1.
மலைகளுக்கு மேலிருந்த எனது
ஊற்றை திறந்து- இருண்ட பள்ளத்தாக்குகளுக்கிடையில்
அமர்ந்து எனது மகிழ்ச்சியுடன்-அழுகையும்
என்னில் எல்லா சுமைகளும்
கடந்து போக அமைதியில் மரங்கள்
வளர்வதை பார்த்தேன்.
மின்னல் ஒளியை காண
தாழைகளை வளர்த்தேன்.
அங்கே காதலின் மலர்கள்
எவ்வாறு பூத்தது?
ஒரு கூர்வாளை செய்து முடிக்கும் முன்
நீ உறையைக் கேட்கிறாய்.
வழியில் இருட்டுக் கம்பளம் விழும் முன்,
கடலின் ஆழத்துக்குள் உறங்கும் முன்
புயல் மையத்தில் சுழல்வதற்கு முன்
அங்கே நீ வந்தாய்.
சூரிய ஒளியை சிறைப்படுத்திய உன் கண்களில் முத்தமிட்டேன்.
நதிக்கரை கிளையிலிருந்த கருத்த பறவை சடசடத்து எழுத்தது.
ஒரு பழமையான கனவு முழுமையடைந்தது.
__________________________________________________________________________
இரவிற்கு ஆயிரம் குரல்
இரவின் பாடல்களில் காற்று குரலாக எழுந்தது.
சுவரின் குரல் சன்னமாக மோனத்திலிருந்து
கடிகார முள்ளென நகர்கிறது.
சாளரத்தின் சட்டகங்களில் குரலொன்று
தழுவும் போது குளிரை திறந்து விடுகிறேன்.
கூரை விளிம்பில் ஒளித் திவலையாக விழும்
நட்சத்திர துண்டொன்றின் குரல் நகரெங்கும் வியாபிக்கிறது.
தூக்கத்திலிருந்த புறாவொன்றின் அசைவின் குரல்
கோபுரங்களின் மௌனத்தில் முட்டி மோதியது.
இரவு காதுகளுக்குள் ஓயாது பாடிக்கொண்டிருக்கும்
இருள் படரந்த துயரம் ஆயிரம் குரல்களுடன்
இரவாகிய போது
தனிமையின் நீண்ட தெருவில் அலைந்து திரிந்த
குரல் பகலில் இறந்து தொங்கியது.
அமைரா (இலங்கை)
நன்றி