கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சிறுகதைப் பட்டறையே நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்ச்சி. அதற்குப்பின் வல்லினக் குழு நடத்திய எந்தக் கலந்துரையாடலையும், நிகழ்ச்சியையும் தவர விட்டதில்லை. அப்படிதான் இந்த முகாமிலும் வல்லினத்துடனான எனது இலக்கியப் பயணம் நான்காவது முறையாகத் தொடர்ந்தது. சிறுகதைப் பட்டறையில் என்னை ஓர்இலக்கிய வாசகியாக உருவகித்துக் கொண்ட நான் இலக்கியத்தின் பல முகங்களையும் பல வகைமைகளையும்கண்டறிய இந்த முகாம் வழியமைத்தது.
ஜெயமோகன், சு.வேணுகோபால், சாம்ராஜ், அருண்மொழி என இலக்கிய உலகின் மிக முக்கியமான ஆளுமைகளின் உரைகளால்அமைந்த இந்த முகாமின் ஒவ்வொரு நிமிடமும் திகட்டாதவை. ஊட்டி முகாமில் பெரும் இலக்கியக்கூட்டத்துக்கு நடுவே தூரத்திலிருந்து பார்த்த ஜெயமோகன் அவர்கள் இந்த முகாமில் இன்னும் தூரமாகத் தெரிந்தார். இலக்கியத்தில் யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத அவரது படைப்பை, ஆற்றலை, அறிவை அறிந்து கொண்டதால் அப்படி.
அவர் ஆற்றிய அத்தனை உரைகளும் எனக்கு முக்கியமானவை. நவீன இலக்கிய உலகின் பல்வேறு திசைகளை இன்னமும் சரியாகப் புரிந்துக்கொள்ளாத வாசகியாகிய எனக்கு, அவர் ஆற்றிய தற்கால உலக இலக்கியம் என்ற உரை மிக முக்கியமானது. அதை அவர் எல்லோருக்கும் புரியும்படி மிக எளியமையாக சொன்னதுதான் வியப்பு.
தலைப்புக்கும்சபையினருக்கும் அவசியப்படும் தகவலை எவ்வளவு சுருக்கிச் சொல்ல முடியுமோ அவ்வளவே சொல்லியது அவரைத் தனித்துக் காட்டுகிறது. தற்கால உலக இலக்கியத்தை நம் மலேசிய சூழலோடு பொருத்தி நான்கே சிறு தலைப்புகளில் அறிய முடிந்தது. கலாச்சார பன்முகத் தன்மை (cultural pluralism), பண்பாட்டுச் சிக்கல் (diaspora writing), கூட்டு இடப்பெயர்ச்சி(exodus writing),விளிம்பு நிலை மக்களின் எழுத்து (margalisedwriting) எழுத்து ஆகிய நான்கு சிறு தலைப்புகளுக்குள் தற்கால உலக இலக்கியங்களை நம் மலேசிய சூழலுக்குள் அறிய முடிந்தது.
மலேசியா போன்று பல்லின மக்கள் கூடி வாழக்கூடிய சூழலில் உருவாகும் மனநிலையைக் காட்டும் படைப்புகளே பன்முக கலாச்சார தன்மையுடையதாக சொல்லப்படுகிறது. அப்படி பல்லின மக்களின் கலாச்சாரத்தை ஓர் ஒப்பீட்டின் அளவில் தூக்கியும் தாழ்த்தியும் பேசுவதல்ல இவ்வகை படைப்பு.நம்மைச் சுற்றி இருக்கும் இன்னொரு பண்பாட்டோடு உரையாடி அதைப் புரிந்து கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் கலாச்சார பண்முகத் தன்மைக் கொண்ட இலக்கியமாகிறது. ஒப்பீட்டளவில் ஒரு மேட்டிமைத் தனத்தையும் அதற்குள்ளிருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் கிளரக்கூடிய படைப்பு நம் வாய் நாற்றத்தைவிடவும் அபத்தமானதென ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார்.புலம் பெயர்ந்த நாடுகளின் அடிமைத்தனத்திலிருந்து நம்மைத் திரட்டிக் கொள்ள போராடிய காலம் கடந்து விட்டது. எனவே, இந்த 21-ஆம் நூற்றாண்டில் அவை அவசியமற்றது.கடந்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகள் பெரும்பாலும் இத்தகைய மேட்டிமைத் தனத்தையும் முரண்பாடுகளையும் தொட்டே எழுதப்பட்டிருக்கிறது. அதனால் உலக இலக்கிய வகைமைகளில் நாம் இழந்திருப்பதையும் அவரின் உரையில் அறியமுடிந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளின் ரயில் நிலையத்தில் நிற்கின்ற ஒற்றைத் தருணமே இந்த உலகின் ஒட்டு மொத்த இனத்தையும்அறிவதற்குப் போதுமானது என்றார்.பண்பாடுகளால், கலாச்சாரத்தால், மதங்களால் பல பல வண்ணங்களை படைப்புக்குள் ஏற்றி ஒரு பன்முகத் தன்மையைஉருவாக்கி வைப்பதே இன்றைய உலக இலக்கியத்தில் அவசியமாகிறது.நம் மலேசிய சூழலின் இத்தகைய தன்மை கொண்ட படைப்புகள் எவ்வளவு சாத்தியம் என்பதையும் அது எவ்வளவு அவசியம் என்பதையும் திறந்து காட்டியிருக்கிறார் ஜெயமோகன் அவர்கள்.
எனவே,கலாச்சார தூய்மைவாதத்திலிருந்து வெளியே செல்வதுதான் இந்தக் கலாச்சார பன்முகத்தன்மையாகிறது. அது பல வண்ணங்களில் நம்மையும் ஒரு வண்ணமாக்கி இரசிக்கக் கற்றுத்தருகிறது. இது போன்ற படைப்புகளைப் படைப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் கலாச்சார பன்முகத் தன்மையின் அர்த்தம் சார்ந்த புரிதல் அவசியமாகிறது.
தமிழ்நாட்டிலிருந்து மலேசிய இலக்கியத்தை படிப்பவர்களுக்கு அந்த இலக்கியம் மலாய் அல்லது சீன மக்களைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை அல்லது சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா என்ற கேள்வியை அவர் முன் வைத்தார். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரு கலாச்சார பரிமாற்றம் நிகழாததற்கு இது போல தன்மைகளை உள்வாங்காத இலக்கியத்தைக் காரணமாக முன் வைத்தார்.அமெரிக்கவில் விருது பெற்ற கதைகளின் தொகுப்புகளைப் புரட்டினோமானால் அதில் அமெரிக்கனின் பெயர்களே மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. அதில் வரக்கூடிய பெயர்கள் எல்லா இனத்தையும் காட்டக்கூடியதாக இருக்கிறது என்றார்.தமிழன் பெருமையை உயர்த்திப் பிடித்தவர் இவர் என்ற பெருமிதமென்பது எழுத்தாளனுக்கான வசை என புதிய கோணத்தில் இலக்கியத்தை அணுகக் கற்றுக் கொடுத்தார். ஒரு அண்ணன் தங்கை உறவுக்குள்ளான பாசம் பற்றிய அறிதல் ஒரு அமெரிக்கனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி அது போல நம்மிடம் இல்லாத ஏதோ ஒரு சிறப்பு மற்றவரிடம் இருப்பதைச் சொல்ல முடியுமென்றால் அதுதான் பன்முக கலாச்சார தன்மையுடைய உலக இலக்கியமென கூறினார்.
அடுத்த நிலையில் உலக இலக்கியமென அவர் குறிப்பிட்டது பண்பாட்டுச் சிக்கல் சார்ந்த படைப்புகளைதான்(diaspora writing). அடிப்படையில் பண்பாட்டால் உருவான மனமும் அதன்படியே உருவாகக்கூடிய ஆழ்மனமும் இச்சிக்கலுக்கு அடிப்படைக் காரணிகளாகின்றன. இப்படிப் பழக்கப்பட்ட ஒரு மனம் முழுதுமே அந்நியமான ஒரு பண்பாட்டுக்குள் செல்லும்போது எதிர்நோக்கும் சிக்கலைப் பேசுவதே இவ்வகை இலக்கியம். அவை பெரும்பாலும் அந்நிய மண்ணில் உருவாகும் சிக்கல். தாலியைக் கழட்டி வீசும் செயல் நமக்கு ஏற்படுத்தும் மனநிலை இன்னொருவனுக்கு ஏற்படுவத்துவதில்லை. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்து கொள்ள விரும்புவது அமெரிக்காவைப் பொருத்தவரை சாதாரணம் அதுவே ஒரு இந்திய தாய்க்கு அது அவ்வளவு சுலபமல்ல. அது அவரை வேறுநிலையில் பாதிக்கும். இந்தியாவிலிருந்து வேறு நிலம் சென்ற குடும்பங்கள் அதிகம். அத்தகைய சூழலில் ஓரின சேர்க்கை,குழந்தைகளுடைய விவாகரத்து பெற்றோருக்கு ஏற்படுத்தும் சிக்கல் என சில சிக்கல்களை கோடிட்டுக்காட்டினார்.இந்திய பண்பாட்டில் ஊரி வளர்ந்தவருக்கு இவை ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பதைக் காட்டக்கூடியவைதான் இவ்வகை இலக்கியம். பண்பாட்டுச் சிக்கல் என அவர் குறிப்பிடுவது ஏற்கனவே நம் புரிதலில் இருக்கும் மொழி, உடை, என சராசரியான பண்பாட்டுச் சிக்கலை அல்ல. அதற்கு அப்பால் இருக்கும் ஒரு புதிய வாழ்க்கை முறையைப் பற்றியது.
ஒழுக்கச் சிக்கல், அறச் சிக்கல், தத்துவார்த்த சிக்கல் என மூன்று நிலை சிக்கல்களை வகைப்படுத்தினார் ஜெயமோகன்.பொதுவாக இந்த மூன்றுக்குமிடையில் பெரிதாக வேறுபாடுகள் இருப்பதில்லை என்ற எனது புரிதலை ஜெயமோகனின் இந்த உரை முழுமையாக மறுத்தது. காலத்துக்கும் இடத்திற்குமேற்ப மாறக்கூடியது அறம். ஒழுக்கமும் ஒரு விதத்தில் அப்படிதான்.ஒரு நிலத்தில் ஒரு மனிதனின் அடிப்படையான வாழ்வை சார்ந்தது அறம். அது ஒரு திட்டவட்டமான வரையறைக்குள் நிரந்தரமாக நிறுத்தி வைக்க முடியாதது. தலைமுடியை மடிக்காத பெண்களையும், படித்து வேலைக்குச் சென்ற பெண்களையும் ஜாதி பிரதீஸ்ட்டை செய்த ஒரு காலம் இருக்கிறது. ஆனால் அப்படி செய்தவர்கள் அவர்களின் வாழ்நாளிலேயே அதை கடைப்பிடிக்காத இன்னொரு காலமும் இருந்திருக்கிறது. ஆனால் தத்துவார்த்த சிக்கல் என்பது ஒரு ஒட்டுமொத்த மனித குலத்தின் சிக்கல். இந்த வேறுபாட்டைக் கண்டடையக்கூடிய இடமாகத்தான் உலக இலக்கியங்கள் இருக்கின்றன.எனவே, கலாச்சார பன்முகத்தன்மையை உணர்ந்தவர்களால் மட்டுமே இந்தப் பண்பாட்டுச் சிக்கல் சார்ந்த படைப்புகளைச் சிறப்பாக எழுத முடியும் என்றார். புலம்பெயர்ந்த மக்களால் மட்டும்தான் இவ்வகை இலக்கியங்கள் அதிகம் சாத்தியமாகின்றது. ஆனால் அவர்களை இழிவுபடுத்துவதற்கான ஒரு ஊடு பொருள் அல்ல. இந்த உலகின் பல்வேறு வண்ணங்களில் தன்னையும் ஒரு வண்ணமாக நினைக்கத்தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும் இவ்விலக்கியம். அந்த வகையில் புலம்பெயர்ந்த வாழ்க்கையை மிக ஆழமாக எழுதியவர் அ.முத்துலிங்கம் என்றார். இதன் வழி இலக்கியத்தில் நாம்வாசிக்க வேண்டிய முக்கியமான ஆளுமையை அடையாளம் காட்டியுள்ளார்.
அடுத்ததாக ஜெயமோகன் அவர்கள் பேசியது கூட்டு இடப்பெயர்ச்சி சார்ந்த இலக்கியம்.(Exodus writing)மோசஸ் தன்னுடைய சுமேரியர்களை எகிப்தின் பரோவின் ஆட்சியிலிருந்து பூர்வக்குடி நிலம் நோக்கி அழைத்துச் சென்றபோது கடல் பிழந்து வழிவிட்டதையும்அப்போது உணவு வானிலிருந்து பொழிந்ததையும் இவ்வகை இலக்கியத்தின் தொன்மமாகவும் தொடக்கமாகவும் கூறினார். ஆம்,ஓர் ஒட்டு மொத்த இனமே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதையே இவ்விலக்கியம் காட்டுகிறது. ஒரு வகையில் இதை நான் வரலாற்றுப் பதிவாகவே புரிந்து கொள்கிறேன்.யூத இனம் முழுமையாக ஐரோப்பா நோக்கி சென்றதையும் ஐரோப்பாவிலிருந்து இஸ்ரேய்ல் நோக்கி சென்றதையும் ஒரு கூட்டு இடப்பெயர்ச்சி என்றே குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இதுசார்ந்த ஏகப்பட்ட படைப்புகள் இருக்கின்றன எனவும் அவை ஒரு காவியத் தன்மையுடையதாக இருக்கும் எனவும் கூறினார். இது போன்ற படைப்புகள் நம்மிடம் உள்ளதா என்ற கேள்வியை முன்வைத்து, 25 ஆண்டுகளுக்கு முன்னர்சு. வேணுகோபால் அப்படி ஒரு படைப்பை எழுதுவதாக உறுதியளித்துள்ளதை மீண்டும் சபையில் அவருக்கே நினைவூட்டினார் ஜெயமோகன்.
சைராஸ்ட்றாவில் இருந்து பெரும் திரலாக வந்து தமிழகத்தில் குடியேறிய வரலாறு இருக்கிறது. அதை இதுவரை யாரும் எழுதவில்லை. ஆனால், ஐரோப்பாவில் நிகழ்ந்த கூட்டு இடப்பெயர்ச்சிகள் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார். மேலும் தெலுங்கு, கன்னடக் குடியேறிகள் உருது குடியேறிகள் என தமிழில் எழுதுவதற்கு ஒரு பெரிய உலகம் உள்ளதை அவர் வருத்தத்துடன் சுட்டிக் காட்டினார். அதை நாம் நம் குடும்பத்திலிருந்து எழுதத் தொடங்கலாமெனவும் அதற்கு ஆய்வும் உழைப்பும் அவசியமென கூறினார். இதன்வழி எழுத விரும்பும் ஒரு இளம் தலைமுறையினருக்கு அதிகம் பயணப்படாத ஒரு புதிய சாலையை கைக்காட்டுகிறார். மலேசியாவில் இனிமேல்தான் இது போல எழுத வேண்டும்என்ற ஒரு வரியில் அதன் இல்லாமையையும் அதன் தேவையையும் நமக்குச் சொல்லியிருக்கிறார்.
இறுதியாக மார்ஜலைஸ்ட் எழுத்து(margalised writing). என மேலுமொரு புதிய புரிதலையும் தந்தார். நாம் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் ஒடுக்கப்படுகிறோம். ஆனால் இது அதுவல்ல. மைய சமூகமென்ற வரையறைக்குள்ளிருந்து வெளியே நிற்பவர்கள். அப்படி வெளியெ நின்று அதற்குள் செல்ல முயற்சி செய்பவர்களும், வெளியே நிற்பதால் அவர்கள் எதிர்க்க நினைப்பவர்களுமென இருவகையிலான விளிம்பு நிலை மக்களை ஜெயமோகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். அகதிகள், ஓரின சேர்க்கை என, கொலை கொள்ளை கும்பல், வீடுகளற்றவர்கள், நெறிகளால் கட்டப்படாதவர்கள் என இந்த வகை இலக்கியத்துக்குரியவர்களைப் பட்டியலிட்டுக்காட்டினார். அதேபோல அத்தகைய விளிம்பு நிலை மக்களுக்கான சில சூழலையும் உரையில் கோர்த்துச் சொல்லியிருந்தார். அமெரிக்காவில் வாழும் வீடற்றவர்கள் (homeless) பெரும்பாலும் போதை அடிமைகள்.அவர்களைக் கட்டுப்படுத்த 100 சதவிகிதம் பொது போக்குவரத்து இல்லாத சில நகரங்கள் உள்ளன. இதன்வழி நடந்து மட்டுமே போகக்கூடிய சூழலை உருவாக்குகிறது அரசாங்கம். இப்படியாவனவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உணவு கூப்பன் பற்றியும் அதைவிற்று போதைப்பொருள் வாங்கக்கூடிய சூழலையும் அறிய முடிந்தது.எனக்கு இது புதிய தகவல்.மலேசியாவிலும் இப்படியான சூழலைப் பார்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றார். எனவே, அப்படியான இலக்கியங்களும் இங்கு சாத்தியம்தான்.
அப்படி அவர் மலேசியாவில் சந்தித்த விளிம்பிநிலை மக்களுடனானஅனுபவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.தன் கையால் சமைத்து உணவிட்ட பிறகு தன்னால் இனி கொலை செய்ய முடியாது என்ற ஒரு குற்றப்பிண்ணனியைக் கொண்ட மாணவனின் குரலை அவர் அரங்கில் பதிவு செய்தார். இதன்வழி விளிம்பு நிலை மக்களை ஒரு உயரிய அறத்தின் மூலம் மீண்டும் மைய மக்களோடு இணையக்கூடிய ரகசிய பாதையைக் காட்டுகிறார் ஜெயமோகன்.ஒடுக்கப்பட்டவர்களின் எல்லா கதவுகளும் மூடப்படும்போதுதான் இந்த விளிம்பு நிலை சமூகம் உருவாகிறது. எனவே, இவர்களை எழுதுவதற்கு ஒரு தனி பார்வை இருக்கும் பட்சத்தில் நம் மலேசியா நாட்டின் பிரம்மாண்டமானஉலகம் எழுத்தில் சாத்தியப்படும் என்றார்.எனினும்,விளிம்புநிலை மக்களின் காமத்ததையும் வன்மத்தையும் மட்டுமே எழுதி அதையே மார்ஜலைஸ்ட் எழுத்தென நம்பவைக்கக்கூடிய படைப்புகளும் இருக்கின்றன என்றார்.ஆனால் உண்மையில் அதுவல்ல மார்ஜலிஸ்ட் எழுத்து. பாலியலும் வன்முறையும் இருந்தாலும் அதில் அந்த மக்களுக்கும் மட்டுமே உரித்தான மனநிலை, தனித்தன்மை இருப்பது அவசியம். அவர்களைப் புரிந்து கொள்ளக்கூடிய பார்வையை அந்த இலக்கியம் உருவாக்க வேண்டும். எனவே, அப்படி ஒரு மார்ஜலைஸ்ட் எழுத்துக்குறிய காலம் இது, அது மலேசியாவிலும் உருவாக வேண்டும் என்ற தன் எண்ணத்தை முன் வைத்த நம் இலக்கியத்திற்கான புதிய வாசல்களைக் கைக்காட்டினார்..
இப்படி மலேசியாவில் நாம் போக வேண்டிய தூரத்தையும் அதன் பாதைகளையும் மிக பக்கத்தில் நின்றுகாட்டிச் சென்றுவிட்டிருக்கிறார் ஜெயமோகன். நாம் கடந்து வந்த பாதைகளைக் கொண்டே நம் வரலாற்றைக் கொண்டே நம் தற்கால சூழலைக் கொண்டே எழுத வேண்டிய பெரும் உலகத்தை அடையாளம் காட்டியுள்ளார். தற்கால உலக இலக்கியம் சார்ந்த இந்த உரை புதிய படைப்புகளைத் தூண்டுகின்ற அதே வேளை பல நல்ல படைப்புகளை அணுகுவதற்கான பார்வையைக் கற்றுத்தந்துள்ளது. இப்படி உலக இலக்கியத்தில் கண்டடைய வேண்டிய தற்கால சூழலையும் அதன் தன்மைகளையும் புரிதலுக்குத் தந்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி.
ஜெயமோகனின் உலக இலக்கியம் காணொலி
மிகவும் ஆழ்ந்த கேட்டலின் அசல் மாறாதப்படைப்பு.
Vaalthukkal. Tanggalin pathivu migavum sirappaaga ullathu.
ஜெ’உடைய உரையை எழுத்துவடிவம் கொண்டுவர சிறந்த கிரகித்தல் தன்மை அவசியம் என்றுதான் சொல்வேன். மிக நுண்ணிய இலக்கிய அறிவு கொண்டவர்களால் மட்டுமே உரையின் ஆழத்தை சத்தமில்லாமல் ஈர்த்துக்கொள்ளமுடியும். ஒரு பார்வையாளராக இருந்து ஜெ’யின் உரையின் ஆழ்ந்த கருத்துகளை அப்படியே கொண்டுவருவதென்பது சவாலான காரியமே. அதை பவித்ரா திறம்பட செய்துள்ளார். சபாஷ்.
இந்த உரையின் காணொலியினை இரண்டுமுறை கேட்டுவிட்டேன், இருந்தபோதிலும் யோசிப்பேன், என்னவெல்லாம் சொன்னார் என்று..! மறுமுறை கேட்கிறபோது அதன் அர்த்தங்கள் மற்றொரு சங்கதியினை நம்மிடம் பேசும்.
ஆழமான சங்க/நவீன இலக்கியப் பார்வைகளைப் பகிர்வதோடல்லாமல், வாழ்வியல் அம்சங்கள், உலக இலக்கியப்போக்குகள், நிதர்சன வாழ்வின் அறம் சார்ந்த பண்புகள், மனிதகுல மேம்பாட்டிற்கான சிந்தனை மாற்றங்கள் என நமது மனதிற்குள் புகுந்து நம்மை நிலைகுத்தச் செய்யும் அவரின் உரை. பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரது உரையினை கேட்கின்ற வாய்ப்பு கிடைத்தபோது, பெரும்பாலும், மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற கருத்துகள்தான் மீள்பதிவாக நம்மைச் சலிப்புறச் செய்யும் என்பதனை உணர்ந்துள்ளேன். ஆனால் ஜெ’வின் உரை அப்படியல்ல. பிரமிப்பாக உள்ளது, ஒரு மனிதனின் மூளைக்குள் இவ்வளவு விஷயங்களா என்று..!