கோடைகால மதியப் பொழுதுகள்

மதியம் உறங்கி எழுந்தால்

பெரும்பாரத்தொடு  மனம் கனத்துவிடுகிறது.

 

விடுமுறை நாளில்

வெறிச்சோடி நீண்டுகிடக்கிறது வீதி.

கதவுஜன்னல் சாத்திய வீடு

படுத்துக்கிடக்கும் தெருநாய்

நகராது நிற்கும் வாகனம் என

அசைவற்றது எதைக்கண்டாலும்

கூடிவிடுகிறது விசனம்.

 

கிளைகள் அசையக் குலுங்குகிறது

பட்டுபோய்விட்ட மரம்.

ஏதொயிரு கிளைகள் நடுவே

குடியிருந்ததற்கு சாட்சியாய்

கட்டிய கூட்டை விட்டுப்போன பறவை

இன்னமும் பறந்துகொண்டுதானிருக்குமா?

 

மைதானத்தில்

உற்சாகமாய் நடக்கிறது விளையாட்டு.

உயிர்ப்பாய் விளையாட்டாய்

ஏனில்லை இந்த மதியம் மட்டும்?

 

கணந்தோறும் விழிப்பில் வாழச்சொல்லி

படித்த பாடங்கள் எதுவும் கைகூடவில்லை.

அகலமாக்கும் என்றெண்ணிய அகவிசாரனைகள்

ஆழமாக்கவே செய்தன விசனங்களை.

காலைப்பொழுதில்கூட

பெரிய அற்புதங்களேதும் நிகழ்ந்திருக்கவில்லை.

இரவு கழிய நீண்டநேரம் ஆகலாம்.

முப்பொழுதும் மடிய மறுநாள் விடியும்.

அடுத்த வாரம் திருமணம்.

வரும் வருடங்களில்

ஒன்றிரெண்டு பிள்ளைகள் பெறக்கூடும்.

கட்டாயக் கடமைகளின் எண்ணிக்கை கூடிவிடும்.

வருடம்தோறும் கோடை வரும்.

தழைத்த மரங்கள் ஒருநாள் பட்டுப்போகும்.

கூடுபிரிந்த பறவைகளை எங்கே போய்த் தேடுவது?

 

ஊர்சுற்றி வீடுசேரவும்

மாலை வந்துவிட்டது.

மெல்லிய ஆரவாரத்தோடு

இப்போது நடமாட்டம் தென்படுகிறது.

வெறிச்சோடியிருந்த வீதியை

ஆங்காங்கே இட்டு நிரப்பியிருக்கின்றன

பாதையோர மரங்கள் உதிர்த்த மலர்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...