50ஆம் ஆண்டு பொன்விழா காணும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணம்: ஓர் ஆய்வுக்கு முன்பான ஆயத்தங்கள்!

கட்டுரைக்குச் செல்லும் முன் வல்லினம் இணையதளத்தில் எழுத்தாளர் சங்கம் தொடர்பாக வெளிவந்த சில எழுத்தாளர்களின் கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளதை வாசியுங்கள்.

பணம், புகழ், சொத்து, சுகம் அனைத்திலும் உயர்ந்து நிர்க்கும் வைரமுத்து அவர்களின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நூலை இங்கே அறிமுகம் செய்துவைத்து இலட்சக் கணக்கில் பணம் திரட்டிக் கொடுத்தது அவசியம்தானா?

இலக்கியக்குரிசில்  மா.இராமையா

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கும் தங்கப் பரிசு இதனையும் முற்றாக நிராகரித்துவிட்டேன். எனக்குத் தர முன்வந்த ‘தங்கப் பதக்கப் பரிசின்’ நிராகரிப்புக்குப் பின்னராவது , தகுதியுள்ள எழுத்தாளர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டிவற்றை வழங்க வேண்டடும் என்ற தன்னுணர்வு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு எழுமேயானால் அதுவே எனக்கு மனநிறைவு தருவதாகும்.

கா.பாக்கியம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வயதில் மூத்திருக்கலாம். தவறில்லை. ஆனால், இலக்கியத்தின் வடிவங்களில் மீதான பார்வை ஊனங்கள் தவிர்த்து, என்று இளமையான சிந்தனைகளைக் கொண்டிருக்கப்போகிறது?

கோ.முனியாண்டி

 புதிய எழுத்தாளர்களின் உருவாக்கத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நிலை ஒரு தொய்வு நிலையிலேயே உள்ளது. முன்பும் தற்போதும் கல்விமான்கள் பலர் சங்க நிர்வாகத்தில் இடம் பெற்ற போதிலும் , படைப்பிலக்கியங்களை புதிய சூழலில் உருவாக்கவும் அதனை மேற்கொள்வதற்கான உத்தி முறைகளையும் இளம் எழுத்தாளர்களிடையே உருவாக்குகதில் என்ன பங்கு வகிக்கின்றனர் என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.

ஜானகி ராமன் மாணிக்கம்

குமட்டிக்கொண்டு வருகிறது தலைவரே! பிறரைப் பார்த்து ஆபாசம் என்று பேச உங்களுக்கு என்ன அருகதை உள்ளது? உங்கள் சங்கத்தின் சார்பில் நீங்கள் போட்ட புத்தகங்களையும் உங்கள் மனவியின் சார்பில் போட்டு 7000 வெள்ளி பரிசையும் சுருட்டிக் கொண்டதையும் உங்கள் தலைமையில் நடந்த புத்தக வெளியீடுகளையும் ஞாபகப்படுத்துகிறது .

சீ.முத்துசாமி

சிலர் சொல்வதுபோல் சிற்றிதழ் குழுவினர் சிறுப்பிள்ளைத்தனமான கருத்துகளை முன் வைப்பவர்கள் அல்ல. தங்கள் சிந்தனைக்கு உட்பட்ட உண்மைகளைத் தயங்காமல் முன்வைப்பவர்கள். எழுத்தாளர் சங்கத் தலைவரின் சிறுப்பிள்ளைத்தனமான கூற்றுகளால் எங்கள் தலைமுடியைக்கூட அசைக்க முடியாது.

சு.யுவராஜன்

தமிழ் இலக்கியம் சார்ந்த மலேசிய உலகில் இந்தத் தர்க்கங்களுக்கு மூலமானவர் அதன் தலைமைபீடத்தில் அமர்ந்திருப்பவரையே  சுட்டிக்காட்டுகிறது. தலைமை பீடத்தில் உள்ளோர் காலம் முழுக்க தம் மீது தூசு படியக்கூடாது என்பதில் நியாயமில்லை. அதே வேளையில் தூசு வந்து படிவதும் மோதுவதும் தூசு புரிந்த தவறாகாது. தூசைத் தட்டிச் சுத்தம் செய்வதை விடுத்து சட்டையைக் கிழித்துக் கொள்வது எவ்வகையில் அறிவுடமை.

.தேவராஜன்

‘சங்கத்தில் சேர்ந்தால் எனக்குதான் ஓட்டு போட வேண்டும்’ என்றார் தலைவர். அச்சமயம் அவருக்கு சங்கத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவியது. மூன்றாந்தர அரசியல் கட்சிக்கு ஆள் பிடிப்பது போல் இருந்தது அவருடைய செய்கை. உறுப்பினராகும் எண்ணத்தை அன்றோடு கைவிட்டு விட்டேன் .

தோழி

உறுப்பினர் பாரம் வேண்டும் என்றால் என் வீட்டில் பெற்றுக்கொள்ளுங்க என கூறும் தலைவரைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன். சங்கச் செயலாளர் செய்ய வேண்டிய வேலைகளைத் தலைவரே களம் இறங்கி செய்வது தலைவரின் கடமையுணர்ச்சியையும் சங்கத்தின் மேல் உள்ள பற்றையும் காட்டுகிறது.

வீ..மணிமொழி

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் என்பது ஒரு ‘பாப்’ கலாச்சாரத்தை கட்டமைத்து வருகிறது. அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் குறுகியகால செயல்திட்டங்களையே முதன்மைப்படுத்தி உள்ளீடற்ற அல்லது நீட்சியற்ற காரியங்களை பெரிய விளம்பரங்களுடன் தொடர்ந்து முன்னெடுக்கிறது. தமிழகத்துக்கு குழுப்பயணங்கள், இலக்கியப்பயணங்கள் எனப் பெயர்சூட்டப்படினும்,எந்தவகையான தொடர்ச்செயல்பாடுகாளும் மேற்கொள்ளப்படாமல் , சங்கத்தின் ஒரு சிலரின் சுய தேவைகளை சுமந்து, தீர்ந்த்துக்கொள்ளும் களமாகிவிட்டது.

மணிஜெகதீசன்

நிறைய வெளிநாட்டு பயணங்க்கள், அதுவும் தமிழ் நாட்டுக்கு ‘இலக்கியச் சுற்றுலாவை’ எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்து வருவதை நாளிகைகளில் காண முடிகிறது. ஆயினும் அதன் பின் அல்லது அதில் கலந்து கொண்டு , எந்த அளவுக்கு தங்கள் எழுத்தாளுமையை மேம்படுத்தியிருக்கிறார்கள் நமது எழுத்தாளர்கள் என்பது கேள்விக்குறி ?

கருணாகரன்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடு குறித்து கருத்து கேட்கப்பட்டிருந்தது. நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகுதான் வருடம் தோறும் தமிழக சுற்றுலா ஏஜண்டாகவும் வைரமுத்துவுக்கு மலேசியாவில் புத்தகம் விற்று தருபவராகவும், தேர்தல் காலத்தில் மட்டும் புதுக்கவிதை திறனாய்வு தடபுடலாக செய்பவர்களாக விளங்கும் ஓர் அமைப்பை நோக்கிய கேள்வி இது.

சிவா பெரியண்ணன்

நன்றி : www.vallinam.com.my

—————————————————————————————————————-

இவை அனைத்துமே மலேசியாவின் சமகால எழுத்தாளர்கள் ‘மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மீது’முன்வைத்துள்ள விமர்சனங்கள். எழுத்தாளன் சமூகத்தில் கூர்மையான பார்வை கொண்டவன். அவன் சமூகத்தில் நடக்கும் அனைத்தின் மீதும் விமர்சங்களை வைக்கிறான். அப்படி இருக்கும் போது, எழுத்தாளர்களை வைத்து வழிநடத்துவதாகச் சொல்லப்படும் சங்கத்தின் மீது விமர்சங்கள் வைப்பது இயல்பு.

மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் மீதான இந்த விமர்சனங்களுக்கு அதன் தலைமத்துவமே காரணமாக அமைகிறது என்பது வெள்ளிடை மலை. வெளித்தோற்றத்தில் இயக்கச் செயல்பாடுகள் பிரமாண்டமாகத் தெரிந்தாலும் அதன் விளைபயன் என்ன என்பதுதான் நம் ஆதாரமான கேள்வியாக உள்ளது.

தமிழகச் சுற்றுலாவுக்குச் செல்பவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இலக்கியத்தொடர்பில்லாதவர்கள். இவர்களை அழைத்துக்கொண்டு செல்வதன் உண்மையான நோக்கம் என்ன? அங்கு நடக்கும் பட்டறைகளுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதே இன்று வரை தெளிவில்லாத காட்சியாக உள்ளது. இந்தப் பயணம் தொடர்பாக  நம்மிடையே சில கேள்விகளும் உள்ளன.

கேள்வி 1 : தமிழகப் பயணத்துக்கு இவ்வாறு ஒரு குழுவை அழைத்துச்செல்லும்போது குறிப்பிட்ட கழிவும் அதே சமயத்துல் இலவச டிக்கெட்டுகளும் கிடைப்பது மிக சாதாரண விடயம்.  இவை யாரின் பயன்பாட்டுக்குச் செல்கின்றன? அது தொடர்பான விவரங்கள் ஆண்டுக்கூட்டத்தில் தயாராகும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

கேள்வி 2 : தமிழகச் சுற்றுலாவில் குறிப்பிட்ட சிலர்தான் கட்டுரை படைக்கப் போகின்றனர் என்றால், மற்றவர்களை அழைத்துச் செல்வதில் அடிப்படை நோக்கம் என்ன? அவர்களில் இதுவரை ஆக்ககரமான படைப்புகளை வழங்கியுள்ளனரா? அப்படி திறன் வாய்ந்தவர்களை நாங்கள் சந்திக்க இயலுமா? இதுவரை சென்றவர்களின் முழுமையான பட்டியலை சங்கம் வெளியிடுமா?

கேள்வி 3 : தமிழகச் சுற்றுலாவுக்காக நன்கொடையாக வாங்கப்படும் தொகை, பயணிகளிடம் வாங்கப்பட்ட தொகை மற்றும் செலவுகள் , தமிழக அரசு வழங்கிய இலவச சேவைகள் என தெளிவாக எந்த ஆண்டறிக்கையிலும் குறிப்பிடப்படாத காரணம் என்ன? அதன் அத்தனை வரவு செலவுகளையும் வெளிப்படையாக முன்வைக்க இயலுமா?

இப்படி நமது நாட்டின் அரசியல்வாதிகள், ம.இ.காவினர், தனவந்தர்கள் என எழுத்தாளர் சங்கத்துக்கு முன் நின்றும் உதவும் நல்லுள்ளங்களின் குரலாக நின்று நாம் இதை கேட்கும் போது கேட்பவரை நோக்கி தேவையற்ற குற்றச்சாட்டுகள் வரலாம். ஆனால், மேற்கண்ட கேள்விகள் ஒரு ஆய்வு செய்யும் நோக்குள்ளவனின் ஆதாரமான கேள்வி என்பது கூர்ந்து வாசித்தால் புரியும்.

இந்த நிலையில் அண்மையில் தயாஜி , கே.பாலமுருகன், அ.பாண்டியன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து உரிமம் பற்றி பேசியதும் நாட்டில் பரவலாக கொந்தளிப்புகள் நிகழ்ந்தன. மேற்கண்ட எழுத்தாளர்களின் நியாயமான கோரிக்கைகள் திரிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் உச்சமாக எழுத்தாளர் சங்கத்தின் துணை தலைவர் ரெ.கார்த்திகேசு தனது திருவாய் மலர்ந்து சில கருத்துகளைச் சொல்லியுள்ளார். இது எழுத்தாளர் சங்கத்துக்கு இறங்கு முகம். அது ராஜேந்திரன் தலைவராக வந்த போதே தொடங்கிவிட்டது என மேற்கண்ட வாசகங்கள் காட்டுகின்றன.

பல சந்தர்ப்பங்களின் வல்லினம் குழுவினர் இந்த ‘சுரண்டல்களை’ (ஆம்! நிச்சயமாக இது சுரண்டல்தான்) அம்பலப்படுத்தியுள்ளனர். ஆனால், அதற்காக எவ்விதத்திலும் பதில் கூற திரணியற்ற கார்த்திகேசு தன் தலைவனுக்காக வரிந்துகட்டிக்கொண்டு வந்துள்ளது அவரது விசுவாசத்தைக் காட்டுகிறது. இதற்காகவே சங்கம் அவருக்கு ‘வாழ்நாள் விசுவாசி’ பட்டம் தரலாம். அவ்வாறு நாங்கள் எதிர்வினை வைத்த முக்கியமான விடயங்கள் உள்ளன.

எழுத்தாளர் சங்கத்தின் மீது உள்ள புகார்கள்

2012ல் – மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியின் தொடக்கவிழாவில் தமிழகத்திலிருந்து நடிகர் சேரன் வரவழைக்கப்பட்டார். அவர் அவ்விழாவைத் தொடக்கிவைக்க… அதாவது ஒரு திரையை விலக்கி வைக்க ஒரு லட்சம் ரூபாயை எழுத்தாளர் சங்கத்திடம் கேட்க அவர்களும் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த உண்மையை சேரன் மேடையில் போட்டு உடைத்தார். ஒரு தமிழக இயக்குனர்/ நடிகருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து (மலேசிய பணத்தில் 6000) இந்நாட்டு இலக்கிய நிகழ்வு தொடக்கப்பட வேண்டிய அவசியத்தைச் சங்கம் சொல்லவே இல்லை. வழங்கப்படுவதாக இருந்த அந்த 6000 ரிங்கிட் யாருடைய பணம்?

2011ல், சம்பந்தமே இல்லாமல் வைரமுத்துவின் ‘திரைப்படப்பாடல்கள் 1000’ என்ற நூலை எழுத்தாளர் சங்கம் கண்ணதாசன் அறவாரியத்தோடு இணைந்து வெளியீடு செய்தபோது, எவ்வித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் இந்நாட்டில் எழுதிக்கொண்டிருக்கும்  எழுத்தாளர்களுக்கு அவர்களின் நூல்களை இதுபோன்ற பெரிய அமைப்புடன் இணைந்து வெளியிட முனையாமல் நன்றாக செல்வம் கொழித்த வைரமுத்துவுக்கு செய்வதன் அரசியலை கேள்வி எழுப்பினோம். சங்கம் அதற்கும் மௌனமாக இருந்தது.

அதற்கு முன் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தை ராஜேந்திரன் தனது எழுத்தாளர் சங்க தலைவர் என்ற தகுதியைப் பயன்படுத்தி வெளியீடு செய்து பெரும் தொகையைப் பெற்றுக்கொடுத்த போதும், ஏன் இதை எளிய மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குச் செய்யவில்லை என  கேள்வி எழுப்ப திரணியற்று இருந்தார்கள் சங்க உறுப்பினர்கள்.

உலகம் முழுக்கவே ஒரு அமைப்பு நடத்தும் போட்டிக்கு அவ்வமைப்பின் உறுப்பினர்களும் தலைவரின் குடும்பத்தாரும் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டிருக்க, ராஜேந்திரன் அவர் மனைவி எழுதிய ‘மலேசிய புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலுக்கு மாணிக்க வாசகம் விருது வழங்கியபோது, ‘அதெல்லாம் கொடுக்கலாம்… எங்க கிட்ட அதுபோன்ற சட்டம் இல்லை’ என சப்புக்கட்டு கட்டினார் நடுவர்களில் ஒருவராக இருந்த கார்த்திகேசு.

சில மாதங்களுக்கு முன்பு ‘ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசியப் பெண் இலக்கியவாதிகள் இயங்குகிறார்கள்’ என்ற ராஜேந்திரனின் ஆணாதிக்க திமிருக்கும் எந்த மறுப்பும் சொல்லவில்லை. மாறாக தான் வேறு மாதிரியாகச் சொன்னதாக பூசி மழுப்பினார் தலைவர். சான்றுக்கு உள்ள வீடியோ பதிவுக்கு அவரிடம் பதிலில்லை.

இப்படி எழுத்தாளர் சங்கம் எழுத்தாளர்களின் எந்த கேள்விக்கும் எந்த எதிர்வினைக்கும் பதில் கொடுக்காமல் இன்று தயாஜி, அ.பாண்டியன் மற்றும் பாலமுருகனின் அறிக்கைக்கு கூச்சலிடும் காரணம் என்னவென்று ஆராய வேண்டியுள்ளது.

நூல் வெளியீட்டின் அரசியல்

100 பக்கம் அடங்கிய ஒரு நூலை 1000 பிரதிகள் இன்றைய திகதியில் அச்சடிப்பதென்றால் அதிகபட்சம் 3000 ரிங்கிட் செலவாகிறது. எழுத்தாளர் சங்கம் வெளியிடும் நூல்கள் பெரும்பாலும் 200 பக்கங்களைத் தாண்டுவதில்லை. ஆக 30 ரிங்கிட் அடங்கிய 200 நூல்களை விற்றாலே அவர்களின் அச்சு செலவு ஈடுகட்டப்பட்டுவிட்டது. மீதி எல்லாம் லாபக்கணக்குதான். மலேசிய தேசிய நூல் நிலையம் இப்போது எழுத்தாளர் சங்க நூல்களை வாங்கிக்கொள்வதை அடுத்து நூல் வெளியீடுகள் அவர்களுக்கு லாபமே தருகிறது. இது தவிர முதல் நூல் பெருனர் போன்ற சம்பிரதாயம், நூல் அச்சுக்கான நிதி உதவி என்றும் பரவலாக வாங்கப்படுவது நாம் அறிந்ததுதான். அது தவறில்லாத பட்சத்தில் லாபம் தரும் ஒரு நூலில் அதன் எழுத்தாளர்கள் தங்களுக்கான பதிப்பு படி கேட்பது எவ்வாறு தவறாகும் என்றே யோசிக்கத் தோன்றுகிறது. அதைக் கேட்பது ஏதோ தேச துரோகம் போல காட்ட முயல்வதே இங்கே வேடிக்கை.

முதலில் ஓர் எழுத்தாளன் தன் விருப்பத்தின் பெயரில் ஓர் இதழுக்கு தன் படைப்பை அனுப்புவதோ… ஒரு போட்டிக்குத் தன் படைப்பை அனுப்புவதோ  அவனது உரிமை. அந்தக் கதையை தனது முழு ஒப்புதலில் அவன் அனுப்புகிறான். அக்கதையை நூலாக்கவும் நிராகரிக்கவும் போட்டி நடத்தும் அமைப்புக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எழுத்தாளர் சங்கம் பத்திரிகையில் வந்த கதைகளைச் சேகரிக்கிறது. அதை தொகுத்து நூலாக்குகிறது. இப்போது அந்த நூலுக்கான மதிப்பு கதையின் மதிப்புதான். அதாவது இந்த வருடத்துக்கான சிறந்த சிறுகதைகள் என்ற கூற்றே அந்த நூலுக்கான இலக்கியத் தரத்தை உருவாக்குகிறது. ஆக, பத்திரிகைக்கு அனுப்பிய ஒரு கதையை தன் விருப்பத்துக்கு எடுத்து நூலாக்கும் எழுத்தாளர் சங்கம் முதலில் அந்த எழுத்தாளர்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதையும் இவர்கள் செய்யவில்லை. எழுத்தாளர் சங்கத் தலைவர் வேலை செய்யும் பத்திரிகையில் அறிவிப்பை போட்டுவிட்டால் அறிவித்ததாக அர்த்தமா என்ன? அதை வாங்காத வாசிக்காத ஒரு எழுத்தாளனுக்கு எப்படித் தகவலைச் சேர்க்கப் போகிறீர்கள்? எழுத்துப் பூர்வமாக அனுமதி பெறாமல் தொகுத்தது முதல் தவறு. அதை விற்பனை செய்து பணமாக்கியது இரண்டாவது தவறு என்பதே சக எழுத்தாளர்களின் வாதம்.

இங்கு மொழிப்பற்றாளர்கள், தமிழுக்காகச் செய்யும் சேவையாக எழுத்தாளர் சங்க நடவடிக்கையைக் கருதலாம். சேவை என்றால் நூலை குறைந்த பட்சம் கல்லூரி மாணவர்களுக்காவது இலவசமாகவோ விலை மலிவாகவோ தர வேண்டும். அங்கு 10 இலவசமாகக் கொடுத்தேன் இங்கு 20 கொடுத்தேன் என்ற கதையெல்லாம் வேண்டாம். அச்சடிக்கப்படும் எத்தனை நூல்கள் மலிவு விலையில் கொடுக்க முடிவெடுத்தீர்கள் என்ற ஆவணம் உங்கள் கூட்ட குறிப்பில் உண்டா? திட்டவட்டமாக ஏதும் முடிவெடுக்காமல் குத்துமதிப்பாக கொடுத்ததையெல்லாம் கணக்கில் எப்படி சேர்ப்பது? இந்த மூன்று எழுத்தாளர்கள் மேல் கல்வீசும் வாசகர்கள் முதலில் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் பேசுவது தங்களுக்காக அல்ல. நம் அனைவருக்காகவும்தான். எழுத்தாளன் வளமாக இந்நாட்டில் வாழ நமக்கான உரிமையைக் கேட்கிறார்கள்.

இன்று எழுத்தாளர்கள் விழித்துக்கொண்டதை அடுத்து சங்கம் மூட்டையைச் சுருட்டிவிட்டது என்பதுதான் உண்மை. தங்களுக்கு இத்தனை நாள் லாபம் கொடுத்த பொன் வாத்தை அவர்கள் அறுத்தெரிந்துவிட்டார்கள். இனி அது தங்க முட்டை இடாது என ராஜேந்திரனுக்குத் தெரியும். இது நிர்வாகக் கோளாறின் பிரதிபளிப்புதான். எழுத்தாளர்களுக்கு பதிப்புப் படியை தருவதால் சங்கத்தை லாபமாக நடத்த முடியாது எனும் கூறு நிர்வாகக் கோளாறின் வெளிபாடு. வல்லினம் குழுவினர் அதை தாங்கள் லாபகரமாக நடத்திக்காட்டுகிறோம் என முன்வந்த பிறகும் சில வாசகர்களைத் தூண்டியும் புனைப்பெயரிலும் வசைகளை பிரசுரிப்பது அவர்கள் கையாளாகத தனத்தின் பிரதிபளிப்பு மட்டுமே. அதே ஒரு எள்ளலோடு மட்டும் எதிர்க்கொள்ள முடியும்.

எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்றை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். எழுத்தாளர் சங்கம் தங்களைத் தாங்களே முடக்கிக் கொள்வதால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. இங்கு யார் இருந்தாலும் இல்லாமல் போனாலும் இலக்கியம் அதன் இலக்கை நோக்கி பயணிக்கும். புதிய அமைப்புகள் உருவாகும். இருக்கின்ற வேறு அமைப்புகள் இன்னும் மாற்றுவழிகளில் பயணிக்கும். எனவே மாற்றம் ஒன்று மட்டுமே மானுட தத்துவமாக இருக்கட்டும்.

இறுதியாக

பொன்விழா கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ள எழுத்தாளர் சங்கத்தின் தவறாக போக்குக்கு ஒன்றை மட்டும் உதாரணமாகக் காட்டலாம். இந்த நிகழ்வில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதை’  தமிழகத்தின் பெரும் செல்வந்தரான அபிராமி திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமநாதனுக்கு வழங்கப்படுகிறது.

தமிழகம் போல பரந்து நூல் விற்பனை செய்யும் வழி இல்லாமலும், சிங்கப்பூர் போல அரசு மானிய ஆதரவில்லாமலும் இந்நாட்டில் ஒவ்வொரு எழுத்தாளனும் மொழிக்காகவும் இலக்கியத்துக்காகவும் உழைத்துக்கொண்டிருக்க, தமிழகத்தில் பெரும் செல்வந்தர் ஒருவரை இங்கு அழைத்து விருது வழங்கும் அவசியம் என்னவென்று தெரியவில்லை. இவ்விருதை வழங்குவது சிவாஜி கலை மன்றம் என அறிவித்தாலும் அதை பொன்விழாவில் வழங்க வேண்டிய அவசியம் என்ன? பொன்விழா எழுத்தாளர் சங்கத்துக்கும் சிவாஜி மன்றத்துக்கும் சேர்த்து நடக்கிறதா? அல்லது சிக்கல் வராமல் இருக்க எழுத்தாளர் சங்கம் கலை மன்றத்தை இணைத்துக்கொண்டதா? அப்படியானால், இந்நாட்டில் கலைக்காக பணியாற்றும் எந்தக் கலைஞரும் விருதை பெற தகுதியற்றவரா என்பதை சிவாஜி கலை மன்றம்தான் தெளிவு படுத்த வேண்டும்.

தமிழகம் செல்லும் போது தனிப்பட்டவர்கள் தங்கள் வசதியைப் பேணிக்கொள்ள இப்படி சங்கத்தையும் மன்றங்களையும் பயன்படுத்திக்கொள்வது எவ்விதத்தில் நியாயமானது. அரசு சங்கத்தில் உள்ள உறுப்பினர்களை கணக்கில் கொண்டே பெரும் தொகையை அமைப்புகளுக்கு ஒதுக்குகிறது. நமது பெயரை சொல்லி பெறப்படும் தொகை தமிழக வணிகருக்கு வழங்கப்படுவதில் அறிவார்ந்து சிந்திக்க வேண்டிய எழுத்தாளர்களும் ஒத்துப்போவதுதான் வருத்தம். அபிராமி ராமநாதன் மலேசிய இலக்கியவாதிகளின் இந்த அவல நிலைக்குத் தான் காரணமாக இருக்க வேண்டுமா என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டும்.

எதற்குமே அடிமைகள் போல வாயடைத்திருக்கும் எழுத்தாளர்கள் இதற்காவது உரிமையுடன் குரல்கொடுப்பார்களா?

1 comment for “50ஆம் ஆண்டு பொன்விழா காணும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணம்: ஓர் ஆய்வுக்கு முன்பான ஆயத்தங்கள்!

  1. Gajendran
    October 19, 2013 at 4:16 pm

    malaysia eluthalar sangam, koduthavarkallukkeh parisu kodikkum nilaiyai matri elainarkalukku vaippu kodukka vendum.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...