‘மஹ் மேரி’ (Mah Meri) பழங்குடி மக்கள்

பழங்குடியினரின் சிறப்பு அம்சமாக திகழ்வது அவர்கள் வாழும் சுற்றுச் சுழலே ஆகும். அவர்கள் வாழும் இடமானது எப்பொழுதும் பல்லுயிரியம் மிகுந்த வளமான ஒரு பகுதியாக இருக்கும். ஆனால், தற்காலத்தில் அவ்வாறான இடங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து கொண்டே வருகின்றன. பழங்குடி மக்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய வாழ்க்கை அமைப்புக்கு முற்றிலும் விரோதமான ஒரு சுற்றுச்சூழலை எதிர் கொண்டு வாழ்கின்றனர்.

உலகில் சுமார் 300 மில்லியன் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வற்றுள் கிட்டத்தட்ட 150 மில்லியன் பழங்குடியினர் ஆசிய கண்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகின்றது. 30 மில்லியன் பழங்குடி மக்கள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்கின்றனர். மேலும், கணிசமான எண்ணிக்கையில் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய பகுதிகளிலும் அவர்கள் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. சுற்றுச் சூழல் மறுசீரமைப்பிற்குப் பழங்குடியினரின் பாரம்பரிய அறிவும் செயல்முறையும் எப்பொழுதும் துணை நின்றுள்ளது. சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டில் பழங்குடி மக்கள் முக்கிய பங்கு வகிப்பதற்கும் இதுவே காரணம்.

மலேசியாவில் பல்வேறு இடங்களில் இன்னமும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் குறிப்பிடதக்கவர்கள் ‘மஹ் மேரி’ (Mah Meri) பழங்குடி மக்கள்.

ஓராங் அஸ்லி பழங்குடி மக்களின் ஒரு பிரிவினர்தான் மஹ் மேரி பழங்குடியினர். இவர்கள் நெக்ரிடோ (Negrito), செனாய் (Senoi) மற்றும் புரோட்டோ மலாய் (Proto Malay) ஆகிய மூன்று முக்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். வடக்கு பகுதியில் வாழும் நெக்ரிட்டோ குழுவினர் மலேசியாவின் மிகப் பழமையான குடியேறிகள் எனச் சொல்லப்படுகிறது. இவ்வின குழுவினர் ஆப்பிரிக்க மக்களின் உடல் அம்சங்களைக் கொண்டுள்ளதால் சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு இடம்பெயர்ந்திருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.  செனாய் குழுவினர் தீபகற்பத்தின் மையப் பகுதியில் அதிகமாக உள்ளனர். இவர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் யூன்னானிலிருந்து தெற்கு தாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு வந்துள்ளார்கள் எனக் குறிப்பிடுகின்றனர். மலேசியாவில் தெற்கு பகுதியில் வாழ்ந்து வரும் புரோட்டோ மலாய் குழுவினர் கடற்படையினராக வாழ்ந்து கி.மு 2500 முதல் 1500 வரை உள்ள காலப்பகுதியில் கடல் வழியே மலேசியாவை வந்தடைந்ததாக சொல்லப்படுகின்றது.

செனாய் குழுவைச் சேர்ந்த மஹ் மேரி மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து, மியான்மர் மற்றும் மலேசியாவில் மேற்கு கடற்கரையில் உள்ள தீவுகளில் குடியேறத் தொடங்கிய போது முதலில் கடலோர நாடோடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். கடற்கொள்ளையர்களிடம் பிடிப்பட்டு அடிமைப்படுத்தப்படுவதிலிருந்து தப்பிக்கவே மஹ் மேரி மக்கள் மலாக்கா நீரிணை மற்றும் அந்தமான் கடற்கரைகளுக்கு வந்து சேர்ந்ததாக நம்புகின்றனர்.

சில ஆராய்ச்சியாளர்கள் மஹ் மேரி மக்கள் மலேசியாவின் அசல் பூர்வகுடி மக்கள் இல்லை என்று கருதுகின்றனர். அவர்கள் கம்போடியா மற்றும் வியட்நாமில் இருந்து வந்தவர்கள் என்று நம்பப்படும் செனாய் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சில மரபணு ஆய்வுகளின்படி, மஹ் மேரி சமூகம் மங்கோலிய இன (Mongoloid) மக்களின் சந்ததியினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சற்று இருண்ட நிறம், அடர்ந்த சுருள் கூந்தல், இருண்ட கண்கள், சுமார் 156cm முதல் 168cm உயரம் மற்றும் உடல் எடை சுமார் 50kg முதல் 65kg போன்ற சில உடல்சார்ந்த ஒற்றுமைகள் அவர்களிடம் இருப்பதாக கூறுகின்றனர்.

தற்போது மலேசியாவில் இவர்கள் அதிகமாக சிலாங்கூரின் தென்மேற்கு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குடியேற்றங்கள் போர்ட் ஸ்வெட்டன்ஹாமில் (Port Swettenham) இருந்து போர்ட் டிக்சனுக்கு (Port Dickson) அருகிலுள்ள நெகிரி செம்பிலன் (Negeri Sembilan) எல்லை வரை நீண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பதினைந்து பெரிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் பல சிறிய கிராமங்களும்  இதில் உள்ளடங்கும். இவற்றுள் நான்கு குடியிருப்பு பகுதிகள் கடற்கரை சார்ந்த நிலங்கள் ஆகும். பெரும்பாலான மஹ் மேரி பழங்குடியினர் கேரி தீவில் (Carey Island) வாழ்ந்து வருவதாக குறிப்பிடுகின்றன. சிலாங்கூர் கோலா லங்காட் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த காப்பி மற்றும் இரப்பர் பயிரீட்டில் பிரபலமாக விளங்கிய வெலண்டைன் கேரி (Valentine Carey) அவர்களின் பெயரே இத்தீவுக்குச் சூட்டப்பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகள் குறிக்கின்றன. கேரி தீவில் ஐந்து மஹ் மேரி கிராமங்கள் உள்ளன. அங்கு மொத்தமாக 4000க்கும் மேற்பட்ட மஹ் மேரி பழங்குடியினர் வாழ்கின்றனர்.

மஹ் மேரி மக்கள் அவர்களுக்கென தனித பண்பாட்டு பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். அவர்களுடைய மொழியில் மஹ் மேரி என்ற சொல்லுக்குக் வனமக்கள் எனப் பொருள் கொடுக்கப்படுகிறது. மஹ் என்ற சொல் மக்களையும் மேரி என்ற சொல் வனத்தையும் (Mah = people, Meri = jungle) குறிக்கின்றன. அதனைத் தவிர்த்து மலாய் மொழியில் இதற்கு செதிகள் (Bersisik) அல்லது கரையோரம் (Pesisir) என்றும் பொருள் கொடுக்கப்படுகின்றது. மேலும், அவர்கள் கடலோரப் பகுதியில் வசிப்பதாலும், மீனவத் தொழில் புரிவதாலும் அவர்களை ‘ஒராங் லாவுட்’ (Orang Laut) என்றும் அடையாளப்படுத்தப் படுகின்றனர்.

மஹ் மேரி மக்கள் தங்களுடைய பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் இன்றளவும் எந்தவொரு சமரசமுமின்றி கடைப்பிடித்து வருகின்றனர். இவர்கள் தாம் சுற்றியுள்ள அனைத்தையும் பாதுகாத்து வாழ வேண்டும் என்று எண்ணுபவர்கள் என்று கூறுகின்றனர். இவர்கள் ஏதேனும் மரத்தை வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதே மரத்தை மீண்டும் நடவு செய்ய வேண்டும் என்ற கட்டுபாட்டைக் கொண்டுள்ளனர். மஹ் மேரி பழங்குடியினர் பாலின சமத்துவத்த்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக விளங்குகின்றனர். இவர்களின் வழக்கப்படி ஒரு ஆணுக்கும் பெண்னுக்கும் தங்களுடைய வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் மறுமணம் புரிந்துக் கொள்வதிலும் சமவுரிமை இருப்பதாக நம்புகின்றனர். இவர்களுடைய பண்பாடும் நம்பிக்கைகளும் தற்காலத்து முற்போக்கு சிந்தனைகளை ஒத்து உள்ளன என்பது சிலருடைய கருத்து. இறந்த பின் மனித உயிர் நரகம் அல்லது சொர்க்கத்திற்கு செல்லும் என்ற பொதுவான நம்பிக்கைகளில்  இவர்களுக்கு  உடன்பாடு இல்லை என்கின்றனர்.

மஹ் மேரி மக்கள் ஆன்மவாதம் (Animism) கொள்கை உடையவர்கள் என்பதால் நாம் இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கும் உலகுக்கு இணையாக இன்னொரு உலகம் இருப்பதாக நம்புகின்றனர். அவை, 24 மணிநேர கால அளவு கொண்ட மனித உலகம் மற்றொன்று 12 மணிநேர கால அளவு கொண்ட ஆவி உலகம். இவர்கள் மேற்கொள்ளும் அனைத்து சடங்குகளையும் ஆவி உலக நேரத்திற்கு இணங்க செய்து முடிப்பார்கள். இவ்விரண்டு உலகங்களும் தனித்தனியே இயங்குவதால், ஆவி உலகில் உலாவும் ஆவி, மனித உலகத்திற்கு ஒரு குழந்தையின் பிறப்பின் வழி நுழைந்து மரணத்தின் வழி இவ்வுலகத்திலிருந்து விடைப்பெற்று செல்லுவதாக நம்புகின்றனர். வருடத்தில் ஒரு நாள் இவ்விரு உலகிற்கும் இடையே உள்ள கதவு திறக்கும் என்று நம்பப்படும் நாளன்று மஹ் மேரி மக்கள் ஆண்களுக்குத் தங்களுடைய பாரம்பரிய முகமுடியை அணிவித்து அதனை ஒரு முக்கிய பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

தாவரங்களும் விலங்குகளும் மனிதர்களுக்கு உணவாக வேண்டும் என தங்களுடைய மூதாதையருடைய ஆவிகளால் சபிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். அதே சமயம், தாவரங்களையும் மிருகங்களையும் கொன்று அதனுடைய ஆவிகளைப் புண்படுத்துவதால்தான் தங்களுக்கு நோய் அல்லது காயங்கள் ஏற்படுகின்றது என்றும் நம்புகின்றனர். இயற்கை பேரழிவுகள் அவர்களின் வாழ்க்கை நெறிமுறையின் மீறலின் விளைவாகவே ஏற்படுவதாக குறிக்கின்றனர். முந்தைய காலங்களில், கதாபாத்திரங்கள் அல்லது ‘மொயாங்’ (moyang) முகமூடிகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் உருவங்கள் ஆகியவை மர வேலைப்பாடு சிற்பங்களாகச் செய்து ஆவி குடிசைகளில் பயன்படுத்தியப்பின் வனப் படைகளுக்குப் (forest forces) பிரசாதமாக காட்டில் விடப்பட்டு வந்த வழக்கம் இருந்துள்ளது. புராண கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மையானவை மற்றும் மிக உயர்ந்தவை என மஹ் மேரி சமுகத்தினர் ஒப்புக்கொள்கின்றனர். அவர்களின் முக்கிய திருவிழாவாக முன்னோர்களின் நாள் (Day of the Ancestors) கொண்டாடப்படுகின்றது. அவ்விழாவில் தங்களுடைய மூதாதையர் ஆவிகளுக்குச் சடங்குகள் செய்து படையல்களைப் படைப்பார்கள். அந்த நாளன்று அவர்கள் காணும் கனவு எதிர்காலத்தின் குறியீடுகளைக் காட்டும் என நம்புகிறார்கள்.

மஹ் மேரி பழங்குடியினர் ஒவ்வொரு ஆண்டும் ‘கடல் மூதாதையர்கள்’ (moyang laut) அல்லது ‘கடற்கரை வழிபாடு’ (puja pantai) என்று அழைக்கபடும் ஒரு சிறப்பு வழிப்பாட்டை மேற்கொள்வார்கள். மந்திரவாதி (bomoh) தலைமையில் மஹ் மேரி கிராமவாசிகள் பெரிய அளவில் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். இவ்விழாவின் போது மக்கள் தங்களுடைய பாரம்பரிய இசை கருவிகளை இயக்கிக் கொண்டே கிராமத்திலிருந்து அணிவகுத்துச் செய்வார்கள். இவ்விழாவிலும் கடலோடு தொடர்புடைய தம் மூதாதையர்களுக்குச் சடங்குகள் செய்து படையல்களைப் படைப்பார்கள். இதன் வழி இம்மக்கள் முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகின்றனர். இவ்வழிப்பாட்டில் அவர்கள் கடலுக்குச் செல்லும் போது நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும் என்றும் தங்களுக்கு எந்தவொரு அச்சூறுத்தலுமின்றி பாதுகாப்பாக தொழில் செய்ய துணைநிற்க வேண்டும் என்று முன்னோர்களிடம் கேட்டுக் கொள்வார்கள்.

நன்மை அல்லது தீமையைப் பிரதிபலிக்குமாறு நிகழும் எல்லா நிகழ்வும் அவர்கள் ஒரு வேலையை அல்லது பயணத்தைத் தொடங்குவதற்கான அறிகுறி என்று கருதுகின்றனர் மஹ் மேரி பழங்குடி மக்கள். இது மட்டுமின்றி இது போன்ற இன்னும் பல நம்பிக்கைகளை இன்னமும் இவர்கள் கொண்டுள்ளனர். இரவு நேரத்தில் இவர்கள் கரும்பு சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். காரணம் இரவில் கரும்பு சாப்பிடுவது என்பது இறந்த குடும்பத்தின் இரத்தத்தை உறிஞ்சுவது போல என்ற ஒரு நம்பிக்கை உண்டு. நடக்கும் போது வெப்பமாக உணர்ந்தால் பேய்களிடம் சிக்கிக் கொண்டதாக நம்புகின்றனர். மேலும், வானவில்லை கை விரலால் சுட்டிக்காட்டினால் விரல் உடைந்து போகும், பெரியோர்களுக்கு மரியாதைக் கொடுக்க தவறினால் உடல் மெலிந்து அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடும், அடிப்பிடித்த சோற்றைச் சாப்பிட்டால் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாது, உப்பு கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்டினால் இறந்த பின் கல்லறையில் தண்ணீர் நிறப்பப்படும், இறந்தவர்களின் வீட்டில் வாழைப்பழம் சாப்பிடுவது இறந்தவர் விரல்களை சாப்பிடுவது போல, வீட்டுக்குள் விசில் அடிப்பது அல்லது இரவில் விசில் அடிப்பது என்பது ஒழுங்கற்ற செயல் மற்றும் அது பேய்களை அழைக்கும் முறை போன்ற பல நம்ப்பிக்கைகள் மஹ் மேரி பழங்குடியினரிடம் காணப்படுகின்றன.

இது மட்டுமில்லாமல், தங்களுடைய நம்பிக்கை பழக்கவழக்கங்களுக்கு எதிராக எந்த ஒரு செயலையும் புரியக்கூடாது என்றும் மஹ் மேரி மக்கள் கட்டுப்பாட்டோடு வாழ்கின்றனர். ஒரு பண்ணைக்கும் மற்றொரு பண்ணைக்கும் இடையில் எல்லைக்காக நடப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட மர கம்புகளை மாற்றி அமைக்கவோ பிடுங்கவோ யாருக்கும் அனுமதில்லை. தவறுதலாக யாராவது அவ்வாறு செய்தால் அந்நபர் நோய்வாய் படுவதோடு அந்த பயிரிடுதல் அத்தனையும் மேற்கொண்டு வளராமல் தாவரத்தின் எதிரி ஆவியால் அழிக்கப்படும் என்று நம்புகின்றனர். ஒரு புதிய பண்ணை அல்லது பயிர்கள் மந்திரவாதி (Pawang) என்பவர் முதலில் அங்குள்ள கட்டுபாட்டைத் திறப்பதற்கு முன் மற்றவர்கள் அங்குள்ள பழங்களையோ அந்த விளைச்சலையோ எடுப்பத்தற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும்.

மஹ் மேரி பழங்குடி மக்களின் வழக்கப்படி நிலத்தில் வாழும் பெரும்பாலான உயிரினங்களோடு நீர்வாழ் உயிரினங்களைச் சேர்த்து சமைக்கவோ உண்ணவோ கூடாது. இல்லையெனில், அவ்வாறு செய்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் எனப்படும்  குருதிப்போக்குக் காய்ச்சல், முடி உதிர்தல், கடுமையான இருமல், நுரையீரலில் வலி மற்றும் இடுப்பைச் சுற்றி இருக்கும் தோல் பகுதியில் சிரங்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று நம்புகின்றனர். அதன் பின், உணவு கழிவுகளை எறும்புகள் அல்லது விலங்குகள் சாப்பிடக்கூடிய அல்லது தண்ணீரினால் அடித்துச் செல்லக்கூடிய இடங்களில் அப்புறப்படுத்துவது கூடாது. இதனால், அப்புறப்படுத்த வேண்டிய உணவு கழிவுகளை ஒன்றாக சேகரித்து ஒரு பக்கம் நடவு செய்ய வேண்டும் அல்லது எரித்துவிட வேண்டும். இவ்வாறு செய்யத் தவறியவர்களுக்கு உடலில் நீர் வீக்கம் ஏற்பட்டு அவதிபடுவார்கள் என்கின்றனர். இவர்கள் குழந்தைகளுக்கு மான், கழுகு போன்ற இறைச்சி வகைகளை சாப்பிட அனுமத்திப்பது இல்லை. மற்ற சில இடங்களில் வாழும் மஹ்  மேரி மக்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கோழி முட்டைகளைக் கூட சாப்பிட கொடுக்கமாட்டார்கள். கோழி முட்டை மற்றும் இறைச்சி வகைகள் சாப்பிடுவதனால் பிள்ளைகளுக்கு வலிப்பு வரும், சதா அழுது கொண்டே இருப்பார்கள் மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள் என நம்புகின்றனர். இது போன்று இன்னும் பல பழக்க வழக்கங்களை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

மஹ் மேரி பழங்குடி சமுகத்தில் எந்தவொரு பண்டிகை அல்லது விழாவாக இருந்தாலும் மிகவும் விமரிசியாக செய்யும் வழக்கம் உண்டு. இவர்களின் திருமணம் விழா மொத்தமாக நான்கு நாள் நடைப்பெறும். அந்த நான்கு நாளில் 7 நிகழ்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். திருமணம் நிகழ்வுக்கு முன் மணப்பெண்ணை தனியாக அழைத்து மணப்பெண்ணை ஒத்த வயதுடைய பெண்களுடன் ஒரு திரைச்சீலை முன் வரிசையாக நிற்க வைப்பார்கள். அவர்கள் திரைச்சீலை வழி தங்களுடைய கைகளை நீட்டியப்படி இருப்பார்கள். திரைச்சீலைக்கு அந்த பக்கம் இருக்கும் மணமகன் கைகளைப் பார்த்து தன்னுடைய மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பார். மணமகன் மற்றும் மணமகள் இருவருடைய அறிவுத்திறனை மதிப்பிடும் வகையில் சில புதிர் விளையாட்டுகள் விளையாடும் சாடங்குகளும் நடைப்பெறும். மஹ் மேரி பழங்குடியினர் திருமண விழாவில் மிக முக்கிய ஒரு சடங்கு மணமக்களின் பற்களை கூர்மைப்படுத்தும் சடங்கு ஆகும். மோதிரத்தைக் கொண்டு மணமக்களின் பற்கள் கூர்மைப்படுத்தப்படும்.

மஹ் மேரி பாரம்பரியத்தில் இறப்பு நிகழ்வுக்கும் சில சடங்குகளை மேற்கொள்கின்றனர். இறப்பு நிகழ்ந்தால் இறந்தவர் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த பிள்ளை கிராமத் தலைவரை முதலில் சந்திக்க வேண்டும். அதன்பின், கிராம தலைவர் தனது ஆட்களுக்கு உத்தரவிட்டு இறந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த சோகமான செய்தியைத் தெரிவிக்க சொல்வார். அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகைக்காக காத்திருக்கும் வரை இறந்தவரின் உடல் வீட்டின் தாழ்வாரத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருக்கும். சடலத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இறப்பு நிகழ்வுக்கு வருகை தரும் அனைவரும் தூபத்தை எரித்து அன்னாரின் ஆத்மா நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். வீட்டில் இறந்தவரின் சடலம் இருக்கும் வரை வீட்டில் இருப்பவர்கள் உணவு உண்ணவோ நீர் அருந்தவோ கூடாது. இறந்தவரின் ஆவிக்கு உணவு வழங்கப்பட வேண்டும் என்ற சம்பிரதாயத்திற்காக தனியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் உணவுகள் வைக்கப்பட்டிருக்கும். சடலத்தை வீட்டிலிருந்து கொண்டு செல்லும் வரை இறந்தவரின் உடலைத் தாண்டிச் செல்லக்கூடாது.  கால் படாதபடியும் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கவனிக்கத் தவறினால் அச்சடலம் பேய்களின் பிடியில் அகப்பட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தினரைத் தொந்தரவு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இறந்தவரின் நல்லுடல் 2 மீட்டர் ஆழத்தில் இருக்கும் ஒரு துளைக்குள் புதைக்கப்படும். இறந்தவரின் நினைவாக 7ஆம் நாள், 44ஆம் நாள் மற்றும் 100வது நாள் என்று வழிப்பாடுகள் நடைப்பெறும்.

மஹ் மேரி மக்கள் தங்களுடைய மூதாதையர் ஆவிகளைச் சித்தரித்து உருவாக்கப்படும் பாரம்பரிய மர வேலைப்பாடுகள் உலக புகழ் பெற்றவை. எவ்வாறு ஒரு நபர் அல்லது விலங்கு மஹ் மேரி மக்களிடத்தில் வணங்கப்பட வேண்டிய சின்னமாக உருவாகியது என்பதையும் இந்த பாரம்பரிய மர வேலைப்பாடுகள் சித்தரிக்கும் என்கின்றனர். இவ்வுலகில் அழிக்கப்பட்ட ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே இவர்களின் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மஹ் மேரி மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஒன்றி இருக்கும் உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள் எதுவாக இருப்பின் அவை எல்லாவற்றிக்கும் ஒரு ஆவி இருப்பதாக மஹ் மேரி பழங்குடி மக்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு சிற்பங்களும் சதுப்புநில காடுகளில் (mangrove swamps) வளரும் ‘நைரே பாத்து’ (nyireh batu) மற்றும் (Kayu Pulai) என்ற மரங்களிலிருந்து வடிவமைக்கப்படுகின்றன. இவைதவிர பல்வேறு கைவினைப்பொருட்கள் செய்வதிலும் மஹ் மேரி மக்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.  நெய்த பொருள்களான கூடைகள், வளையல்கள், பக்கக் குறி (Bookmark), கைப்பை மற்றும் முள் பண்டான் இலை, பனை இலைகள் கொண்டு செய்த கூடைகள் போன்ற பொருள்களையும் இவர்கள் தயாரிக்கின்றனர்.

பழங்குடியினரின் வாழ்க்கையில் குறிப்பாக மஹ் மேரி சமுகத்தினரின் வாழ்க்கையின் முக்கிய பங்காக முகமூடிகள் (topeng) இருப்பதாக சொல்லப்படுகின்றது. சடங்குகள், வழிபாடு, நோய்களுக்குச் சிகிச்சையளித்தல், வாதைகளைப் போக்குதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தும் ஒரு பொருளாக எப்பொழுதும் இந்த முகமூடிகள் இருப்பதாக கூறுகின்றனர். மர கட்டைகளைக் கொண்டு செதுக்கப்படும் ஒவ்வொரு முகமூடிக்கும் ஒரு குறிப்பிட்ட தன்மையும் செயல்பாடும் இருப்பதால் அதனை மற்றவர்கள் அனாவசியமாக தொடவோ அல்லது விளையாடவோ கூடாது என்கின்றனர். முகமூடிகளைத் தயாரித்து பிறகு, அதனை சேவாங் நடன விழாவிற்குக் (upacara tarian sewang) கொண்டு செல்வார்கள். அந்த முகமூடிகள் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்காக அவ்விழாவில் சில சடங்குகளை மேற்கொள்வார்கள். பின், இடையூறுகளைத் தடுக்கும் அடையாளமாக அம்முகமூடிகள் காடுகள் அல்லது நதிகளில் வைக்கப்படும்.  பழங்காலம் தொட்டு மஹ் மேரி சமூகத்தினரிடம் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்த முகமூடிகள் தற்போது மெதுவாக ஒரு கைவினைப் பொருளாக வணிகமயம் ஆக்கப்பட்டுள்ளது.

மரம் மற்றும் நெசவுகளை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் மஹ் மேரி பழங்குடியினரிடையே மிக பிரபலமான ஒன்றாகும். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இது போன்ற பொருள்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இவர்களின் பாரம்பரிய நடனமும் மற்றவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அவர்களுக்கென்று ‘ஜோ ஓ’ என்ற நடன குழுவை வழிநடத்தி வருகின்றனர். தங்கள் கிராமங்களில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் நிகழும் விழாக்களில் நடனம் புரிவார்கள்.

கிராமப்புற மற்றும் பிரதேசம் மேம்பாட்டு அமைச்சகத்தின் பொருளாதார வலுவூட்டல் பிரிவு வழி மஹ் மேரி மக்கள் தங்களுக்கான கலாச்சார கிராமங்களை உருவாக்கியதால் அங்கு சுற்றுலா நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. ‘ஒரு மாவட்டம் ஒரு தொழில்’ (program Satu Daerah Satu Industri – SDSI) என்ற திட்டத்தில் ஒராங் அஸ்லி சமூகத்தில் இருந்து முதலில் இணைந்தவர்கள் மஹ் மேரி பழங்குடி மக்கள். மலேசிய பழங்குடி சமூகத்திலேயே மஹ் மேரி இனக்குழு கைவினைபொருள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களின் கைவினைப் பொருள்கள் மற்றும் கலாச்சாரத்தின்பால் ஈர்க்கப்பட்டும் பல சுற்றுலாப் பயணிகள் மஹ் மேரி குடியிருப்பு கிராமங்களுக்குச் சென்று பார்வையிடுகின்றனர். ‘ஒரு மாவட்டம் ஒரு தொழில்’ (program Satu Daerah Satu Industri – SDSI) என்ற திட்டம் நெசவு செய்தல், சிற்பம் செதுக்குதல் மற்றும் கலாச்சார குழுக்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இயங்கிக் கொண்டுள்ளன.

கேரி தீவில் அமைந்திருக்கும் ‘கம்போங் சுங்காய் பூம்புன்’ (Kg. Sg Bumbun) என்ற கிராமப் பகுதியில் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் கிராமிய பொருளாதார பிரிவின் (Bahagian Ekonomi Desa KKLW) நிதியுதவியின் கீழ் 0.85 ஏக்கர் நிலத்தில் கைவினை மையம் ஒன்று அமைக்கப்பட்டது. கைவினை மையத்தில் சிற்பிகள், நெசவாளர்கள் மற்றும் கலாச்சார குழுக்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மர கட்டைகளினால் செய்யப்படும் கைவிணை பொருள்கள் மஹ் மேரி மக்களுக்கு நல்ல ஒரு அடையாளத்தைக் கொடுத்திருந்தாலும் அதன் வழி அவர்களுக்கான போதிய வருமானம் கிடைப்பதில்லை. நிறைய சுற்றுபயணிகளை ஈர்த்து நம் நாட்டின் சுற்றுல்லாத்துறையில் முக்கிய இடத்தை அடைய முடியும் என்று சில மஹ் மேரி பழங்குடி மக்கள் உறுதியாக நம்பிக்கைக் கொண்டுள்ளனர். அரசாங்கமும் அவர்களுகென்று சில புதிய திட்டங்களை அமல்படுத்துகின்றனர்.

அதே சமயம், செம்பனை பயிரிடுதல் மற்றும் கப்பல் துறைமுகத்தின் மேம்பாடு போன்ற விடயங்களுக்காக நில அபகரிப்பு போன்ற பிரச்சனைகளும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. இது போன்ற சிக்கல்களுக்கு இடையில் மஹ் மேரி சமுகத்தினர் மட்டுமில்லாமல் மலேசியாவில் வாழும் மற்ற பூர்வகுடி மக்களும் பல சவால்களை எதிர்நோக்கியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தற்போதைய கோவிட் காலக்கட்டத்தில் இவர்களுடைய நிலை கேள்விகுறியாகியுள்ளது.

பல பழங்குடி சமுகத்தைச் சேர்ந்த மக்கள் விளிம்பு நிலையில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.  சரியான சுகாதார வசதி மற்றும் சுத்தமான நீர் வசதிகள் கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. இன்றுவரை குடிசை அல்லது பலகை வீடுகளிலே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்கு முறையான முழுமையான கல்வி கிடைப்பதர்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாகவே சொல்லப்படுகின்றது.

பழங்குடி மக்கள் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும், இயற்கை பேரழிவுகளைத் தடுக்கவும் உதவுகிறார்கள், ஆனாலும் அவர்களின் உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்படுவதில்லை. உலகின் மேற்பரப்பில் கால் பகுதி மட்டுமே பழங்குடி மக்கள் வாழும் இடமாக உள்ளது. இருப்பினும், உலகில் மிஞ்சியிருக்கும் பல்லுயிர் பெருக்கத்தில் 80% அவர்களாலே பாதுகாக்கப்பட்டு வருவதாக குறிப்பிடுகின்றனர். அவர்களின் பாரம்பரியத்தையும் ஆன்மீக விழுமியங்களையும் இக்காலச் சூழலிலும் கைவிடாமல் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கும் பாரம்பரியத்திற்கும் முற்றிலும் முரணான உலகை எதிர்நோக்கி வந்தாலும் இன்றளவும் விடா முயற்சியாக இந்த பூமியில் தங்களுடைய பாரம்பரிய வாழ்க்கை முறையை பாதுகாக்க வேண்டும் என்றே போராடுகின்றனர்.

மேற்கோள் பட்டியல்

Alikhsan, R. (2015, November, 09). Mystery Topeng Mah Meri. Retrieved from https://sky-adventure.com/artikel/mystery-topeng-mah-meri

Carey, Iskandar, “A Brief Account of the Mah Meri” dlm. JMBRAS 46 (2), 185-194, 1976.

Hafiz Ithnin. (2018, July, 31). Uniknya suku Mah Meri. Retrieved from https://www.hmetro.com.my/nuansa/2018/07/363464/uniknya-suku-mah-meri

Hafiz Ithnin. (2018, November, 09). Seni Mah Meri. Retrieved from https://www.hmetro.com.my/santai/2018/11/393776/seni-mah-meri

Haifa Hadriah. (2012, March, 06). Suku kaum Mah Meri. Retrieved from http://orangaslimalaya.blogspot.com/2012/03/suku-kaum-mah-meri.html

Haliza Abdul Rahman. (2010). Penglibatan Masyarakat Peribumi Dalam Isu Berkaitan Persekitaran: Tinjauan Terhadap Suku Mah Meri Di Pulau Carey, Kuala Langat, Selangor. Universiti Sains Malaysia (Kemanusiaan 17), 1(1), 111–134.

Holloway, A. (2014, March, 14). Mysterious Mah Meri tribe of Malaysia conduct ritual dance to the dead for another good year. Retrieved from https://www.ancient-origins.net/news-general/mysterious-mah-meri-tribe-malaysia-conduct-ritual-dance-dead-another-good-year-001404

Kunasekaran. Sarjit, Gill, A. T. & Talib, Ma’rof Redzuan. (2013). Culture As An Indigenous Tourism Product Of Mah Meri Community In Malaysia. Universiti Putra Malaysia (Life Science Journal), 10(3), 1600-1604. Retrieved from http://www.lifesciencesite.com.

Latifa. (2015, Agust, 25). Topeng ibarat nyawa bagi kaum Mah Meri. Retrieved from https://www.bharian.com.my/bhplus-old/2015/08/77067/topeng-ibarat-nyawa-bagi-kaum-mah-meri  

M. Azizan. (2017). Asal-usul Mah Meri. Retrieved from https://www.academia.edu/22376848/Asal_usul_Mah_Meri

Peter, D. (2017, October, 24). Book describes Life and Culture of the Mah Meri Tribe. Retrieved from https://www.malaysia-insights.com/life-and-culture-of-the-mah-meri-tribe/

Rambleand And Wander. (2017). Malaysia : The Beauty of Mah Meri. Retrieved from https://www.rambleandwander.com/2017/01/malaysia-beauty-of-mah-meri.html

Rohayu Roddin, Yusmarwati Yusof, Halizah Awang & Sarebah Warman. (2017). NILAI TRANSFORMASI KOMUNITI MAH MERI DALAM PELANCONGAN PERIBUMI. Universiti Tun Hussein Onn Malaysia (Journal of Global Business and Social Entrepreneurship), 3(6), 47-57.

Syed Azahar Syed Osman. (2018, November, 21). Mah Meri tribe ‘ancestors’ day. Retrieved from https://www.thesundaily.my/multimedia/photogallery/mah-meri-EE125215

Zainol Zamzuri. (2019). Fungsi Agama Sebagai Suatu Sistem Undang-Undang, Moral Dan Ideologi Bagi Masyarakat Mah Meri. Universiti Sains Malaysia (JKA 321), 1(1), 7-15. Retrieved from https://www.researchgate.net/publication/341447655

3 comments for “‘மஹ் மேரி’ (Mah Meri) பழங்குடி மக்கள்

 1. R.K.HEHIJLARASI
  January 2, 2021 at 12:54 pm

  very the new knowlegde to know. very interesting to read it. and the full story was simply awesome and i gain a new info from this. congratulations to the author who wrote this. all the best for your upcoming story. thank you for giving such amazing story.

 2. K.Param
  January 5, 2021 at 8:17 pm

  இந்தக் கட்டுரை அபிராமியின் ஆளுமையை மேலும் உணர்த்துகிறது. அவருக்கு வாழ்த்துகள். தொடர்க.

 3. Selvam kumar
  January 10, 2021 at 7:46 am

  சிறப்பான கட்டுரை சொற்களைக்கோர்க்கும் வழிமுறையும், அறிய விடயங்கள் அதிகமிருக்கிறது, மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *