கவிஞர் கருணாகரனுடன் ஒரு நாள்

20இலங்கை பயணத்தின் மூன்றாம் நாள் திரிகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் கவிஞர் கருணாகரனைச் சந்திப்பதாக நவீன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வழியில் பல வரலாற்றுத் தடங்களையும் பார்த்துக் கொண்டு சென்றதால் நேரம் போதவில்லை. முல்லைத்தீவு இறுதிப்போரின் சிதிலங்களும், அவற்றுக்கு எங்கள் பயணத்தில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்ட ஓட்டுனர் நண்பர் திலிப் கூறிய விளக்கங்களும் மனதை கனமாக்கின. வீரமரணங்களின் பெருமிதங்களின் பின்னால் மறைந்துகிடக்கும் அழிவுகளையும் அவலங்களையும் நேராக காணும் துன்பியல் நாளாக அன்று முடிந்தது.  இரவு ஆகிவிட்டபடியால் கருணாகரனைச் சந்திப்பதைத் தள்ளிப் போட வேண்டியதாகியது.

மறுநாள் யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பிற்கு கவிஞர் கருணாகரன் வந்திருந்து உரையாற்றினார்.  உரையில் “போர்கால நினைவுகளை தாம் வற்புறுத்தி ஞாபகத்தில் இருந்து அழித்துக் கொண்டிருப்பதாக” அவர் கூறியதன் உண்மை பொருள் அறிய எனக்கு அடுத்த நாள் சந்திப்புதான் உதவியது. அதே உரையில் அவர், மலேசியாவில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழர்களின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய முக்கியமான சந்தேகத்தை எழுப்பியதும், பின் அது சர்ச்சையுடன் விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சந்திப்பு முடிந்து சற்றுநேரம் அவருடன் உரையாடிவிட்டு விடைபெற்றோம். அன்றைய நிகழ்ச்சி பற்றி மட்டுமே அப்போது அவருடன் பேச முடிந்தது. ஆயினும் மறுநாள் காலை அவர் வீட்டிற்கு வரச்சொல்லி விடைகொடுத்தார்.

அ.பா

மறுநாள் கொழும்பு கிளம்புவதற்கு முன்னதாக கருணாகரனைச் சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றோம். பசுமையான சூழலில் அமைந்த கச்சிதமான வீடு அது. பண்ணை வீடு போல் இருக்கிறது என்று நான் மெல்லச் சொன்னேன். நவீன் உடனே கவிஞர் கருணாகரனிடம், ‘சார் நீங்கள் ஒரு பண்ணையார் போல் வாழ்கிறீர்கள்” என்று நகைச்சுவையாக சொன்னார். ஆனால், கருணாகரன் அதற்கு “எங்கள் ஊரில் இருந்த பண்ணை வீடு போரில் முற்றாக அழிந்து விட்டது. இப்போது அந்த இடமே காலியாக கிடக்கிறது. இது போருக்கு பிறகு கட்டியது” என்று சிரித்தபடி கூறினாலும் அந்த சொற்களில் புதைந்துள்ள வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது.  அவர் மனைவி கல்லூரி ஆசிரியர். அன்று பணிக்கு சென்றுவிட்டிருந்தார். அவர்களின் மகன் (பல்கலைக்கழக மாணவர்) வீட்டில் இருந்தார். எங்கள் உரையாடலில் பங்கேற்காவிட்டாலும் கடைசிவரை அங்கிருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

இலங்கை கலவரங்கள், விடுதலைப்புலிகள், பிரபாகரன், முள்ளிவாய்க்கால் போர் குற்றங்கள், மகிந்தா ராஜ பட்ஷே, போன்றவை எனக்கு புதிய தகவல்கள் அல்ல. என் பதின்ம வயதில் இருந்து இலங்கை இனக்கலவரங்கள், ஆயுதப்போராட்டங்கள் பற்றிய செய்திகளை ஊடகங்களில் தொடர்ந்து படித்ததால் சேர்த்த தகவல்கள் அவை. பெரும்பாலும் இன உணர்வை அடிப்படையாக கொண்ட விருவிருப்பான செய்திகள். விடுதலைப் புலிகளின் சாகசங்களும் ரஜீவ் காந்தி கொலையும் மர்ம படக் கதைபோல் இதழ்களில் வெளிவந்து அனைவரையும் வாசிக்கச் செய்திருந்தன. அந்த செய்திகளின் அடிப்படையிலும் இயல்பான இனமான உணர்வுகளாலும் உந்தப்பட்டு விடுதலைப் போரில் என் தரப்பு ஒன்றை வரித்துக் கொண்ட அரசியல் மட்டுமே என் புரிதல். ஆனால், போர்களத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய மனிதர்களோடும் அவர்களின் அனுபவங்களோடும் நேரடியாக பேசியது கிடையாது.

மலேசியாவில் ஈழப் பிரச்சனை தமிழினப்பிரச்சனையாகவே இன்றும் பேசப்படுவதோடு பிரபாகரனை தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் பலரை நான் சந்தித்து உள்ளேன். தமிழக அரசியலின் மையமாக ஈழப்பிரச்சனையை மாற்றிய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கும் மலேசியாவில் மதிப்பிருக்கிறது.  அதைவிட பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் நவீனகால தமிழின எழுச்சியின் வடிவங்களாக நிறுவுவதில் முழுவீச்சில் செயல்படும் சீமான் தரப்புக்கும் மலேசியாவில் சிறப்பான ஆதரவு உண்டு.  90ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பொதுபுத்தி சந்தைக்கு ஏற்ப முன்னெடுத்த ஊடக அரசியல் முள்ளிவாய்க்கால் இறுதி அழிவுக்குப் பின் இப்போது சற்றே ஓய்ந்திருக்கிறது.

01நாங்கள் கவிஞர் கருணாகரனின் வீட்டுக்குள் சென்று அமர்ந்ததுமே அவராகவே, இறுதிப் போரின் கொடூரத்தை விவரிக்கத் தொடங்கினார். உடுத்தியிருந்த ஒன்றை உடையோடு உயிர்பிழைக்க ஓடிய நினைவுகளைச் சொன்னார். இப்போது அவர் வீட்டில் இருக்கும் கோப்பையும் தட்டும் கூட போருக்குப் பின்னர் சேர்த்தவைதான் என்று கூறினார். அனைத்தையும் இழந்த மக்களாகவே தாங்கள் போருக்குப் பின் இருந்ததைக் கூறினார். அதோடு போர் அகதிகளுக்கு உதவுவதாக விளம்பரப்படுத்திக் கொண்டு இந்திய அரசியல் தலைவர்கள் (குறிப்பாக தி.மு.க தலைவர் கருணாநிதி) அனுப்பிய படுமோசமான தரமற்ற பொருட்களைப் பற்றியும் கூறினார்.

போர் விமானங்கனின் செல் தாக்குதல் தரும் அதே பீதியையும் மன உலைச்சளையும் மக்களை வேவு பார்க்க அனுப்பப்படும் ஆளில்லா விமானங்களின் (வண்டு என்று அதை பேச்சு வழக்கில் குறிப்பிடுவர் என்றார்) சத்தம் கொடுக்கும் என்று கூறினார். போருக்குப் பின்னும் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த காலத்திலும் அந்த ‘வண்டுகளி’ கொடும் ரீங்காரம் காதுகளில் கேட்டுகொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

போரின் கொடுமையை விவரிக்க ‘போர் என்பது மனிதர்களை இரண்டாக கிழிப்பது’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் போரின் கொடுமையை அனுபவித்த ஒருவரல்லாது மற்றவர்களால் சொல்ல முடியாதது. வரலாற்றின் எந்தப் பக்கத்தை திருப்பினாலும் அதில் போரிடும் இரண்டு தரப்புகளைப் பற்றிய சித்தரிப்பும் கவனிப்பும் மட்டுமே இருக்கும்; மக்களைப் பற்றிய சித்தரிப்புகள் ஒன்றும் இருக்காது. அவர்களின் அவலங்களை வரலாறு சேமித்து வைப்பதில்லை. அந்த அவலங்களை இலக்கியங்களே சேமித்து வைக்கின்றன.   ஒரு முன்னால் போராளியாக அவரால் போர் சம்பவங்களையும் சூழல்களையும் விரிவாக பேசமுடிந்தது. அதே நேரம் ஒரு கவிஞராகவும் இலக்கியவாதியாகவும் மானுட சிந்தனையுடன் தன் கருத்துகளை முன்வைக்க முடிந்தது எங்களுக்கு பயனாக இருந்தது.

ஈழப் போர் என்பது ஒரு இனப்படுகொலையா? என்ற எனது கேள்விக்கு அவர் வரலாற்றுப் பின்புலத்துடன் மிக விரிவான விளக்கங்களைக் கொடுத்து பேசினார். ஒரு அரசை எதிர்க்கும் தரப்பை அந்த அரசு இன, மொழி, மத பேதமற்று ஒற்றைப்படையாக தன் எதிரியாகவே கருதும். அந்த எதிரியை ஒழித்துக் கட்ட எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லும். அது வன்முறையையும் அழிவுகளையும் செய்து தன் நிலையை தக்கவைத்துக் கொள்ள கொஞ்சமும் தயங்காது. இது உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் பொதுவான கொள்கை.

இதுவே இலங்கையிலும் நிகழ்ந்தது. தமிழர்கள் என்று இல்லாமல் இஸ்லாமியர், சிங்களவர் என்று யாராக இருந்தாலும் அவர்கள் அரசை எதிர்த்தால் இதுவே நடந்திருக்கும். உதாரணமாக, 1971ஆம் ஆண்டிலும் 92ஆம் ஆண்டிலும் ஆட்சியில் இருந்த இலங்கை அரசுக்கு எதிராக கிளர்ந்த இடதுசாரி கட்சிகளை, அவை சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் பல்வேறு வன்முறைகளின் வழி லட்சக்கணக்கான இடதுசாரிகள் கொள்ளப்பட்ட வரலாற்றை அவர் விளக்கினார். இடதுசாரி அமைப்பின் கிளர்ச்சிகளை ஒடுக்க அரசு ஈவு இரக்கம் அற்றநிலையில்தான் செயல்பட்டுள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது. JVP அமைப்பை ஒடுக்கவும் அதன் உறுப்பினர்களுக்கு கடும் மன உலைச்சலைக் கொடுக்கவும் மேற்கொண்ட வதைகளும் தண்டனைகளும் கோரமாவை. சந்தேக நபர்கள், காதுகளில் நீண்ட பின்களை அழுத்தி இறக்கி கொல்லப்பட்டனர். குழு போராட்டங்களின் போது, வீட்டுக்குள் நுழைந்து இளைஞர்களை இழுத்துவந்து கார் டயர்களை கழுத்தில் மாட்டி உயிருடன் எறியூட்டினர். இன அடிப்படையில் இந்த கொலைகள் அனைத்தும் சிங்களத்தவர்கள் சிங்களத்தவர்களுக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டவை. அவர்கள் ஒரே இனமாக இருந்ததால் அண்ணன் தம்பியையும், மகன் தந்தையையும் கொன்று குவித்த கொடுமை நிகழ்ந்திருக்கும்.

02

மறுபக்கம், தமிழ்ப் போராளி குழுக்கள் தங்களுக்குள் செய்து கொண்ட கொலைகளையும் மறைக்க முடியாது. போராளி குழுக்களில் ஏற்பட்ட உட்பூசல்களாலும் அதிகார போராட்டங்களாலும் பலர் கொள்ளப்பட்டுள்ளனர். இதுவும் ஒரே இனத்துக்குள் நடந்த கொலைகள்தான். ஆகவே ஈழப்போரை இனப்போர் என்று மட்டும் கூறுவது முழுமையான பார்வையாகாது.

விடுதலைப்புலிகள் இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் நிலத்தாலும் வேறுபட்டவர்கள் என்பதால் இந்த அழிவு இனப்படுகொலையாக கட்டமைக்கப்படுகிறது. இலங்கை இடது சாரிகள் கொல்லப்பட்டதற்கும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதற்கும் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் அரசு பயன்படுத்திய ஆயுதங்கள்தான். முன்னதை பல்வேறு குழுக்களைத் தூண்டிவிட்டு வால்வீச்சுகளின் வழி நிகழ்த்தியது. அதோடு இடதுசாரிகளும் சுடும் ஆயுதங்களைக் கையில் எடுக்கவில்லை. துணிந்து தனி நிர்வாகம் அமைத்து அரசு அதிகாரத்துக்கு  சவால் விட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலைப் பல உலக நாடுகளின் உதவியுடன் போராக முன்னெடுத்தது இலங்கை அரசு. அதை தயவு தாட்சண்யம் இன்றி நடத்தி முடிக்க இந்தியா, சீனா, பாகீஸ்தான், அமெரிக்கா என்று பல உலக நாடுகளோடு கூட்டு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு செய்து முடித்தது.   இந்த போரில் பங்கேற்ற பல நாடுகளும் மகிந்தா ராஜ பட்ஷேவை போரில் ஒரு சிப்பாயாக நிறுத்திக் கொண்டு பின்னிருந்து இயக்கும் பணியை சிறப்பாக செய்து  முடித்தன.  ஆகவே இலங்கை மக்களிடையே புராணகாலம் தொட்டு தமிழ்-சிங்கள இனவிரோத மனப்பான்மை ஓரளவு இருந்தாலும், இலங்கை யுத்தம் என்பது பேரினவாத தமிழின அழிப்பு என்பதை விட அரசுக்கு எதிராக நின்ற சிறுபான்மை ஆயுத தரப்பை அழிக்கும் செயல் என்றே சொல்லமுடியும் என்று அவர் விளக்கினார்.

அரசுக்கு சவால் விட்டு தனியாட்சி நிர்வாகத்தை நடத்திக் காட்டிய விடுதலைப்புலிகள், பின்னர் செய்த சில அரசியல் பிழைகளாலும், உலக அரசியல் போக்கு குறித்த தவறான கண்ணோட்டங்களாலும் (குறிப்பாக உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் தலைதூக்கிய பிறகு) உலக நாடுகளோடு கைகோர்த்துக் கொண்ட இலங்கை அரசால் தோற்கடிக்கப்பட்டனர் என்கிற கசப்பான உண்மையை நாம் ஏற்கவேண்டி இருக்கிறது.

போருக்குப் பிறகான வாழ்க்கை மக்களுக்கு  இயல்பானதாக மாறி வருவதாகவே நாங்கள் சந்தித்த பலரும் சொல்லினர். புறவயமாக பார்க்கும் போது இந்த மண்ணில் பத்து ஆண்டுகளுக்கு முன் கடுமையான போரும் வன்கொடுமைகளும் நிகழ்ந்தன என்று கூற முடியாதபடி மக்கள் சகஜமாக பழகுவதாக தெரிகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை என்றே சொல்ல வேண்டும். உடலில் விழுந்த அடிகளையும் நெஞ்சில் விழுந்த காயங்களையும் மறதியின் வழி மறைத்துக் கொண்டு வாழ மக்கள் பழகிக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை. இது பற்றி இரண்டு உதாரணங்களைக் கூற முடியும். முதலாவதாக கருணாகரன். மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளை மறக்க வேண்டிய அவசியத்தைக் கூறினார். நகரில் ஒரு ராணுவ சிப்பாயின் பக்கத்தில் முடமாக நிற்கும் பெண் குழந்தையைப் பார்க்கும்போது, அந்த குழந்தை ஏன் அப்படி ஆனது என்பதன் காரணம் உடனே சிந்தைக்கு எட்டும் போது அந்த சிப்பாயின் முகத்தில் பலமாக குத்த எண்ணம் எழுவது இயல்பு. ஆனால் அப்படி செய்வதால் ஏற்படும் விளைவுகள் சமுதாயத்திற்கே ஆபத்தாக முடியலாம். ஆகவே இந்த அவமானத்தையும், அவலத்தையும் கடந்து செல்ல பழைய நினைவுகளை மெல்ல மெல்ல அழிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.  இரண்டாவது உதாரணமாக, நகரில் சாலை ஓரம் கூடாரம் அமைத்து ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் இறுதிப் போரில் காணாமல் போனவர்களுக்காக நீதிக் கேட்டு போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்களைச் சுட்டவேண்டும்.

ஆயினும், இலங்கைத் தமிழர்கள் இப்போது போரை வெறுக்கின்றனர் என்பது தெளிவாக புரிகின்றது. போர்காலத்தில் அங்கு வாழ்ந்து தினம் தினம் மரணங்களைக் கண்ட மக்களின் நேர்மையான எண்ணம் அது. இதில் பொது மக்கள் என்றோ புலிகள் என்றோ பிரித்துப் பார்க்கத் தேவை இல்லை. வலியும் துயரும் எல்லாருக்கும் பொதுதான். ஆகவே முன்னால் போராளிகள் இப்போது போரை வெறுத்து கருத்திடுவதும், ஆயுத போராட்டமே பிழைதானோ என்று சிந்திப்பதும் சிந்தனையின் பரிணாமங்களே. மாறாக, போர் காட்சிகளை ஊடகங்களில் மட்டுமே பார்த்துப் பழகிய வெளிநாட்டு தமிழர்கள் அவர்களை துரோகிகள் என்று சித்தரிப்பதும் தூற்றுவதும் சுயநலத்தின் உச்சம்.

தொடர்ந்து பிரபாகரனின் குடும்பம் பற்றியும் அவரின் மகன் பாலசந்திரன் பற்றியும் பேச்சு வளர்ந்தது. கருணாகரனின் பேச்சில் அவர், பிரபாகரனின் ஆளுமையை வியப்பதையே காணமுடிந்தது. தனிப்பட்ட முறையில் அவர் பிரபாகரனை ஒரு சொல்லும் குறைத்துச் சொல்லாததும் குறிப்பிடத் தக்கது. முன்பு ஒரு நேர்காணலில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் “எனது சமாதான திட்டங்களை அந்த ஆள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது” என்று சொல்லியிருந்தார். ஈழ போரின் விளைவுகளை நேரடியாக அனுபவித்திருந்தாலும் கருணாகரன் இது போன்ற வார்த்தைகளில் யாரையும் விமர்சிக்காமல் முற்றிலும் அறிவுத்தளத்தில் இருந்தே தன் கருத்துகளை முன்வைத்துப் பேசினார். ஆகவே, பிரபாகரன் மேல் வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி அவரின் நிர்வாக திறமையின் மேல் கொண்ட மரியாதையாகவே அதை கருத முடிந்தது. அந்த உரையாடலில் பாலசந்திரனின் மரணம் பற்றிய பேச்சை அவர் தவிர்ப்பது வெளிப்படையாக தெரிந்து. ஆனால் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அந்த மெளனம் நவீனின் கேள்வியால் கலைக்கப்பட்டது.

பிறகு போர்காலத்தில் புலிகள் தரப்பும் ராணுவ தரப்பும் மக்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் பற்றியும், பாஸ் பயன்பாடு பற்றியும், நடைமுறை சிக்கல்கள் பற்றியும் புலிப்படைக்கு ஆள்பிடிக்கும் செயல் பற்றியும் விளக்கிப் பேசினார். அப்போது இறுதி போரில் போராளியாக இருந்த கருணாகரனின் நண்பர் தமிழ்ச்செல்வமும் வந்து கலந்துரையாடலில் கலந்துகொண்டார். தனது சொந்த அனுபவங்களையும் அவர் எங்களோடு பகிர்ந்து கொண்டார்.
‘புலிகள் பொதுமக்களைப் பிணையாக வைத்துக் கொண்டனரா?’ என்று நவீன் கேட்ட கேள்விக்கு‘அது புலிகளின் திட்டம் அல்ல, ஆனால் மக்களைப் போரில் ஈடுபடுத்துவதை தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை’ என்று கூறினார்.  நான் முதல் நாள் முள்ளிவாய்க்காலில் சந்தித்த பெண் ‘ புலிகள் எங்களை போகச் சொல்லி விட்டாலும் கண்ணி வெடிகள் தந்த பயத்தால் எங்களால் சுலபமாக செல்ல முடியவில்லை என்று கூறியதை ஞாபகப்படுத்திக் கொண்டேன்.

நாங்கள் முந்தைய நாள் பயணத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடந்த இடங்களுக்குச் சென்றிருந்தோம். விமானத் தாக்குதல்களுக்கும் குண்டு வீச்சிற்கும் இலக்கான வீடுகளின் சிதைவுகளைக் கண்டது மறக்க முடியாத காட்சிகளானது. அப்போது, குண்டுவீச்சில் முற்றாக சிதைந்த தன் பழைய வீட்டுக்குப் பக்கத்தில், தொண்டூழிய அமைப்பின் உதவியுடன் புதிய வீட்டை கட்டிக் கொண்டு குடிவந்திருக்கும் ஒரு குடும்பத் தலைவியை எதேட்சையாக சந்தித்தோம். அவரது போர் அனுபவங்கள் மயிர்க்குச்செறிய வைக்கும் படி இருந்தன. சற்றே மிரண்ட விழிகளுடன்தான் அவர் எங்களுடன் பேசினார். படம் பிடிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் எந்த அலட்டலும் இல்லாமல் ‘செல்’ தாக்குதலின் போது பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த தன் தாய் தலை துண்டாகி மாண்ட சம்பவத்தை  ஒரு நாளிதழ் செய்திபோல அவரால் சொல்ல முடிந்தது. முடிவற்ற மரணங்களைக் கண்டு சலித்த மனம் படைத்த ஒருத்தியாக அவர் அப்போது எங்கள் முன் நின்றார்.   அவரிடம் போர்ச்சூழலில் இருந்து ஏன் வெளியேறாமல் இருந்தீர்கள் என்ற கேள்விக்கே அவர் கண்ணி வெடிகளின் அச்சுறுத்தலைக் கூறினார்.

கருணாகரன் தனது பேச்சை இலக்கியம் பற்றி தொடங்கும் முன்னதாக நான் இரண்டு சந்தேகங்களை முன்வைத்தேன். கண்டியில் சில வாரங்களுக்கு முன் இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்களவர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறையின் நிலைப்பற்றி கேட்டேன். அதற்கு இப்போது நாட்டில் மிக இக்கட்டான நிலையில் இருப்பவர்கள் முஸ்லீம்களே என்று கூறினார். தங்களைத் தமிழர்களிடமிருந்து பிரித்து இஸ்லாமியர்கள் என்ற தனி அடையாளத்தின் வழி சிங்கள அரசுடன் முன்பு நட்பு பாராட்டியவர்கள் இன்று சிங்கள பெளத்தர்களால் அச்சுறுத்தப்படுவதால் அவர்களின் நிலை இக்கட்டாகி இருப்பதை நான் புரிந்து கொண்டேன்.

ஈழப் போரில் தமிழர் என்ற இன அடையாளத்தை நீக்கிவிட்டு இந்துக்கள் என்ற மத அடையாளம் முன்வைக்கப்பட்டிருந்தால் இந்தியாவிடம் இருந்து ஆதரவு கிடைத்திருக்குமா என்று ஒரு கட்டத்தில் நவீன் கேட்டார். அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருணாகரன் பதில் கூறினார். ஆனால் எனது அவதானிப்பில் கண்டியில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தால் அது வெகு விரைவில் உலக இஸ்லாம் நாடுகளின் கவனத்திற்கு சென்றுவிடும் என்றே கருதுகிறேன். மியன்மாரில் ரொஹின்யா மக்களுக்கு ஆதரவும் அடைக்களமும் கொடுக்க முன்வந்த மலேசியா போன்று பிற நாடுகளின் ஆதரவை அம்மக்கள் சீக்கிரத்திலேயே பெற்றுவிடுவர் என்பது என் அபிப்பிராயம்.

அடுத்து, பிரபாகரன் குறித்த மிகவும் பிரபலமான ஒரு கேள்வியைச் சற்று தயக்கதுடனே கேட்டேன். ‘அவர் அந்தப் போரில் இருந்து தப்பித்துச் சென்றிருக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறதா?’ என்பதே என் கேள்வி. இந்த கேள்வியை மட்டகளப்பில் ஒரு நண்பரிடம் கேட்டபோது அவர் “பிரபாகன் உயிருடன் வெளிநாட்டில் இருக்க வாய்ப்பு உள்ளது” என்று நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், கருணாகரன் அதை முற்றாக மறுத்தார். அதற்கு சில காரணங்களையும் கூறினார். அதில் ஒன்று பிரபாகரனின் குணம் சார்ந்தது. அடுத்தது, அவர் கடைசி நேரத்தில் அதிகம் விரும்பி பார்த்ததோடு மொழியாக்கம் செய்து மற்ற புலிகளுக்கும் கொடுத்த ‘300 soldiers’ என்கிற ஆங்கிலப் படம். அந்த படத்தின் வழி தனது இறுதி முடிவைப் பூடகமாக அவர் தெரிவித்துவிட்டார் என்பதே அவரின் முடிவு. நான் அந்த படத்தைப் பார்க்கவில்லை என்பதால் குழப்பமாக இருந்தது. ஶ்ரீதர் அந்த படத்தின் கதைச் சுறுக்கத்தைக் கூறினார். நல்ல படம் அவசியம் பார்க்கவேண்டிய படம் என்றார். நான் உடனடியாக யூடியூப்பில் அந்த படத்தைத் தேடியும் துண்டு துண்டு காட்சிகள் மட்டுமே கிடைத்தன. ஆயினும் அந்த பெர்சிய நாட்டு ஆதி வரலாற்று கதையின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அதே நேரம் கொடூர கொலைக்களக் காட்சிகள் நிறைந்த இப்படம் எப்படி ஒரு அரசியல் போராளிக்கு உவப்பானதாக இருந்தது என்கிற புதிய கேள்வியும் எனக்கு தோன்றியது.

எங்கள் உரையாடல் நூல்கள் பக்கம் திரும்பியதும் கங்காதுரை போர் பற்றிய நூல்களை இங்கிருந்து மலேசியாவுக்கு வாங்கிச் செல்வதில் சிக்கல் இருக்குமா என்று கேட்டார். அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்பதே கருணாகரனின் பதிலாக இருந்தது.

காலையில், யாழ்பாணத்தில் எங்களை கவனித்துக்கொண்ட கவிஞர் தமயந்தி ஒரு கருத்தை முன்வைத்து போர்கால இலக்கியங்களைக் குறிப்பாக நாவல்களை மறுத்து பேசினார். போராளி குழுக்களின் ஆரம்பகால உண்மை வரலாறுகளை அறிந்து கொள்ளாமல் இன்றைய இளைஞர்கள் பொய்யான தகவல்களை தங்கள் புனைவுகளில் எழுதுவதை அவர் ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைத்தார். பார்த்தீனியம் போன்ற நாவல்களை முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று கூறினார்.

இதை அடிப்படையாக வைத்து நவீன், கருணாகரனிடம் சில கேள்விகளை முன்வைத்தார். புனைவுகளில் வரலாற்று திரிபுகள் செய்யப்படுகின்றதா என்பது அவரது கேள்வியின் சாரம். ஒரு வரலாறு எந்த கோணத்தில் பார்க்கப்படுகின்றது என்பதோடு ஒரே வரலாறு இருவேறு சூழல்களால் வேறுபட்டு வெளிப்பட வாய்புள்ளது என்று சில உதாரணங்களையும் அவர் கூறினார். ஆனால் தொடர்ந்து ஒரு தரப்புக்கான கருத்தைத் தூக்கிப்பிடிப்பவை இலக்கியங்கள் அல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ஊழிக் கூத்து, ஆதிரை போன்ற ஆக்கங்களை அவர் நல்ல நாவல்கள் என்றே கூறினார்.

தொடர்ந்து, தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் பற்றிய சர்ச்சைகள் பற்றி பேச்சு திரும்பியது. அந்த நூலில் எழுத்தாளரின் மரணத்திற்கு பிறகு பின்சேர்க்கைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து பேசினோம்.  அந்த நூலில் சொல்லப்படும் தகவல்கள் எந்த அளவு நம்பகத்தன்மையானது என்ற கேள்விக்கு அவர் அவை நம்பகமானவையே என்று கூறினார். காலச்சுவடு பதிப்பில் அந்த நூல் வந்ததாலேயே அதை புலி ஆதரவு தரப்பினர் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாக அவர் கூறினார். இது போன்று முன் முடிவுகளோடு ஒரு விடயத்தை அணுகுவது பலரின் குணமாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.

வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக கருணாகரன் தன் சேமிப்பில் இருந்த சில நூல்களையும் தனது சொந்த நூல்களையும் எங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சில நூல்களை அவசியம் படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொன்னார்.

 

03

பிறகு, வாகனத்தில் எங்களோடு போர்கால சாட்சியாக எஞ்சியிருக்கும் சில இடங்களைப் பார்க்க புறப்பட்ட போது அவருடனான இரண்டாம் கட்ட உரையாடல் தொடங்கியது. முதலாவதாக நகரில் சாலை ஓரம் கூடாரம் அமைத்து இறுதிப் போரில் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களுக்கான நீதிக் கேட்டு அமைதி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் குழுவினரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். பல்வேறு போராட்டங்களுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் பிறகு இந்த இடத்தில் (மாரியம்மன் கோயில் பக்கத்தில்) கூடாரம் அமைத்துக் கொண்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருப்பது அதிர்ச்சியும் கவலையும் அளித்தது. அந்த அமைப்புக்குத் தலைவியாக செயல்பட்ட பெண்மணியோடு உரையாடினோம். தன் மகனையும் அந்த போரில் தொலைத்துவிட்டு அந்தத் தாய் இப்போது கலங்கிக் கொண்டிருப்பது எல்லாரையும் கலங்கச் செய்தது. போரின் இறுதி நாளுக்கு முன் அந்த இளைஞனை அவரே அரசு தரப்பு காவலர்களிடம் சரணடையக் கொடுத்ததாகவும் அதன் பின் அவனைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றும் கூறி சில படங்களை ஆதாரமாக காட்டினார்.

25அந்த கூடாரம் முழுதும் காணாமல் போன மனிதர்களின் புகைப்படங்களை வைத்துள்ளனர். 25 பெரும்பாலும் ஆண்கள். இளைஞர்கள். அவர்கள் புலிகள் அமைப்பாலும் ராணுவ தரப்பாலும் கடத்தப்பட்டவர்கள். தாங்களே முன்வந்து சரணடைந்தவர்களும் இருந்தனர். நாடு முழுவதும் இப்படி போரில் காணமல் போனவர்கள் ஆயிரம் பேருக்கும் மேலானவர்கள் என்று கூறினார். அந்த தாய் தாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை எங்களோடு பகிர்ந்துகொண்டார். உதவுவதாக வாக்கு கொடுக்கும் அரசுதரப்பும் அமைச்சர்களும் ஏதும் தொடர் நடவடிக்கை எடுக்காமல் நழுவிக் கொண்டிருக்கும் நிலையை விளக்கிச் சொன்னார். அவர்களுடன் விடைபெரும் முன் “புலிகள் ஆட்சியில் கவலையற்று வாழ்ந்தோம். இப்போது எங்களுக்குப் பாதுகாப்பும் உதவியும் இன்றி இருக்கிறோம்” என்று அந்த தாய் கூறியது மொத்த இலங்கைத் தாய்களின் குரலாக ஒலித்தது.

தொடர்ந்து கிளிநொச்சியில் புலிகள் நிர்வாகம் செய்தபோது நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களையும், புலிகளின் முக்கிய நிர்வாக மையங்களையும் காரில் சென்றபடி பார்வையிட்டுக் கொண்டுச் சென்றோம். பல்வேறு அமைதிப் பேச்சுகள் நடந்த வீட்டையும் புலிகள் அமைத்த வங்கி முதலான அலுவலகங்களையும் தூரத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. போராளி தலைவர்கள் சிலரின் வீடுகள் இருந்த இடங்களையும் காட்டினார். பல கட்டிடங்கள் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுவிட்டன. புலிகள் அமைத்த அரசாங்க கட்டிடங்கள், பாராளுமன்றம், ராணுவத் தளங்கள் ஆகியவற்றை மறைத்துக் கொண்டு இலங்கை அரசு புதிய ராணுவத் தளங்களை அமைத்திருக்கிறது. கருணாகரன் பழைய கட்டிடங்களைச் சுட்டிக்காட்டி விளக்கிக் கொண்டு வந்தார். எல்லா தளங்களின் முன்னும் ராணுவம் காவலில் நின்றதால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. புகைப்படங்கள் எடுப்பதையும் தவிர்த்தோம். பத்து ஆண்டுகளுக்குள் புலிகளால் அரசை எதிர்த்துக் கொண்டும் உலகைப் பகைத்துக் கொண்டும் இத்தனை மேம்பாடுகளைக் கொண்டுவர முடிந்திருப்பது வியப்புதான். மேம்பாடுகள் போர்கால வேகத்தில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை யூகிக்க முடிந்தது.

காரில் நவீன், கருணாகரனிடம், “பாலச்சந்திரன் கொலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று திடுமென கேட்டார். தொடர்ந்து ஆளுமைகளை நேர்காணல் செய்ததன் வழி, இறுக்கங்களைத் தளர்த்தி ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கும் விடயங்களை வெளிப்படுத்தும் கூர்மையான கேள்விகளை முன்வைப்பதில் நவீன் நன்கு தேர்ச்சி பெற்றிருகிறார் போலும். அந்த உத்தியையே நவீன் இங்கும் பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். அந்த கேள்வி காரில் கடும் அமைதியை உருவாக்கியது. கருணாகரனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சற்று நேரத்தில் அவர் விசும்பலுடன் கலங்கி அழுவதைக் கண்டு நாங்கள் விக்கித்துப் போனோம். ஆனால் அவரை அமைதியாக அழ அனுமதித்து காத்திருந்தோம். கருணாகரனால் பேச முடியவில்லை. தன் மகனோடு ஒன்றாக படித்த, பயந்த சுபாவம் கொண்ட அந்த பாலகனின் மேல் அவர் கொண்டிருந்த அன்பையும் இழப்பையும் அவரது வெடிப்பும் அழுகையும் சொற்கள் இன்றியே எங்களுக்குப் பறைசாற்றின. “என்னதான் புலிகளின் மீது வெறுப்பும் கசப்பும் இருந்தாலும் இது கொடுமை இல்லையா?” என்று கேட்டு அவர் மேலும் கலங்கினார். அந்த அரக்கத்தனமான கொலையைக் கண்டு உலகமே கலங்கித்தான் போனது. எந்தத் தர்கத்தையும் முன்வைத்து அந்த கொலையை ஞாயப்படுத்த முடியாது. அதற்கான விலையைக் கொலைக்காரர்கள் என்றேனும் கொடுத்தே ஆகவேண்டும். அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இறுதியாக, கருகாணாகரன் எங்களைப் புலிகளால் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கல்விப்பணி தொடங்கும் முன்னரே புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதால் அதில் படித்து பட்டம் பெற்றவர்கள் யாரும் இல்லை.  அந்தப் பல்கலைக்கழகம் இப்போது ஜப்பானிய அரசாங்க நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கருணாகரனின் பங்கு கணிசமான அளவு இருப்பதை உணர முடிந்தது.

கார், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஒரு சாலை சந்திப்பில் வந்து நின்றதும், கருணாகரன் சட்டென, “சரி, நீங்கள் பயணத்தை தொடருங்கள் நான் இறங்கிக் கொள்கிறேன்” என்று எங்களுக்கு விடை கொடுத்தது அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விடுகிறோம் என்று சொன்னதை அவர் மறுத்தார். “இது என் ஊர்.. பிரச்சனை இல்லை.. இங்கே காத்திருந்தால் பேருந்து வரும். அதில் சென்று விடுவேன்” என்றார். உண்மையில் நாங்கள் அவருடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க விரும்பினோம். மேலும் பல விடயங்களைப் பேசவும் இன்னும் சில கிலோ மீட்டர்கள் பயணம் செய்யவும் ஆர்வமாக இருந்தோம். ஆனால் அவர் கூட்டத்தில் இருந்து சட்டென விடுபடும் மனநிலையில் இருந்தார். வேறு வழி இன்றி மிகுந்த ஆயசத்துடன் அவருக்கு விடை கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் பயணத்தைத் தொடர்ந்தோம். விசயங்களை வேகமாகவும் அழுத்தமாகவும் பேசும் அவரின் பாங்கும் நேர்மையும் எங்களது இலங்கைப் பயணத்தைப் பலவழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கியிருந்தது.

.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...