விவசாயம் உலகம் முழுதும் இருக்கும் மனிதனின் உணவு தேவைக்கும் பிழைப்புக்கும் வழி செய்கிறது. இருப்பினும், கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளுக்கு அப்பால் விவசாயத்தினால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. விவசாயத்தின் துலக்கத்தினால் விரும்பிய முன்னேற்றத்தை நாம் உண்மையிலேயே அடைந்துள்ளோமா என சமீப காலங்களில் பல மானுடவியலாளர்களும் வரலாற்றாசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக 2015ஆம் ஆண்டு வரலாற்றாசிரியரான ‘யுவல் நோவா ஹராரி’ (Yuval Noah Harari) எழுதி வெளியிட்ட ‘சேபியன்ஸ்: மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு’ (Sapiens: A Brief History of Humankind) என்ற புத்தகத்தில் ‘விவசாய புரட்சி வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மோசடி’ என்று குறிப்பிடுகிறார். சுருங்கக்கூறின், விவசாயத் தேவைகளுக்காகக் காடுகள் பல அழிக்கப்பட்டுப் பின் ஒரே நிலத்தில் ஆண்டுதோறும் ஒரே மாதிரியான பயிரைப் பயிரிடுகின்றன. அதனால் மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துகள், தாதுக்கள் தீர்ந்து மண் அதன் வளத்தை இழப்பதோடு விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்களால் மண்ணின் இயற்கையான தன்மையைச் சீர்க்குலைத்தல், தாவர நோய்க்காரணிகள் மண்ணுள் ஊடுருவி பயிர்களைத் தாக்கி உற்பத்தியைக் குறைத்தல், வேதியியல் பொருள்கள் அதிக அளவில் மண்ணில் ஊடுருவி நிலைத்தைச் சேதப்படுத்துதல் போன்ற பல அழிவுகளை நிலம் எதிர்கொள்கிறது.
மலேசியாவின் நில வளம் அதிக அளவில் மாசடைந்திருப்பதற்குப் பாரம்பரிய விவசாய முறையைவிட செம்பனை பயிரீடுதான் பெரும் பங்கு வகிக்கின்றது. இன்றைய நிலவரப்படி மலேசியாவில் 4.49 மில்லியன் ஹெக்டர் நிலம் செம்பனை தோட்டமாக இருக்கிறது. அவை 17.73 மில்லியன் டன் செம்பனை எண்ணெய் (Palm oil) மற்றும் 2.13 டன் செம்பனை கர்னல் எண்ணெய் (Palm kernel oil) உற்பத்தி செய்கின்றன) (MPOC).
‘எலைஸ் கினென்சிஸ் ஜாக்’ (Elaeis guineensis jacq) என்று அழைக்கப்படும் செம்பனை மரங்கள் முதலில் மேற்கு ஆப்பிரிக்காவின் காடுகளில் கண்டெடுக்கப்பட்டன. பின்னர், அதன் பழத்தில் இருந்து கிடைக்கப்பெரும் எண்ணெயின் பலன்கள் கண்டறியப்பட்டப்பின் விவசாய பயிராகப் செம்பனை மாறியது.
1870களின் தொடக்கத்திலே செம்பனை மரங்கள் ஆங்கிலேயர்களால் மலாயாவில் நடப்பட்டது. அக்காலப்பகுதியில் ஓர் அலங்காரத் தாவரமாகவே (An ornamental plant) இதன் பயன்பாடு இருந்தது. 1917ஆம் ஆண்டு சிலாங்கூரில் இருந்த தென்னமரம் தோட்டத்தில் (Tennamaram Estate) முதன் முதலில் வணிக நோக்கத்திற்காகச் செம்பனை நடவு மேற்கொள்ளப்பட்டது. இதுவே மலேசியாவில் பரந்த செம்பனை தோட்டங்களுக்கும் செம்பனை எண்ணெய் தொழிற்துறை (Palm oil industry) உருவாக்கத்திற்கும் அடித்தளமாக அமைந்தது எனச் சொல்லப்படுகிறது. அரசாங்கத்தின் விவசாய பன்மயமாக்கத் திட்டத்தின்கீழ் 1960களின் முற்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் இரப்பர் மற்றும் வெள்ளீயம் (tin) உற்பத்தியைச் சார்ந்திருப்பதிலிருந்து குறைக்க செம்பனை கொண்டுவரப்பட்டது. இக்காலப்பகுதியில் செம்பனை மர சாகுபடி வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, 1960களில் நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு உரிமையாளர்களின் வறுமையை ஒழிப்பதற்கான வழியாகச் செம்பனை நடவு செய்வதற்குத் மத்திய நில மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நில தீர்வு திட்டங்களை (FELDA’s Land Settlement Schemes) அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
செம்பனை ஒரே மரத்தில் ஆண்பெண் என இரு பூக்களையும் தாங்குவதால் இது ‘மோனோசியஸ்’ (Monoecious) எனச் சொல்லப்படும் ஓரகத் தாவர வகை (இருபாலிணைந்த) பயிரைச் சார்ந்தது. ஒவ்வொரு மரமும் 10 முதல் 25 கிலோகிராம் வரை எடையுள்ள மற்றும் 1000 முதல் 3000 சிறுகனிகளைக் கொண்ட குலைகளை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு சிறுகனிகளும் கிட்டத்தட்ட கோள (Spherical) அல்லது நீளமான (Elongated) வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு பழமும் ஒரு கடினமான கர்னல் (Kernel) விதையைக் கொண்டு ‘எண்டோகார்ப்’ (Endocarp) என்ற மேல் ஓடால் மூடப்பட்டு, சதைப்பற்றான இடைக் கனிச்சுவரால் (Fleshy mesocarp) சூழப்பட்டிருக்கும். செம்பனை மரங்கள் அறுபது அடி மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் வரை வளரக்கூடும்.
உலகில் ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆசிய யானைகளின் எடைக்கு நிகரான 50 பில்லியன் கிலோகிராம் செம்பனை எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளிலிருந்து மட்டுமே 85%க்கு மேற்பட்ட செம்பனை எண்ணெய் உற்பத்தியாகிறது.
பொருளாதார முன்னேற்றத்தைக் கடந்து மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் நில வளம் செம்பனை பயிரீட்டுக்குப் பொருத்தமானது என்பதால் செம்பனை மரம் இங்கு அதிகம் நடப்படுகிறது. செம்பனை எண்ணெய்க்கு உலக அளவில் அதிக வரவேற்புக் கிட்ட சில காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மேற்கு நாடுகளில் உணவுகளில் அரோக்கியம் குன்றிய கொழுப்புச்சத்துக்குப் பதிலாகச் செம்பனை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அடுத்து செம்பனை எண்ணெய் உற்பத்தியாளர்கள் அதனை மிகக் குறைவான விலைக்கு விநியோகிக்கத் தயாராக முன்வந்துள்ளனர். மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் அதிக விலையுடைய எண்ணெய் மற்றும் தனிநலன் பராமரிப்புப் பொருள்களுக்குச் சிறந்த ஒரு மாற்று வழியாகச் செம்பனை எண்ணெய் திகழ்கிறது. செம்பனை எண்ணெய் மலிவான விலைக்கு விற்கப்படுவதால் ஆசிய நாடுகளில் இதுவே சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆசிய நாடுகள் வளமடைய ஆரம்பித்த பிறகு செம்பனை எண்ணெயின்வழி உருவாக்கப்படும் (அதிக அளவு கொழுப்புச்சத்து நிறைந்த) பொருள்களை அந்நாட்டு மக்கள் உபயோகிக்கக் தொடங்கியுள்ளனர். இக்காரணங்களால் செம்பனை எண்ணெயின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அலங்கார தாவரமாகத் (ornamental plant) தொடங்கப்பட்ட செம்பனை பயிரீடு இன்று மிகப் பெரிய தொழில் துறையாக மலேசியாவில் அடைந்திருக்கும் முன்னேற்றம் கவனத்திற்குரியதாகும். உணவுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், விலங்குகளின் தீவனம், உயிர் ஆற்றல் (Bio-energy) போன்றவற்றுக்கான உள்ளீடாகத் திகழும் செம்பனை எண்ணெய் அதி வேகமாக உலகளாவிய தேவையாக வளர்ந்து நிற்கிறது. இருப்பினும், தற்போதைய காலக்கட்டத்தில் இயற்கை காரணிகளால் செம்பனை தொழிற்துறை தேசிய உற்பத்தித்திறனுக்குச் குறைவான அல்லது மெதுவான பங்களிப்பையும் வழங்கிவருவது கவனிக்கத்தக்கது. செம்பனை தொழிற்துறையின் தொய்வுக்கு நிலையற்ற வானிலை, கிழமடைந்த மரங்கள் மற்றும் தாவர நோய்கள் ஆகியவை இயற்கை வழியான காரணிகள் ஆகும். அது போலவே, தொழிலாளர் கட்டுப்பாட்டு விதி மற்றும் அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கைகளும் செம்பனைத் தொழில்துறையின் தேக்க நிலைக்குச் சமஅளவிலான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். தற்போது, உலக அளவில் மலேசியா 39% செம்பனை எண்ணெய் உற்பத்திக்காகவும் 44% அதன் ஏற்றுமதிக்காகவும் முறையே தன் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செம்பனை எண்ணெய் மற்றும் செம்பனை எண்ணெயினால் உருவாக்கப்படும் பொருட்களின் முக்கிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராகத் திகழும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதால் உலகளவில் எண்ணெய்க்கும் கொழுப்புச் சத்துக்கும் ஏற்பட்டுள்ள தவிர்க்க இயலாத தேவையைப் பூர்த்தி செய்வதில் மலேசியா முக்கியப் பங்காற்றுகிறது.
மழைக்காடுகள் போன்ற தொன்மையான காடுகளின் நிலங்களே பெரும்பாலும் ஓரினப்பயிர் முறையில் (Monocultures) செம்பனை தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. பூமியில் அதிக அளவு பல்லுயிரியம் இருப்பது மழைக்காடுகளில்தான். ஊட்டக்கூறு சுழற்சி (Nutrient cycling), நீர்த் தூய்மையாக்கம் (Water purification), மண் உருவாக்கம் (Soil formation), நிலைப்பாடுறுதல் (Stabilization) போன்ற அத்தியாவசியமான சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளைக் காடுகள் வழங்குகின்றன. ஆனால், காடுகளில் இருக்கும் பல்லுயிரியத்தின் அளவு செம்பனை தோட்டங்களாக மாற்றப்பட்ட நிலப்பரப்பில் நிலைத்திருப்பது இல்லை.
பல அரசு மற்றும் அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் வழி மலேசியாவில் பயிரிடப்பட்டிருக்கும் செம்பனை மரங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மரங்கள் கிழமடைகின்ற அல்லது கிழமடைந்த நிலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு செம்பனை மரத்திற்கான உச்ச விளைச்சல் காலம் 9-18 வயதுக்கு இடைப்பட்டதாகும். அதற்கு அடுத்துப் பின்வரும் காலங்களில் அச்செம்பனை மரத்தின் மகசூல் திறன் (Yielding capacity) படிப்படியாகக் குறைகின்றன. தற்போது மலேசியாவில் இருக்கும் மொத்த செம்பனை மரங்களில் பெரும்பகுதியானது 9-28 வயதிற்குள் இடைப்பட்டவை என மதிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மொத்த எண்ணிக்கையில் 26% விளைச்சல் தரும் வயது வரையறையைக் கடந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தேசிய பயிர் பகுதி அல்லது செம்பனை மரங்களின் மொத்த பரப்பளவாகிய 365,000 ஹெக்டரில் 8%, 25- 37 ஆண்டுகள் பழமையானவை என்று அரசாங்க அறிக்கை ஒன்று குறிப்பிடுகின்றது. அது போலவே, மீதமுள்ள பரப்பளவில் 126,000 ஹெக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருக்கும் செம்பனை மரங்கள் இன்னும் சில காலங்களில் அதிக விளைச்சல் தரும் காலத்தைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தரமான அறுவடைக்குப் பொருந்தாத செம்பனை மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் தேசிய செம்பனை உற்பத்தி தொழில் துறை வீழ்ச்சியடையப் பல சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் கிழமடைந்த செம்பனை மரங்களுக்கு மாற்றாகப் புதிய அதிக விளைச்சல் தரக்கூடிய செம்பனைகளை (High Yielding Varieties – HYV) நடும் நீண்டகால திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்திட்டத்தைக் கொண்டு வருவதில் கால தாமதம் ஏற்படுவதால் செம்பனை தொழில் துறையின் எதிர்காலத்திற்குப் பாதிப்பை உண்டாக்கும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழியாக அதிகமான காடழிப்புகள், நில ஆக்கிரமிப்புகள் ஏற்படுகின்றதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.
காடழிப்பும் நில ஆக்கிரமிப்பும்
புதிய நிலங்களில் புதிய மரங்களைப் பயிரிட்டு அதிகமான விளைச்சலைக் காண முடியும் என்பதால் காடழிப்புகள் நிகழ்கின்றன. கடந்த ஆண்டுகளில் 250 000 ஹெக்டருக்கு மேல் காடழிப்பு விகிதங்களைக் கொண்ட 14 நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இவற்றுக்கு முக்கிய காரணமாக நாட்டின் மர தொழிற்துறை மற்றும் வளர்ந்து வரும் செம்பனை தோட்டங்களாகவும் இருக்கின்றன. காடழிப்பு மற்றும் நில மாற்றம் ஆகிய நிகழ்வுகள் உலகளவில் வெளியேற்றப்படும் கரிம உமிழ்வுக்கு 15% முதல் 25% வரை பங்களிக்கின்றன.
1990 முதல் 2005 ஆம் ஆண்டு வரை மலேசியாவில் விரிவாக்கப்படுத்தப்பட்ட செம்பனை தோட்டங்களில் 60%க்கும் மேற்பட்டவைக் காடுகளை அழித்து உருவாக்கப்பட்டவை ஆகும். 1973 முதல் 1992 ஆண்டுவரை சபா மாநிலத்தில் பாதுகாப்புக்கு உட்படுத்தபட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற வனப்பகுதிகள் 51% முதல் 15% வரையாகக் குறைந்துள்ளது. 2003ஆம் ஆண்டு தொடங்கி சபா மாநிலத்தில் அமைந்திருக்கும் மொத்த பயிரீட்டு நிலத்தில் 87% செம்பனை தோட்டங்களாகவே காட்சியளிக்கின்றன. 2000களின் முதல் தசாப்தத்தின் முடிவில், சபா மாநிலத்தில் சுமார் 1.36 மில்லியன் ஹெக்டர் நிலப்பகுதி செம்பனை தோட்டங்களாகவே மாறியது. மலேசியாவில் மிகப்பெரிய அளவில் செம்பனை எண்ணெயை உற்பத்தி செய்யும் மாநிலமாக சபா திகழ்கிறது. மலேசியாவின் மொத்த செம்பனை எண்ணெய் உற்பத்தியில் சபா மாநிலத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் பங்கு 31% ஆகும். விவசாயத் தோட்டங்களின் விரிவாக்கத்தினால் 1981ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டுவரை மலேசியாவில் இருக்கும் காடுகளில் மற்றும் மர பயிர்களில் உறைந்திருக்கும் உயிர்த்திரள் கரிமத்தின் (Biomass carbon) அளவு வீழ்ச்சியடைய வழிவகுத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வப்போது ஏற்படுகின்ற புகை மூட்டம் மற்றும் காட்டுத் தீ ஆகிய பாதிப்புகளுக்கும் செம்பனை தோட்டங்கள் முக்கியக் காரணமாக விளங்குகின்றன. ஈரப்பதமான வெப்பமண்டல மழைக்காடுகளில் இருக்கும் உலர்ந்த விதானத்தினாலும், இறந்த மரக்கட்டைகளாலும் சுலபமாகக் காட்டுத் தீ ஏற்பட்டு மிகப் பெரிய பாதிப்புகளைக் கொடுக்கின்றன. தரம் குறைந்த தாவரத்திரள் நிறைந்திருக்கும் வடிக்கட்டிய கரிநிலப் பகுதிகள் ஆண்டுக்கொருமுறை நேரிடுகிற தீயினால் பாதிப்புகுள்ளாகி சுற்றுச்சூழல் அமைப்புகளை மேலும் சீரழிக்கின்றன. கரி நிலங்களில் தீ அவ்வப்போது ஏற்பட்டாலும் அதனுடைய பாதிப்பானது பேரழிவைத் தரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. தீயினால் கரி நிலங்கள் கரி எரிப்பு வழி ஏராளமான கரிமங்களை வளிமண்டலத்தில் வெளியேற்றுகின்றன. மலேசியாவில் செம்பனை எண்ணெய் சாகுபடி உள்ளடக்கிய மொத்த நிலப்பரப்பு 32.86 மில்லியன் ஹெக்டர் ஆகும். இதன்வழி மலேசியாவில் செம்பனை எண்ணெய் சாகுபடி 16 விழுக்காடு என்று தெளிவாகிறது. நெடுங்காலமாக இது சுற்றுச்சூழலுக்கு ஒரு அச்சுறுத்தலாகவேதான் உள்ளது. செம்பனை மரங்கள் நிலத்தடியில் மற்றும் மேல்பரப்பில் கரிம வாயுவை அதிகம் ஈர்த்து வைத்துக் கொள்கின்றன. கரிவளி (CO2), கரிமம் மற்றும் 100-120 டன் உயிர்த்திரள் (biomass) (முறையே ஒரு ஹெக்டர் நிலப்பரப்புக்கு) ஆகியவற்றைச் சமன் செய்து, அதனை சரிப்படுத்திக் குவித்து வைக்கும் செயலைக் கிழமடைந்த மரங்கள் தவறாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. செம்பனை எண்ணெய் உற்பத்தி மூலம் உண்டாகுகின்ற பைங்குடில் வளிமம் உமிழ்வு (Geenhouse gas), இத்தொழிற்துறை குறைந்த அளவு கரிம வாயுவை வெளியிடுகிறது என்பதற்கான அறிகுறியாகும். இதனால் சுற்றுச்சூழலுக்கு இழப்பு ஏற்படுவதோடு கரிம உமிழ்வும் அதிகரிக்கின்றது.
வெப்பமாகும் உலகம்
கரிம உமிழ்வு வளிமண்டலத்தில் இருக்கும் சூரிய ஆற்றலை உள் ஈர்த்துக் கொண்டு உலக வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கிறது. மலேசியாவில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதற்கு இதனை முதன்மை காரணமாக முன் வைக்கலாம். இது நீர் விநியோக நிலை மற்றும் பருவநிலையை மாற்றி அமைப்பதோடு பயிர்களின் வளரும் பருவத்தையும் மாற்றுகிறது. மேலும், கடல் நீர்மட்டங்கள் அதிகரித்து அங்கு வாழும் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. கரிம உமிழ்வினால் புகை மற்றும் காற்று மாசுபாடுகள் அதிகரித்து சுவாச நோய்களை ஏற்படுத்தி மனிதர்களை நேரடியாகப் பாதிக்கின்றது.
மேலும், தாழ்நில வெப்பமண்டல மழைக்காடுகளைச் செம்பனை பயிரீடுகளாக மாற்றி அமைப்பதால் உள் ஈர்த்துக் கொள்ளப்படும் கரிம உமிழ்வைத் திரும்ப வெளியேற்ற 86 முதல் 93 ஆண்டுகள் வரை தேவைப்படும் எனச் சொல்லப்படுகிறது. அது போலவே, கரி நிலங்களில் செம்பனை தோட்டம் உருவாக்கப்படுவதால் உள் ஈர்த்துக் கொள்ளப்படும் கரிம உமிழ்வின் அளவு இன்னும் அதிகம் எனக் கூறுகின்றனர். இதனை திரும்ப வெளியேற்ற 840 ஆண்டுகள் வரை ஆகக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் மட்டும் 1.7 மில்லியன் ஹெக்டர் செம்பனை தோட்டங்கள் கரிமம் நிறைந்த கரி நிலத்தில் நிறுவப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மலேசியாவில் உள்ள செம்பனை தோட்டங்களில் 12% கரி நிலத்தில் பயிரிடப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது செம்பனை எண்ணெய் உற்பத்தி நாடாக மலேசியா திகழ்வதால், அது இந்நாட்டின் உயிரி எரிபொருள் (Biofuel) உற்பத்திக்கான முதன்மை தீவனமாக (Primary feedstock) மாறும் என்று குறிப்பிடப்படுகிறது. மற்ற வகை எண்ணெய்களைக் காட்டிலும் செம்பனை எண்ணெய் விலையில் குறைந்தும் தரத்தோடும் கிடைக்கப்படுவதால் உலகளவில் ஒரு முக்கியமான தீவனமாகவே செம்பனை எண்ணெய் மாறி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய உயிரி எரிபொருள் துறை மலேசியாவிற்கான ஒரு முக்கியமான புதிய சந்தையாக உருவாகலாம் என்றாலும், அது சுற்றுச்சூழலுக்குப் பல அபாயங்களைக் கொடுக்கவல்லது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வனவிலங்குகளின் வாழ்வு
செம்பனை எண்ணெய் உற்பத்திக்காக அதிக அளவில் காடுகளை அழித்துச் செம்பனை தோட்டங்களை நிறுவுதல், அதன் உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், ஆலைகள், சாலைகள் மற்றும் தொழிலாளர்களின் வீடுகளை நிறுவுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. செம்பனை நடவுக்காகக் காடுகள் அழிக்கப்படுவதால் ஏராளமான வனவிலங்குகளுடைய வாழ்விடங்கள் சேதமடைவது மட்டுமின்றி அரிய வகை விலங்கு இனங்களின் அழிவுக்கும் வழிவகுக்கிறது. இதனால், புலிகள், யானைகள் மற்றும் ஓராங் ஊத்தான் போன்ற விலங்கு இனங்களின் வாழ்விடங்கள் சுருக்கப்பட்டு உணவு, இருப்பிடங்களுக்காக அடைக்களம் தேடி செம்பனை தோட்டங்களை வந்தடைகின்றன. இச்சூழல் மனிதர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துவதோடு மிருகங்களைச் சட்டவிரோதமாக வேட்டையாடுவதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்துகிறது. பெரும்பாலான உயிரினங்களுக்குப் போதுமான அல்லது முழுமையான வாழ்விடமாகச் செம்பனை தோட்டங்கள் அமைவதில்லை. சுமார் 15% வன இனங்கள் மட்டுமே தோட்டங்களில் வாழ இயலும் எனச் சொல்லப்படுகிறது.
மேலும், செம்பனை மரங்களின் தடையற்ற வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் நிலத்தடி நீர் மற்றும் மண் ஆகியவற்றை மாசுபடுத்துகின்றன. பின், ஒவ்வொரு மெட்ரிக் டன் செம்பனை எண்ணெயை உற்பத்தி செய்யும்போது கையாளப்படும் அரைக்கும் செயல்முறையிலிருந்து 2.5 மெட்ரிக் டன் செம்பனை எண்ணெய் கழிவுகள் (POME:Palm Oil Mill Effluent) வெளியேற்றப்படுகின்றன. செம்பனையின் கழிவுகள் நீர்வழிகளில் கலக்கப்பட்டுச் சுற்றுச் சூழலில் அதிக அளவு அமில தன்மையை ஏற்படுத்தி, நீர் நிலைகளைத் தூர்ந்துபோகச் செய்து, நீர்சார் சூழல் மண்டலத்திற்குப் பெருமளவு பாதிப்பு ஏற்பட காரணமாகிறது. காடுகள் அழிக்கப்பட்டு, செங்குத்தான சரிவுகளில் செம்பனை நடவு செய்யும்போது மண் அரிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு பயிரிடும் முறையினால் தனியாகவே தண்ணீருக்கான தடங்கள் உருவாகிறது. இத்தடங்களின் வழியே வேகமாகப் பாயும் நீர் ஆழமான தடங்களைச் செதுக்கி நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் மண்ணையும் தன்னுள் எடுத்துக் கொள்வதால் மண் அரிப்பு ஏற்படுகின்றது. மண் அரிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரம் அதிகமாகத் தேவைப்படுவதோடு மண் அரிப்பு நீர்வழிகளில் பல சிக்கல்களையும் உருவாக்குகிறது.
பழங்குடியினரின் வாழ்வு
செம்பனை பயிரீடுகளால் இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்த்து மனிதர்களுக்கும் பல சிக்கல்கள் உண்டாகுகின்றன. செம்பனை தோட்டத்திற்கு அருகில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் காணாமல் போகின்றன. செம்பனை பயிரீட்டால் ஏற்படும் நீர் மற்றும் காற்றுத் தூய்மைகேடுகள் பல வழிகளில் அங்கு வாழும் மக்களையும் பழங்குடியினர்களையும் வெகுவாகப் பாதிக்கின்றன. காடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் வளங்களைக் கொண்டு வாழும் பழங்குடியினருக்கு இது மிகப்பெரிய சிக்கலாக அமைகின்றது. பலருடைய நிலங்களும் செம்பனை பயிரிடுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வாழ்வதற்கு இடம் இல்லாமல் அவர்கள் வேறு இடத்தைத் தேடிச் செல்ல வேண்டியுள்ளது.
தற்போது பல சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள் மலேசியாவில் செம்பனை எண்ணெய் தொழில் துறையால் நிகழும் பாதிப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கோலாலம்பூரில் நடைப்பெற்ற ஒரு தொழில் துறை மன்ற கூட்டத்தில் (Industry forum) மலேசிய செம்பனை எண்ணெய் தொழிற்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்களை ‘Toxic entities’ என்று குற்றம்சாட்டி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்களில் பெரும்பாலானோர் செம்பனை எண்ணெய் உற்பத்தியினால் உண்டாகும் பாதிப்புகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்பும் அரசு சார்பற்ற அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள். சிலர் மட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்களை முற்றிலுமாக நிராகரிக்காமல் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க இணைந்து செயல்படுவதாகக் கூறியிருந்தனர்.
விமர்சனங்களுக்குச் செவி சாய்க்காமல், விமர்சகர்களை எதிர்கொள்ள மலேசியாவும் இந்தோனேசியாவும் சேர்ந்து ஒரு கூட்டு நிதியை அமைப்பதாக உறுதியளித்துள்ளனர். காட்டை எரிக்க அனுமதித்த காரணத்திற்காக இந்தோனேசியா உடனான 25 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தத்தை இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (World Wide Fund for Nature – WWF) பாதியில் முடித்துக் கொண்டுள்ளது. இந்தோனேசியாவில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் குறித்த செய்திகளைக் கதைகளாக எழுதி வந்த ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் விசா மீறல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுப் பின்னர் நாடு கடத்தப்பட்டார். கோலாலம்பூரில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பள்ளி நிகழ்வில் மாணவர் ஒருவர் ஓராங் உத்தான் எண்ணிக்கைக் குறைந்து வருவதற்குச் செம்பனை எண்ணெய் உற்பத்தியே காரணம் என்று தன் உரையில் பேசியுள்ளார். அதனால், அத்தனியார் பள்ளி செம்பனை எண்ணெய்க்கு எதிரான பரப்புரைகளை மாணவர்களிடம் திணிப்பதாகச் சொல்லிக் குற்றம்சாற்றப்பட்டது.
மலேசிய செம்பனை பயிரால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் சில நேரங்களில் அமெரிக்கா மிகையாக சித்தரிக்கும் போக்கும் உள்ளது என்றும் ஒரு கருத்து உண்டு. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் செம்பனை எண்ணெய் உடலுக்கு ஆபத்தானது என்னும் பரப்புரையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. நெல், ரப்பர் போன்ற பல்வேறு பயிர்களுக்கும் செம்பனை போன்றே சுற்றுச்சூழல் மாசு பிரச்சனை உள்ளது. ஆனால் செம்பனை மிக நீண்டகாலமாகவே ஐரோப்பிய அமெரிக்க அமைப்புகளால் சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கியம் போன்ற பல காரணங்களால் எதிர்க்கப்படுகின்றன. அமெரிக்க சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய் போன்றவைகளின் சந்தையை விரிவாக்கம் செய்யவே இவ்வகையான எதிர்ப்பை அந்த நாடுகள் செய்கின்றன என்னும் குற்றச்சாட்டும் இதன் அடிப்படையில் வைக்கப்படுகின்றன.
எப்படியாயினும் இன்று மனிதர்கள் செம்பனை எண்ணெயை முற்றிலுமாக நிராகரிக்கப்பது சாத்தியமற்றது. வெறும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, துணிகளில், ஒப்பனைப் பொருட்களில் கூட செம்பனை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அப்பொருள்களுக்கு உலகளவில் நிறைய தேவை இருப்பதால் செம்பனை எண்ணெய் உற்பத்தி நிர்வாகங்களும் செம்பனை பயிரீட்டை எப்படி பெருக்கலாம் என்று முனைப்புக் காட்டுவார்களே தவிர அதனால் ஏற்படும் பாதிப்புகளைப்பற்றி அவர்களுக்கு எந்தச் சிந்தனையும் எழப்போவதில்லை.
எந்தவொரு மரமும் பயிரும் மனிதனுக்கும் உலகத்திற்கும் கேடானது கிடையாது. பயிரிடப்படும் முறையே தீங்கினை விளைப்பதாகச் சொல்லப்படுகின்றது. தேவைகள் அதிகரிப்பதனால் அதனுடைய உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும் என்று பல உத்திகள் கையாளப்படுகின்றன. அதன் விளைவாகவே பருவநிலை மாற்றம் தொடங்கி காடழிப்பு, நீர் தூய்மைக்கேடு, மண் அரிப்பு என பல சிக்கல்கள் இன்று மேலோங்கியுள்ளன. இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் நிலைகொள் வேளாண்மை. நிலைகொள் வேளாண்மையின் அடிப்படை நோக்கமே மனிதன் தனக்கான உணவைத் தன்னுடைய நிலத்திலிருந்தே பயிரிட்டுப் பெற்றுக் கொள்வது ஆகும். உணவுகள் வீணடிக்கப்படாமல் இருக்க தனக்கு எவ்வளவு தேவை உள்ளது என்பதை அறிந்து உற்பத்தி செய்து வாழ முடியும். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணவு மளிகைக் கடைகளிலிருந்து நீர் குழாய்களிலிருந்தும் கிடைகின்றது என்ற அளவிலேயே கவனம் இருக்கிறது. பெற்றுக் கொள்பவனாக இருக்கும் நிலையில் இயற்கையை அழித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதான எவ்வித குற்றவுணர்வும் பதைபதைப்பும் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. தனது ஒட்டுமொத்த வாழ்வும் சொகுசாகிவிட்ட சூழலில் இந்த அமைப்பு முறையைத் தற்காத்துக் கொள்ள மனிதன் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வான்; சென்று கொண்டிருக்கிறான் என்பதுதான் நிதர்சனம்.
மேற்கோள் பட்டியல்
Alam, F., Ah Choy, E., & Begum, H. (2015). Malaysian oil palm industry: Prospect and problem, Journal of Food, Agriculture and Environment, 1313, 143-148.
Ananthalakshmi, A. M. (2020, February, 04). Malaysian palm oil bosses urge action against ‘toxic’ environment groups. Retrieved from https://www.reuters.com/article/malaysia-palmoil/malaysian-palm-oil-bosses-urge-action-against-toxic-environment-groups-idUSL4N2A42DK
Dorsey, M. (2017, July, 21). Negative Effects of Fossil Fuel. Retrieved from https://sciencing.com/negative-effects-of-fossil-fuel-13425073.html
MPOC. The Oil Palm Tree. Retrieved from http://mpoc.org.my/the-oil-palm-tree/
Norwana, A.D., Kanjappan, R., Chin, M., Schoneveld, G.C., Potter, L., & Andriani, R. (2011). The local impacts of oil palm expansion in Malaysia; An assessment based on a case study in Sabah State. Retrieved from https://www.cifor.org/publications/pdf_files/WPapers/WP-78Andriani.pdf
Obidzinski, K., Andriani, R., Komarudin, H., & Andrianto, A. (2012). Environmental and Social Impacts of Oil Palm Plantations and their Implications for Biofuel Production in Indonesia. Ecology and Society, 17(1). Retrieved from www.jstor.org/stable/26269006
Pomeroy, R. (2015, March, 23). Was the Agricultural Revolution a Massive Fraud?. Retrieved from https://www.realclearscience.com/blog/2015/03/the_agricultural_revolution_historys_biggest_fraud.html
Sipalan, J. (2019, July, 03). Malaysia to take action against school over ‘anti-palm oil propaganda’. Retrieved from https://www.reuters.com/article/us-malaysia-palmoil/malaysia-to-take-action-against-school-over-anti-palm-oil-propaganda-idUSKCN1TY18P
SPOTT. (2016, November, 24). Environmental impacts. Retrieved from https://www.spott.org/palm-oil-resource-archive/impacts/environmental/
The Oil Palm. Where is it grown?. Retrieved from http://theoilpalm.org/about/#Where_is_it_grown
Tullis, P. (2019, February,19). How the world got hooked on palm oil. Retrieved from https://www.theguardian.com/news/2019/feb/19/palm-oil-ingredient-biscuits-shampoo-environmental
செம்பனைகள் குறித்து எனக்கு பலவிதமான கேள்விகள் இருந்தன. 2017இல் மலேசியா வந்தபோது வானில் தெரிந்த பசுமை பூமியில் தெரியவில்லை. செம்பனை கண்ணுக்குக் கொடுக்கும் காட்சிக்கும் நிஜத்திலும் வேறாக உள்ளது. உங்களுக்கு வாழ்த்து அல்ல; நன்றிதான் சொல்ல வேண்டும்.