சபா சித்தப்பாவிடம் கடிதத்தைக் கொடுத்தபோது, அவர் திடீரென, என் கண் முன்னே முதியவராக மாறி விட்டதைப் போலத் தோன்றினார். அவரது முகம் முழுமையாக மாறிப் போனதோடு, எனது தலைக்கு மேலாக தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தார்.
“இதை உன்கிட்ட தந்தது எப்போ?” என ஒரு கணத்துக்குப் பிறகு கேட்டார்.
“இன்னிக்கு சாயந்திரம். சித்தி இல்லாத நேரமாப் பார்த்து சித்தப்பாக்கிட்ட இதைக் கொடுக்கணும்னு அவ என்கிட்ட சொன்னா”
அவர் எதுவும் கூறவில்லை. அவரது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சித்தேன். எனினும் அதனை என்னால் செய்ய முடியாதிருந்தது. அவரது முகத்தில் சுருக்கங்கள் ஆழமாகப் பரவிச் சென்றிருப்பதாக எனக்குத் தோன்றியது. அவரைப் பார்த்ததும் எனக்குள் கவலை உண்டானது. அவர் எதையோ சொல்ல வாயைத் திறந்தார். உடனே மூடிக் கொண்டார். அவருக்கு முன்னால் நின்று கொண்டேயிருப்பதால் நான் அசௌகரியத்துக்கு ஆளானேன். திடீரென அவர் கேட்டார்.
“அவ எப்படியிருக்கா?”
அந்தக் கேள்வியால் நான் ஆச்சரியத்துக்குள்ளானேன்.
“சொல்லு… அவ எப்படியிருக்கா?”
“அவவுக்கு… அவவுக்கு ஒண்ணும் ஆகிடல சித்தப்பா”
அவர் என்னை முறைத்துப் பார்த்ததும்தான், நான் அவரது கேள்விக்கு மகிழ்ச்சிகரமான பதிலொன்றை வழங்கத் தவறியதை உணர்ந்தேன்.
“உங்கிட்ட இந்தக் கடிதத்தைத் தர்றதை யாராவது கண்டாங்களா?”
“யாரும் காணல. அவ என்னை அவவோட கடைக்குள்ள கூட்டிட்டுப் போய்த்தான் இந்தக் கடிதத்தைத் தந்தா”
அவர் தலையை அசைத்தார். அவருக்கு அப்பதில் ஆறுதலளித்தது போலிருந்தது. எனினும் நான் இன்னும் எச்சரிக்கையாகவே இருந்தேன். புதிதாகப் பூத்த புன்னகை அவரது முகத்திலிருந்தது. பிறகு அவர் எனது தலை மீது கை வைத்து, அன்பாகத் தடவிக் கொடுத்தார்.
“உனக்கு ஏதாவது தெரியுமா?”
“இல்ல சித்தப்பா”
“நாங்க ஒரு குற்றத்தோட பங்காளிங்கன்னு உனக்குத் தெரியுமா?”
அவர் என்ன சொல்ல வருகிறாரென எனக்குப் புரியவில்லை. அதனால் நான் இல்லையென்று கூறினேன்.
“இல்லன்னு சொன்னதுக்கு அர்த்தமென்ன?”
“நான் ஆமான்னு சொல்ல வந்தேன் சித்தப்பா”
அவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, தனது இடது கையில் வைத்திருந்த கடிதத்தைப் பார்த்தபடி தொடர்ந்தும் என்னுடன் கதைத்தார்.
“நீ எங்கக்கிட்ட வந்து எவ்வளவு காலமாகுது கேமே?”
“ஒரு மாசமிருக்கும்னு நினைக்கிறேன் சித்தப்பா”
“நீ எங்கக்கிட்ட இருந்து ஏதாவது கத்துக்கிட்டியா?”
அவர் இவ்வாறான கேள்விகளையெல்லாம் கேட்பது ஏனென்பது எனக்குள்ளே எழுந்த கேள்வியாகவிருந்தது. நான் உளறியவாறே பதிலளித்தேன்.
“ஆமா சித்தப்பா”
“என்ன கத்துக்கிட்டே?”
நான் தயங்கினேன். ஆனால் அவர் வற்புறுத்தினார்.
“சமைக்கிறது எப்படி… அடுத்தவங்களோட வசிக்கிறதெப்படி.. தகவல் கொண்டு போறதெப்படி.. இப்படி…”
“ம்ம்… நல்லது” எனக் குறிக்கிட்டார்.
“உன்னோட அப்பா புத்திசாலி. இடைக்கிடையே தன்னோட பிள்ளைகளை சொந்தக்காரங்க கூட தங்க அனுப்பி வைக்கிறது நல்ல பயிற்சிதான். அதன் மூலமா எங்கே போனாலும் பிழைச்சி வாழ்ந்துக்குற விதத்தைக் கத்துக்கிடலாம்.”
அவர் எனது தலைக்கு மேலாக தொலைவில் பார்த்தார். பிறகு கதிரையின் கீழே மறைத்து வைத்திருந்த விஸ்கி போத்தலொன்றை எடுத்து, அதிலிருந்து சில மிடறுகள் பருகி விட்டு, மீண்டும் போத்தலை இருந்த இடத்திலேயே மறைத்து வைத்தார். அவர் போத்தலை மறைத்து வைத்திருப்பது அவரது மனைவியினால்தான் என எனக்குப் புரிந்தது. அவளது கையில் இப்போத்தல் சிக்கினால் பெரும் கலவரமே வெடிக்கும்.
“சித்தப்பா… கடிதத்துக்கு பதிலையும் வாங்கிட்டு வரும்படி என்கிட்ட சொல்லியிருக்கா”
அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
“என் பொஞ்சாதிய உனக்குப் பிடிச்சிருக்கா?” என திடீரெனக் கேட்டார்.
நான் பொறியொன்றில் சிக்கிக் கொண்டுள்ளதாக எனக்குத் தோன்றியது. சித்தப்பா எப்போதும் அவ்வாறு நடந்துகொண்டதில்லை. போதையின் உச்சத்தில் இருக்கும்போது அல்லது வேறேதேனும் குழப்பத்தில் இருக்கும்போது மாத்திரமே அவர் இவ்வாறு நடந்துகொள்வார். அவரது கேள்விக்கு என்ன பதிலளிப்பதென எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எனக்கு அவரது மனைவியைப் பிடிக்கவில்லை. ஆனால் அதனை எவ்வாறு அவரிடம் கூறுவது? அவள் என்னை ஒரு அடிமையைப் போல நடத்திக் கொண்டிருந்தாள். எப்போதுமே குட்டுவதோடு, சொற்பமாகவே உணவையும் தந்தாள். எனினும் அவள் அழகானவள். அதனால் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு விருப்பமானது.
“அப்போ என் பொஞ்சாதிய உனக்குப் பிடிக்கல… அப்படித்தானே?”
“எனக்குப் பிடிச்சிருக்கு சித்தப்பா… பிடிச்சிருக்கு”
அவர் தனது கையிலிருந்த கடிதத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்.
“கேமே… எனக்கு ரொம்ப அதிகமாத் தேவைப்படுறது எதுன்னு உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டவாறு அவர் என்னைப் பார்த்தார். அவரது பெரிய கரு நிற விழிகள் என்னை உற்று நோக்கின. சபா சித்தப்பாவுக்கு அதிகமாகத் தேவைப்படுவது எதுவென எனக்குத் தெரியும். இந்த வீட்டுக்கு வந்ததுமே முதன்முதலில் நான் அறிந்துகொண்டது அதைத்தான். பள்ளிக்குப் போகும் ஒவ்வொரு தடவையும் அவர் அதற்காக பிரார்த்தித்து வந்தார். எல்லா காலைவேளைகளிலும் எம்மை எழுப்பும் அவரது மனைவி, எங்கள் எல்லோரையும் வரவேற்பறையை நோக்கி அழைத்துச் செல்வாள். அங்கு நாம் எல்லோரும் அவரது தேவைகளை முன்வைத்து இறைவனைப் பிரார்த்திப்போம். ஆரம்பத்தில் அது எனக்குக் குழப்பமாக இருந்தது. எனினும் பிறகு எனக்கு சபா சித்தப்பா குறித்து அனுதாபம் சார்ந்த உணர்வொன்றே தோன்றியிருந்தது.
“சித்தப்பாவுக்குத் தேவை ஒரு குழந்தை” என்றேன்.
அவர் மெதுவாக என்னைப் பார்த்தார். மீண்டும் கதைக்க அவருக்கு சற்று நேரமெடுத்தது.
“உனக்குத் தெரிஞ்சிருக்கு. ஆண்டவர் சில நேரங்கள்ல எங்க பிரார்த்தனைகளுக்கு வினோதமாத்தான் பதிலளிச்சிடுறார்”
அவர் அவ்வாறு பதிலளித்ததைக் கண்டு நான் திகைத்துப் போனேன். அவரும், அவரது மனைவியும் பக்தி மிக்க கிறிஸ்துவர்களாக இருந்தனர். அவர் மீண்டும் என் தலையில் தட்டினார்.
“கேமே, உனக்குத் தெரியுமா? நான் பெரிய ஒரு சிக்கல்ல மாட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனா அது எந்த மாதிரியான சிக்கல்னு விளங்கிக் கொள்ற அளவுக்கு நீ இன்னும் பெரிய பையனாகல்ல”
“ஆமா சித்தப்பா”
“இப்ப போய்த் தூங்கு. ஆனா இது எதையும் யார்கிட்டயும் சொல்லக் கூடாது.. புரியுதா? சரி.. நீ போலாம்.. ஏன் இன்னும் பார்த்துட்டிருக்கே?”
“இதுக்கு பதிலொண்ணு வாங்கிட்டு வரச் சொல்லி அவ சொன்னா.”
சபா சித்தப்பா களைத்துப் போனவரைப் போல மீண்டும் என்னைப் பார்த்தார்.
“நீ சிரமப்படாதே.. நானே போய் அவளுக்கு பதிலைக் கொடுக்குறேன்” என்றார்.
“சரி சித்தப்பா”
அன்றிரவே நான் பதிலைக் கொண்டு வந்து தந்தால், பத்துக் கோபோ காசுகளைத் தருவதாக அவள் தந்திருந்த வாக்குறுதியை நினைவில் கொண்டு நான் கூறினேன். ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படத் தேவையற்று, அதற்குப் பதிலாக சித்தப்பா எனக்கு முப்பது கோபோ காசுகளைத் தந்தார். நான் அறையிலிருந்து வெளியேறும்போது, சபா சித்தப்பா சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த அவரது திருமணப் புகைப்படத்தை எனது தலைக்கு மேலால் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குத் தென்பட்டது.
மறுநாள் காலை, பிரார்த்தனை முடிந்ததன் பிறகு சித்தி வேலைக்குச் சென்றாள். நான் விளையாடுவதற்காக வெளியே சென்றேன். அது பள்ளிக்கூட விடுமுறை காலமென்பதால் விஷேடமாகச் செய்ய வேலை ஏதுமிருக்கவில்லை. சித்தப்பா வசித்து வந்த பிரதேசத்தில் எனக்குப் பிடிக்காத விடயமென்றால் அது, விளையாடுவதற்குப் போதுமான அளவு பிள்ளைகள் இல்லாதிருந்ததுதான். அடுத்தது, சுற்றியிருந்த பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வெளியே போய் விளையாடுவதை அனுமதிக்காதது. ஏனெனில் அவர்களுக்கு வீட்டுக்குள்ளேயே செய்ய நிறைய வேலைகள் இருந்தன.
நான் மேரியின் கடைக்குச் செல்லத் தீர்மானித்தேன். எனக்கு அவளிடமிருந்து இனிப்புக்கள் கிட்டும். அவளது தம்பிகளுடனும் சேர்ந்து விளையாடலாம்.
“கேமே” என ஒரு குரல் கேட்டது. நான் நின்று திரும்பிப் பார்த்தேன். அது மேரியல்ல. எனவே அவளது சில்லறை மற்றும் காய்கறிக் கடையை நோக்கி ஓடிச் சென்றேன். என்னையழைத்தது அவளது இளைய தம்பி.
நான் அங்கு சென்றபோது, மேரி ஜன்னலால் தலையை வெளியே நீட்டி ‘உள்ளே வா’ என்றாள். நான் கடைக்குள் சென்றேன். அந்தச் சிறிய இடத்தில் சகோதர, சகோதரிகளுடன் அவள் வசிப்பது எப்படியென நான் வியந்தேன். அந்தக் குறுகிய இடத்தில் பல வித மூட்டைகளும், பெட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
“கேமே, என்னோட கடிதத்தை சபாக்கிட்ட கொடுத்தியா?”
“ஆமா… நேத்து ராத்திரியே கொடுத்துட்டேனே”
“பதிலெங்கே?” எனக் கேட்டபடி, யாரும் காணாதிருக்க கதவைச் சாத்தி விட்டாள்.
நான் எனது செருப்புக்களைப் பார்த்தேன். எனதிரு பாதங்களும் புழுதியால் மூடப்பட்டிருந்தன.
“சித்தப்பாவே வந்து பதில் சொல்றேன்னு சொன்னார்”
அவள் அழுக்கடைந்த மூங்கில் கதிரையில் அமர்ந்தாள். நான் தொடர்ந்து அங்கிருக்கக் கூடாதென எனக்குத் தோன்றியது.
“அவர் சரியாக என்ன சொன்னார்னு சொல்லு?”
நான் சற்று உற்சாகத்துடன் விவரித்தேன். அவள் என்னை மிகவும் கூர்ந்து கவனித்தபடி கதைத்தாள்.
“நீ நல்ல பையன். நாங்க தர்ற தகவலைக் கொண்டு போறாய். உன்னோட சித்தி என்ன சொன்னா?”
“சித்திக்கு ஒண்ணும் தெரியாது” என நான் உறுதியாகக் கூறினேன்.
“நெஜமா?”
“நான் ரொம்ப நேரம் வெளியே போய் தாமதிச்சா சித்தி என்னை அடிப்பா”
“அவள் நல்லவளா?”
“தெரியல”
“ஆனா அவ இன்னும் அவருக்கொரு குழந்தையப் பெத்துக் கொடுக்கல”
“நாங்க தினந்தோறும் பிரார்த்திக்கிறோம்… எப்பவாச்சும் ஒருநாள் கிடைக்கும்”
மேரி கேலியாகப் புன்னகைத்தாள். தொடர்ந்து,
“நான் சபா சித்தப்பாவைக் கல்யாணம் பண்ணிக்குறது உனக்கு இஷ்டமா?” என்று கேட்டாள்.
நான் அதிர்ந்தேன்.
“சபா சித்தப்பா உங்களைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டார். அவர் கிறிஸ்தவர்”
நான் கூறியது முட்டாள்தனமான கூற்றெனக் கருதித்தான் அவள் என்னை உற்று நோக்குகிறாளோ என எனக்குத் தோன்றியது. பிறகு சிரித்தவாறே கேட்டாள்.
“எப்படிப்பட்ட கிறிஸ்தவர்? நாங்க சேர்ந்து என்னவெல்லாம் செய்றோம்னு உனக்குத் தெரியுமா?”
எனது சித்தப்பாவைப் பற்றி அவ்வாறாகக் கதைத்தபோது எனது முகம் சிவந்தது. அவளது முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து போகும் விதத்தை நான் ஆராய்ந்தேன். அவளிடம் மனம் கவரக் கூடிய அழகிருந்தது. மெலிந்து நீண்ட முகம். அதில் அவளது விழிகள் துயரத்தால் கனத்திருந்தன. உயரமானவளாக இருந்த அவள் எப்போதும் கிழிசல் கண்ட ஆடைகளையே அணிந்திருந்தாள். அவளது கண்களைச் சுற்றி ஏதோவொரு பூச்சு பூசப்பட்டிருந்தது. முகம் முழுவதும் பவுடர் அப்பியிருந்தது. இதை விடவும் நல்ல அழகோடு, சுறுசுறுப்பான மனைவியிருக்கும்போது எனது சித்தப்பா, இந்தப் பெண்ணுக்கு இரகசியமாகத் தகவல் அனுப்புவதும், இருளில் சந்திப்பதுவும் ஏனோ என எனக்குப் புரியவில்லை. அநேகமாக மேரி, அன்பான ஏழைப் பெண்ணாக இருப்பதுவும், அகங்காரமற்றவளாக இருப்பதுவும் அதற்குக் காரணமாக இருக்கக் கூடும். மீண்டும் மேரி என்னுடன் கதைத்தபோது அவள் விரக்தியுற்றவளாகத் தெரிந்தாள்.
“நான் இப்ப போகணும்” என்றேன்.
“சரி. டொமீக்கிட்ட சொல்லி இனிப்பு கொஞ்சம் வாங்கிக்கோ… திரும்ப இங்க வந்து அவங்க கூட விளையாடு… சரியா?”
தலையசைத்த நான் வெளியே வந்தேன். நான் கதவைச் சாத்தியபோது அவள் அழத் தொடங்கியிருப்பாளென நான் நினைத்தேன். நான் வெளியே சென்று அவளது தம்பி, தங்கைகளுடன் விளையாடினேன். உதைப்பந்தாட்டமும், டென்னிஸும் விளையாடினோம். அவர்கள் எனக்குக் குளிப்பதற்கும் இடமளித்தனர். பிறகு நாங்கள் சீனத் திரைப்படமொன்றைப் பார்க்க ஒன்றாகச் சென்றோம்.
நான் திரும்பவும் வீட்டுக்கு வந்த போது, எனது சித்தியின் வாகனம் அங்கிருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன். அவள் அலுவலகத்திலிருந்து நேரத்தோடு வந்திருக்கிறாள் அல்லது வேறு ஏதேனும் நடந்திருக்கிறது. நான் ரகசியமாக திண்ணை வழியே நடந்து சென்று, எனது அறைக்குள் புகுந்துகொள்ளப் பார்த்தேன். அவர்கள் குரலுயர்த்திக் கதைத்துக் கொண்டிருந்ததால் அதை செவிமடுக்காதிருக்க என்னால் இயலவில்லை.
“வாங்க… நாங்க அறைக்குள்ளே போவோம்”
“எனக்குத் தலை வலிக்குது”
“உங்களுக்கு இந்தத் தலைவலி ஒரு கிழமையா இருக்கு”
“வேலை ஜாஸ்திங்குறதால”
“என்ன வேலை?”
தொடர்ந்து அமைதி. பிறகு கடதாசிகள் இழுபடும் சப்தம். வேகமாக மூச்செடுக்கும் சத்தம். இறுதியில் ஆறுதலாக மூச்சு விடும் சத்தம்.
“சபா, உங்களுக்கு இன்னொருத்தி இருக்காளா?”
“என்ன? ஏன் இப்படி முட்டாள்தனமாக் கதைக்குறே?”
“இல்லேன்னா ஏன் இப்படி நடந்துக்குறீங்க?”
“இங்க பாரு… நான்…”
“அப்படியொருத்தி இருக்கும்போதுதான் எல்லா ஆம்பளைங்களுமே இப்படி சொல்வாங்க”
தொடர்ந்து நீண்ட அமைதி.
“நீ ஏன் இன்னிக்கு நேரத்தோட வேலையிலிருந்து வந்தே?”
“நான் மருத்துவ பரிசோதனைக்குப் போனேன்”
“உனக்கு என்ன சொன்னாங்க? கடவுள் உன் கருப்பையை சடுதியாத் திறந்துட்டாரா?”
“நீங்க இப்படிக் கதைக்க வேண்டிய அவசியமில்ல”
சிறிது நேரம் வரைக்கும் மாமா எதுவும் கூறவில்லை. பிறகு,
“நாங்க வயசாகிட்டே போறோம்ங்குறது உனக்குத் தெரியும்ல” என்றார்.
“அதுக்கு?”
“அதுக்கு? என்ன? பிள்ளையில்லாம இருக்க உனக்கு இஷ்டமா?”
“அதுக்கு செய்ய ஒண்ணுமில்லன்னா ஏன் தொடர்ந்து போராடணும்?’
“எனக்குக் குழந்தையொண்ணு வேணும்ங்குறதால.. அதான் காரணம்… நாங்க இதைப் பற்றி பத்து வருஷமாக் கதைக்கிறோம். எனக்குப் போதுமாயிடுச்சு. உனக்குத் தெரியுமா? எனக்கு எல்லாமே வெறுத்துடுச்சு. ஒரு குழந்தையைப் பெத்துக் கொடுக்க உன்னால இன்னும் முடியல… இப்போ நான் போய் குளிச்சிட்டு வரலாம்னு நினைக்கிறேன்”
சித்தி தனது குரலையுயர்த்தி கூர்மையாகக் கதைத்தாள்.
“உங்களுக்கு குழந்தையொண்ணு அவ்வளவு வேணும்னா போய் இன்னொருத்தியைக் கட்டிக்குங்க… எனக்குத் தெரியும் உங்களுக்கு அதான் இப்போ தேவைப்படுதுன்னு”
சித்தப்பா களைத்துப் போனவரைப் போல மெதுவாகக் கூறினார்.
“உனக்குத்தான் தெரியுமே.. எனக்கு இன்னொருத்தியைக் கட்ட வேண்டிய அவசியமில்ல. ஆனா இங்கே வர்ற ஆட்கள் அடிக்கடி இதைப்பற்றியேதான் கதைக்குறாங்க. உனக்கும் கோபம் வரும்… உனக்குத்தான் தெரியுமே”
எனக்கு சித்தப்பா குறித்து கவலை தோன்றியது. அவரது குரல் பலவீனமாகி, வெறும் மூச்சாக மாறியது. அவருக்குள் ஏற்பட்டிருக்கும் துயரம் அதற்குக் காரணமாக இருக்கக் கூடுமென நான் நினைத்தேன்.
“எனக்குத் தெரியும்.. எனக்குத் தெரியும் உங்களால முடிக்க முடியாதுன்னு… உங்களுக்கு எப்பவுமே தலைவலி.. இல்லேன்னா மூக்குல வலி.. வேற வேற வலியெல்லாம் வர்றது ஏன்னு எனக்குத் தெரியும். ஆனா நான் சத்தியமாச் சொல்றேன் நீங்க அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா நீங்க கஷ்டத்துல விழுவீங்க… நான் உங்களைப் பிடிச்சுப்பேன்.”
தொடர்ந்து ஒரு விம்மலோசை கேட்டதோடு கதவு சத்தமாக அடைக்கப்படும் ஓசை கேட்டது. திண்ணையிலிருந்த நான் கேட்கக் கூடாததைக் கேட்டுக் கொண்டிருந்ததால் அசௌகரியமாக உணர்ந்தேன். நான் திரும்பவும் எனது அறைக்குள் புக முற்பட்ட போது கதவு திறந்தது.
“கேமே நீ இங்க என்ன பண்ணிட்டிருக்கே? முழு நாளும் எங்க போயிருந்தே? நான் உன்னைத் தேடிக்கிட்டிருந்தேன்”
சித்தப்பா மென்மையாகக் கூறினார். நான் குற்றவாளி போல உணர்ந்தேன். இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து அவரிடமிருந்து தண்டனை பெறுமளவிற்கு நான் எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை. அவர் என்னை நேசித்தார். எனினும் சித்தி என் மீது குற்றம் சாட்டினாள். நான் சட்டியிலிருந்து இறைச்சியைத் திருடித் தின்பதாக அவள் கூறினாள். ஒரேயொரு தடவை மாத்திரம் நான் கருவாட்டுத் துண்டொன்றைத் திருடியிருந்தேன்.
சபா சித்தப்பா அன்போடு எனது தலையைத் தடவியபடி கூறினார்.
“உன்னை உடனே வீட்டுக்குத் திருப்பியனுப்பச் சொல்லி உன்னோட அப்பா எனக்கொரு தகவல் அனுப்பியிருக்கார். கதவுக்கிட்டயிருந்து அடுத்தவங்க கதைக்குறத ஒட்டுக் கேட்குறது நல்ல பழக்கமில்ல… புரிஞ்சுதா?”
நான் அமைதியாகத் தலையசைத்து “ஆமா சித்தப்பா” என்றேன். அவர் எனது உச்சந்தலையில் சடுதியாகக் குட்டினார். எனது கண்களிலிருந்து கண்ணீர் சிதறியது.
“போய் உன்னோட சாமான்களையெல்லாம் எடுத்து வை” எனக் கட்டளையிட்டார்.
“நான் இன்னிக்கே போகணுமா?”
“இல்ல.. நாளைக்குப் போகலாம்”
அன்றிரவு இன்னுமொரு கலகத்தின் ஓசை கேட்டது. அதற்குக் காரணம் என்ன என எனக்குத் தெரியாது. அன்று மாலை நிகழ்ந்தது அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
மறுநாள் காலை, வழமையைப் போல சித்தி பிரார்த்தனை செய்வதற்காக வரவேற்பறைக்கு வரும்படி அழைக்கவில்லை. சபா சித்தப்பா எனது தந்தையின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் வெளியிறங்கும்போது சித்தியைக் காணவில்லை. எனது வருகையையோ, எனது திரும்பிச் செல்லலையோ அவள் கவனத்திலேயே எடுக்கவில்லை எனப் புரிந்தது.
வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது சித்தப்பா மௌனமாகவே இருந்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருக்கு ஏதோ சொல்ல வேண்டிய தேவையிருந்ததாகத் தெரிந்தது. நாங்கள் வீதியில் வாகன நெருக்கடிக்குள் சிக்கிய போது, சித்தப்பா எனது தலையில் கை வைத்தார்.
“கேமே, எங்க கூட இருக்குறப்போ நீ சந்தோஷமா இருந்தியா?”
“ஆமா சித்தப்பா. நான் சந்தோஷமாத்தான் இருந்தேன்.”
சிறிது அமைதிக்குப் பிறகு அவர் மீண்டும் கதைத்தார்.
“நீ மேரியைப் பார்த்தியா?”
“நான் நேத்துப் பார்த்தேனே”
“அவள் ஏதாவது சொன்னாளா?”
“ஆமா. அவ சொன்னா சித்தப்பா அவக்கிட்டேயிருந்து தூரமாகிட்டே போறீங்களாம்… சித்தப்பா கூட இருக்கும்போது ரொம்ப சந்தோஷமாயிருக்கும்… ஆனா இப்போ சித்தப்பா தப்பிச்சுப் போகப் பார்க்கிறார்.. இப்படி..”
சித்தப்பா எனது தலையிலிருந்து கையை எடுத்தார். நான் அவரைப் பார்த்தேன். அவரது முகம் இருண்டிருந்ததோடு, முகத்தில் சுருக்கங்கள் ஆழமாகப் பரவியிருந்தன. திடீரென அவர் பிரேக்கை அழுத்தினார். நான் முன்னே வீசப்பட்டுப் போய், முன்னாலிருந்த சாவிப் பெட்டியில் எனது தலை மோதியது. கோழிகளை விரட்டியபடியிருந்த மூதாட்டியொருத்தி பிரதான பாதையின் குறுக்கே பாய்ந்திருந்தாள். அவள் சித்தப்பாவின் வாகனத்தில் மோதி விடாமல் கடைசிக் கணத்தில் காப்பாற்றப்பட்டிருந்தாள்.
“உனக்கு என்னாச்சு?”
“ஒண்ணுமில்ல… தலையடிப்பட்டது மட்டும்தான்”
“மோட்டுக் கிழவி.. வீட்டுக்காகி படுக்கைல கிடக்க வேணாம்? கிழவி என் வண்டியில விழுந்து சாகாமலிருக்க ஆண்டவர் காப்பாத்தினாரு”
எனது தந்தையின் வீட்டுக்கு வரும் வரைக்கும் அவர் எதுவும் கதைக்கவில்லை. நான் மோட்டார் வாகனத்திலிருந்து இறங்கும்போது அவர் இரண்டு நைரா கரன்சி நோட்டுக்கள் அடங்கிய உறையை எனது கையில் வைத்தார். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
“நன்றி சித்தப்பா”
“பரவாயில்ல கேமே” எனப் பதிலளித்தார்.
“ஆண்டவர், சித்தப்பாவுக்கு நிறையப் பிள்ளைகளைக் கொடுக்கட்டும்!”
பிரார்த்தனை செய்யும்போது அவர் எப்போதும் கூறும் ‘ஆமென்’ எனும் வசனத்தை, அவர் இப்போது கூறவில்லை. அவரது முகம் பளிச்சிட்டதோடு அவரது வாகனத்திலிருந்து இறங்கி, எனது தோளில் கை வைத்து, என்னை மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார்.
அதன்பிறகு பல வாரங்கள் கழியும் வரைக்கும் எனக்கு சித்தப்பா, சித்தி, மேரி பற்றி எதுவும் கேள்விப்படவில்லை. எனது தந்தை சம்பிரதாயமாக நடைபெற்று வரும் பண்டிகையில் கலந்து கொள்ள வேண்டி என்னை அழைத்திருக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில், தனது எல்லாப் பிள்ளைகளையும் ஒன்று சேர்த்துக் கொள்வது அவரது தேவையாக இருந்தது.
நான் பள்ளிக்கூடம் சென்று திரும்பியிருந்த ஒரு மாலை நேரத்தில், கைகளில் நிறைய சாமான்களோடு சித்தப்பா எனது வீட்டுக்கு வந்தார்.
“சித்தப்பா எங்க கூட தங்க வந்திருக்கீங்களா?”
நான் கடைசியாக அவரைக் கண்ட போது இருந்ததை விடவும் வயதாகி, மெலிந்து, இருண்டு களைத்துப் போயிருப்பதான தோற்றம் அவரிடமிருந்தது.
“இல்ல கேமே” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து அவருக்குப் பின்னால் மேரி படியேறிச் செல்வதை நான் அவதானித்தேன். எனது சித்தப்பா, மேரியோடு பகிரங்கமாக வெளியே வந்தது ஏன்? பிறகு சற்று மேடிட்டிருந்த அவளது வயிற்றைக் கண்டேன். எனக்குள் தோன்றியிருந்த குழப்பத்தை சித்தப்பா உணர்ந்திருக்கக் கூடும். அதனால் அவர் எனது காதில் முணுமுணுத்தார்.
“கொஞ்சமிரு.. நான் உனக்குச் சொல்றேன்.”
பிறகு அவர்கள் வரவேற்பறைக்குப் போனார்கள். எனது தந்தை அவரது அறைக்குள்ளே இருந்தார். நான் அவரது அறையின் பின் வாசற்கதவைத் தட்டி சபா சித்தப்பா இன்னுமொரு பெண்ணுடன் வந்திருக்கிறாரெனக் கூறினேன்.
எனது தந்தை அவர்களது வருகை குறித்து முன்பே கலந்தாலோசித்திருப்பாரென எனக்கு நிச்சயமாகத் தெரியும். அதனால் அவர் புன்னகையோடு வெளியே வந்து,
“ஆஹ்… நீ உன் சிறிய பொஞ்சாதியையும் கூட்டிட்டு வந்திருக்கே” என்றார்.
அறையின் மூலையொன்றில் நான் நின்றுகொண்டிருப்பதைக் கண்டதும், எனது தந்தையின் கண்கள் விரிந்தன. என்னை அங்கிருந்து அகற்றிவிடுவதே அவருக்கு அவசியப்படுகிறதென எனக்குப் புரிந்தது. நான் எனது அறைக்குள் சென்றேன். அவர்கள் வரவேற்பறையில் வைத்து வெகுநேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு வெளியே வந்த சித்தப்பா எனது அறையின் கதவைத் தட்டி அவர் திரும்பிச் செல்வதாகக் கூறினார். நான் அவரைத் தொடர்ந்து படியிறங்கி வந்து, அவரது வாகனத்துக்கருகே சென்றேன்.
“கேமே, உனக்கு எங்க பிரார்த்தனை நினைவிருக்கா?”
நான் தலையசைத்தேன்.
“சரி… மேரி எனக்கு குழந்தையொண்ணு பெத்துக் கொடுக்கப் போறா”
“அப்படீன்னா அவர் சித்தப்பாவோட பெண்டாட்டியாகப் போறாரா?”
அவர் சலிப்போடு புன்னகைத்தார்.
‘இல்ல கேமே.’
நான் எதுவும் கூறவில்லை. ஏனெனில் எனக்கு எதுவுமே விளங்கவில்லை.
“முன்பொரு நாள் சித்தப்பா சொன்ன சிக்கல் இதானா?”
“ஆமா.. ஆனா இன்னும் முடியல. என்னோட பொஞ்சாதிக்கு இது இன்னும் தெரியாது. அவ இங்க வர்றதைக் கண்டா நீ உள்ளே போய் உன்னோட அப்பாவோட பொஞ்சாதிக்கிட்ட சொல்லணும்… புரியுதா?”
நான் தலையசைத்தேன். இப்பொழுது அதைப் புரிந்து கொள்வது எனக்கு இன்னும் சிரமமாக இருந்தது. சித்தப்பா தொடர்ந்தும் கூறிக் கொண்டே போனார்.
“ஏலுமான எல்லா விதத்திலும் அவளுக்கு உதவி செய் கேமே. தண்ணி கொண்டு வந்து தர்ற வேலை போல ஏதாவது. நான் இடைக்கிடை வந்து போறேன்”
பிறகு எனது தலையைத் தடவிக் கொடுத்தார்.
“இப்போ என்கிட்ட சில்லறையில்ல. இருந்த எல்லாக் காசுக்கும் பொறக்கப் போற குழந்தைக்குத் தேவையானதை வாங்கிட்டேன். அதனால அடுத்த தடவை வரும்போது பார்ப்போம்”
சற்று இஷ்டமில்லாமலேயே நான் தலையசைத்தேன். அவர் வாகனத்தில் ஏறியபோது, நான் அவருடன் தங்கியிருந்த காலத்தில் அவர் கூறியிருந்த ஒரு விடயம் எனக்கு ஞாபகத்தில் உதித்தது. அதை நினைவுபடுத்தியவாறு,
“ஆண்டவர் எங்க பிரார்த்தனைகளுக்கு வினோதமாத்தான் பதிலளிச்சிடுறார்… இல்லையா சித்தப்பா?” என்றேன்.
வாகனத்தை உயிர்ப்பித்தபடியே புன்னகைத்தவாறு பதிலளித்தார்.
“ஆண்டவரே வினோதமானவர்தான்.”
மேரி வேனிற்காலத்தில் மாத்திரமல்லாது, மழைக் காலத்திலும் எம்முடனேயே தங்கியிருந்தாள். அவளது வயிறு படிப்படியாக பெருத்துப் போனதோடு, அதைப் பார்ப்பது கூட அச்சப்படுத்துவதாக இருந்தது. அவள் பாடுபட்டு வேலை செய்யும் அமைதியான பெண்ணாக இருந்தாள். அவள், சமையல் வேலைகளில் எனது தந்தையின் மனைவிக்கு உதவியாக இருந்ததோடு, சில வேளைகளில் சந்தைக்குச் செல்வதையும், எப்போதும் துணி துவைப்பதையும் செய்து வந்தாள். நான் அவளை மிகவும் நேசித்தேன். அவளது மென்மையான வதனத்தில் கவலை படிந்திருப்பது தெரிந்தது.
சித்தப்பா எப்போதாவதுதான் வந்தார். அது அவரது தீய பண்பென நான் நினைத்தேன். அவருக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் குழந்தையை, அவருக்குப் பெற்றுக் கொடுக்கப் போகும் பெண்ணைப் பார்க்க அவர் வருவது எப்போதாவதுதான். ஒரு நாள் நாங்கள் வரவேற்பறையிலிருந்து கதைத்துக் கொண்டிருக்கும்போது, யாரோ கத்தியவாறு சாலையில் அங்குமிங்கும் நடக்கும் சப்தம் கேட்டது. எனது தந்தை வாசலை நோக்கி ஓடினார். நான் அவருக்குப் பின்னால் ஓடினேன். அங்கு நான் கண்டது சித்தியை. அவர் அரிவாளொன்றையும் எடுத்துக் கொண்டு வந்து ரௌத்ரமாகக் கத்திக் கொண்டிருந்தார்.
“போக்கிரியொண்ண பெத்துப் போடப் போற அந்த வேசியை எனக்குக் காட்டு… நான் அவளோட கழுத்த வெட்டணும்”
என்ன நடக்கிறதென நம்ப முடியாதிருந்தது. மேரியைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவள் ஓலமிட்டுக் கொண்டிருந்தாள். எனது தந்தை அவளுடன் கதைத்து அவளை அமைதிப்படுத்த முயற்சித்தார். எனினும் அவளது கோபத்தை அடக்க இன்னும் ஐந்து பேரது உதவியாவது தேவைப்படக் கூடும். பிறகு எனது தந்தை அவளை வாகனத்திலேற்றிக் கூட்டிக் கொண்டு சென்றார். மேரி மிகவும் குழப்பமடைந்திருந்தாள். எனக்கு அவளைக் குறித்தும், அவளது குழந்தையைக் குறித்தும் கவலை தோன்றியது. இதுவரைக்கும் சித்தப்பா வரவேயில்லை.
சித்தப்பா வரத் தயாராகும் போதெல்லாம் சித்தி குறுக்கிட்டுத் தடுத்திருந்தமையே அவர் வராதிருந்ததற்குக் காரணம் என்பது பிறகுதான் எமக்குத் தெரிய வந்தது.
“ஆஹ்.. நீ மெதுவாப் போகப் போறது அந்த வேசியைப் பார்க்கவா?”
சித்தப்பா, மேரியைப் பார்க்க அதன் பிறகு வரவில்லை. மேரிக்குக் குழந்தை பிறந்த பிறகும் கூட வரவில்லை. அது ஆண் குழந்தை. அது பலம் மிக்க தனது தந்தையின் சாயலைக் கொண்டிருந்தது. நான் மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்தும் கவலைப்படவில்லை.
இரண்டு கிழமைகள் கழிந்திருக்கும். சித்தப்பா வந்தார். மேரி பிரசவித்திருப்பதைக் கண்டு வியந்தார். நாங்கள் அனைவரும் அவர் மீது கோபத்துடனிருந்தோம். எனினும் அவர் மகிழ்ச்சியாக இருந்ததோடு, புன்னகைத்தார். நாங்கள் கூறியதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவேயில்லை.
சில கிழமைகளுக்குப் பிறகு மீண்டும் வந்த சித்தப்பா அவளுக்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பதாகக் கூறினார். அது எமது வீட்டுக்கருகிலேயே இருந்த ஒரு சிறிய அறை. சித்தப்பாவுக்கு இப்போதுதான் புத்தி வந்து தனது பொறுப்புக்கள் நினைவுக்கு வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. எனினும் மேரி அங்கு சென்ற பிறகும், சித்தப்பா அவளை எப்போதாவதுதான் பார்க்க வந்தார். அவளது உணவுக்கும், சிறு கடையொன்றை ஆரம்பிப்பதற்கும் எனது தந்தையே பணம் கொடுத்தார்.
அடுத்த தடவை சித்தப்பாவைக் கண்டபோது நான் திகைத்துப் போனேன். அவர் சிறையிலிருந்து வெளிவந்த ஒருவனைப் போல காட்சியளித்தார். நான் அவரைக் குறித்து தொடர்ந்து கவலைப்படவில்லை. இது அவரே சம்பாதித்துக் கொண்டது என எனக்குத் தோன்றியது. போதையில் வந்திருந்த சித்தப்பா, தனது வராமை குறித்து எனது தந்தையிடம் மன்னிப்புக் கோரினார். அவர் வினோதமான ஒருவராக மாறியிருந்தார்.
“கேமே… ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில முகங்கொடுக்க வேண்டியிருக்குற விஷயங்களப் பார்த்தியா?” என என்னிடம் கேட்டார்.
“சித்தப்பா ரொம்ப மாறிட்டீங்க” என்றேன்.
“நான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன்” என்று பதிலளித்தார். என்னைப் பார்க்கக் கூச்சப்பட்டார். அவரது கண்கள் குழி விழுந்திருந்தன. பல நாட்களாக தாடியை மழித்திருக்கவில்லை.
“என்னோட பொஞ்சாதி என்னோட எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போய்ட்டா” எனக் கூறி விம்மினார்.
“அது எப்படி?”
“நீதிமன்றம் அவளுக்கு அதையெல்லாத்தையும் கொடுத்துடுச்சு”
“நீதிமன்றம் ரொம்ப மோசம்”
“இல்ல… நாந்தான் மோசம்”
நான் அமைதியாக இருந்தேன். சொற்ப நேரத்துக்குப் பிறகு சித்தப்பா கதைத்தார்.
“அவளிப்போ வேறொருத்தனோட ஊர் சுத்துறா. அவன், அவ வேலை செய்ற இடத்துலயே இருக்குற பணக்காரனொருத்தன்”
அதிகம் கதைக்காத எனது தந்தை கூறினார்.
“அது ஆண்டவரோட ஆசிர்வாதம்னு கருதிக்கோ.”
“ஆனா ஆண்டவர் வினோதமான ஒருத்தர் தானே” என்றேன்.
“வாயை மூடு கேமே. ஆண்டவர் கேலிக்குரியவரில்ல” என எனது தந்தை கூறினார்.
“ஆண்டவர் என்னோட வாழ்க்கையை என்னால தாங்கிக் கொள்ள முடியாதளவுக்கு பாரமாக்கிட்டார்” என்றார் சித்தப்பா.
எனது தந்தை இனிப்பு வாங்கிக் கொள்வதற்காக எனக்கு பணம் கொடுத்தார். அது, அவர்களுக்கு தனியாகக் கதைப்பதற்காக என்னை வெளியே அனுப்பும் தந்திரமென நான் அறிவேன்.
பிறகு நான், சபா சித்தப்பாவுடன் மேரி தங்கியிருந்த இடத்துக்குச் சென்றேன். நாம் அங்கு சென்ற போது அவள் சோறும், அவரைக் கறியும் சமைத்துக் கொண்டிருந்தாள். கைக் குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததோடு, அவள் அதை அவளது முதுகில் வைத்துத் துணியால் போர்த்திக் கட்டி வைத்திருந்தாள்.
சித்தப்பாவைக் கண்டதும் அவளது முகம் இருண்டது. கோபமடைந்த அவள் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு அவரிடம் ஓடி வந்தாள். அவள் அவரிடம் ஓடி வந்து இரு கைகளாலும் அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டாள். சித்தப்பா சிரித்தார். நாங்கள் அறைக்குள்ளே சென்றோம். அது காற்றுப் புகா அறை. மேரி அதனை அழகுற நேர்த்தியாக வைத்திருப்பது தெரிந்தது. அவள் மேசையொன்றும், கதிரைகள் சிலவும், மின்விசிறியொன்றும் வாங்கியிருந்தாள்.
அவள் சித்தப்பாவுக்கென பீர் போத்தலொன்றையும், எனக்காக கோக்கோகோலா போத்தலொன்றையும் கொண்டு வந்து தந்தாள். குழந்தை விழித்து அழத் தொடங்கியது. மேரி அதை முதுகிலிருந்து எடுத்து, கையில் வைத்துக் கொண்டு முத்தமிட்டாள். அசௌகரியத்துக்குள்ளாகியிருந்த சித்தப்பாவுக்கு குழந்தையைத் தூக்கிக் கொள்ள அவசியமானது. குழந்தை சந்தேகத்துக்குரிய ஏதோவொன்றைக் கண்டது போல, விழிகளை விரித்து சித்தப்பாவைப் பார்த்தது.
“ஷ்..ஷ்…ஷ்…” என்று குழந்தையைப் பார்த்துக் கூறினேன். குழந்தை அமைதியாக இருந்தது.
“இந்த அசிங்கமான மனுஷன் யார்ன்னு பிள்ளைக்குத் தெரியுமா?” என மேரி கிண்டலாக குழந்தையிடம் கேட்டாள். குழந்தை விழிகளை மேலும் விரித்து சித்தப்பாவைப் பார்த்தது.
“இதுதான் குழந்தையோட அப்பா” என்றேன்.
குழந்தை பற்களில்லாத வாயால் சிரித்தது. நாங்கள் எல்லோரும் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தோம். பிறகு சித்தப்பா, மேரியுடன் வசிப்பதற்காக அந்த அறைக்கே குடிவந்தார். ஒரு விதத்தில் பார்க்கும்போது ‘ஆண்டவர் வினோதமானவர்’ என்ற சித்தப்பாவின் கூற்று உண்மைதான்.
(நைஜீரியா தேசத்துச் சிறுகதை)
– பென் ஒக்ரி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
பென் ஒக்ரி (Ben Okri) பற்றிய குறிப்பு
வட நைஜீரியாவில் 15.03.1959 ஆம் ஆண்டு பிறந்த கவிஞரும், எழுத்தாளரும், நாவலாசிரியருமான பென் ஒக்ரி, பின் நவீனத்துவ எழுத்திலும், பின் காலனித்துவ கலாசாரத்தை எழுதுவதிலும் புகழ்பெற்றவர். இவரது தந்தை, சட்டக் கல்வியைப் பயில்வதற்காக லண்டன் சென்றபோது, தாயுடன் சிறு குழந்தையான இவரையும் எடுத்துச் சென்றார். எனவே தனது ஆரம்பக் கல்வியை லண்டனில் கற்றதோடு, ஒன்பது வருடங்களின் பின்னர் குடும்பத்தினரோடு நாட்டுக்குத் திரும்பி வந்தார்.
தனது 14 வயதிலிருந்து கவிதைகளை எழுதத் தொடங்கிய இவர், தொடர்ந்து சமூகம், அரசியல் சார்ந்த கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதி வந்தார். பின்னர் அரசாங்கத்தின் மோசடி குறித்து வெளிப்படையாக எழுதியதன் காரணமாக, கொல்லப்பட வேண்டியவர்களது பட்டியலில் இடம்பிடித்தார். அதனால் புலம் பெயர வேண்டி வந்ததோடு, 1970 களின் இறுதியில் இங்கிலாந்துக்குச் சென்று உயர் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு வீடற்றவராகவும், நாதியற்றவராகவும் அலைந்த காலத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார். இக் கால கட்டத்தைத்தான் தன் வாழ்வின் முக்கியமான காலகட்டம் என்று இப்போதும் குறிப்பிடுகிறார்.
இவர், ‘Flowers and Shadows’ எனும் தனது முதலாவது நாவலை இருபத்தோராம் வயதில் வெளியிட்டதைத் தொடர்ந்து West Africa எனும் இதழில் கவிதை ஆசிரியராகப் பணியாற்றியதோடு, BBC உலக சேவையிலும் தனது பங்களிப்பைச் செய்து வந்தார். இக் கால கட்டத்தில் நிறைய எழுதி வந்ததோடு, தொகுப்புக்களையும் வெளியிட்டார். 1991 ஆம் ஆண்டு ‘The Famished Road’ எனும் இவரது புனைவு நாவல் புக்கர் பரிசினை வென்றதும், சர்வதேச ரீதியில் அறியப்பட்டார். இன்று வரையும் பல நாவல், கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ள இவர், பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.
1 comment for “கோணல் பிரார்த்தனை”