21.12.2019 அன்று சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்தில் மூன்றாம் அமர்வாக நாட்டார் வழக்காற்றியல் பற்றி சு. வேணுகோபால் ஒரு சிறந்த தெளிவுரை வழங்கினார். சரியாக பிற்பகல் 2.30 மணியளவில் உரை ஆரம்பித்தது. எழுத்தாளர் சு. வேணுகோபால் அளித்த கடந்த உரைகள் அனைத்தும் கேட்கும் போதே நம் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் உராய்ந்து விட்டு செல்வதாகவே எனக்கு தோன்றியது. இவரின் உரையாற்றல் எனக்கு ஏற்படுத்திய அனுபவத்தை சொல்ல வேண்டுமென்றால், கண்களை மூடி கற்பனை செய்தால் ஒரு திரையில் பல உயிர் கோடுகள் ஒரே நேரத்தில் கலந்து பயணம் செய்வதை போல இருந்தது.
உரையை மிகவும் இலகுவாக கதையூடே ஆரம்பித்தார் எழுத்தாளர் சு. வேணுகோபால். முதல் இரண்டு நிமிடங்களுக்கு நாட்டார் வழக்காற்றியல் என்பதன் அர்த்தம் தெரிய ஆரம்பித்தது. அதாவது ஒரு இடத்தில் அல்லது ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் வழக்கங்கள் மற்றும் அவர்களின் மரபு செயல்களுக்கு பின் மறைந்திருக்கும் ஒரு எழுத படாத வரலாறு. சு. வேணுகோபால் ஆரம்பிக்கும் போதே ம. நவீனின் ‘பேய்ச்சி’ நாவலின் பேய்ச்சியம்மன் போன்ற பொள்ளாச்சியில் படுத்த வாக்கில் இருக்கும் கோனியம்மன் பற்றிய ஒரு சிறு துணுக்கோடு தான் ஆரம்பித்தார். கிராம தேவதைகளுக்கு மக்கள் குடியிருந்த நிலப்பரப்பில் பெரிய கோவில்கள் அமைத்திருப்பார்கள். அதாவது பெரிய கோயில்கள் முன்பொரு காலத்தில் எல்லாரும் ஒன்றாக இருந்த காலக்கட்டத்தில் திருவிழாக்கள் கொண்டாடும் பட்சத்தில் எல்லாரும் ஒன்றுகூடுவர். ஆனால் பிற்காலத்தில் அனைவரும் ஒன்றாக கூட முடியாமல் போன நேரங்களில் அந்த தாய்மண்ணிலிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தத்தம் ஊர்களில் வைத்து கொள்வதை பற்றி ஒரு சின்ன உதாரணத்தோடு விளக்கினார். அதாவது ஒரு நிலத்திலிருந்து ஒரு செடியைப் பிடுங்கி வேரோரு நிலத்தில் நடும்போது அச்செடியின் வேரில் பழைய நிலத்தின் மண் அந்த செடியின் வேரில் கண்டிப்பாக ஒட்டி இருக்கும். அதாவது பிடிமண்ணோடு தான் ஒரு செடியை பிடுங்கி வேரொரு இடத்தில் நடுவார்கள். வேர் அறுபடாமல் இருக்க அவ்வாறு செய்வார்கள். அப்படி நடப்பட்ட செடியும் செழிப்பாக வளரும். ஆக உறவு அறுந்து போகாத வண்ணம் இந்த பிடி மண் மரபு ஏற்பட்டது. இதை பற்றி கூறும் போதே வேணுகோபால் அவரின் ஊர் பற்றியும் சில விஷயங்களை சொன்னார்.
தொடர்ந்து தஞ்சை மக்களின் மனை கட்டும் போது அவர்கள் பின்பற்றும் ஒரு மரபை பற்றியும் கூறினார். அது அறிவியல் சார்ந்த அறிவாக இருந்தது. அதாவது அங்குள்ள மக்கள் வீடு கட்டும்போது ஒரு சதுர அடி அளவு ஒரு சின்ன குழி தோண்டி அதில் நீர் நிரப்பி வைத்து அது ஒரு பூ போட்டு ஒரு ஐந்து நாள் வரை காத்திருப்பார்களாம். அப்படி நீர் வற்றி விட்டாலோ அல்லது பூ நடுவில் நிற்காமல் இருந்தால் அங்கே வீடு கட்டமாட்டார்களாம். அப்படியானால் மண் கடினமாக இருந்தால் வீடோ அல்லது கட்டிடமோ கட்டுவதற்கு தோதான இடமாக இருக்கும். அதோடு பூ நடுவில் நிற்கவில்லையென்றால் அந்த இடம் சமனமாக இல்லை என்று அர்த்தம். அப்படி நீர் வற்றிவிட்டால் மண் பொதுபொதுவென்று உள்ளாதாகவும் அப்படி மீறி கட்டினால் கட்டப்பட்ட கட்டிடம் காலப்போக்கில் மண்ணில் பொதிந்து விடும். இப்படி பேசி கொண்டிருந்தவர், இந்த மரபு அறிவு எங்கிருந்து இம்மக்கள் எடுத்திருப்பார்கள் என்று வினா விடுத்து அவரே பதிலும் சொன்னார். நற்றிணையில் இப்படி ஒன்று இடம்பெற்றுள்ளதாகும் அக்கால மக்கள் அரண்மனை கட்டும்போது தெப்ப குளம் கட்டும் போதும் இப்படியான கட்டுமான நுணுக்கங்களை செயல்படுத்தியதாக கூறினார்.
இவர் இப்படி சொல்லிகொண்டே இருக்கும்போது எனக்கு எங்கோ எப்போதோ இது போன்ற ஒரு மரபு பற்றி ஞாபகம் வந்தது. அதாவது விவசாயிகள் விவசாய நிலத்தை வாங்க செல்லும் போது கையோடு ஒரு சேவலை எடுத்து செல்வார்களாம். ஒரு நாள் இரவு அந்த சேவலை நீண்ட கயிற்றோடு கட்டி வைப்பார்களாம். அந்த சேவல் வேளையோடு எழுந்து நிலத்தில் மண்புழுக்களை தேடி கொத்தி தின்றால் அந்த நிலம் விவசாயத்துக்கு ஏற்றது என முடிவு செய்து வாங்குவார்களாம். அப்படியானால் பயிர்கள் செழிப்பாக வளர்வதற்கு மண்புழுக்களின் முக்கியதுவத்தை அக்கால மக்கள் அறிந்து அதை மரபு வழக்காக கொண்டிருக்கின்றனர். அது மட்டுமின்றி கிணறு வெட்டுவதாக இருந்தாலும் இரு வார காலத்துக்கு மாட்டை திறந்த நிலத்தில் கட்டி வைப்பார்களாம். அந்த மாடு குறிப்பிட்ட ஒரு இடத்தில் திரும்ப திரும்ப படுத்து கொள்ளுமாம். அந்த குறிப்பிட்ட இடம் குளிர்ச்சியாக இருக்கும். அதை உணரும் அறிவு இயல்பாக மாடுகளுக்கு உண்டென்பதை விவசாயிகள் அறிந்து அதை மரபாக்கியுள்ளனர். இப்படியாக ஒரு நிலப்பரப்பின் மக்களில் உறைந்திருக்கும் மரபுகளுக்கு அப்பால் சொல்லப்படாத வரலாறு உண்டென்பது பல முறை அறிவை உரசி சென்றது.
தொடர்ந்து அவர் ஒரு இடத்தில் நெற்கதிர்களை அறுவடை செய்து அவற்றில் சிலவற்றை கூந்தல் கொண்டை போடுவது போல் அதன் உச்சியில் கொண்டை போட்டு கொத்து கொத்தாக வைப்பதைப்பற்றி கூறினார். அதை வேணுகோபால் பார்த்து ‘ஏன் அப்படி?’ என்று விசாரித்த போது அப்படி கொண்டை போட்டு வைத்த கதிர்கள் அடுத்த பயிரிடுதலுக்கான விதை மணிகள் எனவும் அவற்றை திருடர்களும் திருடாமல் இருப்பதற்கான ஒரு குறிப்பறிதல் என அவருக்கு சொல்லப்பட்டதாகவும் சொன்னார். திருடர்களும் இந்த குறிப்பறிந்து அந்த கதிர்களை திருட மாட்டர்கள். அப்படியே களவு போயிருந்தால் ஊரில் வெளியூர் திருடர் புகுந்து விட்டான் என்பதற்கான அறிகுறி என எடுத்து கொள்ளலாம் என அவர் சொல்லாமலேயெ எனக்கு புரிந்தது. இதை சார்ந்து இன்னொன்றும் சொன்னார். அதாவது ஒரு ஊரில் கைம்பெண்கள்களுக்கு காணி நிலம் ஒதுக்கி வைப்பார்களாம். அவர்களின் நிலத்தில் திருடர்கள் கூட நுழைய மாட்டார்களாம். இதன் காரணம் என்ன என்பது பல விஷயங்கள் இடைவிடாது கேட்டதால் என் நினைவில் தட்டு படாமல் போய் விட்டது.
மேலும் ஒரு மரபை வேணுகோபால் சொன்னார். தூக்கணாங்குருவி கூடு கட்டுவதை பார்த்து அன்றைய மழை வரும் திசையை மக்கள் அனுமானிப்பார்களாம். தூக்கணாங்குருவி கூடை பல பார்த்திருப்பீர்கள். அதன் வாயில் நேராக அமைந்திருக்கும். சில காலங்களில் அந்த குருவிகள் தெற்கு பார்த்து அமைந்திருக்கும். சில காலங்களில் வடக்கு பார்த்து அமைந்திருக்கும். அப்படி தெற்கே குருவி கூட்டின் வாயில் அமைந்திருந்தால் அந்த பருவகாலத்தில் வடக்கே பெருமழை வருமாம். அப்படி கிழக்கு பார்த்து வாயில் அமந்திருந்தால் அன்றைய பருவ காலத்தில் மேற்கே மழை வருமாம். அப்படியானால் மக்களில் எவனோ ஒருவன் வேலைவெட்டி செய்து கொண்டே பல காலமாக இந்த குருவிகளின் செயல்களை கவனித்து கொண்டே இருந்திருக்கிறான். அதை உணர்ந்தும் இருக்கிறான். அதை பார்த்து தன் வழிதோன்றல்களுக்கும் தன் இனத்தாருக்கும் சொல்ல அவர்கள் அதை வழக்கமாக்கி பின் மரபாக்கி இருக்கலாம். அப்படியானால் இயற்கையை கண்டடைவதே சில மரபு தரும் ஞானமாகிறது போலும்.
உரையின் நடுவில் இன்னுமொரு விஷயத்தை எழுத்தாளர் வேணுகோபால் சொன்னார். அதாவது குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்தவர் அவர்களில் புதிதாய் திருமணமான ஜோடிகள் தஞ்சை கோயிலருகில் வந்து ஒரு வழக்கத்தை செய்வார்களாம். அது என்ன வென்றால் மணமகன் மண்ணை அள்ளி மணப்பெண்ணிடம் கொடுப்பது போல பாசாங்கு செய்வானாம். அதை கூடையில் வாங்கி தலை மேல் வைத்து சிறிது தூரம் சென்று கொட்டுவது போல அம்மணப்பெண் பாசாங்கு செய்வாளாம். இது அந்த குறிப்பிட்ட சமூகத்தினிடையே வழக்கமாக கொள்ளப்பட்டுள்ளதாம். இதன் அர்த்தம் என்னவென்றால் தஞ்சை கோயில் கட்டும் போதும் இந்த குறிப்பிட்ட சமூகத்தினர் தாங்களும் தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர் என்னும் எழுதப்படாத வழக்கத்தை தம் வழித்தோன்றல்களுக்கு நினைவு படுத்துகின்றனர். இதை கேட்டு கொண்டே இருக்கும்போது எனது நினைவு சரவாக்கில் வாழும் பெனான் (Penan) இன மக்களின் பாரம்பரியத்தை நோக்கி சென்றது.
பெனான் இன மக்களை பாராம் (Baram) பகுதிகளில் பெருவாரியாக காணலாம். இவர்களுக்கு எழுத்து முறைகள் இன்றளவும் கிடையாது. படிப்பறிவு கொண்டவர்கள் மிகவும் குறைவு. கடந்த வருடம் தான் முதல் முறையாக ஒரு பெண் மாணவி பட்ட படிப்பை மேற்கொண்டார் என கேள்வி பட்டேன். அவர்களிடையே காடு சார்ந்த இயற்கை சார்ந்த ஞானம் தலைமுறை தலைமுறையாக மரபு வாயிலாக கடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக அவர்களின் வரைகலை என்பது இயற்கை சாயங்களால் ஆனது. அதை எழுத்துமுறை இல்லாமல் காலங்காலமாக தங்கள் தலைமுறைகளுக்கு கடத்தி வருகிறார்கள். இதற்குறிய சில மரபுகளை தங்களுக்குள்ளே அவர்கள் பின்பற்றி வந்திருக்கலாம்.
இப்படியாக வேணுகோபால் பல வழக்கங்களை முன்வைத்தார். சொல்லப்போனால் குறுகிய நேரத்தில் தொடரி போல பல கருத்துக்கள். நாட்டார் வழக்காறியல் என்பது ஒரு காரணத்துக்காக வரலாற்று உண்மையோடு கலந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இது அவநம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. இறுதியாக அவர் சொன்ன ‘இயற்கையில் தன்னை மனிதன் இன்னும் கண்டைடைய முயற்சி செய்கிறான்’ என்னும் கரு இன்னும் என் நினைவில் அலைமோதுகிறது.