காலத்தைக் கிழித்துக் கொண்டு வரும் இயற்கையின் பூதாகரமான கரங்களால் இந்த நாவல் தன்னைத் தானே வடித்துக் கொண்டதாகதான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த நாவலுக்குள் வந்து போன ஒவ்வொரு வாழ்க்கைக்குமான துயரம் ஓர் இரும்பு பிடி போல நம்மை உலுக்குபவை. இறுதியில் இந்த வாழ்க்கை, துயரத்தைப் போர்த்திக்கொண்ட வெறும் தூசுபடலம்தானோ என்ற வெறுமையின் உச்சத்தைக் கண்டடைகிறேன்.
ஒரு பிரக்ஞையற்ற நிலையில் நாவலின் எல்லா திசைகளிலிருந்தும் ஊடுருவி வரும் ஒரு பேரிருளுக்குள் வாழ்வின் மிக சூட்சமமான தத்துவம் ஒளிபெறுகிறது. இந்த நிலம் இந்த மனிதர்கள் இந்த உறவுகள் என எல்லாவற்றின் மீதும் பற்றறுக்க மறுக்கும் மானுட மனத்தின் பாதகமான இன்னொரு முகத்தை நாவல் சொல்லிச் செல்கிறது. ஆனால், நாவல் சொல்லியிருப்பது அதை மட்டுமே அல்ல. ஒரு மூன்று தலைமுறைகளைக் கொண்டியங்கும் இக்கதைக்குள் திரும்பிய திசையெல்லாம் துயரக் காற்றின் வெப்பம்.
1999–இல் ராமசாமியின் வீட்டில் ஒரு மூவந்தி பொழுதின்போது பேச்சியம்மன் முன் தொடங்கிய நாவல் காலத்தாலும் இடத்தாலும் முன்னும் பின்னுமாக சுழன்று சுழன்று இறுதியில் அதே பேச்சியின் முன் அதே இடத்தில் மூன்றாவது தலைமுறையில் முழுமையடைகிறது. நரைத்த முடியுடன் வயதாகிவிட்டிருக்கும் ராமசாமியையும் அவர் வணங்கும் பேச்சியையும் முதலிலிருந்து அறிய, கதை நம்மை தமிழகத்தில் தள்ளுருக்கெவ எனும் மலைகிராமத்திற்கு அழைத்துச் செல்கிறது.
கொப்பேரனுக்கும் காத்தாயிக்குப் பிறந்த ஆறாவது மகன் ராமசாமி. அவருக்கு முன் பிறந்த 5 பெண் குழந்தைகளுமே மர்மமாக 16-ஆவது நாளில் இறந்துவிட்டனர். ஆனால், ஒவ்வொரு குழந்தைகளின் மரணத்துக்குப் பின்னும் மிக விரைவில் இயல்பு நிலைக்கு மீளும் காத்தாயியின் முரண்பட்ட நிதானம் கொப்பேரனை நிம்மதி இழக்கச் செய்கிறது. அவளின் பின்புலம் அறிய அவளின் ஊருக்குச் சென்ற கொப்பேரன் குழந்தையைத் தின்னும் கோலத்தில் பேச்சியின் ஆங்காரச் சிலையைக் கண்டு அதிர்ச்சியில் நடுங்குகிறார். வளையல் சடங்கைப்பற்றியும், அதற்கு உடன்படாத பெண்கள் மலையிலிருந்து தள்ளிக்கொல்லப்பட்டதையும் அங்கிருந்த ஒரு முதியவர் வழி அறிந்து கொண்டார். காத்தாயிதான் பேச்சி என்பதே அந்த முதியவரின் அனுமானம். பகலிலும் இரவிலும் வெவ்வேறு படிமங்களாக காத்தாயி அவரது கற்பனைகளை நிரப்பத் தொடங்கினாள். அப்போது அவள் கர்ப்பிணி. பிறந்த குழந்தையை (ராமசாமி) காக்க கற்பனையளவில் மட்டுமே இருந்து காரணங்களைப் பிடித்துக்கொண்டு ஒப்பாரியோடு தொடங்கிய கொப்பேரனின் தனிப்பயணம், அவரறியா திசைகளை அவரறியா புதிய உலகை புதிய வீதியை, புதிய மனிதர்களை எப்படி எப்படியோ கடந்து இறுதியாய் மலாயாவில் வந்து நிற்கிறது.
இந்த ஒரு பயணம் வெறுமனே ராமசாமியின் பூர்வீகத்தை மட்டும் நாவலுக்குள் இழுத்துக் காட்டுவதற்கானதல்ல. வாழ்வின் மிக பாதகமான சந்தர்ப்பங்களில் நாமே நமக்கு வழிய நிகழ்த்திக்கொள்ளும் ஒரு பெரும் நீண்ட நிரந்தர பிரிவின் வலியை முன்வைத்துச் செல்கிறது. நாவலைப் படித்து முடித்த எத்தனையோ பல இரவுகள் காத்தாயியின் நிலை குறித்த உள்ளிருந்து எழும் எத்தனையோ கேள்விகள் என்னை தாக்கியுள்ளது. அந்த ஒரு பிரிவிற்குப் பிறகு நாவலின் எந்தத் திக்கிலும் நான் தேடித் திரிந்த காத்தாயியைக் காணவே முடியவில்லை. அது இந்த நாவலின் பலம். அப்படி மீண்டும் பார்க்க முடியாததால்தான் காத்தாயி என்னை அதிகம் பாதிக்கிறாள். கதை ஓட்டத்தின் சீர்மைக்காக மைய மனிதர்களின் பூர்வீகம் சொல்ல வெறுமனே காலத்தை அதன் எதிர் திசையிலிருந்து திருப்பிச் செலுத்தும் சில நாவல்களுக்கு மத்தியில் காத்தாயி தனித்து நிற்கக்கூடும், இது வெறும் காலத்தை மட்டும் இழுத்துப் பிடிக்கும் எளிய பின்னோட்டமல்ல. காலத்துக்குள்ளிருந்து கிளம்பி வரும் ஒரு பெரும் வலியை, தீங்கை, இழப்பை நிகழ்த்திச் செல்கின்ற களம்.
கதையின் மையப்பாத்திரமென கருதக்கூடிய மிகச் சிலரில் ஓலம்மாவுக்கான இடம் மிக முதன்மையானது. ராமசாமியைப் போலவே ஓலம்மாவுக்கான பின்புலமும் தமிழகத்திலிருந்தே தொடங்குகிறது. துணிச்சல்மிக்க பெண்ணாக இருக்கும் ஓலம்மா கதையின் பல சந்தர்ப்பங்களில் கடலைக் கண்டு அஞ்சுகிறாள். அதை முடிந்த வரை தவிர்க்கவும் செய்கிறாள். எனவே, ஓலம்மாவை நாம் கடலிலிருந்துதான் அறியவும் முடிகிறது. விளையாத பூமியில் வறுமையை தூர விரட்ட பச்சை வயல் நடுவே சுற்றித்திரிய போகும் தீராத கனவுகளோடு சிறுமியாக அப்பாவோடும் அம்மாவோடும் மலாயாவுக்கு பயணமான கப்பல் பயணத்தில்தான் கடல் அவளுக்கு தூரமாகிப்போனது. கப்பலில் நோயுற்று இறந்துவிட்ட அப்பாவின் சடலம் அவள் கண்ணெதிரே கடலில் வீசப்பட்டது. அப்பாவை விழுங்கிய கடலை ‘நிலவு கடலில் ஒரு வெள்ளி மீனின் முதுகு போல தவழ்ந்ததாக ம.நவீன் எழுதியிருக்கிறார்’. ம.நவீனின் கற்பனையில் வந்த வெள்ளி மீனின் முதுகை அவர் நமக்கும் வசப்படுத்துவதில்தான் நாவல் மொழியாலும் தனித்துவம் பெறுகிறது. மலாயாவில் சிறுமியாக வந்திறங்கியவளின் வாழ்க்கை எப்படி எப்படியோ கழிந்து கடைசியாக ஒருவனால் ஏமாற்றப்பட்டு தன்னுடைய 16 வயதில் கர்ப்பிணியாக லூனாஸ் ஆயெர் கெரோ தோட்டத்தை வந்தடைந்தாள். தோட்ட மக்களின் உதவியோடும் ராமசாமியின் உதவியோடும்தான் குமரனைப் பெற்றெடுத்தாள்.
இடையிலே வந்து இடையிலே போனாலும் மணியத்தை விலக்கிவிட்டு இந்த நாவலை விமர்சிக்க இயலாது. எனவே, கதைக்குப் பலம் சேர்ப்பவர்களில் மணியமும் முக்கியமானவர்தான். இவர் வெட்டியான் வேலை செய்யும் தன் அப்பாவின் அடையாளங்கள் தன்னையும் அண்டிவிடக்கூடாதென அடையாளத்தை துறக்க வீட்டை விட்டு ஓடியவர். வீட்டிலிருந்து ஓடி வந்து சிலம்பக் கலையைக் கற்று சிலம்ப குருவின் நன்மதிப்பை பெற்ற அவர் பின்னாட்களின் தோட்ட முதலாளி ஒருவரிடம் அடியாளாக வேலைக்குச் சேர்கிறார். அவர் பெரியார் பற்றாளரும் கூட. ம.நவீன் அவர்கள் மணியத்தை ஒரு மிக நல்ல வீரனாகவும் கட்டுடலுள்ள ஆணாகவுமே நமக்குக் காட்டியிருக்கிறார். அவர் ஒரு சந்தர்ப்பத்தில் தன் முதலாளியைக் கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து காப்பாற்றுகிறார். நல்ல வீசுவாசமுள்ளவரும்கூட. முதலாளியின் ஆசை நாயகியோடு ஏற்பட்ட இரகசிய உறவு முதலாளிக்குத் தெரிந்து போகவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு லூனாஸ் ஆயெர் கெரோ தோட்டத்தை வந்தடைகிறார். அங்குதான் ஓலம்மாவை திருமணம் செய்து கொண்டு வாழத்தொடங்குகிறார். நல்ல தலைவனாக அடையாளப்படுத்தும் சில சூழல்களுக்கு நடுவில் மணியத்தை நாம் கொஞ்சம் நிலையற்ற மனப்போக்கினால் குழப்பவாதியாகவும் அறியமுடிகிறது.
இந்த நாவலில் இந்த மூவரின் சந்திப்புகள் மூவேறு திசைகளிலிருந்து இணைகின்றன. நாவலைக் கட்டியிழுக்கும் மிக முக்கியமான மையச்சந்திப்புகள் அவை.
16-ஆவது வயதில் குமரனைப் பெற்றெடுத்த ஓலம்மாவுக்கும் ஊரில் ‘பொட்டை’ என கேலிசெய்யப்பட்ட ராமசாமிக்கும் இடையிலான நட்பை ஒருவருக்கொருவர் நன்மை செய்ய நினைப்பதிலும் ஆறுதல் சொல்லுவதிலும் அடையாளம் காண முடிந்தது. தனக்குள்ளான பெண்மையை ராமசாமி தாய்மையாக அர்த்தப்படுத்திக்கொண்ட இடமாக ஓலம்மா இருக்கிறாள். உண்மையில் ஓலம்மா மீது அவருக்கு இருப்பது தாயன்புதான். ஊரே தன்னைப் பொட்டை என கேலி செய்யும் தருணங்களிலெல்லாம் அவருக்குள்ளிருந்த பெண்மையை ஊனப்படாமல் மீட்டவள் ஓலம்மா. நாவலின் அநேகமான இடங்களில் ஓலம்மா தன் வாழ்வில் நடக்கக்கூடிய எல்லா கஷ்டங்களின் போதும் தேடிச் செல்லும் முதல் இடம் ராமசாமியின் வீடாகத்தான் இருந்துள்ளது. மகளின் வாழ்வுக்காக எதையுமே செய்யத் துணியும் தாயைப்போலதான் ராமசாமியும். வாழ்க்கையின் மிக துன்பகரமான சமயங்களிலும் இழப்புகளிலும் ஓலம்மா ராமசாமிக்கும் சேர்த்தே வருந்தவும் சிந்திக்கவும் செய்திருக்கிறாள். எனவே, ஒரு மகள் தாயின் பால் காட்டும் அன்பும் அக்கறையும் அதுவென நான் வகைப்படுத்திக்கொள்கிறேன். ஒட்டு மொத்த நாவலில் ராமசாமியின் வாழ்வு குறித்து ஆழ்ந்த தேடல் கொண்டோம் என்றால் அவரது மொத்த வாழ்க்கையுமே ஓலம்மாவுக்கானதாக புரியக்கூடும். அவர் செய்த கொலைகள் தொடங்கி தற்கொலை வரை எல்லாவற்றின் எல்லையிலும் ஓலம்மாவையே என்னால் பார்க்க முடிந்தது.
மணியம் ராமசாமி ஆகிய இருவருக்குமான உறவை நாவல் பெரும்பதிவாகக் காட்டவில்லை. முழு நாவலுக்குள்ளும் அவ்விருவருக்கான உரையாடலை ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காட்டிச் செல்கிறது. அந்த உரையாடலுக்கு முன்பும் பின்புமான பல காட்சிகளில் மணியத்தை ஒரு நல்ல தலைவனாகவும், நடுநிலையானவராகவும், பெரியார் பற்றாளராகவும் பார்க்க முடிந்தது. ஆனால் அப்படி அவர் உருவாக்கிய பல படிமங்களை ஒரே ஒரு உரையாடலில் உடைத்துள்ளார் நாவலாசியர். ராமசாமியின் பெண்மையைப் பகடியாக்கி காரியம் சாதிக்கும் ஒரு மிக சராசரியான ஆண்தான் மணியமும் என காட்டுகின்ற காட்சிகள் அவை. ஓலம்மாவை மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழும் அவரால் அவளது மகனை தன் மகனாகப் பார்க்க முடியாத நிலையில் அவருக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் குரூரங்கள்தான் அவை. ராமசாமியை ஒரு ‘பொட்டையாகவே’ நம்பும் மணியத்தை அந்த உரையாடலின் வழி நாம் அடையாளம் காணலாம். ஊர் மக்களுக்குத் தலைவனாக தன்னை நம்பத் தொடங்கியதால் தனக்குள்ளான இந்தக் குரூர முகம் அவருக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான். ஒருவனின் போலியான முகத்தை சமூகம் அங்கீகரிக்கும்போது அவன் அதையே உண்மையென நம்பத்தொடங்கிவிடுவது போலதான் மணியமும். அவர் உண்மையில் தன்னை நல்லவன் என்றே நம்பியிருக்ககூடும்.
மணியம் ஓலம்மா இருவரின் வழி நாம் வேறு விதமான பற்றுதலை கண்டடைய முடிகிறது. நன்மைக்கு குரல் கொடுக்கும் ஓலம்மாவைப் போலவே மணியமும் ஊரார் நன்மைக்காக முதல் குரல் கொடுப்பவர். ஊர் மக்கள் ஒரு வகையில் ஓலம்மாவின் மீது வைத்திருக்கும் அத்தனை நம்பிக்கையும் மணியத்திடமும் வைத்திருக்கின்றனர். ஒரு மனைவியாக அந்தரங்கமான நிலையில் ஓலம்மா தன் கணவனை எண்ணி பெருமிதம் கொள்ளும் ஒரு சராசரியான பெண்ணாக நாவலில் மிகச் சில இடங்களில் மட்டுமே காட்டப்படுகிறது. மணியத்தின் மனைவியாக அவரின் கோபத்தை அடியைக் கூட வாங்கிக் கொண்டு அமைதியாக போகக்கூடிய ஓலம்மா தன் தாய்மைக்கு எதிரான எதையுமே விட்டுக்கொடுத்ததில்லை. தன் தாய்மையைக் காக்க கணவனின் கழுத்தையும் கூட பிடித்துவிடக்கூடியவள்தான். மணியத்தின் அத்தனை வீரமும் சில கணம் அந்தத் தாய்மையின் முன் தோற்று மௌனம் காப்பதும்கூட ஆச்சரியமாகவே இருந்தது. அது அவரே கூட அறியாத ஒரு நுண்மையான உணர்வு. வெளியே கம்பீரமாக பேசவும் செயல்படவும் முடிந்த மணியம் ஓலம்மாவிடம் அத்தனை அதிகாரத்தையும் காட்டமுடியவில்லை.
இந்த மூவரும் ஒருவரோடு ஒருவர் முரண்பட்ட குணங்களையுடையவர்கள் என மிக மேலோட்டமான வாசிப்பின் வழி அறியலாம். ஆனால் அவர்களுக்குள் ஆழ்ந்து செல்லும் ஒரு நுட்பமான வாசிப்பின் வழி இந்த மூவருக்குமான மனநிலையில் இழையோடிக்கிடக்கும் ஒற்றுமையைப் பார்க்கமுடிகிறது. இந்த மூவரின் அழிவும் அவர்களுக்குள்ளான பற்றிலிருந்து வருவதாக புரிந்துகொள்ளலாம். ஆம், ஓலம்மாவின் மீது இருந்த பற்றால் தாயன்பால் கொலையும் செய்யத்துணியும் ராமசாமி இறுதியில் அதன் பொருட்டே தற்கொலையும் செய்கிறார். தன்னைச் சுற்றி உள்ள உயிர்களுக்குத் தன்னை தாயாகவே கற்பனை செய்து அதன் மீது தீராத பற்றுக் கொண்ட ஓலம்மா கடைசியில் அந்தத் தாய்மையின் உச்சநிலை அடைந்தவளாக தற்கொலை செய்கிறாள். அதேபோல, மணியத்தின் சதை பற்றுதலாலேயே அவருக்கு மரணம் நேர்கிறது. மனிதன் தன்னை அறியாமல் ஒன்றின் மீது வைக்கும் அதீத பற்று என்றோ எப்படியோ அவனுக்கு எதிராக திரும்பி நிற்பதை இந்த மூவரிடமிருந்து என்னால் அறிய முடிந்தது.
லூனாஸ் ஆயெர் தோட்டதில் இன்றளவும் மிக முக்கியமான துர்நிகழ்வாக பேசப்படும் வரலாற்றை இந்நாவல் பதிவு செய்கிறது. ஏறக்குறைய 38 ஆண்டுகளைக் கடந்து விட்ட அந்த வரலாற்றை முதல் முறையாக இந்த நாவலில் இலக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக சாராய போதைக்கு அடிமைப்பட்டுவிடும் தோட்ட மக்கள் சின்னி எனும் சீனப் பெண்ணின் சாராயத்தோடு அவளது கவர்ச்சிக்கும் அடிமைப்படுகின்றனர். அவள் சாராயம் காய்ச்சும் நுணுக்கங்கள் நாவலில் சுவாரசியமாகவே சொல்லப்பட்டுள்ளது. சின்னி புதிதாக வந்தவள் என்றாலும் அதற்கு முன் அந்தத் தோட்டத்தில் சாராயம் விற்றவரும் ஒரு சீனரே. கவர்ச்சியான சீனப்பெண்ணாகிய சின்னியின் வருகையில் அந்தச் சீனரின் வியாபாரம் வெகுவாக குறைந்துவிட்டிருந்தது. தோட்டத்து மக்களில் பெரும்பாளானோர் தண்ணீர்மலைக்குச் சென்றிருந்த ஓர் இரவு தோட்டத்தில் எல்லா திசைகளிலிருந்து வரும் அலறல் ஓசை மரண செய்தியாக முடிந்தது. அந்த வலியையும் மரணத்தையும் உறவுகளின் அலறலையும் ம.நவீன் காட்சியாக்கியிருப்பது உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கக்கூடியது. இயல்பாகவே உணர்வுகளை நகல் எடுத்துக் காட்டும் அவரது மொழி இந்நாவலில் இன்னும் இன்னும் ஆழச் சென்று உணர்வை தட்டியெழுப்புகிறது. ஒரு பெரும் அழுகைக்கும் கதறலுக்கும் பின் இன்னும் அழ வழுவில்லாத போது ஒரு வாசனைப் போல எல்லா இடங்களிலிலும் கவிந்திருந்த அழுகையின் அரூபத்தன்மையைக் காட்டக் கூடிய மொழி அவருடையது. இறந்தவர்கள் சின்னியின் சாராயம் அருந்தியர்வர்கள் என மணியத்தின் யூகம் சரியாக உள்ளது. சின்னி காய்ச்சிய சாராயத்தில் அவளுக்கே தெரியாமல் யாரோ எதையோ கலந்திருப்பது அவளுக்கே தாமதமாகத்தான் தெரிய வந்தது. நிலைமை அறிந்து தப்பிக்க நினைத்த சின்னியின் சூழலை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளைக் காப்பாற்றுவதாகக் கூறி உறவு கொள்கிறார். தான் காணும், சிந்திக்கும் உணரும் எல்லாவற்றையும் சொல்ல முடிந்த எழுத்தாளனால் காமத்தையும் அப்படியேதான் சொல்ல முடிகிறது.
மணியம் செய்த குற்றத்துக்காக ஓலம்மா அவரறியா நிலையில் நிரந்தரமாக உறங்க வைக்க காத்துக்கொண்டிருப்பதை ம.நவீன் இப்படிச் சொல்கிறார். “நெருக்கிய இருளில் உருட்டிய இருவிழிகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன’ மூக்கில் ரத்தக் கசிவை மின்னல் ஒளியில் கண்டு கொண்ட மணியம் அதற்கான காரணத்தை ஓலம்மாவின் உருட்டிய விழிகளில் அறிந்து கொள்கிறார். அவர் இறந்தும் விடுகிறார். அடர்ந்த இருளுக்குள் அத்தனை அமைதியாக அத்தனை மௌனமாக நிகழ்ந்த அந்த மரணத்துக்குப் பின்னால் பேசப்படாத காட்டப்படாத அத்தனை வலிகளையும் தவிப்பையும், வன்மத்தையும் ம.நவீன் காட்டியிருப்பது பிரம்மிக்க வைக்கிறது.
எதையோ சாதித்துவிட்ட நிம்மதியோடு ஓலம்மா ராமசாமியோடு சின்னியை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் செல்லும் அந்த மழை இரவு நாவலின் மையப்பகுதி. அடர்த்தியான அந்த மழையில் கையில் குடையுடன் தண்ணீர்மலையில் அடித்த மொட்டையுடனும் மஞ்சள் சேலையுடனும் சின்னியை அழைத்துக் கொண்டு அவள் செல்லும் காட்சி மனதில் அப்படியே ஆழப் பதிந்துபோனது. அந்தச் சூழலுக்குரிய அபாயமான உள்ளுணர்வு நம்மையும் அப்படியே தொற்றிக்கொள்ளக்கூடியது. இந்தப் பகுதியில் ஒரு வாசகியாக என்னை மிக கவர்ந்தது அது சொல்லப்பட்ட விதம்தான். ஓலம்மாவின் பேரன் அப்போயோடு 20 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக காட்டுக்குள் செல்லும் ராமசாமி 20 வருடங்களுக்குப் பிறகு மீட்டுப் பார்க்கும் அந்த பயங்கர மழை இரவும் நிகழ்காலமும் ஒன்றோடு ஒன்று மோதி மோதி வாசகனை அதற்குள் மிக வன்மையாக இழுத்துச் செல்கிறது. காதை அடைக்கும் மழைச்சத்தம் அருவிச் சத்தமும் மாறி மாறி கேட்கிறது. தன் கடைசி நம்பிக்கையை ஓலம்மாவிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்ட சின்னி, எப்படியும் தன்னைக் காப்பாற்றிவிடுவாள் என ஓலம்மாவோடு நடக்கிறாள். அவளை எப்படியும் காப்பாற்றிவிடலாமென ஓலம்மாவிடம் எதிர்படும் ஒரு துளி கருணையின் கணத்துக்குக் காத்திருக்கிறார் ராமசாமி. ஓலம்மாவின் கையிலிருந்த குடை சின்னியின் உடலைத் துளைக்கத் தொடங்கிய கணம்தான் சின்னியின் இறுதி நம்பிக்கை கரையத்தொடங்கியது. அன்று சின்னியைச் சிதைத்த அந்தப் பாறைதான் ராமசாமியின் வீட்டில் இருக்கும் பேச்சியம்மன். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பார்க்கும் அந்தக் காட்டின் எல்லா திசைகளிலும் சின்னியின் பயங்கர கொலை மரணம் துரத்துகிறது. தானறியாத நிலையில் ராமசாமி எல்லா பயங்களையும் துறந்து அதே அருவிக்கு தன்னை இரையாக்கிக்கொள்கிறார்.
இதே கதையை இதே பயங்கரத்தை ஒரு தெளிந்த நீரோடைப் போல முன்னிருந்து பின்னோ அல்லது பின்னிருந்து முன்னோ சொல்லியிருந்தால் இவ்வளவு பாதித்திருக்குமா என தெரியவில்லை. முன்னும் பின்னும் மேலும் கீழுமென புயலும் மழையுமென நாவலை எல்லா திசைகளிலும் இழுத்து இழுத்து இலக்கியத்தின் புதிய நடையை நிகழ்த்திப்பார்த்திருக்கிறார் ம.நவீன்.
சின்னியைக் கொன்ற ஒரு மழையிரவுக்குப் பின் 20 வருடம் கால இடைவேளைக்குப் பின் நிகழ்ந்த மரணம்தான் இந்த ராமசாமியின் மரணம். சின்னியையும் ஓலம்மாவையும் கொன்ற அந்த இரவுக்குப் பின் நிகழ்ந்த விடியலில் தோட்டத்து மக்களில் சாராயம் குடித்த பலரும் இறந்திருந்தனர். அந்தப் பட்டியலில் சாராயமே அருந்தாத மணியமும் சேர்க்கப்பட்டார். அதே ஊர் மக்கள் அனைவரின் அன்பிற்கும் உரிய பள்ளித் தலைமையாசிரியரின் அழுகிய உடலும் அந்த இறப்புக்கு முன்னதாக அவர் கடத்திய வலியின் தீவிரத்தையும் சொல்லுவதன் வழி ம.நவீன் நம் சரீரத்தையும் கீறி வலியை வலியாகவே நமக்கும் உணர்த்துகிறார். குடிப்பழக்கம் இல்லாத தலைமையாசிரியரின் ஆஸ்த்துமா நோய்க்கு மருந்தாக ஒரு நாள் குடிக்கத் தொடங்கிய சாராயம் எப்படியோ பழக்கமாகிப் போகவே அந்த மரணத்திலும் ராமசாமியின் கைரேகை பலமாக பதிந்துவிடுகிறது.
இந்தச் சம்பவத்துக்குப் பின் தோட்டதில் பெரும்பாலானோர் வேறு தோட்டம் சென்றனர். பெரும் இழப்பிற்குப் பின்னர் காட்டப்பட்டிருக்கும் இடப்பெயர்ச்சியினூடே ரப்பர் அழிவையும் செம்பனை நடவையும் பற்றிய மிக முக்கியமான வரலாற்றை பதிவு செய்துள்ளது. ரப்பர் தோட்டங்கள் பரவலாக அழிக்கப்பட்ட நிலையில் ரப்பர் தோட்ட தொழிலாளிகள் வேறு நிலம் தேடி சென்ற வரலாறு அது. இனி அந்தத் தோட்டத்தில் தனக்காக யாரும் இல்லை என்ற சூழலில் சொந்தங்களைத் தேடி சிலர் வேறு தோட்டம் சென்றனர். இன்னும் பலர் ரப்பர் மரங்கள் அழிக்கப்பட்டதால் வேறு பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்தனர். இனி எங்கு சென்றாலும் இதே செம்பனை நடவுதான் என்ற நிலையில் வேறு வழியில்லாமல் அங்கே இருந்தவர்களும் உண்டு. ஆனாலும் செம்பனைத் தோட்ட வேலை அவ்வளவு சுலபமல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்ததால் பெரும்பாலானோர் வேறு பிழைப்புத் தேடி திசைக்கொருவராக சென்றனர். ஓலம்மா தன் மகள் முனியம்மாவுடன் பக்கத்து கம்பத்தில் தன் வாழ்வை அமைத்துக்கொள்கிறாள். ராமசாமியும் அதே கம்பத்தில்தான் வாழ்கிறார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓலம்மா பார்க்கும் ராமசாமி முற்றிலும் வேறானவர். ஆண்மையுடன் கூடிய பேச்சும் நடையும் அவளை ஆச்சரியப்படுதுகிறது. ஓலம்மாவின் பேரன் அப்போயின் மீது ராமசாமிக்கு இயல்பாகவே ஏற்படும் அன்பு உண்மையானதுதான். ஆனாலும் அறிந்தோ அறியாமலோ தன்னால் போன உயிர்களை அவன் ஒருவனை மீட்பதன் மூலம் சமன் செய்துவிடலாமென்ற நம்பிக்கையும் இருக்கவே செய்தது. அப்போயைச் சின்னி பழி வாங்கக்கூடும் எனப் பேச்சியாக வழிபடும் அவளுக்கு சேவலைக் காவல் கொடுக்கவே அத்தனை வருடங்கள் பார்க்க அஞ்சிய அந்தக் காட்டுக்கு செல்கிறார். காட்டின் எல்லா திசைகளும் எல்லா இருளும் எல்லா உருவங்களும் சின்னியின் கொலை மரணத்தை மட்டுமே நினைவுறுத்தியது. இறுதியில் சின்னியின் உயிரற்ற உடலை தூக்கி எறிந்த அதே நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இறந்து போகிறார்.
ராமசாமியின் மரணத்தை நேரில் பார்த்த அப்போயை உடல் நலமில்லாத நிலையில் ஓலம்மாவின் மகள் முனியம்மா அவனைக் கம்பத்திலிருந்து அழைத்துச் செல்கிறார். ஓலம்மா தன் வாழ்க்கையே அப்போய்க்கானது என நம்புபவள். தனது மகன் குமாரை அப்போயைக் கொண்டே அவள் மீட்டுக்கொண்டாள். அவனது பிரிவு அவளை அதிகம்தான் பாதித்தது. இந்த நாவலில் ஓலம்மா தான் குடியிருக்கும் வீட்டைச் சுற்றியுள்ள நிலத்தின் மீதும் செடிகளின் மீதும் அவள் வளர்த்த பிராணிகளின் மீதும் கொண்ட அன்பும் பற்றும் நாவலின் மிக முக்கியமான பலம்தான். அதுவே அவளை பலவீனமாகவும் ஆக்கிவிடுகிறது. நமக்குச் சொந்தமில்லாத ஒன்றின் மீதான பற்று இத்தனை பாதகமானதா எனக் கேள்விகளை உள்ளிருந்து உந்தும் பகுதி இது. கம்பத்தை செம்பனைத் தோட்டமாக்கவிருக்கும் சீனன் வீட்டைக் காலி செய்யும்படி கட்டளையிடவே தான் உருவாக்கிய எல்லா உயிர்களையும் நிராதரவாய் விட்டு மகள் வீட்டுக்குப் போக முடியாத சூழல் அவளை இறுக்கிப் பிடிக்கிறது. அப்போயைப் போலவே தன்னை உறவென்று நம்பியிருந்த அந்த ஜீவன்களின் மீதான அவளது பற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் இந்த நாவல் புரியும்தான். ஆனாலும், ஒரு வாசகனைப் பாதிக்கக்கூடிய அல்லது அவனது பார்வையையோ இரசனையையோ மாற்றி எழுதக்கூடிய பகுதிகளில் இதுவும் ஒன்றே.
அத்தனை உயிர்களின் கதறலும் மரண ஓலமும், இரத்த பிசிபிசுப்பும் நம்மைப் பின் தொடரும் சில கணங்களில் அதை நம்பியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. தான் உருவாக்கிய அத்தனை உயிரையும், ம.நவீன் அவர்கள் தானே அழித்துவிட்டிருப்பது நாவலை அசாத்தியமானதாகவும் அதேசமயம் உக்கிரமானதாகவும் அமைக்கிறது. பேச்சியின் முன் கழுத்தையறுத்துக்கொண்டு ஓலம்மா தன்னையும் அழித்துக்கொள்கிறாள். ஆனாலும், அந்த வன்மத்துக்குள்ளிருந்து எழுந்து வரும் கருணையையும் பற்றறுக்கு முடியா இயலாமையையும் சேர்த்தே திறந்து காட்டுகிறார் ம.நவீன். அத்தனை வன்மமும் ஒரு பெரும் கருணையின் துளியில் புறப்பட்டு வந்தது என எத்தனை பேர் அறிவார்கள். ஆனால், ஒரு தாயால் உணர முடியும். ம.நவீன் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது.
படைப்பவன் எவனோ அழிப்பவனும் அவனே என்றுதான் இந்தச் சூழலை நான் வாசிப்பில் கடந்து வந்தேன். கருணையை அதன் எதிர்திசையிலிருந்து வீசிப்பார்க்கும் ம.நவீனுக்குள்ளான கருணை குணத்தையும் நாவல் சில இடங்களில் நேரடியாகவும் காட்டிச் செல்கிறது. அப்போய் தான் கல்லால் அடித்த ஒரு மஞ்சள் பறவையின் மென்மையான அடிவயிற்றில் உணர்ந்த இறுதி உயிர்த்துடிப்பையும் அவனது கண்ணீரும் அதைச்சொல்லிச் செல்கிறது. அது ம.நவீனுக்குள்ளிருந்து வரும் கண்ணீர்.
2019-ஆம் ஆண்டில் நிகழ்காலத்தைச் சொல்லும் இறுதிப்பாகத்தில் அப்போய் தன்னுடைய விளையாட்டு குணமுடைய அன்பு மனைவி மாலதியோடு அதே கம்பத்துக்கு வருகிறான். திருமணமாகி பல வருடங்களாகியும் பிள்ளைப் பேரு இல்லாததால் அவனது அப்பா சொல்லி மீண்டும் அதே கம்பத்துக்கு பேச்சியம்மனை வழிபட வருகிறான். கம்பத்தின் தோற்றங்கள் மாறியிருந்தாலும் பேச்சியும் அவளது இடமும் மாறவே இல்லை. அவனது பாட்டி வைத்த பிரமாண்ட ரம்புத்தான் மரமும் தன்னை காட்டிகொண்டது. அங்கே சேவலின் கழுத்தை அறுக்கும் பரிகாரமும் அதற்கு முன்னதாக தன்னிடமிருக்கும் ஏதாவதொன்றை பேச்சிக்குக் கொடுக்க வேண்டுமென்ற பரிகாரமும் சொல்லப்பட்டது. தன்னிடம் எப்போதோ தன் பாட்டி கொடுத்த வெள்ளிக்காப்பை பேச்சியின் முன் வைத்த மாலதி சேவலை அறுக்கமுடியாமல் தவிக்கிறாள். வேறு வழி இல்லாமல் அதை செய்ய முன்வந்த போது பறக்க எத்தனித்த அந்தச் சேவலைத் தன் காலால் மிதித்து இரத்தம் முகத்தில் தெறிக்க அறுக்கும் காட்சி அவளது முந்தைய குணத்தோடு முரண்பட்டு நிற்கிறது. அப்போய் அதைப் பார்க்க விரும்பாதவனாய் பேச்சியை வணங்கி நிற்கிறான். இப்படி அமைந்த இந்த நாவலின் முடிவில் அதுவரை தான் பார்த்து வளர்ந்த அம்மாவையும் பாட்டியையும் போலவே மாலதியும் அவனுள் படிமமாகிக் கொண்டிருப்பதை அவனாலுமே தவிர்க்க முடியவில்லை. தாய்மைக்குள்ளிருந்து வரும் பேய் குணத்தையும் ஓலம்மா, முனியம்மா போன்ற பாத்திரத்தின் வழி வழுவாகச் சொல்லப்பட்டுள்ளது. அது எல்லா பெண்களுக்குமானதுதான் என மாலதியின் மூலம் நாவல் மீண்டும் வழுவாக நிறுவுகிறது. நாவலின் இறுதியில் மாலதி பேச்சிக்குச் செலுத்தும் வெள்ளி வளையலும் இந்த நாவலின் முதல் பகுதியில் சிக்கி நின்ற ஒரு புள்ளியின் தொடர்ச்சியே. அது ராமசாமியின் அப்பா கொப்பேரன் தேடித்திரிந்த வெள்ளி வளையல் சடங்கு கேள்விகளுக்கான பதிலாக வந்து முடிகிறது. வெள்ளி வளையல் அணிய மறுக்கும் தள்ளுருக்கெவ கிராமத்து பெண்கள் மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொல்லப்பட்டிருப்பதை ஒத்துப் பார்க்கும்போது மாலதியின் மூதாதையர் ராமசாமியின் சொந்த ஊரான தள்ளுர்கெவ கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்பதும், அவர்கள் வளையல் அணிவிக்கப்பட்டு பொதுமகளாகப் பட்ட கொடுமைக்கு ஆளானவர்கள் என்பது புரிந்துகொள்ள முடிகின்றது.
தன் குலம் தலைக்க காத்தாயியிடமிருந்து தன்னையும் குழந்தையையும் பிரித்து வந்த கொப்பேரனின் அந்த பெரும் போரட்டத்திற்கும் நீண்ட பயணத்திற்கும் அர்த்தமென ஒன்று இருப்பதாக இல்லை. ராமசாமியிடமிருந்த பெண் தன்மையால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது ஒரு புறமிருக்க, தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நான்கு உயிர்களின் மரணத்திற்கு அவரே காரணமாக நிற்கிறார். பேச்சியிடமிருந்து காப்பாற்றிய தன் மகனைப் பேச்சியே ஒரு பெரும் இடைவேளைக்குப் பிறகு விழுங்கிக் கொள்கிறாள். அந்த இடைவேளையும்கூட அவளே ஏற்படுத்திக் கொடுத்ததுதான் என யூகங்களை நாவல் தருகிறது. கொப்பேரன் மூலம் கடல் கடந்து வந்து ராமசாமியின் மூலம் தீராத பெரும் நீதி கடனைப் பேச்சி மீட்டுக் கொண்டிருப்பதாக நான் நாவலைப் புரிந்து கொள்கிறேன்.
சின்னியை பேச்சியாக வழிபட முடிந்த ராமசாமி அவள் மரணிக்கும் அந்த கடைசி சில மணித்துளிகளில் தன் மகனைக் காப்பற்றச் சொல்லி முன் வைத்த கோரிக்கையை மறந்துவிட்டது ஏன் என புரியவில்லை. ஒருவேளை சின்னியின் மகன் காப்பாற்றி அரவணைக்கப்பட்டிருந்தால் உக்கிரமான அழிவுகளின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாமோ என ஒரு சிறு ஐயத்துகள் மனதில் வந்து போகின்றது.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுறுக்கிச் சொன்ன நாவலின் சுருக்கம்தான் இது. இன்னும் சொல்லப்படாத இன்னும் முக்கியமான பல பகுதிகள் புதைந்து கிடக்கின்றன. ஒரு நீண்ட வாசிப்புக்குப் பிறகு கதையை மனதில் நிறுத்தி ஒரு வாசகியாக என்னால் தரமுடிந்த ஒரு சீரான கதை விவரிப்பு இது. உண்மையில் நாவலின் கதை ஓட்டம் இவ்வளவு சீரானதல்ல. அதுவே இந்த நாவலின் பலம். எனது வாசிப்பு வட்டத்துக்குள் அகப்பட்ட மிக சில நாவல்கள் எதிலும் காணாத ஒரு புதிய அமைப்பு முறையினை இதில் காண முடிகிறது. மிக அரிதான சில சிறுகதைகளில் மட்டும் பார்த்திருக்கக்கூடிய சிடுக்குகள் நிறைந்த அமைப்புமுறையை நாவலாசிரியர் ஒரு பெரும் நாவலுக்குள் ஒரு பெரும் கால வரையறைக்குள் நிகழ்த்திப்பார்த்திருக்கிறார்.
கவிஞருமான ம.நவீன் இந்த நாவலுக்குள் கையாண்டிருக்கும் மொழியும் கற்பனையும் அசாத்தியமாக உள்ளது. அப்போய் காட்டில் கண்ட வண்ணத்துப் பூச்சியின் அழகு தொடங்கி நடுங்க வைக்கும் கொலை, அழுகிய உடல்கள் என எல்லாவாற்றிற்குமான மொழிகனை வாசகனை இரசிக்கவும் நடுங்கவும் வைக்கிறது. பாத்திரங்களின் உரையாடல்கள் மிக யதார்த்தச் சூழலை உருவாக்கித் தருகிறது. ஒவ்வொருவருக்குமான உருவமும் குரலும் எனக்குள் இன்னும் அப்படியே உரைந்து நிற்கிறன. கதையை மனதுக்குள் மீட்டுப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவர்கள் மீண்டெழுந்து அசைகிறார்கள். கம்பத்து வீட்டை விற்க வேண்டிய சூழலில் ஓலம்மாவுக்கும் முனியம்மாவுக்கும் இடையில் ஏற்படும் சண்டைக் காட்சியை அதற்கு உதாரணமாக்கலாம். அது யதார்த்த நிலையில் உச்சத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட சண்டை. நெற்றி சுருக்கி புருவம் விரைத்துப் பார்க்கம்படியான சில வசனங்களில் ம.நவீன் தன்னை ஓலம்மாவுக்குள் தொலையவிட்டிருக்கிறார். கொலைக்காட்சிகள், மரணம், பிரிவு குறித்தான வலி, சட்டென மனித அரவம் இல்லாமல் போன ஒரு குடியிருப்பின் சூன்யம், அதன் மீதான பறவைகள் நாய்கள் என மனிதனைச் சார்ந்த வாழும் ஜீவன்களின் ஏற்பும் தவிப்பும், பற்றறுக்க மறுக்கும் அன்பின் பாதகம், என ஒவ்வொன்றாக கதையை உயிர்ப்பாகவே நகர்த்துகிறது. எங்குமே எதிலுமே மிகையாக ஒன்றை ம.நவீன் சொல்லவில்லை. இந்த வாழ்வின் யதார்த்தம் எப்படியோ அதை அப்படியே நாவலுக்குள்ளிருந்து தருகிறார். ஒரு மஞ்சள் பறவையின் மரணத்திலிருந்து தன் கருணையை மீட்டுக்கொண்டது போல வாழ்க்கையை வாழ்வின் இயல்பிலிருந்து காட்டிச் செல்கிறார்.
நாவல் காட்டிச் செல்லும் மிக தத்துவார்த்தமான வாழ்க்கைக்குள் சிறுவர்களுக்கான வேறொரு உலகமும் வந்து போவது நாவலை இந்த வாழ்க்கையோடு இன்னும் இன்னும் பிணைத்துக் காட்டுகிறது. குமரன் அப்போய் ஆகிய இரண்டு சிறுவர்களும் வெவ்வேறு விதத்தில் நம்மை ஆட்கொள்கிறார்கள், வாழ்வின் பாதகங்களை, அழிவுநிலைகளை அதன் உக்கிரத்தன்மையோடும் தனியா வேட்கையோடும் சொல்ல முடிந்த நாவலாசியரால் அதற்கு முற்றிலும் முழுமையுமாக முரண்பட்டு நிற்கும் சிறுவர்களின் உலகை நாவலெங்கும் படரவிட்டிருப்பது ஆச்சரியம்தான். இந்த அழிவுகள் குறித்தான பார்வையையும் கூட அவர் ஒரு சிறுவனின் கண்கொண்டே காட்டியுள்ளதால் அதன் பல்வேறு படிமங்களைக் கண்டடைய முடிகிறது. பெரும் புயலின் வேகத்தைக் காட்டக்கூடிய பூவிதழ்கள் போலதான் இந்தச் சிறுவர்கள். நாவலுக்குள் சில காலம் மட்டும் வந்து போன குமரனை நாவலின் இறுதி பகுதி வரையிலும் மணமாகவும், வண்ணமாகவும் மீட்டுப் பார்க்கும் ஓலம்மா அதனை தன் பேரன் அப்போயின் மூலம் மீட்கிறாள். பாக்கைக் கொண்டு தன் உலகை நிறைவுப் படுத்திக்கொள்ளக்கூடியவன்தான் குமரன். விசித்திரமான அவனது செயல்பாடுகளின் ஊடே தன் அன்பை அவ்வளவு துல்லியமாக அவன் அம்மாவிடம் வெளிப்படுத்துவதற்கு அவன் கண்டடைந்தது ஒரு பாக்கு மரம்தான் எனும்போது நான் அவன் முன் சிறியவாளாகிறேன். மனநலம் குன்றிய அவனின் பேச்சும் குரலும், செயல்பாடும் பாவனையும் அத்தனை அசலாக நாவலுக்குள் வந்து போகிறது. உண்மையில் குமரனைக் கொண்டுதான் நாவலுக்கு வெளியே நான் கண்டும் காணத் தவறிய இவனைப் போன்ற பல குழந்தைகளின் உலகை அவதானிக்கிறேன். வாசிப்பின்போது நாவலுக்குள் நிகழ்ந்த குமரனின் மரணத்தைக் காட்டிலும் இந்நாவலை மனதில் அசைபோடும்போது மனதுக்குள் மீண்டும் நிகழ்த்திப்பார்க்கும் குமரனின் மரணம் காற்றோடு கரைந்துபோன காலத்தின் ஓலமாக செவிகளின் கேட்கிறது.
உண்மையில் நாவலுக்குள் செல்லும் ஒவ்வொரு திசையிலும் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் அப்போய் அவனின் அறியாமையிலிருந்தும் துடுக்குத் தனத்திலிருந்தும்தான் நம் புரிதலை மேம்படுத்தியுள்ளான். இந்த உலகில் தான் பார்க்கவும் தொடவும் செய்யவும் விரும்பும் அத்தனையையும் அப்போய் நமக்குள்ளும் ஏற்றிவிட்டுள்ளான். அவனின் தீராத ஆர்வம் துடிப்பான செயல்பாடுகள் எல்லாம் ஒரு கணம் நம்மை அவனாகவே மீட்கக்கூடியவை. அவன் காட்டிச் சென்ற காட்டின் அடர்த்தி போலவே அப்போயின் பாத்திரம் நம் மனமெங்கும் அடர்ந்தும் படர்ந்து கிடக்கிறது. நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நம்மோடு பயணிக்கும் அவன் என்னதான் மாலதியோடு பெரியவனாக வந்தாலும் ஒரு வாசகியாக நான் அவனைக் கருப்பனுடன் சுற்றித்திரிந்த அப்போயாகத்தான் மனதில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். காட்டின் மீது கொண்ட தீராத பற்று, கருப்பனுடனான அவனது நட்பு, வேட்டையாடி அடையும் கருணை என அவனது வாழ்வின் அர்த்தங்களை அவனாகவே கண்டடைகிறான். அதற்கான வாய்ப்பை ஓலம்மா தரவே செய்திருக்கிறாள். இன்று இப்படி ஒரு சூழலையும் சுதந்திரத்தையும் இழந்துவிட்ட சிறுவர்களின் உலகில் இனி அப்போயைப் பார்ப்பதும் கடப்பதும் அரிதுதான் எனும்போது வருத்தமாகவே இருக்கிறது.
வாழ்வில் கடந்து வந்த சம்பவங்களில் தொலையாமல் திரட்டி வைத்திருக்கும் அத்தனை மனத் தெம்பையும் அசைத்துப் பார்க்கும் இந்த பெரும் புனைவுக்குள் வந்து போகும் சில வாழ்வியல் கூறுகளும் அலட்சியம் செய்யக்கூடியதாக இல்லை. ராமசாமி தன் வீட்டைச் சுற்றி வைத்திருந்த மூலிகைத் தோட்டமும் அதை அவர் பராமரிக்கும் விதமும் நாவலின் அழகான பகுதிகள்தான். தாவரங்களோடு அவருக்கு இருந்த நெருங்கிய உறவை நமக்குள்ளும் ஏற்றி வைக்க முயற்சி செய்கிறது இந்தப் பகுதி. அப்படியே ஓலம்மா கோழி வளர்க்கும் பாங்கும், பக்குவமும்கூட. ஒரு வாழ்வைச் சொல்லும்போது அவர்களுடனாக பின்னிப் பிணைந்திருக்கும் இது போன்ற வாழ்வியல் கூறுகள் ஒரு புனைவை எவ்வளவு உயிர்ப்பிக்கும் என இந்த நாவல் எனக்குக் கற்றுக்கொடுக்கிறது. இன்னும் சில தலைமுறைகளில் மறந்தோ அழிந்தோ போய்விடக்கூடுமோ என்ற அச்சத்தை இது போன்ற நாவலின் பதிவுகள் தள்ளி நிறுத்துகின்றன.
அறுந்து அறுந்து விழும் சில காட்சிகளின் இணைப்புப் புள்ளிகள் நாவலின் அமைப்புமுறை எட்ட முடியா தூரத்தை தொட்டுவிட்டதாய் நான் உணர்கிறேன். மிக சுவாரசியமான காத்திருக்கும் சில பகுதிகளின் முடிவுகளோ அல்லது அதன் நீட்சியோ அப்போது சொல்லப்படாமல் பின்னால் இன்னொரு கட்சியோடு பொருத்திச் சொல்லி இருப்பது என்னை அதிகம் கவர்ந்தது. வன்புணரும்போது சின்னி ஏற்படுத்திய அதிருப்தியால் ஜன்னலோரம் வந்து சிகரெட் பிடிக்கும் மணியத்துக்கு ஓலம்மா அங்கு நின்று பார்த்தது போல ஒரு உள்ளுணர்வு ஏற்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அதே பகுதியில் ஓலம்மா சரிந்து கீழே உட்கார்ந்த சமயம் அவள் தலைக்கு மேலே ஜன்னல் வழியே சிகரெட் புகை வருவதை நவீன் மிக சாவகாசமாக காட்டுகிறார். இப்படி சில பகுதிகளின் காட்சிகளை நூல் போல இணைத்துப் பிடிக்கும் சிறு சிறு புள்ளிகளை நவீன் அநேகமான இடங்களில் கையாண்டிருக்கிறார். சிகரெட் புகை, காலடி ஓசை என கண்ணிலும் கருத்திலும் அரிதாகவே அகப்படக்கூடிய செயல்பாட்டைக் கொண்டு காட்சிகளை இணைத்துபிடித்து வாசகனுக்கு புரியவும் வைத்திருக்கிறார். நவீனின் இந்த நாவல் கலைத்துப் போடப்பட்ட புள்ளிகளால் ஆன கோலம்.
இந்த நாவலை முழுதாகப் படித்துவிட்டு சில தினங்கள் அதன் காட்சிகள், களம், மனிதர்கள் என ஒவ்வொன்றாக மனதுக்குள் மீட்டுக்கொண்டிருந்த வேளையில் நான் தேடித்திரிந்த காத்தாயியை கதையின் எல்லா திசைகளிலும் காணமுடிந்தது. ராமசாமி உண்மையில் தினமும் பூஜித்தது தனது பேய்ச்சியான காத்தாயியையும்தானோ என கேள்விகள் எழுந்தன. ஆமாம், கொப்பேரன் புறப்பட்டு வந்துவிட்ட அந்த இரவுக்குப் பிறகு தனித்துவிடப்பட்ட காத்தாயியை நானுமே பேய்ச்சியின் வடிவில், காணத்தொடங்கினேன். பின்னர் அந்த ஒரு இரவுக்குப் பின் ஒரு வேளை காத்தாயி பயங்கர ஒலியெழுப்பி சிரித்திரிக்கவும்கூடும் என கற்பனைகள் பரிணாமம் பெற தொடங்கின. பின்னர் ராமசாமிதான் காத்தாயியோ எனக்கூட எண்ணங்கள் ஒரே இடத்தில் நிற்காமல் யூகங்களை அடுக்கிக் கொண்டே சென்றன. எனவேதான், ராமசாமியிடம் ஒரு பெண்தன்மை இயல்பாகவே இருந்திருக்கிறது. அந்தப் பெண்தன்மைக் கொண்ட ராமசாமிதான் நால்வரின் மரணத்திற்கு காரணமாகிறார். எனவே, என்னால் அவரைப் பேய்ச்சியின் ரூபமாகவும் பார்க்க முடிந்தது. ஆனால், தோக் குருவின் சந்திப்பிற்குப் பிறகு நாம் காணக்கூடிய ராமசாமி முற்றிலும் வேறானவர். பெண்தன்மையற்றவர். பெண்தன்மையற்ற ராமசாமி அதிக கருணையுள்ளம் கொண்டவராக தாய்மையுள்ளம் படைத்தவராக நான் பார்க்கிறேன். அப்போயின் மீது அவருக்கு ஏற்பட்ட பிடிப்பும் அவனைக் காக்க அவர் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சியும் அதில் தன்னையே இரையாக்கத் துணிந்த தாய்மையையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். பெண் தன்மைமிக்க ராமசாமியும் அதற்குப் பின்புமான ராமசாமியும் வேறுபட்ட மனநிலையுடையவர்களென புரிந்துள்ள இந்த ஒரு சின்ன வேறுபாடு போதுமானது.
இந்த வாழ்க்கை எப்படியோ அப்படியே சொல்லிவிட்டுப் போகும் இந்த நாவல் எல்லோருக்குமானது. யார் எதை எப்படி பொருள்படுத்திக்கொள்கிறோமோ அப்படியே அது நமக்குமானதாகிறது. பேய்ச்சியென நம்புபவர்களுக்கு அவள் பேய்ச்சி. அவளை நம்பாதவர்களுக்கு அது இயற்கை கோடிட்டுக் காட்டும் சமரசமற்ற நீதிக்கோடுகள்.
இந்த நாவல் நமக்குள் எழுப்பும் கேள்விகளுக்கான முரண்களுக்கான அத்தனை பதில்களையும் இதற்குள்ளேயே கண்டடையலாம். நாவலின் தொடக்கத்தில் பேய்ச்சியை வழிபடும் ராமசாமி அவர் வீட்டில் வளர்க்கும் வெள்ளை சேவலும் மந்திரிக்கும் தருணங்களில் அவர் பயன்படுத்தும் சொரி எழுமிச்சையும் கொஞ்சம் முரணானதாக இருக்கிறது. காரணம் பேச்சி வழிபாட்டிற்கு கருப்பு சேவலை பயன்படுத்துவதே வழக்கம். அதேபோல பேச்சிக்கு சொரி எழுமிச்சைப் பயன்படுத்துவது வழக்கமல்ல. அதற்கான காரணத்தை நாவலின் பின் பகுதியில் தோக் குருவிடம் கற்றுக் கொண்ட மாந்திரீகத்தின் மூலம் அறியமுடிந்தது. இப்படி நாவலின் பல பகுதிகளில் முரண்களால் உருவாக்கப்பட்ட முடிச்சுகளை கதையின் நகர்ச்சியில் நாமே அவிழ்த்துக் கொள்ள முடிந்தது.
ஓலம்மா தான் வளர்த்த ஜீவன்களை அறுத்தெறியும் வதக்காட்சி ஒரு பெண்ணுக்கும் தாய்மைக்கும் சாத்தியப்படாதது என சில கணம் சிலருக்குத் தோன்றக்கூடும். அதற்குமான பதிலை நான் நாவலுக்குள்ளிருந்து கண்டடைந்தேன். ஓலம்மாவின் உச்சக்கட்ட பலத்தை நாவலாசிரியர் தீடீரென இந்த ஒரு பகுதியில் மட்டும் காட்டாது அதை நாவலின் தொடக்கத்திலிருந்து வாசகர்களுக்குக் காட்டிக் கொண்டுதான் வந்திருக்கிறார். அப்பாவைக் கடலில் வீசிய கணம் கடலை நோக்கி பாய்ந்த அவளை நிறுத்திப் பிடிக்க நான்கு பேர் அவசியப்பட்டனர். அப்போது அவள் சிறுமிதான். அதேபோல குமரனை அடிக்கச் சென்ற மணியத்தின் கழுத்தைப் பிடித்த போது, சின்னியைக் கொன்ற போது, இப்படி இன்னும் எத்தனையோ பல காட்சிகளின் மூலம் ஓலம்மாவின் வேகம், கோபம், பலம் பற்றிய புரிதலை நாவலாசியர் வாசகர்களுக்கு தருந்திருக்கிறார். எனவே, இயல்பு நிலைக்கு அப்பாற்பட்ட பாத்திரமாக நாம் ஓலம்மாவை வகைபடுத்த வாய்ப்பில்லை.
ஆலமரத்தில் தொங்கிக்கிடக்கும் விழுதுகளாக இந்நாவலில் ஆயிரம் தத்துவங்கள், இழப்பாகவும், வலியாகவும், வரலாறாகவும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இந்நாவலின் ஆணிவேராக இருப்பது ‘பேய்ச்சி’ என்ற தலைப்பின் முரண்தான். பெண்ணுக்குள்ளான தாய்மையும் அதன் முரணும்தான் அது. அன்னையைத் தொழ முடியாமல் தவித்து மனைவியைத் தள்ளி நிறுத்திய கொப்பேரன், வீரனாக வெளியே மார்தூக்கி நின்றாலும் அந்தரங்கமாக ஓலம்மாவுக்கு பயந்த சில கணங்களில் மணியம், மாலதியிடம் காண விரும்பாத அந்த வன்மத்தைத் தவிர்க்கும் அப்போய் என ஒவ்வொரு தலைமுறைக்குமான ஆண்கள் பெண்களிடம் அஞ்சுகிற அந்த பேய் குணம்தான் பேய்ச்சி. இந்தக் கதையில் வந்து போகும் அத்தனை துயரங்களும், என்றோ எங்கோ எப்படியோ ஒரு நாள் நம் வாழ்விலும் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழும்போதே நிலைகொள்ளாத பயமொன்று உள்ளூர ஏற்படுகிறது. வாழ்வின் அத்தனை இயலாமைகளையும், நாம் திடமாக பற்றிக்கொண்டிருக்கும் அத்தனை நம்பிக்கைகளும் அத்தனை கர்வமும் அர்த்தமின்மையில் முடியப்போகும் சூன்யத்தைக் காட்டி அச்சமூட்டும் இந்நாவலை தத்துவத்தின் கலைவடிவமென சுனில் கிருஷ்ணன் சொல்லியிருப்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
நாவலை முழுவதுமாகப் பேசிவிட்ட திருப்தி ஏற்படவில்லை. நாவலின் ஒரு பகுதியில் நவீன் காடுகள் தனக்குள் பல அடுக்குகளாக இருப்பதைச் சொல்லியிருப்பார். அப்படிதான் இந்தப் படைப்பும், இது தனக்குள் பல அடுக்குகளைக் கொண்டது. மலேசிய இலக்கியச் சூழலை அடுத்தக் கட்ட நகர்ச்சிக்கு உயர்த்திப் பிடிக்கும் இந்த மிகப் பெரிய முதல் பிரமாண்ட நாவல் ஆயிரமாயிரம் இரகசியங்களாலான ஊற்று. மலேசிய நாவல் இலக்கிய வரலாற்றில் ம.நவீனின் இந்த முதல் நாவல் புதிய திசையின் திறப்பாக அமைந்துள்ளது. எனவே, இந்த நாவலை பெரும் ஆளுமைகள் விமர்சித்தல் அவசியம்.
பேச்சி நாவலைப்படித்துத்திளைத்துப்போன எனக்கு இன்னும் மூன்றாவது முறையாக படிக்கத்தோன்றியுள்ளது இக்கட்டுரை . நாவலில் படர்ந்து வேரூன்றி இருக்கும் பொக்கிஷயத்தை மீட்டுள்ளது .
பேய்ச்சி நாவலைப்படித்துத்திளைத்துப்போன எனக்கு இன்னும் மூன்றாவது முறையாக படிக்கத்தூண்டியுள்ளது இக்கட்டுரை . நாவலில் படர்ந்து வேரூன்றி இருக்கும் பொக்கிஷயத்தை மீட்டுள்ளது .