பெயர் புரட்சி

pandiyanமலேசியாவில் 80-ம் ஆண்டுகளில் இந்திய சமூகத்தில் ஒரு ‘புரட்சி’ சத்தமில்லாமல் நடந்தது.  ஆனால் அது சற்று விநோதமான மாற்றம் என்பதால் யாரும் புரட்சி பட்டியலில் இணைத்துக் கொள்வதில்லை. இப்போது மீட்டுணர்ந்து பார்க்கையில், அந்த விநோத புரட்சிக்கு மூலமாக ஒரு புத்தகம் இருந்திருப்பதையும் அந்தப் புரட்சியில் என் அப்பாவும் ‘களமிறங்கிப் போராடியிருப்பதையும்’ என் அண்ணனும் நானும் அதற்கு நேரடி சாட்சிகளாக இருப்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும் என்று தோன்றுகின்றது.  நம் வாழ்க்கை அனுபவம்தானே நமக்கு வரலாறு.

புரட்சி என்பது, சட்டென உருவாகும் அல்லது உருவாக்கப்படும் ஒரு சமூக மாற்றம். பழைய நடைமுறைகள் ஒதுக்கப்பட்டு புதிதாக ஒன்றை மக்கள் பின்பற்றத் தொடங்குவதை சமூக புரட்சி என்கிறோம். அதுவே பின்னர் வளர்ந்து அரசியல் புரட்சியாவதும் உண்டு. அவை வரலாற்றில் பதிவு பெறுகின்றன. ஆனால் வரலாற்றில் இடம் பெற தகுதியற்ற சின்னச் சின்ன மாற்றங்களை நாம் கவனப்படுத்துவதில்லை. சுவடு தெரியாமல் நிகழ்ந்த அந்த மாற்றங்களின் தடம் பற்றி ஊடுறுவி சென்றால் மட்டுமே அவை மிக இயல்பாக நடந்து முடிந்த புரட்சிகள் என்று புரியும். அதன் விளைவுகளையும் அறிய முடியும்.

என் அப்பா, இளம் வயதியே பெரியாரியராக தன்னை அறிவித்துக் கொண்டவர். அவரது தாய்மாமன் காட்டிய வழி அது. இளமை துள்ளலும் உடல் வலிமையும் அவரை புதிய பாதைகளில் துணிந்து நடக்கச் செய்தது. அவர், பெரியாரின் பகுத்தறிவு கேள்விகளின்வழி தன்னை சூழ்ந்திருந்த மத, பண்பாட்டு சடங்குகளை உருட்டி தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அன்றைய சூழலில் பகுத்தறிவு வாதம் என்பது அறிவார்ந்த விவாதமாக கருதப்பட்டது. அறிவார்ந்த விவாதம் செய்வோர் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. மரபின் அடிப்படையில் முன்வைக்கப்படும் எல்லா பழக்கங்களையும் எதிர்க்கேள்விகளில் முறியடிக்க பெரியார் பகுத்தறிவு வினாக்கள் அவருக்கு துணைபுரிந்தன. அறிவியல் நிரூபணம் இல்லாத அனைத்தையும் பித்தலாட்டம் என வகைப்படுத்தி ஓரங்கட்டும் வழக்கம் அன்றைய தீவிர பெரியார் தொண்டர்களிடம் அதிகம். “சாமியாவது பூதமாவது” என்று எல்லா நம்பிக்கைகளையும் இடக்கையில் புறந்தள்ளிவிட்டுச் செல்லும் துணிவு அவர்களிடம் இருந்தது. அதன் காரணமாக ஜாதகம், சமய சடங்குகள், இறைவழிபாடு, என நம்பிக்கை சார்ந்த பலவற்றையும் ஏற்காத முற்போக்கர்களாகவே அவர் இருந்தார்.

உண்மையில் அந்த முற்போக்கர்களிடம் நிலத்தடி நீராக சுரந்து கொண்டிருந்தது தமிழ்பற்றும் இனப்பெருமிதமும்தான். தமிழின் பொருட்டே ஆரிய எதிர்ப்புணர்வையும் வைதீக எதிர்ப்புணர்வையும் அவர்களிடம் எளிதில் விதைக்க முடிந்தது.  அதன் காரணமாகவே மதம் என்பது எதிர்நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பாவாணர் முதலியோர் கற்பித்த தமிழர் தொல் வரலாறு அவர்களின் சிந்தனைக்கு கூடுதல் ஊட்டச்சத்தாக ஆனது. மறைமலையடிகள், திரு.வி.க போன்ற மூத்த தமிழ் அறிஞர்கள் திராவிட கருத்துகளை முற்றாக மறுக்க முடியாத நிலையிலேயே இருந்துள்ளனர். ஆகவே முதல்வரிசை திராவிட சிந்தனை ஆதரவாளர்கள் தீவிர தமிழ் சிந்தனையாளர்களாகவும் இருந்துள்ளனர். திராவிட இயக்கத்தினரின் தொடர் பரப்புரைகளால் வைதீக எதிர்ப்புணர்வு திராவிட முன்னெடுப்பாகப் புரிந்துகொள்ளப்பட்டது. சாதி ஒழிப்பு என்பது பொதுவான முழக்கமாக இருந்தாலும், கடைநிலை சாதிகளிடம் இருந்த வேகம் இடைநிலை சாதிகளிடம் இல்லை. சாதிய அடுக்குகளை எல்லாரும் எதிர்த்தார்கள் என்பது உண்மையானாலும், அவரவர் சாதிய நிலைகள் குறித்து விழிப்பாகவே இருந்தனர். ஆகவே பெரியார் கொள்கையாளர்களாக தங்களை முன் நிறுத்திக் கொண்ட பலரும் சுய சாதிப் பெருமையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளாதவர்களாகவே இருந்தனர்; என் தந்தை உட்பட.

என் தந்தை தன் திருமணத்தையும் ஈ.வெ.ரா வழியில் ‘சுயமரியாதை திருமணமாகவே’ செய்து கொண்டார். முகூர்ந்த நேரம் பார்க்காமல், சீர்வரிசை வாங்காமல், ஒரு ஞாயிறு காலையில் நான்கு நல்லோர் வாழ்த்துரை வழங்க, சீனப்பள்ளி மண்டபத்தில் தாலிக் கட்டி என் அம்மாவை மனைவியாக்கிக் கொண்டார். ஆட்டுக்கறி விருந்துடன் திருமணம் நடந்துள்ளது.  தாலியை மட்டும் என் தாத்தா (தந்தையின் அப்பா) தங்கள் குடும்ப வழக்க முத்திரை மாறாமல் செய்து கொடுத்திருக்கிறார்.  மிகுந்த இறை பக்தி கொண்ட என் தாய்வீட்டார், மகளுக்கு நல்லவிதமாக திருமணம் முடிந்தால் போதும் என்ற ஆசையில் மறுப்பேதும் சொல்லவில்லை. என் தந்தை தான் நினைத்தபடி தன் திருமணத்தை புரட்சிகரமாக நடத்தி முடித்த பெருமிதத்தை பூரித்த புன்சிரிப்போடு தன் திருமண புகைப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்.

என் அண்ணன் பிறந்தபோதும் நானும் தங்கையும் பிறந்தபோதும் அவர் எங்களுக்கு பெயர் வைக்கவோ, ஜாதகம் கணிக்கவோ மற்றவர்கள் போல் சோதிடரை நாடவில்லை. அப்போது வழக்கமாக கோயில் பூசாரிகளே சோதிடர்களாகவும் இருப்பர். பஞ்சாங்க சோதிடமும் கைரேகை சோதிடமும் பிரபலமானவை. கிளி சோதிடம் அப்போதும் தெருவோரம்தான் இருந்தது. மலேசியாவில் சோதிடம் நல்ல வருவாய் தரும் தொழிலாக அப்போது வளரவில்லை. காணிக்கையாகச் சொற்ப பணம்தான் கொடுக்கப்படும். சோதிடரின் வாக்கு சுத்தத்திற்கேற்ப அது அமையும். ஆனாலும் சோதிடத்தில் பலருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. பஞ்சாங்கம் பார்த்துதான் பல நிகழ்ச்சிகளை மக்கள் செய்து வந்தனர்.

பூசாரிகளும் சோதிடர்களும் குழந்தைகளுக்கு ஜாதகம் கணித்து கொடுப்பதோடு பெயருக்கு பொருத்தமான முதல் எழுத்தை முன்மொழிவர். பெற்றோர் எதிர்பார்த்தபடி எழுத்துகள் அமைந்துவிட்டால் சிக்கல் இல்லை. அப்படி இல்லாமல் ரி, லே, சை, போன்ற எழுத்துகளும், ஷ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துகளும் இருந்துவிடுவதுண்டு. பிள்ளையைப் பெற்றவர் பாடு பாவம்தான். எப்படியோ யோசித்து ஒரு பெயரை வைத்து விடுவார்கள். சில பூசாரிகள் குறிப்பிட்ட தெய்வங்களின் பெயரையும் முன்மொழிவதுண்டு. மூத்த பெண் பிள்ளை என்றால் மகாலட்சுமி என்றோ, கடைசி மகன் என்றால், குமரன், சுப்ரமணியன், கார்த்திகேயன் (கார்த்திகை நட்சத்திரம்) என்றோ பெயர்கள் முன்மொழியப்படும்.

19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழகத்தில் தமிழர்களுக்கு மத அடையாள சாதி அடையாள பெயர்களை நீக்கி தமிழ் பெயர்களை சூட்டும் விழாக்களை திராவிட இயக்கத்தவர்களும் தனித்தமிழ் ஆர்வலர்களும் இயக்கமாக நடத்தியது போன்று இங்கு நடைபெறவில்லை. சூரியநாராயண சாஸ்திரி தம் பெயரை பரிதிமாற் கலைஞர் என்றும் வேதாசலம் அவர்கள் மறைமலையடிகள் என்றும் மாற்றி வைத்துக் கொண்டது போல் இங்கு பெரியவர்களுக்குப் புதிதாக பெயர்சூட்டும் விழாக்கள் ஏதும் நடத்தப்பட்ட தகவல் இல்லை. ஆனால் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் முறையில் மெல்ல மெல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன.

அக்காலகட்டத்தில் மலேசியத் தமிழர்களின் பெயர்களை பொதுவாக மதச்சார்பு பெயர்கள் என்று வகைப்படுத்திவிட முடியும். அவை இந்து மதத்தின் ஏதாவது ஒரு மார்க்கத்தில் இருந்து வந்ததாக இருக்கும். தமிழர்கள் சைவ சமய அல்லது குலதெய்வ பெயர்களை அதிகம் வைப்பர். சுப்ரமணியம், தில்லையப்பன், சரஸ்வதி, மாரியம்மாள், வள்ளி, முனியாண்டி, கருப்பையா, காளியப்பன், நாகம்மாள் போன்றவை சில உதாரணங்கள். தெலுங்கர்களும் மலையாளிகளும் வைணவ தெய்வங்களின் பெயர்களை விரும்பி சூட்டுவர். கோவிந்தசாமி, லட்சுமி, நாராயணன், மாதவன், கேசவன், ராகவன், ஜானகி என்பன அதில் சில. இதில் விதிவிலக்குகளும் உண்டு. செட்டியார், பிள்ளைமார்கள், யாழ்ப்பாண தமிழர்கள் போன்ற இடைநிலை சாதிகளின் பெயர்களில் நூதன அடையாளம் இருக்கும். சாதி அடையாளத்தை பின்னொட்டாக கொண்ட ஆறுமுகம் பிள்ளை, லெச்சுமண செட்டியார், ராமானுஜம் ஐயர், போன்ற பெயர்களோடு நமச்சிவாயம், பழனியப்பன், திருஞானசம்பந்தன், துரைசிங்கம், ராஜசிங்கம் போன்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் அவர்களிடம் அதிகம் காணப்படும். கிருஸ்துவ தமிழர்கள் கூட ஆரோக்கியசாமி, அந்தோனிசாமி, ஆரோக்கியமேரி, அன்னமேரி என்றும் முஸ்லீம்கள் அல்லா பிச்சை என்றும் வைத்துக்கொள்ளும் தனித்துவமான பெயர்கள் புழக்கத்தில் இருந்தன.

பிற்காலத்தில், 1988 ஆண்டு இயற்றப்பட்ட பெயர் பதிவு சட்டப்படி, மலேசிய பதிவு இலக்கா (JPN) மலேசியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட சில பெயர்களை வைக்க தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு எல்லா இன மக்களின் பெயர்களிலும் வினோதமான அல்லது தவறான பொருள் தரும் பெயர்களை பட்டியலிட்டு தடை விதித்திருக்கிறது. மலேசிய இந்திய மக்கள் வைக்கும் கட்டையன், மொட்டையன், பாவாடை, அம்மாக்கண்ணு, கருப்புசாமி, ஆண்டியப்பன் போன்ற உடல் தோற்றம், நிறம் ஆகிய அம்சங்களை குறிப்பிடும் பெயர்களை மலேசிய இந்து சங்கம் மற்றும் மலாயா பல்கலைக்கழக தமிழ்மொழிக் கழகம் ஆகிய அமைப்புகளின் பரிந்துரைக்கேற்ப தடை செய்துள்ளது.

எழுபதாம் ஆண்டுகளில் சற்றே நவீனத்தை நாடுவோர் ரமேஷ், சுரேஸ், திலீப், கீதா, என வடநாட்டு பெயர்களையும் அதற்கு எதிர்வினையாக தமிழ் அறிந்தோர் தமிழரசன், கலைச்செல்வி, முல்லை, தாமரை, கதிரவன், இளங்கோ, கண்ணகி போன்ற மரபு இலக்கியங்கள் அல்லது இயற்கை சார்ந்த பெயர்களையும் வைத்துக் கொள்வது வழக்கமானது.  தமிழகத்தில் தமிழ் உணர்வு சார்ந்த கருத்து எழுச்சிக்கு ஏற்ற மாற்றங்களை இங்கும் காணமுடிந்தது. ஆனாலும் அப்பெயர்கள் எல்லாம் ஜாதகம் கணிக்காமல் வைக்கப்பட்டவை என்று மொத்தமாக கூறிவிட முடியாது. சோதிடர் குறித்துக் கொடுக்கும் எழுத்துகளில் வசமாக சிக்கும் ஏதாவது ஒரு எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு தங்கள் மன விருப்பத்துக்கும் கொள்கைக்கும் ஏற்ப ஒரு பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்தனர்.

அதில் இன்னொரு வினோத பழக்கமும் அதிகமானவர்களிடம் காணப்பட்டது. எவ்வளவு பெரிய சோதிடர் குறித்துக் கொடுத்த எழுத்தில் வைக்கப்பட்ட பெயராக இருந்தாலும் அதை அடையாள ஆவணங்களில் மட்டுமே பதிவு செய்துவிட்டு வீட்டில் வேறு பெயர் வைத்து அழைக்கும் பழக்கம் பல வீடுகளிலும் உண்டு. சில எழுத்தாளர்களைப்போல இவர்களின் உண்மை பெயரை விட புனைப்பெயரே நிலைத்துவிடுவதும் உண்டு. சிலருக்கு உண்மை பெயரை விட அழைப்பு பெயர் சிறப்பாக இருக்கும். சிலருக்கு நிஜப்பெயர் ஒன்று இருப்பதை அவர்களே மறந்துவிடுவர்.  என் மனைவிக்கும் வீட்டில் அழைக்கும் மாற்றுபெயர் ஒன்று இருப்பதைத் திருமணத்துக்குப் பிறகுதான் நான் அறிந்தேன்.

உண்மை பெயரைப் பொதுவில் அறிவிக்கக்கூடாது என்பது ஒரு நம்பிக்கையாக இருந்துள்ளது. இரண்டு காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கம் இருந்துள்ளதை அறியமுடிகின்றது. ஒன்று, கெட்ட நோக்கத்தோடு எதிரிகள் மாந்திரீகம் செய்வதில் இருந்து தப்பிக்க உண்மை பெயரை மறைத்துக் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கை. மற்றது காலனித்துவ ஆங்கில அரசு சுமத்தும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தலைமறைவு வாழ்க்கை வாழவும் தங்கள் உண்மை பெயரை மறைத்துக் கொள்ளும் வழக்கம் தோன்றி பின் அதுவே ஒரு நம்பிக்கையாக ஆகிவிட்டதாக கூறப்படுகின்றது. சில பழங்கால பெயர்களை, குல தெய்வ பெயர்களை, வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, நாகரிக பெயர் ஒன்றை தாங்களே சூட்டிக் கொள்வோரும் உண்டு. குழந்தைகளை, பேபி, அம்மோய், அப்போய், போய், பாப்பா, குட்டி, அம்மாபொண்ணு என்று செல்லப்பெயர் வைத்து அழைத்து பின் அதுவே நிரத்தர பெயரான கதைகளும் உண்டு. எங்கள் ஊரில் ‘பாப்பா பாட்டி’ என்ற பெயரோடு வளம் வந்த 80 வயது மூதாட்டி ஒருவர் நினைவுக்கு வருகிறார்.

அதே போன்று திரைப்பட நடிகர் நடிகையர் பெயரையோ, குறிப்பிட்ட திரைப்படத்தின் நாயக நாயகியர் பெயரையோ தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதும் வழக்கத்தில் இருந்தது. சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார் போன்ற பிரபல நடிகர்களின் பெயர்களை கொண்டவர்களை இன்றும் காண முடியும். 60ஆம் ஆண்டுகளில் திரைப்பட நாயக நாயகிகளுக்கு சூட்டப்படும் ராஜா, கண்ணன், செல்வம், ராமு, ராணி, வாணி போன்ற தேய்வழக்கான பெயர்களும் அதிகம் காணப்படுபவையே.

என் தந்தை எங்களுக்கு தமிழ் மரபு சார்ந்த பெயர் வைக்க நினைத்து (சோதிட தலையீடு இல்லாமல்) நீண்ட பட்டியலை போட்டு கடுமையாக சிந்தித்து பெயர்களைத் தேர்வு செய்துள்ளார். என் அண்ணனுக்கு சோழ மன்னனின் பிரபல பெயரைச் சூட்டினார். ஆனால் அது தமிழ்ப்பெயர் அல்ல என்பதை அவர் அறியாமல் விட்டுவிட்டார் போலும். அல்லது தமிழர் வீரம் வெளிப்படும் பெயர் என, அறிந்தே தேர்வு செய்திருக்கக்கூடும். அடுத்து எனக்கு செங்கூட்டுவன் என்ற பெயரையே அவர் ஆர்வமாக முன்மொழிந்துள்ளார். ஆனால் அந்தப் பெயர் என் அம்மாவுக்கும் மற்ற சிலருக்கும் பிடிக்காமல் போகவே வேறு பெயரைத் தேடியுள்ளனர். அன்று தமிழ்ச்சூழலில் பாண்டியன் என்ற பெயர் பலருக்கும் இருந்துள்ளது. பாண்டியன் பரிசு என்ற பாரதிதாசன் கவிதை நூலும் திராவிட ஆர்வளர்களிடம் பிரபலம்தான். வீரபாண்டிய கட்டபொம்மன், பலே பாண்டியா போன்ற திரைப்படங்களும் எல்லாருக்கும் பிடித்த படங்களாக இருந்துள்ளன. ஆகவே எனக்கு பாண்டியன் என்ற பெயர் ஏக மனதாக சூட்டப்பட்டது. மூவேந்தர்களில் இருவர் எங்கள் குடும்பத்திலேயே இருப்பது மகிழ்ச்சிதானே!

எங்களுக்கு பிறகு என் தங்கைக்குப் பெயர் வைப்பதில் என் அம்மாவின் விருப்பமே மேலோங்கியுள்ளது. அப்போது மலேசிய வானொலியில் ஒலியேரும் நாடகங்களில் மெ. அறிவானந்தம் என்ற மலேசிய எழுத்தாளரின் பெயர் பிரபலமாக இருந்தது. அறிவும் ஆனந்தமும் இணைந்த பெயர் அது. அந்தப் பெயரில் கவரப்பட்ட என் அம்மா அதை பெண்பால் பெயராக மாற்றி என் தங்கைக்கு வைத்து விட்டார். அது இன்றைக்கும் மிக விநோதமான, பலருக்கும் வாயில் நுழையாத பெயராக இருக்கிறது. அதை சமாளிக்க ஒலி ஒற்றுமை உள்ள வேறு ஒரு பெயர் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதுவும் ஜாதகம் கணித்து வைக்கப்பட்ட பெயர் அல்ல.

இப்படியாக எங்கள் வாழ்கையின் முதல் பகுதி ஜாதக கட்டங்களுக்கு வெளியில்தான் தொடங்கியது. ஆனால் அடுத்தப் பகுதியில் சோதிடம் புதிய வடிவில் எங்கள் குடும்பத்தில் நுழைந்து புது அத்தியாயத்தை தொடங்கிவைத்தது.

80 ஆம் ஆண்டுகளில் மலேசிய சோதிட உலகில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று pandiyan 02நிகழ்ந்தது. அதுவரை சோதிடம் என்பது அக்கலையைக் கற்ற சிலரின் வசமிருந்தது. அவர்கள் மரபான இந்திய வானசாஸ்திர முறையில் பஞ்சாங்க ஜாதக கணிப்புகளை செய்தனர். பெயர் சூட்டுதல் முதல் முகூர்த்த நாள் முடிவு செய்வது வரை, பஞ்சாங்க கணிப்பு முறையில் செய்யப்பட்டது. ஆகவே அதில் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம், போன்ற கால அளவுகளே பயன்பட்டன. நடைமுறையில் இருக்கும் ஆங்கில ஆண்டு நாட்காட்டிக்கு எந்த வேலையும் அதில் இல்லை. மக்கள் எளிதில் புரிந்து கொள்ள மட்டுமே ஆங்கில தேதிகளும் காலங்களும் அழைப்பிதழ்களில் குறிப்பிடப்பட்டன.

ஆனால், பண்டடிட் சேதுராமன் 1952-ல் எழுதி வெளியிட்ட ‘அதிஷ்ட விஞ்ஞானம்’ என்னும் எண் கணித சோதிட நூல் (நியூமரலோஜி) தமிழர்களுக்கு புதிய வகை சோதிடத்தை எளிய முறையில் அறிமுகம் செய்தது.  பண்டிட் சேதுராமன் கைரேகை சோதிடராக இருந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர் மேற்கு உலகில் புழங்கி வந்த எண்கணித சோதிடத்தை சுயமாக ஆய்வுகள் செய்து இந்திய சோதிடத்துக்குள் இருக்கும் நவக்கிரக நம்பிக்கைக்கு ஏற்ப வகுத்துள்ளார். ஒன்பது சோதிட கோள்களை, ஒன்று முதல் ஒன்பது வரை வரிசை எண்களுக்கு தலைமையாக்கி அவற்றின் தன்மையை வகுத்துள்ளார். பிறந்த தேதிக்கு ஏற்ப ஒரு கோள் நம்மை ஆளும் என்பது அவர் கூறும் முதன்மை செய்தி. நாம் பிறந்த தேதிக்கும் நமக்கு இடப்படும் பெயருக்கும் தொடர்பு அமைவதோடு நமது பெயர் சரியான ஒலி அமைப்பில் இருக்க வேண்டும் என்பதே எண் கணித ஜாதகத்தின் அடிப்படையாகும்.

ஆனால் பண்டிட் சேதுராமன் பிறந்த தேதியாக ஆங்கில நாள்காட்டியையே கொள்கிறார். பெயர் ஆங்கில எழுத்து வடிவில்தான் முறையாக எழுத்தப்பட வேண்டும் என்று வழியுறுத்துகிறார்.  ஆங்கில எழுத்துருக்கள் 26க்கும் தனித்தனி எண்களை ஒதுக்கி, ஜாதகரின் பெயர்களில் அவற்றை கூட்டு முறையில் கணக்கிட்டு ஜாதக கணிப்புகளை செய்யும் முறையை அவர் நம்பகத்தன்மை குறையாமல் நூலில் விளக்கியிருப்பார். பல ஆதாரங்களும் வரலாற்று நிகழ்வுகளும் எண்களின் பலாபலன்களாக காட்டப்பட்டிருக்கும். இக்கணிப்பு முறை முற்றிலும் மேற்கத்திய பாணியிலானது. அது பிறந்த தேதி உட்பட பெயர் எழுத்துகள் வரை ஆங்கில அடிப்படையுடையது. ஆகவே, இயல்பாகவே இந்தியப் பஞ்சாங்க முறைக்கு எதிரானது. சேதுராமனே இதை விளக்கியுள்ளார். அதோடு பஞ்சாங்கத்தில் உள்ள குறைபாடுகளையும் வெளிப்படையாக விமர்சிக்கின்றார். அதோடு, பஞ்சாங்க சோதிடத்தில் கூறப்படும் தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் எண் கணித ஜோதிடத்தில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய தோஷ பரிகாரமாக நம் பெயரை முறைப்படி அமைத்துக் கொள்வதே வலியுறுத்தப்படுகின்றது.

ஆகவே, எண் கணித சோதிடம் வெகு விரைவாக மக்களுக்கு நெருக்கமான ஒன்றாக மாறியது. அதற்கு முதல் காரணம் ‘அதிஷ்ட விஞ்ஞான சாஸ்திரம்’ என்ற பண்டிட் சேதுராமனின் நூல்.  அந்த நூலில் எண் கணித சோதிடம் பற்றிய விளக்கங்களையும் கணிக்கும் முறைகளையும் மிக எளிய முறையில் விளக்கியிருந்தார். ஆகவே சுயமாகவே எண் கணித சோதிடத்தை கற்றுக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டினர். பஞ்சாங்க முறையோடு ஒப்பிடும்போது எண் கணித முறையை பழகுவது மிக எளியது. ஆர்வமுள்ள யாரும் கற்றுக் கொள்ளக் கூடியது. ஆகவே, சேதுராமனின் நூலால் பலர் திடீர் எண் கணித சோதிடர்களாக உருவாகினர். அவர்களுக்கு அந்த நூல் ஒரு கையேடு போலவே பயன்பட்டது. அவர்களில் என் தந்தையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என் தந்தைக்கு அந்த நூலின் ஐந்தாம் பதிப்பு 1982 -ம் ஆண்டு கைக்கு கிடைத்திருக்கிறது. யாரோ ஒரு நண்பரின் மூலம் அந்த நூலை அவர் வாங்கியிருக்கிறார். மலேசியாவில் அந்த நூல் 80ஆம் ஆண்டுகளில்தான் பிரபலமானது. இயல்பாகவே அறிவியலில் கூடுதல் நாட்டம் கொண்ட என் அப்பாவுக்கு அந்த நூலின் தலைப்பில் இருக்கும் ‘விஞ்ஞானம்’ என்ற சொல் கவர்வதாக இருந்திருக்கக்கூடும். சோதிடர் சேதுராமன், மக்கள் அறிவியல் முலாம் பூசப்பட்ட எதையும் நம்பிக்கையுடன் வாங்குவர் என்பதை உணர்ந்தே அந்தப் பெயரை தன் நூலுக்கு வைத்திருக்கின்றார். போலி அறிவியல் பற்றிய விழிப்புணர்வு அக்காலகட்டத்தில் கிட்டுவது சிரமமே. என் தந்தையும் கூட தான் அறிவியல் ஆய்வுக்குட்பட்ட நூல் ஒன்றை படிக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே அதை வாசித்து ஏற்றுக் கொண்டிருக்கவேண்டும்.

அந்த நூலை வாசிக்கத் தொடங்கியவுடன் அவர் தீவிர நியூமரலோஜி நம்பிக்கையாளராக மாறிவிட்டார். பக்தி மார்க்கத்திலும் நுழையத்தொடங்கினார். ஒரு மனோவியல் நூலின் குறிப்புகள் போல் அந்த நூலின் தகவல்களை அவர் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டார்.  ஜாதகம் கணிக்காமல் வைக்கப்பட்ட எங்கள் பெயர்களை எல்லாம் மறுபரிசீலனை செய்து தீங்கில்லா வகையில் மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உதாரணத்துக்கு இனிஷிலோடு கையொப்பம் இடுவது அல்லது இனிஷியல் இல்லாமல் கையொப்பம் இடுவது. வழக்கமாக அப்பா பெயர் போட்டு எழுதுவதோடு அம்மா பெயரின் முதல் எழுத்தையும் இணைத்துக் கொள்வது போன்ற பல்வேறு சரிகட்டல் உத்திகளின் வழி எங்களின் பெயர்களால் எங்கள் எதிர்காலத்திற்கு தீங்கு வந்துவிடக்கூடாது என்று முயன்று கொண்டிருந்தார். அவருக்கு அறிமுகமான பலருக்கும் தான் அறிந்த கலையைப் பரப்பிக் கொண்டிருந்தார். அவரை விட தேர்ச்சி பெற்றவர்களிடம் கலந்துரையாடி தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள முயன்றார். பின்னர், வீட்டில் நடக்கும் விழாக்கள், புதிய வாகனங்கள், திருமண பொருத்தங்கள், எங்கள் பிள்ளைகளுக்கு பெயரிடுவது என அனைத்து நிகழ்வுகளுக்கும் அவரே சோதிடராக இருந்து கணிப்புகளை செய்துகொடுத்தார்.

என் இளமை காலத்தில் எண் கணித சோதிடம் என்னை எப்போதும் துரத்திக் கொண்டிருந்தது.  எந்த முக்கிய நிகழ்வென்றாலும் (பள்ளி தேர்வுகள் உட்பட) அதன் தேதி எண் மிக இயல்பாக மனதில் தோன்றி எச்சரிக்கை செய்யும். யோக எண் என்றால் தன்னம்பிக்கை கூடுதலாக இருக்கும். ஆகாத எண் என்றால் தவிர்க்க முடியாத பதற்றம் வந்துவிடும். காதல், திருமணம், குழந்தைகளின் பெயர், வாகனங்கள் என அனைத்திலும் எண்கள் பற்றிய சிறப்பு கவனம் தவிர்க்க முடியாததாக இருந்தது. இப்போதும் எண் கணித சாரலில் இருந்து முற்றிலும் நான் விடுபட்டுவிடவில்லை. மனதில் ஆழப்பதிந்த அச்சமூட்டும் எச்சரிக்கையாகவே அது அவ்வப்போது தலைநீட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் வெறும் பயனீட்டாளர்தான். எண் கணித ஆய்வுகளில் ஈடுபடவில்லை. என் அண்ணன் அப்பாவைப் பின்பற்றி சில வருடங்கள் எண் கணித ஜாதகத்தில் தீவிரமாக ஆய்வுகள் செய்து ஓய்வு பெற்றுவிட்டார்.

எண் கணித ஜோதிடம் என் அப்பாவை மயக்கியதாக நான் கூறுவது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. காரணம் அதே காலகட்டத்தில் மலேசியாவில் பலரையும் அந்த சோதிட முறை மயக்கி தங்கள் மரபு சோதிட நம்பிக்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சேதுராமனின் அதிஷ்ட விஞ்ஞானம் என்னும் அந்த நூல்தான். இரண்டு முரணான கணிப்பு முறைகளையும் நுட்பமான கலவையாக்கி சோதிடர்களும் பயன்படுத்தத் துவங்கி விட்டனர். மிக குறுகிய காலத்தில் எண் கணித ஜாதகம் கணிப்பது மக்களிடையே தவிர்க்கமுடியாததாகி விட்டது. நாட்டில் உள்ள பல சோதிடர்களும் எண் கணித சோதிடத்தையும் தங்கள் சோதிட சேவையின் ஒரு பகுதியாக்கிக் கொண்டனர். நல்ல நாள், கெட்ட நாள் என்பது பஞ்சாங்கப்படியும் எண் கணித ஜாதகப்படியும் கலந்து பார்த்து ஒரு நாளை முடிவு செய்வது இப்போது வழக்கமாகி விட்டது.

சேதுராமனின் அதிஷ்ட விஞ்ஞான நூலை பின்பற்றி பல புதிய எண் சோதிட நூல்கள் வெளிவந்து பரபரப்பாக விற்பனையாகின. சில நூல்கள் பெயர்களை கணக்கிடும் முறையில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தின. பிரமீடு முறை கணிக்கிடல் அதில் சற்று சிறப்பாக பேசப்பட்டது. . நாளிதழ்களில் வார பலன் எழுதும் சோதிடர்களும் எண் சோதிட முறையில் பலாபலன்களை எழுதத் துவங்கினர்.  திருமண பொருத்தம் பார்ப்பது வழக்கமானது என்றாலும், பிறந்த தேதி எண் பொருந்தி வருமா என்பதையும் கூடுதலாக சோதித்துக் கொள்கின்றனர் இன்றைய காதலர்கள். வாகனம், வீடு போன்ற பல சொத்துகள் வாங்குவதிலும் எண் சோதிட ஆதிக்கம் அதிகம் உள்ளது.

இவ்வாறு மலேசிய ஜாதக கணிப்பு முறையில் பல மாற்றங்கள் நிகழ காரணமாக இருந்த சேதுராமனின் அதிஷ்ட விஞ்ஞானம் எனும் நூல் பல பதிப்புகள் கண்டு இன்று அவரின் குடும்ப சொத்தாக பராமரிக்கப்படுகின்றது. அந்த நூலைப் பின்பற்றி எண் கணிப்பு முறையில் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கத்தொடங்கி இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டன. ஆகவே அதன் விளைவுகளை மிக எளிதாக இன்று காணமுடிகின்றது. சமூக அளவில், புதிதாக கண்டெடுக்கப்பட்ட எண் கணிப்பு முறையால் மலேசிய இந்தியர்களின் தலையெழுத்து வியக்கத்தக்க அளவு மாற்றம் கண்டுவிடவில்லை என்பது தெளிவு. ஆனால் தனிமனித அளவில் வேறு சில குழப்பங்கள் ஊடுருவி இருப்பதை காணமுடிகின்றது.

எண் கணிப்பு முறையால் மலேசிய இந்தியர்களின் பெயர்களில் அநாவசிய மாற்றங்கள் நிகழ்துவிட்டதை வெளிப்படையாக காணமுடிகின்றது. பள்ளிகளில், உச்சரித்து அழைக்க மிகவும் சிக்கலான பெயர்களாக இன்று இந்திய மாணவர்களின் பெயர்கள் மாறிவிட்டன. பொதுவாகவே ஸ், ஷ, ஹோ போன்ற ஒலிகளில் தமிழருக்கு அலாதி விருப்பம் உண்டு. தமிழில் அவ்வொலி எழுத்துகள் இல்லாதது அவர்களுக்கு குறைதான் போலும். ஆகவே வட மொழியில் ஹேமா, விஷால், கிஷன், தனுஷா, போன்ற பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துக் கொள்வது நீண்ட காலமாகவே உள்ளதுதான். ஆனால் இன்று கூடுதலாக எளிய பெயர்கள் கூட வாசிக்க சிக்கலானவையாக மாறிவிட்டன. ராஜா என்ற பெயரைக் கூட எண் கணித முறையில் பல்வேறு வகையில் எழுதுவதைக் காணமுடிகின்றது. ராஜா என்ற பெயரை RAAJA அல்லது RAJAA அல்லது RAHJA என எண் ஜாதகத்துக்குப் பொருந்துமாறு வினோதமாக எழுதப்படுகின்றது. நீண்ட பெயர்களை ஆங்கிலத்தில் கூர்ந்து கவனித்து வாசிக்க வேண்டிய நிலை உள்ளது. SHARWESHWARRY என்னும் பெயரை வாசிக்க முடியாமல் நான் திகைத்துப் போனேன். குழந்தைக்கு ஏதோ அறிவியல் கலைச்சொல் போன்ற பெயரை வைக்கும் நிலைக்கு எண் கணித ஜாதகத்தில் இருக்கும் தீவிர நம்பிக்கையே காரணம். தமிழில் எழுதினால் நான்கு எழுத்தில் முடியும் என் மகனின் பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது நான்கு Aகள் வரும்படி அமைத்ததை இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கின்றது. என் மகனின் பெயரை வாசிக்கும் ஆசிரியரும் இப்படித்தான் நொந்துகொள்ளக் கூடும்.

வாழ்க்கையின் மீது இருக்கும் அச்சம் நிரந்தரமானது, எதிர்காலத்தின் மீது இருக்கும் சந்தேகங்களும் நிரந்தரமானவை. எந்த உறுதிமொழியும் இல்லாத வாழ்க்கையை நாம் பலவித நம்பிக்கைகளைக் கொண்டு கடக்க முயல்கின்றோம். நமது பெயரில் நம் பெற்றோர் திணித்து வைத்துள்ள நம்பிக்கையின் வேர்கள் ஆச்சரியம் அளிக்கக்கூடியவை. அவை ஒரு தலைமுறை அடுத்த தலைமுறையின் மீது கொண்ட அதீத அக்கறையின் வெளிப்பாடு.  ஆகவே எவ்வளவு சிக்கலான பெயரையும் முறையாக வாசிக்கவும் அழைக்கவும் முயல்வதே அந்த நம்பிக்கைக்கு நாம் தரும் மரியாதையாக இருக்கும்.

3 comments for “பெயர் புரட்சி

  1. சிவானந்தம் நீலகண்டன்
    March 2, 2020 at 8:48 am

    அருமை!

    ‘எதையாவது நம்பித் தொலைப்போம்’ என்று ஒரு நேர்காணலில் ஜெயகாந்தன் சொன்ன சொற்கள் உங்கள் கட்டுரை வாசித்தபோது என்னுள் எதிரொலித்தன.

    இளமையில் பகுத்தறிவு என்ற பெயரில் நம்பிக்கையின்மையைத் தேர்ந்தெடுக்கும் பலர் பின்னாளில் மீண்டும் கடவுள் நம்பிக்கைக்கோ அல்லது வேறேதும் நம்பிக்கைகளுக்கோ சென்று சேரவேண்டியுள்ளது. இல்லாவிட்டால் வாழ்க்கையின் அபத்தங்களை எளிதில் விளக்கிக்கொள்ள முடியாது.

  2. Manijegathisan
    March 3, 2020 at 1:25 pm

    சிறப்பான பதிவு, பாண்டியன்👍. என் அப்பாவுக்கும் எண் கணிதத்தில் அலாதியான பிரியம் இருந்தது. அதனாலேயே எனக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம். அவர் 8, நான் 6😎. தவிர, திரைப்பட ஹீரோக்களின் தாக்கமும் மிக அதிகம். என் அப்பா எம்ஜிஆர் விசிறி. எப்படியோ, வாழ்க்கை கணக்காகத்தான் போகிறது😇

  3. Viji
    March 6, 2020 at 5:18 pm

    அருமையான பதிவு. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. 80களில் இந்த அதிஷ்ட ‘விஞ்ஞானம்’ புத்தம் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். உங்கள் அப்பாபோல் எங்கள் அத்தை.. கண்ணாடியை மூக்குத்திவரை இறக்கிவிட்டுக்கொண்டு, குழந்தைகளுக்கு பெயர் சூட்ட இந்தப் புத்தகத்தைக் கையில் ஏந்திக்கொண்டு பழைய பென்சிலோடு கிளம்பிவிடுவார். இன்னமும் அந்த நஞ்சுப் போன புத்தகத்தை பொக்கிஷமாக காத்துவருகிறார். இந்த புத்தகம்தான் எனது நண்பனின் பெயரையும் மாற்றியுள்ளது. Vijayanathan என்கிற பெயரை vyjaynathan என்று மாற்றிக்கொண்டார். பெயர்தான் மாறியது அவரின் வளர்ச்சியில் மாற்றமில்லாமலேயே இருக்கிறார்.. இன்றளவும்.
    நல்ல நகைச்சுவையான பதிவு இது. சுவாரஸ்யம் குறையாமல் எழுதிய விழிப்புணர்வு விஞ்ஞான கட்டுரை. 😀😆

    ஸ்ரீவிஜி

Leave a Reply to Viji Cancel reply