இன்றில் நிலைக்காதவை

செந்தில் 02சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவின் இரண்டாம் நாளில் நாங்கள் சென்ற வாகனம்   பழுதாகி  நின்று விட்டது. இருமருங்கும் மரங்கள் அடர்ந்திருந்த ஆளற்ற சாலையில் எங்களது சில மல்லுக்கட்டல்களுக்குப் பின்னும் அதன் பிடிவாதம் தளரவில்லை. சோர்ந்து போன நண்பர் அப்படியே நடந்து சென்று திரும்பி மரத்தில் எழுதிக் கட்டப்பட்ட அட்டையில் உள்ள எண்ணைக் குறித்துக் கொண்டு வந்தார். அடுத்த அரைமணியில் ஓட்டளிக்க இன்னும் இரு ஆண்டுகளேனும் காத்திருக்க வேண்டும் என்னும்படியான வயதுள்ளவன் சிறிய பெட்டியுடன் வந்தான். பேனட்டைத் தூக்கி கால்கள் அந்தரத்தில் நிற்க உள்ளே குப்புற விழுந்து தன் பற்களையும் ஒரு கருவியாக்கிச் சரிசெய்வதில் முனைந்தான். அடுத்த அரைமணி நேரத்தில் கார் பற்றிக் கொண்டு சீறுவதற்குத் தயாராவது போல உறுமியது. அவன் அதற்கு கேட்ட பணம் எதிர்பாராத அளவுக்குக் கூடுதலாக இருந்தது. குறைப்பது குறித்த பேரத்தில் கறாராக இருந்தான். வேறு வழியின்றி அளித்த பிறகு ஒரு சூழலை மனிதர்கள் எப்படி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், எவ்வளவு சுயநலமிகள் என்பது போன்ற நண்பர்களின் புலம்பல்களை பின்னுக்கு வேகமாக நகரும் மரங்களைப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தேன். அதுவும் ‘கொஞ்ச நேரத்திக்கு..’ என்பதை அவர்களால் தாளமுடியவில்லை. அவர்களின் குரல்கள் ஓய்ந்த பின் ‘அவன் முகத்தையும் கைவேலையையும் பார்த்தால் சிறுவயதிலேயே வொர்க்‌ஷாப்பிற்கு வந்திருப்பான் போலிருக்கிறது.  இது போன்ற இடங்களில் முதலாளிகளின் கோபங்களுக்குச் சிறுவர்கள்தான் நிவாரணி. பால்யத்தில் அடியும் மிதியும் அன்றாடமாகி விட்டிருக்கும்.  கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அவன் எண்ணிலடங்கா வாகனங்களுடன் அவற்றின் கோளாறுகளுடன் வாழ்ந்தவன். கண்டதுமே அல்லது சோதித்ததுமே எங்கே பிரச்சனை எதை மாற்றினால் வாகனம் நல்ல நிலைமைக்கு வரும் என்பதை அறிய அவனது அத்தனை காலத்திய அனுபவமும் வலிகளுமே கைகொடுத்திருக்கும். நாம் கொடுத்த தொகை அந்த ரிப்பேருக்கு மட்டுமானதுதான் என்றாலும் அதற்குள் நான் சொன்னவைகளும் அடங்கி இருக்கிறது’ என்றேன்.

ஆம். வாழ்க்கையின் எவ்வளவோ தருணங்களை எளிதாகக் கடந்து விடுவதே பலரது வழமையும். அதற்குள் துடிக்கும் நுண்மைகளை அறிந்து ஏதேனும் ஒரு கலைவடிவமாக ஆக்குவது அந்த எல்லோராலும் முடியதில்லையே. போலவே இதற்குள் எப்படி ஒரு கதை ஒளிந்திருந்தது? என்கிற வியப்பையும் அதை எவ்வாறு கலையாக ஆக்கினான் என்கிற குறுகுறுப்பையும் விளங்கிக் கொள்ள மேலே சொன்ன உதாரணம் உதவக்கூடும். ‘உங்களை எது கதை எழுத தூண்டுகிறது?’ என அசோகமித்திரனிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது ‘பாஸிபிலிட்டீஸ்’ என்று சொன்னார். உண்மையாக இருக்கலாம். ஆனால் அதன் பின் புலப்படாமல் இருப்பது கதைகளின் மீதான ஓயாத பயிற்சி, சிறு சம்பவமொன்று கூட கதையாக முகிழக்கூடும் என அறிய எழுதுகிறவனுக்கு சிறிது காலமும் இடையறாத எழுத்தும் தேவையாக இருக்கிறது. அவ்வாறான ஒன்றிரண்டு கதைகளை இவ்விரு தொகுதிகளிலும் வாசிக்க நேர்ந்தது.

சமீபத்தில் வெளியான இரு கன்னடச் சிறுகதைத் தொகுதிகளை பேச முற்படும் முன் இத்தகு ஆலாபனை எதற்கென்ற வினா இயல்பாகவே எழக்கூடும். எங்கே ஒன்றைத் திருப்பினால் யாரை எங்கு நிறுத்திப் பேச செய்தால் அது கதையாக வடிவம் கொள்ளும் என வாசகர் அறிய உதவும் ஆக்கங்களை உள்ளடக்கிய தொகுப்பு என்பது இதற்கான பிரதான காரணம். மேலும் திவாகர் மற்றும் ஜெயந்தின் கதைகள் பலவும் அதன் வடிவத்திலும் நடையிலும் அசோகமித்திரனை கண் முன் நிறுத்துகிறது என்பது கிளைக் காரணம். ஆனால் இவ்விருவரும் அளிக்கும் வாசிப்பு அசோகமித்திரனிடமிருந்து வேறுபட்டது. அவரை நெருங்க முடியாதது.

திவாகரின் ‘இதிகாசம்’ தொகுப்பில் உள்ள கதைகள் 1970களிலிருந்து 80கள் வரை எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றிலுள்ள சரிபாதி கதைகள் சென்னையின் சுற்றுவட்டங்களில் கால்கொண்டிருக்கின்றன. ஜயந்தின் கதைகள் மும்பாயின் உதிரிகள், சராசரிகள் மட்டுமல்ல குரல் உயர்த்திப் பேசக் கூட இயலாதவர்களின் உறிஞ்சப்படும் வாழ்க்கைகளின் கோளாறுகளை கதைகளாக எடுத்துக் கொள்கிறது. இவரது கதைகளில் எழுதப்பட்ட ஆண்டுகளின் விபரங்கள் இல்லை.

புதுமைப்பித்தன் என்கிற மேதையின் வருகையோடு துலங்கத் தொடங்கிய தமிழ் சிறுகதை, பின்தொடர்ந்த நீண்ட வரிசையால் இருபதாம் நூற்றாண்டிலேயே முடிசூடிக் கொண்டுவிட்டது.  அதன் சாத்தியங்கள் சார்ந்த மாறுபட்ட முயற்சிகளுக்கும் பஞ்சமிருக்கவில்லை. புதிதாக ஒன்றைச் சொல்வது, புதிது போல சொல்வது, அதுகாறும் இடம்பெற்றிருக்காத வாழ்க்கைகளை வெம்மை குறையாது கலையாக முன் வைப்பது போன்றவற்றினாலேயே இருபத்தோறாம் நூற்றாண்டு தமிழ் கதைகள் தலை உயர்த்த முடியும் என்று படுகிறது. அல்லாமற் போனால் முன்னரே எழுதப்பட்டுவிட்டதற்கான ‘க்ளோனிங்’ கதைகளையே மீளவும் எழுத வேண்டி வரலாம்.

இவ்விரு கன்னட சிறுகதை தொகுப்பிலுள்ள கதைகளின் மூலம் பெறுமொழிசெந்தில் பெற்றுக் கொள்வதற்கான கூறுகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. திவாகர் சொல்முறையினால் அநேக கதைகளை மேலே தூக்க முனைகிறார். ஆனால் கதை வெறும் மொழியினால் மட்டும் ஆனதல்லவே. அவ்வாறு மொழி மீது கட்டப்படும் கதைகளில் கூட அதுவரை இல்லாத ‘ஏதோவொன்று’ வினைபுரிந்திருக்கும் அல்லது அக்கதை சில விதைகளை வருங்கால கதைகளுக்கு அளித்திருக்கும். இத்தொகுதியின் பிரதான குறை  கதைகளில் வீசும் பழைய நெடி. அதாவது இவை முன்னரே இங்கு பழக்கப்பட்டு தேய்ந்து போனவைகளையே புதிதென முன் வைக்கின்றன. இரண்டு பிரிவுகளாக அமைக்கப்பட்டிருக்கும் இந்நூலில் யதார்த்தவாத கதைகள் ஒரு வகையாகவும் இரண்டாவதில் புனைவின் கற்பனைகளை பயன்படுத்திக் கொண்டவை இன்னொரு வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பழைய கணையாழி காலத்திலேயே  எழுதப்பட்டு விட்ட கதைகளை மீளவும் வாசிப்பது அலுப்பூட்டுவதாகவே இருக்கிறது. தலைப்புக் கதையும் தொகுப்பின் பெரிய கதையுமான  ’இதிகாசம்’ காலத்தில் மிகவும் பின் தங்கியது. ஆசிரியரின் கற்பனையுணர்ச்சியும் கதைகளுக்கு கை கொடுக்கவில்லை. தனிமை, கைவிடப்படுதல், ஏக்கம் போன்றவற்றை பொதுவான அம்சமாகக் கொண்ட கதைகள் திவாகருடையது. தொகுப்பிலுள்ளவற்றுள் ‘அனாதைகள்’ கவனிக்க வேண்டிய ஒன்று. இக்கதைகள் கன்னடத்தில் எழுதப்பட்ட ஆண்டுகளிலோ அல்லது அதற்கும் ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பின்னரோ இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் ஒருவேளை பலன் அளித்திருக்கக் கூடும்.

ஒப்புநோக்க திவாகரை விட மேம்பட்ட கதைகளை எழுதியிருப்பவர் ஜயந்த் காய்கிணி. அவரது ‘மகிழம்பூ மணம்’ பதினோரு கதைகளைக் கொண்டிருக்கிறது. ஒதுங்கி கிடப்பவர்கள், தங்களை வெளியே காட்டிக் கொள்ளாதவர்கள், அதிர்ந்து பேசாதவர்கள், தோல்வியை ஏற்கவும் சிலபோழ்து மறுத்து திமிரவும் செய்கிறவர்களின் உலகத்தின் சில தருணங்களை (அவை அவர்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகள்) திறந்து பேசுகிற கதைகள் இவை. மும்பாயின் கைவிட்ட பிள்ளைகளின் மீதே ஜயந்தின்  முக்கால்வீதக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.  மைய பாத்திரத்தால் எங்கோ சொல்லப்பட்டு விடுகிற ஒரு சொல் எவ்வாறு அவரது வாழ்க்கையை பின்தொடர்ந்து வருகிறது என்பதை கூறும் (டிசைட்-’மகிழம்பூ மணம்’,  இஷ்..இஷ்..-’துஃபாயின் மெயில்’) சில  கதைகளில் அச்சொல் இடம்பெறுகிற இடங்கள் நிமிர வைக்கின்றன. இதுகாறும் புனைவெழுத்துகள் அவ்வளவாக பரிச்சயம் கொள்ளாத இடங்களில் நிகழும் ஜயந்தின் கதைகள் அதனாலேயே புதிதாகத் தோன்றுகின்றன. சர்க்கஸ் மரணக் கிணற்றின் பைக் சாகசம் செய்பவனுக்கும் அவனது முதலாளிக்கும் அந்தக் கூடாரத்திற்கும் உள்ள உறவைப் பேசும் ‘கிணற்றில் ஒரு கதவு’, ஒரு க்விஸ் நிகழ்ச்சியை மருத்துவமனையின் கீழ்தளத்தில் நடத்துவது போல அமைந்திருக்கும் ‘டிக் டிக் நண்பன்’. இதில் போபால் விஷ வாயுத் தாக்குதலை உள்நுழைத்திருக்கும் முறை சரியாக பொருந்தவில்லை. சினிமாவின் ஸ்டண்ட் நடிகர் மற்றும் பாடல்களில் துணைநடனமாடும் பெண் என இருவரின் பின்னணிகளை கொண்டு எழுதப்பட்ட ‘துஃபாயின் மெயின்’. இக்கதையின் முடிப்பில் பாத்திரத்தின் இறந்தகாலம் வந்து சேர்ந்து கொள்ளும் போது புதிய நிறத்தை அடைந்துவிடுகிறது. காட்சி முடிந்த திரையரங்கினுள் இருக்கையினடியே கிடைக்கும் பிளாஸ்கை திரும்ப கொடுக்க செல்பவனை பின் தொடரும் ‘ஒபேரா ஹெளஸ்’ போன்ற கதைகளை உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த பிளாஸ்கை ஏன் அங்கு விட்டு வந்தேன் என்பதற்கு அந்த அம்மா கூறும் காரணம் கதைக்குள் ஒட்டாமல் துருத்தியபடியே நிற்கிறது. இக்கதைகளிலுள்ள மனிதர்கள் வாழ்வின் இடர்களுக்கிடையிலேயும் சந்தோஷங்களைக் கண்டு கொள்ளக் கூடியவர்கள். அவர்களுடையது சிறிய மகிழ்ச்சி என்ற போதும் அது கிட்டும் போது கண்மூடிக் கொள்ளாதவர்கள். தொகுப்பின் நல்ல கதை ‘நோ பிரசெண்ட்ஸ் ப்ளீ’ஸ்’. நகரில் அடையாளமில்லாத வேலை செய்யும் இரு இளஞ்சோடிகள் மணம் செய்யும் பொருட்டு அழைப்பிதழை முடிவு செய்ய ஓரிடத்தில் சந்தித்து ஆலோசிப்பதுதான் கதை. ஆனால் ஜயந்த் நுண் தருணங்களால் ஆன ஒன்றாக கதையை மாற்றுகிறார். இத்தொகுப்பை கையிலெடுத்தற்காக ஏதேனும் மகிழ்ச்சி உண்டா என்கிற வினாவிற்கு இக்கதையை வாசித்ததையே சொல்ல வேண்டும்.

பாவண்ணன், நஞ்சுண்டன், தி.சு. சதாசிவம், இறையடியான், தமிழ்வன்(வரிசை தரத்தின் அடைப்படையிலானது) என கன்னடம் கூறும் இலக்கிய நல்லுலகை இங்கே கொண்டு வந்தவர்களின் வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் கே.நல்லதம்பி. இவரது மொழியாக்கம் ஒருவழிச் சாலை அல்ல. தமிழிலிருந்து சில நூல்களை கன்னடத்திற்கும் மொழிபெயர்த்திருக்கிறார்.

நவீன தமிழ் சிறுகதைகளில் இதுவரை என்ன நடந்திருக்கிறது? என்பதை நல்லதம்பி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு அறிந்திருக்கலாம். நினைவு படுத்திக் கொண்டுமிருக்கலாம். ஏனெனில் தமிழ்ச் சிறுகதைகள் என்றோ கடந்து வந்து விட்ட பழைய பாதையிலேயே இக்கதைகள் நடை போடுகின்றன. அனுமதி கிட்டியதாலேயே மொழியாக்கம் செய்யப்பட வேண்டியதில்லை.  இங்கு அப்படைப்பின் தேவை, அது உண்டாக்கக்கூடிய சாதகமான மாற்றங்கள், அறியாத வாழ்க்கைகளிலிருந்து கிட்டும் புதிய காற்று போன்றவை மொழிபெயர்க்கப்படுவதற்கான காரணிகளாக இருக்கக் கூடுமென்றால் அது இங்கு நல்விளைவுகளைக் கொண்டுவரும். இவ்விரு நூல்களிலும் அது நிகழவில்லை. இனி வரும் மொழியாக்காங்களிலேனும் இப்பிரக்ஞை நல்லதம்பியின் தேர்வுகளில் தொழில்பட வேண்டும்.

குறிப்பு : திவாகர் மற்றும் ஜயந்த் காய்கிணி ஆகிய இரு படைப்பாளிகளின் கதைகள் குறித்த அவதானிப்புகளும் விமர்சனங்களும் இத்தொகுதியினுள் உள்ள கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இஃது  இவர்களைக் குறித்த முழு மதிப்பீடு அல்ல.

***

இதிகாசம் – எஸ்.திவாகர : தமிழில் – கே. நல்லதம்பி ; காலச்சுவடு பதிப்பகம். விலை ரூ. 150/-
மகிழம்பூ மணம் – ஜயந்த் காய்கிணி : தமிழில் – கே. நல்லதம்பி ; காலச்சுவடு பதிப்பகம். விலை.ரூ.150/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *