மதிப்பிற்குறிய ஐயா. நான் கடந்த முறை கேள்வி கேட்டிருந்த ஆதவன். புதுவிசை ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா இல்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் ஒரு கேள்வி. தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் எடிட்டிங் இன்றியும் எழுத ஏன் அகப்பக்கம் ஒன்று வைத்திருக்ககூடாது ?
ஆதவன், தமிழகம்
அன்புமிக்க ஆதவனுக்கு,
என்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகவும் எடிட்டிங் இல்லாமலும் இணைய பக்கத்தின் வழி சொல்வதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. என்னிடம் உள்ள சோம்பேறித்தனம் ஒரு காரணம். மற்றொரு காரணம் கணிணியில் இன்னும் தட்டச்சு பயிலாமல் இருக்கிறேன். இந்த ஆண்டு கணிணியில் எழுத்தை மெல்லப் பயிலலாம் என்று இருக்கிறேன். கையில் எழுதியபின் தட்டச்சு செய்ய ஏதாவது சென்டரில் கொடுத்து தட்டச்சு செய்து – பிழைத்திருத்தம் செய்து அனுப்புவதில் காலவிரையம் ஏற்படுகிறது. எனவே எழுத நினைக்கிற பல விசயங்களை எழுத முடியாமல் போகின்றன. கணிணியில் பழகுவதற்குள் பல சிறுகதைகள், பல கட்டுரைகளை எழுதிவிட முடியுமே(அப்படி ஒன்றும் நடக்கப் போவது இல்லை) என்று ஒரு அற்ப எண்ணம் தோன்றி கணிணியில் பழகுவதை தள்ளிப் போட்டு விடுகிறேன். இணைய வாசகர்கள் கேட்கிற கேள்விகளுக்கு முறையான பதில் எழுத வேண்டுமே என்ற பொறுப்பு, நிறைய குப்பைகளை படித்து – கடந்து – வர கால விரையம் ஏற்படுமே என்ற அச்சத்தாலும் இணைய பக்கம் வரவில்லை. தொண்ணூறுகளின் ஆரம்ப ஆண்டுகளில் எழுத வந்தேன். இலக்கிய இதழ்களின் வழி படைப்புகள் வருவது பெரிய விசயமாகப் பார்க்கப்பட்டது. அந்த மனநிலையில் வளர்ந்தவன். இன்று காலத்திற்கு அது உதவாது என்பது உண்மையாகவும் இருக்கலாம். அந்த அச்சு ஊடகத்தின் வழி வரும் எழுத்தின் மீது உள்ள கவர்ச்சி இன்னமும் இருக்கிறது. என் பணி சார்ந்து எதிர்பாராமல் வந்துவிடுகிற வேலைகள் என பல்வேறு பிரச்சனைகளால் இணையத்தில் ஒரு ஒழுங்குடன் செயலாற்ற முடியாது என்பதால் அகப்பக்கம் தொடங்கவில்லை. முழு நேர எழுத்தாளனாக இருக்கும்படி வாய்ப்பு கிட்டியிருந்தால் அப்படி செய்யலாம். மெல்ல இணைய வெளிக்குள் வர பார்க்கிறேன்.
சு.வேணுகோபால் அவர்களுக்கு. தங்களின் வெண்ணிலை தொகுப்பை வாசித்துள்ளேன். தங்களிடம் சில கேள்விகள்.
- வெண்ணிலை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பா?
- ஜெயமோகன் கட்டுரை மூலமே தங்களை அறிந்தேன். ஜெயமோகன் குறித்த தங்கள் அபிப்பிராயம் என்ன?
- மேலும் தங்கள் நூல்கள் எல்லாம் தமிழினி பதிப்பகத்தில் மட்டும் வரும் மர்மம் என்ன?(தமிழினி பதிப்பகத்தில் நூல் பதிப்பாவது அதிஷ்டம் என வெளியில் பேச்சுள்ளதால் கேட்டேன்)
சாந்தன், கனடா
அன்புமிக்க சாந்தனுக்கு,
‘வெண்ணிலை’ தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை தொகுப்பல்ல. 23 நாட்களில் 23 கதைகள் என நாளுக்கு ஒன்றாக எழுதப்பட்ட கதைகள். ஒரு சம்பவம் அப்படி எழுதுவதற்கான ஒரு மூர்க்கத்தை ஏற்படுத்தியது – எழுதினேன். ஒவ்வொரு கதையையும் மாலையில் கொரியரில் அனுப்புவேன். தமிழினி வசந்தகுமார் படித்துவிட்டு மறுநாள் 11 மணிக்கு எப்படி வந்திருக்கிறது என்று சொல்வார். உன்னுடைய ஆற்றல் இது அல்ல என்பார். மறுபடி ஒரு கதை எழுதி அனுப்புவேன். உன்னுடைய தனித்துவம் இதில் அப்படி ஒன்றும் கூடி வரவில்லை என்பார். மறுபடியும் ஒரு கதை எழுதி அனுப்புவேன். இப்படி ஒவ்வொரு நாளும் சொல்வார். கடைசியாக ‘தொப்புள் கொடி’ என்ற கதையை எழுதி அனுப்பினேன். 10.30 க்கே தொலைபேசியில் அழைத்தார். இதுதான் வேணுவின் அசல் கதை. உன் தனித்துவத்தின் பிசுபிசுப்பு என் கையெல்லாம் ஒட்டுகிறது என்றார். அந்த கதையோடு அந்த வேகத்தை அப்போது நிறுத்திக் கொண்டேன். முக்கியமாக அன்றோடு என் விடுமுறை காலம் முடிந்து விட்டது என்பதாலும். பின் 23 கதைகளும் இலக்கியப் பூர்வமான வெற்றிகள் என்றார். இப்படித்தான் 23 நாட்களில் எழுதப்பட்ட கதைகள் ஒரு தொகுப்பாக வெளியானது.
ஜெயமோகன் பற்றிய உங்களின் அடுத்த கேள்வி
தமிழின் நவீன இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற பேராளுமை அவர். முக்கியமாக தமிழ் நாவல் துறையை இவ்வளவு வீச்சுள்ளதாக மாற்றியதில் அவரின் முன்னெடுப்பே காரணம். ஜெயமோகனுக்கு சற்று மூத்த எழுத்தாளர்களிடமும், அவரது வயது ஒத்தவர்களிடமும் இல்லாத இலக்கிய பார்வை வீச்சோடு வெளிப்பட்டது அவரிடம்தான். அமெரிக்க, ஐரோப்பிய வாசகர்களுக்குத் தோதான கதை எழுத மறுத்து இந்த மண்ணின் வேர்களிலிருந்து படைப்புகளை கொடுப்பவர். உத்தி ஜாலங்களில் இல்லை இலக்கியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தியவர். தொண்ணூறுகளின் துவகத்தில் வடிவரீதியான சோதனை முயற்சிகள் நிரம்ப நடந்தன. ஜெயமோகன் வடிவ ரீதியான மாற்றங்களிலும் தீவிரமாகத்தான் இருந்தார். வாழ்வை அறிதல்தான் இலக்கியத்தின் அடிப்படை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் செயலாற்றினார். இன்று இலக்கியத்தின் பாதை எங்கெங்கோ சுற்றி அடித்துவிட்டு அந்த பெருநதியில் திரும்ப வந்து கூடுகின்ற கிளை நதிகள்.
ஜெயமோகனைப் பாராட்டுபவர்களை விட்டுவிடுவோம். அவரை விமர்சிப்பவர்கள் இலக்கியத்திற்கு வெளியே நின்றுதான் அதிகமும் விமர்ச்சிக்கிறார்கள். விஷ்ணுபுரம், கொற்றவை நாவலுக்குள் நின்று விவாதத்தை மேலெழுந்த எதிர் நிலையாளர்கள் குறைவு. பெரிய இலக்கிய ஆளுமையாக இனங்காணப்படும் மார்க்கசிய அறிஞரான கோவை ஞானி மட்டும்தான், ஜெயமோகனின் திறனை இனம் கண்டார். ஜெயமோகனை எதிரியாக உருவாக்கிக்கொண்டு அணுகுபவர்கள் உண்டு. அவர்களின் விமர்சனத்தில் கவித்துவமாக ஜெயமோகன் எழுதிய ஒரே ஒரு இலக்கியப் பகுதியை ஒருவர்கூட கண்டடைந்து சொன்னது கிடையாது. ‘மாடன் மோட்சம்’, ‘படுகை’, ‘டார்த்தீனியம்’, ‘பாடலிபுத்திரம்’, ‘காடு’, ‘ரப்பர்’, ‘ஏழாம் உலகம்’, ‘ஊமைச் செந்நாய்’, ‘நூறு நாற்காலிகள்’, ‘திசைகளின் நடுவே’, ‘பத்ம வியூகம்’, என அவரின் பல கதைகள் எவற்றைப் பற்றிப் பேசுகின்றன? அறத்திற்கு எதிரான விசயங்களைத்தானே பேசுகின்றன. அவர் கொடுத்திருக்கும் படைப்புகள் எல்லாமே கருத்தியல் ரீதியாக உடன்பாடானது என்று சொல்லவும் வரவில்லை. அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும்போது எனது பார்வையை முன் வைக்கவும் செய்வேன். அதில் முன் தீர்மானம் ஒரு போதும் இருக்கவே இருக்காது. ஜெயமோகன் குறித்த எதிர் நிலையாக விமர்சிப்பவர்கள் முன்னமே தீர்மானித்துக்கொண்டுதான் அணுகுகிறார்கள். பெரும்பாலும் இங்கு நடக்கும் விவாதம் ஜெயமோகன் முன்வைக்கும் கருத்துக்களை ஒட்டித்தான். படைப்புகளை ஒட்டி அல்ல. அப்புறம் செவிவழி உருவாக்கிக்கொண்ட எதிர்நிலை முடிவாளர்கள் நிறைய பேர் உண்டு.
ஜெயமோகன் ஆதியில் நான் கைலாசபதி வழி வந்தவன் என்றும் சிறிது காலம் எம்.எல். குழுவில் இருந்து வெளியே வந்தவன் என்றும் கூறியிருந்தால் இதுவரை அவர் எழுதியிருக்கும் இதே படைப்புகள் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் இவ்விதமாக இருக்காது. சமூக முன்னேற்றத்திற்கோ, சமதர்ம சமூக புரட்சிக்கோ வித்திடாத தாஸ்தாவேஸ்கி பற்றி லெனின் சொன்ன “அவன் ஒரு கேடுகெட்ட மேதை” என்ற வாசகம் எனக்குப் பிடிக்கும். சமூக முன்னேற்றத்திற்கு பயன்படாத அவனின் படைப்புகள்தான் ‘உளவியல்’ என்ற துறைக்கே ஆணி வேராக அமைந்தது. கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த ‘கரம்சேவ் சகோதரர்கள்’ நாவலை இடதுசாரி இயக்கத்தின் அறிவுப் பகுதியான என்.சி.பி.எச். தான் வெளியிட்டிருக்கிறது. இதை ஒரு வளர்ச்சியாகத்தான் பார்க்கிறேன்.
க.நா.சு., சுந்தர ராமசாமிக்கு ஒவ்வாத படைப்புகள் என்னை ஆழமாக பாதித்திருக்கின்றன. ப.சிங்காரத்தின் படைப்புகள் குறித்து ஒரு சின்ன குறிப்பைக் கூட இருவரும் தந்ததில்லை. அது குறித்து சு.ரா. விடம் நேரடியாகவே கேட்டிருக்கிறேன். அப்போது அவர் சொன்ன பதிலும் நழுவலாக விழுந்தது. அது நழுவல் என்று புரியாத இளம்பிராயமும்கூட. சு.ரா.விற்கு ஏன் பிடிக்கவில்லை என்பது அடுத்து ஒரு சில ஆண்டுகளிலேயே புரிந்துவிட்டது. ப.சிங்காரம் மரபிலக்கியத்தை நவீன வாழ்க்கைக்குள் கையாண்ட விதம் அபாரமானது. க.நா.சு, சு.ரா.விற்கு இந்த உலகம் பரிட்சயம் இல்லாதது. ப.சிங்காரம் குறித்து மிக விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதேபோல சே குவேராவின் வாழ்க்கையை எனது பதினெட்டாம் வயதிலேயே படித்தேன். இயக்க செயல்பாட்டில் இருந்த சந்திரசேகரன் என்ற சக கல்லூரி தோழன் வழி என் கையில் வைக்கப்பட்டது. சே குவராவின் வாழ்வும் பணியும் என்னை இன்றளவும் வசீகரிக்கிறது. இதையும் க.நா.சு.வோ. சு.ரா.வோ குறிப்பிட்டதில்லை. இப்படி என் வாசிப்பு சார்ந்து இன்னும் நூல்களைச் சொல்ல முடியும் என்றபோதும் க.நா.சு., சு.ரா.வின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடமாட்டேன்.
ஜெயமோகன் முன்வைக்கும் கருத்துகளில் எனக்கு விமர்சனங்கள் உண்டு. உதாரணமாக பெரியார் குறித்த விமர்சனங்களில் எனக்கு உடன்பாடில்லை. இப்படி பல மாற்றுக் கருத்துக்கள் எத்தனையோ உண்டு. என்றாலும் தமிழின் மகத்தான படைப்பாளி என்ற தகுதியைக் கொடுத்து விட்டுத்தான் விமர்சிப்பேன்.
நவீன இந்திய இலக்கியங்கள் குறித்து ஜெயமோகன் அளவு பேசிய சக படைப்பாளிகள் இல்லை. அடையாளம் காணப்படாது புதைந்திருந்த மேலான தமிழ்ச் சிறுகதைகள் குறித்து ஜெயமோகன் தான் முதலில் முன்வைத்து பேசினார். முக்கியமாக மகத்தான படைப்புகள் எவை என்று காணும் பார்வை அவரிடம் ஓங்கி வெளிப்படுகிறது. வாசகர்களையும் புதிய இளம் எழுத்தாளர்களையும் தீவிர எழுத்தியக்கத்திற்குள் கொண்டு வந்தததில் ஜெயமோகனுக்கு நிரம்ப பங்கு உண்டு. அவர் வைக்கிற இலக்கிய விமர்சனங்கள் பொருட்படுத்தத் தக்கவை. ஜெயமோகனிடம் நாம் கற்க வேண்டிய முக்கியமான பண்பு இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்தல். கடுமையான உழைப்பு. மகத்தான ஒரு படைப்பை கொடுத்து ஜெயமோகனை திக்கு முக்காடச் செய்யவேண்டும் என்ற சவாலை ஏற்றவர்கள் அவர்களில் யாரும் இல்லை. வழக்காடுவதைத்தான் பெரிய பணியாக கருதிக் கொள்கிறார்கள்.
என் நூல்கள் எல்லாம் தமிழினி பதிப்பகத்தில் வருவது குறித்த மர்மத்தையும் அதிர்ஷ்டத்தையும் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள்.
என் திருமண நாளை ஒட்டி ஒரு சிறுகதை தொகுப்பைக் கொண்டுவர ஆசைப்பட்டேன். என் இலக்கிய நண்பர் எஸ்.ஷங்கரநாராயணன் தொகுப்பைக் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றார். தட்டச்செல்லாம் செய்துமுடித்தாகிவிட்டது. என்னால் அந்தச் சமயத்தில் 2000 ரூபாயைப் புரட்டித் தர முடியவில்லை. கிடப்பில் போட வேண்டியதாகிவிட்டது. வசந்த குமார் பதிப்பாளர் என்பதைவிட அவர் மிகச்சிறந்த இலக்கிய வாசகர். சொல்லப்போனால் கறாரான விமர்சகர். அவரை ஒரு பதிப்பாளர் என்று மதிப்பிடுவதை விட இலக்கியம் குறித்து விரிந்த பார்வையும் கவித்துவ கணங்களை கண்டு சொல்லும் மேதமையும் பெற்ற தன்னியல்பான ஒரு இலக்கியவாதி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
என்னை யார் என்று தெரியாமலே ‘நுண்வெளிக் கிரணங்கள்’ நாவலை ஓடும் பேருந்தில் பாதி படித்த வாக்கில் மூடிவைத்துவிட்டு தன் நண்பர்களுக்கு (மாரீஸ், பாதசாரி) தமிழில் அசலான வீரியம்மிக்க ஒரு படைப்பாளி பிறந்து விட்டான் என்று சொன்னாராம். அவர் பதிப்பகம் தொடங்கியதும் பாஸ்கர் சக்தி, க.சீ. சிவக்குமார் போன்ற நண்பர்களிடம் இந்த வேணு பையன் எங்கு இருக்கிறான்; அவன் கதைகளைக் கொண்டுவர விரும்புகிறேன் என்று கேட்டிருக்கிறார். அந்த நண்பர்களையும் அழைத்துக் கொண்டு 500 மைல்களுக்கு அப்பால் பேருந்து வசதியில்லாத என் குக்கிராமத்திற்கே தேடிவந்தார். திருமண நாளில் வெளியிட நினைத்த தொகுப்பை எஸ். ஷங்கரநாராயணனிடம் பெற்று வந்திருக்கிறார். இன்று வெரைட்டியாகவும் நுட்பமாகவும் எழுதும் தமிழ் இளம் எழுத்தாளன் நீதான்; உனது ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’ சிறுகதை தொகுப்பை நான் வெளியிடுகிறேன் என்று கேட்டார். முதல் சிறுகதை தொகுப்பு வந்ததின் மர்மம் இதுதான். இந்த மர்மம் இன்னும் தொடர்கிறது.
தமிழினி பதிப்பகத்தில் நூல் வருவது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவருடைய இலக்கிய அளவுகோலின்படி பிரசுரம் சார்ந்து நிராகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் அவர் மீது கடுமையான கோவத்துடன் இருக்கிறார்கள். என்னை நிரகரித்தாய் அல்லவா நீ வெளியிடும் படைப்புகளையும் நிராகரிப்போம் என்ற முன்தீர்மானம் நூற்றுக்கு நூறு இவர்களிடம் வெளிப்படுகிறது. வெளிப்பட்டிருக்கிறது. சில சமயம் நான் இக்கட்டிலும் மாட்டிக்கொள்கிறேன். இளம் எழுத்தாளர்கள் தங்களின் தொகுப்பை என்னிடம் கொடுத்து வசந்தகுமாரிடம் சொல்லி, கொண்டுவரப் பாருங்கள் என்கிறார்கள். அப்படி வாங்கித் தந்ததும் உண்டு. அல்லது நீங்களே அனுப்புங்கள் என்று முகவரியைத் தந்திருக்கிறேன். பெரும்பாலும் வராது; அவர் என்னிடம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து போடமுடியாது என்பார். இதை என்னால் நண்பர்களிடமும் சொல்ல முடியாது. அந்தப் புகழ்பெற்ற அவரின் வாசகம் அவரது நெருங்கிய நண்பர்களிடம் பிரசித்தம். எனக்கு தர்ம சங்கடமான நிலை. இந்த இலக்கிய உலகம் என்ன நினைக்கிறது என்றால் நான் சொன்னால் அவர் போடுவார்; வேணு சொல்ல மறுக்கிறார் என்று நினைக்கின்றனர். உண்மையான சிக்கல் என்ன தெரியுமா? வசந்தகுமார் அவரே படித்து அவருக்குப் பிடித்திருந்தால் தேர்ந்தெடுக்கிறார். பிடிக்கவில்லை என்றல் எனக்குப் பிடிக்கவில்லை தமிழினியில் போட முடியாது என்கிறார். சிக்கல் என்னவென்றால் உலக இலக்கியங்கள் படித்த மேலான இலக்கியவாதியாக இருப்பதுதான். இவர் பதிப்பக தொழிலுக்கு வந்திருக்கக் கூடாது. இது தெரியாமல் பலர் தங்கள் வருத்தங்களை வெளியிடுகின்றனர். ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒருவரிடம் இப்போது எழுதும் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் யார் என்று ஒரு கேள்வி கேட்டால் தமிழினி பதிப்பகத்தின் வழி மட்டுமே வந்த எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லமாட்டார். அப்படி சொல்ல நேர்ந்தால் தமிழினியின் மார்ஜின் லெவலுக்கு எழுதும் எழுத்தாளர்களைச் சொல்வார். பின்னால் இப்படியான கேள்விக்கு இந்தா பார் என்று சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா?
தமிழினி வசந்தகுமாரிடம் கடுமையான பிடிவாதம் உண்டு. தான் வெளியிடும் நூலை அவராக எந்த இலக்கிய இதழ்களுக்கும் மதிப்புரைக்கோ, விமர்சனத்திற்கோ அனுப்புவதில்லை. அப்படி இதழ்களில் வந்தவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். அவரிடம் கேட்டுப் பெற்று மதிப்புரை வெளியிட்டவர்கள். இந்த வசந்தகுமார் அப்படியென்ன இலக்கிய பொக்கிஷத்தை வெளியிட்டிருக்கிறார் என்று வாங்கி வாசித்ததினாலோ, அல்லது பத்திரிகையுடன் கொண்ட தொடர்பினால், பணியினால் நூலை எடுத்து ஒரு தீட்டு தீட்டி விடவேண்டும் என்று நன்கு முன்கூட்டியே திட்டமிட்டு வன்மத்தை விமர்சனம் என்ற போர்வையில் வெளியிடுபவர்கள். தமிழினி வெளியிட்ட படைப்பாளிகளில் வேணு ஒரு காட்டாறு; அக உலகின் மகத்தான சஞ்சாரி என்று சொல்வாராம். ஊர் உலகம் தமிழினி படைப்பாளிகளிலேயே ஆக மோசம் வேணுகோபால் என்கிறது. சமீபத்தில் கூட என் ‘பால்கனிகள்’ நாவலை கி.ராவின் அட்டகாப்பி என்று பொருள்பட ஒரு நண்பர் கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார். அது கருப்பு – வெள்ளையாகவும் பிரச்சாரத்தையே நோக்கமாகக் கொண்டும் எழுதப்பட்ட ‘நாவல்’ அல்ல ஆவணம் என்று சான்றளித்திருக்கிறார். அரவாணிகள் பற்றி பலர் எழுதாத சூழலில் இவராவது எழுதியிருப்பதால் கலை இல்லையென்றாலும் தலித் படைப்புகள் போல இதற்கும் ஒரு தேவை இருக்கிறது என்கிறார். அது ஒரு குறு நாவல்; ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து சொல்லப்பட்ட நாவல். வேறு வகையில் சொன்னால் அதன் வடிவ ஒருமை சிதையும் என்பது பற்றியெல்லாம் பேச்சு இல்லை. அதே நாவலை ஒரு பெரும் படிப்பாளி கச்சிதமாகவும், கலைப்பூர்வமாகவும் எழுதப்பட்ட ‘அரவாணிகளின் வேதபுத்தகம்’ என்றும் சொல்கிறார்.
எங்கள் தேனி பகுதியில் நெல் மூடை, சோள மூடை என்றும் சொல்ல மாட்டர்காள். மூட்டை என்று அழுத்திச் சொல்வார்கள். இளையராஜா ஒரு பாடலில் கூட ஒரு மூட்டை கடலை, ரெட்டு மூட்டை கடலை… .. கடலை கடலை என்று பாடுவதை கேட்டிருக்கலாம். ‘கூந்தப்பனை’ குறுநாவலில், ‘முதுகில் மூட்டையைத் தூக்கிக்கொண்டு வந்தான்’ என்று எழுதியிருந்தேன். மூடை என்பதுதான் சரி. மூட்டை என்பது தவறு. இதுகூட தெரியாத இவன் என்ன எழுத்தாளன். எனவே இது மோசமான நாவல் என்று விமர்சனம் செய்திருந்தார் அருமை நண்பர். இன்னும் ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ விவகாரம் தீர மாட்டேன் என்கிறது. தமிழில் எழுதப்பட்ட கவித்துவம் மிகுந்த மிகச்சிறந்த குறுநாவல்களில் ஒன்று ‘கூந்தப்பனை’ என்று ஜெயமோகன் சொல்கிறார். இப்படி வசந்தகுமார் வெளியிட்ட எனது நூல்களுக்கு எதிரும் புதிருமான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. இப்போது நீங்கள் சொல்லுங்கள் சாந்தன், தமிழினியில் என் நூல்கள் வெளிவருவது அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்று. கிராமத்தில் புகழ்பெற்ற பழமொழி உண்டு. உன்னை வெட்டாட்டியும் உன் பிய்யை வெட்டுவேன் என்று. பூனை அந்த வெட்டுக்கெல்லாம் சிக்காது என்பதை மறந்து விடுகிறார்கள்.
சு.வேணுகோபால் அண்ணா. உண்மையில் நான் எதிர்ப்பார்த்தைவிட உங்கள் பதில்கள் ஆச்சரியமூட்டுகின்றன. அழுத்தமான பதில்கள். உங்களுக்கு இசை மற்றும் சினிமாவில் ஆர்வம் உண்டா?
கனகா, மலேசியா
அன்புத் தங்கை கனகாவிற்கு,
எனக்கு இசையிலும் சினிமாவிலும் ஆர்வம் உண்டு. முறையாக இசையைக் கற்றவன் அல்ல. சினிமாபாடல்களை ரசித்து கேட்பேன். இரவு நேரத்தில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு பாடுவேன். தூக்கத்தை கட்டுப்படுத்த அது ஒரு வழி. நண்பர்கள் சூழ இருக்கும்போது பாடச் சொல்வார்கள். பாடுவேன். உதவிபேராசிரியர் பணி இடத்திற்கான தேர்வு எழுத நண்பர்களுடன் திருச்சிக்குச் சென்றிருந்தேன். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போய்விட்டு ரூம் எடுப்போம் என்றார்கள். கோயிலுக்குச் சென்றோம். கம்பன் ராமாயணத்தை அரங்கேற்றியதாகச் சொல்லப்படும் மேடைக்கு நேர் எதிர் உயர்ந்த கற்சுவர் நிழல் விழுந்திருந்தது. அந்த நிழலில் அமர்ந்ததும நண்பர் ஜெயராஜ் ஒரு பாடலை எடுத்துவிடு என்றார். மதுரை மணியின் ‘கோடிமலைகளிலே’ பாடலைப் பாடினேன். வட இந்தியாவிலிருந்து சுற்றுலா வந்தவர்கள் எங்களைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். திக்கென்று ஆகிவிட்டது. அரைகுறையாகத் தெரிந்த பாடல்களை சிலவற்றைப் பாடி சமாளிக்க வேண்டியதாகிவிட்டது. ‘ஆசை நூறுவகை’ ‘இந்த பச்ச்க்கைிளிக்கொரு’ ‘சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து’ ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ‘சிந்து நதிக்கரையோரம்’ இப்படியான பாடல்களை நண்பர்களுக்காக பாடுவேன்.
எங்கள் ஊர்மக்களுக்கு விவசாயம் தவிர வேறேதுவும் தெரியாது. அவர்களின் பொழுது போக்குகளில் முக்கியமானது சினிமா பார்ப்பதுதான். பக்கத்து ஊரில் டெண்ட் தியேட்டர் இருந்தது. முன் இரவில் நண்பர்களுடன் படம்பார்க்கச் செல்வதும், நடு இரவில் திரும்பி வருவதுமான ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை எனக்கும் வாய்த்தது. நான் உலகத்திரைப்படம் பார்த்து வளர்ந்தவன் அல்ல. சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், சிவக்குமார், ரஜினி, கமல் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். எங்கள் டெண்ட் தியேட்டருக்கு இவர்கள் படங்கள்தான் வரும். பின் நாட்களில் டிசிகாவின் பைசைக்கிள் தீஃப், சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’, அகிரோ குரோசோவின் ‘த்ரோன் ஆஃப் பிளட்’ போன்ற படங்களைப் பார்த்தேன். தமிழில் எனக்குப் பிடித்த படம் ‘உதிர்ப்பூக்கள்’. நான் அதிகமுறை பார்த்தப்படம் சிவாஜிகணேசனின் ‘வசந்த மாளிகை’. எங்கள் வீட்டில் எல்லோரும் சிவாஜி ரசிகர்களாக இருந்ததால் நானும் அவரது ரசிகனாக வளர்ந்தேன்.
‘அங்காடித்தெரு’, ‘காதல்’ ‘சுப்பிரமணியபுரம்’ ‘ஆடுகளம்’ இப்படியான படங்கள் எனக்குப் பிடித்திருந்தன.
அண்ணா, எனக்குச் சில கேள்விகள் உள்ளன. சிறுபிள்ளைதனமாக இருந்தால் மன்னிக்கவும்.
- சிறுகதைக்கான கருவை உங்கள் வாழ்க்கையில் இருந்து பெறுகிறீர்களா? (அப்படி எடுக்கலாமா)
- உங்களைக் கவர்ந்த தமிழ் அல்லாத எழுத்தாளர்கள் அவர்கள் படைப்புகள் என்ன?
அப்துல் காதர், சிங்கப்பூர்
அன்புத் தம்பி அப்துல்காதருக்கு,
சிறுகதைக்கான கருவை என் சொந்தவாழ்க்கையிலிருந்து பெரும்பாலும் எடுக்கவில்லை. அப்படி சொந்தவாழ்க்கையிலிருந்து எடுத்து எழுதலாம். பிறரின் வாழ்க்கையிலிருந்து அதிகமும் நான் எடுத்துக் கொள்கிறேன். அப்படி எடுக்கும்போது என் வாழ்பனுபவங்கள் பயன்படுகின்றன. சொந்த வாழ்க்கையிலிருந்து எழுதும்போது புனைவின் சாத்தியங்கள் குன்றிவிடுகின்றன. வெளியிலிருந்து எடுக்கும் போது புனைவதற்கான சாத்தியங்கள் கிளைபிரிந்தபடி செல்கின்றன. இந்த படைப்பாக்க பயணத்தின் வழி பதிய உலகம் ஒன்று உருவாகிறது. சில சமயம் நமக்கே ஆச்சர்யப்படும்படி உருவாகிவிடுகிறது. அந்தப் புனைவு வெளியில் பிறறையும் அறிந்துகொள்ள முடிகிறது. நம்மையும் அறிந்துகொள்ளமுடிகிறது. என் காதில் விழுந்த ஒரு சின்ன தொடரிலிருந்து உருவானதுதான் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ சிறுகதை. அதேபோல உருவானதுதான் ‘கூந்தப்பனை’ குறுநாவல்.
சொந்த வாழ்க்கையில் நேரும் சில புதிய அனுபவங்கள், அபூர்வ நிகழ்வுள், வாழ்வின் புதிர்கள் கதையின் களனாகவோ கருவாகவோ கொண்டு எழுதலாம். கதையின் கருவை எங்கு எடுத்தீர்கள் என்பது முக்கியமில்லை. எப்படி கலையாக மாற்றி தந்திருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
அடுத்த கேள்வி…
என்னைக் கவர்ந்த தமிழ் அல்லாத எழுத்தாளர்களின் படைப்புகள் நிரம்பவே உண்டு. நிறைய கதைகள் நினைவிலிருக்கின்றன. எழுத்தாளர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. நினைவில் வரும் பெயர்களைச் சொல்கிறேன். பஷீரின் ‘பால்யகாலசகி’, ‘மதில்கள்’, ‘தகழியின்”, ‘செம்மீன்’, யு.ஆர்.அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’, பொற்றேகாட்டின் ‘விஷக்கன்னி’ பதின்பந்தியோபத்தியாயவின் ‘நீலகண்ட பறவையைத்தேடி’ சிவராமகாரந்தின் ‘மண்ணும் மனிதர்களும்’ தராசங்கர் பானர்ஜியின் ‘ஆராக்கிய நிகேதன்’.
ஜோஸ்வாண்டேலுவின் ‘அபாயம்’ எச்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ நந்தியேல் ஹாத்தனின் ‘நினைவுச்சின்னம்’ நட்ஹாம்சனின் ‘நிலவளம்’ செல்மாலேகர்லேவின் ‘மதகுரு’ டால்ஸ்டாகின் ‘அன்னா கரீனா’ தாஸ்தாவேஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ அலெக்சாண்டர் குப்ரினின் ‘செம்மணி வளையல்’ ஆல்பர்ட் காம்யூவின் ‘அந்நியன்’ ‘காஃப்காவின் விசாரணை’ ‘உருமாற்றம்’ மார்த்தாத்ரபாவின் ‘நிழல்களின் உரையாடல்கள்’ மார்ட்டின் லூகார்ட்டின் ‘தபால்காரன்’ ஆந்ரே லீடின் ‘பாரபாஸ்’ ‘குறுகிய வழி’ கிரேஸாடெலடாவின் ‘அன்னை’ ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ போன்ற பலபடைப்புகள் என்னை கவர்ந்தவை. இதே போல மேலைநாட்டு சிறுகதையாளர்கள் நிரம்பபேர் உண்டு.
ஜெயமோகன் குறித்த அற்புதமான கணிப்பு. உண்மைதான். அவரை விமரிசிப்பவர்கள் முன்னமேயே ஒரு கருத்தைத் தங்கள் மனதில் வைத்துக்கொண்டு அதனடிப்படையில்தான் விமர்சனம் செய்கின்றார்கள். என்ன செய்வது? பரிதாபப்படுவதைத் தவிர!
’சொந்த வாழ்க்கையிலிருந்து எழுதும்போது புனைவின் சாத்தியங்கள் குன்றிவிடுகின்றன. வெளியிலிருந்து எடுக்கும் போது புனைவதற்கான சாத்தியங்கள் கிளைபிரிந்தபடி செல்கின்றன. இந்த படைப்பாக்க பயணத்தின் வழி பதிய உலகம் ஒன்று உருவாகிறது. சில சமயம் நமக்கே ஆச்சர்யப்படும்படி உருவாகிவிடுகிறது. அந்தப் புனைவு வெளியில் பிறறையும் அறிந்துகொள்ள முடிகிறது. நம்மையும் அறிந்துகொள்ளமுடிகிறது.’- அழகான, சரியான விளக்கம்!
உங்கள் நாவல், குறுநாவல், சிறுகதை விரும்பி படித்துயிருக்கிறேன், அதேபோல் உங்கள் பதிலும் படிக்க நன்றாக இருக்கிறது.