யாழ்ப்பாணத்தில் வல்லினம் 100

நல்லூர் பவன்வல்லினம் இலக்கியக் குழு மேற்கொண்ட இலங்கை இலக்கியப் பயணத்தில் யாழ்ப்பாண நகரத்திலுள்ள நல்லூரில் வல்லினம்100 நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வல்லினக் குழுவினரும் யாழ்ப்பாண வட்டார வாசகர்களும் கலந்து கொண்டு வல்லினம் 100-இல் வெளிவந்த படைப்புகளைத் தொட்டுப் பேசி கலந்துரையாடினர். முதலாவதாக கிருஷ்ணன் நிகழ்ச்சியின் நெறியாளராகப் பொறுப்பேற்று வல்லினத்தின் தற்கால இலக்கிய நடவடிக்கைகளைத் தொட்டு ஒரு சிறிய அறிமுகம் நிகழ்த்தினார். அடுத்தபடியாக மலேசிய இலக்கியப் பரப்பில் வல்லினத்தின் பங்கு என்ன என்பது  குறித்தும், அதை ஏன் செய்ய வேண்டும் என்றும் எழுத்தாளர் ம.நவீன் விளக்கமளித்தார்.

ம.நவீன் உரை

ம.நவீன்

ம.நவீன்

ம.நவீனின் கருத்து படி, மலேசிய இலக்கிய போக்கு 1950-களில் மலேசிய இலக்கியத்திற்கான தனி அடையாளம் தேவை என்ற பிரக்ஞையுடன் செயல்படத் தொடங்கியதாகத் தெரிவித்தார். 1952-க்கு பின் கு.அழகிரிசாமியின் முயற்சியால் மலேசிய இலக்கியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நவீன் அப்போது நடப்பில் இருந்த மலேசிய இலக்கிய போக்கின் கலைக்குறைவால் கு.அழகிரிசாமி அவற்றை மறுத்ததோடு அவர் மலேசியாவில் இருந்த ஐந்து ஆண்டுகளில் புதிய இலக்கியப் போக்கு வர வேண்டும் என்று கருதி இலக்கிய வட்டம் என்ற பெயரில் 10 இலக்கிய வகுப்புகளை நடத்தினார் என்றார். அடுத்த கட்டமாக 1950-களில் கோ. சாரங்கபாணியால் உருவாக்கப்பட்ட மாணவர் மணிமன்றம் பத்திரிக்கை மூலம் மாணவர்கள் மத்தியில் படைப்பிலக்கிய ஆர்வத்தை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இன்னொரு காலக்கட்டத்தில் மாணவர் மன்றம் தமிழ் இளைஞர் மணிமன்றம் என்ற இயக்கமாக வளர்ந்தது. அந்த அமைப்பின் கலை இலக்கிய செயல்பாடுகள் மூலம் நவீன இலக்கியப் போக்கை அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இம்முயற்சிகள் தோல்வியைத் தழுவியதற்கு காரணம் கோ.சா திராவிட இயக்கம் சார்ந்து தனது கலை இலக்கியப் புரிதலைக் கொண்டிருந்ததோடு லட்சியவாத எழுத்துகளை எழுதும் படைப்பாளிகளை உருவாக்கிக் கொண்டிருந்தார் என்பதுதான் என்றார் நவீன். ஆனால், அடுத்த நிலையில், ஆனந்த விகடனின் வெளிவந்த ஜெயாகாந்தனின் படைப்புகளை வாசித்து, ஜெயகாந்தன் மூலமாக கிளர்ச்சி பெற்ற புது படைப்பாளிகள் தோன்றினர். அவ்வகையிலே 70-களில்தான் மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தோன்றுவதாகவும் இக்கருத்தை தனது ஆவணப்படங்களின் வழி கிடைத்தத் தரவுகளைக் கொண்டும் தொடர்ந்து மலேசிய இலக்கியங்களை வாசிப்பதன் வழியும் தான் அடைந்ததாகக் கூறினார்.

‘இலக்கிய வட்டம்’ என்ற சிற்றிதழ் தொடக்கம், நவீன இலக்கிய களம், இலக்கியம் சார்ந்த திட்டங்கள் இக்காலகட்டத்தில் முன்னெடுக்க பட்டிருக்கின்றன என்றாலும், இம்முன்னெடுப்புகள் 10 ஆண்டுகளில் சோர்ந்து போயின என்றார். இதற்கு காரணம், வெகுஜன பத்திரிகையான வானம்பாடி மலேசியாவின் இலக்கிய போக்கை மலினப்பட்ட முயற்சியாக மாற்றியது என்றார். வெகுஜன கலாச்சாரத்துடன் கலந்துவிட்ட 70களில் வந்த ஆளுமைகளும் அதற்கேற்றாற்போல் மாறினர். சிலர் படைப்பிலக்கியத்திலிருந்து விளங்கிக்கொண்டனர். ஆகவே 70ஆம் ஆண்டுகளில் தோன்றிய நவீன இலக்கிய அலை 10 ஆண்டுகளில் காணாமல் போனது என ஒரு வரைப்படத்தைக் கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தி.ஜனாகிராமன், வண்ணதாசன் போன்றவர்களின் நவீன இலக்கிய போக்கை உள்வாங்கி புதிய இலக்கிய முயற்சிகளை ‘அகம்’ என்ற இலக்கிய அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் முயற்சிகளை எழுத்தாளர் சண்முக சிவா மேற்கொண்டார். இது ஜெயகாந்தன் அலைக்குப் பிறகு நடந்த ஓர் இலக்கிய போக்கு. தீவிரமாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது சந்திப்புகளை ஏற்படுத்தி இளைஞர்களின் மத்தியில் புதிய இலக்கியவாதிகளை உருவாக்கும் முயற்சியைச் செய்யும் பொழுது அவர் வழியாக ஒரு மரபு தோன்றியது. அந்த மரபில் வந்த நான் மலேசிய இலக்கியம் ஏன் சிறு வட்டத்துக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றும் ஏன் கவனிக்கப்படாமல் இருக்கிறது என்றும் சிந்திக்கையில் விமர்சனங்களை முன்னெடுக்கும் சிற்றிதழ் மரபு இங்கு இல்லை என்பதே காரணம் என்பதை கண்டறிந்து, 2007-இல் வல்லினம் எனும் பெயரில் ஒரு சிற்றிதழை ஆரம்பித்தேன். அது இணையத்தள இதழாக மாற்றம் கண்டு 100 இதழ்கள் வெளிவந்துள்ளன. இவைகளின் தொகுப்பே வல்லினம் 100.” என வல்லினம் 100 களஞ்சியத்தை அறிமுகம் செய்யும் நோக்கத்தைக் கூறினார்.

“இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமே சமூகத்தின் மனப்போக்கை அசைப்பதில்லை. கலை சார்ந்த மாற்று முயற்சிகளும் தேவை என்று உணர்ந்த பிறகு, வகுப்புகள், உரையாடல்கள், ஆவணப்படங்கள் என்று வல்லினம் பல முயற்சிகளை செய்துள்ளது. மூத்த படைப்பாளிகளை அடையாளங்காட்டுவதை வல்லினம் முக்கிய பொறுப்பாக கையில் எடுத்துள்ளது. அண்மையில் சீ.முத்துசாமியின் இலக்கிய ஆளுமையை அறியும் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்தும், மலேசிய சூழலுக்கான தனி அடையாளம் வேண்டுமென்றால் அங்கு இலக்கியத்தில் புழங்குகின்ற பிற மொழி சார்ந்த படைப்புகளுடன் தொடர்பு தேவை என்பதை வல்லினம் உணர்ந்தது. மலேசியாவைச் சார்ந்த வேறு சில இலக்கிய முயற்சிகள் என்னவாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வல்லினம் பிறமொழி இலக்கியங்களுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. அடுத்தப்படியாக தமிழ் இலக்கியம் வாசிக்கப்படுகின்ற வெளிநாட்டில் வாழும் தமிழ் உறவுகளிடம் மலேசிய நவீன இலக்கியத்தைக் கொண்டு சேர்ப்பது குறித்து எடுக்கப்பட்ட முயற்சியாக இந்த இலங்கை இலக்கியப் பயணம் அமைந்துள்ளது” என்று நவீன் தமதுரையில் கூறினார்.

தொடர்ந்து மொழிப்பெயர்ப்பாளர் தேவா வல்லினம் 100இல் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் குறித்து தனது கருத்துகளைக் கூறினார்.

‘வல்லினம்100’ கட்டுரைகள் பத்திகள் – எழுத்தாளர் தேவா உரை

தேவா

தேவா

குண்டர் கும்பல் கலாச்சாரமும் தமிழ் சமூக மௌனமும் என்ற கட்டுரை குறித்து எழுத்தாளர் தேவா தனது கருத்துக்களை முன்வைத்தார். வன்முறை கலாச்சாரத்தில் எப்படி இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை ‘மாஃபியா’ கலாச்சாரம் உருவான பின்புலத்துடன் தொடர்புப்படுத்தி பேசினார் தேவா. குடும்பம், அரசியல், சமூகம் ஆகிய அமைப்புகளால் கவனப்படுத்தப்படாதவர்கள் வன்முறையில் ஈடுபடும் காரணத்தைக் கட்டுரை காட்டுவதாக கூறினார். ஆனாலும், ஐரோப்பிய நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களிடையேயும் வன்முறை கலாச்சாரம் எப்படி தோன்றுகிறது என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருப்பதாக தேவா தெரிவித்தார். கணவன் மனைவி குடும்பம் வரை வன்முறை நிகழ்ந்து கொண்டிருப்பதை அவர் தெரிவித்தார்.  ‘கோயில் ஓட்டமும் கோவக்கார குருவியும்’ கட்டுரை அவரைக் கவர்ந்ததாக கூறினார்.

தொடர்ந்து கவிஞர் கருணாகரன் கவிதைகள் குறித்து தன் உரையை ஆற்றினார்.

 

‘வல்லினம் 100’ கவிதைகள் –கவிஞர் கருணாகரன் உரை

கருணாகரன்

கருணாகரன்

“யாழ்ப்பாண பொருளாதார பண்பாட்டில் மலேசியாவிற்குப் பெரிய பங்கு உண்டு. ஆனால், கலை பண்பாடு இலக்கியம் குறித்து பங்களிப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுகிறது. சிசில் ராஜேந்திரா மூலமாக மலேசிய இலக்கியம் அறிமுகமானது. மோசமான அரசியல், யுத்தம், கசப்பான அனுபவங்கள் போன்ற காரணத்தால் சில விடயங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறேன். மலேசியாவிற்கு புலம்பெயர்ந்த யாழ்ப்பாணர்கள் வாழ்வியலைக் கூறும் மலேசிய இலக்கியத்தை இதுவரையிலும் நான் பார்த்ததில்லை. நெருக்கடிகளோடு வாழாத வாழ்க்கை காரணமாக யாழ்ப்பாணர்களின் வாழ்க்கை மலேசிய இலக்கியத்தில் பதிவாகாமல் இருக்கலாம். பிரிட்டிஷார் காலத்தில் அதிகாரத்தோடு கை கோர்த்து மலேசிய இந்தியர்களை யாழ்ப்பாணர்கள் ஆதிக்கம் செலுத்தியதை வல்லினம் கட்டுரைகளில் காண முடிகிறது. இந்தக் காலக்கட்டத்தில் மலேசியாவிற்கு யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான உறவு இப்படித்தான் இருந்தது. பிற்காலத்தில் புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்ட படைப்புகளில் ஆங்காங்கே மலேசிய யாழ்ப்பாண தொடர்புகளைக் காண முடிகிறது. உதாரணத்திற்கு யோ.கர்ணன், ஷோபா சக்தி போன்றவர்களின் படைப்புகளில் பலவற்றைக் காணலாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தமிழ்நாட்டின் இலக்கிய சாயல் மலேசிய இலக்கியப் படைப்புகளில் காணமுடிகிறது. இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் அரசியல் சார்ந்தவையாகத்தான் இருந்தன. மலேசிய படைப்பாளியான கவிஞர் சிசில் ராஜேந்திரா படைப்புகள் இலங்கையில் கவனப்படுத்தப்பட்டதற்கு இதுவே காரணம். ஆதலால், பிற நாட்டில் உள்ள கலாச்சாரங்கள் அரசியல் மோதல்களால் ஏற்படும் வாழ்க்கை  சிக்கல்களாகப் பார்க்கப்பட்டது. தொடர்ந்து வாசிப்பதால், மலேசியா போன்ற நாடுகளில் அரசியலுக்கு அப்பால் அகம் சார்ந்த விஷயங்கள் பேசப்பட்டிருப்பதை காண முடிகிறது. கவிதையின் ஊடே பார்க்கும்பொழுது மணிமொழி, யோகி, பா.ஆ.சிவம், ம.நவீன் போன்றோரின் படைப்புகள் இவ்விடயங்களை பேசியிருக்கின்றன. மலேசியாவில் படைக்கப்படும் அகம் சார்ந்த புறம் சார்ந்த கவிதைகளில் தமிழ்நாட்டின் மனுஷ்ய புத்திரனின் சாயலைக் காணலாம். அதைக் கடந்தும் சில கவிதைகள் உண்டு. மலேசியாவின் கவிதைகளில் தனி அடையாளத்தைத் தேடும் பொழுது அது மெல்ல மெல்ல காணாமல் போவதைப் பார்க்க முடிகிறது. ஈழ மொழிக்கு அடையாளம் இருக்கின்றது. கூறும் மொழிக்கும் பேசும் மொழிக்கும் அடையாளம் இருக்கின்றது. வராகி, சண்முக சிவலிங்கம் ஆகியோர் ஈழ அடையாளத்தை அறிமுகப்படுத்தியவர்கள். மரபிலிருந்து நவீனத்துவத்திற்கு இடையிலுள்ள ஊடாட்ட மொழியை அவர்களில் படைப்புகளில் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஈழ மண்ணின் வாழ்க்கையைப் பேசிய கவிதைகளில் மகாவேந்தனின் கவிதைகளையும் குறிப்பிடலாம்.” என்று அவர் தன் உரையில் குறிப்பிட்டு பேசினார்.

‘வல்லினம் 100’ – சிறுகதைகள், நேர்காணல்கள்-  ரமேஷ் உரை

ரமேஷ்வல்லினம் 100இல் வெளியான சிறுகதைகளில் முக்கியமாக பார்க்ககூடிய சிறுகதைகளில் எழுத்தாளர் லதாவின் ‘நிர்வாணம்’ கதையைக் குறிப்பிட்டு பேசினார் ரமேஷ். தாய்க்கும் மகளுக்கும் இடையே உள்ள உணர்வினை மிக நுணுக்கமாக எடுத்து இயம்பிய கதையாக ‘நிர்வாணம்’ கதையை தான் உணர்வதாக ரமேஷ் தெரிவித்தார். வல்லினக் கட்டுரைகளில் லதாவின் கதைகள் விமர்சிக்கப்பட்டாலும், லதா ஒரு முக்கிய ஆளுமையாக நிர்வாணம் கதையின் வழி வெளிப்படுகிறார் என்று ரமேஷ் தம் கருத்தைப் பதிவுசெய்தார். .’சண்டை’ என்ற சிறுகதையில், சிறு பிள்ளையின் உளவியலை அறியாத பெரியவர்கள் குறித்து காட்டும் இச்சிறுகதை உளவியல் பிரச்சனையைச் சித்தரிக்கிறது. ‘கனவு’ சிறுகதை பல கனவுகளின் ஊடாக பிள்ளைகளின் இதயத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறினார். ‘ஈ’ என்ற கதையில் ஓர் உணர்வு நிலை இருக்கின்றது. வேலைக்காக ஒருவன் படும் அவலத்தை ஈயோடு ஒப்பிட்டு காட்டுகிறார் எழுத்தாளர் என்றவர் வல்லினம் 100-இல் இடம்பெற்ற 11 கதைகளும் உளவியலை முன்னிறுத்தி பேசப்படும் கதைகளாக அமைகிறது என்றார்.

அடுத்து, நேர்காணலில் பால பாஸ்கரனின் நேர்காணல் முக்கியமானதாக அமைந்துள்ளதாக ரமேஷ் கூறினார். மலேசிய இலக்கியப் படைப்புகளை பிரதிபலிக்கும் நேர்காணல்கள் வல்லினம் 100 புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. மலேசியப் படைப்பிலக்கியங்களை அறிந்து கொள்வதற்கும் அங்குள்ள மக்களின் வாழ்வியலைப் புரிந்து கொள்வதற்கும் ஆளுமைகளைத் தெரிந்து கொள்வதற்கும் வல்லினம் 100 படைப்புகள் முக்கியப்படுகின்றன என்று கூறி ரமேஷ் தன் உரையை நிறைவு செய்தார்.

 

இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் தொடங்கியது.

கேள்வி : இந்திய மொழிகளில் தமிழைத்தவிர வேறு என்ன மொழிகளில் இலக்கியம் படைக்கப்படுகிறது?

அ.பாண்டியன்: மலேசியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள். சிறும்பான்மையினராக சீக்கியர்கள், குஜராத்திகள் வாழ்கின்றனர். ஆனால், அங்கு பயன்படுத்தப்படும் ஊடக மொழி தமிழ்மொழிதான். தெலுங்கு, மலையாளம் ஆகிய தாய்மொழிகள் வீட்டில் பேச்சுமொழியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இலக்கியம் படைக்கும் அளவிற்கு அவை பயன்பாட்டில் இல்லை.

கேள்வி : மலாய்க்காரர்களின் இலக்கியங்களுக்கு எது முன்னோடி?

அ.பாண்டியன்: ஆதியில் இந்தோனேசியாவிலிருந்து வரும் படைப்புகளை மலேசிய மலாய்க்காரர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்கள் படைப்புகளில் மலாய் இலக்கியத்தை விட இந்தோனேசிய இலக்கியம் மூத்த இலக்கியமாக இருந்து வருகிறது. இருப்பினும், அவர்களை முழுக்க முழுக்க ஆதர்சமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு இல்லை. இங்குள்ள சூழலுக்கேற்ப மலாய் இலக்கியம் படைக்கப்படுகிறது. ஒரு பிராந்திய இலக்கியம் எனும் அடிப்படையில் இந்தோனேசியாவைச் சேர்த்துக் கொள்கிறார்கள். தற்போது, இந்தோனேசிய இலக்கியம் மலேசிய மலாய் இலக்கியத்துக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது மிகக்  குறைவு.

கேள்வி : மலேசியாவில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழர்களின் படைப்புகள் உள்ளனவா?

அ.பாண்டியன்: யாழ்ப்பாணர்கள் மலேசியாவிற்கு தோட்டத் தொழிலாளர்களின் நிர்வாக பொறுப்புக்கு அமர்த்தப்படுவதற்காக ஆங்கிலேயர்களால் வரவழைக்கப்பட்டனர். கற்ற சமுதாயமாகவும் ஆங்கில அறிவு உள்ளவர்களாகவும் இருந்த அவர்களின் வாழ்க்கை முறை மேல்தட்டு வாழ்க்கை முறையாக இருந்தது. அவர்களிடம் படைப்புகள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இதுவரைக்கும் வாசிப்புக்கு வரவில்லை. அவ்வாறாக இருந்திருந்தாலும் அவை ஆங்கிலத்தில் இருந்திருக்கலாம். காரணம் அவர்கள் ஆங்கில பள்ளிகளில் கல்வி கற்ற சமூகமாகவே இருந்தனர். இது எங்களின் கணிப்பு.

கேள்வி : மலேசியாவில் வாழ்ந்த யாழ்ப்பாணர்களால் டசன் கணக்கில் படைப்புகள் வந்திருக்கின்றன. இதற்கு ஆதாரமாக 1930-ஆம் ஆண்டில் நாகலிங்கம் என்பவர் நாவல் படைத்திருக்கிறார் என்பதை இலங்கையில் வெளிவந்த ஓர் ஊடகத்தில் அட்டைப் படமாக இத்தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அங்குள்ள மக்கள் ஆங்கில வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை சரியாக ஆய்வு செய்யுங்கள்!

விஜயலட்சுமி : மலேசியாவில் பதிக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் இருக்கிறது. மறைந்த பேராசிரியர் ராம.சுப்பையா தொகுத்த ‘Bibliography of Tamil Malaysiana’ எனும் பட்டியலைப் பார்க்கையில் யாழ்ப்பாணர்களின் நாவலோ சிறுகதையோ இல்லை. பழைய மேற்கோள்களிலும் யாழ்ப்பாண தமிழர்களின் பங்களிப்போ படைப்போ இல்லை. நீங்கள் சொல்வதன் அடிப்படையில், அப்படி இருந்திருந்தால் ஒருவேளை விடுப்பட்டிருக்கலாம். தகுந்த ஆதாரத்தை முன்வைத்தால் அதுபற்றி மேலும் ஆய்வு செய்யலாம்.

கேள்வி : ஆளுமைகளை வழிபடுவதும் தொழுகைகளும் இலக்கியத்தை வளர்க்குமா? ஜெயமோகன் கருத்தியல் முன்னுரிமை குறித்து ஜெயந்தி சங்கர் போன்ற அங்குள்ள படைப்பாளிகளைத் தாக்குவது எழுத்தின் மூலமாக பழிவாங்குவது இலக்கிய படைப்புக்கு ஆரோக்கியமானதா? ஜெயமோகனுக்கு வல்லினம் முக்கியத்துவம் தரும் அடிப்படையில் இக்கேள்வியை முன்வைக்கிறேன்.

ம.நவீன் : முதலில் எங்கள் நிலைபாடு குறித்து முன்முடிவுகளை எடுத்துவிட்டு இந்தகுழு கேள்வியை கேட்க்கிறீர்கள். முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு கேட்பதுபோலதான். இருந்தாலும், அதற்கு நான் பதில் சொல்கிறேன. குழு மனப்பான்மையுடன் செயல்படும் இலக்கியம் அல்லது ஒரு ஆளுமையை ஆதர்சனமாக வைப்பது இலக்கிய வளர்ச்சிக்கான போக்கு கிடையாது என்பது வல்லினத்தின் நடைமுறை. வல்லினம் குழு என்றாலும் நாங்கள் கருத்துகளால் தனியர்கள். இலக்கிய விமர்சனம் என்பது ஒவ்வொரு வாசகனும் தன்னுடைய ரசனையின் அடிப்படையில் முன்வைக்கும் ஒரு கருத்து. இக்கருத்து இன்னொரு கருத்துடன் ஒப்பிட்டு போகவேண்டும் என்ற அவசியம் இல்லை. என் கருத்துகள் அப்படி ஜெயமோகன் கருத்துகளுடன் பலசமயம் முரண்பட்டுள்ளன. ஆனால் அந்த முரண்தான் வாசிப்புப் படிநிலைகளில் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். இப்படியாக வாசிப்பு வகைகள் பல திறப்புகளைக் கொடுக்கும்.

மலேசியாவில் எது இலக்கியம் என்று சொல்வதற்கு ஆளில்லை. ரசனை விமர்சனபோக்கும் கிடையாது. எது நல்ல சிறுகதை என்பதை நான் வாசித்து புரிந்து கொண்ட அடிப்படையில் சில விஷயங்களை முன்வைக்கிறேன். இதனை முழுமுற்றாக நிராகரிப்பதற்கு இன்னொரு தீவிர வாசகனுக்கு இடமுண்டு. இது வாசிப்பு போக்கில் நடக்கக்கூடிய நீண்ட நதிகளில் சில துளிகள். மலேசியாவில் கல்வியாளர்களின் விமர்சன போக்கு மட்டுமே இருக்கிறது. மலேசிய இலக்கியம் மேலெழும்பி செல்ல முடியாத காரணம் இவ்விமர்சன போக்குதான். அதில் எல்லா படைப்புகளுக்கும் இடம் உண்டு. நான் முன்வைக்கும் கருத்துகளால் நட்பு துண்டிப்பு உட்பட பல பாதகமான சூழல் அமையும் என்று தெரிந்தே அதனை செய்கிறேன். மலேசியாவில் இலக்கியம் இல்லை என்று சொல்வதற்கான காரணம், கறாரான விமர்சனமும் இல்லாமல் மலேசியாவில் நெடுங்காலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரே காரணத்தால் பலரும் அடையாளப்படுத்தப்படுவதுதான்.

ஜெயந்தி சங்கரின் எழுத்துகள் சிறந்த படைப்பு என்று சொல்பவர்களின் வாசிப்பு சந்தேகத்துக்குரியது. அவரது படைப்புகளை விவாதத்தின் மூலமெல்லாம் மீளாய்வு செய்ய வேண்டியதில்லை என்பது என்னுடைய வாசிப்பின் அடைவு.

கேள்வி: தமிழ் நாட்டு பண்பாட்டு தொடர்ச்சி கலாச்சார தொடர்ச்சி மலேசியாவில் இருந்து வருகிறது. மலேசிய இலக்கியப் படைப்புகளில் குறிப்பாக கதைகளில் கவிதைகளில் அந்நாட்டு அசல் தன்மை கொண்ட படைப்புகள் உள்ளனவா?

அ. பாண்டியன் : மலேசிய நாவல்கள் தோட்டப்புறத்தை அடிப்படையாகக் கொண்டு வளர ஆரம்பித்தவை. அடுத்து ஜப்பானிய ஆதிக்கம் ஏற்படுத்திய சிக்கல்கள் தோட்டத்துண்டாடல்கள் போன்ற சமூகப் பிரச்சனைகளை  அடிப்படையாக கொண்ட முக்கிய நாவல்கள் எழுதப்பட்டன. ரெங்கசாமியின் ‘நினைவுச் சின்னம்’ எனும் நாவல் முழுக்க மலேசிய நாட்டில் வாழ்ந்த தமிழர்களின் கதை. இந்நாவலில் வரும் பெயர்கள், உரையாடல்கள் யாவும் மலேசியத் தன்மையைக் காட்டும். தோட்டப்புறத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை அசலாகப் பயன்படுத்திய நாவலாக சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்களை’ சொல்லலாம். எம்.குமாரனின் ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ மலேசிய மண்வாசனையைப் பேசுகிறது. இப்படி பல தொடர்ச்சியான படைப்புகள் வந்து கொண்டிருக்கும் மரபு உருவாகி விட்டது. இந்திய நாட்டுச் சாயல்களில் எழுதப்பட்ட படைப்புகள் முடிந்து விட்டன என்று சொல்லலாம்.

கேள்வி: ஈழத்து படைப்புகளுக்கும் இந்தியா நாட்டு படைப்புகளுக்கும் தனி அடையாளம் உண்டு. மலேசிய படைப்புகளில் தனி அடையாளம் உண்டா? மலேசியாவின் கவிதைகள் தமிழ்நாட்டைச் சாயலாக கொண்ட கவிதைகளாகவே இருக்கின்றன என்பதை பார்க்க முடிகிறது. இது குறித்து விளக்கம் வேண்டும்?

ம.நவீன்: மலேசியாவிற்கு தனியாக ஒரு கவிதை மொழியில்லை. ஒரு காலக்கட்டத்தில் மலேசியாவில் புது கவிதைகள் எழுதப்பட்டு வந்தாலும் அதில் ஒரு பெரிய தேக்கம் இருந்தது. 2005-ஆம் ஆண்டில் மனுஷ்யபுத்திரன் மலேசியா வந்தார். அவரின் வருகை பெரிய தாக்கத்தைக் கவிதை போக்கில் ஏற்படுத்தியது. அதற்கு முன்பு, கவிதை வாசிப்பு இல்லாமல் இருந்து மீண்டும் தீவிரமடைந்தது. அக்காலகட்டத்தில் நாடு முழுவதும் மனுஷ்ய புத்திரனுடன் பயணம் செய்து கவிதைகளை அறிமுகப்படுத்தினோம். மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் மூலமாக நவீன கவிதைப் போக்குகளை அறிந்து கொள்ளும் எழுத்தாளர்கள் வருகிறார்கள். அவ்வழியே வந்தவர்கள் தான் நான் (நவீன்), பா.அ.சிவம், யோகி,பூங்குழலி போன்றோர்.

சேரன், லீனா மணிமேகலை, நா.முத்துக்குமார் போன்ற கவிதை சார்ந்தவர்கள் அடுத்தடுத்து மலேசியா வந்தார்கள். இவர்கள் வருகை புதிதாக எழுந்து வந்த கவிஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் சல்மா, மாலதி மைதிரி போன்றவர்கள் கவிதைகள் வழி பெரும் அதிர்ச்சி மதிப்பீடுகளை ஏற்படுத்தினர். இது இன்னும் இன்னும் அந்தக் காலக்கட்டத்தில் கவிதை குறித்த கவனத்தை ஈர்த்தது. இவையெல்லாம் ஒரு தற்செயல் மட்டுமே. இதற்கு பிறகு மீண்டும் கவிதையில் பெரிய தேக்கம் ஏற்பட்டது. எங்களுக்கான கவிதை மொழியை நாங்கள் அடையாளம் காணவில்லை. நீங்கள் சொன்னது போல மனுஷ்ய புத்திரன் அவர் வழி வந்த சல்மா என ஒரே மாதிரியான கவிதை மொழியை உருவாக்கிக் கொண்டோம். பா.அ.சிவம் மட்டும் தனித்த மொழியைக் கொண்டிருந்தார் .

இது ஒரு பெரிய பலவீனம்தாம். மலேசியா போன்ற ஒரு சூழலில் ஒரு தீவிரமான கவிதைப் போக்கை உருவாக்க அதற்கேற்ற ஆளுமைகள் தேவை. காலமான ப.ஆ.சிவம் அப்படியானவர். இனி அதில் தீவிரமாக இயங்க சாத்தியம் இல்லை என்று முடிவெடுத்த பிறகு கவிதையைத் தொந்தரவு பண்ண வேண்டாம் என்று விட்டு விட்டேன். ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் கவிதை படைக்க வந்தவர்கள் தொடர்ந்து தங்களைக் கவிஞர்கள் என்று நம்ப ஆரம்பித்ததுதான் மலேசிய இலக்கியத்தில் துரதிஷ்டம் என்று நினைக்கிறேன். யோகி போன்றவர்களை நீங்கள் கவிஞர்கள் என்று சொல்வது மலேசிய கவிதை போக்கை ஓர் ஆபத்தான இடத்தை நோக்கித் தள்ளுவதாகும். அவர்களின் கவிதை மொழி நீர்த்துப் போய் விட்டது. மனுஷ்ய புத்திரனின் இன்னொரு பிரதியாக கவிதைகளைப் புனைகிறார்கள். தங்களுக்காக ஒரு கவிதை மொழியை ஏற்படுத்த முடியாமல் தேங்கிப் போன ஒரு மொழியாலும் இடதுசாரி அல்லது பெண்ணிய முகமூடியாலும் நாட்டில் கவிஞர்களாய் உலவிக் கொண்டிருக்கின்றனர். மலேசியாவின் கவிதை எழுச்சி 2006-உடன் செத்துவிட்டது.

கேள்வி: மலாய் மொழிக்கு வெளியே இருக்கும் இலக்கியத்தை அரசு புறம் தள்ளுக்கிறது என்பது உண்மையா?

அ.பாண்டியன் : தேசிய மொழியில் எழுதப்படும் இலக்கியத்திற்கும் பிற மொழியில் எழுதப்படும் இலக்கியத்திற்கும் தன்னளவில் அரசாங்கம் தடைவிதிப்பதில்லை. ஆனால் அரசின் அங்கீகாரம் பெற தேசிய மொழியில் இலக்கியம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகுதான் ஜனரஞ்சகம் அல்லது தீவிர இலக்கியம் என்றெல்லாம் பார்ப்பார்கள். விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இலக்கியம் சரியான முறையில் தேர்வு செய்யப்படுகிறது. தேர்வு குழுவை அமைத்து அதனை தேர்வு செய்கிறார்கள். அவர்களின் மத்தியில் நல்ல இலக்கியம் உருவாக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மலாய் மொழியைத் தவிர்த்து பிற மொழிகளில் படைக்கப்படும் இலக்கியம் சிறப்பானதாக இருந்தாலும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. தேசிய இலக்கியம் என்றால் அது மலாய் மொழி படைப்புகளே என்ற கொள்கையே இதற்கு காரணம்.

ம.நவீன் : தமிழில் எழுதப்படக்கூடிய இலக்கியத்திற்குத் தேசிய விருது கிடைக்கும் பட்சத்தில் அந்த படைப்பிலக்கியம் மலாய்க்காரர்களின் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும். இதன் மூலம், படைப்பிலக்கியத்தில் சொல்லப்படும் தமிழர்களின் வாழ்வியல் குறித்து பிற சமூகம் அறிய முடியும். மலேசிய நாட்டு படைப்பாளியான ரெங்கசாமியின் ‘சயாம் மரண இரயில்’ நாவலில் கம்யூனிஸ்டுகள் காலக்கட்டத்தில் ஏற்பட்ட சிக்கலான வாழ்க்கை முறை எழுதப்பட்டுள்ளது. இந்த நாவல் தேசிய அளவில் மலாய் இலக்கியவாதிகளால் கவனிக்கப்படாத பட்சத்தில் அக்காலக்கட்டத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற புரிதலை அவர்கள் அறிந்திருக்க முடியாது. இலங்கைத் தமிழர்கள் அறிந்துவைத்திருக்கின்ற விஷயம் கூட அவர்கள் அறிந்து வைத்திருக்க மாட்டார்கள். இதற்கு விருதுகள் மூலமாக தமிழ் இலக்கியப் படைப்புகள் கவனப்படுத்தப்படாமையே காரணமாக அமைகிறது.

கேள்வி : விருதுகள் அங்கீகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உண்டா?

பதில்: எது முக்கியப்படுத்த வேண்டும் என்ற அரசியல் அவர்களுக்குள் உண்டு. தேசிய ரீதியிலான அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர் ஷானுன் அஹமாட் தமது படைப்பில் பிரதமரை விமர்சித்த காரணத்தினால் அவரிடமிருந்து தேசிய விருதைப் பறிப்பதற்கும் அவரை இயங்க விடாமல் முடக்கிப்போடுவதற்கும் முயற்சிகள் நடந்தன. தமிழர்கள் மத்தியில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மலாய்க்காரர்களின் மத்தியில் சொல்வதற்கு ஆளில்லை.

கேள்வி : மலாய்க்காரர்கள் மத்தியில் நமது படைப்புகளைக் கொண்டு செல்வதற்கு  சிக்கல் உண்டா? மொழிபெயர்ப்புக்கு வழியுண்டா?

ம.நவீன் : 70-களில் வெளிவந்த ஆங்கிலப்படைப்புகளில் சுமார் 8 கதைகளை மொழிபெயர்த்து வல்லினம் மூலம் பதிப்பித்துள்ளோம். ஆனால் தயாரிக்கப்பட்ட தரமான மலாய் அல்லது ஆங்கில படைப்புகளை வாசகர் பரப்புக்குக் கொண்டு சேர்க்கக்கூடிய சரியான வணிக முறை எங்களிடம் இல்லை. எனவே அதுபோன்ற தகுந்த விற்பனை வலை உள்ள பதிப்பகங்களின் உதவியுடன் இதை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

கேள்வி : மலேசியாவுக்கு வெளியில் வாசகர் பரப்பைக் கூட்டுவதற்கு வல்லினம் என்ன மாதிரியான எதிர்கால திட்டத்தை வைத்துள்ளது?

ம.நவீன் : இங்கு நடந்து கொண்டிருக்கும் கலந்துரையாடலும் அத்தகைய நோக்கம் கொண்டதே. மேலும், இணையம் வந்த பிறகு தமிழில் இலக்கிய புழக்கம் விரிவடைந்துள்ளது. இருப்பினும், எந்த அளவுக்குத் தொடர்ந்து தீவிரமாக செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.

கேள்வி : சீனர்களின் ஆதிக்கம் பிற இலக்கியத்தை இல்லாமல் செய்திடுமா அல்லது மேலோங்கி வந்திடுமா?

கங்காதுரை :  அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம், 1930-க்குப் பிறகு சீனர்களின் இரண்டாவது தலைமுறை மலேசியாவைத் தாய்நாடாக ஏற்றுக் கொண்டது. தங்களின் இலக்கியத்தில் பல்லின வாழ்க்கைச் சூழலைப் பதிவு செய்கின்றனர். மலேசிய-சீனர் இலக்கியம் என்று எழுதிக் கொண்டு வந்த சமூகம், சீனர்-மலேசிய இலக்கியம் என்று தங்கள் இலக்கியத்தைத் தேசிய ரீதியில் அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் சீன ஆதிக்கம் என்பது பொருளாதாரத்தில் மட்டுமே பேசப்படும் விடயமாகும். இலக்கியத்தில் அதற்கு இடமில்லை.

இவ்வாறு நடைபெற்ற கலந்துரையாடல் 8 மணிக்கு நிறைவடைந்தது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...