பார்த்த இடமெங்கும்
கண்குளிரும் பொன்மணல்
என் பாதம் பதித்து
நடக்கும் இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து எரிகிறது
ஒரு பிடி நிலம்.
பாலை – பிரமிள்
பொன்மணல் விரித்த பாலைவெளி. கண் தீண்டக் குளிர்ச்சி. கால் பதிக்க, தழல்த்தீண்டல். எல்லா உறவுகளும், அதைக் கட்டி வைக்கும் உணர்ச்சிகளும், அது வெளிக்காட்டும் உணர்வுகளும் இந்தப் பாலைப் பொன்மணல் போன்றதுதானா? இந்த வினாவை, நோய்ச் சூரியன் தகிக்கும், பாலைவெளிக்கு ஒப்பான, ஜிப்மர் மருத்துவமனை எனும் களத்தில், நெருப்பு விபத்து பிரிவு எனும் திடலில் வைத்து, சுடர் கொளுத்திப் பார்க்கிறது, இமையம் அவர்களின் ஐந்தாவது நாவலான செல்லாத பணம்.
புதுச்சேரி. ஜிப்மர். அரவிந்த அன்னை குறித்துக் கொடுத்த இடத்தில், நேரு முன்னின்று கொண்டு வந்த இந்தியாவின் மிகப்பெரிய, சகல மருத்துவ வசதிகளும் கொண்ட, அரசு மருத்துவமனை. இந்திய நிலமெங்குமிருந்து, மீட்சி வேண்டி, பல்வேறு உபாதைகளுடன், இத்தலம் நோக்கி, ஏழை – பணக்காரன் பேதமின்றி, படையெடுக்கும் நோயாளிகள் நாளொன்றுக்குப் பல்லாயிரம் பேர். அதில் வேதனை கரைபுரண்டோடும் வைதரணி நதி, அவசர சிகிச்சைப் பிரிவு. அதிலும் வேதனை துயரின் உச்சம் நிகழ்வது, புற்றுநோய் மற்றும் நெருப்பு விபத்துக்கான பகுதி. இந்த ஜிப்மரில் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் பத்து நோயாளிகள் வந்து விழும், நெருப்பு விபத்து பகுதியில், தொண்ணூறு சதமானம் எரிந்தழிந்த உடல் ஒன்றில் மையம் கொண்டு, அந்த உடலை அச்சாக்கிச் சுழல்கிறது இந்த நாவலின் கதை.
எரிந்தழிந்த அவ்வுடல், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான, முப்பது வயதுடைய பெண்ணுடையதாக இருந்தது. அந்தப் பெண், அந்தஸ்தும் சமூக மதிப்பும் கொண்ட, நிலையான பொருளாதார வளம் கொண்ட, ஒரு உயர்சாதிக் குடும்பத்தில், நடேசன் வாத்தியார் – அமராவதி தம்பதிக்கு செல்ல மகளாகப் பிறந்தவள். ரேவதி எனும் பெயர் கொண்டு, மடியிலேயே வளர்ந்தவள். பிரியம் கொண்ட ஒரே அண்ணன் முருகனுக்கு ஒரே செல்லத் தங்கையாக, தனது உயர்க்கல்வியில் மதிப்பும் நட்பும் கொண்ட சக மாணவி அருண்மொழிக்குத் தோழியாக இருந்தவள். இத்தனை பேருக்கும், ஒரு நியாயமான காரணத்தைக் கூட சொல்லாமல், சொல்ல இயலாமல், ஆட்டோ ஓட்டி ஜீவனம் நடத்தும், கல்யாணமாகாத அக்கா, தொழில் அற்ற அம்மா அப்பாவை கொண்ட, இருக்க போதிய இடமற்ற வீடு கொண்ட, பர்மா அகதி ரவியை விரும்பி திருமணம் செய்து கொள்கிறாள். உறவுகளை இழக்கிறாள். நிலையான பொருளாதாரமற்ற, குடிநோயாளி ரவியால் நிம்மதியை இழக்கிறாள். வேலைக்குப்போக முடியாமல் பொருளாதார விடுதலை, சமூக வாழ்வு அனைத்தையும் இழக்கிறாள். சந்தேகம் குடி புக, மானம், மரியாதை அனைத்தையும் இழக்கிறாள். வதைபடுகிறாள். வதைகளின் தகிப்பு உயர்ந்து உயர்த்து, எரிந்து அழித்த போது, அந்த உடல் இரு குழந்தைகளுக்குத் தாயான பெண்ணுடையதாக இருந்தது.
எரிந்து மருத்துவமனை புகுவது துவங்கி, அடங்கி வெளியேறுவது வரை இந்த உடல் கொள்ளும் தவிப்புகள் ஒரு இழை. இந்த உடலைக் கட்டிவைத்திருக்கும் பல்வேறு உறவுகளின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மறு இழை. இந்த இரு இழைகளையும் ஊடும்பாவுமாக்கி, உடல், மனம், உணர்வுகள், உறவுகள், குடும்பம், சமூகம், மற்றமை, பிறன் போன்ற பல்வேறு அலகுகள் மீது, அதன் சாராம்சம் மீதான கலைவிசாரம் கொண்டு, பின்னி விரிகிறது ‘செல்லாத பணம்’ நாவல்.
ரேவதியை எரிப்பது போல பார்க்கும், அமராவதியின் வெறுப்பு நோக்கில் துவங்கும் புனைவு, “நீ செத்தா நிம்மதி, அது போதும்னு என் வாயால சொல்ல வெச்சுட்டியே” என்று மகளின் பிணத்தின் முகத்தை நோக்கி ஒப்பாரி வைக்கும் அவளது கதறலில் நிறைகிறது.
வரப்போகும் மருமகனின் பின்புலம் தெரிந்ததும், மகளை “நீயெல்லாம் செத்து ஒழிஞ்சாத்தான் என்ன!” என மனதுக்குள் குமுறுகிறாள். தாயின் வெறுப்புதான் தீயாகி மகளை எரித்ததா? அம்மா அம்மா என கொஞ்சிக் கொஞ்சி மடிமேல் போட்டு வளர்த்த மகள், அவள் மேல் ஏன் நடேசனுக்கு அத்தனை பாராமுகம்? விரும்பத்தகாத திருமணம் ஒன்றை செய்து கொண்டு மகள் வெளியேறினாள், அவ்வளவுதானே? அவர் பாரா முகத்துக்கு அவர் அமராவதி வசம் சொல்லும் காரணங்கள் எல்லாம் நியாயம்தானா?
பிரியமுள்ள ஒரே தங்கை. அந்த அண்ணன் தங்கையின் பிரியம் எந்த ஆழம் கொண்டிருக்கும் என்பதை, தங்கையின் தோழி அருண்மொழியை, முருகன் காதலித்து மணம்புரிந்து கொண்டவன் எனும் நிலையின் பின்புலத்தை கொண்டு, வாசக யூகத்துக்கு அந்த உதிரஉறவின் பிரியத்தின் அழகை விட்டுவிடுகிறது நாவல். அந்த அண்ணன், ஒரு சொல் கூட பேசாதவனாக மாறிப் போகிறான். ரேவதி சாகும் தருவாயில், ஒரு முறை தனது பெயரைச் சொல்லி அழைக்கச் சொல்கிறாள். ஸ்தம்பித்த நிலையில் அப்போதும் அதை செய்ய இயலாதவனாக இருக்கிறான்.
மிக யதார்த்தமான ஓர் ஒப்பாரிப் போல மேலுக்கு தோற்றம் காட்டினாலும், அமராவதியின் சொல் வழியே, உள்ளுக்குள் ரேவதியைச் சூழ்ந்த மானுடர் ஒவ்வொருவரும், வெளியே தெரியும் பிரியத்தின் கனியை, அதை கொண்ட விருட்சத்தின் வேறாக, நிற்கும் வெறுப்பின் ஆணி வேரைக் கண்டவர்களாக, அக்கணம் அந்தப் பிணத்தின் முன் அவர்களை நிறுத்திவைத்து விடுகிறது. கனியைச் சுவைத்தவள் குடும்பம் எனும் அமைப்புக்குள் நின்றவள். அவள் குடும்பம் விரும்பாத மணம் புரிந்து வெளியேறிய பின் அவள் காண்பது, கனி தனது சாரத்தை உறுஞ்சி வளர்ந்த வெறுப்பின் உயர் சேற்றை.
“அகதி. அப்டின்னா என்ன சாதி?” கெளரவமான, வசதியான, உயர்சாதி குடும்பத்தில், அதற்குள் நின்று கொண்டு, மகளைப் பெற்றவள் எழுப்பும் வெறுப்பான கேள்வி. அதற்கு அதே குடும்பம் அளித்த சூழலுக்குள் வளர்ந்து நிற்கும் மகளால் என்ன பதிலை சொல்லிவிட முடியும்? இந்தக் குடும்பம் எனும் அமைப்புக்குள் இருந்து, இதே போன்றதொரு சக குடும்ப அமைப்புக்குள் சென்றால் மட்டுமே, இந்த அமைப்புகள் வழியே அவள் சுமந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட மதிப்புகள் செல்லுபடி ஆகும். மீறினால்? கிழிந்து போன, ரூபாய் போல அவள் செல்லாத பணமாகிப் போவாள். ரேவதி இந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதன் வழியே செல்லாக்காசாகி விடக்கூடாது எனும் பதட்டமே ரேவதியின் மொத்த குடும்பத்தையும் அலைக்கழிக்கிறது. அகதி என்பவன் யார், பரிவர்த்தனை மதிப்பை இழந்த பணம், எந்த தேசத்து பணமாக இருந்தால்தான் என்ன? அது எந்த தேசத்தில் சென்று சேர்ந்தால்தான் என்ன? அது செல்லாத பணமே.
பணம். லௌகீகமான ஒரு மனிதனுக்கு அது மட்டும்தான் எல்லாம். பாதுகாப்பு, மகிழ்ச்சி, எல்லாவற்றுக்கும் மேல் அந்தஸ்து எல்லாவற்றையும் அளிப்பது அதுவாக இருக்கிறது. நடேசன் ஆயுளை அடமானம் போட்டு, ஆயுளுக்கு ஈடாக ஈட்டி வைத்திருப்பது என்ன? சொந்த வீடு, மூன்று நான்கு மனை, கையில் சில லட்சங்கள். இவை மொத்தத்தையும் அழிக்கும், எதன் பொருட்டு மொத்த வாழ்வையும் அடமானம் போட்டாரோ, அதன் பொருளின்மையை, மருத்துவர் ஒற்றை சொல்லில் சொல்லி விடுகிறார். இந்தப் பணம் இப்போ இங்கே செல்லாத பணம்.
ஒரு நாள் இரவு, நாட்டுமக்கள் கையில் வைத்திருக்கும் பழைய காசு எதுவும் இனி செல்லாது. ஆகவே அவற்றை குறிப்பிட்ட தேதிக்குள் அரசுக்கு திரும்ப ஒப்படைத்து, ஈடாக புதிய பணத்தை இந்தத் தேதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவிக்கிறது. ஒரு அறிவிப்பால் கையில் புழங்கிக் கொண்டிருந்த பணம் செல்லாத பணம் ஆகி விடுகிறது. அந்தப் பணம் மீண்டும் அரசு மாற்றி அளிக்கும் புதிய பணமாக மாறும் வரை என்ன ஒரு பதட்டம். அப்படிச் செல்லாத பணமாகிப்போன ரேவதியை, அந்தப் பணமதிப்பை மீட்க, அவளை உயிருடன் தரக் கேட்டு, மருத்துவரின் மேஜையில் பணத்தைக் கொட்டுகிறார் நடேசன். வேறு மருத்துவமனை போகலாமா என கேட்பவர் அனைவர் குரலின் பின்னும் இயங்கும், பல காரணங்களில் ஒன்று, தனியார் மருத்துவமனைக்குள் பணம் மட்டுமே மதிப்பு மிக்க ஒன்று என்பதும் அடங்கும்.
மிகச் சாதாரணமாக நாவலுக்குள், எல்லா மாந்தரும் “பணத்த வீச வேண்டியதுதானே” என்கிறார்கள். பணத்தை வீசி மட்டுமே விளையாடி பல மதிப்பீடுகளை உடைத்த சமூகத்தில் நிற்பவர்கள். நடேசன் முதன் முதலாக பணம் செல்லாமல் போகும் சூழலில் வந்து விழுகிறார். பணம் செல்லும் இடத்தில் கூட, அப்படி ‘பணத்தை வீசி’ காரியத்தை சாதித்து விட முடியாது, கூனிக் குறுகி தனது சொந்தப் பணத்தை, கள்ளப் பணம் போல பயத்துடனும் தயக்கத்துடனும் செலவு செய்ய வேண்டிய இடங்களும் சமூகத்தில் உண்டு என்பதை, மகளின் பிணத்தைப் பெறும் நடவடிக்கைகளின் போது நடேசன் காவல் நிலையங்களில் கண்டுகொள்கிறார்.
பொதுவாக கடலூர் பக்கம் காவல் நிலையங்களில் சில வழக்குமுறைகளைப் பார்க்கக் கிடைக்கும். ”அந்தாளா… பயர் கேசுக்கு கூட காசு வாங்குவான் சார் அந்த ஆளு” என ஒரு காவல் துறை ஊழியர் மீதான புகார் பொது ஜனம் [அதாவது பொதுவான குற்றவாளிகள்] மத்தியில் பரவி விட்டால், அந்த ஊழியர் எந்த நியாய தர்மத்துக்குமே கட்டுப்படாதவர் எனும் பீதியில், அந்த நபர் இருக்கும் காவல் நிலையம், ஏரியா இவற்றை, கூட அணுகுவதை தவிர்ப்பார்கள். கடலூர் பகுதியில் மட்டுமே இது நிகழ்கிறதா, இந்த வழக்குமுறை பின்புலம் என்ன என நான் அறியேன். ஆனால் நாவலில் வரும் ஆனந்த் குமார் நேர்மறை காவல்துறை ஊழியர். அம்மாவை இதே போல நெருப்பு விபத்தில் இழந்து, அனாதையாகி நின்றவன். நல்விதி. அவன் காவலனாகி விட்டான். தீவிதியாக மாறி இருந்தால், காவல்துறையால் தேடப்படுபவனாக மாறி இருந்திருப்பான். இதை தனக்குள் உணர்ந்தவனாக இருப்பதாலேயே அவன், தாயிழந்து நிற்கும் ரேவதியின் குழந்தைகளை, அதன் எதிர்கால நிலையை அருண்மொழிக்கு புரிய வைப்பவனாக இருக்கிறான். மொத்த நாவலுக்குள் வரும் மொத்த கதாபாத்திரங்களில் அருண்மொழி மட்டுமே சற்றேனும், ரேவதியின் கணவன் ரவியை, அவனது நிலையைப் புரிந்துகொள்ள யத்தனிக்கிறாள்.
நாவலுக்குள் ரேவதி சார்ந்த பிறர் அனைவரும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க, சற்றேனும் ரவியை குறித்து சிந்திப்பவளாக அருண்மொழி மட்டுமே இருக்கிறாள். மருத்துவமனைக்குள் அமராவதி சந்திக்கும் மற்றொரு தாய், தனது மகள் இப்படி அவிந்தடங்கும் வேதனையை, தான் வளர்த்த ஆட்டுக் குட்டிகளை, தன்னை தாயென நம்பிய அவற்றை, பணத்துக்காகப் பண்டமாற்று செய்த, அவற்றின் குரலற்ற வேதனையை, விதி தனக்கு இப்போது திருப்பி அளித்திருப்பதாக சொல்லுகிறாள். தனது நல்லொழுக்கங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டுப் பார்க்கும் நடேசன்,எதன் பொருட்டு தனக்கு இந்த வேதனை என வருந்துகிறார்.
தான், தான், தான், இந்த தான்களால் எல்லைகட்டப்பட்ட சமூகத்தில் வந்து விழுகிறான் ரவி. வந்தேறி நாயே வெளியேறு என்று சொல்லி, குப்பை போல வெளியேற்றிய ஒரு தேசத்திலிருந்து, மறுசுழற்சிக்கு குப்பையை வாங்கிய ஒரு தேசத்தில், மறுசுழற்சி செய்யப்படாத குப்பையாக எஞ்சுகிறான் ரவி. பர்மாவுக்கு அவன் ஓர் அந்நியன். இந்தியாவுக்கு அவன் ஓர் அகதி. குடும்பத்துக்கு அவன் ஒரு தறுதலை. அவன் நிற்கும் நிலம் துவங்கி, கொண்ட உணர்வுகள், அடைந்த உறவுகள் அனைத்தாலும் வெளியேற்றப்பட்ட ஓர் அந்நியன் அவன்.
அந்நியன். வரையறை செய்ய இயலாத குணநலன்கள் கொண்டவன். இது போதாதா ‘தான்’ எனும் திட்டவட்டமான ஆளுமைகள் கொண்ட மற்றமைகள் கூடி, இந்த தான் எனும் வரையறைக்குள் நிற்காத திட்டவட்டமான ஆளுமை என ஒன்றற்ற ‘பிறன்’ ஆன ரவியை தண்டிக்க? அந்நியன் நாவலின் மெர்சோ சிக்கும் சூழலுக்கும், இந்த செல்லாத பணம் நாவலின் ரவி வந்து விழும் சிக்கலுக்கும் ஒரே விதமான தொடர்பு. அது திட்டவட்டமான வரையறை இல்லா ஆளுமை எனும் சிக்கலில் வேர் கொள்கிறது. அம்மா சாவுக்கு அழாதவனாக இருக்கிறான் அந்த அந்நியன். மனைவி சாகக் கிடக்கையில் குடித்து விட்டு வந்து நின்று தள்ளாடுபவனாக இருக்கிறான் இந்த அந்நியன். அந்த அந்நியன் திட்டவட்டமான ஆளுமையற்று, கூடவே குற்றம் செய்தவன். இந்த அந்நியன் திட்டவட்டமான ஆளுமை அற்றவன். ஆகவே திட்டவட்டமான ஆளுமை அற்ற இவனைப் போன்ற ஒருவன், நிச்சயம் இந்தக் குற்றத்தை செய்திருப்பான் எனும் முடிவோடு துரத்தும் அமைப்புகள் முன் செயலற்று தலைகுனிந்து நிற்பவன்.
திட்டவட்டமான தண்டனை ஒன்றை வழங்க, அந்தத் தண்டனைக்கான குற்றம் திட்டவட்டமான எழுத்து சட்டகத்துக்குள் வரையறை செய்யப்பட வேண்டும். திட்டவட்டமான தண்டனை, எந்தத் திட்டவட்டமான குற்றத்துக்கு அளிக்கப்படுகிறதோ, அந்தக் குற்றத்துக்கான அக மனநிலை, அந்த அக மனநிலைக்கான புற சமூக காரணிகள் அனைத்தும் முற்றிலும் திட்டவட்டமற்ற ஒன்றாக இருக்க, அப்படித் திட்டவட்டமற்ற ஒன்றின் ஸ்தூலப் பிரதிநிதியாக அங்கே அனைவர் முன்பும் ரவி நிற்கிறான்.
“ஆடு மாடுக கூட சேந்து வாழுது, ஆணும் பொண்ணும் சேந்து வாழ முடியலெயே” என்று நாவலுக்குள் எழும் ஒரு தாயின் புலம்பலின் சாராம்சம் என்ன? ஆட்டுக்கும் மாட்டுக்கும் இயற்கை அதன் உடலில் பொறித்தனுப்பிய திட்டவட்டமான குண இயல்பும், அதன்பாலான செயல் திட்டம் மட்டுமே உண்டு. மனிதன்தான் பரிதாபமானவன். இயற்கை அவனுக்கு கூடுதலாகச் சிலவற்றை வழங்கி, இப்படிப் புலம்பும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டது. ரவி குணங்களின் சாம்பல் நிறம், திட்டவட்டமான கருப்பு வெள்ளை கொண்டவர்களால் அவனை நாயினும் கடையனாக மாற்றுகிறது.
“நான் சல்லிப்பயல்தான். நீங்கதான் பெரிய மனுஷங்க ஆச்சே, அப்டின்னா பெரிய மனுஷனாத்தானே நடந்துக்கனும்.” ரவி அருண்மொழியைக் கேட்கும் கேள்வி. கேள்வித் தொடரின் மௌன முடிவு. நீங்க ஏன்யா சல்லித்தனமா நடந்துக்குறீங்க என்பதே. அவனைச் சுற்றி நிற்கும் அனைவரும் அவனைக் “குடிகாரன்” என வரையறை செய்கிறார்கள். ஏன் அவன் குடி நோயாளியாக இருக்கக் கூடாது என ஏன் ஒருவருமே சிந்திக்க மறுக்கிறார்கள்? அவன் வெட்டித் தகராறு பஞ்சாயத்தில் எப்போதும் இருப்பவன் என்றுதான் காவல்துறை சொல்கிறதே அன்றி அவன் திருடன் என்று எங்கும் சொல்லவில்லை. பொண்டாட்டியை அடித்து தெருவில் விட்டவன் என்றுதான் தெரு சொல்கிறதே தவிர, பெண் பித்தன் என்றோ பொம்பளப்பொறுக்கி என்றோ எங்கும் எவரும் சொல்லவில்லை.
பணம் பிரதானம் என்றாகிப்போன இந்த லௌகீக வாழ்வில், அவன் லாட்டரி விற்கிறான். அதிர்ஷ்டத்தின் பக்கம்தான் நிற்க விரும்புபவனாக இருக்கிறானே அன்றி, அவன் குற்றத்தின் பக்கம் நிற்கவில்லை. அவனைச் சூழ இருப்போர் மீள மீளப் பேசுவது அவன் மனைவியைக் கொளுத்தியது அவனே. ஒன்று விபத்து, மற்றது கொலை. இந்த இரண்டு சாத்தியம் மட்டும்தானா இங்கே இருக்கிறது? தற்கொலை எனும் மூன்றாவது சாத்தியமும் அங்கே இருக்கிறது. ரேவதி ஏற்கனவே இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள சென்றவள்தான். அவள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆகவே, அது தற்கொலை மிரட்டல் எனும் ஆளவில் சுற்றத்தாரால் புரிந்துகொள்ளப்படுகிறது.
“விடும்மா எல்லாம் வெறும் ஆக்சிடன்ட்” என ரேவதி சொல்வது இதைத்தான். “நீ இல்லாவிட்டால் செத்து விடுவேன்” எனும் ரவியின் ஒரு சொல்லின் பின்னால் சென்றாள். “சாகறதுன்னா சாவு போ” என அவனே சொன்ன ஒற்றை சொல்லை தொடர்ந்து செத்துப் போக முடிவு செய்கிறாள். அந்த ஒரு சொல்லின் பின்னால் சென்றவள், இந்தச் சொல்லின் படி நின்றதில் என்ன ஆச்சர்யம்? சும்மா போகிற போக்கில் சொல்லப்பட்ட சொல் அல்ல. இங்கே சொல்லப்பட எதுவும் நிகழ்ந்து முடிந்தே நிறைவை எய்துகிறது. மயக்கப் புலம்பலில் ரேவதி அருகே இல்லாத அம்மா வசம் என்னென்னவோ பேசுகிறாள். அதில் ஒன்று ”அம்மா நான் செத்துப் போனா திருவாசகம் படிப்பியாம்மா”. பின்னர் ஒரு மாலை நேரம் நடேசன், பதிகத்தைப் பிரித்து வாசிக்கிறார்.’ ‘தாயுமிலி தந்தையுமிலி நான் தனியன் காணேடி” வரியின் போதுதான் அங்கே ரேவதியின் உயிர் பிரிகிறது.
உன்மீதான காதலை
காப்பாற்றிக்கொள்ள
ஆயிரம் வழி இருக்கிறது
அதில் ஒன்று
நான் உனக்கு
இல்லாமலே போவது
எனும் மனுஷ்ய புத்திரனின் கவிதை எந்த ஆழத்திலிருந்து எழுகிறதோ, அந்த ஆழத்திலிருந்து எடுத்தது ரேவதியின் தற்கொலை முடிவு. ஆம் ரேவதியால் ‘சொல்லத் தெரியாத’ அதன் பெயர் காதலாகவும் இருக்கலாம். அதைக் காப்பாற்றிக் கொள்ளவே அவள் அன்பான குடும்பத்தை விட்டு, மானம், கௌரவம், வேலை அனைத்தயும் இழந்து நிற்கிறாள். அதைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டே தற்கொலை முடிவையும் எடுக்கிறாள். தனது குழந்தைகளுக்கு தந்தையாவது மிஞ்சட்டும் என்றே வாக்குமூலத்தை மாற்றித் தருகிறாள்.
ரேவதியின் பிணத்தின் முன் அம்மா அம்மா என்று விழுந்து புரண்டு கதறி அழுகிறான் ரவி. நீ இல்லாவிட்டால் செத்து விடுவேன் என்ற ரவி, இனி என்ன செய்வான்? அவன் குழந்தைகள் என்ன ஆகும்? அருண்மொழி கண நேர உள எழுச்சியில் செய்ததுதான் என்றாலும், குறைந்த பட்சம் அது போலவாவது, சமூகம் அள்ளி அணைக்குமா? அல்லது மருத்துவமனைக்குள், நடேசனும் அமராவதியும் அக்குழந்தைகளுக்கு காட்டிய பாராமுகத்தை காட்டுமா?
புகுந்த வீட்டில் தூங்கியதே இல்லை என மயக்கத்தில் அம்மா அருகில் இருப்பதாக நினைத்து புலம்புகையில் ரேவதி சொல்கிறாள். தூங்கு தங்கம் இனிமே உனக்கு நிம்மதிதான் என ஒப்பாரி வைக்கிறாள் அமராவதி. பிணவறை வாசலிலேயே, வாகனத்துக்குள் ஏற்றப்படும் முன், ரேவதி முன்னால் அமராவதி அழுவதை யாரோ தடுக்க, பாய்ந்து வந்து அவர்களை மறிக்கிறாள் அருண்மொழி. ”விடுங்க. அவங்க அழட்டும். அங்க அவன் வீட்ல நின்னு எங்களால அழ முடியாது” என்கிறாள்.
என் தெய்வமே அங்க சாகக் கிடக்கு என்று அருண்மொழி வசம் சொல்லும் ரவி எங்கே? ரவி வீட்டில் உட்கார்ந்த்து அழ எங்களுக்கு கௌரவம் தடுக்கும் என்று சொல்லும் அருண்மொழி எங்கே? போங்கடா சல்லிப்பயல்களா என்று இவர்களை நோக்கி சொல்லவேண்டியவன் ரவிதான். ஆனால் சொல்லவில்லை. காரணம் அவன் பெரியமனிதன்.
யார் சல்லிப்பயல்? எது சல்லித்தனம்? எனும் வினாவை சமூகத்தில் போட்டு, சல்லித்தனத்தின் பல்வேறு உள்ளடுக்குகளை, அது சல்லித்தனம் என்றே அறிய இயலா அளவு மறந்து போகும் வண்ணம், சமூக மனதின் மறதிக்குள் புதைந்து போன பல்வேறு சல்லித்தனங்களை, ஒரு ஆலமரத்தை கிளையோடும் விழுதோடும் நிலம் விட்டு அகழ்ந்து, அதன் வேர்களை வானம் நோக்கி திறக்கும் வண்ணம் தலைகீழ் ஆக்கினால் எவ்வாறு இருக்குமோ, அப்படி பல்வேறு விஷயங்களை தலைகீழ் ஆக்கி, திறந்து காட்டிய இமையம் அவர்களின் செல்லாத பணம் நாவல் சுவாரஸ்யமான ஓட்டம் கொண்ட, தவிர்க்க இயலா அனுபவம் நல்கும், முக்கியமான நாவல்.
மனிதன் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டே இருக்கிறான். பணத்தைக் கொண்டு உலகையே விலை பேசுகிறான். அந்தப் பணமும் ஒரு இடத்தில் செல்லாமல் போகும். அதன் மதிப்பிழந்து போகும் தருணத்தை வாழ்வின் நிலையாமையை கையறுநிலையை ரேவதியின் உயிர் துடிதுடித்துப, உடல் துர்நாற்றமெடுத்துப் போகும், அந்தத் தருணத்தில் சொல்லியிருப்பதுதான் இமையத்தின் எழுத்திலிருக்கும் வலி(மை).