செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய சிறுகதை உலகில் முக்கிய ஆளுமையாக இருக்கும் கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார்.
கேள்வி : உங்களுடைய தனி அடையாளமே சிறுகதைகள் என்று சொல்லலாமா?
கே.பாலமுருகன்: ஓர் எழுத்தாளர் மீது உருவாகும் இலக்கிய அடையாளங்கள் என்பது அவரின் ஆரம்பக்கால ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வைத்து மதிப்பிடப்படுகின்றன. அதுவே நிலையான அடையாளமாகவும் போய்விடக்கூடாது. அவ்வகையில் நான் முதலில் எழுதியதே சிறுகதைகள்தான். 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியத் தமிழ்ப்பத்திரிகைகளிலும் உலகலாவிய தமிழ் இலக்கிய இணையத்தலங்களிலும் அதிகமாகச் சிறுகதைகள் எழுதியே இலக்கிய சூழலில் அறிமுகம் பெற்றேன். வல்லினம் இதழுக்கு முதலில் அனுப்பிய படைப்பும் சிறுகதைத்தான். இன்றளவும் வல்லினத்தில் என்னுடைய சிறுகதைகள் அதிகமாகப் பிரசுரம் கண்டுள்ளன. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் பெரும்பாலானவை ‘வல்லினம்’ இதழில் பிரசுரமானவையே. ‘வல்லினம்’ எனக்கு அளித்த பயிற்சியும் களமும் மிக முக்கியமானவை. என்னிடமிருந்த அலட்சியப்போக்கை அகற்றவும் இலக்கியம் சார்ந்து கூடுதல் கவனம் பெறவும் வாய்ப்பாக இருந்த காலக்கட்டம் அது. மேலும் படைப்பு என்பது எங்குமே தேக்கமடைந்துவிடக்கூடாது. அது நகரும் தன்மையுடையது.
கேள்வி : குழந்தைகளுக்கான கதைகளிலும் உங்கள் இதர கதைகளிலும் காட்டப்படும் உலகம் குறித்து கொஞ்சம் சொல்ல முடியுமா?
கே.பாலமுருகன்: என்னுடைய எல்லாம் கதைகளிலும் எனக்குள் நான் வைத்திருக்கும் ஒரு சிறார் கதைப்பாத்திரமும் அவனுடைய உணர்வுகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூகம் ஒழுக்கம், நன்னடத்தை, கட்டுபாடு என்கிற பெயரில் ஒடுக்கி வைத்திருந்த ஒரு சிறுவன் எப்பொழுதும் என் கதைகளில் தன் மீது செலுத்தப்பட்ட அடக்குதலை தூக்கி வீசிக்கொண்டிருப்பான். அவனை உங்களால் அடையாளம் காண முடியும். எல்லோருக்குள்ளும் அப்படி அடக்கப்பட்ட ஒரு சிறுவனின் உலகம் இருக்கின்றது.
கேள்வி : விரைவில் வல்லினம் வெளியீடாக சிறுகதை தொகுப்பாக வெளிவரும் உங்கள் கதைகள் குறித்து சொல்லுங்கள்.
கே.பாலமுருகன்: தமிழர்களின் வாழ்க்கை என்பது சாதியம், முதலாளிய கொடுமைகள், சமூக ஒழுக்கக்கட்டுபாடுகள், புறக்கணிப்பு, உறவு ஆதிக்கம் எனப் பலவகையான இருள்களால் சூழ்ந்துள்ளது. எப்பொழுதும் ஓர் இருளுக்குள் புதையுண்டுபோன கதைகள்தான் தமிழர்களினுடையது. அவற்றின் சிறு பகுதியை மீட்டுக்கொண்டு வருவதே என்னுடைய சிறுகதைகள். நவீன உலகம் மிகச் சாதாரணமாகக் கடந்து வந்துவிட்ட அந்த வாழ்க்கையின் மீதங்களையும் தற்பொழுது பெரும் நகரங்கள் கொடுக்கும் வாழ்க்கையையும் என் சிறுகதைகள் உரையாடுகின்றன. வல்லினம் ஆசிரியர் ம.நவீனும் நானும்தான் என்னுடைய மொத்த கதைகளிலிருந்து 12 கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். அவை வாசகனுக்குக் கொடுக்கும் அனுபவங்கள் என்பது அவன் கண்டடையாத ஆழங்களைக் காட்டுவதுடன் இதற்கு முன் சமூகம் உருவாக்கியிருந்த போலித்தமான இலக்கிய புரிதல்களையும் உடைக்கும் என நம்புகிறேன்.
கேள்வி : உங்கள் எழுத்தில் ஊடாடும் வார்த்தைகள் படிமங்களாக விரிகிறதே. இது திட்டமிட்ட செயலா…?
கே.பாலமுருகன்: என்னைப் பொறுத்தவரை இலக்கியத்தை நாம் முழுமையாகத் திட்டமிட முடியாது. உள்ளுக்குள் உறைந்திருக்கும் வாழ்க்கை குறித்த உணர்வுகள் அனுபவங்கள் நம்மை எப்பொழுதும் எழுதுவதற்காகத் தூண்டிக்கொண்டேயிருக்கும். எழுத்தாற்றல் பெற்றவன் அதனை எழுத்தாகக் கொடுக்கின்றான், அப்படி இல்லாதவன் அதனைக் கதைகளாக மற்றவர்களிடம் பேசி வெளிப்படுத்துகிறான். அல்லது ஓவியமாக வரைந்து காட்டுகிறான். அப்படி அந்த வாழ்க்கை தன்னை இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்தும்போது, சொல் பயன்பாடு, சொல் தேர்வு, ஒழுங்குப்படுத்துதல் போன்ற விசயங்களில் மட்டும் எழுத்தாளனின் சுயநினைவு திட்டமிடுகிறது. படிமங்கள் என்பது காலம் காலமாக இலக்கியத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றது. நான் என் கதைகளில் இதுவரை கண்டடையப்படாத இருளின் வன்மத்தைப் படிமமாக்கியுள்ளேன். என் சிறுகதைகளுக்கு அது தேவைப்பட்டது என்பதைவிட அது இயல்பாகவே கதைகளுக்குரியதாக அமைந்துவிட்டிருந்தது. இலக்கியத்தின் படிமம் குறித்து எனக்கு கொஞ்சம் அறிவும் தெளிவும் இருந்ததால் அவற்றை பயன்படுத்த ஏதுவாகவும் இருந்தது.
கேள்வி : உங்களின் சிறுகதைகள் இடைவெளிவிட்டே படிக்ககிடைக்கிறது. எழுத்திற்கு இடைவெளி அவசியமா?
கே.பாலமுருகன்: சமூகத்தில் எப்பொழுதுமே இரண்டுவகையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒருவர் கணக்கு வழக்கில்லாமல் எப்பொழுதும் எழுதிக்கொண்டேயிருப்பவர். அவருக்கு வேறு எந்தக் கடப்பாடும் மற்ற வேலைகளும் இருக்காது. முழுநேர எழுத்தாளராகச் செயல்படுவார். அதிலும் சிலருடைய படைப்புகள் தேறாமல் போய்விடுவதுண்டு. மற்றொருவர் வாழ்க்கையின் அனைத்து ஒப்பந்தகளுடனும் எழுதக்கூடியவர். அவரிடமிருந்து ஒரு நல்ல படைப்பு வெளிவருவதற்குப் பல காலங்கள்கூட ஆகலாம். இது அந்த நிலம் இலக்கியத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்து உருவாகின்றது. நாளைக்கே நீ முழுநேரமாக எழுது உனக்கு இப்பொழுது நீ வாங்குவதைவிட அதிக சம்பளம் கொடுப்பதாக யாராவது உறுதியளித்தால் என்னால் இடைவெளி இல்லாமல் படைப்புகளைக் கொடுக்க முடியும். ஒரு படைப்பு உருவாகும் காலத்திற்கும் ஒரு படைப்பின் ஆழத்திற்கும் தொடர்பு இல்லை. வாசகனுக்கும் வாசிப்பிற்கும்தான் இடைவெளி கூடாது. படைப்புக்கும் படைப்பாளனுக்கும் இடைவெளியே கிடையாது.
கேள்வி : பாலமுருகனின் கதைகளில் காட்டப்படும் இருளில் இருக்கும் மனிதர்களின் மனங்களை எவ்வாறு வரையறுக்கின்றீர்கள்?
கே.பாலமுருகன்: நான் 8 வயதில்தான் தோட்டப்புற வாழ்க்கை சூழலிலிருந்து சிறுநகரத்திற்கு வந்தவன். ஆரம்பத்தில் எங்கள் பாட்டி வீட்டில் இரவில் விளக்கு இருக்காது. மண்ணெண்ணை விளக்கை ஏற்றி வைத்துவிட்டு ஆளுக்கொரு மூலையில் படுத்திருக்கும் எல்லோரின் பெயரையும் பாட்டி அழைப்பார். எல்லோரும் உறங்கிவிட்டார்கள் எனத் தெரிந்ததும் பாட்டி வீட்டின் விளக்கை அனைப்பார். வீட்டின் இறுதி வெளிச்சத்தைப் பாட்டி மட்டுமல்ல அவருடன் சேர்ந்து நானும் பார்த்திருக்கிறேன். இருள் என்பது நிஜம். இருளுக்கு உடல் உண்டு. இருளுக்குக் கைகள் உண்டு. அவையனைத்தும் நேரடியாக நான் தரிசித்தது. இருளில் இருக்கும் மனிதர்கள் என்பது அதை மட்டும் குறிப்பதல்ல. புறக்கணிப்பு, அடிமைத்தனம், இழத்தல் என அனைத்தையுமே நான் என் கதைகளில் இருள் என்கிற படிமத்தின் வழியாகவே புனைகிறேன். இருள் நிதர்சனத்தையும் ஒரு துர்கனவாக மாற்றக்கூடியது. இருள் அதிகாரமாக மாறும் மனிதர்களின் நிழல்.
சந்திப்பு : தயாஜி
வாழ்த்துகள்…