமாக தமது இணையத்தளம் இரண்டு வாரங்களாக முடக்கப்பட்டதை குறித்தும் பகிர்ந்துகொண்டார். வல்லினத்தில் தொடர்ந்து உலக சினிமா குறித்து கட்டுரைகளை எழுதி வருவதாக கூறிவிட்டு தயாஜிக்கு வழிவிட்டு அமர்ந்தார்.
தயாஜி தன்னை மிக எளிமையாக அடையாளப்படுத்திக்கொண்டார். தாம் ஓர் புனைவு எழுத்தாளன் எனவும், வல்லினம் பதிப்பகம் மூலமாக தனது ’ஒலி புகா இடங்களின் ஒளி’ எனும் நூல் வெளியீடு கண்டுள்ளதாகவும் கூறினார். வல்லினத்தில் தொடர்ந்து படைப்புகளை எழுதி வருவதோடு பதிப்பகத்தில் விற்பனைப் பிரிவின் பொறுப்பாளராக இருப்பதாக கூறி தன் அறிமுகத்தை முடித்துக்கொண்டார்.
இறுதியாக நன்றியுரை ஆற்றும்படி பூபாலசிங்கம் புத்தகச்சாலையின் பொறுப்பாளர் ஸ்ரீதரசிங் பூபாலசிங்கத்தை மேமன் கவி அழைத்தார். அப்போதுதான் அவர் பூபாலசிங்கத்தின் மகன் என தெரிந்துகொண்டேன். தமது நன்றியுரையில் வல்லினம் 100 அறிமுகத்தை ஒரு சந்திப்பு கூட்டமாக அமைந்துவிட்டதை எண்ணி வருந்தினார். வந்தவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவர்கள் என்பதை இப்போதுதான் அறிந்ததாகவும் எனவே மீண்டும் ஒருமுறை வல்லினம் குழுவினரை இலங்கை அழைத்து ஒரு பெரிய இலக்கியக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார். ஸ்ரீதரசிங் பேசுகையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பதிப்பகங்கள் இலங்கையின் போர்காலத்தின் போது இங்குள்ள படைப்பாளிகளை வைத்து எப்படியெல்லாம் வியாபாரம் செய்தார்கள் என்பதை வேதனையுடன் குறிப்பிட்டார். விகடனின் முதல் பக்கத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களது படத்தை பிரசுரம் செய்து விறபனைக்கு அனுப்பியபோது விகடனின் ஆசிரியர் தாம் என நினைத்து இலங்கை அரசாங்கத்தால் 22 நாட்கள் சிறையில் தள்ளப்பட்ட தகவலையும் சிரித்துக்கொண்டே சபையில் பகிர்ந்துகொண்டார். இறுதியாக இதற்கு முன் இதுபோன்ற ஒரு மலேசிய இலக்கியம் சார்ந்த சந்திப்பு இங்கு நடைபெற்றதில்லை எனக் கூறிய ஸ்ரீதரசிங் எங்களை எல்லோரையும் ஒரே நேரத்தில் சந்தித்ததை எண்ணி பெருமகிழ்ச்சி கொள்வதாக கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இறுதியாக அனைவரும் குழுப்படம் பிடித்துவிட்டு கீழ்தளத்திற்கு இறங்கினோம். விஜயலட்சுமி மலாயா பல்கலைக்கழக தமிழ் நூலகத்திற்கு தேவையான தரமான ஈழத்து நூல்களை வாங்குவதில் முனைப்பு காட்டினார். அவருக்கு உதவியாக மேமன் கவியும் ஸ்ரீதரசிங்கும் பல நூல்களைத் தேடிக்கொடுத்து உதவினர். நண்பர்கள் நாங்களும் எங்களுக்கு தேவையான சில புத்தகங்களை வாங்கிக் கொண்டோம். சிங்கள இலக்கியம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக மேமன் கவி கூறியிருந்தார். ஆனாலும் அவை அங்கு கைவசம் இல்லை.
புத்தகங்களைக் கட்டிக்கொண்டு புறப்படத் தயாரானோம். பரபரப்பான செட்டியார் தெருவில் மகிழுந்து புத்தகச்சாலை முன் வந்து நின்றது. மேமன் கவியும் எங்களுடன் இணைந்துகொண்டார். இலங்கைப் பயணம் ஞாபகார்த்தமாக இருக்க வேண்டி சில நினைவுச்சின்னம் பொருட்களை வாங்க எண்ணம் கொண்டோம். மேமன் கவி கடையை காட்டிவிட்டு விடைபெற்றுக்கொண்டார். வேண்டியதை வாங்கிக்கொண்டு தரமான உணவகத்தில் வயிற்றுக்கு நிறைவான சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மீண்டும் கொழும்பு தமிழ்ச்சங்கம் வந்து சேர்ந்தோம். மின்தூக்கி நோக்கி சென்றேன். அது இன்னும் பயன்பாட்டுக்கு உட்படுத்தவில்லை. நானும் தயாஜியும் ஏனென்று கேட்டேன். மாலையில் மின்தூக்கியை நிறுவியதற்காக நிறுவனர் தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை முதற்கொண்டு மின்தூக்கி பயன்படுத்தலாம் என்றார்கள். அன்றிரவு மலேசியாவுக்கு விமானம் ஏறப்போகும் எங்களுக்கு மீண்டும் ஒருமுறை அதிர்ச்சி முகத்தைக் கவ்வியிருந்தது. கொழும்பு தமிழ்ச்சங்கம் வாசலுக்கு வந்தோம். பதாகை ஒட்டப்பட்டிருந்தது. கம்பராமாயணம் விழா நான்கு நாள் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட இருந்தது. மலேசியாவிலிருந்து ஒரு துணையமைச்சர் வருவதாக தகவல் இருந்தது. கண்டி கதிர்காம முருகனை நினைத்துக்கொண்டு மீண்டும் நான்கு மாடி ஏறி விமான நிலையம் புறப்பட தயாரானோம்.