“குறைந்தபட்சம் பதற்றமாவது கொள்ளுங்கள் – கிரெட்டா”

001ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொரு சவாலை மனிதன் எதிர்கொண்டு, கடந்து வருவது எதார்த்தம். ஆரம்பத்தில் மிருகங்களிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் தன்னை தற்காத்து கொள்வது மனிதனுக்கு பெரும் சவாலாக இருந்தது, பின் ஒரு சமூகமாகவும் நாடாகவும் மாறியபோது போர், சுதந்திரம், ஏற்ற தாழ்வு, இன வேறுபாடு, வறுமை, அடக்குமுறை, தொழில்நுட்ப தேவை, மருத்துவத்தில் மேம்பாடு, வளங்களின் பற்றாக்குறை போன்ற பல சவால்களைக் கடந்து வந்துள்ளான். பல நூற்றாண்டுகளைக் கடந்து தற்போது தொழில்நுட்பத்திலும் சரி ஆய்வுகளிலும் சரி பன்மடங்கு மேம்பாடு அடைந்திருந்தாலும்கூட சில சிக்கல்கள் தீர்க்கப்படாமலும் மேலும் பல புதிய சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமலும் மனிதகுலம் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

அவ்வகையில், இருபதாம் நுற்றாண்டில் உலக மக்களின் முதன்மையான சமகால சிக்கலாகப் பருவநிலை மாற்றம் பார்க்கப்படுகின்றது. உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) 2016-ஆம் ஆண்டு வெளியிட்ட  பூமியின் அபாய அறிக்கையின்படி (Global Risks Report), பருவநிலை மாற்றத்தைத் தணிக்கவும் மாற்றியமைக்கவும் மனிதகுலம் தவறியிருப்பது ஆயுதங்கள் ஏற்படுத்தும் பேரழிவைக் காட்டிலும் பூதாகரமானதாக இருக்குமென கணித்துள்ளது. இதனை இந்நூற்றாண்டுவாழ் உயிர்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் என்பது திண்ணம். பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழலின் அமைப்பை தனது இயல்பிலிருந்து மாற்றியமைப்பதுடன் உயிர்கள் வாழும்  இடம்,  அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று வரை அனைத்திலும் பாதிப்பை ஏற்டுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது  (Denchak, 2017, February, 23).

பருவநிலை மாற்றம் வெறுமனே செய்தியாக மீந்துவிடாமல் உலகின் உயிர்கள் அபாயத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன என்ற அச்ச உணர்வுக்கு இன்றைய மனிதகுலம் தள்ளப்பட்டுள்ளது. உலகத்தின் எதிர்காலம் கேள்விகுறியாக இருக்கும் இத்தருணத்திலும் இதன் அவசியம் அறியாதவர்கள் இருக்கவே செய்கிறார்கள் எனும் நிதர்சனத்தையும் இவ்விடம் கவனப்படுத்த வேண்டியுள்ளது. பல உலக நாடுகளும் இயக்கங்களும் இதற்கான பல போராட்டங்களையும் முன்னெடுப்புகளையும் நடத்தி வருகின்றன. தங்களால் இயன்ற முயற்சிகளையும் பருவநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைளையும் மேற்கொண்டு வருகின்றன. பருவநிலை மாற்றத்தினால் அழிவின் விளிம்பில் இருக்கும் மனிதர்களையும் இதர உயிரினங்களையும் காப்பாற்ற காலம் தாழ்த்தாது அனைத்து தரப்பும் ஒன்றினைந்து முயற்சிப்பதன் அவசியம் குறித்து பரவலாக ஆர்வாலர்கள் பேசி, போராடி வருகின்றனர்.

மனித உரிமை தினத்தை முன்னிட்டு ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்’ (Amnesty International) என்ற மனித உரிமைகளை மையமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய கணக்கெடுப்பின்படி, பருவநிலை மாற்றம் உலகம் எதிர்நோக்கும் மிக முக்கியமான சிக்கல்களில் முதன்மையானதாக தெரிவித்துள்ளது. ‘மனிதநேயத்தின் எதிர்காலம்’ (Future of humanity) என்ற தலைப்பில் 22 நாடுகளில் ஜெனரேஷன் Z (Generation Z) எனப்படும் 18 முதல் 25 வயது வரையுள்ள 10,000 இளைஞர்களிடம் இக்கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் உலகம் தற்போது எதிர்கொண்டுவரும் 23 முக்கிய சிக்கல்களின் பட்டியல் வழங்கப்பட்டு அதில் ஏதேனும் ஐந்தினை தேர்ந்தெடுக்குமாறு பணித்துள்ளனர். அதில் 41 விழுக்காட்டினர் பருவநிலை மாற்றத்தை உலகின் தலையாய சிக்கலாக குறிப்பிடும் நிலையில் 36 விழுக்காட்டினர் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் 31 விழுக்காட்டினர் பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இயற்கைத் தொடர்பான சிக்கல்களில் புவி வெப்பமயமாதல் அம்சத்தை அவசியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர் (Amnesty International, 2019, December, 10). இளைஞர்கள் சுயநலமானவர்கள், அக்கறையற்றவர்கள் என்று பொதுவாக பலரால் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி ஆழமாக சிந்திக்கும், குவிமையமான பார்வை கொண்டிருக்கும், அக்கறையும் பொறுப்பும் கொண்டிருக்கும் தரப்பாக இளைஞர்கள் திகழ்வதை இதன்வழி அவதானிக்க முடிகிறது.

அவ்வரிசையில், கடந்த சில வருடங்களாக கிரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) என்ற 17 வயது சிறுமியின் மீது உலக நாடுகள் மற்றும் தலைவர்களின் பார்வை படர்ந்துள்ளது. கிரெட்டா துன்பெர்க் என்பவர் ஸ்விடனைச் சேர்ந்த பருவநிலை இயக்க மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர் ஆவார். தன்னுடைய 15 வயது தொடங்கி பருவநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்று பெரும் புரட்சியை உலகளவில் உண்டாக்கி வருகிறார் (Woodward, 2020, January 3).

இவர் பருவநிலை மாற்றம் குறித்த எண்ணங்களை வாய் பேச்சாக இல்லாமல் தன்னுடைய நடைமுறை வாழ்க்கையில் சாத்தியப்படுத்தியிருப்பது அவர்மீது மரியாதையை ஏற்படுத்துகிறது. இவருடைய முழு பெயர் கிரெட்டா டின்டின் எலியோனோரா எர்மன் துன்பெர்க் (Greta Tintin Eleonora Ernman Thunberg). இவர் 2003-ஆம் வருடம் ஜனவரி 3ல் ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம்வில் (Stockholm) பிறந்தவர். ஆப்பெரா பாடகியான மலேனா எர்ன்மேன்(Malena Ernman) மற்றும் நடிகர் ஸ்வாண்டே துன்பெர்க்(Svante Thunberg) தம்பதியரின் மூத்த மகள் ஆவார். இவருக்கு பீட்டா என்ற இளைய சகோதரியும் உள்ளார். எட்டு வயது இருக்கும்போது கிரேட்டாவுக்கு ‘அசுபெர்கர் நோய்க்குறி’ (Asperger syndrome-மதியிறுக்கத் தொகுதி குறைபாடு) இருப்பதாக கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்நோயை அவர் ஒரு குறைப்பாடாகப் பார்க்கவில்லை. மாறாக, தான் உலகை சற்று வித்தியாசமான, மாறுப்பட்ட கோணங்களில் பார்க்கிறேன் என்றும் தனக்கென தனி முனைப்புடைய ஈடுபாடு இருக்கின்றது என்றும் ‘தி நியூயார்க்கர்’ (The New Yorker) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார். மேலும், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் உள்ளவர்களுக்குக் குறிப்பிட்ட ஒரு விடயத்தின்மீது மிகுந்த ஆர்வம் இருப்பது பொதுவானது என்றும் அதுபோல், தனக்கு பருவநிலை பாதுகாப்பு குறித்து பற்று உள்ளது என்பதையும் பதிவு செய்தார்.

எட்டு வயதில் பருவநிலை மாற்றம் குறித்து படித்து அறிந்துக் கொண்ட கிரெட்டா எதனால் யாரும் அதை தடுப்பதற்காக தகுந்த முயற்சியை எடுக்கவில்லை என்று மன உலைச்சலுக்கு ஆளானார். பள்ளியில் புவி வெப்பமயமாதல் பற்றி கற்கத் தொடங்கிய பின்னர் அதுகுறித்து தெரிந்துக்கொள்ள மேலும் ஆர்வம் காட்டினார். பருவநிலை மாற்றம் உலகில் அவசியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்று தெரிந்த ஆரம்பகாலகட்டத்தில் அவர் அதிகமான மின்சாரம் உபயோகிப்பதைத் தவிர்த்து வீட்டில் உள்ள விளைக்குகளை அணைப்பதை முதலில் செய்யத் தொடங்கினார்.  பிறகு, மாற்றத்தை தன்னிடமிருந்து கொண்டுவர வேண்டும் என்று எண்ணி நனிசைவ உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்டு வந்தார். விமான பயணம் மேற்கொள்வதால் அதிகமான அளவில் கரிவளி உமிழ்வு ஏற்படுகின்றது என்பதை அறிந்த கிரேட்டா, விமானத்தில் பயணிப்பதை முற்றிலுமாக தவிர்தார். இதனை தன் குடும்பத்தினரும் கடைபிடிக்கும்படி வலியுறுத்தினார் (Charlotte, 2019, September, 18).

தன் குடும்பமும் தன்னைப் போல் பருவநிலை மாற்றத்தின் அபாயத்தை அறிந்து செயல்பட வேண்டும் என்று அது குறித்த வரைபடங்கள் மற்றும் தரவுகளைக் காட்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.  இருப்பினும், அவர்கள் கிரேட்டாவின் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கவில்லை. கோபம் அடைந்த கிரேட்டா அவர்களைத் தன் எதிர்காலத்தை திருடுகிறீர்கள் என்றும் சீரழிக்கின்றீர்கள் என்றும் ஆவேசப்பட்டு எச்சரித்த போதே கிரேட்டாவின் வார்த்தைக்கு மதிப்பளிக்க தொடங்கினார்கள். வெளி ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று பாடுவதை முழுநேர தொழிலாகக் கொண்ட கிரேட்டாவின் அம்மா இதன்பின் விமானத்தில் பயணிக்காமல் இவ்வேலையைத் தொடர்வது சாத்தியப்படாது என்றெண்ணி ஆப்பெரா பாடகியான தன்னுடைய சர்வதேச பணித்துறை மகளுக்காகக் கைவிட்டார். மேலும், பெட்ரோலியம் கொண்டு செயல்படும் வாகனங்கள் பயன்படுத்துவதை நிறுத்தி தன் தந்தையை மிதிவண்டியைப் பயன்படுத்தச் சொல்லி வழியுறுத்தியுள்ளார். பின், தன் குடும்பத்திற்காக மின்சார வாகனம் வாங்கினார்கள் (Jonathanwatts, 2019, March, 11).

இந்த முயற்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல நினைத்த கிரேட்டா003 வெளிமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த எண்ணினார். 2018-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஸ்வென்ஸ்கா டாக்லாடெட் (Svenska Dagbladet) என்ற ஸ்வீடிஷ் பத்திரிக்கை நடத்திய கட்டுரை போட்டியில் கிரேட்டா பருவநிலை மாற்றம் தொடர்பாக ஒரு கட்டுரை எழுத்தி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அக்கட்டுரையின் ஒரு பகுதியில் அவர் ‘நான் பாதுகாப்பாக உணர விரும்புகின்றேன், மனித வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடியில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்கும்போது நான் எப்படி பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பதாக உணர முடியும்’ என்று எழுதியுள்ளார். அந்நாளிதழ் அக்கட்டுரையை வெளியிட்ட பின், பருவநிலை மாற்றம் குறித்து ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்று ஆர்வாமாக இருந்து ‘ஃபோஸ்ஸில் ஃப்ரி டால்ஸ்லன்’ (Fossil Free Dalsland) என்ற குழுவைச் சேர்ந்த ‘போ தோரன்’ (Bo Thorén) கிரேட்டாவைத் தொடர்புக் கொண்டார். அவர்களுடைய சில சந்திப்புக் கூட்டங்களில் கிரேட்டாவும் கலந்துக் கொண்டார். அதன் வழியே பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்திற்கான போராட்டங்களை முன்னிறுத்தி நடத்த வேண்டிய அவசியத்தை அறிந்து மற்ற இளைஞர்களையும் தன்னுடைய முயற்சியில் இணையச் சொல்லி வேண்டியுள்ளார். ஆனால், ஒருவரும் உண்மையான ஆர்வம் காட்டவில்லை என்பதால் தனியாளாகவே போராட்டத்தை துவங்க முடிவு செய்தார் (Tait, 2019, June, 06).

2018 ஆகஸ்ட் 20ல் கிரேடா துன்பெர்க்கு பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு தொடங்கியது. ஆனால், அவர் 9 செப்டம்பர் நடக்கவிருக்கும் 2018-ஆம் ஸ்வீடிஷ் பொதுத் தேர்தல் (Swedish general election) வரை பள்ளியில் சேர வேண்டாம் என முடிவு செய்திருந்தார். அந்த ஆண்டு ஸ்வீடிஷ் 262 ஆண்டுகளில் கண்டிறாத வண்ணம் வெப்பம் அதிகரிப்பை எதிர்கொண்டது. இதுவே தன் போராட்டத்தை துவங்க சாதகமான நேரம் என்று எண்ணினார் கிரேட்டா. 20 ஆகஸ்ட் 2018ல் கிரெட்டா ஸ்விடன் நாடாளுமன்றத்தின்முன் அமர்ந்து ‘kolstrejk för klimatet’ (school strike for climate) என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தியபடி போராட்டம் நடத்தினார். பாரிஸ் ஒப்பந்தத்தின்படி கரிமவளி உமிழ்வைக் குறைக்க ஸ்வீடன் அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்பதே அவருடைய இப்போராட்டத்தின் கோரிக்கையாக இருந்தது. இது உலக மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் 7 மில்லியம் இளைஞர்கள் கிரெட்டாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். தான் வகுப்புக்குச் செல்லாமல் போராட்டம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு இருவேறு விதமான கருத்து இருந்ததாகவும்; தங்களை மக்களில் ஒருவராக நினைத்தவர்கள் என்னுடைய போராட்டமானது நல்லது என்று கூறிய நிலையில் ஆசிரியர் என்ற பார்வையில் பார்த்தவர்கள்தான் இந்த போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் எண்ணியதாகவும் ஒரு பேட்டியில் கிரேட்டா குறிபிட்டிருந்தார் (Gessen, 2018, October, 02).

பள்ளிக்கூடங்களிலும் வெளியிலும் பருவநிலை மாற்றம் குறித்து போராட்டங்களை நடத்துவதற்குமுன் மூன்று வருடங்களுக்கு மேலாக பருவநிலை மாற்றம் குறித்து கிரேட்டா மன அழுத்தத்திற்கு உள்ளாகி கடுமையாக பாதிக்கப்பட்டதாக அவரின் அப்பா தெரிவித்தார். கிரேட்டா போராட்டங்களுக்குத் துணிந்தபோது வீட்டில் அவருக்கு போதிய அளவு ஆதரிக்கவில்லை. அவர் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்து போராட்டங்களில் ஈடுபடுவதை விரும்பவில்லை என்று கிரேட்டாவின் தந்தை தெரிவித்தார். ஆனால், தன் மகள் தனக்கென்று ஒரு நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொண்டதை தாம் பெரிதும் மதிப்பதாக கூறினார். “பெற்றோர்களாகிய எங்களுக்கு இரண்டு வழிகளே இருந்தது. ஒன்று, எங்கள் மகள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து வீட்டிலேயே முடக்கி வைத்து அவளை மீள முடியாத சோகத்திற்கும் மன அழுத்தத்திற்கும் தள்ளுவது அல்லது அவளை அவள் விருப்பம்போல் போராட்டத்தை நடத்த வழிவிட்டு மகிழ்ச்சியடை செய்வது. மகளின் விருப்பமும் மகிழ்ச்சியுமே முக்கியம் என எண்ணி அவளுக்கு பக்கபலமாக இருக்கத் முயற்சித்தோம்,” என்றார் ஸ்வாண்டே துன்பெர்க் (Crouch, 2018, September, 01).

2019-ஆம் ஆண்டு ‘பிபிசி’ (BBC) செய்திக்கு கிரேட்டாவின் தந்தை அளித்த பேட்டியில் “என் மனைவி விமானங்களில் பயனிப்பதைத் தவிர்க்க தன் வேலையை விட்டது பருவநிலையைப் பாதுகாப்பதற்காக  அல்ல. எங்களுடைய மகளைக் காப்பாற்றவே. காரணம், கிரேட்டா இதற்காக எவ்வளவு ஆத்மார்த்தமாகவும் நேர்மையாகவும் போராடி வருகிறார் என்பதை அவளின் தாய் அருகில் இருந்து பார்த்துள்ளார். என் மனைவியின் இச்செயலுக்குப் பின் கிரேட்டாவுக்கு மேலும் அதிகமான ஊக்கம் கிடைத்துள்ளது மட்டுமல்லாமல் அவளுடைய முயற்சிகளிலும் அவள் முன்னேறி வருவதைப் பார்க்கிறேன்,’’ என்று தன் மனைவி கூறியதை அவர் குறிப்பிட்டிருந்தார் (McGrath, 2019, December, 30). அதுமட்டுமின்றி, தன் பெற்றோர் தன்னுடைய கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து தங்களுடைய வாழ்க்கைமுறையை மாற்றி அமைத்தது தன்னால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொடுத்ததாக ‘இதயத்திலிருந்து வரும் காட்சிகள்’ (Scenes from the Heart) என்ற நூலில் கிரேட்டா குறிப்பிட்டிருந்தார் (Lambeck, 2019, May, 06).

மற்றவர்களுக்கு வலியுறுத்தும் தீர்வுகளை அறிவுரைகளாக முன்வைக்காமல் சொல்லிய வண்ணமே கிரெட்டா வாழ்கிறார்.ஆகஸ்ட் 2019ல் முக்கியமான பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்காவிற்கு பயணம் செய்ய வேண்டிய சூழலில் விமான பயணத்தை தவிர்த்து 14 நாட்கள் இரயில் பயணத்தை மேற்கொண்டார் கிரெட்டா (Charlotte, 2019, September, 18). புவி வெப்பமயமாதலால் மனிதகுலம் இருத்தலியல் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என்றும் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்களே இச்சிக்கல் உருவாகுவதற்கான முழு பொறுப்பானவர்கள் என கிரேட்டா துன்பெர்க் நம்புகிறார் (Oroschakoff, 2019, April, 16). பருவநிலை குறித்த தன்னுடைய கவலைகளைக் பொது கவன ஈர்ப்பு தேவைகளுக்காக ‘நம் வீட்டில் தீ பற்றியுள்ளது’ (our house is on fire) போன்ற வரைகலை ஒப்புமைகளைப் (graphic analogies) பயன்படுத்துகிறார் (Hertsgaard, 2019, January, 28).

பருவநிலை மாற்றம் இளைஞர்களுக்குச் சமமற்ற விகிதத்தில் ஏற்றத்தாழ்வான விளைவை ஏற்படுத்தி அவர்களுடைய எதிர்காலத்தை ஆழமாக பாதிக்கும் என்று கிரேட்டா சுட்டிக்காட்டியுள்ளார். சிறிய எண்ணிக்கையில் அடங்கிய ஒரு தரப்பு மனிதர்கள் தங்களின் ஏகபோக வாழ்வுக்குப் பிறரால் கற்பனைகூட செய்துப்பார்க்க முடியாத அளவு பணத்தைச் சம்பாதிக்க முனைந்ததன் விளைவாக பெருவாரியான இளைஞர்களின் எதிர்காலம் நிர்கதியாகிவிட்டது. இதனால், தனது தலைமுறைக்கு இனி எதிர்காலமே இல்லாமலாகிவிட்டது என்று கிரேட்டா தனது வாதத்தை முன்வைக்கிறார். உலகின் தெற்கு பகுதிகள் வாழ்பவர்கள் மிகச் சிறிய அளவிலேயே கரிவளி வெளியேற்றத்திற்கு காரணமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் பருவநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வார்கள் என மேற்கோளிட்டு சுட்டிக்காட்டியுள்ளார் கிரேட்டா (Johnson, 2019, June, 07). இதற்கு, ஏற்கனவே பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொண்டுவரும் வளரும் நாடுகளைச் சேர்ந்த இளம் ஆர்வலர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு தன் உரைகளில் அது குறித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளார் கிரேட்டா. 2019 டிசம்பர் மாதம் மத்ரித் (Madrid) நகரில் பேசிய உரையில் “நாங்கள் எங்கள் எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறோம். அவர்கள் நிகழ்காலத்தை பற்றி பேசுகிறார்கள் “(We talk about our future, they talk about their present) என்று குறிப்பிட்டிருந்தார் (Jordans, Parra, 2019, December, 10).

கிரேட்டா துன்பெர்க் தன்னுடைய தன்னலமற்ற சேவைக்காக பல்வேறு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். அதே சமயம் சிறுவர்களுக்கான சர்வதேச அமைதி பரிசு (International Children’s Peace Prize) பெற விமானம் வழி பயணம் செய்ய வேண்டியிருக்கும் சூழலில் அவ்விருதை வாங்கவும் மறுத்திருக்கிறார். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பரிசுகளையும் பெற்றுள்ளார். பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் வெற்றி அடைந்ததற்கு அறிவியல் நிறுவனங்களிடமிருந்து பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் (Sengupta, 2020, January, 24). அவரை சிறப்பு செய்யும் விதமாக ‘Royal Scottish Geographical Society’’யின் தோழமை (fellowship) வழங்கப்பட்டுள்ளது. டைம் இதழின் தாக்கமேற்படுத்திய 100 நபர்களில் (Time magazine’s 100 most influential people) ஒருவராக கிரேட்டா பட்டியலிடப்பட்டுள்ளார். பின், அவ்வார இதழின் ‘Person of the Year’ என்னும் விருதை 2019-ஆம் ஆண்டு மிக இளமையான வயதில் பெற்ற பெருமையும் இவரையே சாரும். மேலும், அதே அண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் (Forbes list of The World’s 100 Most Powerful Women) வரிசையிலும் இடம் பெற்றுள்ளார். 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கும் (Nobel Peace Prize) பரிந்துரைக்கப்பட்டுள்ளார் (Solsvik, 2020, February, 27).

கிரேட்டாவின் போராட்டத்திற்கு பல நாடுகளில் இருந்து நிறைய பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக ‘Fridays for Future’ என்ற போராட்டம் நூறாயிரக்கணக்கான மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும் இப்போராட்டத்தில் உலகெங்கிலும் வாழும் மாணவர்கள் பங்கெடுத்து ஊக்கமளித்தார்கள். பெல்ஜியம், கனடா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பின்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளில் இளைஞர்கள் கூடி போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர் (Irfan, 2019, September, 20). கிரேட்டா உலகளவில் பிரபலமான பிறகு பருவநிலை மாற்றம் குறித்த உரைகளை நிகழ்த்த ஏராளமான அழைப்புகள் வந்தது. சுவிட்சர்லாந்தில் அமைந்திருக்கும் தாவோசு-இல் நடைப்பெற்ற உலக பொருளாதார மன்றம், ஐரோப்பிய பாராளுமன்றம், இத்தாலியின் சட்டமன்றம், பிரான்ஸ், யுனைடெட் கிங்டம், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கிரேட்ட பருவநிலை தொடர்பாக பேசியுள்ளார். குறிப்பாக, செப்டம்பர் 2019ல் நியூயார்க் நகரில்  நடைப்பெற்ற ஐ.நா. பருவநிலை நிகழ்வில் அவருடைய உணர்ச்சிமிக்க பேச்சு அதிகமானவர்களின் கவனத்தை ஈர்த்தது (Tikkanen, 2020, February, 27). அவருடைய தைரியமான அவ்வுரையைக் கேட்டு அரங்கம் முழுதும் பரந்த கைத்தட்டலில் மூழ்கியது. ஐக்கிய நாடுகளின் சபையில் பருவநிலை நிகழ்வில் கிரேட்டா துன்பெர் அற்றிய உரையின் எழுத்துப்படி:

இங்கு நான் பகிர எண்ணும் செய்தி என்னவென்றால் நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருப்போம். நீங்கள் செய்துக் கொண்டிருப்பது தவறு. நான் இந்நேரம், இங்கு, இப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கடலுக்கு அப்பால் இருக்கும் என் பள்ளியில் இருக்க வேண்டும். இருந்தும், என்னைப்போன்ற இளைஞர்களிடமிருந்துதான் நீங்கள் மாற்றத்தையும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பதாக மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்! உங்களது வெற்று வார்த்தைகளால் என் கனவுகளையும் என் குழந்தைப்பருவத்தையும் திருடிவிட்டீர்கள். ஆனால், இன்னும் நான் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவள்தான். என்னைப் போன்றவர்களைத் தவிர உலகில் வாழும் ஏனைய மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் தனது உயிர்ப்பை இழந்துக் கொண்டிருக்கிறது. நாம் மாபெரும் அழிவின் தொடக்கத்தில் நிற்கின்றோம். ஆனால், நீங்கள் இன்னமும் பேசிக்கொண்டிருப்பது பணம், பொருளாதார வளர்ச்சி என்பதான விசித்திரக் கதைகளை மட்டும்தான். உங்களுக்கு எவ்வளவு தைரியம்! 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானமும் அறிவியலும் தெள்ள தெளிவா உலக அழிவின் கூர்முனைகளை உங்கள் பார்வைக்குக் கொண்டுவந்து கொட்டுகிறது. அதனைக் கவனிக்காமல், சட்டையாய் கடந்து செல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம்! தேவையான அரசியல் மாற்றங்களும் தீர்வுகளும் இன்னமும்கூட எங்கும் ஏற்படவில்லை. ஆனால், நீங்கள் அனைத்தையும் போதுமான அளவு செய்துவிட்டதாக பசப்புகிறீர்கள்.

எங்களுடைய கோரிகைகளுக்குச் செவி சாய்ப்பதாகவும் அதனுடைய அவசரத்தைப் புரிந்துக் கொள்கிறோம் என்று துகாறும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனால், கவலை, கோபம் என எவ்வித உணர்வெழுச்சியிலிருந்தாலும் நான் இதை ஒருபோதும் நம்ப தயாராகவில்லை. காரணம், உண்மை நிலையை அறிந்தும், தொடர்ந்து அதற்காக செயல்படத் தவறியுள்ளதால் நிச்சயம் நீங்கள் தீயவர்களாகவே னக்குக் காட்சியளிக்கிறீர்கள். எனவே நீங்கள் சொல்லும் எதையும் நான் நம்ப மறுக்கிறேன்.

10 வருடங்களில் கரிவளி உமிழ்வைப் பாதியாகக் குறைப்பதாக கூறி முன்வைக்கப்பட்டிருக்கும் பிரபல ஆலோசனையானது நடைமுறை சூழலில் 50 விழுக்காட்டு சாத்தியத்தை மட்டுமே கொண்டுள்ளது. இதிலும்கூட, மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள்  (உலகில் அவ்வப்போது நிகழும் சிறு குறு மாற்றங்களால் உண்டாகும் பாதிப்புகள்-tipping points, அதன் நீட்சியில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அல்லது மாற்றங்கள்-feedback loops, நச்சுத்தன்மை வாய்த்த காற்று அதன் தூய்மையற்ற நிலையில் உட்கொண்டிருக்கும் கூடுதல் வெப்பத்தன்மை-additional warming hidden by toxic air pollution மற்றும் பருவநிலை மாற்றத்தால் பருவநிலைக்கு கிடைக்க வேண்டிய நீதி) குறித்து இவ்வாய்வு எவ்வித கவனத்தையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. கூடுதலாக, அந்த 50 விழுக்காட்டு சாத்தியப்படுத்த என் தலைமுறையைச் சார்ந்தவர்களையும் துணைக்கழைக்கிறார்கள். காரணம், இப்பத்தாண்டுகளில் தொழில்நுட்ப பயன்பாட்டின்வழி நூற்றுக்கணக்கான பில்லியன் டன் கரிவளியை காற்றிலிருந்து உறிஞ்சி பூமிக்குள் உமிழ்பவர்களாக என் தலைமுறையைச் சார்ந்தவர்களும் இருகின்றார்கள். அவ்வகையில் எங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்த பின்பும்கூட நாங்கள் எஞ்சிய 50 விழுக்காட்டு  விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதுதான் நிதர்சனம்.

ஜனவரி 1, 2018க்குள் 420 ஜிகாடன் கரிவளி பூமியிலிருந்து வெளியேறியிருந்தால், உலக வெப்பநிலை 1.5 டிகிரிக்கு கீழே இருக்க 67 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக பருவநிலை மாற்றம் தொடர்பான இடைஅரசு குழு (Intergovernmental Panel on Climate Change) தெரிவித்திருந்தது. ஆனால், 350 ஜிகாடன்னுக்கும் குறைவா கரிவளி மட்டுமே வெளியேற்றப் பட்டது. திட்டமிட்டதற்கு மாற்றாகவே அனைத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கையில் இதை வழக்கம் போலான ஒரு பிரச்சனையாகவும் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்க்க முடியும் என்றும் எந்த தைரியத்தில் நிதானிக்கிறீர்கள்? கரிவளி உமிழ்வை குறைக்க வகுக்கப்பட்டிருக்கும் திட்டமானது மிகச்சரியாக எட்டரை ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிடும். அதற்கு பின்பான காலங்களில் சரிசெய்யவியலாத வெப்பமயமாதலை எந்நிலையிலும் சரிசெய்ய முடியாத சூழலே எஞ்சும். புள்ளிவிவரங்கள் இப்படியான நிலையை உணர்த்தியிருக்கும் சூழலில், இன்றுவரை தையொட்டி எந்தவொரு தீர்வுகளும் திட்டங்களும் இன்றைய அரங்கில் வழங்கப்படவில்லை. ஏனெனில், இந்த புள்ளிவிவரங்கள் அவ்வளவு மகிழ்ச்சிக்குரியதாக இல்லை; அது போலவே நீங்களும் அதனை வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு இன்னும் முதிர்ச்சியடையவில்லை. நீங்கள் எங்களைத் தோல்வியுற செய்துவிட்டீர்கள். ஆனால், என்னைப்போன்ற இளைஞர்கள் உங்கள் துரோகத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள். வருங்கால சந்ததியினர் அனைவரின் கண்களும் உங்கள்மீது திந்துள்ளது. நீங்கள் எங்களை இதற்கு மேலும் தோல்வியுறச் செய்தால், நாங்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். திலிருந்து தப்பியோட உங்களை அனுமதிக்க மாட்டோம். இங்கேயே, இப்போதே நாம் நம் எல்லை கோட்டை வரையறைச் செய்தாக வேண்டும். உலகம் விழித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி மாற்றம் வருவது உறுதி.”   

(Weise, 2019, September, 24)

002கிரேட்டாவின் இவ்வுரை சமுக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த ஒரே மாதத்திற்குள் 163க்கும் மேற்பட்ட நாடுகளில் மில்லியன் கணக்கானோர் பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டத்தில் அணிவகுத்துச் சென்றனர். பருவநிலை தொடர்பான பலரின் கருத்துகளையும் நடவடிக்கைகளையும் மாற்றியமைத்த பெருமை கிரேட்டாவையே சாரும் என கூறி அம்முன்னெடுப்பை ‘The Greta Effect’ என அழைக்க தொடங்கினர். மறுநிலையில், அவருக்கு சில எதிர்ப்பாளர்களும் இருக்கவே செய்கின்றனர் (Tikkanen, 2020, February, 27).

உலகெங்கிலும் பல மாணவர்கள் கிரேட்டாவின் போராட்டங்களினால் ஊக்கமடைந்துள்ளனர். மேலும், பருவநிலை ஆர்வலர்கள், உலகத் தலைவர்கள் மற்றும் திருத்தந்தை பிரான்சிசு (Pope Francis) ஆகியவர்கள் கிரேட்டாவிற்கு ஆதரவை வழங்குவது மட்டுமல்லாமல் அவர் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று ஊக்கமளித்து வருகிறார்கள். பிபிசியில் பணி புரியும் ஆங்கிலேய இயற்கையியலாளரான டேவிட் ஆட்டன்பரோ (David Attenborough), பலரும் செய்யத் தவறிய விடயங்களைக் கிரேட்டா துன்பெர் அடைந்திருப்பதாக குறிப்பிடுகிறார். மேலும், கிரேட்டா உலகின் கண்களை விழிக்க செய்துள்ளார் என்றும் தான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஆனால்,  ஒரு சில உலக தலைவர்கள் கிரேட்டா சிறுபிள்ளை என்று அவமதித்து வருகிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு சமயங்களில் கிரேட்டா புகழுக்காவே இவ்வாறு செயல்படுகிறார் என்று முழுமுற்றாக அவரது செயல்பாடுகள் அனைத்தையும் நிராகரிப்பதோடு, சிறு வயதில் கோபத்தைக் கட்டுபடுத்த கிரேட்டா  கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  கிரேட்டாவை ‘நற்குணம் உடையவர்; ஆனால் முறையற்ற தகவல்களை பரப்பும் இளைஞர்’ என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் (US Treasury Secretary Steven Mnuchin), போராட்டம் நடத்தும் இளைஞர்களை நோக்கி, ‘முதலீட்டாளர்களுக்குச் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு பொருளாதாரத்தைப் கொஞ்சம் படியுங்கள்’ என்று கிண்டலடித்தார் (BBC News, 2020, February, 28).

இது அனைத்தும் ஒரு புறம் இருக்க, சமூக வலைதளங்களில் கிரேட்டா துன்பெர் குறித்து பலரும் பலவிதமான மாற்றுக் கருத்துகளுடன் சுழன்றுக் கொண்டிருக்கிறார்கள். கிரேட்டாவைப் புகழ்பவர்கள், தூற்றுபவர்களுக்கு மத்தியில் அவரைப்பற்றி போலியான தகவல்களைப் பரப்பும் கூட்டங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகி வருகின்றது. சில மாதங்களுக்கு முன், 121 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு சிறுமியின் புகைப்படம் டுவிட்டர் அகபக்கத்தில் தீவிரமாக பகிரப்பட்டு வந்தது மட்டுமல்லாமல் அப்படத்தில் இருக்கும் சிறுமி இளம் ஆர்வலரான கிரேட்ட துன்பெக் போல் இருப்பதால் காலப் பயணம் செய்து அவர்தான் உலகை காப்பாற்ற மீண்டும் தோன்றியுள்ளார் என்ற வினோதமான பதிவுகளும் பரப்பப்பட்டன. வாஷிங்டன் பல்கலைக்கழக காப்பகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில், மூன்று குழந்தைகள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது போல காணப்படுகிறது. முன்புறத்தில் உள்ள ஒரு சிறுமியின் ஜடை, முக அமைப்பு, கண்கள் எல்லாம் கிரெட்டாவைப் போலவே தோற்றமளிக்கின்றன என்பதால் பலரும் அதை முழுமையாக நம்பவும் முற்பட்டனர். ஆனால், வேறு சிலர் இது செம்மையாக்கல் (Editing) செய்யப்பட்ட படமாக இருக்ககூடும் என்று பதிவிடுகிறார்கள். ஆனால், இப்புகைப்படம் கனடாவில் 1898 ஆம் ஆண்டு தங்க சுரங்கம் ஒன்றில் எடுக்கப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் உறுதி செய்துள்ளனர் (BBC News, 2020, February, 28).

தற்போது கோவிட்-19 பெரும்பரப்பு நோய்தொற்று காரணத்தால் வீட்டில் அடைபட்டு இருக்கும் அனைவரும் பருவநிலை நெருக்கடி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் கரிவளி வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையைத் தாமதப்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் கிரேட்டா கூறியிள்ளார். ‘நீயூ சைன்டீஸ்ட்’ (New Scientist) வலையொலியில் கொடுத்த பேட்டியில் ‘Fridays for Future’ இயக்கம் மெய்நிகர் (virtual) வழி போராட்டங்களைத் தொடரப்போவதாக தெரிவித்திருந்தார். துன்பெர்க் மேலும் கூறுகையில், ‘ஒரு கிறுமி சில வாரங்களிலேயே பொருளாதாரத்தை சரிவடையச் செய்து, எவரையும் வெளியே செல்லவிடாமல் முடங்கிவிட செய்துள்ளது. மனித குலம் எவ்வித எதிர்ப்பாற்றலும் உள்ள சமூகமாக இல்லை என்பதற்கு இச்சூழல் ஒரு சான்று. அவசாரகால நிலையில் இருக்கின்றோம் என்று தெரிந்தவுடன் எந்தவித அற்ப காரணங்களையும் சொல்லாமல் நம்மால் உடனடியாக செயல்பட முடியும், வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் மாற்ற முடியும் என இதிலிருந்து தெளிவாக தெரிய வருகிறது’ என்றும் குறிப்பிட்டிருந்தார் (Vaughan, 2020, March, 30). பருவநிலை மாற்றம் குறித்து எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் கிரேட்டாவை திட்டியவர்களுக்கும் சுயநலமான உலக தலைவர்களிடமும் கிரேட்டா எப்போதும் சொல்வது “நீங்கள் என்னுடன் களத்தில் போராடாவிட்டாலும் பரவாயில்லை. நாம் ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று குறைந்தபட்சம் பதற்றமாவது கொள்ளுங்கள்,” என்பதேயாகும். ஆபத்தின் விளிம்பில் இருக்கும்போதுதான் மனிதர்கள் தங்களை சுற்றி இருக்கும் நிதர்சனத்தைப் புரிந்து செயல்பட தொடங்குகிறார்கள். ஆனால், தாமத்திக்கும் ஒவ்வொரு கனமும் பேரழிவுக்கு வித்திடுகிறது என்பதை இன்றும் உணராமலே இருக்கிறார்கள்.

தன்மீது கூறப்படும் அவதூறுகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் கிரெட்டா தொடர்ந்து பருவநிலை குறித்து போராட்டங்களும் உரைகளும் நிகழ்த்தி வருகிறார். சுற்றுச் சூழலைக் காக்க வேண்டும், காடழிப்புகளை நிறுத்த வேண்டும், இயற்கையைப் பேண வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் போராடும் முகநூல் போராளிகளுக்கு மத்தியில் 15 வயதிலே களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார் கிரெட்டா துன்பெர்க். இவரைப் போலவே பல நாடுகளில் இளைஞர்களும் சமூக ஆர்வாலர்களும் பருவநிலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வர முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஜெர்மனியின் கோல்ன் (Cologne) நகரைச் சேர்ந்த மாணவர்கள் குழு பருவநிலை மாற்றம், நெருக்கடிக்கு பொதுமக்களின் கவனத்து ஈர்க்க தூக்கு மேடை ஒன்று அமைத்து அதில் மூன்று மாணவர்கள் கழுத்தில் ஆபத்து இல்லாத முறையில் தூக்கு கயிறை இறுக்கி, பனிக்கட்டியின்மீது ஏறி நின்று போராட்டம் செய்தனர். உருகிக் கொண்டிருக்கும் பனிக்கட்டிகள் எஞ்சியிருக்கும் வரை மாணவர்கள் பனிக்கட்டிகளில் நின்றிருந்தனர். கால்களுக்கு எட்டாத அளவு பனிக்கட்டிகள் உருகிவிடும்போது அவர்கள் தூக்கிலிடப்பட்டவர்கள் போல் காட்சியளித்தார்கள். அவர்களை இந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் காணப்பட்டதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர். பருவநிலை மாற்றத்தின் அநீதிகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் நோக்கில் மாணவர்கள் உலகம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருப்பதை வலியுறுத்தும் வகையிலும், அதனை அனைவரது ஒத்துழைப்பால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் எனும் கருத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் நோக்கில் இம்மாதிரியான முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்கள் (Connolly, 2019, July, 11).

உலகெங்கிலும் பருவநிலை மாற்றம் குறித்து பல போராட்டங்களும் மோதல்களும் நடந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மலேசிய மக்கள் பருவநிலை மாற்றம் குறித்து என்ன நிலைபாடைக் கொண்டுள்ளார்கள் என்ற கேள்வி தோன்றுகிறது. இந்நாட்டு கல்விக்கூடங்களிலும் தனியார் இயக்கங்களிலும் பருவநிலை மாற்றம் குறித்த செயற்பாடுகள் மிக குறைவாகவே காணப்படுகின்றது. படித்தவர்கள் மத்தியில் இதை பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லை என்றாலும் ஏதோ ஒரு வழியில் பள்ளியிலோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ இது தொடர்பாக செய்தியை ஓரளவு அறிந்து வைத்துள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவர்களும்கூட அதனை எளிதில் கடந்து செல்பவர்களாகதான் உள்ளனர். அதிகமான உணவு விரயம், மின்சாரம் தண்ணீர் இரண்டையும் சேமிக்கும் பழக்கமின்மை, சாலைகளில் நெரிசல் கூட்டும் அதிகமான வாகனங்கள், மிக முக்கியமாக குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசுவது இதற்கு மிக முக்கிய சான்றுகளாக கூறலாம். இவை அனைத்துமே ஏதொ ஒரு வகையில் புவி வெப்பமயமாதலுக்கும், பருவநிலை மாற்றத்திற்கும் பங்களித்துக் கொண்டுள்ளன. இந்நாட்டு அரசாங்கமும் சொற்பமான அளவிலேயே இதுகுறித்த கவனத்தை முன்வைக்கிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கம் நம் கண்களுக்குத் தெரியாத தூரத்தில் இருப்பதால் அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருப்பது நம்முடைய அறியாமையையே குறிக்கின்றது. உலகமும் இயற்கையும் நமக்காக இப்போது போல எப்பொழுதும் இருக்கும் என்று எந்த உறுதியும் இல்லை; ஒரு நாள் அதுவும் கூட நிலையற்றதாகக் கூடும்.

 

மேற்கோள் பட்டியல்

Amnesty International. (2019, December, 10). Climate change ranks highest as vital issue of our time – Generation Z survey. Retrieved from https://www.amnesty.org/en/latest/news/2019/12/climate-change-ranks-highest-as-vital-issue-of-our-time/

Ankel, S. (2019, November, 21). A photograph of a Greta Thunberg lookalike from 1898 is sparking conspiracy theories that she’s a time traveler. Retrieved from https://www.insider.com/greta-thunbergs-lookalike-been-spotted-in-a-picture-from-1898-2019-11

BBC News. (2020, February, 28). Greta Thunberg: What does the teenage climate change activist want?. Retrieved from https://www.bbc.com/news/world-europe-49918719

Charlotte. (2019, September, 18). WHO IS GRETA THUNBERG? Retrieved from https://www.livekindly.co/climate-activist-greta-thunberg-biography/

Connolly, L. (2019, July, 11). Climate Change Protesters Hang Themselves By Noose While Stood On Blocks Of Ice. Retrieved from https://www.unilad.co.uk/news/climate-change-protesters-hang-themselves-by-noose-while-stood-on-blocks-of-ice/

Crouch, D. (2018, September, 01). The Swedish 15-year-old who’s cutting class to fight the climate crisis. Retrieved from https://www.theguardian.com/science/2018/sep/01/swedish-15-year-old-cutting-class-to-fight-the-climate-crisis

Denchak, M. (2017, February, 23). Global Climate Change: What You Need to Know

Gessen, M. (2018, October, 02). The Fifteen-Year-Old Climate Activist Who Is Demanding a New Kind of Politics. Retrieved from https://www.newyorker.com/news/our-columnists/the-fifteen-year-old-climate-activist-who-is-demanding-a-new-kind-of-politics

Hertsgaard, M. (2019, January, 28). The Climate Kids Are Coming With a Green New Deal and Student Strikes For Climate, will young people save us yet?. Retrieved from https://www.thenation.com/article/archive/greta-thunberg-climate-change-davos/

Irfan, U. (2019, September, 20). Greta Thunberg is leading kids and adults from 150 countries in a massive Friday climate strike. Retrieved from https://www.vox.com/2019/9/17/20864740/greta-thunberg-youth-climate-strike-fridays-future

Johnson, J. (2019, June, 07). For ‘Challenging Us All to Confront the Realities of the Climate Crisis,’ Greta Thunberg and Fridays for Future Movement Win Amnesty’s Top Human Rights Award. Retrieved from https://www.commondreams.org/news/2019/06/07/challenging-us-all-confront-realities-climate-crisis-greta-thunberg-and-fridays

Jonathanwatts. (2019, March, 11). Interview Greta Thunberg, schoolgirl climate change warrior: ‘Some people can let things go. I can’t’. Retrieved from https://www.theguardian.com/world/2019/mar/11/greta-thunberg-schoolgirl-climate-change-warrior-some-people-can-let-things-go-i-cant

Jordans, F. Parra, A. (2019, December, 10). Too much of a Greta thing? Activist urges focus on others. Retrieved from https://apnews.com/baa29614a79cbcd2edb83b9e3f7de90f

Lambeck, P. (2019, May, 06). ‘Scenes From the Heart’: Backstory of 16-Year-Old Climate Activist Greta Thunberg. Retrieved from https://livewire.thewire.in/politics/greta-thunberg-film-childhood8491/

McGrath, D. (2019, December, 30). ‘We thought it was a bad idea’: Greta Thunberg’s dad says he was worried about her climate activism. Retrieved from https://www.thejournal.ie/greta-thunberg-climate-strike-dad-4949862-Dec2019/

Oroschakoff, K. (2019, April, 16). Climate icon Greta Thunberg finds that political change is ‘complicated’. Retrieved from https://web.archive.org/web/20190806050104/https://www.politico.eu/article/global-climate-icon-finds-that-political-change-is-complicated/

Queally, J. (2018, December, 19). Depressed and Then Diagnosed With Autism, Greta Thunberg Explains Why Hope Cannot Save Planet But Bold Climate Action Still Can. Retrieved from https://www.commondreams.org/news/2018/12/19/depressed-and-then-diagnosed-autism-greta-thunberg-explains-why-hope-cannot-save

RTL Interactive. Greta Thunberg is a Swedish environmental activist. It fights for climate protection and for a better future. Retrieved from https://www.rtl.de/themen/personen/greta-thunberg-t11146.html

Sengupta, S. (2020, January, 24). Greta Thunberg Joins Climate March on Her Last Day in Davos. Retrieved from https://www.nytimes.com/2020/01/24/world/europe/greta-thunberg-davos-protest.html?searchResultPosition=4

Solsvik, T. (2020, February, 27). Climate activist Thunberg heads growing field of Nobel Peace Prize candidates. Retrieved from https://www.reuters.com/article/us-nobel-prize-peace/climate-activist-thunberg-heads-growing-field-of-nobel-peace-prize-candidates-idUSKCN20K2HK

Tait, A. (2019, June, 06). Greta Thunberg: How one teenager became the voice of the planet. Retrieved from https://www.wired.co.uk/article/greta-thunberg-climate-crisis

The lowdown on the earth’s central environmental threat. Retrieved from https://www.nrdc.org/stories/global-climate-change-what-you-need-know

Tikkanen, A. (2020, February, 27). Greta Thunberg SWEDISH ACTIVIST. Retrieved from https://www.britannica.com/biography/Greta-Thunberg

Vaughan, A. (2020, March, 30). Greta: We must fight the climate crisis and pandemic simultaneously. Retrieved from https://www.newscientist.com/article/2238831-greta-we-must-fight-the-climate-crisis-and-pandemic-simultaneously/

Weise, E. (2019, September, 24). ‘How dare you?’ Read Greta Thunberg’s emotional climate change speech to UN and world leaders. Retrieved from https://www.usatoday.com/story/news/2019/09/23/greta-thunberg-tells-un-summit-youth-not-forgive-climate-inaction/2421335001/

Woodward, A. (2020, January, 3). Greta Thunberg turns 17 today. Here’s how she started a global climate movement in just 18 months. Retrieved from https://www.businessinsider.my/greta-thunberg-bio-climate-change-activist-2019-9/?r=USHYPERLINK “https://www.businessinsider.my/greta-thunberg-bio-climate-change-activist-2019-9/?r=US&IR=T”&HYPERLINK “https://www.businessinsider.my/greta-thunberg-bio-climate-change-activist-2019-9/?r=US&IR=T”IR=T

 

 

 

3 comments for ““குறைந்தபட்சம் பதற்றமாவது கொள்ளுங்கள் – கிரெட்டா”

  1. Punithawathy
    May 1, 2020 at 3:06 am

    சிறப்பான ஒரு கட்டுரை , 16 வயதில் கிரேட்டா எனும் மாபெரும் சாதனையாளரின் வெற்றியும் துணிச்சலும் வியக்க வைக்கிறது .அபிராமி அவர்களின் உழைப்பும் , தேடலும் இன்னொரு பிரம்மிப்பு . வாழ்த்துகள்

  2. May 1, 2020 at 2:15 pm

    மே தினத்தில் ஒரு அருமையான பதிவு படித்ததில் மன நிறைவு. இளைஞ்சர்களிடத்தில் சூழலியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக மிக அவசியம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *