‘2020-இல் அபிராமி கணேசனுக்கான இளம் எழுத்தாளர் விருதை வல்லினம் அறிவித்தபோது அவரை என்னால் ‘புருனோ மான்சர்- காட்டில் கரைந்த காந்தியம்’ என்ற கட்டுரையின் வழியேதான் மனதில் மீட்டெடுக்க முடிந்தது. வல்லினத்தின் இந்த விருது அறிவிப்பு சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரை போன்ற புனைவு சார்ந்த படைப்புகளுக்கு மத்தியில் ஆய்வுக்கட்டுரைகள் எவ்விதம் ஒரு எழுத்தைத் தனித்துக் காட்டிவிடும் என்ற குழப்பமிகு கேள்வியையே என்னில் வலுவாக எழுப்பியது. எனவே, உண்மையில் இளம் எழுத்தாளர் விருதை வழங்க அபிராமி கணேசனைத் தேர்வு செய்ததன் காரணத்தையும் அதன் வழி அந்த விருதின் தரத்தையும் அறியும் பொருட்டே அபிராமி அவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கலானேன். அந்தத் தொடர் வாசிப்பின் வழியே என் கேள்விகளுக்கான முழுமையான பதிலை அடைய முடிந்தது. கேட்டு அறிவதன் வழி எளிதாகவே கிடைத்துவிடும் பதில்களைக் காட்டிலும் வாசிப்பின் வழி நாமே தேடி கண்டடையும் பதில்களின் ஆழத்தையும் திருப்தியையும் அபிராமி கட்டுரைகள் எனக்கு வழங்கியுள்ளன. அவரின் கட்டுரைகள் தகவல்களைத் தாங்கிய வடிவம் மட்டுமல்ல; அவற்றின் வழி அபிராமி என்ற எழுத்தாளரின் சிந்தனைகளையும் உள்வாங்க முடிகிறது.
கல்லூரியில் படிக்கும்போது நிறைய ஆய்வு கட்டுரைகளை வாசித்துள்ளேன். ஆண்டு வாரியாக நிகழ்ந்த சம்பவங்களையும் அதன் தரவுகளையும் தொகுத்து கணக்கறிக்கைபோல ஒப்புவிக்கும் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கும். எனவே, ஆய்வுக்கட்டுரைகள் ஒரு சலிப்புக்குறிய வாசிப்பு அனுபவத்தையே வழங்கும் என்ற முன்முடிவே எனக்குள் வலுத்திருந்தது. அது எனது குறுகிய வாசிப்பு அனுபவத்தால் ஏற்பட்ட எண்ணமாகவும் இருக்கலாம். ஆனால், அபிராமி அவர்களின் எழுத்து கட்டுரைகளின் மீதான புதிய பார்வையை ஏற்படுத்துகின்றது. அவை தரவுகள் தகவல்களுக்கு மத்தியில் நம் சிந்தனைக்கும் உணர்வுகளுக்கும் இடமளிக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஜூன் தொடங்கி 2021 செப்டம்பர் வரையில் அபிராமி அவர்கள் 12 கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய ஒவ்வொரு கட்டுரைகளின் பேசுபொருளும் முக்கியமானவனை. அந்த 12 கட்டுரைகளில் சில நம் சமூகம் மறந்த ஆளுமைகளையும், புறக்கணித்த கலைஞர்களையும் பேசுகிறது. அவர்களது வாழ்வியல் சாதனைகளையும், ஆளுமைகளையும் வாழ்க்கையையும் விரித்துக் கூறுகிறது. இன்னும் சில உலகளாவிய நிலையில் மாசுபட்டு வரும் சுற்றுச் சூழலையும் அதற்குள் வேர்பிடித்துக் கிடக்கும் அரசியல் சூழச்சிகளையும், நமது வாழ்வியல் தேவைகளையும் சொல்லி நம்மை எச்சரிக்கின்றன. இந்த எச்சரிப்புக் குரல்களின் வழியே அறியப்பட வேண்டிய இன்னும் சில ஆளுமைகளையும் நமக்கு அறிமுகம் செய்துள்ளார் அபிராமி கணேசன். அவர்கள் இந்த உலக நலன் பொருட்டே தன் வாழ்வின் கொள்கைகளை வரையறுத்துக் கொண்டவர்கள்.
பறவையின் உமிழ்நீரில் நனைந்த பணம், மஹ்மேரி, பறவைகளின் வலசை, மலேசியாவில் செம்பனை பயிரிடலும் அதன் விளைவுகளும், குறைந்த பட்சம் பதற்றமாவது கொள்ளுங்கள் -கிரெட்டா, வனத்தின் குரல், புருனோ மன்சர்-காட்டில் கரைந்த காந்தியம் என மொத்தம் 7 கட்டுரைகள் உலக மாசுபாட்டையும், சுற்றுச் சூழலின் அபாயகரமான நிலையையும் பேசுகின்றன. அதற்குப் பின்னணியில் இருக்கும் நம் ஒவ்வொருவரின் அலட்சியப்போக்கையும், நுகர்வு வாழ்வின் மீதான மோகத்தையும், அதன் பொருட்டே பணையம் வைக்கப்பட்டுவிட்ட எதிர்காலச் சூழலையும் பேசுகின்றன.
‘பறவையின் உமிழ்நீரில் நனைந்த பணம்’ என்ற இந்தக் கட்டுரை முழுக்கவே சுவிப்லெட்ஸ் (swisftlets) பறவையினத்தைப் பற்றியது. உலகம் தோன்றி, மனிதன் பரிணாமம் அடைந்து எத்தனை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் மனிதன் கண்டு வியக்கும் இயற்கையின் அழகிய அதிசயங்களில் பறவைகளுக்கு தனித்த இடமுண்டு. அவை தன் பறக்கும் தன்மையால், எடையற்ற உடலால், வண்ணங்களால் சத்தங்களால், கூடு கட்டும் நுட்பங்களால், அசைவுகளால் எனத் தன் ஒவ்வொரு வாழ்வியல் தன்மையாலும் உலகை அலங்கரிக்கின்றன. அப்படியான பல நூறு கோடி பறவைகளில் சற்றே தனித்த வகையில் கூடு கட்டி வாழும் சுவிப்லெட்ஸ் (swisftlets) என்ற பறவையினத்தின் வாழ்வியலைப் பற்றியும் அதைச் சார்ந்த வியாபார போக்குகளையும் அபிராமி கணேசன் இந்தக் கட்டுரையில் முன் வைத்துள்ளார். நம்மில் பலரும் அதிகப் பட்சமாக இவ்வகை பறவை இனத்தின் கூடு மருத்துவ குணம் கொண்டவை எனவும் அவற்றை உட்கொள்வதால் நீங்கா இளமையுடன் வாழலாம் என்பதையும் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறோம். எனவேதான் சந்தையில் இதன் விலை அதிகம் என்பதை நமது தேவையின் பொருட்டு கூடுதல் அறிவாக இன்னும் சிலர் பெற்றிருப்பர். இத்தகைய நமது மலினமான தேவைகளின் வழியே நாம் எத்தனை சுயநலமானவர்கள் என்பதை அளவிட்டுவிடலாம். இந்த கூட்டின் இயற்கையான மருத்துவ குணத்திற்குப் பின்னால் உலகளவில் இயங்கும் வியாபார தேவையையும், வியாபார தேவையின் பொருட்டே சீரழிந்து வரும் ஒரு அதி நுட்பமான பறவை இனத்தையும், கூடுகளை இழந்து தவிக்கும் ஒரு பறவையின் உளவியல் சிக்கலும், தடம் மாறி போகும் வழித்தடமும் என பதற்றத்தைக் கொடுக்கிறது. நாம் கட்டிய வீட்டில் ஒரே ஒரு செங்கள் பெயர்ந்தாலோ, வீட்டிற்குள் மழை நீர் ஒழுகினாலோ நம் மனம் பரிதவிக்கிறது. ஆனால் தன் சொந்த எச்சிலால் தன் சொந்த உழைப்பால் தனக்கிருக்கும் அறிவைக் கொண்டு கூடுகட்டி வாழும் ஒரு பறவை இனத்தின் கூடுகளை ஒட்டுமொத்தமாகச் சர்வதேச முறையில் திருடிக்கொண்டிருக்கிறோம்.
இவ்வகைப் பறவைகள் தான் சுயமாகக் கட்டிய கூட்டில் மட்டுமே தங்குமாம். ஆனால் சுயம் சார்ந்த வாழ்வே இவ்வகைப் பறவைகளுக்கு எதிராகிவிடக்கூடிய சூழல் மிக வருத்தகரமானது. ஆம்! கூடு திரும்பும் இவ்வகைப் பறவைகள் காணாமல்போன தன் கூட்டை முதலில் தேடுகின்றன. பின்னர், அது கிடைக்காத நிலையில் புதிய கூட்டை விடிவதற்குள் கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவை அவசர அவசரமாக குழம்பிய மன நிலையிலும், சோர்ந்த நிலையிலும் கட்டி முடிக்கின்றன. அப்படி கட்டி முடிக்க முடியாத சூழலில் அவை அன்றிரவே இறந்தும் விடுகின்றன. இது மனிதன் தன்னைச் சுற்றி இருக்கும் உயிருக்குச் செய்யும் எத்தனைப் பெரிய துரோகம்.
அது போலவேதான் இவ்வகைப் பறவைகளின் கூடுகளுக்காக உருவாக்கப்படும் கட்டிடங்களும், செயற்கைச் சூழலும். இவ்வாறு உருவாக்கப்படும் செயற்கைச் சூழலில் பறவைகளின் சத்தங்களும் செயற்கையாகவே இணைக்கப்படுகின்றன. இதன் விளைவாக மழைப்பிரதேசங்களில் உள்ள தன் கூடுகளை நோக்கிப் போகும் பறவைகள் அந்த செயற்கை சப்தத்தால் ஈர்க்கப்பட்டு தடம் மாறி கட்டிடங்களுக்குள் சென்று சிக்கிக்கொள்கின்றன. அங்கே சென்று, இல்லாத தன் கூட்டைத் தேடி கடுமையான உளவியல் சிக்கலுக்கு மத்தியில் புதிய கூட்டைக் கட்டுகின்றன. கூடு கட்டிக் கொண்டிருக்கும் பறவைகளுக்கு நாளை கூடு இருக்காது என்ற அறிதல் கூட இருக்காது. நுண்ணுணர்வுகளின் அடிப்படையில் வாழக்கூடிய ஒரு பறவையின் வழித்தடத்தை மறித்து, அதன் நுண்ணுணர்வைக் குழப்பி அதனைக் கூடு கட்டும் இயந்திரமாக மாற்றிக்கொண்டிருக்கும் வியாபார மனிதர்களின் முகங்களை இக்கட்டுரை ஆய்வு ரீதியில் தக்க தரவுகளுடன் விளக்குகிறது.
‘பறவைகளின் வலசை’ என்ற கட்டுரையின் வழியும் அபிராமி இவ்வுலகில் பறவை இனத்தின் அதிசயிக்க வைக்கும் நுண்ணுணர்வையும் அப்பறவைகளின் வாழ்வு குறித்தும் அதன் அழிவு குறித்தும் அந்த அழிவுக்குப் பின்னணியில் நிற்கும் நவீன உலகம் குறித்தும் ஆய்வுப்பூர்வமான தரவுகளை முன் வைத்துள்ளார். வலசைப் பறவைகளானவை இனப்பெருக்கம், உணவு, பருவ மாற்றம், அல்லது வளங்களின் பற்றாக்குறையின் பொருட்டே வலசை செல்கின்றன. உலகின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் சென்று, மீண்டும் எங்கிருந்து வந்ததோ அதே இடத்திற்கே திரும்புதலே வலசை என பொருள்படுகிறது. இக்கட்டுரை அப்படி மலேசியாவிற்கு வரும் வலசைப் பறவைகளைப் பற்றியது. அப்படி வலசை வரும் பறவைகளைப் பாதுகாக்க இயலாத மலேசிய சூழலே இக்கட்டுரையில் ஒரு மலேசிய குடிமகனாக நாம் கவனிக்க வேண்டிய பகுதி.
இன்று நவீன மனிதர்களாக நம்மைப் புதுப்பித்துக்கொண்டு வாழக்கற்றுக்கொண்டு விட்டோம் என்ற பெருமிதத்தில் மனிதன் இருக்கிறான். ஆனால் நாம் உண்மையில் எல்லா வகையிலும் தொழில்நுட்பத்தைச் சார்ந்து மட்டுமே வாழ கற்றுக்கொண்டிருக்கிறோம். நமக்கு மட்டுமேயான நுட்பமான தன்மைகளை தொழில்நுட்பத்திடம் இரவல் கொடுத்துவிட்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்று நம் பயணங்களை எளிதாக மாற்றி விட்ட கூகல் மேப்பையும் , வேஸ் (Waze) ஆகியச் செயலிகளையே பிரதான மேற்கோளாகக் காட்டலாம். ஆனால் ஒரு உலகின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு எந்த வழிகாட்டியும் வழித்தடமுமின்றி நுண்ணுணர்வுகளை மட்டுமே கொண்டு பயணிக்கின்றன வலசை செல்லும் பறவைகள். வலசை செல்லும் பறவைகள் மட்டுமல்ல தினசரி இரைதேடி கூடு திரும்பும் பறவைகள்கூட எவ்வளவு தூரம் சென்றாலும் மீண்டும் சரியான நேரத்தில் தன் கூட்டுக்குத் திரும்பிவிடுகின்றன. அவற்றின் நுண்ணுணர்வை மனிதனும் கதிரலைகளும் குழப்பாத வரையில் இந்த வழக்கங்களிலிருந்து அவை தவறுவதில்லை.
பிரமிப்பை ஏற்படுத்தும் பறவைகளின் வலசை பயணங்களுக்கான தக்க அறிவியல் ரீதியிலான காரணங்களை அபிராமி அவர்கள் தன் ஆய்வில் குறிப்பிடவே செய்துள்ளார். சில பறவைகளின் மரபணுவிலேயே இவ்வகை இடப்பெயர்வுக்கான அறிவும் தன்மையும் இருக்கின்றது என்றும், அவை உள்ளுணர்வின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட திசையை நோக்கிப் பயணிக்கின்றன என்றும் குறிபிட்டுள்ளார். இதற்கு முற்றிலும் முரணாக சில பறவைகள் தன் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே பயணிக்கின்றனவாம். பறவைகள் தங்களின் இடப்பெயர்வின்போது பல்வகை புலனுணர்வுகளைக் கையாளுகின்றனவாம். நட்சத்திரம், சூரியன், மற்றும் பூமியின் காந்தப்புலனை உள்வாங்கி உணர்ந்து திசைவழி தகவல்களை இவை அறிந்துகொள்கின்றன என்றும் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வகைப் வலசைப் பறவைகளின் எண்ணிக்கையைப் பராமரிக்கவும் அதன் வசதி பொருட்டும் நம் மலேசிய இயற்கை கழகம் (Malaysia Nature Society) மொத்தம் 55 இடங்களைப் பறவைகளுக்கான முக்கிய பகுதிகளாக தேர்ந்தெடுத்துள்ளது. அவ்விடங்கள் Important Bird Areas or IBA என அடையாளபப்டுத்தப்படுகின்றன. இவ்வகை இடங்களைச் சுற்றுலா தளமாக மாற்ற போடப்படும் திட்டங்களுக்கு அதிகாரிகள் பறவைகளின் நலன் கருதி மறுத்து வருவது அபிராமி கட்டுரையில் காணக்கிடைத்த ஆறுதலான ஒரே தகவல்.
எனினும், மனித நடவடிக்கைகளூம் மேம்மாட்டு நடவடிக்கைகளாலும் பறவைகளுக்கான இப்பகுதிகள் பாதிப்புக்குள்ளாகி இறுதியில் வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை குறைந்து வரும் வருத்தமான தகவலையும் காண முடிகிறது. இதற்கு சான்றாக அபிராமி தன் கட்டுரையில் கோலா குலா கடற்பகுதியைச் சொல்கிறார். அங்கு மேற்கொள்ளப்படும் மீன்வளர்ப்பு, விவசாய நடவடிக்கைகள், நிலங்களை அழித்தல், மேற்பரப்பு நீரோட்டம் ஆகிய நடவடிக்கைகளால் ஏற்படும் வேதியியல் மாசுபாட்டின் விளைவாக அங்கு இடம்பெயரும் பறவைகளுக்கான வளமும் தரமும் குறையத் தொடங்கியுள்ளது. இப்படி அபிராமி தன் கட்டுரையில் இன்னும் வளத்தால் குன்றி வரும் பல பகுதிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வலசை வரும் பறவைகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாகாத இதுபோன்ற சூழலில் இளைபாறவும், கரை இறங்கவும் முடியாமல் அவை தொடர்ந்து பயணிக்கின்றன. இதனால் சோர்வடையும் பல பறவைகள் தமது இலக்கை அடையாமலேயே இறந்து விடுகினறன. இயற்கை பேரிடர்களூம் திடீர் பருவநிலை மாற்றமும் சில வேளைகளில் பறவைகளின் இவ்வகையான மரணத்திற்குக் காரணமாக இருக்கும். அதே வேளை உயர்ந்த கோபுரங்கள், அதன் ஒளி, ஒலி மாசுபாடு, வேட்டையாடல் போன்ற பல மனித செயல்பாடுகளும் பறவை இனத்திற்கு எதிராகவே அமைகின்றன.
அபிராமி தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகள் வழி இந்த உலகச் சுற்றுச் சூழல் மீதான அவரது அக்கறையையும், அதனைப் பாதுகாக்கும் ஆர்வத்தையும் அவதானிக்க முடிகிறது. அவற்றில் ஒவ்வொரு குடிமகனின் அலட்சியத்தையும் அறியாமையையும் சுட்டிய வண்ணம் இருக்கிறார். அவ்வகையில் செம்பனை உற்பத்தியில் முதன்மை இடம் வகிக்கும் மலேசிய நாட்டு குடிமகனாக நாம் அறிய வேண்டிய முக்கியமான தகவல்களை அறிய ‘மலேசியாவில் செம்பனை பயிரிடலும் அதன் விளைவுகளும்” என்ற கட்டுரை வழிசெய்கிறது. இக்கட்டுரை பச்சைகளெல்லாம் பசுமையா என்ற கேள்வியை நம்மில் வலுவாக எழுப்புகிறது.
விவசாயமே ஒரு நட்டின் வளத்தைப் பாதுகாக்கிறது என்பது ஒரு சராசரி மனிதனின் புரிதல். கண்ணுக்குத் தெரியும் பச்சைகளெல்லாம் வளமையும் செழுமையும் குளுமையுமென நம்பியிருக்கிறோம் நாம். ஆனால் இன்றைய நவீன உலகில் ஒரு நாட்டின் மண்ணின் வளத்தை குலைக்கும் பல தொழில்களில் விவசாயமும் அடங்கும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும். நம் பயணங்களின்போது நெடுங்சாலைகளின் ஓரம் நேர்கோட்டு பயிரிடலாக நேர்த்தியான முறையில் நிமிர்ந்து நிற்கும் செம்பனை தோட்டங்களைக் கண்டிருப்போம். அவை அநேகமானோர் மனதில் நம் நாட்டின் வளம் சார்ந்த பெருமிதத்தை அளித்திருக்கும். ஆனால் உண்மையில் வியாபார நோக்கில் ஒருபெரும் நிலம் முழுக்க ஒரே இனப் பயிரைப் பயிரிடுதலே ஒரு மண்ணின் வளமைக்குக் கேடு என நான் முன்னமே அறிந்நிருந்தாலும் அவை எவ்வகையான தீங்கை மண்ணுக்கும் காற்றுக்கும் விளைவிக்கிறன என இக்கட்டுரை வழி ஆழமாக அறிய முடிந்தது. ஒரே மாதிரியானப் பயிரை ஆண்டு தோறும் பயிரிடுவதால் மண்ணின் ஊட்டச்சத்துகள், தாதுக்கள் தீர்ந்து மண் அதன் வளத்தை இழப்பதோடு இரசாயன உரங்களில் உபயோகிப்பால் மண்ணின் இயற்கையான தன்மையும் சீர்குலைக்கிறது. இதுவே, தாவர நோய்க்காரணிகள் மண்ணுள் ஊடுருவச் செய்து இதர பயிர்களைத் தாக்கி உற்பத்தியைக் குறைக்கிறது. மேலும், வேதியியல் பொருள்களாலும் நிலத்துக்குக் கேடு ஏற்படுகிறது.
இன்று நம் நாட்டில் மழைக்காட்டு நிலங்களே செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. 60% மேலான காடுகள் செம்பனைத் தோட்டதிற்காகவே அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சபா மாநிலத்தின் பாதுக்காக்கப்படும் காடுகளைத் தவிர்த்து மற்ற வனப் பகுதிகள் 51% முதல் 15% வரையாகக் குறைந்துள்ளது. இது நிச்சயமாக அபாயகரமான தகவல். மழைக்காடுகள் என்பது தொன்மையான நிலம். அவை அதிக பல்லுயிரியம், கொண்டவூட்டக்கூறு சுழற்சி, நீர்த்தூய்மையாக்கம், மண் உருவாக்கம் நிலைபாடுறுதல் போன்ற சுற்றுச் சூழலுக்குத் தேவையான சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனால் இப்போது செம்பனைத் தோட்டமாக உருமாறி நின்று அதற்கு முற்றிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. செம்பனை மரங்கள் கரிம உமிழ்வை அதிகரிக்கின்றன, கரிம உமிழ்வினால் சுற்றுச் சூழல் வெப்பநிலை அதிகரிப்போடு பருவ நிலை மாற்றமும் நிகழ்வதாக கூறப்படுகிறது. இக்கரிம உமிழ்வானது புகை மற்றும் காற்று மாசுபாட்டையும் சேர்த்தே விளைவிக்கிறது. செம்பனை மரங்கள் அதிகமான கரிம உமிழ்வை நிலத்தடியிலும் மேற்பரப்பிலும் ஈர்த்துக்கொள்ளும் தன்மைமையுடயவை. அதிலும் கரி நிலங்களில் பயிரிடப்படும் செம்பனைகள் இன்னும் அதிகமான கரிம உமிழ்வை ஈர்த்துக்கொள்கின்றன. எனினும் மலேசியாவில் 1.7 விழுக்காட்டு செம்பனை தோட்டங்கள் கரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளன. இதுவே சுற்றுச் சூழல் வெப்பநிலை அதிகரிப்புக்குப் பெரும்பங்காற்றுகின்றது. இது தவிர இப்படி வளமான காடுகளை அழித்து உருவாகும் செம்பனைத் தோட்டங்களால் ஏதுமறியாத வன விலங்குகளின் வாழ்வும் பாதிப்புக்குள்ளாகிறது. அவை தங்களது வாழ்விடங்களை இழக்க நேரிடுகிறது. இதுவே இன்று அழிந்து வரும் அரிய வகை விலங்குகள் அழிவிற்கும் காரணமாகிறது. இப்படி ஒரு உருவாக்கத்திற்குப் பின் இருக்கும் இத்தனைப் மாசுபாடுகளையும் உலக நாடுகள் சர்வதேச வியாபரம் பொருட்டே மிக எளிதாகக் கடந்துவிடுகின்றன. வியாபார உலகின் நவீனப்போக்கும் பேராசை குணமும் இன்று விவசாயத்தையே பசுமைக்கு எதிராக திருப்பிவிட்டிருக்கிறது. நாம் நாளைய உலகை மெல்ல தொலைத்துகொண்டிருக்கிறோம்.
அபிராமி ‘மஹ் மேரி’ என்ற கட்டுரையில் பூர்வக்குடியினரைப்பற்றியும் அவர்கள் இன்றளவும் பேணி வரும் அவர்களது பாரம்பரியம் பற்றியும் எழுதியுள்ளார். அவர்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்பாக ஒரு மரத்தை நட வேண்டு என்பதை நம்பிக்கையாகவே வாழ்வில் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். சமயமோ, சமயோசிதமோ, எதோ ஒரு நம்பிக்கையின் வழியே அவர்கள் இந்தச் சுற்றுச் சூழலை பாதுகாக்கிறார்கள். ஆனால பரிணாமம் அடைந்துவிட்ட நம்மால் சக மனிதர்களாகிய அவர்களின் வாழ்விடங்களைக் கூட பேணிக்கொடுக்க முடிவதில்லை. பொருளாதாரத் தேவையும், நவீன வாழ்வின் தேடல்களுமே பிரதானமான நம் நகர்புற வாழ்வின் இரைச்சலுக்கு மத்தில் மனிதம் மெல்ல தேய்ந்து வருவதை அறிய இதுபோன்ற சின்ன சின்ன ஒப்பீடுகளே போதுமானது.
ஆனால் அப்படி பொத்தம் பொதுவாக எல்லா மனிதர்களையும் ஒரே பட்டியலில் இணைத்துவிட இயலாதபடி சில ஆளுமைகளும் இருக்கவே செய்கின்றனர். காட்டில் அசலான எந்த கலப்படமும் இல்லாமல் வாழும் பூர்வக்குடியினரோடு, அவர்களுக்காகவே தன் இயல்பு வாழ்விவைத் துறந்து வாழ்ந்த ‘புருனோ மான்சோர்‘ அவர்களைப் பற்றியும் அபிராமி எழுதவே செய்துள்ளார். இதுபோன்ற மனிதர்கள் பல சமயங்களில் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றனர். இன்னும் பல சமயங்களில் நம்மை நோக்கிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர். இந்த உலகின் நன்மை பொருட்டு நான் என்ன செய்து விட்டேன் என்ற கேள்விகளை நம்மை நோக்கி வீசிய வண்ணமே இருக்கின்றனர் இவர்கள். மன்சர் சிறு வயது முதலே இயற்கையோடு இயந்த வாழ்வையும், எளிமை மிக்க ஆடம்பரமற்ற வாழ்வையும் விரும்பியுள்ளார். அதற்குச் சான்றாக பள்ளிப் பருவங்களின் போது அவர்கள் எழுதிய பல கட்டுரைகளும் வீட்டில் அவரது தனித்த நடவடிக்கைளுமே அமைந்துள்ளன. எல்லா சூழலிலும் தன் வாதத்தையும் கருத்தையும் மிகுந்த தைரியத்தோடு முன் வைக்கக்கூடியவராகவே அவரை அவரது வரலாற்றின் வழி அறிய முடிந்தது. அவர் வெறும் பேச்சளவில் மட்டும் புரட்சிமிக்கவராக திகழாமல் அவ்வாறே தன் வாழ்வையும் அமைக்கப்ப பழகியவர். அதிகாரங்களுக்கும் முதலாளிகளுக்கும் எதிரான பல போராட்டங்களை நடத்தியவர். அவர் தன் வாழ்நாளில் காந்தியையே முதன்மை முன்னோடியாக கொண்டிருந்திருக்கிறார்.
சுவிற்சர்லாந்தில் பாசெல் என்ற நாகரில் பிறந்த புரோனோ மான்சர் சுவிஸ் காந்தி என்று பின்னாட்களில் அழைக்கப்பட்டவர். குறிப்பிட்ட வயதில் ராணுவப் பயிற்சிக்குச் செல்வது சுவிற்சர்லாந்தின் முக்கியமான சட்டம். அதை எக்காரணம் கொண்டும் தவிர்க்க இயலாது. ஆனால் முற்றிலும் தனது கொள்கைக்கும் நம்பிக்கைக்கும் அப்பால் இருக்கும் ராணுவப் பயிற்சிக்கு புருனோ செல்லவில்லை. அதை தீர்க்கமாக மறுத்ததன் விளைவாக அவர் சில காலம் சிறை தண்டனை பெறுகிறார். இது புருனோ மான்சர் அவர் தன் கொள்கையின் மீது கொண்டிருந்த அதீத பிடிப்பையும் யாருக்கும் நாட்டுக்குமே வளைந்து கொடுக்காத அவரது தெளிந்த சிந்தனையையும் அறிய முடிந்தது. சிறை தண்டனைக்குப் பின் 12 ஆண்டுகள் சுவிட்ஸ்லாந்தில் மலைசார் பனிநிலக் கால்நடைகளைப் பராமரித்து வந்துள்ளார். தன்னுடைய 30 ஆவது வயதில் பணத்தையும் பொருளையும் நம்பி வாழாத எளிய வாழ்வை வாழும் மக்களையும் அவர்களது வாழ்வையும் அறியும் வேட்கையில் போர்னியோவுக்கு வருகிறார். இறுதியில் அவர் தேடலுக்கிணங்க 1984-இல் போர்னியோவில் குனுங் முலு (Gunung Mulu) என்ற இடத்தில் பெனான் பூர்வக்குடியினரை கண்டடைகிறார். பெனான் மக்களோடு இணைந்து வாழத்தொடங்கிய சூழலில் அம்மக்களின் வாழ்விடங்களை ஒட்டிய காட்டுப்பகுதிகளை வியாபார நோக்கத்துக்காக அரசு சார் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் மாசுபடுத்துவதையும் வெட்டுமரங்களுக்காக அழிப்பதையும் காண்கின்றார்.
அத்தகைய சூழலில் அந்த மக்களின் வாழ்விடத்தைக் காக்க போராடியவர் புருனோ மான்சர். அவரது போராட்டம் என்பது திரைக்குப் பின்னால் நிகழும் பேச்சளவில் மட்டுமானது அல்லது. அரசு அதிகாரிகளை துணிந்து நேரிடையாகவே எதிர்த்தார்.
அவரது முயற்சியினால் உலக நாடுகளின் கவனத்தைப் போர்னியோ தீவின் பக்கம் திருப்ப இயன்றது. தன் தாய்நாடு சென்று அங்கும் போர்னியா தீவுக்காக போராட்டம் நடத்தி அதன் வழி பலரின் ஆதரவைப் பெற்றார். காடழிப்பை முதன்மை பொருளாதார மூலமாகக் கருதிய மலேசிய அரசாங்கம் புருனோ மன்சருக்கு பல எச்சரிக்கைகளையும் விடுத்தது. இந்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் புருனோ மான்சரும் அவர் உருவாக்கிய புருனோ மன்சர் ஃபாண்ட் என்ற இயக்கமும் புதிய செம்பனைத் தோட்டங்களை உருவாக்கும் திட்டத்திற்கு எதிராக போராடியுள்ளனர். புருனோ மான்சர் ஃபாண்ட்ஸ் என்பது வெப்பமண்டலப் பகுதி வனங்களை அழிக்கும் நடடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் இயக்கம். இவ்வியக்கம் புருனோ மன்சரால் 1991-இல் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக இவ்வியக்கம் தொடங்கப்படுவதற்குக் காரணமாக இருந்ததே ரேடியண்ட் லகூன் என்ற நிறுவனம். இந்நிறுவனம் செம்பனை எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையை இங்கு நிறுவ முயன்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் சட்டவிரோத முறையில் 4,400 ஏக்கர் பரப்பளவு காட்டுப்பகுதியில் 730 ஏக்கர் காடுகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்நிறுவனம் நெஸ்லே, யூனிலிவர், மொண்டெலஸ் புரோக்டர் & கேம்பிள் ஆகிய நிறுவனக்களுக்கு செம்பனை எண்ணெய் விநியோகிக்கும் நிறுவனமான டபல் டினாஸ்டி நிறுவனத்தோடு இணைந்தே செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை நிறுவனங்களும் உலகளவில் பிரசித்தப்பெற்ற பிரபலமான நிறுவனங்கள் என்பதை நாம் அறிவோம். இன்று அநேகமாக நடுநிலை வர்க்கத்தினர் முதல் வசதி படைத்தவர்கள் வரையிலும் இந்நிறுவனங்களின் பொருள்களை உபயோகிக்கிறோம். அப்படியெனில் இந்த காடழிப்பில், இந்தச் செம்பனை உற்பத்தியின் தேவையை அதிகரிப்பதில், அதன் சந்தையை விரிவுபடுத்துவதில். அதன் விளைவாக நேரும் சுற்றுச் சூழல் தூய்மைக் கேடுகளில் நம் ஒவ்வொருவருக்கும் கணிசமான பங்குண்டு.
எங்கோ சுவிற்சட்லாந்திலிருந்து வந்த சுற்றுச் சூழல் ஆர்வலரான புருனோ மன்சர் நம் நாட்டுச் சூழலை, பூர்வக்குடியினரை, காடுகளைப் பாதுகாக்க போராடும்போது நாம் வீட்டில் அமர்ந்து சுவையாக தேநீர் பருகிக் கொண்டிருந்திருப்போம். எந்த எதிர்பார்ப்பு மற்று போராடிய மன்சர் தொடர்ச்சியாக இடைவிடாது 6 வருடங்கள் பெனான் பூர்வக்குடியினருடன் அவர்களில் ஒருவராகவே வாழ்ந்துள்ளார். 25 மே 2000-இல் 30 கிலோ எடையுள்ள முதுகுப்பையை சுமந்து கொண்டு பத்து லாவி மலையை ஏறப்போவதாகச் சொல்லி தனியே சென்ற மன்சரை இன்றளவும் காணவில்லை. அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது இன்றளவும் பெரிய கேள்வி குறியாகவே உள்ளது. ஆனால் பூர்வக்குடியினர்களில் பலர் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவே நம்புகின்றனர். ஆனால் பசெலில் உள்ள கண்டோனல் சிவில் நீதிமன்றம் காணாமல் போன மன்சர் இறந்திருக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வமாக 2005-இல் அறிவித்தது.
‘குறைந்த பட்சம் பதற்றமாவது கொள்ளுங்கள்’ என்ற கட்டுரை வழி அபிராமி மன்சருக்கு நிகராகச் சுற்றுச் சூழலைப் பேண நினைத்துத் தனது 17 ஆவது வயதில் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த கிரேட்டா துர்ன்பெர்க் என்ற சிறுமியை அறிமுகம் செய்கிறார். 15 வயது முதலே சுற்றுச் சூழல் நலன் பொருட்டு புரட்சிகளும் போராட்டமும் நடத்தி வரும் கிரேட்டா சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் உலகின் வெப்பநிலை அதிகரிப்பின் பாலும் பருவநிலை இயக்க மாற்றத்தின்பாலும் தன் கவனத்தை அதிகம் செலுத்தி அதன் அபாய நிலையை உணர்ந்து அதை மக்களுக்கும் உணர்த்த நினைத்தவர். தனது எட்டாவது வயதிலேயே பருவநிலை மாற்றம் பற்றி படித்து அதன்பால் மக்கள் காட்டும் அலட்சியத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியவர். குடும்பத்தின் மூத்த மகளான இவர் தனது 8-ஆவது வயதில் aspeger syndrome என்ற நோய்க்கு உள்ளாகியுள்ளார். இந்நோய்க்குறியவர்கள் குறிப்பிட்ட ஒரு விடயத்தில் அதீத ஆர்வம் காட்டுவார்கள் என அபிராமி தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். எனவேதான் கிரேட்டா சிறு வயது முதலே சுற்றுச் சூழல் நலன் மீது ஆர்வம் காட்டியுள்ளார் என புரிந்துகொள்ள முடிந்தது.
கிரேட்டா தனது போராட்டங்களை தன்னளவிலும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் தொடங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். பருவ நிலை மாற்றம் குறித்து அறிந்த அந்த வயது தொட்டே அவர் அதற்கு முதன்மை காரணமான மின்சாரப் பயன்பாட்டை குறைத்துள்ளார். அதையே வீட்டின் அத்தனைப்பேருக்கும் பழக்கப்படுத்தியுமுள்ளார். அந்த வயதிலேயே நனி சைவ உணவையே உட்கொள்ள தொடங்கியுமுள்ளார். வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கும் வான் போக்கு வரத்தை கிரேட்டா முற்றிலுமாக மறுத்திருக்கிறார். அதைத் தன் குடும்ப உறுப்பினர்களும் கடைப்பிடிக்கச் செய்திருக்கிறார். அதன் விளைவாகப் பிரபல ஆபெரா பாடகியான அவரது அம்மா வான் போக்குவரத்து செய்ய முடியாத சூழலில் தன் வேலையைக் கைவிட்டுள்ளார். அதே போல அவரது அப்பாவைப் பணியிடத்துக்கு மிதிவண்டியில் செல்ல வேண்டியுள்ளார் கிரேட்டா. அது சாத்தியப்படாத சூழலில் அவர் குடும்ப போக்குவரத்துக்கென மின்சார வாகனம் வாங்கியுள்ளார். இப்படி கிரேட்டாவின் போராட்டங்களுக்கு அவரது குடும்ப உறுப்பினங்கள் செவிசாய்த்துள்ளனர். எதிர்கால உலகின் பாதுகாப்பற்றச் சூழலை ஒட்டி கட்டுரைகள், போராட்டங்கள், சொற்பொழிவு என நிகழ்த்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் பாரிஸ் ஒப்பந்தப்படி கரிம உமிழ்வைக் குறைக்க ஸ்வீடன் நாடு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தைத் தொடங்கி உலகளவில் 7 மில்லியன் இளைஞர்களின் ஆதரவைத் தனக்கு ஆதரவாகத் திரட்டியுள்ளார். பல நாடுகளில் இருக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கவனத்தையும் சக்தியையும் ஒன்று திரட்டி செயல்பட்டுள்ளர். பின்னாட்களில் சிறுவர்களுக்கான சர்வதேச அமைதி பரிசு வழங்கப்பட்ட போதும்கூட விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலைத் தவிர்ப்பதன் பொருட்டு அதை அவர் பெற்றுக்கொள்ளவில்லை. அவருக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவியல் நிறுவனங்களூம் விருதுகளையும் பரிசுகளையும் வழங்கியுள்ளன.
அபிராமியின் கட்டுரைகளை ஒருசேர படிக்கும்போது அது நமக்குக் கொடுப்பது உலகைப் பற்றிய கூடுதல் புரிதலைத்தான். நாம் வாழும் இந்த உலகை இன்னும் கொஞ்சம் கரிசனையோடு அணுக, இந்த உலகம் இன்னொருவருக்கானதும் என உணர, இன்னொன்றைச் சார்ந்த இந்த வாழ்வு உள்ளது என அறிய, மனிதனால் மட்டும் ஆனதல்ல உலகம் என அறிய இக்கட்டுரைகள் தூண்டுகின்றன. அபிராமியின் எழுத்துகள் வெறும் கட்டுரைகள் எனக் கடந்துவிட்டு செல்லவிடாமல் தடுப்பது அதில் ஒளிந்துள்ள உள்ளார்ந்த அக்கறையே. அவர் பணி தொடர வேண்டும்.