பெத்தவன்: வஞ்சிக்கப்படும் அன்பு

05அழ வைத்தாலும் என்னுள் ஆழப் பதிந்த கதை, உயிர் வலி உணர்த்திய  கதை. ஓர் உயிர் இன்னோர் உயிரை வதைக்கும் சமத்துவமற்ற நிலையின் உச்சம் இந்தப் பெத்தவன் குறுநாவல். சாதித் தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் ஒரு கிராமத்தில் கதை தொடங்கி அங்கேயே முடிகிறது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆணை (காவல் அதிகாரியை) மூன்று வருடங்களாகக் காதலிக்கிறாள் ஒரு பெண். பாக்கியம் அவள் பெயர். அந்தக் காதலை மறுக்கும் கிராமம்,  அவளையும் அவளது குடும்பத்தையும் அதிகாரம் செய்து துன்புறுத்துகிறது.  பலவழிகளில் சொல்லியும் அடித்தும் உதைத்தும் பார்க்கிறது. முடியை வெட்டி அவமானம் செய்கிறது. இன்னும் பல துன்புறுத்தல்கள். எதுவுமே அவளை மாற்றவில்லை. எனவே, அவளைக் கொன்றுவிட கிராமம் முடிவெடுக்கிறது. அந்த முடிவை அவளது தகப்பனின் கையிலேயே ஒப்படைக்கிறது கிராமம். ‘பாலிடாயில்’ ஊற்றி கொல்வதுதான் திட்டம். அது கொடிய விஷம். வேறு வழியில்லாமல் தகப்பனும் தாயும் ஒத்துக்கொண்டனர். விடிவதற்குள் அது நடந்தாக வேண்டும். அந்த இரவு பெத்தவனின் (பழனி) வீட்டில் என்ன நடந்தது என்பதுதான் கதை.

பெத்தவன் (பழனி) மகளைக் காப்பாற்ற நினைத்து அவளது காதலனிடம் அவளை ஒப்படைக்க நினைக்கிறார். அவள் அப்போதுதான் காதலை தியாகம் செய்ய துணிகிறாள். மூன்று வருடங்களாக அனுபவித்த துன்புறுத்தலில் வராத மன மாற்றம் அன்று வந்தது. அது தன் தகப்பனுக்காக வரும் மாற்றம்.  தன்னைக் கொன்றுவிடும்படியும் கேட்கிறாள். ஆனால், பெத்தவன் (பழனி) உறுதியாகவே, அவளைக் மிக கவனமாக மீட்க நினைக்கிறார். அவளது காதலனிடம் சேர்க்க வீட்டிலிருந்து புறப்படுகிறார். அதற்குச்  சில நிமிடங்களுக்கு  முன்தான் மின்சாரத் தடை ஏற்பட்டு ஊரே இருண்டு போனது. அந்த இருளுக்குள்தான் கதையின் கடைசி நிமிடங்கள் பதற்றமாகவே நகர்த்தப்பட்டுகிறது. அந்த இருளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மகளுடன் புறப்படுகிறார் பழனி. காதலன் சொன்ன இடத்தில் பெண்ணைச் சேர்த்துவிட்டு வீடு திரும்பியவர் வழியிலேயே அவர் சந்தேகத்துகுரிய வகையில் இறந்து கிடக்கிறார். அது தற்கொலையா, கொலையா என்பதை வாசகனே முடிவு செய்து கொள்ளலாம். ஆனாலும் ஒரு மரணம் மட்டுமே சாதிய நெருக்குதலுக்கு தீர்வாகிறது. அந்த இருட்டுக்குள் சாதிவெறி மட்டும் விசாரணைகளின்று, கைவிலங்குகளின்றி  சுதந்திரமாகவே நடமாடியது.

இந்தக் கதையைப் படித்த பிறகு எழுத்தாளர் இமையம் பற்றி அறிய அவரைக் கொஞ்சம் ஆராய்ந்தேன். அவர் படைப்புகள் பெரும்பான்மையானவை சமூகம் சார்ந்ததாகவும், சமத்துவமற்ற வாழ்க்கையின் ஒடுக்குமுறை சார்ந்ததாகவுமே அமைந்திருக்கிறது. ஒரு சமகால எழுத்தாளனாக இந்த சமூகத்தின் மீதான தன் காத்திரத்தை தன் எழுத்துகளில் வெளிப்படுத்துகிறார். ஒரு படைப்பாளியாக அவர் சமூகப் பொறுப்பாளியாகவும் தன்னை முன்னெடுக்கிறார்.

2013-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்தக் குறுநாவல் முழுக்க முழுக்க அடித்தட்டு மக்களின்29303 அவலம் சார்ந்தது. அவரவருக்குரிய வாழ்க்கையை அவரவரே தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திர வெளிகள் பரிமுதலானதைப் பதிவு செய்துள்ளது இந்தக் குறுநாவல். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆணைக் காதலிக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சமூகம், ஒரு தனிமனித வாழ்க்கை சுதந்திரத்திற்குள் நுழைந்து எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை கதையின் எல்லா நிலைகளிலும் காணமுடிந்தது. ஒரு தகப்பனுக்கு தன் மகள் வாழ்க்கையின் மீது இருக்கக்கூடிய அத்தனை உரிமைகளையும் உயர்சாதி கொடுக்கும் அதிகாரத் திமிர் பிடுங்கிக்கொள்கிறது.  தகப்பனுக்கும், தாய்க்கும் தன் மகளின் வாழ்க்கை மீது இருக்கும் கனவுகளை ஜாதிய கட்டுமானம் கலைத்துப் போடுகிறது. அப்படி சாதியக் கட்டுப்பாடுகளை மீறி தன் மகளை வாழ வைத்த ஒரு தகப்பன் அதே இரவில் இறக்கவும் செய்கிறார். மகளை வாழவைத்த குற்றத்திற்காக மரணத்தை நியாயப்படுத்தும் சாதிய வன்மத்தை இமையம் அடையாளம் காட்டுகிறார் என்றால்  சட்டம் பேசும் சமுதாயப் பொறுப்பாளர்களின் மௌனத்தின் குற்றத்தை கதை அடையாளம் காட்டுகிறது.

மகளைக் கொல்வதாகச் சத்தியம் செய்துவிட்டு வந்த பழனியிடன் வேண்டாமென அவரது தாய் துளசி பலவிதத்தில் கெஞ்சுகிறார்.  இயலாமையில் துளசியோடு சேர்ந்து கொண்டு பழனியும் அழ ஆரம்பிக்கிறார். அப்போது மாடுகள் கத்தும் சத்தம் கேட்டதும் “தண்ணீர் காட்டுனீங்களா? கூளம் போட்டீங்களா ?” என்று துளசியிடம் கேட்டப் பழனி இல்லையென அறிந்தவுடன் மகளைக் கொல்லப்போகும் இறுக்கமான அந்த நிலையிலும் தன் மாடுகளுக்கு நீர் காட்டி, கூளம் போடப்போகிறார்.  எப்போதும் அவரைப் பின் தொடரும் நாய் அப்போதும் அவரின் பின்னாலேயே செல்வதை இமையம் காட்டி இருக்கிறார். இங்கு  பழனியை எப்போதும் பின் தொடரும் நாயின் வழி, அவர் அதற்கு யாராக இருந்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது. இமையம் சொல்லி இருப்பது பெத்தவனிடம் உயிர்களின் மேல் உள்ள கருணையை. ஆனால்,  அதே அவர் கதையின் தொடக்கத்தில் பெற்ற மகளைக் கொல்வதாகக் கூறி சத்தியம் செய்யும் காட்சிகளோடு அந்த கருணை அவருக்கு முரண்பட்டே நிற்கிறது.

ஒரு மனிதன் தனது அடிப்படை குணங்களை தனக்கு முரணானதாகவும், எதிரானதாகவும் மாற்றி செயல்பட எப்படி சாதியம் தூண்டுகிறது என்பதை காட்டும் ஒப்பீடுகள் அவை.  அந்த ஒப்பீட்டின் மூலமாக மகளைக் கொல்ல சம்மதித்த தகப்பனின் மன கொந்தளிப்பைக்  காட்ட முடிகிறது. ஆனால், அந்த ஒப்பீடுகள் கதையின் யதார்த்தத்தை எங்குமே சிதைக்கவில்லை என்பதுதான் சிறப்பு.  அந்த யதார்த்த நிலையிலிருந்துதான் கதை எனக்குப் புரிகிறது.

ஒரு கதையைத் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவது அதன் மொழிநடையே. முழுதுமே உரையாடலாக, அதுவும் வட்டார வழக்கில்  அமைந்திருந்த இந்தக் கதையைப் படிக்கும் போது எங்குமே சலிப்புத் தட்டவில்லை. பொதுவாக அதிக உரையாடலில் அமையும் கதைகளை வாசிக்க நான் விரும்பியதில்லை. ஆனால், இந்தக் கதை அப்படி இல்லை. படித்து முடிக்கும் வரையில் நான் புத்தகத்தைக் கீழே வைக்கவில்லை. அது இந்தக் கதை கொண்டுள்ள மொழியின் வெற்றி. அனுபவித்தவனின் வலியும், பார்வையாளனின் வலியும், ஒருவனுக்குள் சேரும்போது அது பன்மடங்காகும். கதைக்குரிய சமகால மனிதனாகத்  தனது வலியை  அனுபவித்தவனின் வலியாக  எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவே சொல்லி இருக்கிறார். எந்த இடத்திலும் அவர் தன் குரலை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எந்தக் காட்சிகளிலும் சுய உணர்ச்சியை அவர் சொல்லவில்லை. அத்தனையையும் காட்சிகளாகவே காட்டிய  இந்தக் கதையில் கவித்துவமில்லை. ஆனால், அது தரக்கூடிய அத்தனை ஆழமான புரிதலும், தொடுதலும் இருந்தது. இதிலிருந்து நான் அறிந்தது ஒன்றுதான், ஒரு வலியை, ஒரு உணர்வை, சொல்ல எழுதுபவரிடம் உணர்ச்சிமொழியும், வாசிப்பவனிடம் அதை உணரும் உள்ளமும் இருந்தால் போதும்.  ஒருவேளை அவர் இடையில் கொஞ்சம் சுய உணர்ச்சியை சேர்த்திருந்தால் அது இன்னமும் கதைக்கு அழகு சேர்த்திருக்கக்கூடும். ஆனால், அது இல்லாததில்தான் அவர் தனித்துவம் பெறுவதாக அறிகிறேன்.  இது இலக்கியத்தில் புதிய இரசனை முறையை எனக்குக் கற்றுத் தருகிறது.

நாம் நேசிக்கும் ஓர் உறவை நாம் நிராகரிக்கும் போதும், அதே உறவு நமக்காக தன்னை அர்ப்பணிக்கத் துணியும் போதும், நிராதரவாய் எதையுமே செய்ய முடியாமல் அழுவது அன்பு மட்டும்தான். அதுவே அச்சூழலுக்குரிய ஆன்மாவுமாகிறது. அப்படி ஒரு ஆழமான உணர்வை இக்கதை எனக்குள் ஏற்படுத்தியது. இந்தக் கதையின் எல்லா அத்து மீறல்களுக்குப் பின்னாலும் இறுதியாக வஞ்சிக்கப்பட்டது அடித்தட்டு சமூகம் மட்டுமல்ல அன்பும்தான்.

1 comment for “பெத்தவன்: வஞ்சிக்கப்படும் அன்பு

  1. Majitha Burvin
    March 10, 2019 at 11:36 am

    வலிகளை வார்த்தைகளாக்கி எண்ணத்தைக் கதைக்களமாக மாற்றி ஆணவக் கொலைகளை காட்சிகளாக உருவாக்கி பலநூறு பாக்கியங்களை பலியிடும் சமூகத்தின் முகத்திரையைக் கிழித்து எறிந்திருக்கிறார் இமையம்.

Leave a Reply to Majitha Burvin Cancel reply