செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. பூங்குழலி வீரன் அவர்களின் ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ எனும் கவிதை தொகுப்பும் அதில் ஒன்று. அவருடனான சந்திப்பு…
கேள்வி: வல்லினம் வெளியீடாக வரவிருக்கும் உங்கள் கவிதை நூல் பற்றி அறிமுகம் செய்யுங்கள்.
வல்லினம் வெளியீடாக ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ என்ற தலைப்பிலான எனது கவிதை தொகுப்பு வெளிவரவுள்ளது. இது எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும். அதில் 60 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. என் தன்நிலை உணர்வு சார்ந்த கவிதைகளாக அவை விளங்குகின்றன.
கேள்வி: இந்த நூலில் இடம்பெற்றுள்ள உங்கள் கவிதைகள் எந்தெந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டவை?
பெரும்பாலான கவிதைகள் கடந்த ஈராண்டு காலக்கட்டத்தில் எழுதப்பட்டவை. பெரும்பாலும் எழுதிய கவிதை பிரதிகளைச் சேர்த்து வைக்கும் பழக்கம் எனக்கு இல்லை. கடந்த ஈராண்டுகளாகத்தான் சிலவற்றை என்னுடைய வலைத்தளத்தில் தொகுத்திருக்கிறேன். ஆனால், இக்கவிதை நூலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் வலைத்தளத்தில் தொகுக்கப்படவில்லை. பழைய நாட்குறிப்புகளை, குறிப்பு புத்தகங்களைப் புரட்டியே பெரும்பாலான கவிதைகளைச் சேகரித்து தொகுத்தேன்.
கேள்வி: உங்கள் நூல் சமூகத்தில் எவ்வித பாதிப்பைக் கொடுக்கும் என நினைக்கிறீர்கள்?
சமூக பாதிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக எல்லாம் நான் என்னுடைய கவிதைகளை எழுதவில்லை. குழலி என்கிற ஒரு தனிமனிதனின் உணர்வுதான் – அவள் அடைந்த பாதிப்புதான் இந்தக் கவிதைகள். அதே பாதிப்பைச் சமூகம் அடைய வேண்டும் என்று நினைப்பதைக்கூட ஓர் அபத்தமாக நான் பார்க்கிறேன். ஆனால், மிக நுண்மையான உணர்வுகளால் பதிவிடப்பட்டிருக்கும் என் கவிதைகள் அதே உணர்வை என் வாசகர்களுக்குத் தந்தால் அது மானுடங்களுக்கு இடையேயுள்ள உறவுகளின் வலிமையை தட்டி எழுப்பியுள்ளதாக எண்ணுவேன். எப்போதுமே எல்லாவற்றையும் மிகச் சாதாரணமாக கணக்கிலெடுத்து நாம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறோம். சிறு சிறு விடயங்களுக்கு எப்போதாவது நேரம் ஒதுக்கி அது குறித்து சிலாகிக்கும் மனநிலையை என் கவிதைகள் உருவாக்கினால் அதைவிட பேரானந்தம் எனக்கு வேறொன்றுமில்லை.
கேள்வி: தமிழ் இலக்கியச் சூழலில் கவிதை வாசிப்பு எப்படி இருக்கின்றது?
இன்றைய நிலையில் அது இரு வேறு தளத்தில் பயணித்து கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஒன்று தீவிரமான கவிதைகளைத் தேடித் தேடி வாசிப்பது; அது குறித்து விவாதிப்பது; விவாதித்துக் கொண்டே இருப்பது. கவிதைத் துறையில் முக்கியமானவர்களாக கருதப்படும் கவிஞர்களையும் அவர்களின் கவிதைகளையும் பின்தொடர்வது; கவிதைகள் குறித்து தொடர்ந்து அவதானித்து வருவது என அந்த பயணம் நீள்கிறது.
மற்றொன்று எப்போதும் பிரச்சாரத்திற்காகவும் பாராட்டுகளுக்காகவும் பரிசுகளுக்காகவும் எழுதப்படும் கவிதைகள்; எதுகை மோனையோடு சொல் விளையாட்டுகளோடு மேடை தோரும் முழங்கப்படும் கவிதைகள் என இந்த பயணமும் தொடர்கிறது. இதில் வாசிப்பு என்பது அவரவர் தேவைக்கேற்ப நிகழ்கிறது.
கேள்வி: நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் தொடர்பாக ஏதேனும் விமர்சனங்கள் இதற்கு முன் வந்ததுண்டா?
இல்லை என்றே நினைக்கிறேன். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் இதுவரை வெளிவாசிப்பிற்கு வெளியிடப்படவில்லை.
கேள்வி: உங்கள் கவிதையின் உருவாக்கத்தில் யாரெல்லாம் / எதெல்லாம் பின்னணியில் இருக்கின்றனர் / இருக்கின்றன என நினைக்கிறீர்கள்?
எப்போதும் என் கவிதைகளில் பின்னணியில் இருப்பவர் என் அப்பா. தொடக்கத்தில் அவரது இருப்பு எனது கவிதைகளின் உருவாக்கத்தின் காரணமாக இருந்தது. இப்போது அவரது இறப்பு கவிதை உருவாக்கத்திற்கான தொடர் காரணங்களைப் பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்து நான் என்னுடைய பலமாக நினைக்கும் என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்… அன்பான என் உடன்பிறப்புகள், என் அம்மா, கவலைகளை மறக்கடித்து இதுவும் கடந்து போகும் கலையைக் கற்று கொடுக்கும் அண்ணாவின் குழந்தைகள், தொடர்ந்து என்னை வாசிக்கவும் எழுதவும் தூண்டிக் கொண்டிருக்கும் நவீன், கா. ஆறுமுகம் என என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் இவர்கள்தான் என் கவிதை உருவாக்கத்திற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றனர். என்னைச் சுற்றி தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கும் சுவாரஸ்யம் குறையா நிகழ்வுகள் தொடர்ந்து கவிதைகளை நோக்கி என்னை துரத்தியபடியே இருக்கின்றன.
கேள்வி: மற்ற எழுத்தாளர்களின் கவிதைகளை விமர்சனம் செய்து அனுபவம் பெற்றவராகிய நீங்கள், கவிதைகளுக்கு விமர்சனம் என்பது எவ்வளவு முக்கியம் என நினைக்கிறீர்கள்?
கண்டிப்பாக கவிதைகளுக்கு விமர்சனம் என்பது மிக முக்கியமானது என்றே நான் நினைக்கிறேன். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான “உயிர் வேட்டைக்கும்” இரண்டாவது தொகுப்பான “பொம்மைகள் கூட பேசிக் கொண்டிருக்கலாம்” என்பதற்கும் மூன்றாவது தொகுப்பாக தற்போது வெளியிடப்படவிருக்கும் “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” என்பதற்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள் என் முதல் தொகுப்பில் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தால் விளைந்தது. நமது அடுத்த கட்ட பயணத்திற்கு நமது படைப்பின் மீது வைக்கப்படும் உண்மையான தீவிரமான விமர்சனமே களம் அமைத்து தரும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், விமர்சனம் என்பது படைப்பு குறித்து தகுதியானவர்களால் செய்யப்பட வேண்டும் என்பது இங்கு முக்கியமானது.
கேள்வி: இந்த நூல் உருவாக்கம் எப்படிப்பட்ட அனுபவத்தை வழங்கியிருக்கிறது?
ஓர் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து கொஞ்ச காலம் விடுபடச் செய்திருக்கிறது. தொடர்ந்து சில தினங்களுக்கு நான் எழுதிய கவிதைகளை நானே மீண்டும் மீண்டும் பார்ப்பது ஒரு மகிழ்வைத் தந்திருக்கிறது. தொடர்ந்து நல்ல கவிதைகளைப் படைக்க வேண்டும் என்ற சவாலையும் முன்னிறுத்திப் போயிருக்கிறது.
சந்திப்பு: தயாஜி