கங்காணிமார் பாடல்கள்

எம்.ஜி.ஆர்(Awak Cantik Macam Bunga Raya)

தமிழ்த் திரைப்படங்களில் 1970ஆம் ஆண்டுகளில் நடந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்று, வெளி நாடுகளுக்குச் சென்று படபிடிப்பை நடத்துவதாகும்.

பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் வெளிநாட்டுக் காட்சி என்று சொல்லப்படுவது அந்நாட்டின் புறக்காட்சிகளை மட்டும்தான். அந்த நாடு ஓர் அரங்கு போன்றே பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆகவே அந்த நாட்டின் இடங்களும் மனிதர்களும் வாழ்க்கையும் நிர்மானிக்கப்படாத ஸ்டூடியோக்களாக தமிழ்த் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும். படக்காட்சிக்கு  தேர்வு செய்யப்படும் இடங்களும் பிரபல  சுற்றுலா தளங்களாகவும் பெருநகரங்களாகவும் இருக்கும்.  ‘அந்தமான் காதலி’, ‘பைலட் பிரேம் நாத்’, ‘உல்லாசப் பறவைகள்’ போன்ற படங்கள் அந்தமான், இலங்கை, ஜெர்மன் போன்ற நாடுகளைச் சுற்றுலா தளங்களாக மட்டுமே காட்டியிருந்தன. மலேசியா, சிங்கப்பூரை மையப்படுத்திய பல படங்களும் அவ்வாறே அமைந்தவை.

தமிழ் திரைப்பட வரலாற்றில் வெளிநாடுகளுக்குச் சென்று படமெடுக்கும் தொடக்க முயற்சிகள் ஆங்காங்கே நடந்திருந்தாலும், 1973ஆம் ஆண்டு எம்.ஜி ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்  அம்முயற்சியில் பெரும் வெற்றி பெற்றது. மலேசியா, சிங்கப்பூர், ஹாங் காங், தாய்லாந்து, ஜப்பான், என பல நாடுகளின் காட்சிகள் அப்படத்தில் இடம்பெற்றன.

அன்றைய நிலையில் தமிழ்நாட்டுக்காரர்களின் பார்வையில் மலேசியாவும் சிங்கப்பூரும் அதிக வேறுபாடுகள் அற்ற தேசங்களாக இருந்துள்ளன. மலாயாவை மூத்த தலைமுறை வியாபாரிகள் பினாங்கு என்றே குறிப்பிட்டதைப்போல, பிற்காலத்தில் மலேசிய பயணத்தையும் சிங்கப்பூர் அடையாளத்துடனே கூறுவது வழக்கத்தில் இருந்தது. அதோடு, 1970களில் மலேசியாவைவிட சிங்கப்பூர் பன்மடங்கு முன்னேறிய நாகரிக நாடாக உலகம் அறிந்துகொண்டிருந்ததால் ‘கோலாலம்பூருக்குப் போனேன்’ என்பதைவிட ‘சிங்கப்பூருக்குப் போனேன்’ என்பது உயர் கெளரவமாக இருந்தது.  ஆகவே அக்கால கட்டத்தில் சிங்கப்பூர் என்று தமிழ்த் திரைப்படங்களில் குறிப்பிடப்படும் சொல்லுக்குள் மலேசியாவும் அடங்கியிருந்தது.

இயல்பாகவே தமிழ் நாட்டு சாமானியர்களுக்கு அக்காலத்தில் சிங்கப்பூர் மீது வியப்பும் அச்சமும் கலந்தே இருந்துள்ளது.  அந்த மிரட்சியை ‘பாகப் பிரிவினை’ சிங்கப்பூரான் போன்ற கதாபாத்திரங்களின் வழி புரிந்துகொள்ளலாம். சிங்கப்பூர் என்பது ஆடம்பரங்களும் உல்லாச உச்சங்களும் நிறைந்த கிளுகிளுப்பான நாடு என்னும் புரிதலில் பல தமிழ்ப் பட இயக்குனர்கள் இருந்துள்ளனர்.  இன்றும் இருக்கின்றனர். அந்த புரிதலுக்கு ஏற்ற நீச்சல் குளக் காட்சிகளையும் மசாஜ் சென்டர்களையும், பாலியல் தொழிலாளிகளையும்  அக்காலமும் இக்காலமும் படங்களில் காட்டி வருகின்றனர். அவர்களின் வியாபார உத்திக்கு இவை கச்சாப்பொருளாகின்றன.

மலேசியாவில் படமாக்கப்பட காட்சிகளை மற்ற நாடுகளின் பெயரில் பயன்படுத்திக்கொண்ட திரைப்படங்களும் உள்ளன. தோற்ற ஒற்றுமையின் காரணமாக அவற்றை தங்கள் வசதிக்கு இயக்குனர்கள் மாற்றிக்கொண்டனர். எடுத்துக்காட்டாக, கோவா படத்தில் கோவா கடற்கரையாக காட்டப்படுவது லங்காவி கடற்கரையாகும். ஆகவே தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்பது முற்றிலும் புறக்காட்சி சார்ந்த கவர்ச்சி மட்டுமே.

மலேசியாவின் வாழ்வியலை கொஞ்சம் மெனக்கெட்டு சித்தரித்த படம் ‘கபாலி’ மட்டும்தான். அப்பட திரைக்கதையின் வரலாற்றுப் புரிதலில் சில தவறுகள் இருந்தாலும் குடியேறிய நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையில் சற்றே கவனம் செலுத்திய படமாக அது அமைந்தது.

வெளிநாட்டுக் காட்சிகளைப் படமாக்கிய தமிழ்ப் படங்கள் அந்த சூழலுக்கு ஏற்ற பிரத்யேக பாடல்களை புகுத்துவது வழக்கம். 1970களில் மலேசியா-சிங்கப்பூரில் படமாக்கப்பட்ட படங்களில் மலேசியாவையும் சிங்கப்பூரையும் நாலு வரி புகழ்ந்து பாடல் வைப்பது மரபாக இருந்துள்ளது. இங்கு மலாய், சீன இந்திய மக்கள் ஒற்றுமையாக சீரும்சிறப்புமாக வாழ்வதாக மேம்போக்காகப் புரிந்துகொண்டு, கேட்போர் வாயூறிப் போகும் அளவுக்கு புகழ்ந்து எழுதப்பட்ட பாடல் வரிகளாக இன்று அவை உள்ளன.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் விஞ்ஞானி எம்ஜிஆர் கோலாலம்பூர் விமான நிலையம் (சுபாங்) வருவதற்கு அப்பால் மலேசிய காட்சிகள் இடம்பெறாது.  சிங்கப்பூரும், தாய்லாந்தும் கலந்த பாடல் காட்சிகள்தான் உள்ளன. ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் காட்சி தாய்லாந்தில் எடுக்கப்பட்டது. அக்காட்சியில் நடிப்பவர் தாய்லாந்து நடிகை Metta Roongrat. ‘சிரித்து வாழ வேண்டும்,  பாடல் சிங்கப்பூர் பின்னணியில் எடுக்கப்பட்டது.  சிறுவர் சிறுமியருடன் எம்ஜிஆர்  ‘எங்கும் வாழும் மழலைக் கூட்டம் ஒன்றாய் பாடம் படிக்கும்… இல்லை ஜாதி மதமும் இல்லை என்றே பாடிச் சிரிக்கும்’ என்று தன் அரசியலை புகுத்திக்கொள்ள அந்தக் காட்சி பொருத்தமாக அமைந்துள்ளது. மலேசியாவிலும் சிங்கபூரிலும் அமைந்துள்ள மூவினத்தன்மை தமிழ் நாட்டு இயக்குனர்கள் விருப்பத்துக்கு மாற்றி அமைத்துக்கொள்ள இடம்கொடுத்துள்ளது.

1978ஆம் ஆண்டில் ரஜினிகாந்த், ஶ்ரீதேவி நடித்த ப்ரியா திரைப்படம் முழுதும்ரஜினி சிங்கப்பூர் பின்னணியில் அமைந்த கதை. ஆனால் ரஜினியை Hazna Hamid சந்திக்கும் காட்சிகள் கோலாலம்பூரில் படமாக்கப்பட்டவை. இப்படத்தின் மூலக்கதை எழுத்தாளர் சுஜாதாவினுடையது. அவரது மூலக்கதை லண்டனை பின்புலமாகக்கொண்டது. பின்னர் திரைக்கதையானபோது, சில காரணங்களால் சிங்கப்பூர் கதையாக மாற்றங்கண்டுள்ளது. இப்படத்தில் சிங்கப்பூரையும் மலேசியாவையும் புகழ்பாடும் பாடல்கள் இரண்டு உள்ளன.  ‘அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே’ என்று தொடங்கும் பாடல் சிங்கப்பூரின் தேசிய கீதமாக மாற்றிக்கொள்ள எல்லா தகுதியும் உள்ள பாடல். அதன் ஒவ்வொரு வரியிலும் சிங்கப்பூரின் சிறப்புகள் காட்டப்படுகின்றன. இங்குள்ள பலஇனத்தன்மை வியக்கப்படுகின்றது.

//சீனர் தமிழர் மலாய மக்கள்

உறவினர்போல அன்புடன் நட்புடன்

வாழும் சிங்கப்பூர்//

// பார்க்கப் பார்க்க ஆனந்தம்

பறவைப் போல உல்லாசம்

வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்

வெறும் பேச்சு வெட்டிக் கூட்டம்

ஏதும் இல்லை இந்த ஊரில்

கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி

கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்

வாழும் சிங்கப்பூர்//

எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபனில் பல்லின சிறுவர் சிறுமியருடன் பாடல் காட்சி அமைத்துக் கொண்டது போலவே இப்படத்தில் ரஜினிகாந்தும் பல்லின சிறுவர்களுடன் இப்பாடலில்  நடித்துள்ளார்.

ப்ரியா படத்தில் மெட்ராஸ் இளைஞன் கணேஷுக்கு சிங்கப்பூரில் ஒரு  பெண் காதலியாகிறாள். அவள் அப்பா  தமிழர்; அம்மா மலாய் பெண். அதாவது ‘anak mami’ ஆனால் அண்ணன் சீனர்களின் தற்காப்புகலையான குங்ஃபூ கலையில் தேர்ச்சி பெற்று ஹாங் காங்கில் வாழ்கிறான். தன்னை குங்ஃபூவில்  தோற்கடிப்பவனுக்கே தன் தங்கையை திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருக்கிறான். அந்த முஸ்லிம் பெண் தன் காதலனுடன் புத்த கோயிலுக்குச் சென்று வழிபடுகிறாள்.  தமிழ் நாட்டு இயக்குனர்களின், மலேசிய-சிங்கை மூவினம் குறித்த குழப்பமான பார்வை இப்படித்தான் இருந்துள்ளது.

அந்த ஜோடிக்கு ஒரு காதல் பாடல்.  மாலாய் சொற்களைக் கலந்த பாடலாக அமைந்துள்ளது. ‘என் உயிர் நீதானே’ என்று தொடங்கும் பாடலில் வரும் மலாய் வரிகள் இவை. அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழில் முதன்மைப் பாடகராக இருந்தும் தமிழ் உச்சரிப்பில் சொதப்பிவிடும் கே.ஜே ஜேசுதாஸ் இந்த மலாய்ச் சொற்களை ஒருவிதமாக பாடியிருப்பதில் வியப்பில்லை. அந்த மெட்ராஸ் இளைனுக்கு அலாதியான மலேசிய தேசிய பற்று போலும். மலேசியாவின் தேசிய மலர்  பூங்கா ராயா (செம்பரத்தை மலர்) என்பதை நாம் மறந்தாலும் இந்த பாடல் வரிகளின் வழி அவன் ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிறான்.

// Hati Aku Suka Awak

Selalu Aku Cinta Awak

Hati Aku Suka Awak

Selalu Aku Cinta Awak

Saya Pandang Dirimu Saya Berhari-hari Hidup Kan

Saya Pandang Dirimu Saya Berhari-hari Hidup Kan

Pada Soal Yang Hati Padamu//

(பாடல் விளக்கம்:என் மனம் உன்னை விரும்புகிறது; நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன்; உனை தினம் பார்த்துக் கொண்டே உயிர் வாழ்கிறேன்)

// Awak cantik macam bunga raya

Jangan lupa sama saya//

//Hati Kita Tidaklah Dua-dua,

Orang, sahajalah Dua-dua//

(பாடல் விளக்கம் :

பூங்கா ராயா (செம்பரத்தை மலர்) போன்று அழகானவள் நீ

என்னை ஒருநாளும் மறந்துவிடாதே.

 

நம் மனம் இரண்டாகவில்லை

நம் உடல்தான் இரண்டாகிறது)

அதே ஆண்டு வெளிவந்த பக்திப் படமான ‘வருவான் வடிவேலன்’,  பத்துமலை,  கொடிமலை தைப்பூச காட்சிகளை உள்ளடக்கி மலேசிய இந்துக்களின் இந்து சமய பிடிமானத்தை உலகுக்கு உணர்த்தியது. அந்தப் படத்தில் இடம்பெற்ற  Joyful Singapore ; colorful Malaysia பாடல் மலேசியா-சிங்கப்பூரின் மூவினத்தன்மையை வியக்கும் மற்றொரு பாடல்.

//ஆகாயப் பந்தலுக்கு ஆனவட்ட மேகங்கள்

அழகான மலைநாட்டின் மூன்று மொழி ராகங்கள்//

மலேசியா–சிங்கையில் படப்பிடிப்பு நடந்த படங்களில் முழுதும் சுற்றுலா தளங்களும் பெரு நகரங்களும் மட்டுமே மீண்டும் மீண்டும் காட்டப்படுவது வழக்கம். தமிழகத்தில் இருந்து தொழிலாளிகளாக குடியேறிய தொன்னூறு விழுக்காட்டுத் தமிழர்கள் தோட்டங்களில் வாழ்கிறார்கள் என்ற தகவலை எந்த இயக்குனரும் நடிகரும் மறந்தும்கூட தன் படங்களில் காட்டியதில்லை.  Joyful Singapore ; colorful Malaysia பாடலில் ரப்பர் மரம் பற்றிய தகவலும் காட்சியும் வருகின்றது.

//மரத்திலும் பெண் போன்ற குணங்கள்

அதன் மடியிலும் பாலூறும் இடங்கள்

நிழலுக்கு சுகமான வனங்கள்

நாம் ஒதுங்கிட சரியான இடங்கள்//

வருவான்ஆனால்  கண்ணதாசன் பயன்படுத்தும்  உவமை,  மலேசிய தோட்டப்பாட்டாளிகள் ரப்பர் காடுகளில் அனுபவித்த கொசுக்கடியையும் அட்டைக் கடியையும் ரசமான வர்ணனையால் பூசி மெழுகிக் கொள்கிறது. அகிலனின் ‘பால் மரக்காட்டினிலே’ நாவல் தோட்டப்புற வாழ்க்கையை அலங்கார பாவனையோடு நீர்த்துப் போக செய்ததற்கு ஈடான உவமைதான் இது.

1979 ல் வெளிவந்த கே. பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படமும் மலேசிய சிங்கப்பூர் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள மற்றொரு படம். ரஜினிகாந்த், கமலஹாசன், ஜெயப்பிரதா நடித்த இப்படத்தின் கதையும் சுஜாதாவினுடையதுதான். இப்படமும் சிங்கப்பூர் என்ற சொல்லின் பின் மலேசிய நகரங்களை வைத்துக்கொண்ட படமாகும். இப்படத்திலும் மலேசிய வர்ணனைப் பாடல் ஒன்று இடம்பெற்றது.  இன நல்லிணக்கம் குறித்து வியக்கும் வரிகள்தான்

//யாதும் ஊரே யாவரும் கேளிர்

அன்பே எங்கள் உலக தத்துவம்//

//சீனக் கலைகள் மலையக மான்கள்

எங்கும் கிளிகள் நடமாட்டம்

சேர்ந்தே வாழும் வாழ்க்கை இதுதான்

சிரிக்கும் ஆயிரம் மலராட்டம்//

//Saya anak singapura

Saya anak Malaysia

Saya dari India//

(…… பாடகரின் மலாய் உச்சரிப்பு புரியவில்லை)

(பாடல் விளக்கம் :

நான் சிங்கப்பூரின் மகன்

நான் மலேசியாவின் மகன்

நான் இந்தியாவில் இருந்து வந்தேன்

 

1982-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வசந்தத்தில் ஒருநாள்’ திரைப்படம் சிவாஜி கணேசன், ஶ்ரீபிரியா நடிப்பில் முழுவதும் மலேசிய பின்ணனியில் அமைந்த கதை. இக்கதையில் கதைநாயகி மலேசியத் தமிழ்ப் பெண். கேமரன் மலை புளுவேலி தேயிலைத் தோட்டத்தில் வசிப்பவர். அவரது மகளாக வரும் இன்னொரு ஶ்ரீபிரியா கோலாலம்பூரில் பாலியல் தொழில் செய்யும் பெண்.  இப்படத்தில் மலேசிய மக்களின் குறிப்பாக தமிழர்களின் வாழ்க்கையை சித்தரிக்க பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் அவை பயன் படுத்தப்படவில்லை. பாஜு குரோங் உடைகள், மலாய் பாரம்பரிய இசை, வீடுகள் என சடங்காக சில ஒப்பனைகளைக் காட்டும் சிறுபிள்ளை காட்சியமைப்புகள்கொண்ட படம் இது. பாலியல் தொழிலாளியாக வேலை செய்யும் நாயகி பாடுவதாக ஒரு கும்மாள பாடலில்  வரும்  வரிகள் இவை.

//கோலாலம்பூர்  அழகு சிட்டு

கொஞ்சுதுபார் சுங்கிடு பட்டு

மேலாக்கை கொஞ்சம் விலக்கி விட்டு

மின்னுது மொட்டு.

Tiga tiga lima

வாங்கோ வாங்கோ மாமா

………

தெக்கே போனா சிங்கப்பூரு

திரும்பிப் பாத்தா ஜோகூர் பாரு

எல்லா ஊரும் நம்ம பேரு//

இதில் வரும்  tiga tiga lima என்பது சேவைக்கான கட்டணம் போலும். அதை மட்டும் அந்த பெண் மலாயில் குறிப்பிடுவதன் மாயம் புரியவில்லை.

மலாயாவுக்கு தென்நாட்டு மக்கள் கூலித் தொழிலாளிகளாக கொண்டுவரப்பட இரண்டு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. முதலாவது ஒப்பந்தக் கூலி முறை. அதாவது, இந்தியாவில் உள்ள மத்திய தொழிலாளர் ஏஜென்டு மூலமாக இங்கு தொழிலாளர்களாக் கொண்டுவரப்பட்டனர்.  அடுத்தது கங்காணி முறை. 1938ஆம் ஆண்டு முதல் கங்காணி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. கங்காணி முறையின் மூலமாக மட்டும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர் இங்கு வந்துள்ளனர். கங்காணி முறையின் படி மலாயாவில் உள்ள தோட்ட நிர்வாகம் ஒரு நபரை தொழிலாளர் முகவராக நியமித்து தமிழ் நாட்டுக்கு அனுப்பும். அவர் தமிழக கிராமங்களுக்குச் சென்று தன் முயற்சியில் தொழிலாளிகளை மலாயாவுக்கு  திரட்டிக் கொண்டு வருவார். கங்காணி முறையின்படி பல மலாயா ஏஜென்டுகள் தமிழ் நாட்டு கிராமங்களுக்குச் சென்று தொழிலாளர்களைக் கொண்டுவந்தனர். தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவருக்கு கமிஷன் கிடைக்கும். தொழிலாளர்கள் இலவசமாக மலாயாவுக்கு கப்பல் ஏறுவர். பின்னர் இங்குத் தோட்டங்களில் பால் மரம் வெட்டும் தொழிலாளியாகவோ பிற வேலைகளிலோ இருக்கும்போது அவர்களின் ஊதியத்தில் கப்பல் பயணச் செலவு பிடித்தம் செய்யப்படும்.

தமிழ் நாட்டுக்கு தொழிலாளர்  திரட்டச்செல்லும் நபர்களான ‘கங்காணி’ கள் பற்றி பல சுவைக்கதைகள் உள்ளன. பொதுவாக அவர்கள் முதலில் செல்வது தங்கள் சொந்த பூர்வீக கிராமங்களுக்குத்தான். அவர்கள் தங்களுக்கு நன்கு அறிமுகமான நண்பர்கள் உறவினர்களைத்தான் முதலில் அணுகுவர். அவர்களின் வழி மெல்ல மக்களைச் சந்தித்து தங்கள் தனித்துவமான அணுகுமுறையில் வேலைக்கு ஆள் பிடிப்பர்.

இந்த தரகுகள் மிகவும் மிடுக்காகவும் செல்வச் செழிப்பில் இருப்பது போன்றும் மக்களிடம் பாவனைகள் செய்வர். அதோடு, மலாயாவில் வேலை செய்வது கிடைப்பதற்கு அரிய வாய்ப்பு என்றும் ‘சீனிக்கு காக்கா ஓட்டும் வேலை’ என்றும் சொல்லி மக்களிடம் மலாயா பற்றிய அபாரமான கனவுகளை விதைப்பர். மலாயாவில் பணம் காய்க்கும் மரங்கள் இருப்பது போன்றும் அவற்றை பராமரிக்கும் எளிய பணிகளுக்கு ஆள் வேண்டும் என்பதும் போன்ற பல அற்புத கதைகளைச் சொல்வர்.  சில வருடங்கள் மலாயாவில் காலாட்டிக்கொண்டு இருந்தாலே போதும் ஊருக்கு வந்து மாட மாளிகை கட்டிவிடலாம் என்று நம்பிக்கை கொடுப்பர். அந்த வார்த்தைகளுக்கு மயங்கிய பலர் தங்கள் பஞ்ச வாழ்க்கையில் புதிய ஒளி பாய்ந்த கனவுகளுடன் கப்பல் ஏறினர்.

1970-ஆம் ஆண்டுகளில் மலேசியா-சிங்கப்பூருக்கு வந்து படமெடுத்த நடிகர், இயக்குனர்களின் போக்கு எனக்கு 1930களின் கங்காணி முறை முகவர்களைத்தான் ஞாபகப்படுத்துகின்றது. அந்த தரகர்கள் இந்தப் பாடல்களைக் கேட்டிருந்தால் சொல் பிசகாமல் தமிழக கிராமங்களில் பாடி ஆள் திரட்டியிருப்பர்.  அவர்களுக்காகவே எழுதப்பட்ட  பாடல்கள்போல் அவ்வளவு கச்சிதமாக பொருந்துகின்றது.  மாய உலகத்துக்குச் செல்ல வழிகாட்டும் கங்காணிமார் பாடல்கள் இவை என நாம் புரிந்துகொள்ளலாம்.

 

3 comments for “கங்காணிமார் பாடல்கள்

  1. A.Punithawathy
    May 1, 2020 at 11:23 pm

    வித்தியாசமான ஒரு கட்டுரை . இப்பாடல்கள் அனைத்தும் என் பாட்டியுடன் சிறுவயதில் பாடியவை.

  2. MJ
    May 9, 2020 at 6:22 pm

    கோலாலம்பூர் அழகு சிட்டு..tiga tiga lima…பாடலை ,YouTube-ல் கேட்டேன், பாண்டியன்😂😎👌

    • Santhosh
      August 28, 2023 at 2:22 pm

      அருமை

Leave a Reply to MJ Cancel reply