கேள்வி: தமிழ் நூல்கள் குறைவாக விற்பனையாகும் சூழலில் ராயல்டி கேட்பது முறையா?
கே.பாலமுருகன் : மலேசியாவில் தமிழர்கள் சிறுபான்மையினர்தானே, பிறகு ஏன் உரிமையைப் பற்றி பேச வேண்டும் அதனைக் கேட்க வேண்டும். வாருங்கள் அனைவரும் காலம் முழுக்க அடிமைகளாகவே இருக்கலாமா? விற்பனையின் அளவு பொருத்தோ எண்ணிக்கையைப் பொருத்தோ உரிமைகள் தீர்மானிக்கப்படுவதில்லை. எப்படியிருப்பினும் ராயல்டி என்பது தனி ஒரு எழுத்தாளனின் உரிமையாகும். அது 100 வெள்ளியாக இருந்தாலும் அல்லது 10 வெள்ளியாக இருந்தாலும் அதனை கேட்பது அவருடைய உரிமை . அந்த சொர்ப்பமான தொகையைக் கேட்பது தவறாகாது.
தயாஜி : 10 நூல் விற்பனையானாலும் அதில் ஓர் எழுத்தாளனின் உழைப்பும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாதபோது குறைவு அதிகம் என்கிற கணக்கெல்லாம் மகா அபத்தம்.
கேள்வி: உங்கள் கதைகள் நூலாக்கம் பெருவது உங்களுக்கு அங்கீகாரம் தானே. அப்படி இருக்க அதில் முரண்பட்ட காரணம் என்ன?
அ.பாண்டியன்: கதைகள் நூலாக்கம் செய்வதும் அதனைத் தொகுப்பதும் நல்ல காரியம்தான், ஆனால் அதைப் பதிவுப்பெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கம் செய்த விதத்தில் சட்ட ரீதியிலான சிக்கல்கள் உள்ளன என்பதுதான் எங்கள் வாதம்.
கே.பாலமுருகன்: என் கதைகள் நூலாக்கம் பெறுவது அங்கீகாரம் என எப்படிச் சொல்ல முடியும்? எந்த நூலில் எப்படி நூலாக்கம் பெறுகிறது என்பதுதான் முக்கியம். உங்களைப் பிரபலமாக்குகின்றோம் எனச் சொல்லி எழுத்தாளனை விலைக்கு வாங்கும் தொலைகாட்சிகளுக்கும், உங்களை அங்கீகரிக்கின்றோம் எனச் சொல்லி அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்காமல் அடிமையாக்கும் எழுத்தாளர் இயக்கங்களுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தோன்றவில்லை.
கேள்வி : இதுகுறித்து பத்திரிகையில் சங்கம் அறிவித்தபோதே நீங்கள் மறுத்திருக்கலாமே?
தயாஜி: பத்திரிகையின் வழி சங்கம் யாருக்கு அறிவிப்பு செய்தது? தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அதனைச் செய்திருக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சியோடு நேரடியாகத் தொடர்புடைய எங்களைத் தனித்தனியாக அல்லவா அவர்கள் தொடர்புக் கொண்டிருக்க வேண்டும். அந்த மரியாதையைக்கூட முறையாகச் செய்ய முடியாமல் என்ன பெரிய அறிவிப்பு?
கே.பாலமுருகன் : நாங்கள் எல்லாம் அந்தப் பத்திரிகை செய்தியைப் பார்த்திருப்போம் அதன் மூலம் அறிந்திருப்போம் என சங்கம் நினைத்திருக்கக்கூடும். என்ன ஒரு பச்சைப்பிள்ளைத்தனம். தலைவர் ஞாயிறு பொறுப்பு ஆசிரியராக உள்ள பத்திரிகையில் மட்டும் வந்தால் அது நாட்டுக்கே அறிவிப்பா என்ன? அவர்களுக்கு பொதுவான ஒரு இதழ் இல்லாத பட்சத்தில் கடிதம் எழுதி அனுமதி பெருவதுதான் முறை.
கேள்வி : எப்படியும் உங்களுக்கு சன்மானம் வழங்கினார்களே. அது போதூமானது இல்லையா?
அ. பாண்டியன் : நாங்களாகப் போட்டியின் விதிமுறைகளை அறிந்து கதையை அனுப்பினால், அவர்கள் கொடுப்பது பரிசுத்தொகை என்று சொல்லலாம். இது அவர்களாக எங்கள் கதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக்கி விற்பனை செய்கிறார்கள். உங்கள் வீட்டுத் தோட்டத்திலுள்ள பசு மாட்டின் பாலைக் கறந்து அதனைப் புட்டியில் அடைத்து விற்று உங்களுக்குப் பரிசுத்தொகை கொடுத்தால் சரியாயிடுமா?
தயாஜி : விற்கப்படும் ஒவ்வொரு நூலுக்கும் அதில் எங்கள் உழைப்பு இருப்பதால் அவர்கள் வழங்க வேண்டியது சன்மானம் அல்ல, ராயல்டி. எங்கள் கதைகளுக்கான உரிமத்தொகை. அது பரிசுத்தொகை அல்ல என்பதை எல்லோரும் உணர வேண்டும். ஒரு உதாரணத்திற்கு இந்நாட்டில் இசையை வளர்க்கிறேன் எனக்கூறி யாரோ ஒருவரின் ஆல்பத்தை திருட்டு சிடியாக பதிவு செய்து விற்றால் பாராட்டுவீர்ளா?. இங்கு அதுதான் நடந்துள்ளது.
கே.பாலமுருகன் : ஆமாம். திருட்டு விசிடி விற்றால் குற்றம் கதையைத்திருடி விற்றால் குற்றம் இல்லையா?
கேள்வி : சங்கம் மன்னிப்பு கேட்டு போட்டியையும் புத்தக விநியோகத்தையும் நிறுத்திய பிறகும் சட்ட நடவடிக்கை எடுக்க முனைவது சரியா?
கே.பாலமுருகன்: இல்லை. உண்மையில் மன்னிப்பு எல்லாம் கேட்க வில்லை. நீங்கள் குறிப்பிடும் அறிக்கை ஒர் அறிவிப்பு மட்டும் தான். உரிமம் குறித்து தயாஜி என்கிற எழுத்தாளர் கேள்வி கேட்டுவிட்டதால் நாங்கள் சங்க நடவடிக்கைகள் பலவற்றை நிறுத்திக்கொள்கிறோம் என்கிற ஒரு அறிவிப்பு. அவ்வளவுதான். அதோடு அவர்களிடம் தவற்றை ஒப்புக்கொள்ளும் தார்மீகம் தென்படவில்லை. உரிமையைக் கேட்டதற்காக தனியொரு எழுத்தாளனை அவதூறு செய்வது எந்த விதத்தில் நியாயம்?
தயாஜி: ‘உழைப்புச் சுரண்டல்’ என்ன கெட்ட வார்த்தையா? எங்களின் உழைப்பைப் பயன்படுத்தியமைக்கு எந்த உரிய மரியாதையும் உரிமையும் வழங்காமல் சங்கம் தொடர்ந்து நூல்களை விற்பனை செய்து பணம் பெறுவதை என்னவென்று சொல்லலாம்? சகோதரத்துவம்? பாசம்? அப்படியென்றால் சங்கத்திலுள்ள பணத்தை அதே சகோதரத்துவ அன்புடன் எங்களின் கணக்குகளுக்கு இடம் மாற்றம் செய்ய முடியுமா?
பாண்டியன்: பாலா சொல்வது சரி. எழுத்தாளர் சங்கம் உரிமம் தொடர்பான உண்மையை ஒரு மாற்று கருத்தாக சிந்திக்கவே இல்லை என்பது அவர்களின் அறிக்கையை ஊன்றி கவனித்தால் தெளிவாக தெரியும். அவர்களைப் பொருத்தவரை உரிமம் குறித்த தயாஜியின் குரல் ஒரு தூற்றுதல், அல்லது கலகம் ஏற்படுத்தும் தீய என்னதோடு முன்னெடுக்கப்பட்ட முயற்சி. அதனால்தான் அந்த அறிக்கை நேரிடையாக தயாஜியை சாடுவதை முதல் வேலையாக செய்திருக்கிறது.
கேள்வி: இதனால் இலக்கிய உலகம் பாதிக்கப்படுகிறதே…
அ.பாண்டியன்: இலக்கிய சூழல் முறையாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்வினை. இதனால் மலேசியாவில் புதிய விழிப்புணர்வு ஏற்படுமே தவிர எந்தப் பாதிப்பும் வராது. மலேசியத் தமிழ் இலக்கிய சூழலில் இதுதான் திருப்புமுனை. இதை மேற்கொண்டதற்காக எங்களுக்குப் பல வகைகளில் இழப்புகளும் அவதூறுகளும் வரலாம். அவற்றை மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்கள் கொடுக்கும் விலையாக எடுத்துக்கொள்கிறோம்.
கே. பாலமுருகன்: எழுத்து என்பது பணம் சம்பாரிக்கும் இடமல்ல. பொருளியல் சிந்தனை கூடாதுதான். ஆனாலும் ராயல்டி என்பது உரிமை. அது வெறும் பணம் மட்டும் அல்ல. நாங்கள் இணைந்து செயல்படும் வல்லினத்தின் மூலமாக இதை சரியான முறையில் நடத்திக்காட்டுகிறோம் என அறிவித்தப்பின்பும் இதெல்லாம் தேவையற்ற பயம்.
கேள்வி : மாணவர்களுக்கு நூல்களை கழிவு விலையில்தான் கொடுத்ததாக அறிவிப்புகள் வருகின்றன. அப்படியிருக்க 30 ரிங்கிட் விலை எனச் சொல்வது முறையா?
கே.பாலமுருகன் : அச்சடிக்கப்பட்ட புத்தகங்களில் எத்தனை புத்தகங்களை இலவசமாகவும் எத்தனை புத்தகங்களை கழிவு விலையிலும் தரப்போகிறார்கள் என அவர்கள் அறிவிக்கவே இல்லை. கேட்பவர்களுக்குத் தருகிறோம். வேண்டுபவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்பதெல்லாம் நிபுணத்துவம் இல்லாத பேச்சுகள். சங்கம் ஒரு நூலைக் கொண்டுவந்தால் அது மாணவர்களுக்கு என்ன விலையில் கொடுக்கப்பட வேண்டும் எத்தனை பிரதிகள் , என விரிவாக மேடையில் விளக்கியிருக்க வேண்டும். அதை செய்யாத போது வேண்டியவர் கேட்டு எடுப்பதெல்லாம் பிச்சை போல் உள்ளது.
பாண்டியன்: இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே மிக எளிதாக முடித்திருக்கலாம். ஆனால் எழுத்தாளர் சங்கத்திற்கு அந்த எண்ணம் இல்லை என்பது அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் தெளிவாக காட்டுகின்றன. எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி பணியவைக்கவே அவர்கள் மும்முரமாக செயல் படுகிறார்கள்.
– சந்திப்பு: யோகி
Malaysia tamilarkalukkaavathu itu kurithu vilippu vantatil makilci. VAALHA