நீங்கள் என் வாயை மூடலாம்
என் மனதையல்ல
நீங்கள் என் கண்களை வெட்டி எறியலாம்
ஆனால் நான் குருடனாக மறுக்கிறேன்
நீங்கள் என் உடலைக் கொல்லலாம்
என் ஆற்றல் உங்கள் முடிவற்ற பொய்களுள் ஊடுருவி
உங்களைப் பேயாய் துரத்தும்
(மொழிபெயர்ப்பு கவிதை)
ஒவ்வொரு கருத்தாக்கத்தையும் கலைவடிவத்தையும் மனிதன் தனது அனுபவம், கல்வி, சிந்தனை, சமூக மதிப்பீடுகளின் வாயிலாக வெவ்வேறாகத் தொகுத்துப் புரிந்துகொள்கிறான். மனிதர்கள் ஒன்றுபோல் சிந்திப்பதில்லை அல்லது ஒரு வினை ஒன்றுக்கும் மேற்பட்ட பரிணாமங்களில் சிந்திக்க வாய்ப்பளிக்கிறது என்பதாக இதை புரிந்துகொள்ளலாம். எனவே, ஒரு புத்தகத்திற்கு விதிக்கப்படும் தடையும்கூட அதை உருவாக்கியவன், வாசிப்பவன் என பல்பரிமாணங்களுக்கு உட்பட்டிருப்பது இயல்புதான். பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இரண்டுமே தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். ஆனால் இவ்விரண்டுக்கும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை மனிதன் புரிந்துகொள்ள தொடங்கியதிலிருந்து தணிக்கை செயல்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. பின்னர் அவை சட்டங்களாகவும் பதிவு செய்யப்பட்டன. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இந்தச் சட்டங்கள் காலனித்துவ காலத்தைச் சேர்ந்தவை என்றாலும், பின்னாளில் ஒவ்வொரு நாடும் தனது அரசியலமைப்பு விதிகள் மூலமாக புத்தகத் தடை நிலைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டன. கல்வி, ஆய்வு, கலைகள் போன்றவை புதிய கருத்தாக்கங்களை முன்வைக்கும் சூழல்களில் அவை நிறுவப்பட்டுவிட்ட விதிமுறைகள், நம்பிக்கைகள், அமைப்புகள் போன்றவற்றுக்கு எதிராக செல்வது இயல்பு. இவ்வாறு பொதுபுத்தியிலிருந்து மீறிச்செல்லும் ஒன்றை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்படியான சூழல்களில்தான் புத்தகத் தடை உத்தரவு செல்வாக்கு பெறுகிறது.
புத்தகத் தடை எல்லா நாடுகளிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. நாம் வாழும் நாட்டைப் பொறுத்து வெவ்வேறு காரணங்களுக்காக புத்தகங்கள் தடைசெய்யப்படுகின்றன. உதாரணமாக, இராணுவ சர்வாதிகார ஆட்சிக்குட்பட்ட அர்ஜெந்தினாவில் 1970 – 1980களில் தேசியவாதம் மற்றும் கத்தோலிக்கம் பேசிய 1.5 பில்லியன் புத்தகங்கள் தடையுத்தரவுக்கு உள்ளானதுடன் எறியூட்டவும் பட்டன. மறுநிலையில், அமெரிக்காவில் பாலியல் சார்ந்த புத்தகங்களுக்கும் கிறித்துவ மதம் தொடர்பான மாற்று சிந்தனைகளை முன்வைக்கும் புத்தகங்களுக்கும் தடை உத்தரவு அதிகமாக இருக்கிறது. இசுலாமிய நாடாகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட மலேசியாவில் இசுலாமிய மதத்தோடு புத்தக தடை தொடர்புப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்வதென்றால், மலேசியாவில் அச்சு இயந்திரம் மற்றும் பதிப்பு சட்டம் 1984 நான்காவது பகுதியான ‘விரும்பத்தகாத வெளியீடுகளின் கட்டுப்பாடு’-[பிரிவு 7(1)] சுமார் 7 வகையான படைப்புகளுக்கு இந்நாட்டில் தடை விதிகளை வரையறுத்துக் கூறுகிறது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அல்லது விளைவிக்க சாத்தியம் உள்ளதாக இருத்தல்; ஒழுக்கப் பண்புகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அல்லது விளைவிக்க சாத்தியம் உள்ளதாக இருத்தல்; பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக அல்லது விளைவிக்க சாத்தியம் உள்ளதாக இருத்தல்; பொது மக்களின் சிந்தனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சாத்தியம் கொண்டிருத்தல்; எவ்வித சட்டத்தை எதிர்க்கும் அல்லது எதிர்க்கும் சாத்தியம் கொண்டிருத்தல்; பொது நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பதாக அல்லது விளைவிக்க சாத்தியம் உள்ளதாக இருத்தல்; நாட்டின் நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பதாக அல்லது விளைவிக்க சாத்தியம் உள்ளதாக இருத்தல் என்பதான இவ்விதிகள் தகவல் அணுகல், கருத்து சுதந்திரத்தின் எல்லைக்கோடாவும் இருந்து செயல்படுகின்றது. சட்டம் இப்படியான வகைமைகளைக் கொண்டிருந்தாலும் இதுவரை மலேசியாவில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் அதிகமும் இசுலாமிய சமயத்தோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. மலேசியா பல்சமூக, இன கட்டுமானங்களைக் கொண்டிருந்தாலும்கூட இசுலாமிய மதம் சார்ந்த பிடிப்பும் கட்டுப்பாடும் மலேசியாவில் முதன்மையானது எனும் புரிதலை இது தருகிறது. இந்நாட்டின் அரசியல் சித்தாந்தத்தையும் கலாச்சார போக்கையும் இதன்வழி ஓரளவு அடையாளம் காண முடிகிறது. இப்படியாக ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டினுடைய கலாச்சாரம், அரசியல் பின்புலம் இன்னதென எளிதாகக் கணித்துவிட முடியும்.
புத்தகங்களுக்கான தடை உத்தரவு சட்டங்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுவதுபோல் ஒரு நாட்டுக்குள்ளேயே நிகழும் ஆட்சி மாற்றங்கள், கொள்கை மற்றும் சித்தாந்த மாற்றங்களும்கூட புத்தகங்களுக்கு விதிக்கப்படும் தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, வெளிப்படைத்தன்மைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக வாக்குறுதியளித்து துன் அப்துல்லா படாவி பிரதமரான காலப்பகுதியில்தான் மலேசியா மிக அதிகமான புத்தக தடை உத்தரவுகளை எதிர்கொண்டது. 1971 முதல் 2007ஆம் ஆண்டு நடுப்பகுதிவரை மலேசியாவில் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 1,446. அவ்வெண்ணிக்கையில், (2003-2007) 5 ஆண்டுகளில் மட்டுமே 279 புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. துன் படாவியின் ஆட்சி காலத்திற்கு முன்பும் பின்பும் இவ்வளவு அதிகமான தடை உத்தரவுகள் பிரப்பிக்கப்பட்டதில்லை. அவர் பிரதமராக பதவியிலிருந்த காலத்தில் தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 43% அதிகரித்தது. மலேசியாவில் புத்தகத் தடை பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்ட காலக்கட்டமாக துன் மகாதீர் நான்காவது பிரதமராக இருந்த காலப்பகுதி குறிப்பிடப்படுகிறது. ஆனால், கலை, புத்தாக்கம் சார்ந்த படைப்புகளுக்கு அக்காலப்பகுதியில் பெருமளவு சுதந்திரம் இருந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இப்படியான சலுகைகள் எதுவும் அதற்கடுத்து வந்த துன் படாவியின் ஆட்சிக்காலத்தில் இல்லை. கொள்கை அளவில் ஆட்சியாளர்கள் வித்தியாசப்படும்போது அது புத்தகத்தடை செயல்பாடுகளிலும் வெளிபடுவதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
அதேசமயம், தடை உத்தரவு என்பது இறுதிமுடிவில்லை எனும் நிதர்சனத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. மேல் முறையீடுகள் வாயிலாகவும் நீதிமன்ற முறையீடுகள் மூலமும் பல புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவுகள் மீட்டுக்கொள்ளப்பட்ட சம்பவங்களும் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக, மலேசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிக்கக்கூடியதெனும் காரணத்தின் அடிப்படையில் 2006ஆம் ஆண்டு தடையுத்தரவு விதிக்கப்பட்ட History of God மற்றும் Muhammad: A Biography of the Prophet ஆகிய இரு புத்தகங்கள் மூன்று ஆண்டுகள் கழித்து எவ்வித விளக்கமுமின்றி 2008ஆம் ஆண்டு தடையுத்தரவு மீட்டுக்கொள்ளப்பட்டது. Breaking the Silence : Voice of Moderation எனும் புத்தகம் 2017ஆம் ஆண்டு உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டது. ‘பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும், ஒழுக்கத்தையும் பொது நலனையும் பாதிக்கும், மற்றும் பொதுமக்களின் மனதை சிதைக்கும்’ எனும் மூன்று காரணங்களுக்காக இப்புத்தகம்மீது தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்ற ஆணையின்வழி 2019ஆம் ஆண்டு அத்தடை உத்தரவு மீட்கப்பட்டது. ஆனால் க. ஆறுமுகம் உருவாக்கத்தில் வெளிவந்த ‘கம்போங் மேடான்’ போல பல புத்தகங்கள் நீதிமன்றத்தில் மீள்முறையீடு செய்யப்பட்டும் நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும்கூட நிகழ்ந்துள்ளன.
உலகெங்கும் இப்போது புழக்கத்தில் உள்ள புத்தகத் தடை இதற்குமுன் (இப்போதும்கூட) பரவலாக இருந்த புத்தக எரிப்பு செயல்பாட்டின் நாகரிக வடிவமாகும். தமிழகத்தில் திராவிட இயக்கங்களும் புத்தக எரிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதை இவ்விடம் நினைவுப்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, 1957ஆம் ஆண்டு பெரியார் முன்னெடுத்த சட்டப் புத்தக எரிப்பு இயக்கத்தைக் குறிப்பிடலாம். இதேபோல, 1930களில் நடைபெற்ற Nazi book-burning மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத பாசிச செயல்பாடாக இன்றும் வர்ணிக்கப்படுகிறது. ஹிட்லரின் ஆட்சிக்குட்பட்ட காலங்களில், ஜெர்மனுக்கு எதிரானவை எனும் காரணத்திற்காக 25,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டன. Albert Einstein, Bertold Brecht, Franz Kafka, Vladimir Mayakovski என இன்று உலகமே கொண்டாடும் படைப்பாளர்கள், அறிஞர்களின் புத்தகங்கள் ஹிட்லரின் நாஷி வெறுப்பு அரசியல் சித்தாந்தத்தால் தீயூட்டப்பட்டன. ஒரு காலப்பகுதியில் பொக்கிஷங்களாக கொண்டாடப்பட்ட இந்த எழுத்தாளர்களும் அவர்களது படைப்பும் பிரிதொரு சமயம் முழுமுற்றாய் நிராகரிக்கப்பட்டன. மலேசியாவிலும் இப்படியான புத்தக எரிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மலாய்க்காரர்களின் உரிமைகளை சீனர்களின்வசம் துங்கு அப்துல் ரக்மான் அடகு வைத்தார் என்பதாக மலாய் சமூகத்தினுடைய எழுந்த எதிர்ப்பின் வெளிபாடாக Buku 13 Mei: Sebelum dan Sesudah எனும் புத்தகம் 1970ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழக மலாய் மாணவர் அமைப்பால் எரிக்கப்பட்டது. இதேபோல பறையர்கள் என்ற சொல்லை தவறான புரிதலுடன் பயன்படுத்தியது, தென்னிந்தியாவிலிருந்து தமிழர்கள் கொண்டுவரப்பட்டதாக சொல்லுமிடத்தில் இந்தியர்களை அவமதிக்கும் விதத்தில் நாவல் எழுதப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் ஜனவரி 2011ல் Interlok நாவல் கிள்ளான் நகரில் பல இடங்களில் தமிழர்களால் எரிக்கப்பட்டது.
அடிப்படையில் புத்தக தடை என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு புத்தகத்தை வாசகனிடமிருந்து அகற்றும் முயற்சியாகும். ‘இந்தப் புத்தகம் வாசிக்க தகுதியானது அல்ல; அல்லது இந்த புத்தகம் ஆபத்தான உள்ளடக்கம் கொண்டது; அதற்கு மேலான பரிவர்த்தனைகள் சட்டரீதியில் குற்றம் சாட்டப்படக்கூடியவை; மறுபதிப்புகளும் செய்ய முடியாது’ என்ற அறிவிப்பை செய்வதுதான் புத்தகத் தடையின் தலையாய நோக்கமாக இருக்கிறது. இதன்மூலம் பொது மற்றும் பள்ளி நூலகங்களில் என்ன புத்தகங்கள் வைக்க வேண்டும், ஒரு நாட்டில் எவற்றை விற்க, பதிப்பிக்க வேண்டும் என்பது தொடர்பில் தனிநபர்கள்/அரசு பொறுப்பான முடிவெடுப்பதாக காட்டப்படுகிறது. கூடுதலாக, இதனை விவேகமான செயல்பாடாகவும் ஒரு தரப்பின் கோரிக்கையை மதிப்பதுமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இத்தடையினுடைய எல்லைகள் என்னவென்றும் பொருட்படுத்திப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. ஓர் அரசு அல்லது உள்ளூர் சமூகம் வரையறுக்கும் புத்தக தணிக்கை அல்லது தடை உத்தரவு என்பது அவர்களுக்குட்பட்ட வளங்களில் பரப்புவதற்கும் வாசிப்பதற்கும் மட்டுமேயான தடையாகதான் சுருங்கி நிற்கிறது. பொருத்தமற்ற உள்ளடக்கம் என்ற காரணம் கூறி புத்தகங்களைத் தடை செய்யும்போது ஒரு தரப்பிடமிருந்து மட்டும்தான் அப்புத்தகம் விலகிவைக்கப் படுகிறது. பொதுவெளியில் இதர மனிதர்கள் அப்புத்தகங்களைப் படிப்பதை இச்சட்டத்தால் எளிதில் தடுக்க முடியாது; தொடர்ந்து எழுத்தாளர்கள் எழுதுவதையும் தடுக்க முடியாது; வேறு இடங்களில், வேறு வடிவங்களில், வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுவதையும் தடுக்கவியலாது. அதேபோல், தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் இன்னொரு சமயம் தடை விலக்கப்படவும் சாத்தியங்கள் உள்ளன. அவ்வகையில், புத்தகத் தடை என்பதை மிகைப்படுத்தப்பட்ட சொல்லாடலாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, Nazi book-burning நிகழ்ந்து 90 ஆண்டுகள் கழிந்துவிட்டது. அப்போது நியாயப்படுத்தப்பட்ட அச்செயல்பாடு இன்று காட்டுமிராண்டித்தனம் என்று வகைப்படுத்தப்படுகிறது; தீயூட்டப்பட்ட புத்தகங்கள் பலநூறு பதிப்புகளிலும் மொழிபெயர்ப்பிலும் வாசிப்புக்கு உட்படுத்தும் தினங்கள் அனுசரிக்கப்பட்டு பிரத்தியேக விரிவுரைகள், கண்காட்சிகள், விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இதுதான் புத்தகங்களின், அதைப் படைத்தவர்களின் வெற்றி. ‘Every burned book enlightens the world’ – எரிக்கப்பட்ட ஒவ்வொரு புத்தகமும் இந்த உலகை ஒளிபெறச் செய்கிறது எனும் இவ்வாசகம் படைப்பும் படைப்பாளனும் அழிவதில்லை; காலம் அவர்களை மீட்டெடுக்கிறது என்று சொல்ல முற்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, ஒரு புத்தகத்திற்கு தடை உத்தரவு வரும்போது ஒரு தரப்பு தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக எண்ணி மன நிறைவடைகிறது; வெற்றியாக எண்ணி கொண்டாடுகிறது. அரசும் பள்ளிகளும் விவேகமான முடிவை எடுத்ததாக நம்புகின்றன. ஆனால், நிதர்சனம் வேறுவிதமாக இருக்கிறது. ஒரு புத்தகத்திற்கு விதிக்கப்படும் தடையானது அப்புத்தகத்துக்கான இலவச விளம்பரமாகி இன்னும் பரவலான கவனத்திற்கு அதை கொண்டு சேர்க்கிறது. இதை நாம் எதிர்மறை விளம்பரம் ‘Negative Publicity’ என்ற சொல்லாடலுடன் தொடர்புப்படுத்தி பார்க்கலாம். ஒரு படைப்பை ஒட்டி எதிர்மறையான மதிப்புரைகள், எதிர்வினைகள் எழும்போது அப்படைப்பு மிக விரைவாக பொது கவனத்தை ஈர்க்கத் தொடங்குகிறது. உதாரணமாக, ஜே.கே. ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவல் கிறுத்துவ, இசுலாமிய மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானது எனக்கூறி பல நாடுகளிலும் பள்ளிகளிலும் தடை உத்தரவை பெற்றது. 2000ஆம் ஆண்டு தொடங்கி 2009ஆம் ஆண்டு வரை சுமார் பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்நாவல் உலக அளவில் அதிகமான தடை உத்தரவுக்கு இலக்கான புத்தகங்களின் பட்டியலில் முதல் இடத்தை வகித்தது. மறுநிலையில், புத்தக விற்பனை வரலாற்றில் அதிகம் விற்பனையான நாவல் தொடராக ஏறக்குறைய 500 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையானதும் ஹாரி பாட்டர்தான். இதேபோல் டான் பிரவுனின் தி டா வின்சி கோட், ஹார்பர் லீயின் டு கில் எ மோக்கிங்பேர்ட், ஜார்ஜ் ஆர்வெல்லின் எனிமல் ஃபம் (விலங்கு பண்ணை) போன்ற படைப்புகள் பல தடை உத்தரவுகளையும் கடந்து பல ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி பற்பல மொழிகளில் மொழிபெயர்ப்புக்கு உட்பட்டு நாடு, மொழி கடந்து வாசகர்களால் கொண்டாடப்படுகிறது.
2000ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு தடை உத்தரவுகளை எதிர்கொண்டுவரும் கேலி சித்திர கலைஞர் ஸுனார் தனது ஆக்கங்கள்மீது விதிக்கப்பட்ட அத்தனை தடைகளையும் கடந்துசென்ற மற்றுமொரு சமகால உதாரணம். நேரடியாகவும் மறைமுகமாகவும் மலேசிய அரசின், அரசு உயர்பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளை விமர்சித்த இவரது படைப்புகளும் அதற்கு உதவிய அச்சு நிறுவனங்களும் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்டன. புத்தக வெளியீடுகள் நடக்கும் இடங்கள் முற்றுகையிடப்பட்டு ஒரு பிரதிகூட விற்பனையாகாதபடி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார் ஸுனார்; வெளியிடப்பட்ட அவரது எழுத்து பிரதிகள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. நாளிதழ்கள், அரசு ஆணைகளில் இது தொடர்பான செய்திகள் பரவலாக்கப்பட்டன. மலேசியாவுக்குள் நடந்துகொண்டிருந்த இவையனைத்தும் மிக விரைவில் உலக கவனம் பெற தொடங்கியது. விளைவாக, சர்வதேச கேலிச் சித்திர உரிமைகள் கட்டமைப்பு (Cartoonist Rights Network International (CRNI)) என்னும் சர்வதேச அமைப்பு கண்டன அறிக்கைகளை வெளியிட்டது. அப்போதும் அவரது புத்தகங்கள்மீது விதிக்கப்பட்ட தடைகள் மீட்டுக்கொள்ளப்படவேயில்லை. இதையெல்லாம் கடந்து, இன்று விருதுகள், பாராட்டுகள் என ஸுனார் உலகறிந்த கலைஞராகத் திகழ்கிறார்.
இரண்டாவது நாவலின்வழி புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் நான்காவது நாவலான த சாத்தானிக் வெர்சஸ் பல முஸ்லீம் நாடுகளின் தடை உத்தரவை பெற்றது. சில நாடுகள் அந்த நாவலை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக ருஷ்டியின் படைப்புகள் அனைத்தையும் தடை செய்தன. கூடுதலாக அவருக்கு கொலை மிரட்டல்கள், (மரண தண்டனை) ஃபத்வா போன்றவையும் வந்து சேர்த்தது. ருஷ்டி பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்து தலைமறைவாக வாழவும் நேர்ந்தது. தடை உத்தரவினால் ருஷ்டி காணாமல் போய்விடவில்லை. பதிலாக, பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய அந்த ஒரு படைப்பு உலக வாசகர்களின் கண்முன் ருஷ்டியை கொண்டுவந்து நிறுத்தியது. 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வுகள், வாசிப்பு என ருஷ்டியின் படைப்புகள்மீதான கவனம் குறையவேயில்லை. நேர், எதிர் விமர்சனம் என ருஷ்டியின் பெயர் ஊடகம், ஆய்வு, வாசிப்பு என பல தளங்களில் பேசுபொருளாகவே இருந்தது. 1983ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் மூத்த இலக்கிய அமைப்பான ராயல் சொசைட்டி ஆஃப் லிட்டரேச்சரின் உறுப்பினராக ருஷ்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். கலை, இலக்கியத் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியதன் அடிப்படையில் பிரான்சு அரசு 1999ஆம் ஆண்டு l’Ordre des Arts et des Lettres விருது வழங்கி அவரை அங்கீகரித்தது. 2007ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு “க்நைட் பேச்சிலர்” (வீரத் திருமகன்) என்ற சர் பட்டத்தை அவருக்கு வழங்கியது. தி டைம்ஸ் நாளிதழ் சிறந்த 50 பிரித்தானிய எழுத்தாளர்களின் வரிசையில் ருஷ்டியை 13வது இடத்தில் பட்டியலிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலையும் மற்றுமொரு உதாரணமாகப் பார்க்கலாம். 2010ஆம் ஆண்டு தமிழில் பதிப்பிக்கப்பட்ட இந்நாவல் 2013ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்துமத விரோதம், குறிப்பிடத்தக்க இனக்குழுவை அவமதிக்கிறது என்பதான காரணங்களுக்காக பல்வேறு அமைப்புகள் 2015ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்நாவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. பொதுவெளியில் நாவல் எரிக்கப்பட்டதோடு தடை உத்தரவு, எழுத்தாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றம்வரை சென்றது. கூடுதலாக அரசாங்க அலுவலர் முன்னிலையில் படைப்பை மீட்டுக்கொள்ள பெருமாள் முருகனை நிர்பந்தித்ததுடன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதமும் அவரிடம் எழுதி வாங்கப்பட்டது. பல மாதங்கள் நீடித்த இந்த சர்ச்சைக்கு முடிவாக நீதிமன்ற தீர்ப்பும் வந்தது. எழுத்தாளர்களுக்கும் கருத்துரிமைக்கும் பாதுகாப்பளிக்கும் பொருட்டு நாவல்மீதும் எழுத்தாளர்மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. பதிப்பிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் எவ்வித சலனமுமற்று ஒரு குறிப்பிட்ட வாசிப்புத் தளத்தில் நின்றிருந்த நாவல் பின்னாளில் சர்ச்சையாக்கப்பட்டபோது தமிழகம், சர்வதேச அளவில் எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலரது கவனத்திற்கு வந்தது. எனவே, படைப்பாளர் கொண்டிருக்கும் சித்தாந்தமும் படைப்பின் தரமும் ஒரு பக்கமிருக்க தடை உத்தரவு, தணிக்கை என்பதான எதிர்மறை விளம்பரங்கள் பல படைப்புகளின் ஆயுளை நீட்டித்துவிடுகின்றன; பிரமாண்டமான தற்காலிக வெளிச்சத்தை அதன்மீது படரவிடுகின்றன.
தற்போதைய கல்வித் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் தர்க்கரீதியான சிந்தனைக்கு (critikal thinking) முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சமுதாயத்தில் எழக்கூடிய சிக்கல் மிகுந்த சவால்களை எதிர்கொள்ளும் திறன்கொண்ட, பொறுப்புள்ள குடிமக்கள்தான் ஒரு நாட்டினுடைய மிக முக்கியமான வளமாகக் கருதப்படுகிறது. வாசிக்க, எழுத, கேட்க, பேச, பார்க்க கற்பிக்கப்படுவதுபோல் தணிக்கை குறித்தும் தெளிவாக பயிற்றுவிப்பது அவசியம். அது சமூக அங்கத்தினராக வாழும் ஒவ்வொருவரது கடமையுமாகும். கருத்து, பேச்சு சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் பல உலக நாடுகள் சிறுவயதிலிருந்தே மாணவர்களுக்குத் தணிக்கை குறித்த புரிதலைக் கொடுக்க முற்படுகின்றன. தடைசெய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதற்கென்றே பிரத்தியேகமாக சிறப்பு நாள்கள் ஒதுக்கப்படுகின்றன; கழிவுவிலைகளில் அப்புத்தகங்கள் விற்கப்படுகின்றன. சுயமாக புத்தகங்களைத் தேர்வு செய்து வாசிக்கவும் அதையொட்டி வெளிப்படையாக பேசவும் விவாதிக்கவும் எழுதவும் மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். உதாரணமாக, தடைவிதிக்கப்பட்ட புத்தகங்களை மாணவர்களிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லி வகுப்பில் அப்புத்தகம் தொடர்பில் பேசுவது, விவாதிப்பது போன்ற நடவடிக்கைகள்வழி மாணவர்களே சுயமாக ஓர் ஆக்கத்தை மதிப்பீடு செய்ய வழிவிடப்படுகிறது. அவ்வாறு மாணவர்கள் உரையாடும் தருணங்களில் பெரியவர்களின் எவ்வித குறுக்கீடுகளும் இல்லாதபோது வாசிப்புக்கு பொருத்தமற்றவை என தணிக்கை செய்யப்பட்ட பல புத்தகங்களை மாணவர்கள் எளிதாக கடந்து செல்லும் சூழலே அதிகம் என்பதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு சொல், வாக்கியம், காட்சி அல்லது பத்தியை மட்டும் தனியாக பிரித்து வாசிப்பது; அதன்மூலம் மொத்த ஆக்கத்தையும் நிராகரிப்பது போன்றான அறிவார்த்தமற்ற செயல்களை விடுத்து எதையும் தணிக்கை செய்யாமல் முழுவதையும் வாசித்து பகுப்பாய்வு செய்வதற்கான முழு சுதந்திரமும் அந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆனால், மலேசியாவில் குறிப்பாக தமிழ்க்கல்வி சூழலில் பொதுவாகவே கல்வியாளர்கள்தான் மாணவர்களுக்கு பொருத்தமான புத்தங்களைத் தேர்ந்தெடுக்கும் தணிக்கை செய்யும் அதிகாரிகளாகச் செயல்படுகிறார்கள். உதாரணமாக, முன்பு எஸ்.பி.எம். இலக்கிய பாடத்திற்கு பாட நூலாக தேர்வுசெய்யப்பட்ட ஐ. இளவழகுவின் இலட்சியப் பயணம் எனும் நாவல் மயிரான், தேவிடியா போன்ற வசை சொற்கள் நீக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது. இவையெல்லாம் மாணவர் வாசிப்புக்கு பொருந்தாது என்ற அடிப்படையில் கல்வியாளர்கள் அவற்றை நீக்கினார்கள். தொழில் அடிப்படையிலான கட்டுப்பாடு, பண்பாடு, கலாச்சாரம் எனும் காரணங்களை முன்வைத்து பெரும்பாலும் கல்விக்கூடங்களில் தணிக்கை என்பது இப்படியாக சொற்கள், வாக்கியங்கள், காட்சிகளை வெட்டுவதும் நீக்குவதும் சில படைப்புகளை முழுமுற்றாக நிராகரிப்பதுமாக ஒரு தரப்பின் மதிப்பீடுகளை ஒட்டுமொத்த மாணவ வாசகர்கள்மீது ஏற்றும் போக்கு நடைமுறையில் உள்ளது. இதைவிட ஒருபடி மேல் சென்று இந்நாட்டில் இயங்கும் தமிழ்மொழி சார்ந்த பதிப்பகமான உமா பதிப்பகம் உலக பொதுமறையாக கொண்டாடப்படும் திருக்குறளிலிந்து இன்பத்துப்பால் பகுதி முழுவதையும் நீக்கி மாணவர் பதிப்பு எனும் அடைமொழியுடன் பதிப்பித்தது. இன்பத்துப்பாலை காமத்தோடு மட்டும் பொறுத்திப்பார்க்கும் அப்பதிப்பகம் மாணவர்களுக்குப் பொருந்தாது என்று முன்முடிவுகள் வரையும் குறுகிய பார்வையின் வெளிபாடாகத்தான் இதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு சிலவற்றை மறைப்பதன் மூலமாகவும் விவாதங்கள் அற்று நிராகரிப்பதன் மூலமாகவும் மாணவர்களை தேவையற்றதிலிருந்து பாதுகாப்பதாக ஒரு மாயத் திரை எழுப்பப்பட்டுள்ளது.
எதார்த்தம் என்னவென்றால், இன்றைய இளைஞர்களும் பெரியவர்கள் வாழும் இதே உலகத்தில்தான் வாழ்கிறார்கள். நேரடி அனுபவம், நண்பர்கள், ஊடகங்கள் வாயிலாக பாலியல், வன்முறை, சகிப்புத்தன்மை இல்லாமை என்பதான அன்றாட வாழ்வில் நிகழும் அனைத்து சிக்கல்களுக்கு மத்தியில்தான் அவர்களும் வாழ்கிறார்கள். சூழல் இப்படியாக இருக்க, தணிக்கை செய்யப்பட்ட பகுதிகள், தடை செய்யக் கோரும் புத்தகங்களால் உண்மையில் பெரியவர்கள்தான் பதற்றமடைகிறார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. பல ஆக்கங்கள் பெரியவர்களின் மதிப்பீட்டின்படி சிக்கலானவை, கிளர்ந்தெழச் செய்பவை, குழப்பமானவை, வாசகனின் எதிர்பார்ப்புகளை உலுக்கி, உணர்வுகளைத் தூண்டக்கூடியவை, ஒழுக்க நெறிகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் சவால் விடக்கூடும், தனது தொழிலுக்கும் நன்மதிப்பிற்கும் கேடு வந்துவிடும் எனும் தன்னுணர்வால் உண்டாகும் சுயதணிக்கை மனமும் ஆழ்ந்த விவாதங்கள் வழி மறுப்பை வெளிப்படுத்தும் போக்கு மழுங்கிவிட்ட சூழலும்தான் பொதுபுத்திக்கு மாற்றான ஒன்று வரும்போது உடனடியாக அதை நிராகரிக்க காரணமாகிறது. பதிலாக விமர்சன ரீதியாகப் படிக்கவும், அதையொட்டி தர்க்கரீதியாக சிந்திக்கவும், பழமைவாதங்களை மீள்மதிப்பீடு செய்யவும் வாசகர்களுக்கு கற்பிப்பதும் வழிவிடுவதும்தான் அவர்களது ஆற்றலை மதிப்பதன் அடையாளமாகும். அதன்மூலமே இனவெறிக்கு தீர்வு காண்பது, உடல் ரீதியான வன்முறைகளையும் இச்சையையும் கையாள்வது, பாலியல் மற்றும் இன, மத, சாதி அடையாள சிக்கல்களை எதிர்கொள்வது போன்றான சமகால சிக்கல்களை விவேகத்துடன் எதிர்கொள்ளும் எதிர்வினையாற்றும் திறன்களை இளைஞர்கள் அடையக்கூடும்.
மேலும், புத்தகத்தை எரிப்பதும் தடை செய்வதும் பல சமயம் எதிர்தரப்பு தனது அதிகாரத்தை வெளிக்காட்டும் செயல்பாடாக, பிற்போக்குத்தனமான செயலாக சுருங்கிப்போகும் நிலை உள்ளதையும் அவசியம் கவனப்படுத்த வேண்டியுள்ளது. உதாரணமாக, மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில் காத்திரமான விமர்சனங்கள் அற்றுபோன நிலையில் தணிக்கையை, தடை உத்தரவை கோரும் செயல்பாடுகளும் தனிமனித காழ்பு, திரிபுவாத போக்குகளால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுபவையாகவே மீந்துபோவதை சமகால நிகழ்வுகள் காட்டுகின்றன. தனிமனித வசை, தொழிலுக்கு ஊறுவிழைவிக்க முனைவதென படைப்பாளனை நசுக்கும் வேலையை இலக்கிய விமர்சனம், எதிர்வினை எனும் பெயரில் முன்னெடுக்கின்றன. இயல்பாகவே இந்நாட்டு தமிழ் எழுத்தாளர்கள் சுயதணிக்கை மனோபாவம் கொண்டவர்களாக இருக்கும் சூழலில் இப்படியான செயல்பாடுகள் கலையுணர்வை நீர்த்துபோக செய்வதுடன், ஒரு வட்டத்துக்குள் நின்று எழுதும்படி எழுத்தாளர்களை மிரட்டுவதாகவும் உள்ளன. பரிசோதனை முயற்சியில் பதிப்பிக்கப்பட்ட தயாஜியின் கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை இலக்கியமறியாத வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு வெற்று சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம். கலை, கல்வி, ஆய்வு சார்ந்த விடயங்களை தினசரிகள் வாசிக்கும் மக்களிடம் கொண்டு செல்வதும் பின் அரசியல், பொது அமைப்புகள், செய்தியாளர்கள் அவற்றை மதிப்பிட்டு தீர்ப்பளிப்பதும் கடும் வன்முறையோடு முன்னெடுக்கப்படுவது இன்றைய போக்காகவே மாறிவிட்டது. ம.நவீனுடைய பேய்ச்சி நாவலும் இதே போன்றதொரு மிதமிஞ்சிய உணர்ச்சிக் கொந்தளிப்புடன்தான் கல்வியாளர்கள் சிலரால் நிராகரிக்கப்பட்டது. தேர்ந்தெடுத்த சொற்களை மட்டும் மீண்டும் மீண்டும் கவனப்படுத்தி அதன்மூலம் அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்கி அதை எதிர்வினையாக காட்ட முனைந்ததையன்றி அறிவார்த்தமான விவாதங்கள் எதுவுமே இந்நாவலை ஒட்டி நிகழவில்லை. அறிவுத்தளங்களில் இதுபோன்ற வன்முறையான செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. புனைவை புனைவாக மட்டுமே அணுகும், அதற்குட்பட்ட தளத்திலேயே விவாதிக்கும் மனப்பக்குவம் சுண்டிய எதிர்தரப்புகள் உண்மையில் அச்சமூட்டக்கூடியவை; முழுமுற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவை.
இறுதியாக, வெறுக்கத்தக்க பேச்சை, செயலை, கருத்தை மட்டுப்படுத்தும் முயற்சியில் பல துறைகளில் நிகழும் ஆக்கபூர்வமான சிந்தனையிலிருந்து மனிதனை விலகி வைக்கும் சூழலையும் புத்தகத் தடை உருவாக்கிவிட்டிருப்பதுதான் நிதர்சன சூழல். அதே சமயம், ஒரு நாட்டினுடைய சட்டதிட்டம், தனிமனித அல்லது ஒரு இனக்குழுவினுடைய நம்பிக்கை, அமைப்பினுடைய கொள்கைகள் ஆகியவற்றை பாதுகாப்பதில் காட்டப்படும் கவனம் பல வேளைகளில் கல்வி, ஆய்வு, கலைகள் முதலான துறைகளில் உருவாகும் புதிய அல்லது மாற்று கருத்தாக்கங்களுக்கான சுதந்திரத்துக்கு மிரட்டலாக மாறிவிடுகிறது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இரண்டையும் முழுமுற்றாய் தடை செய்வதற்கான அடிப்படையாக புத்தகத் தடைகள் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது. ஏனெனில், புதிய கருத்தியல், மாற்றுக் கருத்து, கற்பனை ஆகியவை நீர்த்துபோகும்போது மேலாதிக்கக் மனோபாவங்களும் குறுகிய சிந்தனையும் சுயதணிக்கை குணமும் வேர்விடதொடங்கும். படைப்பாளர்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் அதே நேரத்தில் வன்முறை, சமூக உறவுகளில் பிளவை தோற்றுவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கும் ஆக்கங்கள் சரிவர அடையாளங்காணப்பட்டு மட்டுப்படுத்துவது அவசியம். அதற்கு குற்றவியல் செயல்களுக்கு வழிவகுக்கும் ஆக்கங்களுக்கும் கல்வி, ஆய்வு, கலை சார்ந்த ஆக்கங்களுக்கும் இடையில் மிகத் தெளிவான சட்ட பிரிவினை வரையப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட வேண்டிய தேவையுள்ளது. குற்றவியல் நோக்கங்களைக் கொண்ட ஆக்கங்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவது எந்த அளவுக்கு ஆபத்தானதோ அதேபோல்தான் கல்வி, ஆய்வு, கலை சார்ந்த ஆக்கங்களுக்கு விதிக்கப்படும் தடைகளும் அபத்தமானவை. ஊடே, ஆய்வு, கலை மற்றும் கல்வி தொடர்பான ஆக்கங்களை குற்றவியல் ரீதியில் அணுகாமல் எதிர் கருத்துக்களால் மதிப்பீட்டிற்கு விட வேண்டும். எதிர் கருத்துக்களால் மதிப்பிட அனுமதிக்கும்போது அப்படைப்புகளைக் காப்பாற்ற முடிவதோடு இனிவரும் காலங்களில் தரமான ஆக்கங்கள் வருவதையும் உறுதிசெய்ய முடியும்.