புருனோ மன்சர் : காட்டில் கரைந்த காந்தியம்

borneo_case_manserஉலகின் மூன்றாவது பெரிய தீவு போர்னியோ தீவு. கடும் காடு அடர்ந்த போர்னியோ தீவை, தெற்கே 73 விழுக்காடு இந்தோனேசியாவும், மத்தியில் 26 விழுக்காடு மலேசியாவும் (சபா, சரவாக் மாநிலங்கள்), வடக்கே 1 விழுக்காடு புருணையும் பங்குபோட்டுக் கொண்டுள்ளன.

இப்பிரிவுகளுக்கு உட்பட்டு போர்னியோ காடு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களும் டச்சு ஆட்சியாளர்களும் அத்தீவுக்கு வைத்த பெயர்தான் போர்னியோ தீவு என்பதாகும்.  அத்தீவின் பூர்வ குடிகள் அதை கலிமந்தான் தீவு என்றே குறிப்பிடுகின்றனர். அவ்வகையில் இந்தோனேசியாவில் ‘கலிமந்தான்’ என்றும் மலேசியாவில் ‘போர்னியோ தீவு’ அல்லது ‘போர்னியோ’ என்றும் குறிப்பிடப்படுகிறது.   2008 முதல் 2017ஆம் ஆண்டுவரை மலேசியாவின் ஆளுகைக்கு உட்பட்ட 514.61 ஏக்கர் நிலத்தில் 187 சட்டவிரோத காடழிப்புகள் மற்றும் 2,617 சட்டத்திற்கு புறம்பான வன குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை (State Assembly) தகவல் சுட்டுகிறது (Sun Daily, 2018, September, 04).

மலேசியா முழுவதும் பல இடங்களில் காடழிப்புகள் நடந்து கொண்டிருந்தாலும், அண்மைய ஆண்டுகளில் சரவாக் மூலு மழைக்காடுகள் (Mulu rainforest) மீதான ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் மிக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. மூலு மழைக்காடுகள் சரவாக்கின் மருடு மற்றும் மீரி மாவட்டங்களில் விரிந்து செல்கின்றன. மூலு மழைக்காடுகளின் 4.400 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியைச் செம்பனை தோட்டமாக மாற்ற ஆக்கிரமிப்பு வேலைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அப்பகுதிசார் பூர்வகுடிகளான ‘பெரவான்’ (Berawan) மற்றும் ‘பேனான்’ (Penan) சமுகத்தினரது வாழ்வாதாரங்களை அழிக்க விளையும் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ளன. (World Rainforest Movement, 2019, May, 14).

1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பக்கூன் அணைத் திட்டம் Bakun Dam ஏற்கனவே பல சூழியல் பாதிப்புகளை சரவாக் மாநிலத்தில் உண்டாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ ஒரு சிங்கப்பூர் அளவு கொண்ட அந்த செயற்கை நீர்த்தேக்கத்தால் பல்லாயிரம் வன விலங்குகளும் பழங்குடியினரும் தங்கள் வாழ்விடத்தை இழந்துள்ளனர் (Kurlantzick, 2011, June, 30).

‘ரேடியண்ட் லகூன்’ (Radiant Lagoon) என்ற நிறுவனம் செம்பனை எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையை இங்கு நிறுவ எண்ணியதால் இப்போராட்டம் உருவாகியது. இந்நிறுவனம் ஏற்கனவே 4,400 ஏக்கர் காட்டுப் பகுதிகளில் 730 ஏக்கர் காடுகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து அழித்துள்ளது. ‘ரேடியண்ட் லகூன்’ எனும் இந்த நிறுவனம் ‘நெஸ்லே’ (Nestlé), ‘யூனிலீவர்’ (Unilever), ‘மொண்டெலஸ்’ (Mondelēz) மற்றும் ‘புரோக்டர் & கேம்பிள்’ (Procter & Gamble) போன்ற நிறுவனங்களுக்குச் செம்பனை எண்ணெய் விநியோகிக்கும் ‘டபல் டினாஸ்டி’ (Double Dynasty) நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘புருனோ மன்சர் ஃபாண்ட்ஸ்’ (Bruno Manser Fonds (BMF) என்ற இயக்கம் புதிய செம்பனை தோட்டம் உருவாக்கவிருக்கும் திட்டத்தை கைவிடவேண்டி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. (Rainforest Rescue, 2019, May, 7). ‘புருனோ மன்சர் ஃபாண்ட்ஸ்’ என்பது வெப்பமண்டல பகுதி வனங்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் ஓர் இயக்கம். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் வெப்பமண்டல மழைக்காடுகளின் நிலப்பகுதிகளையும் பல்லுயிர்களையும் பாதுகாக்கும் வண்ணம் இவ்வியக்கத்தினர் பிரச்சாரங்கள் நிகழ்த்தி போராடி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாது, அங்கு குடியிருக்கும் பூர்வகுடிகளை மதித்து அவர்களுக்குரிய உரிமைகளைக் கட்டிக்காக்கவும் முற்படுகிறார்கள். இவ்வியக்கம் 1991ஆம் ஆண்டு ‘புருனோ மன்சர்’ (Bruno Manser) எனும் சுற்றுச்சூழல் ஆர்வலரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்நூற்றாண்டிலும்கூட நாடோடி சமூகமாக வாழும் ஒரேயொரு இனக்குழுவாக பெனான் பூர்வக்குடிகளுடன் புருனோ மன்சர் 1984 முதல் 1990 வரை ஆறு ஆண்டுகள் தன் வாழ்நாளைக் கழித்துள்ளார்.

n-large-16x9-far சுவிட்சர்லாந்தில் உள்ள பாசல் (Basel) எனும் நகரில் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 புருனோ மன்சர் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் நால்வர்; மூன்று பெண்கள் ஒர் ஆண். இவர் சிறுவயதிலிருந்தே மாறுபட்ட சிந்தனையாளராக இருந்தார். புருனோ மன்சர் மருத்துவராக வேண்டும் என்பது அவரது பெற்றோரின் எண்ணம். இதனால், அவர் முறைசாரா கற்றல் வழியில் (informal education)  மருத்துவம் பயின்றார். பிறகு, மேல்நிலைப் பள்ளியில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார். சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட வயதை அடைந்தவர்கள் கட்டாய இராணுவ சேவையில் இணைய வேண்டும்.  புருனோ மன்சர் இளம் வயதிலேயே வன்முறைக்கு எதிரான மனநிலையுடையவராக இருந்தார்.  மேலும் காந்தியடிகளின் அகிம்சை சித்தாந்தத்தைத் தீவிரமாக பின்பற்றினார். ஆகவே புருனோ மன்சர் கட்டாய ராணுவ பயிற்சியில் ஈடுபட மறுத்துவிட்டார். இதனால், அவருடைய 19ஆம் வயதின்போது மூன்று மாத காலத்தை லூசெர்ன் சிறையில் கழித்தார்.

புருனோ மன்சர் பின்னர் தன் வாழ்நாளில் அதிகாரங்களுக்கும் முதலாளிகளுக்கும் எதிரான எல்லாப் போராட்டங்களையும் காந்திய வழியில் நின்று அகிம்சை போராட்டமாகவே முன்னெடுத்தார்.  புருனோ மன்சர், சுவீஸ் காந்தி (Swiss Gandhi) என்றும் குறிப்பிடப்படுகின்றார். இந்தியாவோடு சற்றும் தொடர்பற்ற சுவிட்சலாந்தில் பிறந்தவரான புருனோ மன்சர் எப்படி காந்திய உணர்வாளராக உருவெடுத்தார் என்பது புதிர்தான். ஆனால், காந்தி சுவிட்சலாந்தில் நன்கு அறியப்பட்ட ஆளுமையாக இருந்துள்ளார் என்பதை வரலாற்று குறிப்புகள் உணர்த்துகின்றன. நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் Romain Rolland 1924ஆம் ஆண்டு  Mahatma Gandhi – The Man Who Became One with the Universal Being” என்ற நூலை எழுதி காந்தியை சுவிட்சலாந்து உட்பட ஐரோப்பிய உலகிற்கு நன்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 1931 ஆண்டு டிசம்பர் மாதம் காந்தி தம் துணைவியாருடனும் குழுவினருடனும் லண்டன் வட்டமேஜை ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு சுவிட்சலாந்திற்குப்  பயணம் சென்று ஒரு வார காலம் பல சொற்பொழிவுகளையும் சந்திப்புகளையும் நிகழ்த்தியுள்ளார். காந்தி சுவிட்சலாந்தில், ரொமைன் ரொலன் வீட்டில்தான் தங்கியுள்ளார்.  காந்தியின் அன்றாட செய்லபாடுகளை ஊன்றி கவனித்து ரொமைன் ரொலன் பல டைரி குறிப்புகளை  எழுதியுள்ளார். அந்தக் குளிர்காலத்திலும் மூன்றாம் தர ரயில் பெட்டிகளிலேயே காந்தி பயணம் செய்தார் என்று ரோலன் வியந்து குறிப்பிடுகின்றார். ஆகவே 1954 ஆண்டு சுவிட்லாந்தில் பிறந்து வளர்ந்தவரான புருனோ மன்சர் காந்தியைப் பற்றி அறிந்து தம் போராட்டங்களின் முன்னோடியாக அவரை அமைத்துக் கொண்டிருப்பதில் வியப்பில்லை.

1973ஆம் ஆண்டு அவர் சிறையிலிருந்து வெளியேறிய பின், சுவிட்சர்லாந்தில் இருக்கும் மலை சார்ந்த பனிநிலை பசும்பல்நிலங்களில் கால்நடைகளை வளர்த்து பராமரிப்பவராக பன்னிரெண்டு வருடங்கள் வாழ்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல், கைவேலைப்பாடுகள், மருந்தியல் துறை மற்றும் குகை ஆய்வியல் மீதும் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார்.  மலையேறும் கலையையும் அதற்கான உத்திகளையும் நன்கு கற்றுத் தேர்ந்து, அதன்வழி தன் உடலை எப்பொழுதும் பயிற்சிப்படுத்திக் கொண்டிருப்பவராகவும் இருந்தார். தன்னுடைய 30 வயதில் பணம், ஆடம்பரம், வசதி எதுவும் இல்லாத எளிய வாழ்வை விரும்பி, அவ்வாறு வாழும் மக்களை அறிந்து கொள்ளும் வேட்கையில் மலேசியாவில் அமைந்திருக்கும் போர்னியோவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முதலில் புருனோ மன்சர் 1983ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள திரெங்கானு மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள ஒரு குடும்பத்தில் அடைக்கலம் புகுந்து சிறிதுகாலம் தங்கியிருந்தார். அச்சமயம் அவர் மழைக்காடுகளைப் பற்றி ஆழமாக படித்து அறிந்து, சரவாக்கில் வாழும் பெனான் பழங்குடியினரைப் பற்றி தெரிந்து கொண்டார். பின், 1984ஆம் ஆண்டு பெனான் பழங்குடியினருடன் இணைந்து வாழ எண்ணம் வரவே அவர்களைத் தேடி கிழக்கு மலேசிய மாநிலமான சரவாக்குக்குச் சென்றார். அங்கு, மூலு மலையின் தேசிய பூங்காவிற்கு (Gunung Mulu National Park) சென்று பார்த்த பின், மனிதகுலத்தின் ஆழமான சாராம்சம் மற்றும் இன்றளவும் இயற்கையோடு இயந்து வாழும் மக்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் சரவாக்கின் ஆழமான உட்புற காடுகளுக்குள் நுழைந்தார்; ஆனால், எதிர்பாராத விதமாக காட்டில் தொலைந்து போனார். காட்டில் உண்பதற்கு உணவு இன்றி நச்சுத்தன்மை கொண்ட பனைத் துண்டுகளை உண்டதால் அவருக்கு உடல் நலம் பாதிப்புற்றது.

இறுதியாக, பல தடைக்களுக்குப் பின் அதே ஆண்டு மே மாதம் லிம்பாங் ஆற்றின் (Limbang river) முகத்துவாரத்தின் அருகில் பெனான் பழங்குடியினரிடம் வந்தடைந்தார். தொடக்கத்தில், பெனான் பழங்குடி சமூகம் புருனோ மன்சரை அந்நியப்படுத்தி புறக்கணிக்க முயன்றார்கள். காலம் கடந்தே சகஜ நிலைக்குத் திரும்பினார்கள். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தோனேசியா செல்ல நினைத்த புருனோ மன்சர் கோத்தாகினாபாலு வழியாக கலிமந்தானுக்குச் சென்றார்; அதன் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக லாங் செரிடானுக்குள் (Long Seridan) நுழைந்தார். 31 டிசம்பர் 1984 தொடங்கி காலாவதியான சுற்றுப்பயண குடிநுழைவு விசாவுடன் அவர் மலேசியாவில் வாழ்ந்துக் கொண்டிருந்தார்.

brunomanserlakipenanபெனான் மக்கள் தலைவராகப் போற்றும் அலோங் செகா (Along Sega) என்பவர் புருனோ மன்சருக்கு வழிகாட்டியாக இருந்து, உய்த்து வாழும் திறனையும் பெனான் மக்களின் கலாச்சாரம் மற்றும் மொழியையும் அறிந்து கொள்ள வழிசெய்தார். நகரவாழ் அடையாளங்களைத் துறந்து உடலில் இடுப்புக்கு கீழ் மட்டும் அரைத்துணி அணிந்து, ஊதுகணைக்குழலால் (sumpit) வேட்டையாடி, பாலூட்டிகள், பாம்பு வகைகள் மற்றும் சவ்வரிசி போன்ற உணவுகளை உண்டு பெனான் மக்களின் வாழ்க்கை முறையை முற்றிலுமாக ஏற்று, அவர்களோடு இணைந்து வாழ புருனோ மன்சரும் பழகிக் கொண்டார். தன்னிடமிருந்த அனைத்து பொருள்களையுமே தூக்கி எறிந்தவர் காந்தியடிகளின் நினைவாக தன்னுடன் வைத்துக்கொண்ட ஒரே பொருள் மூக்கு கண்ணாடி ஒன்று மட்டுமே. அவர் அணியும் மூக்குக்கண்ணாடி காந்தி அணிந்த மூக்குக்கண்ணாடியின் வடிவத்தை ஒத்து இருக்கும். இப்படியாக அவர் பெனான் மக்களில் ஒருவராக வாழ நினைத்த முடிவை மேற்கத்திய சமூகம் கேலி செய்தது மட்டுமல்லாமல் அவரை ‘வாய்ட் டார்சன்’ (White Tarzan) என்று அழைத்தது. இருப்பினும், புருனோ மன்சர் பெனான் பழங்குடியினரின் மரியாதையைப் பெற்று அவர்களது குடும்பத்தில் ஒருவராக மாறி ‘லாக்கி பெனான்’ (Laki Penan) எனும் பெயரில் அறியப்பட்டார்.

பெனான் மக்களுடன் தங்கியிருந்த காலத்தில் சுயமாக வரைந்த வரைப்படங்கள், குறிப்புகள் மற்றும் 10,000 குறிப்பேடுகள் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் எனப் பலவற்றை புருனோ மன்சர் சேகரித்து வைத்திருந்தார். மேலும், சில் வண்டுகளின் ரெக்கை வடிவம், ஒரேயொரு குச்சியைக் கொண்டு கிப்பன் எனும் சிறிய மனிதக் குரங்கைத் தூக்கிச் செல்லும் முறை மற்றும் துருத்தியில் (Blowgun) எப்படி துளைகளை உருவாக்குவது போன்ற செயல்முறைகளை ஓவியமாகவும் வரைந்து வைத்தார். பின்னர், இந்தக் குறிப்பேடுகள் பாசலில் செயல்படும் ‘கிறிஸ்டோஃப் மரியன் வெர்லாக்’ (Christoph Merian Verlag) பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன. அதுமட்டுமில்லாமல், பெனான் சமூக்கத்தின் மூத்தகுடிகளது வாய்வழி வரலாறுகளை ஒலியுணர்வாக பதிவு செய்து அதனை மொழிபெயர்த்தார். பெனான் மக்களுடன் வாழும்போது தன்னை அவர்கள் எந்த வகையிலும் துன்புறுத்தாமல், வன்முறை செய்யாமல் அன்புடன் நடத்தினார்கள் என்பதையும் புருனோ மன்சர் தனது குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளார்.

பத்து லாவி மலை முகடை அடைய முயன்று தோல்வியுற்று தப்பித்து செல்ல முடியாமலும் பிடிக்க எதுவும் வசம் இல்லாமல் ஒற்றைக் கயிற்றில் 24 மணிநேரம் தொங்கிக்கொண்டிருந்தது, விரியன் பாம்பின் கடிப்பட்டு காட்டில் சிகிச்சை எடுத்து வந்தது, மலேரியா நோய்த்தொற்று ஏற்பட்டு அவதியுற்றது என புருனோ மன்சர் எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம்.

இப்படியாக, அவர் பெனான் பழங்குடியினருடன் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் அங்கு காடழிப்பு வேலைகள் நிகழ தொடங்கின. புருனோ மன்சர் அங்கு வருவதற்கு முன்பிருந்தே அம்மக்கள் காடழிப்புகளுக்கு எதிராக போராடி வந்துள்ளனர். 1980களின் பிற்பகுதியில் இப்போராட்டம் தீவிரத்தன்மையை அடைந்தது. சில உள்ளூர் நிறுவனங்கள் பெனான் மக்களின் காடுகளுக்குள் ஊடுருவி போர்னியோவின் புராதனமான தனித்தன்மை வாய்ந்த அக்காடுகளை அழிக்கத் தொடங்கின. பெனான் பூர்வகுடிகள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான அடிப்படை தேவைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டது. இந்தக் காடழிப்புகளால் உயிர்வாழ்வதற்கு அவசியமான தாவரத்திரள்கள் குறைந்தது மட்டுமில்லாமல், குடிநீரும் மாசுபட்டுப் போனது. இதனால், அங்கு அதுவரை வாழ்ந்த விலங்குகள், பறவைகள், பூச்சிகள் இறந்து போனதுமில்லாமல் குரூரமான முறையில் அவ்விடத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டன. காலம் காலமாக பாதுகாத்து வரும் அவர்களுடைய பாரம்பரிய இடங்களும் அசுத்தப்படுத்தப்பட்டது. பெனான் பூர்வகுடிகளின் உரிமைகளும் வாழ்வாதாரங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளவதை அறிந்த புருனோ மன்சர் அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

சர்வதேச ஊடகங்களின் பார்வை இப்பிரச்சனையின்மீதுBruno_Manser,_ca._1987 படவேண்டும் என்பதற்காக புருனோ மன்சர் அகிம்சை முறையில் சாலைகளில் இறங்கி போராட்டங்களை நடத்தினார். இதனால் மலேசிய அரசாங்கம் இவர் மீது அதிருப்தி கொண்டது. 1986ஆம் ஆண்டு காவல்துறை புருனோ மன்சரை சிறைபிடிக்க வலைவிரித்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்காமல் ஆறு வருடங்கள் கழித்து 1990ஆம் ஆண்டு அவர் தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு சுவிர்சலாந்துக்குச் சென்றார். சரவாக்கில் நிகழும் சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்ட சுவிட்சர்லாந்தை தனது தளமாக பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

‘போர்னியோ மழைக்காடுகளுக்கான குரல்’ என்ற பெயரில் ஓர் உலக சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தார். புருனோ மன்சர், கெலாபிட் ஆர்வலர் ஆண்டர்சன் முட்டாங் உருத் (Kelabit activist Anderson Mutang Urud) மற்றும் இரண்டு பெனான் பழங்குடி உறுப்பினர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து போர்னியோ மழைக்காடுகளைப் பற்றிய விழிப்புணர்வுகளைப் பரப்பத் தொடங்கினர்.

ஜூலை 17, 1991ஆம் ஆண்டு, 17 வது ஜி-7 மாநாட்டின்போது (பணக்கார தொழில்மய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் ஓர் அதிகாரப்பூர்வமற்ற மன்றம்) லண்டன் ஊடக மையத்திற்கு வெளியே 30 அடி உயர தெரு விளக்கின்மீது ஏறி இரண்டரை மணி நேரம் போராட்டம் நடத்தினார். சரவாக் மழைக்காடுகளின் அவலநிலை குறித்த செய்தியைக் காட்டும் பதாகையை அனைவரும் பார்க்கும்படி காட்டினார். புருனோ மன்சரைத் தவிர்த்து உலகெங்கும் உள்ள பல ஆர்வலர்கள் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் போ ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மாலை 6:30 மணிக்கு மாநாடு முடிவடையும் வரை தடுத்து வைக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டுக்கு முன்பு, சரவாக் மழைக்காடுகளையும் அதில் வாழும் பூர்வகுடிகளையும் பாதுகாப்பதற்காக ‘புருனோ மன்சர் ஃபாண்ட்ஸ்’ (Bruno Manser Fonds (BMF) தொடங்கப்பட்டது. அவர் இந்த இயக்கத்தை சுவிட்சர்லாந்தின் பாசலில் அமைந்திருக்கும் அவருடைய வீட்டிலிருந்து நடத்தி வந்தார்.

புருனோ மன்சரின் பல முன்னெடுப்புகளுக்குப் பிறகு பன்னாட்டு அளவில் உலக நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் சரவாக்கில் நிகழும் காடழிப்புகளுக்குப் பல எதிர்ப்புகளும் கண்டனங்களும் வெளிவர தொடங்கியது. புருனோ மன்சரின் தொடர்ச்சியான போராட்டங்களும் காடழிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் மலேசியாவின் நற்பெயருக்கு அனைத்துலக ரீதியில் கலங்கம் ஏற்படுத்துவதாக மலேசிய அரசு கருதுதியது. ஆகவே புருனோ மன்சரின் செயல்பாடுகள் மலேசிய அரசாங்கத்திற்கு மேலும் கோபத்தைத் தூண்டியது. மலேசிய அரசாங்கம் புருனோ மன்சரை மலேசிய நாட்டின் விரும்பதகாத நபராக ‘persona non grata (an unwelcome person)’ சித்தரித்தது. அரசின் முதன்மை எதிரி என்று அறிவித்ததுடன் அவரைத் தேட சிறப்பு பிரிவுகளை அனுப்பியது. சட்ட ஒழுங்கை சீர்குலைந்ததாக புருனோ மன்சர்மீது அப்போதைய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது குற்றம் சாட்டினார். அதுமட்டுமில்லாமல், புருனோ மன்சரின் ஆணவப் போக்கையும் அவருக்கு ஆதரவான சகித்துக் கொள்ள முடியாத ஐரோப்பிய மேட்டிமைவாதத்தையும் நிறுத்தச் சொல்லி கடிதம் எழுதியுள்ளார்.

மலேசிய அரசு, புருனோ மன்சரை மேற்கத்திய நாடுகள் தங்கள் கைப்பாவையாக பயன்படுத்தி இந்நாட்டின் வளர்ச்சியை தடை செய்ய முயல்வதாக குற்றம் சாட்டியது. பசுமை திட்ட போராட்டங்கள் எனப்படுபவை மேற்கத்திய நாடுகளால் வளரும் நாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகள் என்று வர்ணித்தது. மேலும், புருனோ மன்சரின் போராட்டங்களை, பெனான் மக்களை நாகரீக வளர்சியில் இருந்து துண்டித்து தொடர்ந்து பழங்குடியினராக நிலைக்கச்செய்யும் முயற்சியாகவும் அது அந்தப் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது.  அதனினும் மேலாக, சபா, சரவாக் பழங்குடியினரிடையே இஸ்லாமிய மதம் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான், அவர்களை முன்னிறுத்திய பசுமை போராட்டங்கள் நடைபெறுவதாகவும் கூட பல வகை அதீத கருத்துக்களை அது வெளியிட்டது (Berita Harian, 1994, Dec, 11).

இதன் நீட்சியாக, சரவாக் மாநிலத்தில் வாழும் 250,000க்கும் அதிகமான மக்களுக்கு உணவளிக்க காட்டுமர விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் அவசியம் தேவைப்படுகிறது என்று அப்போதைய சரவாக் முதலமைச்சர் அப்துல் தைப் மஹ்மூத் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். மேலும், சரவாக் அரசாங்கத்தின் உள்விவகாரங்களில் வெளியாட்கள் யாரும் தலையிடாமல் இருப்பது சிறந்தது, குறிப்பாக புருனோ மன்சர் போன்றவர்கள் என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார். சரவாக் அரசாங்கத்திற்கு எதையும் மறைத்து செயல்படுத்தும் அவசியமில்லை என்றும் வெளிப்படையான அரசாங்கமாகதான் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். சரவாக்கின் சுகாதார அமைச்சர் ஜேம்ஸ் வோங், பெனான் மக்கள் விலங்குகளைப் போல காடுகளில் ஒடுங்கிக் கிடப்பதை தாம் விரும்பவில்லை என்றும் அவர்கள் மலேசிய சமுதாயத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்றும் அந்த உரிமையைப் பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் தனது கருத்தைப் பகிரங்கமாக முன்வைத்தார். இச்சூழலில்தான் சரவாக் மாநில அரசாங்கம் வெளிநாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் திரைப்படக் குழுக்கள் அனைத்தையும் அம்மாநிலத்திற்குள் நுழைவதை கடுமையாகப் பரிசீலித்தது (SWI swissinfo, 2001, November, 18). இப்படியாக மலேசிய மத்திய அரசாங்கமும் சரி, சரவாக் மாநில அரசாங்கமும் சரி புருனோ மன்சர்க்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்தார்களே தவிர பெனான் பூர்வகுடிகளின் சிக்கல்களையும் போர்னியோ காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக எந்த ஒரு கண்காணிப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அக்காலப்பகுதியில், போர்னியோ காடழிப்பு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மலேசிய அரசாங்கத்திடம் தயாராக காரணங்கள் இருந்து கொண்டே இருந்தது. ‘நாட்டின் வளர்ச்சி’ என்ற பொதுவான சமாதானத்தைச்  சொல்லி மக்களை  தன்பக்கம் வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தது.

புருனோ மன்சரும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலுடன் தொடர்ந்து பெனான் பழங்குடியினருக்காகப் போராடி வந்தார். சுவிட்சர்லாந்திற்குத் திரும்பிய பின்னும், புருனோ மன்சர் தொடர்ந்து பெனான் மக்களையும் மழைக்காடுகளையும் பார்வையிட சென்று வந்து கொண்டிருந்தார். அங்கு காடழிப்புகள் நடக்காமல் இருப்பதை கண்காணித்துக் கொண்டே இருந்தார்.

பிப்ரவரி 15, 2000ஆம் ஆண்டு புருனோ மன்சர் தன் நண்பர்களுடன் இந்தோனேசியாவில் இருக்கும் கலிமந்தான் வழியாக பெனான் மக்களைச் சந்திக்க சென்றுள்ளார். 18ஆம் திகதி அவர் தன் நண்பரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து அதனை சுவிட்சர்லாந்தில் இருக்கும் தன் குடுப்பத்தினரிடம் சேர்த்து விடும்படி கூறியுள்ளார். கடைசியாக 25 மே, 2000ஆம் ஆண்டு புருனோ மன்சர் 30 கிலோ எடையுள்ள முதுகுப்பையைச் சுமந்துக் கொண்டு சென்றதாக பெனான் குடியைச் சார்ந்த அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். தன் பெனான் நண்பரிடம் ‘பத்து லாவி’ மலையை ஏறப் போவதாகக்கூறிச் சென்ற புருனோ மன்சர் அதற்குப் பின் நண்பர்கள், குடும்பத்தினர் என்று யாரையும் தொடர்புக் கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. காவல்துறையும், அவரோடு சம்பந்தப்பட்டவர்களும் நீண்ட காலம் தேடியும் அவரைப் பற்றிய தகவல் யாருக்கும் கிடைக்கவில்லை. ஆனால், பெனான் பூர்வக்குடியைச் சேர்ந்த குறி சொல்பவர்களும், மாயவித்தை மற்றும் மாந்திரிகம் செய்பவர்களும் மன்சர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று உறுதியாக கூறினார்கள்.  10 மார்ச் 2005ஆம் ஆண்டு பாசலில் (Basel) உள்ள கன்டோனல் சிவில் நீதிமன்றம் (Cantonal Civil Court) காணாமல் போன புருனோ மன்சர் இறந்துவிட்டிருக்ககூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நவம்பர், 2001ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான பன்னாட்டு இயக்க விருது(International Society for Human Rights prize for Switzerland) சுவிட்சர்லாந்து நாட்டிற்காக புருனோ மன்சருக்கு வழங்கப்பட்டது (Mongabay, 2014, August, 25). மன்சர் காணாமல் போன இரண்டு வருடம் கழித்து ஜனவரி 2002-ஆம் ஆண்டு பெனான் பழங்குடி உறுப்பினர்களால் மன்சரைக் கொண்டாடும் பொருட்டு ‘தாவாய் விழா’ (Tawai Ceremony) ஏற்பாடு செய்யப்பட்டது. பெனான் மக்கள் புருனோ மன்சரை அவருடைய பெயரைச் சொல்லி அழைப்பதை விட ‘Laki Tawang’ (தொலைந்து போன மனிதன்) அல்லது ‘Laki e’h metat’ (மறைந்த மனிதன்) என்றே அழைப்பார்கள். பெனான் பூர்வக்குடி மத்தியில் இறந்தவர்களின் பெயரைச் சொல்வது தங்களுடைய கலாச்சாரத்திற்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது 2014-ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து அறிவியலாளர்கள் காணாமல் போன பெனான் பழங்குடி சமூகத்தின் ஆர்வலர் புருனோ மன்சரை நினைவூட்டும் வகையில் இனம் அறியப்படாத கோப்ளின் சிலந்திக்கு (goblin spider) ‘அப்போஸ்பிராகிஸ்மா புருனோமன்சேரி’ (Aposphragisma brunomanseri) என்று அவருடைய பெயரைச் சூட்டியுள்ளனர். இச்சிலந்தி புருனோ மன்சர் காணாமல் போன இடமான புலாங் தௌ (Pulong Tau) தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவியலாளர்கள் தெரிவித்தனர் (Halligan, 2019, September, 27). அதனை தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு சொர்க்க போர்: புருனோ மன்சரின் கதை (Paradise War: The Story of Bruno Manser) எனும் தலைப்பில் அவருடைய வாழ்க்கை வரலாறு நிக்லாஸ் ஹில்பர் என்பவரால் இயக்கப்பட்டு திரைப்படமாக வெளியிடப்பட்டது (Strawson, 2014, September 11).

புருனோ மன்சர் பூத உடல்கொண்டு நம் கண்முன் இல்லாவிடினும் அவர் தொடக்கி வைத்த இப்போராட்டம் நல்ல தீர்வைக் காணும் வரை நீடித்துக் கொண்டே இருக்கும். பெனான் மக்களுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்தவர். அந்தக் காரணத்திற்காகவே பெனான் மக்களும் இன்னும் அவரை மறவாமல் வாழ்கிறார்கள். ‘புருனோ மன்சர் ஃபாண்ட்ஸ்’ (Bruno Manser Fonds (BMF) இயக்கத்தினர் அவர் முன்னெடுத்த கொள்கைகளைத் தவறாது இன்றுவரை பெனான் பழங்குடியினருக்காகவும் போர்னியோ மழைக்காடுகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். புருனோ மன்சர் போன்றவர்கள் மரணிப்பதில்லை. இயற்கையைப் பாதுகாக்க விரும்பும் மக்கள் வழியாக காட்டில் கரைந்த உருவமாய் நிலைத்திருப்பார்.

மேற்கோள் பட்டியல்

Berita Harian. (1994, December, 11). Polis Nafi Biarkan Bruno Manser Lari. Retrieved from http://www.gpedia.com/ms/gpedia/Hutan_tropika

Bruno Manser Fund. Aims. Retrieved from https://bmf.ch/en/about-us/aims/

Bruno Manser Swiss Environmentalist. Retrieved from https://peoplepill.com/people/bruno-manser/

Diane K. M., & Milne, R. S. (2002). Malaysian Politics Under Mahathir. United Kingdom: Psychology Press.

Elegant, S. (2001, September, 03). Without a Trace. Retrieved from https://web.archive.org/web/20150113155405/http://borneo.live.radicaldesigns.org/article.php?id=265

Halligan, F. (2019, September, 27). Paradise War: The Story of Bruno Manser, Zurich Review. Retrieved from https://www.screendaily.com/reviews/paradise-war-the-story-of-bruno-manser-zurich-review/5143282.article

Human Rights Watch (Organization). Defending the Earth: Abuses of Human Rights and the Environment. Retrieved from https://books.google.com.my/books?id=EYU5yqinsYMC&pg=PA62&lpg=PA62&sig=BOath4ITIzSUqA8uCd4th4txf7w&redir_esc=y#v=onepage&q=Bruno%20Manser%20persona%20non%20grata&f=false, (pg.62-66)

Internet Archive Wayback Machine. (1991, July, 18). Bruno Manser mounts Sarawak protest in London. Retrieved from https://web.archive.org/web/20080517071719/http://nativenet.uthscsa.edu/archive/nl/91b/0080.html

Kurlantzick, J. (2011, June, 30). In Southeast Asia, Big Dams Raise Big Concerns. Retrieved from https://www.cfr.org/blog/southeast-asia-big-dams-raise-big-concerns

Mongabay. (2014, August, 25). Scientists honor missing activist by naming a spider after him. Retrieved from https://news.mongabay.com/2014/08/scientists-honor-missing-activist-by-naming-a-spider-after-him/

Owuor Otieno, M. (2017, October, 20). Where is Borneo?. Retrieved from https://www.worldatlas.com/articles/where-is-borneo.html

Strawson, G. (2014, September, 11). Sapiens: A Brief History of Humankind by Yuval Noah Harari – review Retrieved from https://www.theguardian.com/books/2014/sep/11/sapiens-brief-history-humankind-yuval-noah-harari-review

Sun Daily. (2018, September, 04). 187 cases of illegal logging in Peninsula M’sia over 10 years. Retrieved from https://www.thesundaily.my/archive/187-cases-illegal-logging-peninsula-msia-over-10-years-IUARCH576128

SWI swissinfo. (2001, November, 18). Missing environmentalist awarded human rights prize. Retrieved from https://www.swissinfo.ch/eng/missing-environmentalist-awarded-human-rights-prize/2375656

Taylor, B. Encyclopedia of Religion and Nature. Retrieved from https://books.google.com.my/books?id=i4mvAwAAQBAJ&pg=PA1047&redir_esc=y#v=onepage&q=Batu%20Lawi%20Bruno%20Manser&f=false.

World Rainforest Movement. (2019, May, 14). Sarawak: Save the Mulu Rainforest from oil palm plantations! Bulletin 243. Retrieved from https://wrm.org.uy/articles-from-the-wrm-bulletin/section2/sarawak-save-the-mulu-rainforest-from-oil-palm-plantations/

Chandrasekhar. A (2019 sep 14) swissinfo.ch https://www.swissinfo.ch/eng/december-1931_when-gandhi-visited-switzerland/45225904

9 comments for “புருனோ மன்சர் : காட்டில் கரைந்த காந்தியம்

  1. Dhayalan Kumaran
    January 1, 2020 at 9:50 am

    அருமையான பதிவு.

  2. January 1, 2020 at 10:47 pm

    பயனுள்ள பதிவு.ஆய்வாளர் /எழுத்தாளர்க்கு வாழ்த்துகள்.நீண்ட தெளிவான தகவல்கள். தெளிவான எழுத்து நடை.தங்களின் அடுத்த கட்டுரைகளை வாசிக்க காத்திருக்கிறேன்.

  3. புனிதவதி அர்ஜுனன்
    January 4, 2020 at 1:07 pm

    இப்படி ஒரு போராளி இருந்ததாக இக்கட்டுரை வழியே அறிந்தேன் .கட்டுரையை உயிர்ப்பிக்க கடுமையான உழைப்பு ,உண்மை , ஆராய்ச்சி ,எளிய எழுத்து நடை இவையாவும் கட்டுரையின் தூண்கள் . வாழ்த்துகள்

  4. Charu
    January 11, 2020 at 7:40 pm

    Amazing work!.. Congratulations!. 👍

  5. இராவணன்.
    January 13, 2020 at 3:47 pm

    அற்புதமான கட்டுரை…..

  6. தமிழவேள் குமார்
    January 16, 2020 at 1:37 am

    அருமை..இது போன்ற கட்டுரைகள் வரவேற்க தக்கவை👍

  7. Ma.Sithivinayagam
    January 18, 2020 at 10:45 am

    புருனோ போன்ற இயற்கையைப் போற்றி வாழ்பவர்கள் மரணிப்பதில்லை. இயற்கையைப் பாதுகாக்கத் துடிக்கிற போராட்டங்கள் வழியாக அவர் போன்றவர்கள் நின்று நிலைப்பார்கள். நான் பார்த்து வியந்த பாசல் நகரை விட்டு போர்ணியோவிற்கு விரைந்த புரூனோ போற்றப் படவேண்டியவர்.

  8. Mallika A
    January 19, 2020 at 6:25 pm

    அருமையான படைப்பு. இப்படி ஒருவர் பாடுபட்டார் என்பது இன்று இக்கட்டுரையைப் படித்துத்தான் அறிந்தேன். புருனோ இன்னும் இயற்கையில் உறைந்துள்ளார் என்று உறுதியாக நம்புகிறேன்.

Leave a Reply to தமிழவேள் குமார் Cancel reply