பி.ரம்லி: கலை – கனவு – கலகம்

‘தூய கனவு நொறுங்கி சிதைந்ததுButterkicap-Makanan-P-Ramlee-3-e1521685189608
கட்டிய மாளிகை கல்லறை ஆனது
இருள் சூழும் வருங்காலம் வருவது நிச்சயம்,
என் ஆன்மா உழல்கிறது வடக்கும் தெற்கும்’

இது பி.ரம்லியின் வரிகள். அவர் இறுதியாய் எழுதிய மலாய் பாடல் வரிகள். அவர் வாழ்வின் இறுதிப்பகுதியின் அலைக்கழிப்பைச் சொல்லும் வரிகள். 1973 இல் தனது 44வது வயதில் இறப்பதற்கு முன் எழுதிய வரிகள். மலாய் சினிமா உலகையும் மலாய் இசைத்துறையையும் உலக அரங்கிற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என காலத்தைத் தாண்டி கனவு கண்டவனின் வரிகள்.

எல்லா சமூகங்களையும் போல மலாய் சமூகத்திலும் பொழுதுபோக்குக் கலையாக  மட்டுமே கதைச் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. பண்டையக்  கதைகள் சொல்லும் வழக்கு (Penglipurlara), வாயாங் கூலிட் எனப்படும்  திரையில் நிழல் பொம்மைகளை வைத்து காண்பிக்கப்படும் பொம்மலாட்டங்கள், மஃயோங் (Makyung) எனப்படும் நாடக – நடனக்கலை, மேல்தட்டுக் கலைப்படைப்புகள், மேடை நாடகங்கள் ஆகிய கலைகளின் வழியாகக் கதைகள் பரிமாறப்பட்டன. காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகக் கதைச் சொல்லும் திறன் சினிமாவுக்குள் பிரவேசிக்க ஆரம்பித்து, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாய் சினிமா கலையாக வளர்ச்சி கண்டது.

1933 இல் வெளிவந்த முதல் மலாய்ப்படம் லைலா – மஜ்னு. இது பார்சி நாட்டின் பின்னணியைக் கொண்ட காதல் கதை. ஒருவகையில் தமிழ்ச் சமூகத்திற்கு நன்கு அறிமுகமான கதைதான். 1940- 1950 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்கள், மலாய் சினிமா உலகம் விறுவிறுப்பாகச் செயல்பட்ட  காலக்கட்டம். இக்காலக்கட்டங்களில் வெளியாகிய  மலாய்ப்படங்கள் சமகாலத்தைய மலாய் சினிமா உலகத்தை விட  எண்ணிக்கையில் அதிகமானது. Malay  Film Production மற்றும் Cathay – Keris Film Production ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் அப்போது மலாய் சினிமாவின்  உச்சக்கட்ட வளர்ச்சிக்கு அதிகமாகப் பங்களித்துள்ளன.

டான் ஸ்ரீ டாக்டர் ரங்கீ ஷா, கே.எஸ்.டி.ஜே (Runme Shaw, K.St.J- 1901 – 1985) சிங்கப்பூரில் ஷா அமைப்பின் தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார். ஷா பிரதர்ஸ் (Show Brothers) என்று அறியப்படும்  ரன்மி ஷா மற்றும் அவரது இளைய சகோதரர், ரன் ரன் ஷா (Run Run Sha), இணைந்து சிங்கப்பூர் மற்றும் மலாயாவில் இருந்த திரைப்படத் துறையில் முன்னோடிகளாக விளங்கினர். மேலும் ஆசியாவில் குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் திரைப்படத் தொழிலை விருத்தியடையச் செய்த பெருமை இவர்களைச் சாரும்.

மலாய் பிலிம் புரொடக்சன்ஸ் லிமிடெட், (MFP, ஸ்டுடியோ ஜலான்  அம்பாஸ் என்றும் அழைக்கப்படுவதுண்டு ) ஜாலான்  அம்பாஸில் அமைந்துள்ள ஒரு சிங்கப்பூர் திரைப்பட நிறுவனம் மற்றும் ஸ்டூடியோ ஆகும். இது ஷா பிரதர்ஸின் கிளை நிறுவனமாகும். மலேசிய வார்னஸ் பிரதர் ( Malaysia  Warner  Brothers) என்று பேர்பெற்ற ஷோ ஸ்டூடியோவில்  (Show Studio)   பி.ரம்லி சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். முதலில்  அரங்க உதவியாளராகப்  பணியை ஆரம்பித்த ரம்லி குறுகிய காலத்தில் அவ்வரங்கத்தின் திரைப்படத் தயாரிப்புக்கு இயக்குனராகப் பதவி உயர்வு பெற்றார். வசூல் ரீதியான பல வெற்றி படங்களைத் தந்து, ஆசிய ரீதியில் விருதுகளைக் ( எ .கா : Anak  Ku   Sazali – Lakonan Terbaik  Filem Asia Ke 4 Di  Tokyo 1957) குவித்துக்  கொண்டிருந்த ரம்லியை ஷோ பிரதர்ஸ் முதலாளி  தங்கமகனாகக் கவனிக்கத் தொடங்கினர். பி.ரம்லிக்கான இந்தத் தங்கத் தட்டு உபசரிப்பு அவ்வரங்கத்திலில் இருந்த மூத்த இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் பலருக்கு எரிச்சலைத் தந்தது. இது பி.ரம்லிக்கு எதிராகப் புகையத் தொடங்கியது.

1945-இல், இரண்டாவது உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தபிறகு, ஷா பிரதர்ஸ் நிறைய மலாய்த் திரைப்படங்களை வெளியிடும் பணியைத் தொடர ஆரம்பித்தது. அந்நிறுவனம் நிறைய புதுமுகங்களைச் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. அவ்வகையில்தான் பி.ரம்லியும் இந்நிறுவனம் மூலம் அறிமுகமானார். 1948-இல், பினாங்கில் ரயிலேறி சிங்கப்பூருக்குள் வந்திறங்கிய பி.ரம்லி நடித்த முதல் படம் Chinta (காதல்). இப்படத்தில் அவர் வில்லனாகவும், பின்னணிப்பாடகராகவும் பங்காற்றினார். இத்தனை சிறிய பங்களிப்புடன் தொடங்கியவர் மலாய் சினிமா உலகில் தனித்த ஆளுமையாக மாறுவார் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

பி.ரம்லியின் தொடக்கக் காலம் சுவாரசியமானது. படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவனாக இருந்த பி.ரம்லியின் இரண்டு ஆசிரியர்கள் அவருடைய வளர்ச்சிக்கு ஊக்கமாக இருந்துள்ளனர். பினாங்கு ஃபிரீ ஸ்கூலில் (Penang Free School) பயின்று வந்த பி.ரம்லி ஒரு சோம்பேறி மாணவனாகப் பள்ளியில் கருதப்பட்டார். இருந்தாலும் சான் மிங் கீ எனும் ஆசிரியரும் மற்றும் இசைக் கல்வி ஆசிரியரான கமாருடின் என்பவரும் பி.ரம்லியின் திறனைக் கண்டு அவருக்குத் தொடர்ந்து தன்னம்பிக்கையை ஊட்டி வந்ததால் அவருடைய வளர்ச்சியை ஆசிய கலை உலகமே பிரமித்துப் பார்க்கும் நிலை வாய்த்தது.

பினாங்கு மாநிலத்தில் பிறந்த பி.ரம்லிக்கு(Teuku Zakaria Teuku Nyak Putih) இசையின் ஆர்வம் தொடக்கத்தில் அவர் பயின்ற ஜப்பான் கடற்படைப் பள்ளியில் தொடங்கியது. அக்காலத்தில்  மலாய் மொழியில் பாடல்கள் குறைவு என்பதால் ஆட்சியில் இருந்து ஜப்பானியர்கள் கட்டுப்பாட்டில் இயங்கிய பள்ளிகளில் ஒலிக்கும் ஜப்பான் மொழிப் பாடல்களைக் கேட்டு, பாடிப் பழகினார். இங்கிருந்துதான் அவருடைய இசை ஆர்வம் ஆத்மார்த்தமாகப் பெருக்கெடுக்கத் தொடங்கியது.

பி.ரம்லி நடிக்க வந்த காலக்கட்டம்  இந்திய சினிமாவின் தாக்கம் மலேசியாவில் பலமாக இருந்தது. கதாநாயகனை மையப்படுத்தியும் அவனைச் சுற்றியும் கதையைப் பிணைத்திருந்த காலம் அது. ஒழுக்கத்தைப் போதிக்கும் கதைகளும் கதாப்பாத்திரங்களும்  அப்போது உலகலாயக் கலையாக விளங்கின. இந்தக் கட்டமைப்பைத்  தன்னுடைய கலையின் வழி  பையப் பைய உடைத்தெறிந்த கலைஞன் ரம்லி.

1956-இல் பி.ரம்லியின் இயக்கத்தில், அவரே நடித்த  சேமேராக் பாடி (Semerak Padi) எனும் படத்தை உதாரணப்படுத்திக் கூறலாம். திருமணமான முன்னாள் காதலியுடன் பாலியல் உறவை வைத்துக்கொள்ளும் கதாப்பாத்திரத்தில் பி.ரம்லி தோன்றி, கதாநாயகன் என்றுமே நல்லவன் மட்டுமே என கட்டுண்டிருந்த மலாய்க்காரர்களின் சினிமா பார்வையை மாற்றி அமைத்தார். மலாய்க்காரர்களின்  சினிமா மரபை உடைத்தாலும் அவருடைய புகழும், பேரும் சறுக்கவில்லை. மாறாக கலை உலகம் அவரைத் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கியது.

பி.ரம்லியின் மனமும் சிந்தனையும் மலாய் திரைத்துறையில் தனித்த பயணங்களை ஒட்டி இருந்தாலும் தமிழ்நாட்டு நடிகர்களான எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் பி.ரம்லிக்கு மானசீகமாக  உத்வேகமாக விளங்கியுள்ளனர். அவரது நடிப்பில் சில சமயம் அவர்களது சாயலைக் கொண்டு வருவார் ரம்லி. 1948-1955 வரையிலான இடைப்பட்ட காலக்கட்டத்தில் 27 படங்களில் நடித்துள்ளார் ரம்லி. 1950 முதல் 1960 வரை மலாய் சினிமா இயக்கத்தில் முன்னோடியாக விளங்கிய டான் ஸ்ரீ. கிருஷ்ணன் பி.ரம்லியின் கலை வளர்ச்சிக்கு குருவாக இருந்தவர்களில்  ஒருவர்.

Malay Film Production, Kris Film, Cathay Film  போன்ற நிறுவனங்களின் சினிமா ஈடுபாடு இப்பிராந்தியத்தில் சினிமா கலை வேகமாக வளர தூண்டுதலாக இருந்தது போலவே பி.ரம்லியின் புதிய பாணி கலை வெளிப்பாடும் மலாயா சினிமா கலை எழுச்சிக்கு உத்வேகத்தைக் கொடுத்தது என்று சொல்லலாம்.

indexமலாய் திரைப்படத்தை உலகத்தரத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று ஆசை கொண்டிருந்த ரம்லி, தம்முடைய படங்களை  ஷா பிரதர்ஸ் தயாரிப்பில் இயக்கி வந்தார். பி.ரம்லியின் திரைப்பட வாழ்க்கை அங்குதான் உச்சத்தையும் அடைந்தது.  ஒவ்வொரு காட்சியிலும் தம்முடைய முத்திரையை மட்டுமே  காட்ட  நினைக்காமல், ஒவ்வொரு நடிகருக்குள் இருக்கும் முழுத் திறமையை வெளியே கொண்டு வரும் வரை ஒரு காட்சிக்கு மட்டுமே ஒரு நாள் முழுவதும்  கடத்தியது உண்டு என்று நடிகரும், அவர் நண்பருமான டத்தின் சாஅடியா பஹாரும்.  பி.ரம்லியுடனான திரை உலக வாழ்க்கையைக் கடந்த கால நினைவாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

பி.ரம்லியிடம் அடிப்படையில் மாற்றுசிந்தனைகள் இருந்தன. அதை வெளிப்படுத்தவே அவர் கலையைக் கையிலெடுத்தார்.  ஆரம்ப    காலக்கட்டத்தில், குடும்பம், விசுவாசம், தந்தை-மகன் அன்பு, வீரம் போன்ற விழுமியங்களைப் பேசும் படங்களான Panggilan Pulau (1954), Hang Tuah (1956), Anakku Sazali (1956), Semerah Padi (1956) போன்றவற்றில் நடித்தவர் Ibu Mertuaku (என் மாமியார்) படத்தின் மூலம் இசைக்கலைஞன் மேல் உள்ள தாழ்வான பார்வையை மாற்றி அமைத்தார். 60 தொடங்கி 70 -களில் அவர் இயக்கியப் படங்களில் மூவினங்கள் ஒற்றுமையைக் குறிக்கும் சமூக பொறுப்பைக் காணலாம். அவருடைய படங்கள் சமுதாய மாற்றங்களுக்கு ஊடகமாகப் பயன்பட்டது எனலாம். Antara Dua Derajat  எனும் படத்தின் வழி மேல் தட்டு-கீழ்த் தட்டு மக்களுக்கு இடையிலான சமூக வேற்றுமை குறித்து பேசியவர் காதலை இந்த வேற்றுமையை ஒழிக்கும் சக்தியாகக்  காட்டினார். Gerimis ( கெரிமிஸ் ) படத்தில் கலப்புத் திருமணம் குறித்து பேசினார். மேலும், இப்படத்தில் இந்தியர்களான சந்திரா ஷண்முகம், ஸ்டான்லி ஆகியோரை நடிக்க வைத்திருப்பதன் வழியும் பிற மொழிகளைத் திரையில் கலப்பதன் வழியும் மலாய் சினிமாவாக அல்லாமல் மலேசிய சினிமாவாக மாற்றுவதற்கு அவர் அடித்தளம் இட்டுள்ளார். மூவின ஒற்றுமைக்கு வித்திடும் முயற்சியைத் தம்முடைய படைப்பில் ரம்லி கையாண்டுள்ளார்.  Sesudah Subuh,  Sergeant Hassan போன்ற படங்களில் பல்லின கதாப்பாத்திரங்களை இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.

பி.ரம்லி 1957க்கு பின் புதிய பரிணாமம் எடுத்தார். பி.ரம்லி எனும் மலேசியக் கலைஞனை உலக கலைஞர்கள் மத்தியில் வைத்துப் பார்க்கக்கூடிய பரிணாமம் அது. நகைச்சுவையைப் பிரதிபலிக்கும் படங்களை அதிகமாக இயக்கி நடிக்க ஆரம்பித்தார். அவர் இயக்கிய 34 படங்களில் 18 படங்கள் நகைச்சுவை வகையைச் சேர்ந்தவை. 1957 ஆம் ஆண்டு வெளிவந்த  பூஜாங் லாபோக் திரைப்படம் ரம்லியின் முதல் நகைச்சுவைப் படமாகும். 1957 முதல் 1972  வரையிலான காலக்கட்டத்தில் வருடத்திற்கு ஒரு நகைச்சுவைப் படத்தை இயக்கி நடித்தார் ரம்லி. 1965 மற்றும் 1966 ஆண்டுகளில் 3 நகைச்சுவைப்  படங்களைத் தொடர்ச்சியாக இயக்கினார். இக்காலக்கட்டத்தில் நகைச்சுவைப் படங்களுக்கு நல்ல வரவேற்பு  கிடைத்தது. நகைச்சுவை அம்சம்  மட்டுமே அவருக்கு உலக கலைஞருக்கான அம்சத்தைக் கொடுக்கவில்லை. அது அவர் தன் கலகக் குரலைக் கொண்டுசேர்க்க பயன்படுத்திய வாகனம் மட்டுமே.

பி.ரம்லியின் நகைச்சுவைப் படங்கள் பல்லின மக்களின் ரசனையை வெகுவாகக் கவர்ந்தது. உடல் மொழி, வட்டாரப் பேச்சு மொழி, பிற இனத்தின் பேச்சு மொழியை வசனங்களில் கையாளுதல், நகைச்சுவையான வரிகளைக் கொண்ட ஜாலியான பாடல்கள், அதற்குத் தகுந்தாற்போல இசை அமைப்பு போன்ற கலை உத்திகளை  கையாண்டு வெற்றி கண்டுள்ளார் பி.ரம்லி. 1959-இல் வெளிவந்த Pendekar Bujang  Lapok படத்தில் வரும் maafkan  kami (எங்களை மன்னியுங்கள்)  பாடல், அனைத்து இனத்தைச் சார்ந்த ரசிகர்களை சிரித்துக் கொண்டே முணுமுணுக்கச் செய்தது.  கற்பனைக் கதைகள், மட்டுப்பட்ட சிந்தனை கொண்ட  பாத்திரப்படைப்புகள், இயல்புக்குப் புறம்பாக இருக்கும் காட்சிப் படைப்புகள் போன்ற கூறுகள் பி.ரம்லியின் நகைச்சுவைப் படங்களில் கையாளப்படடிருப்பதை காணமுடியும். ஆனால் இந்தத் தன்மையெல்லாவற்றையும் விட அதன் வழி அவர் பேசிய அரசியலே அவரை தனித்து அடையாளப்படுத்தியது.

பி.ரம்லியின் படங்களில் காட்டப்படும் காட்சிகளில், பேசப்படும் வசனங்களில், பயன்படுத்தப்படும் பொருட்களில் மறைமுகமான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதை அவருடைய படங்களை ஆழ்ந்து  கவனிக்கும் போது புலனாகிறது.

ஜனநாயகத்தை ஒரு சந்தர்ப்பவாதி அவனுக்குச் சார்ந்தாற்போல் மொழிப்பெயர்த்துக் கொள்கிறான் என்பதை 3 அப்துல்  (3 Abdul) எனும் படக் காட்சியில் காணலாம். அப்துல் என்று முதல் பேரைக் கொண்டிருக்கும் 3 சகோதரர்களின் மத்தியில் நடக்கும் பாகப்பிரிவினையும், பேராசை கொண்ட இரு சகோதர்கள் திவாலான பணக்காரனால் ஏமாற்றப்படுவதும் இப்படத்தின் கதைக்கரு.

தந்தை திடீர் மரணம் அடைகிறார். இறப்பதற்கு முன் சொத்தின் பொறுப்பை மூத்தவனிடம் கொடுத்து விட்டு இறக்கிறார். அப்பாவின் கட்டளையின்படி மூத்தவன் சொத்துக்களை மூவருக்கும் நியாயமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். ஒரு காட்சியில் சொத்து பிரிப்பதைப்பற்றி இரு சகோதரர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் அனைத்தையும் தனதாக்கிக்கொள்ளும் மேல்தட்டு வர்க்கங்களின் பேராசை மனம் குறித்து இந்தக் காட்சிகளின் வாயிலாகச் சொல்லியிருப்பார் பி.ரம்லி.

“சொத்துக்களை ஜனநாயக முறைப்படி பகிரவும். அனைத்து சொத்துக்களையும் என்னிடம் ஒப்படைப்பதுவே ஜனநாயகம்” என்று கடைசி தம்பி மூத்தவனிடம் சொல்கிறான்.

“இது என்ன ஜனநாயகம்?” என்று அண்ணன் தம்பியிடம் கேட்கிறான். அதற்குத் தம்பி, “இது தலைமைத்துவ வழிகாட்டல் ஜனநாயகம்” என்று பதிலளிக்கிறான். இவ்வாறு பி.ரம்லி படத்தில் அரசியல் நையாண்டிகள் ஏராளம்.

அலிபாபா பூஜாங் லாபோக் (1961) படம் ஆயிரத்து ஒரு இரவுகள் கதையிலிருந்து   தழுவப்பட்ட படம். ஒருவகையில் உலகம் முழுவதும் பிரபலமாகி இன்றும் தொலைக்காட்சிகளில் கார்ட்டூனாக ஒளிபரப்பாகிறது. தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு முன்பே நாற்பதுகளில் என்.எஸ்.கிருஷ்ணன் அலிபாபா திரைப்படத்தில் நடித்துள்ளார். எனவே தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் இக்கதை பிரபலம். மலாயில்  பி.ரம்லி இத்திரைப்படத்தை மறுஆக்கம் செய்திருப்பார்.

பி.ரம்லிதான் அலிபாபா பூஜாங் லாபோக் திரைப்படத்தில் திருடர் கூட்டத்தின் தலைவன். சின்னஞ்சிறிய சைக்கிள்தான் திருடர் கூட்டத்தின் தலைவனின் வாகனம். அதில் மணியடித்தபடி வருவார் பி.ரம்லி. குகையை நோக்கி வரும் அவர் ரகசிய சொற்களைக் கூறி குகையைத் திறக்கும் முன் மரத்தின் மீது ஒளிந்திருக்கும் அலிபாபாவைப் பார்த்துவிடுவார். அலிபாபாவைப் பார்த்து ‘ஹாய்’ என்பார். பதிலுக்கு அலிபாபாவும் ‘ஹாய்’ என்பார். குகையிலிருந்து இரவில் மீண்டும் கொல்லையடிக்க வெளியேறும் பி.ரம்லி கை பாவனையில் அலிபாபாவைப் பார்த்து உறங்கவில்லையா என்பார். அலிபாபாவும் மரத்திலேயே உறங்குவேன் என பாவனை காட்ட ‘ஹாய்’ என விடைக்கொடுப்பார்.  ரம்லி காட்டும் திருடன் சமூகத்தில் ஒட்டியிருக்கும் திருடன். அவன் மூர்க்கனில்லை. தன் கடமையை மட்டும் முறையாகச் செய்பவன்.

இக்கதையில் குலாம் சாயுபு வேடத்தை ஏற்று தமிழ்ப்படத்தில் காலணி தைப்பவராகத் தங்கவேலு வருவார். ரம்லி பாத்திரத்தை ஒரு சீனருக்கு வழங்கி இஸ்லாமியர்கள் புழங்கும் பாக்தாத் நகரில் அலையவிடுவதோடு அடிக்கடி ‘நானும் இந்த நாட்டின் குடிமகன்’ எனும் வசனத்தையும் அச்சீன கதாபாத்திரத்துக்கு வழங்கி கலகம் செய்திருப்பார் .

சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட நடிகர் சங்கம் முன்னெடுத்திருக்கும் புதிய வேலை நேர சட்டங்களும், அடிப்படை சம்பள உயர்வுக்கான கோரிக்கைகளும் உறக்கப் பேசப்பட்ட காலக்கட்டம் அது. அந்தப் பிரச்சினை இப்படத்தில் நகைச்சுவையாக உட்புகுத்தினார் பி.ரம்லி. கொடுக்கப்பட்ட சம்பளம் போதவில்லை என்று கொள்ளைக்கூட்டத்தின் சார்ஜன், தமது தலைவரிடம் உதவி கேட்டு செல்வான். தாம் அதிக நேரம் வேலை செய்யப்போவதாக வேண்டுகோள் விடுவான். கொள்ளைக்கூட்டத் தலைவன் (பி.ரம்லி) சொல்லுவார், “இப்போது புதிய சட்டம் வந்துவிட்டது. ஒரு நாள் 8 மணிநேரம் வேலை. சனிக்கிழமை பாதி நாள் வேலை. வார இறுதியில் விடுமுறை. புரியுதா?” என்பார்.   இந்தப் புதிய விதிமுறையினால்தான் பி.ரம்லியின் படம் தாமதமாக வெளியீடு கண்டுள்ளன. இந்த விதிமுறையைக் கொண்டு வந்த சங்கத்தின் மேல் அதிருப்தி கொண்டிருந்தார் ரம்லி.

இக்காட்சியில் தொடர்ந்து பேசப்படும் உரையாடல் காட்சியில், மனைவியால் தொல்லைகளுக்கு உட்படும் பணக்கார கணவன் ஒருவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கொள்ளைக்கூட்டத் தலைவனைத்   தொலைபேசியில் அழைத்து தம்மைக் கடத்துமாறு கேட்கிறான். அதற்குத்  தலைவன்  “இன்று விடுமுறை. எனவே முடியாது. திங்கட்கிழமை கடத்துகிறேன்”  என்று கூறி  நிராகரிக்கிறான்.  தமக்கு உதவாவிட்டால் வேறொரு கொள்ளைக்காரனிடம் உதவிக்கு கேட்டுச் சென்றுவிடுவேன் என்று  கணவன் மிரட்டுவான். “நீ அப்படி செய்தால் திருடர்கள் சங்கங்கள் சேர்ந்து உன் மீது நடவடிக்கை எடுக்கும்” என்று கூறுகிறான் கொள்ளைக்கூட்ட தலைவன். மேலும் சங்கங்களில் உள்ளவர்களைத்தான் அவர் கள்வர்கள் என்று பூடகமாகக் கூறுகிறார் என்பதையும் உணரலாம். பின்னாளில் இச்சங்கத்தின் போராட்டங்கள் ஷோ பிராதர்சின் மலாய் தயாரிப்பு நிறுவனத்தை மூடுவிழா காணும் நிலைக்குத் தள்ளி விட்டது.

நாட்டில் போதைப்பொருட்கள் கட்டுக்கடங்காமல் நடமாடுவதையும் அதை தடுக்க முனைப்புbujang-lapok காட்டாத அரசாங்கம் அற்பத்தனமான விஷயங்களுக்கு முதலிடம் கொடுத்து வருவதையும் சாடும் வகையில் கஞ்சன் காசிம் பாபா வீட்டில் வேலைக்காரியான மார்ஜினா சந்தையில் பொருட்கள் வாங்கும் காட்சியில் விளக்குவார் ரம்லி. மலாய்க்காரர்கள் சமையலில் அதிகமாகப் பயன்படுத்துவது ‘பிளாச்சான்’ எனப்படும் மலிவான இயற்கை சுவையூட்டி.  இது உப்பு மற்றும் புளிப்பு கலந்த சிறிய இறாலில் இருந்து தயாரிக்கப்படுவது. மார்ஜினா சந்தைக்குச் செல்லும் வழியில் ஒருவர் கஞ்சா இலையைப் பொது இடத்தில் விற்கும் காட்சி காட்டப்படுகிறது. வியாபாரி மார்ஜினாவிடம் என்ன வேண்டும் என்று கேட்கிறார்? அதற்கு மார்ஜினா பிளாச்சான் வேண்டும் என்ற போது, சத்தம் போட்டு பிளாச்சான் என்று சொல்லாதே. போலீஸ் கைது செய்துவிடும் என்கிறான் வியாபாரி. பிளாச்சான் விற்றால் போலீஸ் கைது செய்யுமா என்று வியாபாரியிடம் கேட்கிறாள் மார்ஜினா? போதைப்பொருள் விற்பதற்கு லைசன்ஸ் உண்டு ஆனால் பிளாச்சானுக்கு இல்லை என்று காட்டும் காட்சியில் இழையோடும் நகைச்சுவையோடு அரசியல் இடித்துரைப்பையும் பார்க்கமுடிகிறது. மேலும் இக்காட்சி சாமானிய மலாய்க்காரர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் வாய்ப்புகள் வழங்குவதில்லை மாறாக, சில தரப்புகளின் சட்டமீறல்களுக்கு இடம் கொடுக்கிறது என்ற அரசியல் சாடலையும் உணர்த்துகிறது.

அலிபாபா பூஜாங் லாபோக் படத்தில் ஜப்பான்காரன் பாத்திரம் கொள்ளைக்கூட்டத்தில் ஒருவனாக இடம்பெற்றிருக்கும். இந்தப்  பாத்திரப்படைப்பின் மூலம் மலாய்கார சமூகத்தின் சிந்தனைத் தரத்தைக் குத்திக்காட்டும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. காசிம் பாபா வீட்டை குறியிட்டு வரச்சொல்லி அந்த ஜப்பான் காரனிடம் பொறுப்பு கொடுக்கப்படும். ஆனால் வேலைக்காரி மார்ஜினாவின் புத்திசாலித்த தனத்தினால் அனைத்து வீடுகளிலும் குறி இடப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்ட வேலையை ஜப்பான்காரன் சரிவரச் செய்யவில்லை என்பதால் அவன் சிறையில் அடைக்கப்படுவான். அவனை முட்டாள் என்று சொல்லித் திட்டும் கூட்டத்தலைவன் நீ அதிகமாக பிளாச்சான் உண்கிறாய் என்று திட்டுவான். உண்மையில் அவன் ஜப்பான் உடை அணிந்திருக்கும் மலாய்க்காரன். உடை ஒருவனின் குணநலன்களை மாற்றுவதில்லை எனச் சொல்லும் நாசுக்கான பகடி அது.

பி.ரம்லி ஒரு கலகக்காரர். அதிகாரமும் சராசரி மனம் கொண்ட மக்களும் மகிழ்ச்சிப்படுத்தும் கலைகளை விரும்புவார்களே தவிர கலகக் கலைகளை அல்ல. பி.ரம்லி கலகம் செய்யத் தொடங்கியதை மலாய் சமூகம் அறியத்தொடங்க சில ஆண்டுகள் ஆனது. அதற்குள் அவர் நூதனமாக பல திரைப்படங்களை வெளியிட்ட வண்ணமே இருந்தார். அதில் ஒன்று செனிமான் பூஜாங் லாபோக் (seniman Bujang Lapok).

சீன இனம் உழைக்கும் இனமாக தமது படத்தில் காட்டிச் செல்லும் பி.ரம்லி அவ்வினம்  கௌரவம் பார்க்காமல் உழைத்ததால்தான் எதையும் வாங்கும் சக்தியுடன் இருந்தனர் எனக்காட்டியிருப்பார். அதோடு அவர்களே அத்தனையையும் உடமையாக்கிக் கொள்ளும் ஆக்கிரமிப்பு குணம் கொண்டவர்கள் என்பதையும் அவர் தமது படத்தில் காட்டுகிறார்.  ஒரு காட்சியில் பழைய பொருட்களை வாங்கும் சீனனிடம் பழைய பேப்பர், மற்றும் காலி போத்தல்கள் விற்கப்படும். அனைத்தையும் வாங்கிய சீனன் நின்று கொண்டிருக்கும் பி.ரம்லியிடம் உங்களிடம் ஏதும் இருக்கிறதா என்று கேட்பார். அலமாரியைத் திறந்து கிழிந்த, வாடை வீசும் துணியைச் சீனனிடம் எறிவார்.

பழையதை, கிழிந்ததை எல்லாம் பணமாக்க கூடிய உழைப்பின் வேகம் சீனனிடம் இருக்கிறது. நல்ல ஆடைகளை அணிந்து கையில் பணமில்லாமல் பழைய பொருட்களை விற்று வயிறு நிரப்பும், உழைக்க மறுக்கும் மலாய் சமுதாயத்தின் போக்கையும் நாசுக்காக அவர் சுட்டுவதாக இந்தக் காட்சி அமைந்திருக்கும். பி.ரம்லி இனவாதியல்ல. அதேபோல சொந்த இனத்தின் விரோதியும் அல்ல. அவர் அனைத்து இனமக்களின் நேற்மறை எதிர்மறை குணங்களை கேள்விக்கு உட்படுத்திய கலைஞன். அங்கதத்தை அதற்குத் துணையாக்கிக் கொண்டார். கலகத்தில் இருந்து பிறந்த அங்கதம் நாசுக்காய் அவர் வசனங்களில் வெளிபட்டது.

இதே படத்தில் வரும் ஒரு காட்சியில், சீக்கியர் ஒருவர் திரைப்பட ஸ்டூடியோ  பாதுகாவலர் வேடத்தில் வருவார். அரங்கு முன் ஒருவர் அமர்ந்திருப்பார். அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு ஸ்டூடியோ மேலாளரைப் பார்க் பி.ரம்லியும் அவரது இரு நண்பர்களும் செல்வார்கள். இவர்களை கவனித்து நிறுத்திய ஒருவன் சீக்கியரிடம்  ‘யார் அவர்கள்’ என்று கேட்பான். சீக்கியர்  ‘அவர்கள் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருக்கின்றனர்’ என்று கூறுவார். அதற்கு அந்த நபர், ‘இந்த முகமெல்லாம் நடிக்க வந்துவிட்டதா?’ என்று கேலியாகப் பேசுவார். அதற்கு சீக்கியர் ‘அப்படி ஏன் பேசுகிறாய். நீ சாப்பிடுவது உன்னுடைய அதிர்ஷ்டம். அவர்கள் சாப்பிடுவது அவர்களுடைய அதிர்ஷ்டம். பகிர்ந்துண்டு சாப்பிடுவதில் தவறு உண்டா?’ என்று கேள்வி எழுப்புவார்.  புதிதாக பி.ரம்லி நடிப்புத் துறைக்கு வந்த போது அவருடைய மெலிந்த உடல், ஒட்டியிருந்த முகம் குறித்து கேலி செய்தவர்கள் உண்டு. மலேசியாவில் சீக்கியர் சமூதாயம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் உயர்ந்த இலக்கை அடைய அவர்களின் இனம் கூட்டாக நின்று உதவுதைக் காணமுடியும் என்பதை எளிய பாதுகாவலர் வேடமிட்ட பாத்திரத்தின் வாயிலாக காட்டியிருப்பார்.

பி.ரம்லி பணம் சம்பாதிப்பதற்காக திரை அல்லது இசைத்துறைக்கு வரவில்லை. உண்மையான கலையைச்  சராசரி மனிதனுக்கும் எட்டும் வகையில் சாத்தியப் படுத்தி இருக்கிறார். ரம்லி எனும் கலைஞனின் முத்திரையைப் படப்பிடிப்பின் போது அவர் செயலூக்கத்தில் காணமுடியும் என்று அவருடன் நெருங்கிப் பழகிய நடிகர்கள், மற்றும் நண்பர்களின் பேட்டிகளில் அறிய முடிந்தது. அவர் படப்பிடிப்பின் களத்தை இறுக்கமற்ற சூழலில் வைத்திருப்பார் என்று ஷோ பிரதர்ஸ் நிர்வாகி குவெக் ஜிப் ஜியான் பேட்டியில் கூறியிருக்கிறார். எந்த நடிகரைப் பற்றியும் குறைகூறாத மனிதராக பி.ரம்லி வாழ்ந்திருக்கிறார். ரம்லி ஒரு வித்தியாசமான கலைஞன். இந்தக் கலைஞனுக்கு நிகர் யாரும் இல்லை. மலாய்த்திரைப்பட உலகில் பி.ரம்லியைப்போல் படம் இயக்க முடியுமா? எனும் கேள்வி இன்றுவரை கேட்டகப்பட்டு வருவதாக தற்கால இயக்குனர்கள் கூறுவது உண்டு.

படைப்புக் கலையில் முறையான பயிற்சி இல்லாவிட்டாலும் masterpiece என்று சொல்லக்கூடிய தலைசிறந்த படங்களை சினிமா கலை உலகிற்கு விட்டுச் சென்றுள்ளார் பி.ரம்லி. 65 படங்களில் நடித்து, 34 படங்களை இயக்கி, கிட்டத்தட்ட 400 பாடல்களைப் பாடி மலாய் கலை உலகத்தில் தனித்த ஆளுமையாக திகழ்கிறார். பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப்பாடகர், இசைக்கலைஞர், வசனகர்த்தா என்று பன்முகத் திறமைகளைக் கொண்டிருந்த ஒரே சினிமா  கலைஞராக பி.ரம்லி திகழ்ந்தார். 50-60களில் அவரின் புகழின் உச்சக் காலக் கட்டத்தில் பி.ரம்லி ஆசியாவின் சார்லி சாப்ளின் (Charlie Chaplin) என்று  புகழப்பட்டார். பி.ராம்லி நாட்டின் உடைமைகளைக் கொள்ளையடித்த கலைஞன் இல்லை. மாறாக  நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் விலை மதிக்கமுடியாத கலை பொக்கிஷத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று தேசிய இலக்கியவாதி ஏ சமாட் சாயிட் பி.ரம்லிக்காக பாடிய கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

பி.ரம்லி தம்முடைய படைப்பில், உணர்வைக் கலைவடிவத்தில் (Art Of Feeling) கையாண்டார். அது அவருக்குப் பிடித்தமானது என்றார் நடிகை சாஅடியா. ‘ஒருவரின் பெயரைச் சொல்லி அழைத்தாலும் அதனை உணர்வுப்பூர்வமான கலையோடு அழைப்பதை அவர்  கையாளுவார். இது ஹிந்துஸ்தான் பாணி என்று பலர் கூறினாலும் அது கலையின் மொழி என்றே பி.ரம்லி கூறுவார்’ என்று  சாஅடியா தெரிவித்துள்ளார். மலேசியாவின் திரையரங்க வசூலில் ஜாம்பவானாகத் திகழ்ந்த ஹிந்திப் பட லாபத்தை குறைக்கச் செய்த ஒரே படம் பி.ரம்லி படம் என்று ஷா பிரதாஸ் ஒப்புக்கொண்டதாக  நடிகர் அஸீஸ் சத்தார்  தொலைக்காட்சி சந்திப்பு ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதற்கு முன் இந்தியர்கள் ஆக்கிரமித்திருந்த ஷா பிரதர்ஸ் ஸ்டூடியோ, பி.ரம்லியின் வெற்றி வருகைக்குப் பிறகு புதிய மலாய் இயக்குனர்களுக்கு திறந்துவிடப்பட்டது. பி.ரம்லியின் ‘பேனாரீக் பேச்சா’ (Penarik Beca) அவரது 26 ஆவது வயதில் இயக்கப்பட வெற்றி படம். இந்தப் படத்தில் பி.ரம்லியின் படம் இயக்கும் திறன் மேலும் பரிணாமித்தது. பஞ்சா டெலிமா(Panca Delima) படம் பி.ரம்லி இயக்கத்தில்  அவர் நடிக்காத ஒரே படமாகும். 1957-இல் Anak Ku  Sazali  (என் மகன் சசாலி ) -இல் அப்பா – மகன்  இருவேடப் பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பி.ரம்லிக்கு தோக்கியோவில் சிறந்த நடிப்பிற்கான விருது வழங்கப்பட்டது. பி.ரம்லியை வரவேற்க விமான நிலையத்தில் நடிகர்கள் கூட்டம் கூடின. ஒரு புறம் ரம்லியின் புகழ் கட்டுப்படுத்த முடியாத உயரத்திற்குச் சென்று கொண்டிருந்தது. மற்றொரு புறம் அவர் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அவர் மேல் கோபமும் பொறாமையும் கொண்டனர். ஷா பிரதர்ஸின் தங்கத் தாம்பூலம் கவனிப்பு அவர் மேல் உள்ள வெறுப்பை நடிகர்கள், இயக்குனர்கள் மத்தியில் வளர்த்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அவருடைய முகத்தைச் சேதப்படுத்தும் சதியும் நடந்தது என்ற தகவலும் உண்டு.

பி.ராம்லி உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் அவரின் வெற்றியைக் குறித்த தகவல்களை ஊடகங்கங்கள் கண்டுகொள்ளவில்லை. பொறாமைக்காரர்களின் கால்களை நக்கி வாழும் இவர்களைப் போன்ற ஊடகங்கள் பல உண்மையான கலைஞர்களைச் சிதைத்திருப்பதை நினைக்கும் பொழுது மனம் வேதனையடைகிறது. இவரிடமிருந்த விலை மதிக்கமுடியாத கலையைச் சொந்த நாடே அங்கீகரிக்க மறுப்பது வேதனை அளிக்கிறது என்று பி.ரம்லி கூறியதாக காமாட் நவாப் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஆயினும் பி.ரம்லி மகா கலைஞன்தான் என்பதற்கு அடையாளமாக அக்கலைஞனை உலகத் திரைக்கலைஞர்கள் கௌரவித்துள்ளனர்.

பி.ரம்லி பெற்ற விருதுகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

1. Anakku Sazali : சிறந்த ஆண் நடிகர், 4 வது ஆசிய திரைப்பட விழா (டோக்கியோ, 1957)
2.  Hang Tuah  : சிறந்த மியூசிக் ஸ்கோர், 3 வது ஆசிய திரைப்பட விழா (ஹாங்காங் 1956) மற்றும் அதிகாரப்பூர்வ திரையிடல் 1957 ல் 7ஆ வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில். பி.ராம்லீ  படம் வண்ணத்தில் திரையிடப்பட்டது.
3.Ibu Mertuaku : Most Versatile Talent, 10ஆவது  ஆசிய திரைப்பட விழா (டோக்கியோ, 1963)
4. Madu Tiga : சிறந்த நகைச்சுவை, 11ஆவது  ஆசிய திரைப்பட விழா (தைப்பி, 1964)
5. Nujum Pak Belalang : சிறந்த நகைச்சுவை, 7ஆவது  ஆசிய திரைப்பட விழா (டோக்கியோ, 1960)
6.Pendekar Bujang Lapok : சிறந்த நகைச்சுவை, 6ஆவது  ஆசிய திரைப்பட விழா (கோலாலம்பூர், 1959)
Sumpah Orang Minyak : சிறந்த கருப்பு வெள்ளை படம் , 5ஆவது  ஆசிய திரைப்பட விழா (மணிலா, 1958)

ஆனால் இந்த விருதுகள் எதுவும் ஒரு கலைஞனை வாழ வைக்கிறதா என்பதே தலையாய கேள்வி. Malay Film Productions  சிங்கப்பூரில் மூடப்பட்டது. சிங்கப்பூரில் இருந்த இந்நிறுவனம் மூடப்பட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.   முதலாவது லீ குவான் இயூ கட்டளையின் பேரில் மூடப்பட்டது என்றும் இதற்கு காரணம் மலாய்க்காரர்கள் தொழிற்சங்கத்தில் ஈடுபடுவதை பிரதமரான லீ விரும்பவில்லை என்றும் இசையமைப்பாளர் டத்தோ அஹ்மத் நவாப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மற்றது, கூடுதல் பணி சம்பளம், கட்டுப்படுத்தப்பட்ட படப்பிடிப்பு நேரம் போன்ற தொழிற்சங்கத்தின்  வேண்டுகோள்கள்  பி.ரம்லி படப்பிடிப்புக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தின. படக்காட்சியும், காட்சிக்கு இயைந்த நடிப்பும் உச்சத்தைத் தொடும்வரை பி.ரம்லி படப்பிடிப்பை நிறுத்த மாட்டார் என்று அவருடைய படத்தில் பணிபுரிந்த நடிகை சாடியா பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். சில நேரங்களில் ரம்லி தன்னுடைய சொந்தப்பணத்தை கூடுதல் பணி கட்டணமாக தந்துள்ளார். ஷோ ஸ்டூடியோ அரங்கத்திற்கு முன் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற  வேண்டும் என்று தொழிற்சங்கம் செய்த ஆர்ப்பாட்டம் பிரதமர் லீ குவான் யூ வைக் குடைய ஆரம்பித்தது. இவ்வரங்கத்தின் செயல்பாட்டை நிறுத்துமாறு அரசாங்கத்திடமிருந்து கட்டளை வந்தபிறகு பி.ராம்லி கோலாலம்பூரில் இயங்கி வந்த மெர்டேக்கா ஸ்டூடியோவுக்குப் போகப் பணித்ததாகக் கூறப்பட்டது. மெர்டேக்கா அரங்கம் ஷோ குடும்பத்தினரால் நிர்வகித்து வருவதால் ஷோ நிர்வாகம் பி.ரம்லி உடனான சினிமா தொடர்பை  இவ்வழியாக நீட்டித்துக் கொண்டது.

51399434914_freesizeஎப்படியாயினும் பி.ரம்லி மலேசியா வந்தது இரு தரப்புக்குமே இழப்பானது.  அவர் கோலாலம்பூரில் இருக்கும்  மெர்டேக்கா நிறுவனத்தின் கீழ் சினிமா பணியைத் தொடங்கினார். ஆயினும்  படப்பிடிப்பில் அவர் பல சிக்கல்களை எதிர்நோக்கினார். மலேசியா வருவதற்கு முன் அவருக்கு வழங்கப்பட வாக்குறுதிகள் எதுவுமே அமுல்படுத்தப்படவில்லை. படப்பிடிப்புக்கான பொருட்கள் பற்றாக்குறையாகவே இருந்துவந்தன. இது அவருடைய கலைத் திறமை வெளிப்பாடுக்குத் தடங்கலாக இருந்தது. பி.ரம்லியின் கலைத்திறனுக்கு இங்குள்ள நடிகர்களின்  அனுபவமற்ற நடிப்பும் அவருடைய முயற்சிக்குத் தடைக்கல்லாக  இருந்தது. அக்காலக்கட்டத்தில் சிங்கப்பூர் நடிகர்கள் நடிப்புத்துறையில் நன்கு தேர்ச்சிப்  பெற்றிருந்தனர். ஆனால் கோலாலம்பூர் வந்த பிறகு அவர்களை தம்முடைய படங்களுக்கு எடுப்பதில்லை என்ற விடாப்பிடியான முடிவில் பி.ரம்லி இருந்தார்.

கோலாலம்பூருக்கு வந்த 7 ஆண்டுகளில் சுமார் 18 படங்களைக் கொடுத்தார் பி.ரம்லி. அனால் எதுவுமே வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. மெர்டேக்கா நிறுவனத்தில் பணியாற்றும் போது, நான் மிருகக்காட்சியில் இருக்கிறேன். என்னை புலி அடித்து தின்றுவிடப்போகிறது என்று அங்குள்ள நிலைமையை நகைச்சுவையாகக் கூறியுள்ளார் பி.ரம்லி.

அக்காலக்கட்டத்தில் இசை உரிமத்தை வைத்திருந்த EMI எனப்படும் இசை பதிவு நிறுவனம் பி.ரம்லியின் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க மறுத்து விட்டது. அதற்கு அந்நிறுவனம் சொன்ன காரணம், பி.ரம்லியின் பாடல்கள் விற்பனையாவதில்லை என்று அந்நிறுவனம் கூறிவிட்டதாக ரம்லியின் உதவியாளர் ரம்லி கெச்சில் ( Ramli Kecil) தெரிவித்தார். ஷோ அமைப்பின் செயல் அதிகாரி ஜபார் அப்துல்லா  கையொப்பமிட்டு வந்த இக்கடிதம் பி.ரம்லிக்கு எதிரான கலை உலகக் கொலை என்று அவருடைய அபிமானிகள் கருதுகின்றனர்

பி.ரம்லி சாதித்த வெற்றிகளை அவர் மீண்டும் கொண்டு வர செய்யும் முயற்சியை எள்ளி நகைக்கும் கூட்டமாகத்தான் அவருடைய வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் செயல்பட்டனர். இந்தக் கூட்டங்களின் கைப்பிள்ளையாகச் செயல்பட்டு வந்த ஊடகங்களும் அவருடைய பத்திரிகைப் பேட்டிகளை அவர் சொல்ல வந்த நோக்கத்துக்குப் புறம்பாக எழுதிக் குவித்தனர். ஆனால் உயிருடன் இருக்கும்பொழுது புகழை மீண்டும் மீட்டெடுப்பதில் தோல்வியைக் கண்டாலும்,   இறப்பிற்குப் பிறகு பி.ரம்லி சாகா வரம் பெற்ற நட்சத்திரமாகக் கொண்டாடத் தொடங்கப்பட்டார்.

பி.ரம்லி எனும் கலைஞனை மலாய் சினிமாத்துறை புறந்தள்ளியது. பி.ரம்லி தனிமைப்படுத்தப்பட்டார். ஆழ்ந்த மனவேதனையில், சக மனிதன் மீது வெறுப்பும் அவநம்பிக்கையும் தோன்றி அவரை அழுத்தியது.  தேவை என்று வருவோருக்கு அள்ளிக் கொடுக்கும் பண்பு கொண்ட பி.ரம்லி தனது கடைசி காலத்தில் வெறும்சோறும் முட்டையும் உண்டு வறுமையில் வாழ்க்கையைக் கடத்தினார். நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகளும் பி.ரம்லியின் மன உளைச்சலை அதிகமாக்கியது.
வேறு எதிலும் ஈடுபட முடியாமல் மாச்சோங் விளையாட்டிற்கான மேசை வாடகைச்

சேவையைத் தொடங்கினார் ரம்லி. இதில் கிடைக்கும் சொற்ப  வருமானத்தை வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்தினார். சினிமா கலையைத்  தொடர பண தேவைக்காக வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்களுக்கு மனு போட்டும் எதுவுமே கிடைக்கவில்லை.  அரசாங்கம் உட்பட யாரும் அவருக்குக் கைக்கொடுக்கவில்லை என்று பாடகர் டத்தோ அஹ்மட் தாவூத் பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார். ரம்லி ஷோ போன்ற நிகழ்ச்சியை உண்டுபண்ணி ஆர்.டி .எம்  (RTM) அவருக்கு உதவி இருக்கலாம். ஆனால் அவர்களும் அதனை செய்யவில்லை என்று அஹ்மாட் நவாப் தனது நேர்காணலில் சொல்கிறார்.

ரம்லியைப் பற்றி நினைவு கூறும் அவர் நண்பர்கள் ஒரு கலைஞனுக்கு வரக்கூடாத அவமானங்களை ரம்லி சந்தித்ததாகச் சொல்கின்றனர். உதாரணமாக பி.ரம்லியின் இரண்டாவது மனைவி புவான் ஸ்ரீ சலோமாவுக்கு தேசிய வானொலியில் பாடுவதற்கான ஒப்பந்தம் இருந்தது. அவரை அழைத்துச் செல்லும் பி.ரம்லி, சலோமா வரும்வரை  சிற்றுண்டி சாலையில் காத்திருப்பார். ஒரு மாபெறும் கலைஞனை இந்த  நாடு எப்படி உபசரித்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். வானொலி நிலையத்தின் சிற்றுண்டி சாலையுடன் நிறுத்தப்பட்ட அந்தக் கலைஞனின் திரைப்படங்களைத்தான் இன்றும் அரசாங்க தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி பாவமன்னிப்பு பெற்றுக்கொண்டிருக்கிறது.
laxmana Do -Re -Mi எனும்  பி.ரம்லியின் இறுதிப்படத்துக்குப் பின் அவரது இறுதி காலம் மிகவும் சோகம் வாய்ந்ததாகவும், வறுமையிலும் கழிந்து முடிந்தது.

நடிப்பு, இயக்கம், பாடல் எதற்குமே வாய்ப்பு வழங்கப்படாத பி.ரம்லி குடும்ப வாழ்வாதாரத்திற்காக அவருடைய மனைவி சலோமாவின் மேடை நிகழ்ச்சிகளில் இணைப் பாடகராகவும், நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும், இசை சார்ந்த நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இயங்கினார். ஒரு சமயம், கோலாலம்பூர்  சின் வூ அரங்கத்தில் நடைபெற்ற பாட்டு நிகழ்ச்சியில் பாடிய பி.ரம்லியை, “பூ” என்ற அவமானப்படுத்தும் ஒளி எழுப்பி மாபெரும் கலைஞனை அவமானப்படுத்தியுள்ளது அவருடைய சமூகம். அக்காலக்கட்டம், பாப் யே யே (irama pop-yeh-yeh) எனும் இசை நம் நாட்டில் புத்தெழுச்சியுடன் பரவிக் கொண்டு வந்த தருணம்.

இந்த புதிய இசை எழுச்சி ரம்லிக்கு அச்சத்தைத் தந்தது. இந்த உலகம் என்னை மறந்துவிடுமா என்று அவருடைய நண்பரிடம் கேட்டிருந்ததாக தகவல்கள் உண்டு. இந்த இசையின் வருகையை உடைத்தெறிய மலாய் இசைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அப்படி செய்யாவிட்டால் மேலை நாட்டு இசைகள் நம் இளைஞர்களிடம் பரவி அதுதான் நம் இசை என்று நம்பி இருப்பர் என்று ரம்லி நிருபர் சந்திப்பு ஒன்றில் பேசியுள்ளார். மேலும் தொலைக்காட்சி வருகை, வண்ணப்படங்கள் வருகை, ஹிந்தி சினிமா வருகை யாவும் பி.ரம்லிக்கு சவாலாகவே இருந்தது.

ஆதலால் அவருடைய படங்களிலும் அவர் புதிய பாணியைக் கையாளத் தொடங்கினார். மூவினங்களும் இடம்பெற்றிருக்கும் கதை கொண்ட படம், மர்மம் (Dr Rashidi), மற்றும் ஆபாச அம்சங்கள் (கெலோரா)  கொண்ட படங்களையும் எடுக்க ஆரம்பித்தார். ஆனால் மக்கள் மத்தியில் ஆதரவு பெறவில்லை.

ரம்லியின் அபிமானியும் தொழில் அதிபருமான எச் எம் ஷா ரம்லியுடன் இணைந்து PERFIMA  எனப்படும் மலாய் சினிமா தொடர்பான அமைப்பை ஆரம்பித்தார். ஜபார் அப்துல்லா, சாலே காணி, ஜீன் சம்சுதீன் ஆகியோரும் இணைந்து கொண்டனர். இவ்வமைப்பின் மூலம் முதல் வண்ணப்படத்தை இயக்கும் பொறுப்பு ரம்லியிடம் வழங்கப்பட்டது. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ரம்லிக்கு இந்த வாய்ப்பு புதிய நம்பிக்கையைத் தந்தது. ஆனால், பி.ரம்லிக்கு இசைத்துறைக்கு கல்வி குறைவு என்றும், லண்டலிருந்து சான்றிதழ்களுடன் வந்திருக்கும் ஜீன் சம்சூதீனுக்கு இவ்வாய்ப்பைக் கொடுக்கலாம் என்றும் இவ்வமைப்பின் நிர்வாகக் குழுவினர் முடிவெடுத்தனர். பிறகு டத்தோ எச்.எம் ஷாவும், பி.ரம்லியும் இவ்வமைப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

29 திகதி மே மாதம் 1973-இல் பி.ரம்லி மாரடைப்பால் மரணம் அடைந்தார். பி.ரம்லியின் உடலை நல்லடக்கம் செய்யக்கூட அக்குடும்பத்தில் பணம் இல்லை. உதவிக்கு ஆள் வருவார்களா? என்ற அச்சகத்தோடு இருந்தவர்கள் எச்.எம் ஷா கொடுத்த 3000 வெள்ளியில் இறுதி காரியங்கள் நடத்தப்பட்டன.

“உண்மையில், சமீப காலங்களில் மலாய் திரைப்படங்கள் ஓரளவு பின்தங்கியிருந்தன என்பதை நான் அறிவேன், ஆனால் என் கவனிப்பில் அது ஒரு காலப்பகுதியாகும். நான் ஏதாவது ஒன்றை தீர்மானிக்கவோ அல்லது உறுதி செய்யவோ முடியாது. ஆனால் மலாய் திரைப்படங்கள் எதிர்காலத்தில் இன்னும் வளர்ச்சி அடையும்  என்று நான் நம்புகிறேன், என்னை நம்புங்கள். மலாய்க்காரர்களின் கைகளில்  வெற்றியின் இரகசியம்  உள்ளது. மலாய்க்காரர்கள்  மலாய் படத்தின் வளர்ச்சியை ஆதரிக்க வேண்டும். மலாய் கலை, கலாச்சாரத்தை மலாய்க்காரர்கள் மதிக்கவில்லை என்றால் வேறு யார் மதிப்பார்கள்? என்ற பி ராம்லியின் உணர்வுகளுக்கு மலாய் சமூகம் மதிப்பளித்ததா?

Air Mata di Kuala Lumpur எனும்  பாடல்வரிகள் பி.ரம்லியின் கடைசி கலைவடிவம். பி.ரம்லி இறந்த பிறகு அவருக்காக இப்பாடலை  சலோமா பாடினார்.  மலேசியாவில் பி.ரம்லி எனும் மாபெரும் கலைஞனுக்குக் கிடைத்த அங்கீகாரம் அவர் இறந்த பிறகு கிடைத்த டான்ஸ்ரீ பட்டம்தான். இந்த பட்டதால் அந்தக் கலைஞனின் உடைந்த மனதை, அவனிடமிருந்து நசுக்கப்பட்ட கனவை  மீட்டுத் தர இயலுமா?

2 comments for “பி.ரம்லி: கலை – கனவு – கலகம்

  1. இராவணன்
    March 1, 2019 at 12:53 pm

    சரவணதீர்த்தா சார்,

    கண்ணீர் மல்கும் விழிகளோடு படித்த கட்டுரை.

    பி.ரம்லி என் ஆதர்ச நாயகன். பல நேரங்களில், இப்படியொரு மனித படைப்பு சாத்தியமா என்று நான் வியந்ததுண்டு.

    நன்றிகள் பல….

    அன்புடன்,
    இராவணன்.

  2. சிவனேஸ்
    March 2, 2019 at 1:51 pm

    நம் நாட்டின் மிகச் சிறந்த கலைஞனின் வரலாறு, இதயத்தைக் கனக்கச் செய்து விட்டது. அருமையான பதிவு, பாராட்டுக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...