அலும்னி மீட் அழைப்பிதழைப் பார்த்தபோது தோன்றிய எரிச்சலும் கோபமும் அதே அளவில் எனக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அறையின் சாவிக்காக காத்திருந்தபோது மீண்டும் தோன்றியது. அப்படியொன்றும் ரொம்ப நேரம் நான் காக்க வைக்கப்படவில்லை. அதோடு என் சிறிய பெட்டியை தூக்கிக் கொண்டு நடந்து வருவதற்குக்கூட டிரிபிள் ஈ டிபார்ட்மெண்ட் மாணவன் ஒருவன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தான்.
அவனை என்னிடம் அறிமுகம் செய்தபோது துறைத் தலைவர் “எங்கள் துறையில் இலக்கிய ஆர்வம் கொண்ட மாணவன் இவன் ஒருவன் தான்” என முகம் முழுக்க பரவிய திருப்தியுடன் ஆங்கிலத்தில் கூறினார். அதேநேரம் அவன் முகத்தை நோக்கித் திரும்பியபோது “இவனையெல்லாம் போய் அறிமுகம் செய்ய வேண்டி வந்துவிட்டதே” என்பதையெண்ணி ஒரு முகச்சுருக்கம் அவரில் நிகழ்ந்தது. அந்தச்சுருக்கத்தின் பெரிதுபடுத்தப்பட்ட வடிவம் எந்நேரமும் பொறியியல் படித்துவிட்டு தமிழ் இலக்கியத்தில் ஈடுபட்டிருக்கும் என்னை நோக்கித் திரும்பும் என்பதை அவதானித்தபோது ஒரு மெல்லிய துணுக்குறலை மனம் அடைந்தது. அதேநேரம் இலக்கியத்தை அறிந்திராத அந்த பேராசிரியரை எப்படியாவது பிராண்டிவிட வேண்டுமென மனம் தவித்தது. அதற்கான ஆயத்த சொற்களை நான் தேடுவதை உணர்ந்துகொள்ளும் அளவுக்கு பேராசிரியருக்கு நுண்ணுணர்வு இல்லை.
“கதகூட படிக்கத் தெரியாத பசங்கள வச்சிகிட்டு குப்ப கொட்றது கஷ்டம்ல சார்” என அவர் எதிர்பார்க்காத தொனியில் சட்டென கேட்டேன். “குப்பை” என்ற சொல் மட்டும் ஆசிரியரிடம் அதிர்ச்சியை உருவாக்குவதை நெஞ்சு படபடக்கும் மகிழ்வுடன் உணர்ந்தேன். அந்த சொற்றொடரை ஆசிரியர் செறித்து உள்வாங்கச் சிரமப்படுவது முகத்தில் நன்றாகத் தெரிந்தது. உள்வாங்கிவிட்டதன் ரேகைகள் முகத்தில் படர “அவங்களுக்கு தேவையானது எதுவோ அதைச் செய்கிறார்கள். சிலருக்கு ரீடிங் சிலருக்கு கிரிக்கெட் சிலருக்கு போர்னோகிராஃபி” என்றார் ஆசிரியர்.
நான் சிரித்துக்கொண்டே “சிலருக்கு பாடமெடுக்கும் தொழில்” என்றேன்.
மாலை ஒரு அபத்தமான அறிமுக நிகழ்வு நடைபெற்றது. பல துறைகளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்களைக் கொண்டு இன்னாள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க நடத்தப்படும் இந்த “அலும்னி மீட்”டில் என் பெயர் இடம் பெற்றிருந்ததை என்னால் நம்ப முடியவில்லை. கல்லூரியின் முதல்வர் இலக்கியத்தின் மீது காதல் கொண்டவர் என்ற பிம்பம் தேவைப்படுவதன் காரணமாக இலக்கியத்தோடு தொடர்புடைய ஒருவனையும் அங்கு அழைப்பார்கள் என பின்னர் தெரிந்து கொண்டேன். “வினோத உலகம்” என்ற தலைப்பில் ஒரு வார இதழில் விக்கிபீடியாவைப் பார்த்து பத்தி எழுதும் முன்னாள் மாணவன் ஒருவனை சென்ற வருடம் மெக்கானிக்கல் துறையின் அலுமினி மீட்டுக்கு அழைத்திருந்தார்கள் என்ற தகவலும் சேர்ந்து கிடைத்து நிம்மதியிழக்க வைத்தது.
வெள்ளிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு ஒரு அறிமுக நிகழ்வு இருக்கிறதென அழைப்பிதழில் போடப்பட்டிருந்ததை முக்கியமான அலும்னிக்கள் பார்க்கவில்லை போல. முழுதாக தேவையற்றவனான நானும் அவ்வளவாக தேவையற்றவர்களான வேறு சிலரும் மட்டும் அமரவைக்கப்பட்டு மாணவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டோம். நான் எழுத்தாளன் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போது மாணவர்களின் முகத்தில் குழப்பம் படரத் தொடங்கியது.
ஒரு மாணவன் மட்டும் “ப்ரோ முக்கியமான விஷயங்களை செய்யும் போது கான்ஃபிடன்ஸ் லெவல் கொறையுதே என்ன பண்றது. நீங்க புக்ஸ் எழுதுறவர் தானே சொல்லுங்க ப்ரோ” என முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு என்னைக் கேட்டான்.
“செய்யும் போதா செஞ்ச பிறகா” என்று அப்பாவியாக கேட்டுவிட்டு “முக்கியமான விஷயத்தை நீ தனியா பண்ணினா அப்படித்தான் ஆகும்” என்றேன். நான் சொல்லிய பதில் துறைத்தலைவரைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் புரிந்தது. கொஞ்ச நேர உறைதலுக்கு பின் அனைவரும் சிரித்தனர். அவன் சுயமைதுனத்தைப் பற்றி கேட்கிறான் என துறைத்தலைவரிடம் மிகுந்த நாகரிகத்துடன் ஆங்கிலத்தில் சொன்னேன். அவர் முகம் இறுகிப் போயிருந்தது.
மாலை சந்திப்புகள் முடிந்தபிறகு என் அறைக்கு ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி என தன்னை அறிமுகம் செய்து கொண்ட இளைஞன் என் பெட்டியை தூக்கிக்கொண்டு வந்தான். அப்படி ஒருவன் உடன் வருவது எனக்கு அசௌகரியத்தைத் தந்தது. நான் சற்று சங்கடத்துடன் அப்பெட்டியை அவனிடம் வாங்க முயல அவன் ஏறக்குறைய என்னை நெட்டித் தள்ளியபடி அப்பெட்டியை தூக்கிவந்தான். முன்பு துறைத்தலைவரால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவன் இவன் தான்.
“எனக்கு கல்கியை அவ்வளவா பிடிக்காது சார்” என்று சொன்னவனை நான் திரும்பிப் பார்த்தேன். வெற்றிப் பெருமிதத்துடன் “சாண்டில்யன் தான் சார் பெஸ்டு” என்றான். எனக்கு ஏனோ தூக்கிவாரி போட்டது.
“இப்ப எழுதுறவங்க யாரையும் நீங்க படிக்கிறதில்லையா?” என்றேன்.
அவன் சொன்ன பெயர்களைக் கேட்டபோது நான் மேலும் பதட்டத்துக்கு உள்ளானவன் ஆனேன்.
“அப்போ ஜெயகாந்தன்?” என லேசாக இழுத்தேன்.
“அவரெல்லாம் திமிர் பிடிச்சவர்னு சொல்றாங்க சார். அவ்வளவு திமிர் மனதில் இருந்தா எழுத்து எப்படி சார் வரும். அந்த எழுத்திலேயும் அகங்காரம் தான் முன்னாடி நிக்கும்” என்று சொல்லிவிட்டு எவ்வளவோ அறிவும் திறமையும் இருந்தும் அடக்கத்துடன் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்பட பாடலாசிரியர் பெயரைச் சொன்னான். நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவனருகில் நடந்து வருவது மனதை மெலிதாக கூசச் செய்வது ஏன் என அவன் என்னிடம் விடைபெற்றுக் கொண்ட போது புரிந்து கொண்டேன். அவன் இன்றில் வாழவே இல்லை. அவன் பேச்சுமொழி உடல்மொழி என அனைத்திலும் சற்று வயதான மனிதனின் தயக்கமும் உறுதியின்மையும் இருந்தது. இளைஞனுக்கு உரிய முட்டாள்தனமான உறுதியோ கனவோ அவனிடம் முழுவதுமாக இல்லாமலிருந்தது. அவனை எண்ணி மனம் பரிதாபமடைந்தது. அவனை விரட்டிச்சென்று அவனிடமிருக்கும் தமிழ் புத்தகங்கள் அனைத்தையும் கிழித்து எரிந்துவிடு வேண்டுமென்று மனம் உந்தியது.
அறைக்கு வெளியே நின்று நான் யோசித்துக் கொண்டிருப்பதை சற்று நேரம் அறைக்கு உள்ளே இருந்தவர்கள் பார்த்திருக்க வேண்டும்.
அறைக்குள் இருந்து எழுந்து வந்து என் கையைப் பிடித்தபடி “ப்ரோ நீங்க அசோக் தானே?” என்று சிநேக பாவத்துடன் கேட்டான் என்னை விட சில வயதுகள் குறைவாக இருக்கும் இளைஞன். நான் சிரித்தேன்.
“உங்களோட ரைட்டிங்ஸ படிக்க ட்ரை பண்ணியிருக்கேன் ப்ரோ. ஆனா ஒன்னுமே புரியல” என்று அவன் சொன்னபோது வழக்கமாக அப்படி சொல்கிறவர்களிடம் எனக்கு வரும் கோபம் வரவில்லை. அவன் என்னை அறைக்குள் அழைத்துச் சென்றான். அலட்சியமான உடைகள் போலத்தெரிந்த ஆனால் கச்சிதமான உடையணிந்திருந்த மேலும் சில இளைஞர்கள் அங்கிருந்தனர். புடவையணிந்த இரு பெண்கள் அங்கு அமர்ந்திருப்பது எனக்கு குழப்பத்தை அளித்தது.
அதை உணர்ந்தவனாக தாடியை மிக நேர்த்தியாக சவரம் செய்து முகத்தை வசீகரமானதாக மாற்றிக் கொண்டிருந்த இளைஞன் “ப்ரோ இப்போ எங்க டிபார்ட்மெண்ட் தவிர மத்தவங்களுக்கு செமஸ்டர் கம்ப்ளீட் ஆயிடுச்சு. சோ இப்போ ஹாஸ்டல் எம்டியா தான் இருக்கு. அலும்னி மீட், சிம்போசியம் ரெண்டையும் ஒன்னா கண்டெக்ட் பண்ணிடலாம்னு பிளான். சோ டெலிகேட்ஸ தங்க வெக்க ஹாஸ்டல ரெடி பண்ணிட்டோம். லேடீஸ் அலும்னீஸ ரிசிவ் பண்ண கேர்ல்ஸும் இருக்காங்க” என்றான்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் நான் படித்து முடித்து வெளியே சென்ற கல்லூரி அது. கல்லூரியை விட இந்த விடுதி நிறையவே கொடுத்திருக்கிறது. எடுத்துக் கொண்டும் இருக்கிறது. ஆனால் இன்று அதன் முகம் மொத்தமாகவே மாறிவிட்டிருக்கிறது. நான் தங்க இருந்த அறை மூன்று அறைகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டிருந்தது. விசாலமும் காற்றோட்டமும் நிறைந்த அறை. வராந்தாவில் இருந்து விடுதியின் உள்வட்டத்தை பார்க்க முடிந்தது. இரண்டு படுக்கைகள் தனித்தனியாக போடப்பட்டிருந்தன. ஒன்றில் அந்த மாணவிகள் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி என்னுடைய சிறுகதைகள் சிலவற்றை வாசித்திருப்பதாகச் சொன்னாள். சொன்னவளை விட என்னை யாரென்று தெரியாத வினோதத்துடன் பார்த்தவள் அழகாக இருந்தாள். அது வினோதம் என்பதை விட வெறுப்பு என்று சொல்லிவிட முடியும். கூர்மையான பெண்களிடம் இருக்கும் குணம் அது. ஒருவனது உடைமைகளைக் கொண்டே அவனது தகுதியை கணித்துவிடும் திறன். என் கைப்பையும் பெட்டியும் என் உடையும் எவ்விதத்திலும் நான் பொருட்படுத்தத் தக்கவன் அல்ல என அவளை எண்ணச் செய்வதை எண்ணி மனம் வெகுண்டது. அது என் அம்மாவின் குணமும் கூட. அவள் யாரையோ பழி வாங்கியதற்கு இவள் என்னைப் பழி வாங்குகிறாள் என்று சமாதானம் அடைந்துவிட முடியவில்லை. அவளது வெறுப்பினை நான் அறிந்துவிட்டதை அவளும் உணர்ந்து கொண்டுவிட்டாள். அவள் மனம் சொற்களை திரட்டும் முன் அவளை அழுத்தமாகப் பார்த்து “நீ என்ன இயர்மா” என்றேன். சற்று நேரத்துக்கு முன் என் சிறுகதைகளை வாசித்திருப்பதாகச் சொன்ன பெண் அதை ஒரு புறக்கணிப்பாக எடுத்துக் கொள்வாள் என்று தோன்றியது. ஆனால் அப்புறக்கணிப்புக்கென சீற்றம் கொள்ளும் அளவுக்கு அவளுக்குள் விஷம் கிடையாதென அவளைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது.
விஷம் உடையவள் இன்னமும் பதில் சொல்லி இருக்கவில்லை. அது எதிர்பார்த்தது தான். அப்படியிருப்பது என்னை துன்புறுத்தும் என அவள் கணக்கு போட்டிருக்கலாம்.
மேலும் அழுத்தமாக “நீ எந்த இயர்னு கேட்டேன்” என்றேன்.
தன்னை ஒருமையில் அழைக்க வேண்டாம் என்று ஆங்கிலத்தில் சொன்னாள். அங்கிருந்த இளைஞர்கள் பதற்றம் அடைவது தெரிந்தது. விஷமற்ற பெண் முகத்தில் ஒரு மெல்லிய சமாதானம் தோன்றியது.
நானும் “நீ எந்த வருடம் படிக்கிறாய்” என ஆங்கிலத்தில் மீண்டும் கேட்டேன். ஆங்கிலத்தைப் பொறுத்தவரை ஒருமை பன்மை பிரிவு இல்லையெனினும் கேட்கும் தொனி முடிவு செய்துவிடும் கேட்கப்படுகிறவரின் இடத்தை.
ஒரு நிமிடம் கூட என் பார்வை அவளை விட்டு விலகவில்லை. அது எனக்கு கொடுத்த அழுத்தமான அதிகார உணர்வு மெல்ல அவள் ஏறியிருந்த படிகளில் இருந்து அவளை இறக்கிக் கொண்டு வருவது தெரிந்தது. அவளது அங்கங்கள் எனக்குள் சொற்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்து கொண்டிருந்தாள். நாளை நண்பர்களிடம் நான் பகிரப்போகும் இந்த நாள் அனுபவத்தில் தன் உடலும் ஒன்று என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.
“தேர்ட் இயர். வாட்ஸ் த மேட்டர் வித் யூ” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாலும் அவள் குரலில் இருந்த நடுக்கத்தை நான் உணர்ந்து கொண்டுவிட்டேன்.
என் நினைவிலிருக்கும் பெண் முகங்களை மனதில் ஓட்டிப் பார்க்கிறேன். பெரும்பாலும் அவை என்னிடம் அழுதவையாக இருக்கின்றன.
கணவனால் கைவிடப்பட்டு மகனுடன் தனியே வாழ்ந்து வரும் வேதநாயகி அக்கா ஒருமுறை அவள் அப்படி வாழ நேர்ந்ததற்கான காரணங்களை “கூடப்பொறந்த பொறப்பு மாதிரி நெனச்சு சொல்றேன் தம்பி” என்று அழுதபடியே சொன்னாள். அப்போது எனக்கு பதினைந்து வயது இருந்திருக்கலாம். அவள் சொன்னவை எனக்கு ஒரு வகையான கிளர்ச்சியையும் பயத்தையுமே அளித்தன. நிறைய திரைப்படங்கள் பார்த்திருந்ததால் கண் முன்னே ஒரு பெண் அழும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டேன். என்ன காரணத்தாலோ அக்காவை அப்போது தொட வேண்டும் என்று மனதில் எழுந்த உந்துதலை கட்டுப்படுத்திக் கொண்டேன். அதன்பிறகு ஓவென அழும் ஒரு குரலாகவே மனதில் நிலைத்துவிட்டு பெண்ணொருத்தி இருக்கிறாள். எப்போதும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு வரிக்கு வரி நானொரு குழந்தை நானொரு குழந்தை என்ற உபவரியை உள்ளே திணித்துக் கொண்டிருக்கிறவள் விக்னா. ஆனால் அவள் சீக்கிரத்தில் அழுதுவிடக்கூடியவள் என்று நான் ஊகித்திருந்தது போலவே சில நாட்களிலேயே தன் துயர்களை என்னிடம் ஒப்புவித்தவாறு அழுதாள். வேதநாயகி அக்காவின் அழுகை போலன்றி இவளது அழுகை ஒவ்வாமையை அளித்தது. அழுகிறோம் என்பது குறித்த அவமான உணர்ச்சி அவளை தாக்கவே போவதில்லை என்பதைப்போல் வெகுநேரம் ஓவென அழுதாள். அந்த அழுகையை மட்டும் எப்போதும் ஒரு வகை மனச்சுழிப்புடனே எண்ணிக் கொள்கிறேன். ஆணிடம் மனம் விரும்பி தனியாகப் பேச நேரும் எந்தப்பெண்ணுமே அழுதுவிடுவாள் என்றுதான் இப்போது தோன்றுகிறது. ஆனால் அப்படி அழுதுவிடாத ஒருத்தியை பத்து வருடங்களுக்கு முன் இந்தக் கல்லூரியில் நான் சேர்ந்த அன்று சந்தித்தேன். வகுப்பில் முதல் ஆளாக வந்து அமர்ந்திருந்தாள். எல்லாவற்றிலும் முதல் ஆளாகவே நீடிக்கவும் செய்தாள்.
அவளை இப்போது எண்ணிக் கொள்வதற்கு காரணம் “யூ இடியட் ஓபன் திஸ் டோர்” என்று நான் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு வெளியே நின்று வேகமாக அவள் கதவைத் தட்டிக் கொண்டிருப்பது தான்.
முதலில் கதவு தட்டப்படுவது என் கனவின் ஆழத்தில் எங்கோ கேட்டது. அக்கனவு பல்வேறு பெண்களின் அழுகை ஒலியால் நிரம்பியிருந்தது. அந்த அழுகைகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் ஆதி உணர்வின் கதகதப்பில் நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன். உடற்தசைகள் மெல்ல மெல்ல பலமிழந்து அடர்த்தியான இருள்நிற இழைகளில் சரிந்து விழுந்து புதைந்து கொண்டே இருக்கிறேன். புதைவு முடியாமல் நீண்டு கொண்டே போகிறது.
கதவை ஓங்கித் தட்டும் ஒலி கேட்டு உடல் விரைக்கிறது. நான் எழுந்த போது எரிச்சலுடன் சத்தமிடும் அவள் குரலைக் கேட்டேன். எழுந்து கதவைத் திறக்கும் எண்ணத்தை விட தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணமே முதலில் எழுந்தது. அதைத் தவிர்த்து கதவைத் திறந்தபோது விரிந்த கூந்தலுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவளை கண்டேன். கதவு திறக்கப்பட்டதும் என்னை ஒரு நொடி குழம்பிப் போனவளாக உற்றுப் பார்த்தாள்.
“சுதீர் கால் யூ பேக்” என்று சொல்லி அலைபேசியை வைத்தவளின் மூச்சுக்காற்றில் புளித்த பழ வாடை கலந்திருந்தது. குடித்திருக்கிறாள்.
“வாட் த ஹெல்” என்று சத்தமிட்டாள்.
நான் அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தேன்.
“நீ அசோக் தானே?” என்று என்னை அடையாளம் கண்டு கொண்டு கேட்டவளின் முகம் மேலும் வெறுப்பில் கோணியது.
“நீ எப்படி இங்க இருக்க? த்ரீ நாட் டூ எனக்கு அலோகேட் பண்ணின ரூம்” என்றாள்.
“அது பக்கத்து ரூம்” என்றேன். மாலை நான் தங்கியிருக்கும் அறையில் இருந்த பெண்கள் இருவரும் அங்குதான் தங்கியிருந்தனர். ஆனால் ஏற்கனவே நள்ளிரவு தாண்டியிருந்தது.
“ஐ கேன்ட் ஸ்லாப் இட் ஆல் ஓவர் அகைன்” என்று மற்றொரு அறையைத் தட்ட முடியாது என்று கத்தினாள். பின் என் அனுமதியை எதிர்பாராமல் அறைக்குள் நுழைந்து காலணிகளைக்கூட கழற்றாமல் அவள் தோளில் மாட்டியிருந்த பையை அறை மூலையில் வீசி எறிந்து விட்டு நான் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலில் தொப்பென விழுந்தாள். நான் மட்டுமே தங்குவதாக இருந்ததால் மற்றொரு கட்டிலில் போர்வையும் தலையணையும் இல்லை. நான் கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வியர்த்து வழிந்து கொண்டிருந்தபோதும் அவளது சருமம் தூய்மையாகவே இருந்தது. ஒரு பெண் முதன்முறையாக நான் தங்கியிருக்கும் அறையில் உடன் இருக்கிறாள் என்ற எண்ணமே அதுவரை எனக்குள் எழவில்லை.
நான் மற்றொரு கட்டிலில் வந்து படுத்துக் கொண்டேன். நானே ஆச்சரியப்படும் வகையில் ஏதோ அருங்கரங்களால் பாதுகாக்கப்படுவது போன்ற உணர்வெழந்தது. மூச்சுக்குழலை அடைத்துக் கொண்டிருந்த ஏதோவொன்று நீங்கி சுவாசம் சீரானது போன்ற உணர்வு தோன்றியது. சற்று நேரத்துக்கெல்லாம் நன்றாக உறங்குகிறேன் என்பதை பிரக்ஞைபூர்வமாக உணர்ந்து கொண்டிருந்தேன். மனம் அவ்வளவு தெளிந்திருந்ததாலோ என்னவோ அடுத்து வரவிருப்பதையும் துல்லியமாக கணித்துவிட்டது. திடீரென உறங்கிக் கொண்டிருந்தவளின் மீது கடுமையான வெறுப்புணர்ச்சி தோன்றியது. ஆழ்ந்த தூக்கத்திற்கான தெளிவு மனதில் உருவாகி விட்டிருந்ததால் அவள் விசும்பும் ஒலி நன்றாகவே கேட்டது. தலையணையை அணைத்துக் கொண்டு அதன் நுனியை கடித்தவாறு அழுது கொண்டிருந்தாள். தலையணை நுனி அவள் எச்சிலால் ஈரமாகியிருந்தது. நான் அவளை நோக்கி திரும்பினேன். சில நொடிகள் எந்த சலனமும் இன்றி அவள் அழுவதைப் பார்த்திருந்தேன். இருளுக்கு கண் பழகும் வரை நான் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் அறிந்து கொள்ள முடியாது என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் அவள் அழும் ஒலி சட்டென நின்றது. நான் அதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டுவிட்டாள். அவள் நிலையில் இருந்து அப்படியழும் போது பார்க்க நேர்வது அவளுக்குள் எத்தகைய அவமான உணர்வை ஏற்படுத்தும் என எண்ணிப் பார்த்தபோது மனம் அஞ்சி திடுக்குற்றது.
இருட்டே கேட்பது போல “நீ என்ன பண்ற அசோக் இப்போ?” என்றாள்.
நான் ஒரு அரசு நிறுவனத்தில் எழுத்தனாக இருப்பதைச் சொல்ல எத்தனித்து அந்த எண்ணத்தை விழுங்கி “ரைட்டர்” என்றேன்.
“க்ளெர்க்கா?” என்றாள்.
நெஞ்சில் ஓங்கி மிதித்தது போல இருந்தது.
நான் “நானொரு எழுத்தாளன்” என்றேன்.
“கதை எழுதுறியா?” என்றாள்.
“நீ என்ன பண்ற திவ்யா?” என்றேன்.
“இன்டெல்” என்றாள்.
“இன்டெல்ல?” என்றேன்.
அவள் எழுந்து அமரும் ஒலி கேட்டது.
“சீனியர் டிரெய்னர்” என்றாள். “உனக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா அங்க ஜாயிண்ட் பண்ற ஃப்ரெஷர்ஸ டிரெயின் பண்றது என்னோட வேல. அலும்னி மீட் இன்விடேஷன் பாத்தியா இல்லையா சீஃப் கெஸ்ட் பேரு என்னன்னு” என்றாள்.
அவள் ஏன் என்னிடம் இவ்வளவு ஆணவத்துடன் பேசுகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த சீஃப் கெஸ்ட் அவள் தான் என்பதை நான் அன்றே அறிந்துவிட்டேன். சில நொடிகள் மட்டுமே பார்த்திருந்த அந்த அழைப்பிதழில் அவள் பெயரை மனம் நன்றாகவே குறித்துக் கொண்டிருந்தது. அதனிடம் பல்வேறு சாக்குகளை சொல்லிக் கொண்டு இங்கு வந்ததும் அவளைப் பார்ப்பதற்காகவே. சட்டென திவ்யா அறை மாறி இந்த அறைக் கதவை தட்டவில்லை என்று தோன்றியது. அதோடு என்னை புண்படுத்தும் சொற்களையும் அவள் வேண்டுமென்றே அத்தனை கூர்மையாக தேர்வு செய்து எடுக்கிறாள் என்பதையும் உணர்ந்து மனம் குதூகலித்தது.
“அசோக் நீ ஏன் இன்ஜினீரிங் சம்பந்தமான எதுவும் டிரை பண்ணக்கூடாது. ஐ கேன் ஹெல்ப் யூ அவுட்” என்றாள் அவளது மாணவர்களில் ஒருவனிடம் பேசும் தோரணையில். அது மேலும் என்னை வெறுப்பேற்றும் என்று எண்ணுகிறாள் போல.
“சரி பார்க்கலாம்” என்றேன். கொஞ்ச நேர மௌனம். அவள் நீண்ட உரை நிகழ்த்த தயாராகிறாள் என்று புரிந்தது.
“அசோக் லிசன். உன்னால் ஃப்ளூயன்டா பேசக்கூட முடியாது. உன்னோட கான்ஃபிடென்ஸ் லெவல் ரொம்பவும் கம்மி. நீ இப்போ இந்த லிட்ரேச்சர் மாதிரி விஷயங்கள்ல ஈடுபட்டு சீன் போட்றது கூட உன்னோட வீக்னெஸ்ஸ மறச்சிக்கத்தான். உன்ன காலேஜ் டேய்ஸ்லேர்ந்து தெரியுன்றதால சொல்றேன். டோன்ட் வேஸ்ட் யுவர் லைஃப் இன் இமாஜினேஷன்ஸ். சீ அண்ட் ஃபேஸ் த ரியாலிட்டி” என்று எனக்கு உபதேசம் செய்வதைப் போல பேசிக்கொண்டே போனாள். அவள் சொற்கள் எனக்குள் எதிர்வினையை உருவாக்கத் தொடங்குவதை நான் உணர்ந்தேன்.
அதை வெல்லும் பொருட்டு “கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஏன் அழுத?” என்றேன்.
“நன் ஆஃப் யுவர் பிஸினஸ்.”
“அதே தான் உனக்கும்” என்றேன். அறை வாங்கியது போல அவள் முகம் சுண்டுவதை அந்த இருளிலும் என்னால் பார்க்க முடிந்தது.
சற்றுநேரம் அமைதி. அதை அவளே உடைப்பாள். அவள் உடைக்கவில்லையெனில் நான் என்னை எதையெல்லாம் வைத்து கட்டியிருக்கிறேனோ அத்தனையும் உடைந்துவிட்டதென அர்த்தம்.
“உனக்கே இது கேவலமா இல்ல. நான் உன்னோட கெரியர் பத்தி பேசிட்டு இருக்கேன். ஆனா நீ என்னோட பர்சனல்ல தலையிட ஆசப்பட்ற” என்றாள் குரலில் அதிகமான அந்நியத்தன்மையுடன்.
எனக்கு பரிதாபமாக இருந்தது. அவளிடமிருந்து நான் அவ்வளவு பலகீனமான பிரயோகத்தை எதிர்பார்க்கவில்லை.
நான் மெலிதாக சிரித்தேன். அவள் சீறி எழுந்துவிட்டாள்.
“யூ ஃபூல். நான் என்ன உன்னோட ரைட்டிங்ஸ் எதையும் படிக்கலேன்னு நெனச்சியா? நீ எழுதுற எல்லா குப்பையையும் படிச்சிருக்கேன். தமிழ் மீடியத்துல படிச்சதால உனக்கு கொஞ்சம் தமிழ் தெரிஞ்சிருக்கு. இன்ஜினீயரிங் உனக்குள்ள கொஞ்சம் உலக விஷயங்கள சேர்த்திருக்கு. அதைத்தாண்டி உன்னோட எழுத்துல என்னடா இருக்கு. சோர்வு தனிமை தன்னிரக்கம் தற்கொலை இதைத்தாண்டி நீ என்னடா எழுதி கிழிச்சிட்ட? ஆனா மனசுல தஸ்தாவெய்ஸ்கி டால்ஸ்டாய் ரேஞ்சுக்கு உன்ன கற்பன பண்ணிக்கிற. அந்த கற்பனையும் உன்னோட எழுத்துல அப்பட்டமா தெரியுது. எல்லாத்தையும் தாண்டி அந்த குப்பைகள்ல தெரியுறது என்ன தெரியுமா? உன்னோட தனிமை. அப்பட்டமான தனிமை. கான்ஃபிடென்ஸ் இல்லாததால உனக்குள்ள வந்து சேர்ந்தது அந்த தனிமை. ஆனா அதப்பெரிய ஐடியல் ஸ்டேட்னு நீ கற்பன பண்ணிட்டு இருக்க. நானும் இந்த மூணு வருஷத்துல உன்னோட ரைட்டிங்ஸ்ல அந்த தனிமையை நீ எங்காவது கடந்து வந்திடுவன்னு பாத்துட்டு தான் இருக்கேன். ஆனா அதுக்கான வாய்ப்பே இல்லன்னு தோணுது” என்றவளின் குரல் கமறலாக மாறத் தொடங்கியபோது அதுவரை எனக்குள் கொதித்துக் கொண்டிருந்த வெறுப்பு பதற்றமாக மாறத் தொடங்கியது. திவ்யா தொடர்ந்தாள்.
“அப்படி என்ன தான் பிரச்சினை உனக்கு உன்னோட இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ தவிர. ஏமாத்திக்காத உன்னையே ஏமாத்திக்காத ப்ளீஸ்” என்றபோது அழுதேவிட்டாள். என் தர்க்கம் என்னை கைவிடத் தொடங்குவதை நான் உணர்ந்தேன். அவளும் இல்லாத ஒரு உலகை நோக்கி நான் உந்தப்படுவதான பிரம்மை எழுந்தது.
“திவ்யா அழாதே” என்றேன்.
“உனக்கு என்னதான் வேணும். நீ யாரப்பாத்து இந்த அளவு கெஞ்சற? உன்னோட எழுத்து என்ன சொல்ல வருதுன்னு உனக்காவது புரியுதா? நான் ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்கமாட்டேன். ஆனா எல்லாம் என்னைத்தேடி வரணும். அப்படி தேடி வர்றது கூட என்மேல இரக்கப்பட்டு வரக்கூடாது. ரொம்ப பணிவா எல்லா சௌக்கியங்களும் என்னை தேடிட்டு வரணும். இதுதானே உன்னோட கீழ்த்தரமான விருப்பம்?” என்று அவள் சொன்னபோது நான் அதிர்ந்து போய்விட்டேன்.
“நீ சொல்றதெல்லாம் ஒரு வகையில் உண்மைதான்” என்றபடியே எழுந்து ஜன்னலோரம் போய் நின்றேன். நள்ளிரவிலும் ஃபோகஸ் லைட்டை போட்டபடி வாலிபால் விளையாடும் பையன்கள் புள்ளிகளாக செம்மண் மைதானத்தில் அசைந்து கொண்டிருப்பது தெரிந்தது.
“மூட்றா. என்ன உன்னோட ரீடர்ஸ் மாதிரி கிறுக்குன்னு நெனச்சிட்டு இருக்கியா? இந்த பெருந்தன்மையான மழுப்பல் எல்லாம் எங்கிட்ட வேணாம்” என்று அவள் சொன்னபோது அவள் முகம் நன்றாகவே புலப்படத் தொடங்கியது. எல்லாவற்றையும் உடைத்துவிட்ட ஒரு நிறைவு அவள் முகத்தில் தெரிவது போல எனக்குப்பட்டது. என் முகத்தில் எல்லாமும் உடைக்கப்பட்டுவிட்டதன் திருப்தி அப்போது தென்பட்டிருக்கலாம். ஆனால் அவள் முகம் மாறுபடுவதைக் கொண்டு என் முகம் இறுகி இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். மனதை முகத்தில் பிரதிபலிக்கவிடாத என் பிரக்ஞை அப்போது தவறிப் போயிருந்தது. அவள் மேலும் ஏதோ சொல்லித் திட்டப் போகிறாள் என அஞ்சினேன். ஆனால் மெல்லிய குரலில் “அசோக்” என்றாள்.
நான் முதன்முறையாக பிரக்ஞையின் கட்டுப்பாடு அறுந்து போகிறவனாக உணர்ந்தேன். ஒரு கணம்தான்.அவள் விசும்பினாள். எனக்குள் ஒரு மெல்லிய எரிச்சல் தொற்றியது. இரவுகள் வேறு எப்படியும் முடிவதில்லையா என்று கேட்டுக்கொண்டேன் . ஆனால் நான் திரும்பியபோது அவள் என்னருகே நின்று கொண்டிருந்தாள். உதட்டில் முத்தமிட்டு உடலோடு சேர்த்து என்னை அணைத்துக் கொண்டாள். அவளை வாசலில் கண்டபோதே இந்தக்காட்சி வேறெப்படியும் முடியாதென நான் ஊகித்திருந்தேன் என்பது இறுதி முத்தத்திற்கு பிறகு “லவ் யூ” என்று அவள் மார்பில் சாய்ந்தபோது தெரிந்தது. ஆனால் எனக்குத் தெரிந்திருந்த போதும் அவள் படுக்கையில் எழுந்து சென்று படுப்பதற்கு முன் தனக்கு மணமாகி இருந்ததையும் தன்னுடைய இரண்டு வயது மகளை கணவனின் பொறுப்பில் விட்டு வந்திருப்பதையும் அவளாகவே ஏனோ சொன்னாள். மறுநாள் நடைபெறவிருந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ளாமல் கிளம்பினேன். திவ்யாவும் கலந்து கொள்ளவில்லை எனப் பின்னர் அறிந்தேன்.