நாவல் என்பது… முகாம் அனுபவம்

indexவல்லினம் நடத்தியுள்ள இரு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கலந்து கொண்டுள்ளேன். அவை யாவும் ஒருநாள் நிகழ்வாகும். அவற்றில் ஏற்படாத எதிர்பார்ப்பினை இம்முறை கூலிம் கெடாவில் நடந்த மூன்று நாள் நவீன இலக்கிய முகாமானது என்னுள் ஏற்படுத்தியிருந்தது. வல்லினம் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் இலக்கியம் பற்றிய தெளிவற்ற பார்வையைக் கொண்ட  எனக்கு, இலக்கியம் பற்றிய புரிதலையும் தெளிவையும் கொடுத்து அதன் மீதான ஈடுபாட்டினையும் வாசிப்பதன் ஆர்வத்தையும் தற்போதைய காலங்களில் மிகைப்படுத்தியுள்ளது.

இம்முகாம் மூன்று நாட்கள் (20,21&22 டிசம்பர் 2019) பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல் எனும் இடத்தில் நடைபெற்றது. கலந்து கொள்பவர்களுக்கென வல்லினம் ஏற்பாட்டு குழுவினர் இலவச பேருந்து சேவையை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே புலனம் வாயிலாக அனைவருக்கும் இம்முகாமினை குறித்த சிறிய நினைவுறுத்தல் அனுப்பப்பட்டிருந்தது. காலை ஒன்பது மணிக்கு பேருந்து பத்துமலை வளாகத்தில் காத்திருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை சிற்றுண்டியை பத்துமலை வளாகத்தில் அமைந்திருந்த உணவகத்திலேயே முடித்து விட்டு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். அனைவரையும் சரிபார்த்த பின் பேருந்து காலை 9.20 மணிக்கு பத்துமலையை விட்டு புறப்பட்டது. எங்களோடு பேருந்தில் சை.பீர்முகம்மது மற்றும் சு.வேணுகோபால் போன்ற அசாதாரணமான ஆளுமைகள் பயணப்பட்டது சந்தோஷமாக இருந்தது.  அதுவே இவர்களின் மீதிருந்த மதிப்பை அதிகப்படித்தியிருந்தது.

மதிய உணவு நேரம் நெருங்கிவிட்டிருந்ததால் பேருந்து  ஈப்போவில் உள்ள திருப்பதி விலாஸ் உணவகத்தின் முன் பேருந்து நின்றது. அனைவரும் இறங்கி உணவுண்ட பின் முகாமில் கலந்து கொள்ளும் ஈப்போவை சேர்ந்த நண்பர்கள் சிலரையும் சுமந்து கொண்டு கூலிம் நோக்கி பேருந்து விரைந்தது. மதியம் 3.40 மணிக்கு பேருந்து பிரம்மவித்யாரண்ய ஆசிரமத்தை அடைந்தது. மூவருக்கு ஓர் அறை என பதிவு நடைபெற்றது. முதல்நாள் நிகழ்வானது இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் அவரவரின் அறையில் சிறிது நேரம் இளைப்பாறி, குளித்து மாற்று உடை அணிந்து மாலை சிற்றுண்டியினை (மாலை 5 முதல் 7 வரை) முடித்து கொண்டு நிகழ்ச்சி நடத்தப்படவிருக்கும் மண்டபத்தினுள் சென்று அமர்ந்து கொண்டோம்.

முதல் அங்கமாக மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் எழுதிய மலைக்காடு நாவல் வெளியீடு கண்டது. நாவலினை எழுத்தாளர் சு.வேணுகோபால் வெளியிட அதனை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் பெற்றுக் கொண்டார். அடுத்து சு.வேணுகோபால் ஒரு படைப்பாளியாக தனக்கு பிடித்தமான இடங்கள் மற்றும்  இந்நாவல் சென்றடைந்திருக்க வேண்டிய இடம் எதுவென்பதனை தனக்கு தோன்றிய சித்திரத்தை முன் வைத்தார். மலாயாவிற்கு பொருளீட்ட வந்த மூதாதையர்கள் திரும்ப முடியாது போனதும்; அங்கு சிக்கிக் கொண்ட தமிழர்களின்  வாழ்வாதார சிக்கல்களை மலைக்காடு நாவல் பேசுகிறது என்றார். மேலும் சாதிய பிரச்சனை பற்றியும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தொட்டும் இந்நாவல் பேசுகிறது என்றார். புனைவின் மொழியை அழகாய் எழுத்தாளர் இந்நாவலில்  கொடுத்திருப்பதாக கூறினார். அனைத்து கதாபாத்திரங்களிலும் மனத்தோய்வையும் (ஒருவரை நல்லவராய் அல்லது குரூரமாக) பார்க்கும் போது மனமானது எப்படி மாறுபடுகிறதென்பதையும் அழகாய் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறினார். கண்டசலா பாடல் பாடும் பிச்சைக்காரன், கண்ணம்மா கிழவி, முனியம்மா பாட்டி வெற்றிலை இடித்தல் போன்ற உதிரிபாத்திரங்கள் இந்நாவலின் முக்கிய இடமாக கருதுவதாக நினைவுகூர்ந்தார். அதே சமயம் இந்நாவல் வாழ்வின் சாரத்தை கண்டடையவில்லை என கருதுவதாக கூறினார். ஒரு இயக்கத்தின் போக்கை மலாயா காட்டில் துணுக்குச் செய்தியாகவும் கட்டுரை தன்மையாக கொடுத்திருப்பதாகவும் ஒரு நாவலில் கலையாக இவ்வியக்கம் புனையப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறியதோடு பாத்திர ஒருங்கிணைப்பு இந்நாவலில் வரவில்லை என்றார். மேலும் கால குழப்பம், வேட்டைக்காரனின் மனநிலையில் மாற்றம், பழத்தின்னி வௌவால் மதியம் பறத்தல் இவற்றில் மீது தன் விமர்சன பார்வையை கறாராகவே முன்வைத்தார்.

இந்நாவலை வெறுமனே வாசித்து முடித்திருந்த எனக்கு கவித்துவ இடங்கள், புனைவு மொழி, கதாபாத்திரங்களின் மகத்தான இடங்கள் என இவர் முன் வைத்த விமர்சனங்கள் இந்நாவலின் மீது மாறுபட்ட பார்வையைக் கொண்டு வந்தது மட்டுமல்லாது மீண்டும் இந்நாவலை வாசிக்க வேண்டும் என்கிற ஆவலையும் தூண்டியது. மேலும் வல்லினம் குழுவினர் வெறுமனே பாராட்டுகளுக்கு மட்டும் ஒருவரை அழைப்பதில்லை என்றும்; விமர்சனம் வழியே மலேசிய இலக்கியத்தை மேம்படுத்த மெனக்கெடுவதும் புரிந்தது. சீ.முத்துசாமி போன்ற பெரிய ஆளுமைகளும் அதுபோன்ற விமர்சனங்களை ஏற்கும் மனநிலையில் இருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அடுத்த அங்கமாக இரவு 7.45 மணிக்கு ம.நவீன் அவர்கள் எழுதிய ‘பேய்ச்சி’ நாவல் வெளியிடப்பட்டது. பேய்ச்சி நாவல் குறித்து அருள்மொழி நங்கை அவர்கள் உரையாற்றினார். தமிழ்நாட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க மலாயாவிற்குத் தோட்ட தொழிலாளர்களாக வந்த தமிழர்கள் ஒரு சமூகமாக உருவெடுத்து புதிய நிலம், புரியாத மொழி, அந்நிய நிலம் நோக்கி வந்தவர்கள் ஒரு சமூகமாக நிலைக்கொள்கின்றனர். அவர்களை சிறு தெய்வ/குல தெய்வ வழிபாடுகள் ஒன்றிணைக்கிறது. இந்நாவலில் 1981 நடந்த விஷச் சாராயம் அருந்தி தமிழர்கள் பலர் இறந்ததும், அவர்களின் பின்னனியை சித்தரிக்கும் விதமும் வாழ்வியல் இடமும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்நாவலை மூன்று தலைமுறை பெண்களில் கதையாகவும் எடுத்துகொள்ளலாம் என்றார். நிலக்காட்சி வர்ணனை, கம்பத்தின் வர்ணனை அதன் இயல்போடும் உயிர்ப்போடும் காட்டப்பட்டிருக்கிறது என மிகுந்த உற்சாகமாகக் கூறினார். இந்நாவலின் மொழி மிகையில்லாது கச்சிதமாக அமைந்துள்ளதுடன் இந்நாவல் பல வண்ண கதாபாத்திரங்களின் வழி, மூன்று காலகட்டங்களால் அழகாக கட்டமைக்கப்பட்டுள்ளது என பேய்ச்சி நாவலைப் பற்றிய சிலாகித்ததாக அவரின் உரை இருந்தது. அவர் உரையை செவிமடுத்தப் பின் பேய்ச்சி நாவலையும் அதில் உலாவ விட்டுள்ள மையகதாபாத்திரமான ஓலம்மாவை வாசித்தறிந்திட வேண்டும் என ஒரு நாவலையும் வாங்கி கொண்டேன்.

அன்றைய நாளின் இறுதி உரையாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் நாவல் எனும் கலை குறித்து உரை நிகழ்த்தினார். காவியம் பல வகையுண்டு அவை எழுத்து வடிவம், வாய்மொழி மற்றும் அச்சுமொழி என்றார். ஒட்டுமொத்தமாக சாரத்தை தொகுத்தே காவியங்கள் எழுதப்படுகிறது. எந்த நாகரிகம் தன் வாழ்க்கையைத் தானே தொகுத்து பார்க்கிறதோ, அடுத்தத் தலைமுறைக்கு தன் வாழ்க்கையைப்பற்றி திரட்டி கொடுக்கிறதோ அதுதான் காவியம். 16 நூற்றாண்டில் உரைநடை உருவாகியது. உரைநடை கற்பனையில் நாம் சென்று வாழ்ந்த அனுபவத்தை கொடுப்பத்தோடு ஜனநாயகத்திற்கு தொடர்புள்ளது. பழைய காவியங்கள் தேர்ந்த ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கற்றுதரப்பட வேண்டியது. புதிய நாவல் நாமே தேடிச் சென்று வாசிக்க வேண்டும். நாவல் என்பது காதல் கதையோ தொடர் கதையோ அல்ல, எங்கு கம்பராமாயணம், பெரிய புராணம் இருந்ததோ அங்கே தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் கலை வடிவம் நாவல் என்றார். நாவல் வடிவம் இருவகை, அவை பகடி செய்து எழுதும் நாவல், மற்றும் ஏற்கனவே உள்ளவற்றை உரைநடையில் எழுதப்பட்ட போலி காவியம். அடுத்தது எதார்த்தவாத நாவல், அன்றாட வாழ்க்கை சித்தரிப்பு கொண்டது. வணிக இலக்கியம் பின்னாளில் வந்தது. இங்கேதான் பொழுதுபோக்கு எழுத்தானது உருவெடுக்கிறது என்றவர் பொழுதுபோக்கு எழுத்திற்கும் தீவிரவாத எழுத்திற்குமான வேறுபாடுகளை பற்றி விளக்கினார்.

வாசிப்பவரை மகிழ்விப்பதுதான் பொழுதுபோக்கு எழுத்தின் வேலை, அதுவே தீவிரவாத எழுத்தானது அதனை புரிந்து கொள்ள வேண்டியது வாசகனின் வேலை என புரிய வைத்தார். வணிக எழுத்தாளன் வாசகனை நோக்கி வருபவன், தீவிர எழுத்தாளனை நோக்கி வாசகன் சென்றடைய வேண்டும். நாவல் என்பது ஆராய்ச்சி, விமர்சனம் மற்றும் மறுபரிசீலனை தன்மை கொண்டது. இவ்வாறே பல உலக நாவல் எழுதப்பட்டுள்ளதாக கூறினார். அடுத்தக் கட்டமாக நவீனத்துவ நாவல் வருகிறது. எதார்த்தவாத நாவல் என்பது ஒரு மனிதனை வரலாற்றில் வைத்து பார்க்கும். எதார்த்தவாத நாவல் நிஐத்தில் வாழ்ந்த அனுபவத்தை அல்லது சென்று வாழ்ந்த அனுபவத்தை கொடுக்கும். எழுதப்பட்ட நிலம் மட்டுமே வாழும் அல்லது நிறுவப்படும், எழுதப்படாத நிலம் காணாமல்/மறைந்து போகும். நாவலில் வரும் கதாபாத்திரம் வளரக் கூடிய நிலையில், தன்னியல்பாக தொடர்ந்த மாற்றத்தை காணும். நாவலை எழுதக் கூடிய காரணம் அல்லது கண்டடைய கூடிய இடம் மிக முக்கியம் என்றதுடன் ஒரு நாவலானது  வாசகனை அந்தத் தரிசனத்தை கண்டடைய அல்லது மறுபரிசீலனை செய்ய வைக்க வேண்டும் என்று கூறி அன்றைய உரையை முடித்து கொண்டார்.

‘இத்தனை பிரதி விற்கப்பட்டது; நீங்களும் வாங்குங்கள்’ என கூவி கூவி விற்கப்படுகிற புத்தகங்களைதான் இதுவரை நாவல் என்றிருந்த எனக்கு, அன்றைய நிகழ்வில் ஜெயமோகன் ஐயா அவர்கள் ஆற்றிய ‘நாவல் எனும் கலை’ என்கிற உரையானது இதுவரை நான் வாசித்தவைகளில் பெரும்பாலானவை நாவல்தானா என என்னையே நான் கேள்வி கேட்டுக் கொள்ளும்படி செய்திருந்தது. நாவல் என்பது என்ன? எப்படி ஒரு நாவல் தன்னை ஒரு கலையாக நிறுவிக்கொள்கிறது என்பதை வல்லினம் நடத்திய இந்த மூன்று நாள் இலக்கிய முகாம் வழி் அறிந்து கொண்டது மட்டுமல்லாது என் இலக்கிய அறிவை செதுக்கி பண்படுத்தியுள்ளது  என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இத்தகைய இலக்கிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த வல்லின குழுவிற்கு நன்றிகள் பல.

ஜெயமோகன் உரையின் காணொலி

1 comment for “நாவல் என்பது… முகாம் அனுபவம்

  1. சீ.முத்துசாமி
    January 4, 2020 at 5:44 pm

    எனது மலைக்காடு நாவல் குறித்து சு.வேணுகோபால் அவர்களின் விமர்சனத்தை ஒரு ‘ கறார்’ விமர்சனம் என்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது தவறு.

    ‘ கறார்’ எனில் அதில் எவ்வித ஓட்டைக்கும் அனுமதி இல்லை.அதிலும் தரவு சார்ந்த ஓட்டை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    அவரது ‘ கறார்” விமர்சனத்தில் அது ‘missing’.

    சான்று- பக்கம் 83 தொடங்கி பக்கம் 100. பக்கம் 221.

    விபரம் வேண்டுமெனில் எவரும் பதிவிடலாம்.

    நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...