அவிழாத மொட்டுகள்

foot-corbisஉங்கள் உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களின் பரப்பளவு ஒருநாள் சிறுத்துவிடுவதைப் பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அல்லது கால் உடையாமல், ஊனப்படாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை முழுவதிலும் அமர்ந்துகொண்டு,சிறு வேலைக்குக்கூட அடுத்தவருடைய உதவியை நாடி வாழ்வதைப் பற்றி எண்ணியதுண்டா? இவையெல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் வலிந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் அது ஒரு அலங்காரமாக அவர்கள் மத்தியில் திகழ்ந்ததென்றால் நம்பமுடிகிறதா?

இந்த உலகம் பல சடங்குகளை உருவாக்கியும் ஓம்பியும் பின்னர் மறந்தும் வந்துள்ளது. தோன்றின மறையும்;மறைந்தன தோன்றும்.அவ்வாறு தோன்றிய சடங்குகளில் உள்ள வலிகளை தத்தம் பண்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வலிந்து ஏற்றுக்கொண்டுள்ள மக்களை இன்றும் காண முடிகிறது. மியான்மார் கன்யா இனத்துப் பெண்கள் கழுத்தில் வளையங்கள் அணிந்து கொண்டதும் சதி சடங்கில் பெண்கள் உடன்கட்டை ஏறியதும் அவ்வகையில்தான். ஏதோ ஒரு காரணத்திற்காகத் தோன்றும் இதுபோன்ற பழக்கங்கள் பின்னர் பண்பாட்டில் ஒரு கூறாக்கப்பட்டு,பல்வேறு தத்துவங்களால் இழைக்கப்பட்டு சடங்கு என்ற பெயரில் பல தலைமுறைகளுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளது. அம்மாதிரியான சடங்குகளில் ஆண் பெண் என்ற இருபாலரின் பங்களிப்பும் இருந்தபோதிலும் அவற்றின் அமலாக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான்.

பாதம் கட்டுதல் எனும் சடங்கு பெண்களின் பாதத்தின் வடிவத்தை மாற்றுவதற்காக செய்யப்பட்டதாகும். ஐந்து பேரரசுகளின் காலக்கட்டத்தில் மேல்தட்டு அரங்க நாட்டியமணிகளிடம் ஆரம்பித்த இந்தப் பழக்கம்  “சோங்” பேரரசின் காலத்தில் அதிகமான தாக்கத்தைப் பெற்றிருந்தது.இந்தப் பழக்கத்தின் தொடக்கம்  பற்றி பல கதைகள்புள்ளன. சீனாவின் வடக்கில் “கீ” அரசாட்சியின் “சியாவ் பௌஜான்” என்ற பேரரசரின் அவையில் மிகவும் விரும்பப்பட்ட நாட்டியக்காரியான “பான் யூனு” என்பவளைப் பற்றியது அதில் ஒன்று. அவள் தங்க தாமரை பூ வடிவத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில்ஆடினாள். தாமரை இதழின் ஒவ்வொரு இதழிலிலும் அவள் ஆடிய நடனம் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது. இதுவே பின்னாளில் “தங்கத் தாமரை”, “தாமரை பாதம்” போன்ற சொற்கள் பிறக்கக் காரணமாயிருந்ததாக கருதப்படுகிறது. ஆனால், “பான் யூனு” தன்னுடைய பாதங்களைக் கட்டியதற்கான குறிப்போ சான்றோ இல்லை.

அதே போன்று சீனாவின் வடக்கின் “தாங்” ஆட்சியில், பத்தாம் நூற்றாண்டில்  ஆட்சி செய்த “லீ யூ” மன்னரின் காலத்திதான் இச்சடங்கு தொடங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆறடி உயரத்தில் மணிகளாலும் முத்துகளாலும் தங்கத் தாமரையை அலங்கரித்து, அவர் தன்னுடைய மனைவியான “யோ நியாங்” பாதங்களைப் பட்டுத்துணியால் பிறையைப் போல் கட்டி,விரல்நுனிகளால் அத்தாமரையின் மீது ஆடச்சொல்லியிருக்கிறார். “யோ நியாஙின்” நடனம் மிகவும் நளினமாக இருந்ததாகவும், அதனையே பின்னர் மேல்தட்டுப் பெண்கள் பின்பற்றியதாகவும் தெரிய வருகிறது.

இந்தப் பழக்கத்தின் தொடக்கம் 1100 ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட இரு கவிதைகளின் வழி தெரிய வருகிறது. 1148 ஆம் ஆண்டு கல்வியாளர் “ஷாங் பாங்கி” எழுதிய குறிப்புகளில், அவர் தாமரைப் பாதங்கள் அரை வட்ட வடிவத்திலும் சிறியதாகவும் இருக்க வேண்டும்என்று கூறியிருக்கிறார். பதிமூன்றாம் நூற்றாண்டில் இச்சடங்கைக் கண்டித்த “சே ரோசோ” என்பவர் இதைப் பிஞ்சு குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தும் ஒன்றாகவும் பயனற்றதாகவும் கூறியுள்ளார்.

இதன் ஆரம்பகால சான்றாகக் கருதப்படுவது, தன்னுடைய 17 வயதில் 1243ஆம் ஆண்டு இறந்துபோன “ஹுவாங் சேங்” என்பவரின் பிணமாகும். அவருடைய இரு பாதங்களும் ஏறக்குறைய ஆறு ஆறடி நீளமுள்ள துணிகளால் சுற்றப்பட்டுள்ளது. செறிவான முறையில் பதப்படுத்தப்பட்டிருந்த இவரது உடலுக்கு அருகே அவரின் சிறிய பாதங்கள் நுழைவதற்கு ஏதுவானசிறிய காலணிகளும் வைக்கப்பட்டிருந்தது. “சோங்” பேரரசில் கட்டைவிரல் மேல்நோக்கி வளைக்கப்பட்டிருந்த பாத வடிவமைப்பு, பிற்காலத்தில் வேறுபட்டிருந்தது. மூன்று அங்குல அளவிற்கு சிறியதாக “மூன்று அங்குலத் தங்கத் தாமரை ” என்ற பெயரில் அது அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த வேறுபாடு என்பது,ஒரு வேளை 16-ஆம் நூற்றாண்டின்தாமரைப் பாதத்திற்கான பிற்கால மேம்பாடாகவும் இருக்கலாம்.

“சோங்” பேரரசின் இறுதியில், ஆண்கள் தாமரைப் பாதங்களுக்கு அணியும்   காலணிகளுடன் வைக்கப்பட்டிருந்த குவளைகளில் பானங்கள் அருந்தியுள்ளனர். “யுவான்” பேரரசின் காலக்கட்டத்திலோ சிலர் நேரடியாகவே காலணிகளில் பானத்தை அருந்தியுள்ளனர். பாதங்களின்வழி காமவுணர்ச்சியைக் கண்ட சீன ஆண்கள், அதன் காலணியில் காமத்தை ஊக்குவிக்கும் மருந்தைக் கண்டார்கள் போலும்.  “தங்கத் தாமரைக்கு வணக்கம்” என்ற பெயரில் அழைக்கப்பட்ட இச்சடங்கு “கிங்” பேரரசு காலக்கட்டத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இச்சடங்கைப் பற்றி குறிப்பிட்ட முதல் ஐரோப்பியராக இத்தாலிய மதபோகரான “ஒடோரிக் ஒப் போர்டினேனோ” திகழ்கிறார். ஆனால், அவர் தவிர சீனாவிற்கு வந்த “இப்ன் பத்துல்லா” அல்லது “மார்க்க போலோ” போன்றவர்கள் இச்சடங்கைப் பற்றி குறிப்பிடாதது விந்தைதான்.

மங்கோலியர்களும் தங்களுடைய சீனப் பாடத்தில் இச்சடங்கை வலியுறுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் அரசகுடும்பத்தில் மட்டுமே நிலவிய இச்சடங்கு பின்னாளில் பொது மக்களிடமும்பரவியுயுள்ளது. இப்பழக்கத்தை நடனக் கலைஞர்களும் மேற்கொண்டார்கள். அதனால், உடல் சார்ந்த உபாதைகளுக்கு பெண்கள் ஆளானதுடன், சீனாவில் நடன, நாடகக் கலைகள்அழிந்து போகும் துன்பமும் நேர்ந்துள்ளது. கலை வடிவங்களின் தேய்மானம் என்பது ஒரு சமூகத்தின் பாரம்பரியத்தை மெல்லக் கொல்லும் தன்மையது ஆகும்.

lotusவழிவழியாகப் பெண்களின் மீது திணிக்கப்பட்ட இதுபோன்ற பண்பாடுகள் முழுக்க முழுக்க ஆண்களின் இன்பத்துய்த்தலுக்காகவே பெண்களிடத்தில் பரப்பப்பட்டது. தாமரைப்பாதங்களையுடைய பெண்கள் உச்சபாலியல் இன்பம் நல்கும் போகப்பொருட்களாகப் பார்க்கப்பட்டார்கள். அவ்வாறு பாதங்கள் வடிவமைக்கப்படும்போது பெண்களின் பாலுறுப்புகள் வலுவடைவதாகவும் அது ஆண்களுக்கு மிக்க இன்பம் தரும் என்றும் நம்பப்பட்டது. “கிங்” பேரரசு காலத்தின் காமநூல் “தாமரைப் பாதம்” கொண்ட பெண்களோடு உறவுகொள்ளும் 48 வகைகளை விவரிக்கிறது. மற்ற ஆண்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக அப்பாதங்களை மெல்லிய துணியால் சுற்றியே வைத்திருந்திருக்கிறார்கள். எல்லாம் காமவுணர்ச்சிக்காக மட்டுமே. ரோபர்ட் வான் கூலிக் என்பவர், தாமரைப் பாதம் ஒரு பெண்ணின் உடலில் மிகுந்த உணர்ச்சிமிக்க இடமாகப் பார்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதனாலேயே, “கிங்” முதல் “சோங்” ஆட்சிக் காலங்களில் புனையப்பட்ட எந்த உடலின்பம் சார்ந்த ஓவியத்திலும் பெண்ணின் தாமரைப் பாதங்கள் காட்டப்படவில்லையாம்.

அது மட்டுமல்லாது, தாமரைப் பாதம் கொண்டிருப்பது செல்வச் செழிப்பின் குறியீடாகவும் பார்க்கப்பட்டது. ஒரு ஆண் எத்தனை தாமரைப் பாதங்கள் கொண்ட பெண்களைத் திருமணம் செய்திருக்கிறானோ அதனைக்கொண்டு அவனின் செல்வச் செழிப்பு அளக்கப்பட்டது.ஒரு பெண்ணுக்குப் பூப்பெய்தல், திருமணம், மகப்பேறு போன்றவை எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு பாதம் கட்டுதலும் பண்டைய சீனாவில் அதிமுக்கியமான சடங்காகப் பார்க்கப்பட்டது.அவள் தொடர்ந்து உயிர் வாழ்வதைக் காட்டிலும் இச்சடங்கு அவள் வாழ்வில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. நான்கு முதல் ஒன்பது வயதிற்குள் பெண் பிள்ளைகளுக்கு இச்சடங்கு நிறைவேற்றப்பட்டது.சுய உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில்,அவர்களின் சுய விருப்பு வெறுப்பு இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இச்சடங்கு கட்டாயமான ஒன்றாகவே கருதப்பட்டதுதான் கொடுமை.

தாமரைபாதம்கட்டுதல்என்பதுஅவ்வளவுஎளிதானசெயலல்ல.பண்டைய சீன மக்கள் பாதம் கட்டும் செயல்பாட்டினை ஒரு பெண் குழந்தைக்கு நான்கு முதல் ஒன்பது வயதிற்குள் செய்கிறார்கள். அதுவும், எலும்புகள் நசுக்கப்படும்போது வலி குறைவாக இருப்பதற்காக இச்சடங்கைக் குளிர் காலத்தில் செய்கிறார்கள்.முதலில், கால்களை மூலிகைகள் மற்றும் விலங்குகளின் குருதி கலக்கப்பட்ட நீரில் ஊற வைக்கிறார்கள். இது பாதங்களை மென்மைப்படுத்தும் செயல்பாடாகும். மேலும், காயங்களைத் தவிர்ப்பதற்காகக் கால்நகங்கள் எல்லாம் எவ்வளவு குட்டையாக வெட்டப்பட முடியுமோ அவ்வளவு குட்டையாக வெட்டப்படும் அல்லது பிடுங்கப்படும். கால்கட்டை விரலைத் தவிர்த்து மற்றவிரல்கள் அனைத்தையும் அழுத்தி உடைப்பார்கள். இது பாதத்தின் பரப்பளவை மிகவும் சிறியதாக்கும். சீனர்களின் “தாமரைப் பாதத்தின்” மிகச்சிறந்த அளவாக கருதப்பட்ட “மூன்று சீன அளவில்” (ஏறக்குறைய 4 அங்குலம்) இருக்க அவ்வாறு செய்யப்பட்டது. மீண்டும்  மூலிகை மற்றும் விலங்குகளின் குருதி கலக்கப்பட்ட நீரில் ஊறவைக்கப்பட்ட துணியால் பாத்தை இறுக்கிக் கட்டுகிறார்கள்.

கால்களை இன்னும் சிறியதாவதற்கு உடைந்த கண்ணாடிதுண்டுகள் கட்டுக்குள் வைக்கப்படுமாம். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் துணை கழற்றப்பட்டுப், பாதங்கள் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் கட்டப்படுமாம். வளர்ந்த நகங்கள் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்படும். இத்தனை வேதனைகளைக் கடந்துதான் சீனப்பெண்கள் ‘அழகானவர்களாகவும்’ ‘வீரியமிக்கவர்களாகவும்’ ஆனார்கள்; ஆக்கப்பட்டார்கள். ஒவ்வொரு முறையும் பாதங்கள் சுத்தம் செய்யப்படும்போது மிகுந்த வலியை அனுபவித்தார்கள்.

பண்டைய சீனப்பெண்கள் அங்க ஊனங்களை விரும்பி ஏற்றுக்கொண்டதை எந்த வகையான மனநிலை சார்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அதே போல் அதை தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வந்ததையும் எந்த வகையான மனநிலை என்பதை விளக்கமுடியவில்லை. நாமாக நம்முடைய உடலில் ஓர் ஊனத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு மிகுந்த மனவலிமை வேண்டும். சீனப் பெண்கள் அதை மிகுதியாகவே கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்.

அதோடு, திருமணத்திற்குண்டான திறவுக்கோலாகவும் இச்சடங்கு கருதப்பட்டது.main-collage எடுத்துக்காட்டாக, 19-ஆம் நூற்றாண்டில், “குவாண்டோங்” மாகாணத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மூத்த பெண் பிள்ளைகளுக்கு இப்பாதம் கட்டும் சடங்கு கட்டாயமான ஒன்றாக இருந்துள்ளது. அந்தப் பெண்ணிற்கு அடுத்துபிறந்த பெண் குழந்தைகள் வயலிலும் தோட்டத்திலும் வேலை செய்பவர்களாகவும், அவளுக்கு ஏவலாளாகவும், வீட்டு வேலைக்கான அடிமைகளாகவும் பார்க்கப்பட்ட நிலைமையும் அங்கு நிலவியுள்ளது. பாதம் கட்டப்பட்ட பெண் எந்த வேலையும் செய்யாமல் சொகுசாகவே வைக்கப்பட்டிருக்கிறாள். அடிப்படையில் அவசியமே இல்லாத ஒரு சடங்கு சமூகத்திலும் குடும்பத்திலும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருப்பது வேதனையாகும். இது குடும்பத்தின் ஏழ்மையை மாற்றுவதற்காகச் செய்யப்பட்ட உத்தியே அன்றி வேறில்லை. ஏதாவது ஓர் ஆண்மகன், பாதம் கட்டப்பட்ட மூத்த பெண்ணை அதிக வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும்போது அக்குடும்பத்தின் ஏழ்மைநிலை மாறும் சூழல் ஏற்பட்டது. இது ஏறக்குறைய வியாபாரம் போன்ற செயல்பாடுதான்.

தாமரைப் பாதம் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறான பெயர்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளரிபோன்ற அமைப்பில் பாதம் கட்டப்பட்ட பிறகு இருந்தமையால் “வெள்ளரிப் பாதம்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது. “ஜியாங்சூ” பகுதி பெண்கள் பாதங்களை சிறு வயது முதல் கட்டாமல் தேவைப்படும் நேரங்களில் மட்டும் பாதங்களைத் துணியால் சுற்றிக் கொண்டுள்ளனர். சிலர் திருமணம் வரை மட்டுமே கட்டியுள்ளனர். பட்டணங்களில் வேலை செய்த பெண்களிடம் இப்பாதம் கட்டும் பழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. சீனாவின் தெற்கு மாகாணத்தில் இப்பழக்கம் விரவி வந்துள்ளது. “Eight Banners” எனும் இராணுவ காலக்கட்டத்தில் “மன்ச்சு” எனும் சீன, மங்கோலியப் பெண்கள்பாதங்கள் கட்டப்பட்டவை போலவே நடப்பதற்காகவும், பாதம் சிறியதாகத் தெரியவும் காலணிகளைத் தயாரித்து அணிந்துள்ளனர். இது ஆறு அங்குல அளவு உயரத்தில் கட்டை அடிப்பாகத்தைக் கொண்டது. பெய்ஜிங் நகரின் மத்திய பகுதியில், 1800-ஆம் ஆண்டுகளின் மத்தியில் 50% முதல் 60% வரையிலான பெண்கள் பாதங்களைக் கட்டவில்லை என்பது தெரிய வருகிறது. “ஹான்” இன சீனர்கள் “பாதம் கட்டும்” சடங்கை மேற்கொள்ளவில்லை. ஆனால், “ஹுய்” முஸ்லிம்களும் “துங்கன்” முஸ்லிம்களும் இச்சடங்கை மேற்கொண்டுள்ளனர். “சிகாட்டிஸ்” அறிஞரான ஜேம்ஸ் லேக், வடக்கு சீனாவின் “குவான்சோ” மாகாணத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலில் “தாமரைப் பாதம்” கடவுளின் படைப்பிற்கு எதிராக இருப்பதால் அதைச் செய்யக்கூடாது என்ற குறிப்பு இருந்ததாக சொல்கிறார்.

தாமரைப் பாதம் எல்லா பெண்களுக்கும் நலம் பயக்கவில்லை. வளைந்த விரல்களில் வளர்ந்த நகங்களால் காயங்கள் ஏற்பட்டு, அதனால் தொற்றுகளும் ஏற்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது, இறுக்கக்கட்டப்படுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு சிலபெண்களின்கால்விரல்கள்கட்டுகள்அவிழ்க்கப்படும்பொழுதுகடலைதோல்களைப்போலதானாகஉதிர்ந்துவிடுவதும்உண்டாம். ஆனால், அதையும் சீனர்கள் மிகச் சிறிய பாதத்திற்குத் தோதாக எடுத்துக்கொண்டார்கள். அதோடு அல்லாமல், இரத்த ஓட்டம் தடைப்படுவதால் சமயங்களில் காயங்கள் ஏற்பட்டு ஆறாமல் சதை அழுகி போவதும் உண்டாம். தங்கள் உடல் அழுகுவதைத் தாமே கண்டார்கள் சீனப் பெண்கள். மேலும், இது பக்கவாதத்தையும் தசை தொடர்பான சிக்கல்களையும் பெண்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. தாமரைப் பாதம் கொண்ட பெண்கள் அனுபவித்த துன்பங்கள் சொற்களில் அடங்காதவை. அவர்களால் சரியாக நடக்க முடியாது. குவிந்த பாதங்கள் பாதத்தின் பரப்பளவைக் குறைத்துவிடுவதால் அவர்களால் துணையில்லாமல் நடக்கமுடியாது. குறுகிய பாதங்கள் பெண்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கும் கூற்றுவன் போல்தான் செயல்பட்டன.  அவர்களால் குனிய முடியாது. இயல்பான துணி துவைத்தல், வீடு துடைத்தல் போன்ற வேலைகளையும் அவர்களால் செய்ய முடியாமல் போனது.இன்னும் அந்தரங்கமான சுய தேவைகளை நிறைவேற்றுவதில்கூட ஒரு பெண் துணை தேடும் அவலத்தில் எலும்புகள் வலுவிழந்து, உறுதியிழந்து போனவர்கள் அதிகம்.

மானுட நாகரீக வளர்ச்சியால் மனிதத்துக்கு ஒவ்வாத பல்வேறு பண்பாடுகள் மறைந்ததுபோல இந்தப்பாதம் கட்டும் பழக்கமும் நீடித்துநிலைக்கவில்லை. மிக்கவளர்ச்சிகொடுத்த செயல்பாடுகளே நிலைக்காதபோது, ஒரு குறிப்பிட்ட பாலினத்தை முடக்கிய சடங்குநிலைக்காவதில் வியப்பொன்றுமில்லை. “கிங்”பேரரசின் ஆட்சிக்காலக்கட்டத்தில் “மன்ச்சு” இனமக்கள் இப்பழக்கத்தை நிறுத்தமேற்கொண்ட முயற்சிகள் வெற்றிப்பெறவில்லை.  19-ஆம்நூற்றாண்டின் இறுதியிலும் 20 –ஆம்நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஏற்பட்ட பாதம் கட்டுவதற்கு எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகளினால் இதுமுடிவுக்கு வந்துள்ளது. ஆனால், இன்னும் சீனாவில் தாமரைப் பாதம் கொண்ட மூத்த பெண்கள் மரித்த தங்களின் வாழ்க்கை நினைவுகளோடு வாழ்ந்து வருகிறார்கள்.

நன்கு யோசித்தால் பெண்களுக்கு எது அழகு என ஆண்களால் ஒவ்வொரு காலத்திலும் கட்டமைக்கப்பட்டு அதுவே பெண்களின் மனதில் புகுத்தவும் படுகின்றன. அன்றைய சீனப் பெண்கள் தங்கள் உடல் அழகுக்காக தங்கள் பாதங்களை வதைப்பதை கண்டன உணர்வுடன் பார்க்கும் நாம் அதற்குச் சற்றும் குறையாமல் இன்று நுகர்பொருள் கலாச்சாரத்தை உருவாக்கும் வணிக சந்தை முதலாளிகளிடம் பிடிபட்டு நீண்ட குதிக்கால் காலணி, பெரிய மார்பகங்களுக்கான சிலிக்கான் அறுவை சிகிச்சை, குவிந்த உதடுகளுக்கான பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை நாடும் பெண்களைக் கண்டு எவரும் பெரிதாக வியப்பதில்லை. கொடூரங்களில் உருவாகும் அழகை ஆழ் மனம் விரும்புகிறதோ என்னவோ.

மேற்கோள்

Foot binding. (2019, May 30). Retrieved June 13, 2019, from https://en.wikipedia.org/wiki/Foot_binding

Cartwright, M. (2019, June 07). Foot-Binding. Retrieved June 13, 2019, from https://www.ancient.eu/Foot-Binding/

3 comments for “அவிழாத மொட்டுகள்

  1. penniamselvakumariselvakumari0020
    July 15, 2019 at 9:14 pm

    உறைய வைக்கும் வன்மங்கள் பெண்கள் மீது இந்த அளவிற்கா..நம்ப முடியாத அளவில் ..வலி..

  2. ஸ்ரீவிஜி
    July 24, 2019 at 12:37 pm

    இந்தக் கொடுமையை நான் முன்பே கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இதையொட்டிய தகவலை எங்கே வாசிப்பது, யாரிடம் கேட்பது போன்ற குழப்பங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது. தகவலறிய, சில சீனத்தோழிகளிடமும் விசாரித்துள்ளேன், அவர்கள் ‘தத்தாவ்’ என்கிற பதிலைத்தான் திருப்பித்தந்தார்கள்.
    இக்கட்டுரை எனது தேடலுக்குக்கான தீனியாக அமைந்தது. நீண்டகாலம் தேடிக்கொண்டிருந்த பிற இன கலாச்சாரக்கொடுமையினைச் சொல்கிற கட்டுரை இது. பெண் இனத்தை அடிமை படுத்துவதற்குப் போடப்பட்ட மறைமுக திட்டங்கள் இவை அனைத்தும்.
    இத்தோடு இணைக்கப்பட்டுள்ள link ஐ தட்டினேன். அதுவும் எனது தேடலுக்குத் துணையாக இருந்தது.
    பெண்களின் பால் திணிக்கப்பட்டுள்ள வன்மங்கள் மயிர்கூச்செரிய வைக்கிறது. அதையும் அவர்கள் பொறுத்துக்கொண்டு வாளா இருந்திருப்பதுதான் பேரதிர்ச்சி.
    அருமையான ஆய்வு. அதிர்ச்சியூட்டும் பண்பாட்டுச்செயல்பாடு. வாழ்த்துகள் திலீப், தொடரட்டும் ஆய்வு.

  3. Packiam Letchumanan
    July 25, 2019 at 8:46 am

    அருமையான பதிவு. நாங்கள் வசித்தத் தோட்டத்தில் சீனர்கள் அதிகம் இருந்தார்கள். சில சமயங்களில் சீன மூதாட்டிகள் சில விற்பனைப் பொருட்களைக் கொண்டு வருவார்கள். அவர்கள் இப்படித்தான் கட்டப்பட்டிருக்கும். சிறிய காலணிகளை அணிந்திருப்பார்கள். சிறு குழந்தைகளைப்போலத் தத்தித்தத்தி நடப்பார்கள். அப்பொழுது ஒரு கதை சொல்வார்கள். சீனாவில் பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே கால்களை இப்படிக்கட்டி விடுவார்கள் என்றும் , இல்லையென்றால் இவர்கள் வளர்ந்த பிறகு வீட்டைவிட்டு ஓடிவிடுவார்கள் என்றும் சொல்வார்கள். தங்களுடைய இந்தப் பதிவு சரியான விளக்கத்தைக் கொடுத்தது. பெண்கள் எவ்வளவுக் கொடுமைகளை தாங்கியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...