சமகால தமிழ் சினிமாக்களில் அல்லது வெப்சீரீஸ்களில் பொறுப்புத்துறப்பு என்று (disclaimer என்பதை மிக மோசமான மொழிபெயர்ப்பில்) தொடக்கத்தில் ஓர் அறிவிப்பு காட்டப்படும். நானும் அப்படியான பொறுப்புத்துறப்போடு கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகிறேன்.
மலேசிய கவிதைகளை பற்றியான இந்தக் கட்டுரை பத்தொன்பது கவிதை தொகுப்புகளை அடிப்படையாக கொண்டது. எனது கருத்துக்களும் விமர்சனங்களும் இந்தத் தொகுப்புகளின்பாற்பட்டதே. இந்த பத்தொன்பது தொகுப்பை எனக்குத் திரட்டி தந்தவர் ம.நவீன். இதற்கு வெளியில் ஏதாவது மலேசிய கவிதைகளில் நிகழ்ந்திருந்தால் அதற்கு நவீனே பொறுப்பு.
பொதுவாக மற்றொரு நிலத்தில் உள்ள படைப்புகளைப் பற்றி கருத்து சொல்லும்பொழுது பாரதியை துணைக்கு அழைத்து ”ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்துபுகல் என்ன நீதி” என்ற ரீதியில் கேள்விகள் கேட்கப்படும். சாதிகள் ஆயிரம் மேலும் கீழுமாக உள்ளன என்பதுதானே பிரச்சனை?
எடுத்துக்கொண்ட பத்தொன்பது தொகுப்புகளை பட்டியலிடுகிறேன்.
- அன்றுபோல் அன்று – ஜமுனா வேலாயுதம்
- இரணங்கள் – ஜமுனா வேலாயுதம்
- உனது பெயர் நான் – பா.ஆ. சிவம்
- மீட்பு – அகிலன்
- அந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது – ஏ. தேவராஜன்
- கனங்களின் சந்திப்பு – கருணாகரன்
- திசைகள் தொலைத்த வெளி – நா. பச்சை பாலன்
- எனது கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும் – நா.பச்சைபாலன்
- இன்னும் மிச்சமிருக்கிறது – நா.பச்சை பாலன்
- இலக்கிய பயணத்தின் ஹைக்கூ பாடகன் – நா.பச்சை பாலன்
- சூரியக் கைகள் – கோ.புண்ணியவான்
- என்னை நாய் என்று கூப்பிடுங்கள் – ரேணுகா
- தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் – கே.பாலமுருகன்
- கடவுள் அலையும் நகரம் – கே.பாலமுருகன்.
- நிகழ்தலும் நிகழ்தல்நிமித்தமும் – பூங்குழலி வீரன்
- பொம்மைகளுடன் பேசிக் கொண்டிருக்கலாம் – பூங்குழலி வீரன்
- சந்ததிகளும் இரப்பர் உறைகளும் – சை. பீர் முகம்மது
- யட்சி – யோகி
- மகாராணியின் checkmate – ம.நவீன்
இந்தக் கவிதைத் தொகுப்புகளை நான் அதனுடைய தன்மைகளின் அடிப்படையில் நான்கு வகைமைகளாக பிரித்து கொள்கிறேன். அவற்றில் இந்த 9 கவிதைத் தொகுப்புகளை ஒத்த தன்மை கொண்டதாகக் கருதுகிறேன். அவை:
- திசைகள் தொலைத்த வெளி – நா.பச்சை பாலன்
- எனது கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும் – நா.பச்சைபாலன்
- இன்னும் மிச்சமிருக்கிறது – நா.பச்சை பாலன்
- இலக்கிய பயணத்தின் ஹைக்கூ பாடகன் – நா.பச்சை பாலன்
- அந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது – ஏ. தேவராஜன்
- கனங்களின் சந்திப்பு – கருணாகரன்
- அன்றுபோல் அன்று – ஜமுனா வேலாயுதம்
- இரணங்கள் – ஜமுனா வேலாயுதம்
- மீட்பு – அகிலன்
வழவழப்பான காகிதங்கள், கவிதைக்கு அருகே பாவப்பட்டவர்களின் படங்கள், அமைச்சர் பெருமக்கள், தொழிலதிபர்களின் முன்னுரை, இலங்கை வானொலியின் அறிவிப்பு போல அம்மம்மா அப்பப்பா சித்தி சித்தப்பா மொத்த உறவுகளுக்கும் நன்றி என்ற பொதுவான தன்மை இந்தத் தொகுப்புகளுக்கு உண்டு. மைய நிலமான தமிழகத்திலும் இந்த அபத்தங்கள் நடக்கின்றன. தமிழ்க் கவிதைகளில் காடு அழிவதைப் பற்றி கவிதை எழுதி காடு கணிசமாய் அழிந்துபோனதாய் இன்னும் சமர்ப்பிக்கப்படாத ஓர் ஆய்வு உண்டென்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. கவிதையை ஒரு விசிட்டிங் கார்டாக கருதுவதே இது போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்படுவதற்கான அடிப்படை.
கவிதையை ஒரு சுலபமான வேலை என்றும், மாநகரப் பேருந்துகளிலோ அல்லது மெட்ரோ ரயிலிலோ ஏறுவதற்கு ஒப்பாக அதை புரிந்து கொள்வதனால் இந்த அபத்தங்கள் நிகழ்கின்றன.
தமிழ்க் கவிதை என்பது மிகப்பெரும் ராஜபாட்டையைக் கொண்டது. கபிலரும், வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும் பயணித்த சாலை அது. நத்தைகளும் அதில் பயணப்படலாம்தான். ஆனால் ஒருபோதும் நத்தைகள் ஊர் போய்ச் சேரப் போவதில்லை. மலேசியாவின் ஒரு பகுதியான கெடா எனப்படும் கடாரம் முன்னொரு காலத்தில் சோழப் பேரரசின் ஆட்சியின்கீழ் இருந்திருக்கலாம் எனச்சொல்லப்படுகிறது. அதற்காக இன்றைக்கும் மலேசிய கவிதைகள் எந்தப் ‘பேரரசின்’ கட்டுப்பாட்டுக்கு கீழும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கவிதை சுதந்திரமானது; மொழி தொடர்ந்து அதன் வழியேதான் தன்னை சுத்திகரித்துக் கொள்கிறது.
கோ.புண்ணியவான் தன் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ‘நாம் வைரமுத்துவையோ, வாலியையோ, பா.விஜயையோ முன்னெடுக்கும் அளவிற்கு வண்ணதாசனையோ, கலாப்ரியாவையோ முன்னெடுக்கவில்லை. சினிமா கவிஞர்களின் மீதுதான் நம் ஈர்ப்பு இருக்கிறது.’ இக்கருத்து கவிதை எழுதுவோரால் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று.
எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற திரைப்படமான ’மகாதேவி’யில் கன்னத்தில் மரு ஒட்டி காதில் ஊதுபத்தி புகைய யாசர் அராபத் போல துண்டோடு மாறுவேடத்தில் (!) ’தாயத்து தாயத்து’ என்ற பாடலை பாடியபடி வருவார். அதில் ஒரு பொதுஜனம் அவரிடம் “இதால பணம் சம்பாரிக்க ஏதாவது வழியுண்டா?” எனக் கேட்பார். ‘உடம்பை வளைச்சு நல்லா உழைச்சு பாரப்பா; அதில் உனக்கும் உலகத்துக்கும் நன்மை இருக்கு; சும்மா உட்கார்ந்து சேர்க்கிற பணத்துக்கு ஆபத்து இருக்கு; அது உனக்கெதுக்கு?’ என்று எம்.ஜி.ஆர் பதில் சொல்வார். அதைத்தான் இந்த 9 தொகுப்பையும் எழுதிய கவிஞர்களிடம் சொல்லவேண்டியிருக்கிறது. கவிதை என்பது மொழியின் ஒளி. அது இலக்கிய வடிவத்தில் தலையாயது. அதற்குள் வருகின்ற ஒருத்தியோ ஒருவனோ நடுக்கத்தோடுதான் வரவேண்டும். மாபெரும் சாதனைகளும், மகத்தான கவிஞர்களும் புழங்கிய படித்துறையே தமிழ்க் கவிதை. படித்துறையில் குளிக்கலாம், நீந்தலாம், ஆனால் அந்த நீரை அள்ளி விற்பவர்களை காலம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
நா. பச்சைபாலனின் இந்தக் கவிதையை எடுத்துக்கொள்ளலாம்.
ஆணிகள்
பள்ளிகளில்
தேவையில்லையென
பிடுங்கியெறியப்பட்ட ஆணிகள்
பின்னாளில்
எங்கோ கிடந்து துருவேறி
யார் காலையோ
பதம் பார்க்கக்
காத்திருக்கின்றன
இந்தக் கவிதையின் சிக்கல் என்னவென்றால் முதலில் இது கவிதையாகாமல் வெறும் கூற்றாகவே இருக்கிறது. அது பேசும் உள்ளடக்கம் இன்னும் சிக்கல். பள்ளிக்குப் போகாதவர்களெல்லாம் பிற்காலத்தில் குற்றவாளிகளாகத்தான் வாய்ப்பு உள்ளது என அறுதியிட்டுச் சொல்கிறது. நம் சூழலில் பள்ளிக் கல்விமுறைக்கும், அறத்திற்கும், பண்பாட்டிற்கும், மாண்பிற்கும் யாதொரு பந்தமுமில்லை. மாறாக கல்விமுறை பற்றி வேறொரு கவிதையைப் பற்றிப் பேசலாம்.
மெக்காலேயுடன் தொங்கும் டல்ஹெளசிபிரபு
இப்பவும்
ரயில் பார்த்திராத சனங்களின்
கிராமத்திற்கு
எப்பவோ எப்படியோ வந்து
குழந்தைகளின் மூத்திரப்பைமீதும்
தனது அதிகாரத்தின் நாவை
அசைத்தபடி
தொங்கிக் கொண்டிருக்கிறது
தண்டவாளத் துண்டொன்று
துருவேறாத அதன் பெருமிதத்தைப்
பாடித்திரிகிறோம் நாம்
-லிபி ஆரண்யா
இதுவும் கல்விமுறையை விமர்சிக்கும் கவிதைதான். டல்ஹெளசி பிரபு இந்தியா முழுக்க ரயில் பாதையை உருவாக்கினார். ரயில் என்பது பிரிட்டிஷ் அதிகாரத்தை / சந்தைக்கான கச்சா பொருட்களை இந்திய துணைக்கண்டம் முழுவதும் கொண்டு செல்வதற்கான முக்கிய ஊடகம். மெக்காலே இந்திய குமாஸ்தா கல்விமுறையின் தந்தை. ரயில்வே தண்டவாளத்தின் துண்டுதான் பள்ளியின் மணி நாக்கு. ஒரே நேரத்தில் கிராமப்புற மாணவர்களின் மீதும் இத்தனை காலத்திற்கு பின்பும் டல்ஹெளசியும், மெக்கலேயும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆங்கிலக் கல்வியின் மீதான மோகம் அதிகரித்திருக்கிறது. இப்படியாக வரலாறும், பண்பாடும் சந்திக்கும் புள்ளியை மிக நுட்பமான கலைமொழியில் பேசுகிறது இக்கவிதை. இதைத்தான் ஒரு கவிஞனிடம் நாம் வேண்டுகிறோம்.
***
ஒரு பொய்யை மறைக்க
ஒரு பொய்யை மறைக்க
உண்மைபோல் ஆடை அணிந்த
இன்னும் கொஞ்சம் பொய்கள் தேவை
ஒரு பொய்யை மறைக்க
பொய்யை உண்மைபோல்
அழுத்தமாய்ச் சொல்லும்
கற்பனைத் திறம் தேவை
ஒரு பொய்யை மறைக்க
முன்பே பொய் சொல்லிச் சமாளித்த
முன் அனுபவம் உதவும்
ஒரு பொய்யை மறைக்க
கேட்பவருக்குக் கொஞ்சம்
ஞாபக மறதி இருத்தல் நலம்
ஒரு பொய்யை மறைக்க
அசாத்தியத் துணிவும்
பொய்யென்று தெரிய வந்தால்
மீண்டும் மறுத்துவிடும் தில்லும் வேண்டும்
ஒரு பொய்யை மறைக்க
சொல்லும் பொய்கள்
உண்மையைவிட தத்ரூபமாய்
இருக்க வேண்டும்
ஒரு பொய்யை மறைக்க
மீண்டும் மீண்டும் அதே பொய்யைத்
திரும்பச் சொல்லும் முனைப்பு வேண்டும்
இவர் சொல்வது உண்மைதானா?
என்றறிய முகம் ஆராய்வார் முன்
எப்பொழுதும் முகமாற்றமின்றி
புன்னகையைச் சிந்தவேண்டும்
உண்மைக்கு எதுவும் தேவை இல்லை
பொய்க்குத்தான் ஆடையும்
அலங்காரமும் அணிமணியும் தேவை
ஒரு பொய்யை மறைக்க
முடிந்தால் எல்லார் வாய்க்கும்
பூட்டுப் போட்டுச் சமாளிக்கலாம்
ஒரு பொய்யை மறைக்க
பொய்யோடு இரண்டறக் கலந்து
கரைந்துபோக வேண்டும்
ஒரு பொய்யை மறைக்க
நம்மைச் சுற்றிலும்
நம் பொய்யைக் கொண்டாடும்
அபிமானிகளும் ஏமாளிகளும் வேண்டும்.
***
வட்டங்கள்
ஒரு வட்டம் என்பது
எப்போதும் ஆகாது எங்களுக்கு
ஒன்றிலிருந்து இன்னொன்றாகப்
புதுப்புது வட்டங்களில் நுழைந்து
வாழ்ந்து பார்ப்பதே அலாதி இன்பம்
ஒவ்வொரு முறையும்
வட்டங்களில் ஓட்டைகள் உள்ளதாக
உணரத்தொடங்கியபோது
வேண்டிய ஒருவருக்குப் பரிவட்டம் கட்டி
சபையேற்ற
இடையூறுகள் முளைத்தபோது
வட்டத்துக்குள் விதியாகும்
சட்டங்களை மதியாமல்
எதிர்மாறாய்த் துருவங்கள்
தலைதூக்கியபோது
வட்டத்துக்குள்ளிருந்து சிலரை
வெளியே தள்ளிக்
கதவடைக்க முடியாதபோது
வட்டத்தின் அளவைச் சுருக்கிச் சுருக்கி
கழுத்தை நெரிக்கும் அளவுக்குக் குறுகியபோது
வட்டத்தின் எதிர்காலம் குறித்து
அவநம்பிக்கைகள் மனத்தை அரித்தபோது
வட்டத்திலிருந்து வெளியேறும்
அல்லது வெளியேற்றப்படுபவர்களுக்கு
ஆதரவுக் கரம் நீட்ட முனைந்தபோது
இதே வட்டத்திலிருந்தால்
இனி இலாபமேதும் காணவியலாது
என்றுணர்ந்தபோது
ஒன்றிலிருந்து ஒன்பதாக
பலப் பல வட்டங்களை உருவாக்கினோம்
எல்லா வட்டங்களிலும்
கண்ணுக்குத் தெரிகின்றன
அதிகார பீடங்களில்
வீற்றிருக்கும் தலைகளின் பின்னால்
ஒளிவட்டங்கள்
அந்த ஒளி வாங்கி
வாழ்வுக்குள் வினியோகிக்கும்
வழிதேடுவதிலேயே கழிகிறது காலம்
ஒவ்வொரு வட்டமும்
வெளிப்பார்வைக்கு
ஒரு சுழியமென்பது
வட்டத்துக்குள்ளே இருப்பவர்களுக்கு
ஒரு போதும் தெரிவதேயில்லை
நதி இணைப்பும் நாடுகள் இணைப்பும்கூட
சாத்தியமாகலாம்
வட்டங்கள் இணைப்புக்கு இங்கே
வாய்ப்பே இல்லை
மேலே இருக்கிற இரண்டு கவிதைகளும் பொய், வட்டம் என்ற இரண்டு விசயங்களைப் பற்றி பேசுகிறது. கவிதை என்பது பிரச்சார சாதனமில்லை. கவிதை என்பது மொழியின் உச்சபட்ச கலை வடிவம். கவிதை என்பது அறிவுறுத்துவது அல்ல; உணர்த்துவது. மேலே இருக்கும் இரண்டு கவிதைகளும் பொய்யைப் பற்றி வட்டத்தை பற்றி நிறைய பேசுகின்றன. ஆனால் அவை கவிதையாக இருக்கின்றனவா என்பதுதான் கேள்வி. தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமணனின் கவிதை மூன்றே வரிகள்தான். அது நமக்குள் நிகழ்த்தும் அதிர்வுகள் நிறைய.
யாரேனும்
பகிர்ந்துக்கொள்ள முடியுமா…
மரணத்தை?
***
என்னவாய் இருக்கும்
தெருவில் அலைந்து திரிகிற
அந்தப் பைத்தியத்தின் பெயர்?
இந்த கவிதைகள் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கவிதைகள் இப்படித்தான் நம்மை ஆட்கொள்ள வேண்டும். எத்தனை காலம் கடந்தும் நம் நினைவில் ஒரு குத்தீட்டியைப் போல நின்று நம்மை துன்புறுத்திக் கொண்டே இருக்கவேண்டும். பச்சை பாலனின் அந்த இரண்டு கவிதைகளும் வழவழவென்று பேசுகின்றன. சொற்குவியலாக இருக்கின்றன. வாசித்து முடிக்கும்போது நமக்கு அலுப்பாக இருக்கிறது. யாதொன்றும் நமக்கு கிட்டவில்லை. மனச்சோர்வோடு நாற்காலியிலிருந்து எழுகிறோம். வேறேதோ செய்துதான் நம்மை மீட்டுக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒரு நல்ல கவிதை வெகு நாட்களுக்கு நமக்குள் ஒளி வீசிக் கொண்டேயிருக்கும்.
கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் ஒரு கவிதையின் தலைப்பு
‘சந்தோசத்தின் பெயர் தலைப்பிரட்டை’
இந்த ஒரு வரியே என்னை அத்தனை வசிகரித்தது. எத்தனை பெரிய திறப்பு! நம் அநேக சந்தோசங்கள் தலைப்பிரட்டைகள்தான். வளர்ந்தபின் அவை தவளைகளாகின்றன. எப்போதோ வாசித்த வரிகள் இன்றும் என்னை வழி நடத்துகின்றன.
மாலை நேரத்து காத்தும்..
தென்னமரக் கீற்றும்..
யாரை மறந்தாலும்..
விளையாட அழைக்க
எங்களை மறக்காது..!
அன்று விதவிதமாய்
பொம்மையில்லை..
இன்றுபோல் ரகரகமாய்
விளையாட்டுப் பொருளில்லை..
தென்னமட்ட ஓலை எங்கள் வாகனமாக..
தேங்காய் ஓடு கூட்டாஞ்சோறு பானையானது..!
எங்களின் அச்சிக்கா ஆட்டத்தில்
தள்ளாடிய தாத்தாவுக்கும் இடமுண்டு..
பிசியாய் சுற்றும் பாட்டிக்கும் பங்குண்டு..!
நொண்டிக்கோடு கண்மூடி ஆட..
நாலுபேருக்கும் பயம்கொடுத்து நிற்கும்
புளிவா தண்ணியும் உப்புக்கோடும்..
ஆடிக் களைத்து இரவில் தூங்கும் போது..
மறக்காமல் உளறல் வரும்..
திரிதிரி பந்தம் திருவாணி பந்தம்
திரும்பி பார்த்தா ஒரு கொட்டு..
குண்டு அடிப்பதும் பம்பரம் விடுவதும்..
பசங்களின் கைவந்த கலை..
கல்லாங்காய் ஆடும் பெண் பிள்ளைகளுக்கு
அது முடியாத வேலை..
பட்டம் விடும் வசந்த காலம்..
சீசனுக்கு வந்து போகும்..
குளிரடிக்கும் அந்த மார்கழி காத்து..
எங்களின் பட்டத்தை உரத்துக்கு ஏத்தும்..
காலம் கடந்து வந்தது..
கட்டங்களும் எண்களுமாக..
ஏணியும் பாம்புகளுமான பரமபதம்..
யாருக்கும் யாரும் எதிரியில்லை..
அன்புக்கும் பாசத்திற்கும்
தோற்பதே மேல் என்று
மனித நேயம் மட்டும் காத்து நின்றோம்..
ஆனால் அன்றுபோல் இன்றில்லை..
***
உழைத்த கைகளுக்கு
போட்டல் கிடைத்திருக்க..
வெறித்த கண்களில்
போதை திளைத்திருக்க..
கள்ளுக்கடை வாசனையும்
ஆபே கடை தண்ணீரும்..
மொட மொடன்னு உள்ளே போக..
காலை நேர ஹீரோவெல்லாம்
மாலையிலே வில்லனாவார்கள்..
உடம்புக்கும் மனதுக்கும் போதை
முறுக்கேற்றி இதமேற்ற..
ஆறுமணி தொடங்கும்
பாட்டு கச்சேரிக்கு
மறக்காமல் வருவார்கள்
TMS-சும் MSV-யும்
போட்டவுடன் ஆட்டம் வரும்
கூடவே தகிட தத்தோம்
தாளம் வரும்…
அதுவரைக்கும் தெரியாது..
இவர்களும் கண்ணதாசன்தான் என்று…
இந்த நாடகத்தைப் பார்த்திருக்க
தெருவே இலவசமாய் கூடி நிற்கும்..
வேடிக்கை வாடிக்கையானதில்
பல சோதனைகள் எழுந்திருக்கு
மிச்ச சோகங்களும் நிறைந்திருக்கு
இருட்டும் வேளையிலே
தினம் தினம் தள்ளாடி நடந்ததிலே
சில குடும்பம் திண்டாடி போனதுவே..
துக்கத்துக்கும் தூக்கத்துகும்
சங்கதிக்கும் நிம்மதிக்கும்
கல்லுக்கடை விருந்தாக..
சிலருக்கு குடல் கருகி போனது..
அதுவே கருமாதியுமானது…
இதை எல்லாம் மறந்திருக்க
வேண்டும் என்று..
நினைக்காம இருக்கையில
இன்னும் தான் உருள்கிறது..
குடிபோதையில் ஒர் உலகம்...
ஜமுனா வேலாயுதத்தின் இந்த இரண்டு கவிதைகளில், முதலாவது கவிதை கடந்தகாலம் குறித்தான் ஏக்கத்தைப் பேசுகிறது. மற்றொன்று ஒரு காட்சி சித்தரிப்பு. கடந்தகாலம் குறித்து இயங்கும்போது ஒரு சிக்கல் உண்டு. கடந்தகாலம் என்பதாலேயே அது பொற்காலம் இல்லை. அதிலும் எல்லா சிக்கல்களும் இருந்தன. ஆனால் கடந்தகாலம் பற்றிய ஏக்கத்தைப் பேசுகின்றவர்கள் பெரும்பாலும் அதை பொற்காலம் என்றே நிறுவத் துடிக்கிறார்கள். அது ஒரு குழந்தையின் பார்வையிலான ஒரு பொற்காலம் என்று வைத்துக் கொண்டாலும் அந்தப் பொற்காலம் பொற்காலமாக நமக்குள் இறங்குகின்றனவா? அப்படி அது நிகழவேண்டுமெனில் பிரத்யேக சொல்முறை வேண்டும்.
ஜமுனா வேலாயுதத்தின் இரண்டு கவிதைகளையும் அதே கருப்பொருளைக் கொண்ட இன்னொரு கவிதையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இதுவும் கடந்தகாலத்தை பேசுகிறது. கிராமத்தைப் பற்றி பேசுகிறது. கூடுதலாக சேரியைப் பற்றி பேசுகிறது.
அந்தி நேரத்தில் எனது கிராமத்துச் சேரி.
சில காரைக்கட்டடங்களைச் சுற்றிலும்
சப்பித் துப்பிய
கரும்புச் சக்கைச் சிதறல்களாய்ப்
பல வீடுகள் கொண்டது எனது கிராமம்
அதை
தொட்டும் தொடாமலும்
சுற்றி வளைந்தோடும்
வெட்கப்பட்ட வாய்க்கால்
அதிகார ஆட்டத்திற்குத் தயாராகும்
ஆயுத அணிவகுப்பாய்
காற்றுக்குத் தலை விரிக்கும்
கரையோரத் தென்னைகள்
அந்தகாரக் கூத்திற்கு
அவசர ஒப்பனையாய்
பூமியின் முகத்தில்
கரிபூசும் முன்னிரவு
மூட்டை மூட்டையாய்
நெல்லடைத்த கூலியை
முந்தானையில் வாங்கி
முடிச்சாக்கித் தலைசுமந்தும்
அந்த
வாய்க்கால் மேட்டு
வளைபாதையில்
கறுத்த உருவங்கள்
சேரி நோக்கி
ஒடுங்கிய பாதையின்
ஓரம் ஒதுங்கினால்
பக்கத்து நிலத்தைப்
பாதுகாக்கும் முள்வேலி
பதம் பார்க்க
ஒன்றின் பின் ஒன்றாய்
கறுத்த கவலைகள்
கால் பதிக்கும்
சேரி நோக்கி
***
தீவிரத் திட்டங்களைத்
திகட்டாமல் எடுத்துரைக்க
எட்டாத உயரத்தில்
கட்டிவைத்த வானொலி
கதற
காதருகில் ஆட்டிப் பார்க்கும்
சிம்னி விளக்கு
நாளைய பயத்தை
முணுமுணுக்க
சுவரில் நிழல்
வாழ்வாய்
அச்சப்பட்டு அலைபாயும்
ஓடைக்கல் உதிர்ந்த சுவற்றோரத்தில்
அம்மணமாய்த் தூங்கும்
அரியின் புத்திரனை எழுப்பி
பரட்டைத் தலை கோதி
பால் கொடுத்த பின்னால்
கள்ளிப் புகைக் கமறலுடன்
வாயுடைந்த சட்டிகள்
வயிறுகளாய்க் கொதிக்கும்
அள்ளித் தின்ன இல்லாமல்
ஆற்றிக் குடித்து
கழுவிக் கவிழ்த்து
கோணிகளில் கால் நுழைத்துப் படுத்தால்
கொசுக்களின் தாலாட்டு
காற்றில்
மாறுகால்
மாறுகை வாங்கப்பட்ட
மதுரை வீரன் துயரம்
உடுக்கை ஒலியுடன்
உருகி வர
எனது கிராமத்துசேரி
கண் துயிலும்.
-பாரதிபுத்திரன்
இந்தக் கவிதை துல்லியமாக ஒரு கிராமத்தின் வாழ்வை அதன் துயரை அதன் வர்க்க வேறுபாடுகளை ஒரு கோட்டு சித்திரமாய் நம் மனதில் தீட்டுகிறது. இந்தச் சித்திரமே ஓர் அசலான கவிஞன் தீட்டும் சித்திரம். கவிதைகளில் அழலாம், புலம்பலாம், சாபமிடலாம். ஆனால் என்ன செய்தாலும் அது கவித்துவ மொழியில் தான் இருக்க வேண்டும். அதுவே தலையாயது. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொழிற்படும் கவிதைகளுக்கு ஒரு பொழுதும் மரணமில்லை.
பின்னர் அதுவாய்க் கட்டிக்கொண்டது
வீடு ஒன்று
மனிதர்களெல்லாம்
தங்கும் வண்ணம்
கட்டி எழுப்பினேன்
அண்ணனாய்
சில கற்பனைகளும்
அதில் கலந்தே கட்டினேன்
வரவேற்பறையில்
குதூகலமாய்ப்
பிள்ளைகளின் சிரிப்போசையில்
மறந்திருக்கவும்...
காற்றில் அசைவாடும்
இசையினூடே இலயித்திருக்கவும்…
சதா தேநீர் பலகாரங்களுடன்
அரட்டையடிக்க அவ்வப்போது
நண்பர்களின் வெடி ஜோக்கில்
திளைத்திருக்கவும்…
அப்பாவின் படத்தைப் பார்த்தபடி
தரையில் அமர்ந்திருக்கும்
அம்மாவின் மடியில்
தலைவைத்து
ஏகாந்தமாயிருக்கவும்…
உடன்பிறப்புகளின் கொஞ்சுமொழியில்
இனியொரு பிறவியே
வேண்டாமே என
வேண்டியிருக்கவும்…
கையில் அகப்பட்ட
ஆல்பத்தோடு
பால்ய தோற்றத்தைக்
கிண்டலடித்துப் பிரமிக்கவும்…
இப்படியாய் உருவெடுத்த
கற்பனைகளின் நீட்சியில்
வீட்டின் முன்
கட்ட மறந்தேன்
வாசற்படியை
என் கற்பனையை மீறிய
அகண்ட வாசற்படி
அதுவாய்க் கட்டிக்கொண்டது
அப்பாவின் புகைப்படத்தை
மட்டும்
இனி எப்பொழுதும்
பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்போல்
தோன்றியது…
– தேவராஜன்
தேவராஜன் கவிதையை மிக விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார். கவிதையின் வேலை கிச்சுக்கிச்சு மூட்டுவது அல்ல. கும்பகோணம் தாராசுரம் கோவிலில் உள்ள மகத்தான சிற்பங்களை மக்கள் வழிபட்டு வழிபட்டு விளக்கேற்றி அவற்றை கருப்பாக்கி அதன் கலை நுட்பங்கள் அறியா வண்ணம் ஆக்கி வைத்திருப்பார்கள். வழிபடுபவர்களுக்குத் தெரியாது அவை மகத்தான சிற்பங்கள் என. உலகத்தில் மகத்தான கலைச் சிற்பத்தின் முன் நிற்கிறோம் என அவர்கள் அறியார். தேவராஜனும் கவிதை முன் அந்தப் பக்தர்கள் போலவே வெற்று வார்த்தை ஜாலங்களுடன் நிற்கிறார்.
விண்வெளியில்
மலேசியா
குடிசையில் குப்புசாமி!
-கருணாகரன்
கருணாகரனின் இந்தக் கவிதையை எடுத்துக் கொள்வோம்.
இதை எழுதுவதற்கு ஒரு கவிஞன் தேவைப்படுகிறாரா? இந்த வாக்கியத்தை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். தமிழ் நாட்டுப் பேருந்துகளில்
‘கரம், சிரம், புறம் நீட்டாதீர்’
என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தை ஒன்றின் கீழ் ஒன்றாக்கி
கரம்
சிரம்
புறம்
நீட்டாதீர்
என்று எழுதினால் கவிதையாகி விடுமா? கவிஞன் கோஷம் எழுதுபவன் அல்ல சுவரெழுத்து வாசகம் எழுதுபவனும் அல்ல. மூன்றே வரிகளில் நம்மை அசைக்கும் அரசியல் கவிதைகள் தமிழில் உண்டு. முற்றிலுமாக ஓர் அபாயகரமான சூழ்நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கும் இந்தியாவில் அதைக் குறித்து ஒரு தமிழ்க் கவிதை உண்டு
காவிக்கோவணம்
சொப்பனஸ்கலிதம்
அகண்டபாரதம்
லிபி ஆரண்யா
இதை மகத்தான அரசியல் கவிதை என்பேன் நான். காவிகள் இந்தியாவை மிக அகண்டதாக கற்பனை செய்துக் கொள்கிறார்கள். அதில் பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லாம் அடக்கம். அத்தனை அருவருப்பானது அந்தக் கனவு என்று மூன்றே வரிகளில் முடித்து வைக்கிறார் லிபி ஆரண்யா.
கவிதைகளில் துயரங்கள் மிக முக்கிய பாடுபொருளே ஆனால் அந்தத் துயரம் எவ்வகையில் பாடப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம்.
விண்வெளியில்
மலேசியா
குடிசையில் குப்புசாமி!
இதில் எங்கே கவிதை இருக்கிறது? இது ஒரு முரணான செய்தித் துணுக்கு. இதைப் படித்தவுடன் கவிதை அறியாதவர்களுக்கு உடனடியாகப் பிடித்து விடும்.
எத்தனை
உயரத்தில் பறந்தாலும்
ஊர்க்குருவி
விலைவாசி ஆகமுடியாது
இது எக்காலத்திலும் கவிதை ஆகமுடியாது. துணுக்குகளை கவிதை என்று நம்பவேண்டியதில்லை. வர்க்க ஏற்றத்தாழ்வுகளை கவிதையில் காத்திரமாக சொல்லியிருக்கிறார்கள்.
சின்னச் சின்ன
பாம்புகள் கூட
சீறிக் கடிக்கின்றனவே
ரேசன் கடையில்
இத்தனை பெரிய பாம்பு
செத்தாக் கிடக்கிறது.
பாரதிபுத்திரன்
ரேசன் கடையின் நீள்வரிசையை பெரிய பாம்பெனக் கொண்டு அது சுரணையற்றுக் கிடப்பதை மிகக் கவித்துவமாக சொல்கிறது இக்கவிதை.
படிப்பவர்களுக்கு சடக்கென பிடித்துக் கொள்ள கவிதை ஒன்றும் பெவிக்கால் இல்லை. துணுக்குகள் ஒரு பொழுதும் கவிதைகள் இல்லை. இலக்கியத்திற்கு வெளியே இருப்பவர்களால் கொண்டாடப்படும் கவிதைகள் எப்பொழுதும் கவிதைகளாக இருப்பதேயில்லை. வெற்று வசீகர வாசகங்கள்.
கருணாகரன் கவிதைகளில் கவித்துவத் தருணங்களே இல்லை. இன்ஸ்டண்ட் காபி போல உடனடி தருணங்களே. ஒரு கவிஞனுக்கு உரிய புதிய கண்டுப்பிடிப்புகள் என்று எதுவுமில்லை. இன்ஸ்டண்ட் தருணங்களை ஒரு கவிஞன் கடக்க வேண்டும். யூஸ் அண்ட் த்ரோ பேனா அல்ல கவிதை.
மிகச் சாதாரணமான, எளிய முரண்களை முன்வைக்கக்கூடிய, வார்த்தை விளையாட்டுக்களை முன் வைக்க கூடிய துணுக்குகள் சாதாரணர்களை ஏன் கவர்கிறது? சாதாரணர்கள் சினிமா பாட்டுக்கு அப்பால் எதுவும் அறியாதவர்கள். எல்லாவற்றையும் எளிமையாக கேட்கக் கூடியவர்கள். கலையில் எளிமை இருக்கலாம். ஆனால் அது ஏமாற்றும் எளிமை. உலகத்தில் செவ்விலக்கியங்கள் எல்லாம் எளிமையானவையாக தோற்றம் காட்டுபவை. ஆனால் அந்த எளிமை நம்மை ஏமாற்றும் எளிமை. அது மிக ஆழமானது. சாதாரணர்கள் கூறுவது மிக மலினமான எளிமை. அவர்கள் அறிவுக்கு அது புரிந்துவிட வேண்டும். அதற்கு மேற்கொண்டு அறிவதற்கும் பயில்வதற்கும் அவர்கள் ஒரு பொழுதும் தயாராகவில்லை. அல்லது அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு இந்த எளிய வாசகங்கள் கவிதையாக காட்சியளிக்கின்றன.
மைய நிலத்திலும் இதுபோன்ற கவிதைகள் உண்டு.
உழைத்தால் உயரலாம்.
யார் உழைத்து
யார்?
***
ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது
எடைகுறைவாய்
***
பெண்ணே
நேற்று அரைத்த மாவு கூட
இன்று பொங்கி விடுகிறது
பெண்ணே
நீ எப்போது
***
வித்தைக்காரன்
வித்தை காட்டிக் கொண்டிருந்தான்
பெரியார் சிலைக்கு கீழே
***
குட்டையில்
சிறுநீர் கழிக்கும் சிறுவன்
சூரியனை அசைக்கிறான்
இவற்றையெல்லாம் கவிதை என்று நம்புவோர் தமிழ்நாட்டிலும் உண்டு. ”நில் கவனி செல்” என்ற வரியை கவிதை என்று நம்பினால் இதையும் நம்பலாம்.
கேமிராவிற்குள்
அடங்க மறுத்தது
தஞ்சை பெரிய கோவில்
***
சோம்பல் மாணவன்
அழைத்துக் காட்டினேன்
பாறை இடுக்கில் செடி
***
வாடகை வீடு மாறும் நாளில்
நான் நட்ட செடியில்
சில பூக்கள்
***
பூக்களைப் பறிக்காதீர்கள்
செடியிலேயே இருக்கட்டும்
பசியோடு தும்பி
***
உணவைக் கொஞ்சம்
சிந்தி உண்ணுங்கள்
எறும்புகள் வரும் நேரம்
***
குப்பைக் கொட்ட வந்தவள்
தலை குனிந்தாள்
நதியில் தெரிந்தது முகம்
***
கோயில் உண்டியல்
ஏக்கத்தோடு பார்க்கும்
ஏழைச் சிறுமி
***
ஒழுகும் தமிழ்ப்பள்ளி
சுவரில் நனையும்
இரட்டைக் கோபுரம்
***
பெய்யத் தொடங்கியது மழை
நல்ல வேளை
குடை இல்லை
***
அகதி முகாமில்
பிறந்தநாள் சிறுவனுக்கு
விளையாட்டுத் துப்பாக்கி
***
செம்மண் சாலையில் தமிழன்
அண்ணாந்து வெறித்தான்
மலேசியக் கொடி
இவை நா.பச்சைபாலனின் ஹைக்கூக்கள். தமிழில் மிக மோசமாக அர்த்தம் கொள்ளப்பட்ட வார்த்தைகளில் ஒன்று ஹைக்கூ.
ஹைக்கூ என்பது புத்த மதத்தில் ஒரு வாழ்முறையின் வழி. அதன் துறவிகள் கண்டடைந்து எழுதுகிறார்கள். அதற்கு மாபெரும் ஞானம் வேண்டியிருக்கிறது. வாழ்ந்து, தியானத்தில் தோய்ந்து, இந்த வாழ்வை அதன் உள்பக்கமாக உற்று நோக்கி மகத்தான ஹைக்கூ கவிதைகள் எழுதினார்கள்/எழுதுகிறார்கள். ஹைக்கூ என்பது ஒரு ஞான தரிசனம். ஒரு மனிதனின் ஆன்மா விழிக்கும் தருணம். அவனும், பிரபஞ்சமும் வேறுவேறல்ல என்று கண்டடையும் ஒரு பொழுது. அது ஒரு ஜென் துறவிகள் கடவுளை கண்டடையும் கணத்திற்கு ஒப்பானது. எல்லோருக்கும் கடவுள் காட்சியளிப்பதும் இல்லை. ஜென் துறவிகள் ஒரு முழு வாழ்வையும் வாழ்ந்து இரண்டு ஹைக்கூ எழுதுகிறார்கள். தமிழில் யுவன் மொழிப்பெயர்த்திருக்கிறார். மகத்தான கவிதைகள் அவை.
நீரில் தெரியும் தம்
பிம்பங்களைக் கண்டு
அஞ்சுகின்றன மின்மினிகள்.
டென் ஸீட்டெ. ஜெ
ஜப்பான் 1633-1698
நெல்வயலில் தேங்கிய நீர்
வெளியேறுகிறது – ஒரு
மீனும் திரும்புகிறது,
என் வீட்டுக்கு.
கொபயாஷி இஸ்ஸா
சடாரென்று அறையும் காற்றில்
கடைசி இலை
முடிவெடுக்கிறது :
போய்விட்டது.
ராபர்ட் ஹென்றி ப்போலின்
அமெரிக்கா 20 ஆம் நூற்றாண்டு.
இந்த நிஜ ஹைக்கூக்களுக்கு விளக்கங்கள் தேவையிராது.
அடுத்த வகைமையாக பூங்குழலியின் இரு தொகுப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
- நிகழ்தலும் நிகழ்தல்நிமித்தமும் – பூங்குழலி வீரன்
- பொம்மைகளுடன் பேசிக் கொண்டிருக்கலாம் – பூங்குழலி வீரன்
எந்தவொரு முன்அறிவிப்பும்
படபடப்பும் இன்றி
நடந்து கொண்டிருக்கின்றன
அறுவைச் சிகிக்சைகள்…
கைவேறு கால் வேறு தலைவேறாக
கிடக்கும்
பொம்மைகளுக்கு மிக குறுகிய
நேரத்தில் அங்கங்கள் பொருத்தப்படுகின்றன…
துளியும் ரத்தம் சிந்தும்
அவசியமின்றி
நடந்து முடிந்து விடுகின்றன
குழந்தைகள் தரும் சிகிச்சைகள்…
தமிழ் சிறுகதைகளில் குழந்தைகள் புழங்குகின்ற அளவிற்கு தமிழ் நவீனக் கவிதைகளில் 2000க்கு முன் குழந்தைகள் புழங்கியதில்லை. கல்யாண்ஜியிடமோ, கலாப்ரியாவிடமோ, ஞானக்கூத்தனிடமோ மிக அரிதாகவே குழந்தைகளைக் காண்கிறோம். தன் குழந்தைகள் குறித்தான பெருமிதம் அறவே இல்லை.
தொண்ணூறுகளின் மத்தியில் அல்லது இரண்டாயிரத்தில் உலகமயமாக்கலோடு சேர்த்து தமிழ் நவீனக் கவிதைகளில் தன் குழந்தை குறித்தான பெருமிதக் கவிதைகள் தோன்றியது எனச் சொல்லலாம். இதை பிரமாதமாக மீறியவர் முகுந்த் நாகராஜன் மாத்திரமே. தன் குழந்தை என்ற பெருமிதமின்றி நுண்ணிய குழந்தைகள் உலகத்தை, குழந்தைகளை தன் கவிதையில் ஓடித் திரியவிட்டவர். “அங்கிளுக்கு ரைம் சொல்லு” என்று வீட்டு வரவேற்பு அறையில் வைத்து குழந்தைகளை வதைக்கும் வன்முறைக்கு நிகராக எழுதப்படுகிற கவிதைகளில் இருந்து பாரதூரமாக விலகி நிற்பவை முகுந்த் நாகராஜனின் கவிதைகள்.
பூங்குழலியின் குழந்தைகள் சார்ந்த கவிதைகளை வாசிக்கும்பொழுது நமக்கு முகுந்த் நாகராஜன் தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வருகிறார். அது ஒரு நல்ல ஞாபகம்தான். ஆனால் காதல் கவிதைகள் எழுதத் தொடங்கும்பொழுது பூங்குழலி வீரன் பழைய தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஏ.பி. நாகராஜன் ஆகிவிடுகிறார். இங்கு நிறைய ஏ.பி நாகராஜன்கள் இருக்கிறார்கள். முகுந்த் நாகராஜன்கள்தான் அறவே இல்லை.
ஒரு கவிதை
சில சொற்களாலும் பல எழுத்துகளாலும்
ஆனது…
ஒரு கவிதை
சில மௌனங்களாலும் பல பேரிரைச்சல்களாலும்
ஆனது…
ஒரு கவிதை சில கொலைகளாலும்
பல தற்கொலைகளாலும் ஆனது…
இந்தக் கவிதை என்பது மட்டும் ஏன்
உன்னாலும் என்னாலும் ஆனதாக
இருக்கக் கூடாது…
***
ஒரு மழைக்காலத்தின் முடிவு நாள் இன்று
மேகங்களைக் காணவில்லை
வானத்தின் பாதங்களுக்குக் கீழே
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறது வானவில்…
எங்கோ தூரத்தில் அஸ்தமனத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது
என் கவிதை….
இது போன்ற கவிதைகள் நிறைய தமிழில் எழுதப்படுகின்றன. எழுதியவர்களின் பெயர்களை எடுத்துவிட்டால் யாருடைய கவிதைகள் என்ற பிரத்யேக அடையாளம் எதுவும் இவற்றிற்கு கிடையாது. நகல் கவிதைகள் என்று இதை சொல்லலாம். ஒருவிதமான தேய்வழக்கு கவிதைகள். ஹோமியோபதி மருத்துவத்தில் நோய்க்கென்று மருந்தில்லை காய்ச்சல் வந்த ரமேஷ்க்கு ஒரு மருந்து. காய்ச்சல் வந்த சுரேஷ்க்கு வேறொரு மருந்து. காய்ச்சல் வந்த இப்ராகிமுக்கும் வேறொரு மருந்து. நோய்க்கென்று ஒரு மருந்தில்லை. ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான மருந்தே இருக்க முடியும் என ஹோமியோபதி சொல்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் பிரத்யேகமானவனாக ஹோமியோபதி பார்க்கிறது. ஒவ்வொரு மனிதனுமே பிரத்யேகமானவன் எனில் கவிஞன் எத்தனை பிரத்யேகமானவன்!
அவன் எப்படி மற்றவர் எழுதும் அதே வரியை எழுத முடியும்?
அடுத்த வகைமையாக இந்த ஐந்து கவிதைத் தொகுப்புகளை எடுத்து கொள்கிறேன்.
- உனது பெயர் நான் – பா.ஆ. சிவம்
- சூரியக் கைகள் – கோ.புண்ணியவான்
- தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் – கே.பாலமுருகன்
- கடவுள் அலையும் நகரம் – கே.பாலமுருகன்.
- என்னை நாய் என்று கூப்பிடுங்கள் – ரேணுகா
இந்த ஐந்து கவிதைத் தொகுப்புகளுக்கான ஒற்றுமை – இவை அரசியல் பேசுகின்றன; கோபப்படுகின்றன. மைய நிலமான தமிழ் நாட்டிலும் கோபக்கவிதைகளுக்கும் பிரகடனக் கவிதைகளுக்கும் பஞ்சமே இல்லை. அரசியல் கவிதை என்பது கோபமாகவும், பிரகடனங்களாகவும். கோசங்களாகவுமே புரிந்து கொள்ளப்படுகிறது. பழைய வெள்ளைக்கார அதிகாரிகள் காட்டில் வேட்டையாடி (பொதுவாக அவர்கள் நேரடியாக வேட்டையாடுவதில்லை. அவர்கள் அழைத்துச் சென்ற வேட்டைக்காரர் வேட்டை ஆடுவார்கள். இவர்கள் வேட்டையாடியதாகத்தான் கணக்கு) இறுதியாக கொல்லப்பட்ட புலியின் மீது காலை தூக்கி வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் போல பிரகடனங்கள் வழி கொல்லப்பட்ட கவிதைகளின் மீது தங்கள் காலைத் தூக்கி புகைப்படம் எடுத்துக் கொள்வோர் இங்கும் ஏராளம் உண்டு. ஆனால் அரசியல் கவிதை என்பது அதுவே கோபப்படக்கூடாது. வாசிப்பவனுக்கு கோபம் ஏற்பட வேண்டும். அந்தக் கவிதையை வாசிப்பவர்கள் வாசித்து முடித்தபின் கோபத்தில் ஒரு வசைச் சொல்லை உதிர்க்கலாம். கவிஞனே அந்த வசைச் சொல்லை சொல்லலாகாது. அரசியல் கவிஞன் டப்பிங் ஆர்டிஸ்ட் இல்லை. Ventriloquism கலையில் பொம்மைதான் பேச வேண்டுமே ஒழிய அதை கையில் வைத்திருப்பவர் வாயைத் திறக்கக் கூடாது. “வாயை மூடிப் பேசவும்” என்பதே அரசியல் கவிதைக்கான பொழிப்புரை. துர்பாக்கியமாக இந்த ஐந்து கவிதை தொகுப்புகளும் வாய் திறந்து பேசி விடுகின்றன.
எழுத்தாளர் லட்சுமண பெருமாளின் அனுபவக் குறிப்புகளில் ஒரு சம்பவம் வருகிறது. 1960-களில் அநேகமாக சாத்தூராக இருக்கலாம். எம்.ஜி.ஆரின் திரைப்படத்தைப் பார்க்க டூரிங் டாக்கீஸுக்கு நாடோடிச் சமூகமான நரிக்குறவர் சமூகம் வருகிறது. படம் ஓடத் துவங்குகிறது. படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் கடும் சண்டை. பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு தாங்க முடியவில்லை. அதிலொருவர் தன் குருவி சுடும் துப்பாக்கியை எடுத்தார். திரையில் இருக்கும் நம்பியாரை நோக்கிச் சுட்டார். எல்லாம் முடிந்தது. இதுவே கலையின் வெற்றி என்று நான் கருதுகிறேன். ஓர் அரசியல் கவிதையின் வேலை இதுவே.
மேலே உள்ளத் தொகுப்புகளிலிருந்து சில கவிதைகள்.
என் அரிசி
எனக்கான அரிசியில்
என் பெயர் எழுதப்பட்டிருக்கிறதாம்!
எந்த உலையில்
யார் வாயில் போய்த்தேடுவது?
ராணுவக்காலணியில்
மிதிபட்டு நசுங்கிவிட்டதோ?
வயல்வெளிகளில்
அறுவடை நடந்துமுடிந்து
குவிக்கப்பட்ட நெல்மணிகளில்
காயம் வழியாக வீசப்பட்ட
போர் நெருப்பில்
பாழாய்ப்போனதோ!
முதலாளிமார்களின்
கிடங்குளில்
இன்னுமொரு
விலையேற்றத்துக்காக
பதுங்கியிருக்கிறதோ?
நெல்மணியாக
இருக்கும்போதே
காலங்காலமாக
விதைக்காகவே புதைக்கப்பட்டுவிட்டதோ?
வாழ்நாள் முழுதும் வயலிலேதான்
அதன் வாழ்வென
வரையறுக்கப்பட்டுவிட்டதோ?
அஜீரணக்கோளாறினால்
தொண்டைக்கும் வயிற்றுக்கும்
இடையில் சிக்கி
புளிச்ச ஏப்பமாய்
தினறுககிறதோ
திக்கக் குரங்குகளின்
கையில் அகப்பட்டு
அப்பமாகிப்போனதோ?
அசுரர்களுக்கு அட்சதையாகி
பாதங்களில்
நசுங்கியே கிடக்கிறதோ?
கோ.புண்ணியவான்
மயிர்
சில நூற்றாண்டுகளைக் கடந்து
வந்து விழுந்திருந்தது மயிர்.
அதன் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த
ஒராயிரம் சொற்களில் தேங்கி வழிந்தது
ஒரு சமூகம் விதித்திருந்த ஆபாசம்.
உதறி உதறி
அதன் மீது படிந்துகிடந்த பல்லாயிரம்
வெறுப்பின் சொற்கள்
கனத்துத் தொங்கின.
மயிரின் ஒவ்வொரு பகுதியும்
கதையைச் சொல்ல
மயிர் அடுக்குகளில் எங்கோ தொலைவில்
ஒளிந்து சுருங்கி ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருந்த
சில முகங்களின் பரிதவிப்புகள்.
முன்பொருமுறை எல்லா இடங்களிலும்
இருந்த மயிர் காடுகள் தனக்குக் கிடைத்த
சொற்களையெல்லாம் கூர்மையாக்கிப் பார்த்தன
வசையாக்கிப் பார்த்தன
இறுதியில் தடை செய்தும் பேசிப் பார்த்தன.
மயிர் மயிர் மயிர் என ஒலிக்கத் துவங்கியது.
கே. பாலமுருகன்.
பல்லாண்டுகளாய்
வேண்டிய கடவுளால்தான்
கைவிடப்பட்டீர்கள்
நெருங்கிப் பழகிய
நண்பர்களால்
காட்டிக் கொடுக்கப்பட்டீர்கள்
உரிய நேரத்தில்
யாரும் உதவாத நிலையில்
நடு வீதியில் நின்றீர்கள்
தெய்வீகம் என்றெண்ணி
மன்னித்து விட்டீர்கள்
மீண்டும் புறமுதுகில்
வாங்கிக் கொண்டீர்கள்…
அவமதித்தவர்களை
அரவணைத்தீர்கள்
மீண்டும் அவமதிக்கப்பட்டீர்கள்…
யாரோ செய்த தவற்றுக்காக
சூழல் கைதியாய்
பழிவாங்கப்பட்டீர்கள்…
இறுதியில்
நீங்களே உங்களை
கொன்று குவித்தீர்கள்…
2.
மீண்டும்
மீண்டும்
தள்ளிப் போகிறது
பயணம்
தோட்டத்திற்கே
திரும்பி விட்ட
நண்பனைக்
கட்டிப் பிடித்து
அழவேண்டும் போலிருக்கிறது…
வாழ்வதாகவேத் தெரியவில்லை…
நெடுந்தூர ஓட்டப் போட்டியில்
நிற்காமல்
ஓடிக்கொண்டேயிருப்பதாக
தோன்றுகிறது…
நின்று
ஒருநிமிடம்
வாய்விட்டு
அழவேண்டும் போலிருக்கிறது…
அழுதாலும்
ஒன்றும் ஆகப் போவதில்லை
நாய் வேடத்திற்கு
குரைத்துத்தான் ஆக வேண்டும்…
பா.ஆ.சிவம்
இவையெல்லாம் அரசியல் கவிதை அல்ல என்று சொன்னால், எது அரசியல் கவிதை என்று சிலவற்றையும் சொல்லவேண்டியிருக்கிறது.
அம்மாவின் பொய்கள்
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
ஞானக்கூத்தன்
சுதந்திரம்
எனது சுதந்திரம்
அரசாலோ தனிநபராலோ
பறிக்கப்படுமெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்
உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜை உண்டு
உனக்குள்ள ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்
மாற்றானைத் தூண்டுமுன்னெழுத்து
எப்படிச் சமுகம் அனுமதிக்கும்
மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
இடையறாது ஓடும்
ஜீவ நதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்
உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்குப் போய் வரச் சுதந்திரம்
இவற்றுக்குள் மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் உயிர் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே
ஆத்மாநாம்
தீட்டுக் கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம். வாங்கிக் கொண்டு
ஓடிவிடுவார்கள்.
தீட்டுக்கறை படிந்த,
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச் சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது.
இச்சையை தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது.
கால் நீட்டி தலை சாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது.
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது.
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.
மு.சுயம்புலிங்கம்
வரலாறு
”சேகுவேரா பனியன்
சேகுவேராவைத் தவிர
வேறு யாருக்கேனும் பொருந்துமா என்பது சந்தேகம்தான்”
என்று சொன்னான்
தத்துவ வரலாற்றுப் பேராசிரிய எழுத்தாள நண்பொனொருவன்
நண்பா…
சேகுவேரா பனியன்
சேகுவேராவிற்கே கூட
அவ்வளவு பொருந்துமா என்பது சந்தேகந்தான்”
என்று சொன்னேன்.
இருவரும் வாய் பிளந்து சிரித்தோம்.
பிறகு,
அலுவலகங்களுக்கு விடுப்பு சொல்லிவிட்டு
ஒரு மதுவிடுதியில் சந்தித்துக் கொண்டோம்.
நான்காவது ரவுண்டில்
லாலிபாப் முன்னிலையில்
கட்டிக்கொண்டு அழுதோம்.
இசை
இந்த நான்கு கவிதைகள் சிறந்த அரசியல் கவிதைகள். ஆத்மாநாம் உரத்துப் பேசுகிறார். மற்ற மூன்று கவிதைகளும் மிக தணிந்த குரலில் பேசுகின்றன. ஆத்மாநாம் கவிதை ஒரு பிரகடனம் போல் துவங்கினாலும் ஓர் அரசு இயந்திரம் தனிமனிதனை எவ்வளவு கட்டுப்படுத்துகிறது என்பதை துல்லியமாகப் பேசுகிறது.
எனது சுதந்திரம்
அரசாலோ தனிநபராலோ
பறிக்கப்படுமெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்
இதற்கு நிகராக அரசை அச்சுறுத்தும் கவிதைகள் தமிழில் மிகக் குறைவு. ஒரு கவிஞனின் அசலான கண்டுபிடிப்பு. என்னை கண்காணிக்கத் துவங்கியபின் உனக்கு ஏது உறக்கம்? மக்களை காக்க வேண்டிய அரசு ஓர் இரவு நேர கூர்க்காவை போல தெருவில் அலைகிறது. எல்லோரையும் சந்தேகப்படுகிறது. அதன் ஆன்மா அச்சத்தால் நடுங்குகிறது. அதன் உடம்பெங்கும் சந்தேகத்தின் கண்கள். ஆத்மாநாம் அரசுக்கும், ஒரு தனி நபருக்குமிடையே இரக்கமற்ற உரையாடலை நிகழ்த்துகிறார்.
உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்குப் போய் வரச் சுதந்திரம்
இவற்றுக்குள் மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் உயிர் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே
நல்ல பிரஜையாக வாழ்வதற்கு அரசு இந்த வழிமுறைகளை முன்மொழிகிறது. நாற்பது வருடங்களுக்குப் பிறகும் மிருகத்தின் கண்களைப் போல இந்தக் கவிதை மின்னுவது அதன் சத்திய ஆவேசத்திற்காகத்தான்.
மற்ற மூன்று கவிதைகளும் மெல்லிய குரல்களில் ஆனால் அழுத்தமாய் துயரத்தை பேசுகின்றன. ஞானக்கூத்தனின் கவிதை அகக்கவிதை போல் தோற்றம் அளிக்கக் கூடிய ஒரு வலிமையான அரசியல் கவிதை.
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
கடைசி வரியில் இந்தக் கவிதை சொல்லப்படாத செய்திகளைச் சொல்கிறது. வீட்டு அடுக்களையில் இருந்து புறப்பட்ட கவிதை மெதுவாக வெளியேறி சாலைக்குப் போய் நிற்கிறது. மிகவும் உக்கிரமான அரசியல் கவிதைகளை இத்தனை அகமாக எழுதமுடியும் என ஞானக்கூத்தன் சொல்லாமல் சொல்கிறார்.
சுயம்புலிங்கத்திடம் எந்தப் பிரகடனங்களும் இல்லை, ஆர்ப்பாட்டங்களும் இல்லை. தன் வாழ்வை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் முன் வைக்கிறார். ஒரு சிறிய கசப்பான புன்னகையோடு. அது நமக்கு அத்தனை பாரத்தை தருகிறது.
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது.
கால் நீட்டி தலை சாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது.
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது.
ஒரு போராட்டத்தில் உரக்க எழுப்பபடுகின்ற கோஷங்கள், தீவிரமாக முன் வைக்கப்படும் அரசியல் வாதங்கள், பொருளாதாரப் புள்ளி விவரங்கள், பங்குச்சந்தை நிலவரங்கள் எல்லாவற்றையும் மென்றுத் தின்ற உக்கிரமான கவிதை வரிகள்.
இசையின் கவிதை நம் காலத்துத் துயரம். பெரும் தத்துவம் கைவிடும்போது எங்கு போய் ஒண்டுவது? இன்னும் அதில் எந்த நம்பிக்கையில் நிற்பது? பகடியின்வழிதான் தோல்வியின் வலியைத் தாண்ட வேண்டும். துயரக் கடலில் இருந்து வெளியேற வேண்டும். பெரும் பாலைவனத்தில் நம் நிழலில் நான் நிற்க வேண்டிய துயரம்.
நண்பா…
சேகுவேரா பனியன்
சேகுவேராவிற்கே கூட
அவ்வளவு பொருந்துமா என்பது சந்தேகந்தான்”
என்று சொன்னேன்.
இருவரும் வாய் பிளந்து சிரித்தோம்.
பிறகு,
அலுவலகங்களுக்கு விடுப்பு சொல்லிவிட்டு
ஒரு மதுவிடுதியில் சந்தித்துக் கொண்டோம்.
நான்காவது ரவுண்டில்
லாலிபாப் முன்னிலையில்
கட்டிக்கொண்டு அழுதோம்.
அலுவலகத்திற்கு போகின்றவனுக்கு எதற்கு சேகுவரா? தேவைப்படுகிறாரே? அப்படி அவரை ஒளித்துவிட முடியுமா? அப்படி விடுப்பெடுத்து மது விடுதிக்கு போகின்றவர்கள். நான்காவது ரவுண்டில் அழத்தான் வேண்டும். அந்தி மங்க வெளிவரும்போது சூரியன் மொத்த நிலத்தையும் சிவப்பாக்க அதைப் பற்றிக் கொண்டு வீடு திரும்ப வேண்டும். நம் சமகாலத்தின் தத்துவச் சிக்கல்களையும், வரலாற்றுத் துயரங்களையும் ஒரு மீன் விற்பவனை போல சைக்கிள் பின் கேரியரில் வைத்துக் கொண்டு அலட்சியமாய்ப் போகிறார் இசை.
நான்காவது பிரிவாக இந்த மூன்று கவிதைத் தொகுப்புகளைப் பற்றி உரையாடலாம்.
- சந்ததிகளும் ரப்பர் உறைகளும் – சை. பீர் முகம்மது
- யட்சி – யோகி
- மகாராணியின் checkmate – ம.நவீன்
மீந்திருக்கும் வாழ்வு
கடவுள் விட்டுச்சென்றகோப்பையில்
இரண்டு சொட்டு சாராயம்
மீந்திருந்தது.
நான் முதல் சொட்டை பருகினேன்.
காலமற்ற காலத்தின்
கடைசி பிரஜையாய் நடமாடத் தொடங்கினேன்
நிறையமலைகளில் ஏறினேன்
நிறையகடல்களைக் கடந்தேன்
சைத்தான் குகைகளுக்குள் சஞ்சாரம் செய்தேன்
உச்சி மரத்தில் ஒற்றை ஆளாய்
ஓங்காரம் சொன்னேன்
இல்லாதமொழியில் இயல்பாகப் பேசினேன்
தாளங்கள் தப்பியஇசை எழுப்பினேன்
உடலை மடக்கி நடனம் செய்தேன்
கலைப்படைந்து வீழ்ந்த
என்னருகில்
கடவுள் விட்டுச்சென்றகோப்பையில்
மற்றுமொரு சொட்டு சாராயம்
மீந்திருந்தது.
கதவடைப்பு
வீட்டின் கதவை
நிரந்தரமாக அடைப்பது பற்றி
இன்று முடிவெடுத்தேன்
வீட்டின் கதவை நிரந்தரமாக அடைப்பது
வீட்டையும் சேர்த்து அடைப்பது போலதான்
வீடு இருந்தும் இல்லாதது போன்ற
மறைவை
அது உருவாக்கும்
அடைக்கப்பட்டிருக்கும் வீடுகள்
தன்னகத்தே கொண்டுள்ள வினோத
கதைகளில் ஒன்றினை
என் வீடும் கால ஓட்டத்தில்
சுயமாக உருவாக்கிக்கொள்ளும்
சூனியத்தை மட்டுமே
கக்கும் வீட்டைக் கொண்டிருக்கப்போகும்
நான்
இனி
தெருவில் நடப்பவருக்கு நிரூபிக்க எதுவும் இல்லை
வீட்டின் உள்ளே உள்ள கண்ணாடித்தொட்டியில்
மீன் உயிர்த்திருக்கிறதா என்றும்
சுழலும் போது மின்விசிறி
சப்தமிடுகிறதா என்றும்
அன்புள்ள மனிதர்களின்
நடமாட்டம் இருக்கிறதா என்றும்
இனி நிரூபிக்க ஒன்றும் இல்லை
***
பூட்டிய வீடுகள்
வீட்டின் கதவை பூட்டுதல்
அதை திறந்து வைத்திருப்பதைவிட
பாதுகாப்பற்றது
பூட்டியிருக்கும் வீடுகளில்
மர்மக்கதைகள் உலாவுகின்றன
தெருவில் போகும் மனிதர்கள்
நினைக்கும் உருவங்களின் நிழல்கள்
பூட்டியிருக்கும் வீட்டில் படிகின்றன
பூட்டிய வீடுகளின் வரலாற்றை
சுமப்பது சிரமம்
அது காலத்துக்குக் காலம் மாறுகின்றன
பூட்டிய வீட்டின்
பூட்டின் அளவைப் பொறுத்து
அதன் உள்ளுள்ள பிரமாண்டம்
முளைத்தெழுகிறது
பூட்டப்பட்ட வீடுகள் பாதுகாப்பற்றவை
அவை
பலநூறு வாசல்களை
சுயமாக உருவாக்கிக்கொள்கின்றன.
ம.நவீன்
உலக வரைபடத்தில் ஒரு கண்ணீர்த்துளி
சாத்தான்
ஆசிர்வதித்து அனுப்பிய பெட்டியில்
ஒரு நாட்குறிப்பு இருந்தது
நாள் குறிப்பின்
ஒரு பக்கத்தில்
தேவதைகளில் அழிவைப்பற்றி குறிப்பிட்டிருந்தது
அடுத்த சில பக்கத்தில்
கடவுள்களின் துர்மரணங்களை சித்தரித்திருந்தது
அடுத்தடுத்த பக்கங்களிலும்
சாத்தான் அழிவுகளையே கோடிகாட்டியிருந்தது
அழிவுகளின் ஓலங்களை தாளமுடியாமல்
நாட்குறிப்பை மூடும்போது
மனிதமும் அழிந்திருந்தது
நாட்குறிப்போடு சாத்தான்
பிணங்களையும் பெட்டிக்குள் கிடத்தி
போதி மரத்தின் கீழ் புதைத்தது
பிறகு சிரித்து
எது நடந்ததோ
அது சரியாகத்தான் நடந்தது என்றது.
***
இவ்வுலகில்
யாரையும் யாரிடமிருந்தும்
காப்பாற்ற முடியவில்லை
ஆணிடமிருந்து பெண்ணையும்
முதலாளிகளிடமிருந்து தொழிலாளர்களையும்
பூக்களிடமிருந்து வண்டையும்
பகலிடமிருந்து இரவையும்
பிசாசிடமிருந்து கடவுளையும்
கடவுளிடமிருந்து தேவதைகளையும்
எதனிடமிருந்தும் எதையுமே காப்பாற்ற முடியவில்லை
ஆனாலும்
காப்பாற்றப்பட்டும், காப்பாற்றியும் இருக்கின்றன
சார்ந்து இருக்கும் எதும் எப்பவும்
சில தருணங்களில் சில சந்தர்ப்பங்களில்
***
முன்பொரு காலம்
என்றொரு காலம் இருந்தது
வரையருக்கப்பட்ட காலம் அது
கடவுள்கள் புணர்வதற்காக
பூமிக்கு வந்து போய்க்கொண்டிருந்த காலம்
காதலர்கள் கள்ளத்தனமாக
புணர்ந்து கொண்டனர்
காமம் தீராத முதியவர்கள்
உள்ளத்தால் புணர்ந்து கொண்டனர்
கால வரம்பின்றி யார்யாரையும்
புணர்ந்துகொள்ளும் காலம் அது
கட்டுடைப்புகள் சர்வசாதாரணமாக
நிகழ்ந்து கொண்டிருந்தன
அந்தக் காலத்தில் நிறங்கள் இல்லை
வாசங்கள் இல்லை
ராஜாக்களும் மந்திரிகளும்கூட இல்லை
எல்லாமும் சரியாக
மிகச் சரியாக கட்டமைக்கப்பட்டிருந்தது
முன்னொரு காலத்திலிருந்த
அந்த முன்னொரு காலம்
இன்னும் பத்திரமாகவே உள்ளது
அந்த முன்னொரு காலத்தில் …
***
பிரிவதற்கு முடிவெடுத்த பின்
சிலவற்றிற்கு ஆய்த்தமாக வேண்டியுள்ளது
பிரிவதற்கான மனதை
பிரிவைப்பற்றி விசாரிக்கப்போகும்
மூன்றாம் தரப்பினருக்கான பதிலை
கூடி திரிந்த இடங்களுக்கு
ஒருமையில் செல்லப்போவதை
விரிந்து கிடக்கும் அகன்ற கட்டிலை விடுத்து
ஒற்றை கட்டிலில் உடலை சுருக்கப்போவதை
சேர்த்து எழுதின பெயரை மீண்டும்
பிரித்தெடுப்பதை
ஆசையுடன் போட்டுக்கொண்ட
சில நகைகளை
கழட்டி எரிவதை
இன்னும் இத்யாதி இத்யாதிகளை
பிரிவதற்கு ஆய்த்தமானவைகளை ஆய்த்தபடுத்திக் கொண்டாலும்
இன்னும் இன்னமும்
ஆய்த்தமாக முடியவில்லைதான் பிரிவதற்கு….
யோகி
இந்த மூன்று தொகுப்புகளும் மைய நிலமான தமிழகத்தில் இருக்கும் பதிப்பகங்களிலிருந்து வெளிவந்தவை. சை.பீர் முகம்மது தொகுப்பிற்கு யவனிகா ஸ்ரீராம் முன்னுரை எழுதியிருக்கிறார். மூன்று படைப்பாளிகளுமே மையநில படைப்பாளிகளோடு உரையாடலில் இருப்பவர்கள்தான். நவீன் கூடுதலாக உரையாடலில் இருப்பவர்.
பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து ஒரு விமர்சனம் உண்டு. மேலை நாடுகளில் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்டவை அல்லது சரி வராது என்று புறக்கணிக்கப்பட்டவை, காலாவதியானவை போன்ற தொழில்நுட்பங்கள் மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு உண்டு. இந்த மூவரின் கவிதைகளை வாசிக்கும்போதும் இதுவே நினைவுக்கு வருகிறது. தமிழ் நிலத்தில் கைவிடப்பட்ட பாடுபொருள்கள், காலாவதியான உள்ளடக்கங்கள், வழக்கொழிந்த மொழி போன்றவையே இந்தக் கவிதைகளின் பாடுபொருளாக இருக்கின்றன. மற்ற எல்லோரையும்விட இவர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ”இவர்கள் தாம் செய்வது இன்னதன்று அறியாதவர்களல்ல”. ’டிக் டிக் டிக்’ படத்தில் வில்லன் ஒரு முத்தாய்ப்பு (பஞ்ச்) வசனம் பேசுவார் – “எனக்கு எல்லா நியாயங்களும் தெரியும் எல்லா தர்மங்களும் தெரியும்”. அப்பறம் செத்தும் போய்விடுவார். இங்கு கவிதைக்கு அதுவே நிகழ்கிறது.
மலேசியக் கவிதைகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாமே தமிழ் நிலத்திற்கும் பொருந்தும். ”மலேசியாவில் நிகழும் அபத்தங்கள், அருவருப்பான விவகாரங்கள், முகஸ்துதிகள், கொடுக்கல் வாங்கல்கள், மோசடிகள் எல்லாம் தமிழ்நாட்டிலும் உண்டு. ஆனால் இதற்கு நடுவே கவிதை ஒரு சீரிய இயக்கமாக காலங்காலமாக தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. காத்திரமான கவிஞர்களும் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அந்தப் பட்டியல் நீளமானது. (இது தரவரிசையல்ல) பிரமிள், ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி, தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்ரமாதித்தியன், ந. ஜெயபாஸ்கரன், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், உமா மகேஸ்வரி, பிரம்மராஜன், யுவன், ரமேஷ் பிரேதன், பெருந்தேவி, சபரி நாதன், ஸ்ரீநேசன், லிபி ஆரண்யா, இசை, ஷங்கர்ராமசுப்ரமணியன், இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், போகன் சங்கர். நான் தமிழில் எனக்குப் பிடித்த என் நினைவில் தங்கியிருக்கக் கூடிய சில கவிதைகளை முன்வைப்பது இந்த விவாதத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கும்.
ஒரு சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்
ஒரு நாற்காலியின் பயன்பாட்டைவிட பலமடங்கு அதிகமானவை.
நாற்காலியை இழந்துவிடுவோம்
என்கிற பயத்திற்கு இதில்
அவசியமே இல்லை
எந்த நியாயமான, நியாயமற்ற
காரணத்திற்காகவும்
நாற்காலியை யாருக்கும்
விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை
எல்லோரும் நின்றுகொண்டிருக்கும் வரிசையில்
நாம் நிற்க வேண்டியதில்லை
நமது பின்புறத்தைக் காட்டி
யாரையும் அவமானப்படுத்த நேர்வதில்லை
புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை
நாட்டின் முதல் குடிமகன்கள்
சபையில் நுழையும்போது
நம் இருக்கைகளிலிருந்து பதட்டமடையவேண்டியதில்லை
கீழ்நிலை ஊழியர்களை
ஒருபோதும் அமரச்சொல்லாத
எஜமானர்களின் தந்திரங்கள்
நம்மிடம் பலிப்பதில்லை
இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளில்
பங்கேற்கவேண்டியதில்லை
தேசியகீதம் பாடும்போது
எழுந்து நிற்கவேண்டியதில்லை
யாருக்கும் வழிகாட்டிச் செல்லவோ
யாரையும் பின்தொடரச் செய்யவோ
யாரோடும் இணைந்து நடக்கவோ
வேண்டியதில்லை
எந்த இடத்திலும்
முண்டிக்கொண்டு செல்லவேண்டியதில்லை
முக்கியமாக
சக்கரநாற்காலிகள்
பூமியின் எந்த மையத்தோடும்
பிணைக்கப்படுவதே இல்லை.
மனுஷ்யபுத்திரன்
க்ரீம்ஸ் ரோடில் ஒரு காலத்தில் எனக்குச்
சிரிப்பு இருந்தது.
நட்பு நட்பாக இருந்த காலம்
யாருக்குத்தான் இருந்திருக்காது
ஆனால் பாருங்கள் அது இறந்தகாலம்
க்ரீம்ஸ் ரோட் சென்னை 600 006
இறந்த காலத்தில்
பேபிக் கடை தேநீர்ச் சுவை
பேபி இப்போதில்லை
நண்பர்களின் பரிசுத்தக் கண்கள்
என் கண்களும்தாம்
அவை அப்போதெல்லாம் பளிங்காக இல்லை
அதன் பின் எத்தனை நகரங்கள், கஃபேக்கள், பார்கள்
360 டிகிரி வியர்த்தம்
ஆன்மாவின் உருக்குலைவு
ஆனால்
மாற்றத்துக்குத்தான்
எத்தனை தடித்த குரல்!
‘எல்லாம் முடிந்துவிட்டது’
நிஜமாகவா
மாற்றக் கடவுளுக்கு முன்
மண்டியிட்டுக் கதறி அழுபவர்கள்
இரவில்தான் அழுவார்கள்
நிலாவின் ஒரு துண்டத்தோடுதான்
துக்கத்தை விழுங்க முடியும்
பின்னர்
அடுத்த நாள்
புன்னகைகள், அளவளாவல்கள்
எதுவும் நடக்காதது போன்ற பாவனை
அந்த தேநீரைச் சுவைக்கும் போது
நான் செத்ததுதான்
கடைசியாகச் செத்தது
பெருந்தேவி
வகுப்பிலேயே மிக அழகான பெண்
அவளை நாங்கள் எல்லோருமே காதலித்தோம்
சீனியர் பலரும் ஆசிரியர் சிலரும் கூட.
அவளுக்குத் தெரியும் தான் அழகாய் இருப்பது ஆனால் ’அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது’
என்பது போலத் தான் நடந்துகொள்வாள்.
பூச்செண்டுகளோ வாழ்த்தட்டைகளோ எது கொடுத்தாலும் முகம் சுளிக்காது
வாங்கிக்கொள்வாள்.எங்கு அழைத்தாலும் பிகு செய்யாமல் வந்திடுவாள்.
நான் அவளோடு சுற்றியதில்லை காதல் கடிதம் தந்திருக்கிறேன்.மறுநாள் காலை எனை
அழைத்து கடிதம் நன்றாக வந்திருப்பதாகவும் தொடர்ந்து எழுதித் தருமாறும் கூறினாள்.
பிறகவள் என்ன ஆனாள் என்று யாருக்கும் தெரியாது.
கல்லூரி விரிவுரையாளருடன் ஓடிப்போனதாகவும்,மேற்படிப்பிற்கு லண்டன் சென்றதாகவும்
ஒரு பேச்சு இருந்தது.சிலர் கூறினர்
அவள் பாலிவுட்டில் நடிக்க முயற்சிக்கிறாளென,சிலர் கூறினர்
மார்பகப் புற்றுநோயுடன் கடற்கரை சிற்றூர் ஒன்றில் ஒண்டியாய் வசித்து வருகிறாளென.
நேற்று,முன்னால்-மாணவர்-கூடுகைக்கு வந்திருந்த அவளைக் கண்டபோது நான்
நினைத்தேன் ஒருவேளை எல்லா வதந்திகளும் உண்மையாக இருக்குமோவென
தவிர இப்போது அவள் கிடையாது
வகுப்பிலேயே மிக அழகான பெண்.
ரெட்டைப் பின்னலிட்டு சீருடை அணிந்தே வந்திருக்கலாம்;பொருத்தமற்ற
சிங்காரமும் மிகையான உடல்மொழியும்…
முடி கொட்டி முடித்த நண்பன் கூறினான் “அவள் ஏன் அலுப்பூட்டும் மேஜிக் ஷோவை
அரங்கேற்றுகிறாள்”
கூலர்ஸும் குழந்தைகளுமாய் வந்திருந்த சகமாணவிகள் கண்டுகொள்ளவே இல்லை.
மேஜை மேல் நிற்பதைப் போல,நின்ற படியே மே ஐ கம் இன் கேட்பவளைப் போல
காட்சியளித்தவள் சொல்லிக்கொள்ளாது கிளம்பிவிட்டாள் இடையிலேயே.
பள்ளியில் இருந்து ரயில்நிலையம் செல்லும் பாதையில்
அவள் ஒரு சரக்கு லாரியை வாயில் கட்டி இழுத்து நடந்ததை
என் வாழ்நாளில் மறக்கமுடியாது.
சபரிநாதன்
மனுஷ்யபுத்திரனுடைய கவிதை. கவிதைக்குள் ஒரு பொருளை அதிகபட்சமாக எவ்வளவு கையாள முடியுமோ, எவ்வளவு அதை உடைக்க முடியுமோ, எவ்வளவு அதைக் கொண்டு பயணிக்க முடியுமோ, இதற்கு மேல் இதை பயன்படுத்தவே முடியாதோ, அதற்குமேல் அதைக் கொண்டு யாரொருவரும் அதை எழுதவே முடியாதோ என்ற எல்லா சாத்தியப்பாடுகளையும் இந்தக் கவிதை எழுப்புகிறது, இந்தக் கவிதையை மிஞ்சி தமிழில் இனி ஒருவர் சக்கர நாற்காலியைப் பற்றி எழுதினால் அது சாதனைதான். சக்கர நாற்காலியை மனுஷ்யபுத்திரன் தன் கவிதை மூலம் வேறெங்கும் உருள முடியாதபடி முடக்கி விட்டார். இதற்கு மேல் தமிழ் கவிதைகளில் சக்கர நாற்காலி உருண்டால் அது கடவுளின் கடாட்சம்தான். மனுஷ்யபுத்திரன் அதை உலகின் விளிம்பு வரை உருட்டிக் கொண்டு போய்விட்டார். இது போன்ற கவிதைகள்தான் கவிதைகளை எப்பொழுதும் வெளிச்சத்தோடு வைத்திருக்கிறது.
பெருந்தேவியின் கவிதை நாம் மெல்ல மெல்ல தடித்த தோலர்களாக, அறவுணர்வை தவற விடுபவர்களாக சிறுமையை தலையணையாய் வைத்து உறங்க கூடியவர்களாக, நம் ஆன்மா மரிப்பதை நாமே பார்க்க கூடியவர்களாக மாறும் தருணைத்தைப் பற்றி பேசுகிறது.
அதன் பின் எத்தனை நகரங்கள், கஃபேக்கள், பார்கள்
360 டிகிரி வியர்த்தம்
ஆன்மாவின் உருக்குலைவு
ஆனால்
மாற்றத்துக்குத்தான்
எத்தனை தடித்த குரல்!
‘எல்லாம் முடிந்துவிட்டது’
நிஜமாகவா
மாற்றக் கடவுளுக்கு முன்
மண்டியிட்டுக் கதறி அழுபவர்கள்
இரவில்தான் அழுவார்கள்
நிலாவின் ஒரு துண்டத்தோடுதான்
துக்கத்தை விழுங்க முடியும்.
ஆன்மா அழுகிப் போவதை உக்கிரமாய் தமிழில் சொல்லும் சொற்ப கவிதைகளில் இதுவும் ஒன்று.
சபரிநாதனின் ’வகுப்பறையிலேயே மிக அழகான பெண்; ரஷ்ய சிறுகதைகளை நினைவூட்டக்கூடியவை. எதார்த்தவாத நுணுக்கமான தகவல்கள் நிறைந்த, நடந்துகொண்டிருக்கும் பென்குயின் பறவை திடீரென மேலெழும்பி பறப்பதைப் போன்று முடியும் கவிதை.
நுணுக்கமான தகவல்கள், நுணுக்கமான கவிதையை மேலும் மேலும் நம் அகத்திற்குள் வரச் செய்கின்றன. ஒவ்வொரு நுணுக்கமான தகவலும், வெறும் தகவல் அல்ல ஒவ்வொன்றின் பின்னும் வேறொன்று மறைந்திருக்கிறது. நமக்குத் தெரிந்த ஆனால் நாம் காண விட்டுப் போன நுணுக்கத் தகவல்கள்.
”நான் அவளோடு சுற்றியதில்லை காதல் கடிதம் தந்திருக்கிறேன்.மறுநாள் காலை எனை
அழைத்து கடிதம் நன்றாக வந்திருப்பதாகவும் தொடர்ந்து எழுதித் தருமாறும் கூறினாள்.
பிறகவள் என்ன ஆனாள் என்று யாருக்கும் தெரியாது”.
”தவிர இப்போது அவள் கிடையாது
வகுப்பிலேயே மிக அழகான பெண்.
ரெட்டைப் பின்னலிட்டு சீருடை அணிந்தே வந்திருக்கலாம்;பொருத்தமற்ற
சிங்காரமும் மிகையான உடல்மொழியும்…
முடி கொட்டி முடித்த நண்பன் கூறினான் “அவள் ஏன் அலுப்பூட்டும் மேஜிக் ஷோவை
அரங்கேற்றுகிறாள்”
”சொல்லிக்கொள்ளாது கிளம்பிவிட்டாள் இடையிலேயே.
பள்ளியில் இருந்து ரயில்நிலையம் செல்லும் பாதையில்
அவள் ஒரு சரக்கு லாரியை வாயில் கட்டி இழுத்து நடந்ததை
என் வாழ்நாளில் மறக்கமுடியாது.”
தற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட மகத்தான கவிதைகளில் ஒன்று இது.
மலேசிய கவிஞர்களிடம் மைய நிலத்து கவிஞனாக கவிதையின் மீது பெரும் காதல் கொண்டவனாக எனக்கு சில கேள்விகள் உண்டு நான் பிரித்துவைத்த இந்த நான்கு வகைமைகளுள் முதல் வகைமையை விட்டுவிடலாம். பின்னதாக இருக்கும் மூன்று வகைமையினருக்குத்தான் இந்தக் கேள்வி.
இந்த மலேசிய கவிதைத் தொகுப்புகளில் தனித்த அடையாளமுண்டா? மொழியுண்டா? பாடுபொருளுண்டா? மலேசிய நிலம் இந்தக் கவிதைகளில் உண்டா? மலேசியாவிற்கே உண்டான பிரத்யேகப் பிரச்சனைகள் இந்தக் கவிதைகளில் உண்டா? மலேசியாவின் கலாச்சார அடையாளங்கள் உண்டா? இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க மகத்தான தமிழ்க் கவிதையின் தொடர்ச்சியில் மலேசிய கவிதை எங்கு நிற்கிறது?
ஊழிப் பெருந்தினத்தில் உலகம் அழியப் போகும் வேளையில் காக்கப்பட வேண்டியது என கடவுள் கருதியவற்றை ஜோடிக்கொன்றாய் தனது நோவா கப்பலில் ஏற்றிக் கொண்டதாய் விவிலியம் சொல்கிறது. நமது மொழியென்னும் கலமும் பல்வேறு அழிவுகளுக்கு மத்தியிலும் சேதங்களுக்கு மத்தியிலும் மகத்தானதை சுமந்துக் கொண்டு யுகங்களைக் கடந்து வந்துகொண்டேயிருக்கிறது. மலேசியாவிலும் கடல் இருக்கிறது. அந்தக் கப்பல் வந்து கொண்டேயிருக்கிறது.
கவிதை தொகுப்புகள் குறித்த பார்வை தெளிவு, உள்ளடக்கம் அருமை…தொகுப்புகளை வகைத் தொகைப்படுத்தி விமர்சனம் செய்திருக்கின்ற கவிஞருக்கு வாழ்த்துகள்..ஹைக்கூவோ பிறவோ இலக்கியக் கட்டுக்குள் அடங்காமல் மிகையுணர்ச்சியால் சொல்லப்படினும் அது வாசிப்பாளனின் இதயத்தில் ஊடுருவினால் அது நல்ல கவிதையே…
முன்னேர் சொன்னதற்காக பின்னேர்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை..
எதுவும் புதிதாய் முளைக்கக்கூடும் என்பதே இயற்கை…