பூனை கழுத்தில் மணி கட்டுவது யார்
ஏன்
ஓடி
ஒளியவா?
நூறு எலிகள் பூனையின்
கழுத்தை கடித்துக்
குதறுவோம்…
– காசி ஆனந்தன்
படித்ததும் கொஞ்சம் பதட்டம் வந்தது. யோசிக்கத் தோன்றியது. நேரம் எடுக்க நினைத்தேன். பதட்டம் குறைந்தது. இப்போது எழுத தொடங்குகிறேன். பதட்டமின்றி எழுதுகிறேன். ஆனால், ஒரு மாத கால இடைவேளிவிட்டு பதில் எழுதுவதற்கு ஏன் இத்தனை பதட்டம், படபடப்பு, கருணை மனு இருந்தது மலேசிய எழுத்தாளர் சங்க அறிக்கையில் என தெரியவில்லை.
முதலில் இந்த பிரச்சனையின் ஆணி வேரை நினைவுப்படுத்த நினைக்கிறேன். கடந்த மாதம் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரன் நிகழ்ச்சி ஒன்றின் மேடையேறி கூறிய வார்த்தைகள்தான் இப்பிரச்னைக்கு ஆதாரம். மலேசிய எழுத்தாளர் சங்க தலைவர் இவ்வாறு பெண் படைப்பாளர்கள் குறித்த தனது கருத்தினை கூறினார். அது குறித்து வல்லினம் இணைய இதழில் நான் எதிர்வினையை எழுதினேன். அதன் ஒரு பகுதி பின் வருமாறு;
இதுவரையில் பெண்களுக்கு எழுத்தாளர் சங்கம் கொடுத்து வந்த மரியாதை, பரிசு, முக்கியத்துவமெல்லாம், அவர்களின் எழுத்துகளை படித்ததால்தான் என நினைந்திருந்த அவர்களுக்கும் சரி, இன்னமும் எழுத்தாளர் சங்கத்தில் அதி பயங்கரமாக உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் சரி… சரியாக புரிய வைத்துவிட்டார் சங்கத்தலைவர். இதுவரையில், ‘கொடுத்தது’ எல்லாமே கட்டாயத்தின் பெயரிலும், ஒரு பெண்ணுக்காவது பரிசு, கொடுக்கனுமே என்ற ஆண்களின் பெருந்தன்மையாலும்தானாம். அதோடு, தான் தலைவரான பிறகு, பெண்களுக்கு கண்டிப்பாக பரிசு கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருப்பதாக மேடையிலே முழங்கிய எழுத்தாளர் சங்க தலைவரின் அந்த பேச்சு; பேச்சு என்பதை விட ஆணாதிக்க சிந்தனை என்பதே சரி. இது கண்டிக்கத்தக்கது.
அந்த பேச்சுக்கு எங்கள் எதிர்ப்பினை காட்டவே அடுத்த சில வாரங்களில் நடைபெறவிருக்கும் சிறுகதை வெளியீட்டு விழாவை புறக்கணிப்பதாக நானும் எனது சில நண்பர்களும் (பரிசுக்குரியவர்களும் இதர நண்பர்களும்) முடிவு செய்திருப்பதை கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். அதோடு தான்தோன்றி தனமாக பெண் படைப்பாளிகளை குறித்து அவர் பேசிய பேச்சுக்கு உரிய விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டிருந்தேன். இன்றுவரை அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வந்தபாடில்லை.
இப்போது ஒரு மாத காலக்காத்திருப்புக்கு பிறகு தயாஜி என்ற ஒன்றை மனிதனின் கருத்தால்; அது நடக்காது; இது நடக்காது என பட்டியல் போடுகிறார்கள். அதில்தான் எத்தனை கருணை மனு. இன்னும் கொஞ்சம் விட்டால் இனி நாங்கள் குளிக்க மாட்டோம் தூங்கமாட்டோம் என்று முடிவு எடுத்திருப்பார்கள் போல. ஆனால் கவனியுங்களேன் எதையெதையோ நிறுத்த முடிவெடுத்தவர்கள் வெளியூர் பயணத்தை குறித்து ஒன்றும் சொல்லவில்லை. ஆகா இவர்களின் முடிவால் எழுதியவர்களுக்கு எது வேண்டுமானாலும் ஏற்படலாம். உடன் சேர்ந்து சுற்றுகின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதா என கேட்க வைக்கிறது.
மேலும் சொல்வதற்கு முன்பாக சங்கத்தின் அறிக்கையில் இருந்து (அது அறிக்கையா..?) சிலவற்றை பார்ப்போம்.
1. ‘சங்கம் கீழ்தரமாக விமர்சிக்கப்படுகிறது. தயாஜியின் இந்த அறிக்கைக்கு இதுவரையில் வேறு எழுத்தாளர்கள் யாரும் மறுப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை’. ஆக, கூட்டு சேர ஆட்கள் இவர்களுக்கு தேவை.
2. ‘இந்த எழுத்தில் உள்ள சீற்றமும், குரோதமும் சங்கத்தை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஆனாலும் இந்த எழுத்தாளர் சூட்டும் குற்றச்சாட்டுகளில் சட்ட சிக்கல் இருப்பதையும் சங்கம் உணர்கிறது’ இந்த முதல் வாக்கியத்தையும் இரண்டாவது வாக்கியத்தையும் கவனியுங்கள். இவர்கள் சீற்றம் என்றும் குரோதம் என்றும் குறிப்பிடுவது எதை தெரியுமா..? இது நாள் வரையில் அவர்ளுக்கு தெரியாமல் இருந்த / எழுத்தாளர்களிடம் சொல்லாமல் இருந்த சட்ட சிக்கல்களை (அவர்களே சொல்லியிருக்கிறார்கள்) அவர்களுக்கு தெரியப்படுத்தியதைதான்.
3. ‘நன்கொடையாளர்களின் பணமே தொகுப்பு நூலை அச்சிடவும் பயன்படுத்தப்படுகிறது’ என்று கூறிய பிறகு சில பத்திகளை தாண்டி இருக்கும் வாக்கியங்கள் இவை – ‘நூல் வெளியீட்டு விழாக்களின் போது கிடைக்கும் பணம் மட்டுமே வரவாக இருக்கும் என்பதையும் அந்தத் தொகையைக் கொண்டு நூல் தயாரிப்பு , பரிசளிப்பு விழா செலவைக்கௌஉட ஈடுகட்ட முடியாது என்பதையும் எழுத்தாளர்கள் உணர்வார்கள்’ . முதலில் நன்கொடையில் செய்கிறோம் என்கிறீர்கள் அடுத்ததாக, நூல் வெளீயீட்டில் வரும் பணத்தை வைத்து செய்கிறோம் என்கிறீர்கள். இதில் எழுத்தாளர் எதனை உணரவேண்டும் என நினைக்கிறீர்கள் என புரியும் படி சொல்லுங்களேன்.
4. ‘நூலை அச்சிட்டு அதனை விற்று லட்ச லட்சமாய் வருமானம் ஈட்டும் வாய்ப்பு உண்டா..?’ இதற்கு சங்கம்தான் சரியான திட்டங்களை வகுத்து செயல்பட்டிருக்க வேண்டும்.
5. ‘இதில் பங்கு கொண்ட எழுத்தாளர்கள் யாரும் சட்டபுத்தகத்தைக் காட்டி இதனை ஆட்சேபிக்கவில்லை’ என்றும் கூறுகிறீர்கள். எழுதுகின்ற எங்கள் எழுத்தை குறித்த பிரக்ஞை இருப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா.?
6. ‘எழுத்தாளர்களுக்கு விற்பனை உரிமைப் பணத்தை வழக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறில்லை. ஆனால் இது சாத்தியமா? அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் எத்தனை என்பதை எழுத்தாளர் அறிவார்கள் ’ என்கிறீர்கள். தவறில்லாத ஒன்றின் என்ன சிக்கல்கள் இருக்க முடியும் அதிலும் நீங்கள் குறிப்பிடும் நடைமுறை சிக்கல்கள். அதனை களைவதற்கு தானே எழுத்தாளர் சங்கம் என்றே எழுதுகின்றவர்களுக்கு இருக்கிறது.
7. ‘இவை அனைத்தும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர்கள் படைப்புகளுக்கும் செய்யப்படுகிற மரியாதையையும், வழக்கப்படுகின்ற அங்கிகாரமாக சங்கம் கருதி வந்தது. ஆனால் இதனை சுரண்டல் என தயாஜி அசிங்கப்படுத்துகிறார்.’ எழுத்தாளன் தன் சக உரிமையை கேட்பது, விழிப்போடு இருப்பதுதான் உங்களை அசிங்கப்படுத்துவதா..? அப்படியென்றால் நான் எழுதுவது எதற்காக, வெறுமனே என் பெயரும் படமும் வருமே என்பதற்காகவா..?
அதெப்படி, தயாஜி ஒருவனால் அடுத்தது நீங்கள் செய்யவிருக்கும் கவிதை ஆய்வு நிறுத்தப்படுகிறது… இனி சிறுகதை போட்டி நிறுத்தப்படுகிறது… மலாய் மொழிபெயர்ப்பு நிறுத்தப்படுகிறது… கிடைத்த நன்கொடையையும் (இதுகுறித்து இதுவரை ஏதும் பேசப்பட்டதா என படித்த நினைவு எனக்கு இல்லை) திரும்ப கொடுக்கப்படபோகிறது… 2013 ஆண்டுக்கான சிறுகதை நூலும் விநியோகம் செய்யப்படமாட்டாது என அறிக்கை விடுகிறீர்கள்…? இதனை எழுதிய கைகள்தானே ‘இதில் எழுத்தாளரின் பதிப்புரிமை தொடர்பான சிக்கல்கள் இருப்பதை சங்கம் ஒப்புக்கொள்கிறது’ என எழுதியிருக்கிறது. நிறுத்தப்படுவதற்கு தயாஜி காரணமா… அல்லது காப்பிரைட் குறித்து இதுவரை தெரியாமல் எழுத்தாளர்களுக்கு சொல்லாதது காரணமா..? தெரிந்துவிட்டது, இனிமேல் எல்லோரும் இது குறித்து கேட்பார்கள் என்ற காரணமா..? பிரச்சனையை திசை திருப்பவா..? நான் எழுதியதின் காப்பிரைட் குறித்து பிரச்சனையை ஒப்புகொண்ட பிறகு அநாவசியமாக என் பெயரை பல முறை பயன்படுத்தி என்னை பலிகடா ஆக்க திட்டமா..? இனி மலேசிய எழுத்தாளர்களின் அவல நிலைக்கு காரணமென என்னை காட்ட சதியா..?
கொஞ்சம் யோசித்தாலே போதுமே உங்கள் ஓட்டை தெரிந்துவிடும். அதை மறைக்க எத்தனை இடத்தில் என் பெயர். கதை எழுதுகின்றவனிடமே கதை விட்டிருக்கிறீர்கள்..!
நிறைவாக, உள்நாட்டு பல்கலைக்கழங்கள், தேசிய நில நிதி கூட்டுரவு சங்கத்தையும் இதில் இழுத்துவிடுகிறீர்கள். அவர்கள் நடத்துவது சிறுகதை போட்டி. அதற்கு எழுத்தாளர்கள் சுய விருப்பத்தில்தான் எழுதி அனுப்புவதாக கையொப்பம் இட்டு ஒரு கடிதத்தை இணைக்க வேண்டும். அதனை அவர்கள் தத்தம் போட்டி விதிமுறைகளில் தெளிவாக எழுதியிருப்பார்கள். ஆனால் நீங்கள்…? இதற்கு பதில் இருக்கிறதா..?
எழுத்தாளர் நண்பர்களே, உங்கள் கதைகளுக்கான உரிமம் மிக அவசியமான ஒன்று. இனிமேலும் அதுகுறித்த பிரக்ஞை இல்லாமல் இருப்பது சரியல்ல. நம் நாட்டில் எழுத்தாளர்களின் பொருளாதாரமும் அவர்களின் தரமும் உயர மிக முக்கிய ஒன்று அவர்களின் படைப்புக்கு கிடைக்கும் உரிமத்தொகை (royalty).