மாலதி மைத்ரி பதில்கள்

பகுதி 1

கேள்வி: அன்பின் மாலதிஓர் எழுத்தாளர் தன் படைப்பைப் பிரசுரிக்க இதழ்களைத் தேர்ந்தெடுக்கவேண்டுமா? நீங்கள் எல்லா இதழ்களிலும் எழுதுவதுண்டா? அதற்கான தேர்வு உண்டா

வரன்கனடா.

பதில்: நான் என்னுடைய படைப்புகளைப் பிரசுரிக்க இதழ்களை மிகக்கவனமாகத் தேர்வு செய்தே அனுப்புகிறேன். இங்குபெரும்பான்மையான சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்கள் மற்றும் மின்னிதழ்கள் புரவலர்களின் ஆதரவால், அரசியல்வாதிகளின் ஆதரவால்,கறுப்புப்பணத்தைக் கொண்டோ,தொண்டு நிறுவன நிதிசார்ந்தோ இயங்குகின்றன.  மேலும் குழு அரசியலுமிருக்கிறது. அதனால் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு ஓரளவிற்கு ஒத்துவரக் கூடிய இதழ்களிலேயே பங்களிப்பு செய்யவேண்டியிருக்கிறது. சிலநேரங்களில் வணிக இதழ்களிலும் எழுதுகிறேன். அவை குழு அரசியலில் நம்மை சிக்கவைக்க முயலுவதில்லை என்பதால். படைப்புகள் கேட்கும் போது அனுப்பாமல் புறக்கணிப்பதும் உண்டு. செம்மொழி மாநாட்டு மலருக்கு படைப்பு அனுப்பக் கேட்டபோது அனுப்பவில்லை. செம்மொழி மாநாட்டை எதிர்த்து எழுதிய ‘மாபலிவிருந்தழைப்பு’ ஆனந்தவிகடனில் பிரசுரமாயிற்று. இந்த ஆண்டு விகடன் தீபாவளி மலருக்குக் கவிதை கேட்டு எழுதியபோது ‘சோகம் சொட்டும்’ கவிதைகளை தவிர்க்க வேண்டும் என்ற குறிப்பு இருந்தது. படைப்பாளியின் சுதந்திரத்தை விகடன் தீர்மானிக்கக் கூடாது. அதனால் விகடன் தீபாவளி மலருக்கு என் கவிதையை அனுப்பவில்லை. சில சிற்றிதழ்களில் பங்களிப்பு செய்யவிருப்பமிருந்தும் பொருளாதாரக் காரணங்களால் அவை வெளியாகும் காலம் தள்ளிபோவதால் என் படைப்புகளைக் கொடுக்கமுடிவதில்லை.

கேள்வி: இன்றுவரும் சினிமா மற்றும் சீரியல்களைப் பார்க்கும் போது ஒரு பெண்ணியவாதியாக என்ன தோன்றுகிறது. பெண்களுக்கான இடம் அதில் என்ன?

சுரேன்தமிழகம்.

பதில்: ஏதோவொரு பேரழிவு வந்து கோடம்பாக்கம் தமிழ்க்காட்சி ஊடகத்தொழிற்சாலை அழிந்து சாம்பலாகப் போனால்தான் இனி தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். தமிழர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள் என்று அடிக்கடிதோன்றும். தமிழ் நிலம்,மொழி,பண்பாடு,தமிழர்  மனம் என அனைத்தையும் தமிழ்த்திரைப்படங்கள் நஞ்சாக்கிவிட்டன. இந்த விஷத்தை முறிக்கும் அல்லது வெளியேற்றும் மருந்து தன்னிடம் உள்ளதென்று இன்னொரு தமிழ் சினிமாக்காரன் வந்துபேசுவது அதைவிட அவலம். அரசியல் மற்றும் கலாச்சார பேரழிவு ஆயுதங்களை உற்பத்திச் செய்யும் இந்த நாசகார ஊடகத்துக்கு அறிவையும் ஆன்மாவையும் விற்றுப் பிழைப்பு நடத்துகிறார்கள் இங்குள்ள தமிழ் படைப்பாளிகளும் பெண்ணியவாதிகளும். கோடம்பாக்கத்திலிருந்து தேவஅழைப்பு வராதாவென்று ஊண் உறக்கமின்றி தவம் கிடக்கிறது இன்னுமொரு இலக்கிய வியாதிக் கூட்டம். பெண்களை நல்ல அடிமைகளாக நடந்து கொள்ளப்பழக்குவது காட்சி ஊடகங்களின் பிரதான வேலைத்திட்டம். அதை செவ்வனே செய்து கோடி கோடியாகக் கல்லாகட்டுகிறார்கள்.‘தமிழர்களின் எதிர்காலத்துக்கு’ கல்லறைகட்டும் வேலையை ஒளிஒலி மயமான வெள்ளித்திரை இந்திய சுதந்திரத்துக்கு முன்பே எழுப்பப்பத் தொடங்கிவிட்டது.

கேள்வி: தங்களின் முதல் தொகுப்பை மட்டும் வாசித்துள்ளேன். இன்று உங்கள் இலக்கிய வளர்ச்சியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

விசுசென்னை.

பதில்: இப்பொழுது எனது அரசியல் நிலைப்பாடுகள் கூடுதல் அழுத்தமும் கூர்மையையும் அடைந்துள்ளன. இந்த மாற்றம் என் படைப்புகளிலும் நிகழ்ந்துள்ளது. நவீன தமிழ் கவிதையில் முதலில் குழந்தைகள் உலகத்தையும் இயற்கைப் பெண்ணியத்தையும் என் கவிதை வழியாக அழைத்துவந்தேன். இக்கவிதைகளின் தளம் இன்று பல்வேறு கவிஞர்கள் வழியாக விரிவடைந்து வளர்ந்திருக்கிறது. இதை எனது முக்கியமான இடமாகக்கணிக்கிறேன். சுற்றுச்சூழல் பற்றிய அக்கறைதான் நமதுநிலம்,கடல்,காடு,மலைமற்றும் நதிகளைக் காப்பாற்றவும் மீட்கவுமான உணர்வைமக்களிடம் கொண்டுசெல்லும். இன்றைய கூடம்கூளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தில் இத்தளம்தான் என்னை இணைத்துகட்டி இழுத்துச் செல்கிறது. எனது எழுத்துக்கும் செயலுக்குமான இடைவெளியைக்குறைத்து இலக்கிய-அரசியல் அறத்துக்கு வலுச்சேர்க்க முயன்று கொண்டிருக்கிறேன்.

கேள்வி: சகபடைப்பாளிகளில் உங்களைக் கவர்பவர் யார்? உங்கள் வாசிப்பு எத்தகையது?

சிவம், இலங்கை.

பதில்: கவிஞர் இன்குலாபின் இலக்கிய மற்றும் அரசியல் நேர்மைபிடிக்கும். அரசியல் அதிகாரத்துக்கு எதிரான அவரது கோபம் பிடிக்கும். அவரை இரண்டுமுறைதான் கூட்டங்களில் சந்தித்து இருக்கிறேன். அரசியல்வாதிகள், புரவலர்கள் மற்றும் குழுவாத அரசியலிலிருந்து விலகி செயல்படுபவர். எதற்கும் பணிந்துபோகாதவர். பாமா, சிவகாமியையும் பிடிக்கும். சிலபேர்களின் படைப்பு பிடிக்கும், படைப்பாளிகளைப் பிடிக்காது. இதையும் மீறி தங்களின் குறுகிய எல்லைக்குள் அரசியல் நெருக்கடிக்குள் முடிந்தளவு தங்களுக்கான எதிர்ப்புணர்வு அரசியலை படைப்பாக்கும் ஆழியாள், பஹிமா ஜஹான் மற்றும் தீபச்செல்வன் எழுத்துகள் பிடிக்கும். மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். நாவல், அரசியல் கட்டுரைகள் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுரைகள், கவிதைகள், போராட்டவரலாறுகள், மொழிபெயர்ப்புகளை என் அரசியலுக்கு நெருக்கமான தேர்வுகளின் படி வாசிக்கிறேன். ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், அ.மார்க்ஸ் புத்தகங்களை வாசிப்பதில்லை. இப்போழுது சேரன், அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி, யோ. கர்ணன் இந்தப்பட்டியலில் சேர்ந்திருக்கிறார்கள். வாசிப்பை அரசியல் மற்றும் பெண்ணிய நிலைப்பாடுகளுடனே அணுகுகிறேன்.

2 comments for “மாலதி மைத்ரி பதில்கள்

  1. ஸ்ரீவிஜி
    September 2, 2013 at 2:57 pm

    //பெண்களை நல்ல அடிமைகளாக நடந்து கொள்ளப்பழக்குவது காட்சி ஊடகங்களின் பிரதான வேலைத்திட்டம். அதை செவ்வனே செய்து கோடி கோடியாகக் கல்லாகட்டுகிறார்கள்.‘// சல்யூட் சகோ.

  2. September 13, 2013 at 5:15 pm

    நம் நாட்டில்லிருந்து ஒருவருமா கேள்விக்கேட்க வில்லை…..என் கேள்விக்கு எப்போது விடை கொடுப்பீர்கள்….

    மாலதி மிகவும் கவனமாகவே பதிலளிக்கிறார்.நன்றி வல்லினத்திற்க்கு….

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...