வல்லினம் சிறுகதை சிறப்பிதழ்

தமிழில் சிறுகதைகள் ஆரம்பத்தில் இருந்தே உலகத்தரத்தை ஒட்டிப் பயணிக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கில நாவல்களைப் பார்த்து எழும் பிரமிப்பு, சிறுகதைகளைப் பார்த்து எழாததன் காரணம் நாம் தமிழில் அதற்கு இணையான பலவற்றைப் படித்ததன் காரணமாக இருக்கக்கூடும். இணைய இதழ்களில் சிறுகதைச் சிறப்பிதழ்கள், தமிழ் சிறுகதைகளுக்கு மேலும் ஒரு வலுவான நடைமேடையும், அதிக வாசகர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே, பொருள் செலவின்றி அதிவேகத்தில் சென்றடையும் குணாதிசயமும் கொண்டிருக்கின்றன. வல்லினம் சிறுகதை சிறப்பிதழ், ஆசிரியருக்கு நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அதன் சுவடு சிறிது கூடத் தெரியாமல் நன்றாக வந்திருப்பது இந்த இதழின் கூடுதல்சிறப்பு.

ஜெயமோகனின் எண்ணும் பொழுது கதையில் கலவிக்கு முந்தைய கணவன் மனைவி உரையாடல் பானைப்பாட்டுக்கதைக்குள் சென்று வருகிறது. பரசுராமனின் தாயார் ரேணுகா இப்படித்தான் நீரின் பிம்பத்தைப் பார்த்தாள். மோதிரம் நிறம் மாறுவதும் வாய்மொழிக்கதைகளில் வந்தது தான். இந்த இரண்டும் நடப்புக் கதைக்குள் எதற்காகக் கொண்டுவருகிறார் என யோசிக்க வைப்பது, நம்பிக்கை என்பது எதையும் எண்ணாமல் ஏற்றுக்கொள்வது என்ற மையஇழையில் கதை நகர்வது, ஒரு கதையில் ஆண்பார்வை வேறு பெண் பார்வை வேறு என்று சொல்வது, அடுத்து கூடலுக்கு முன் அவளது பேச்சையும் அதற்குப்பின் அவளது பேச்சையும் கவனியுங்கள். ஜெயமோகனின் கதைகள் புதிதாக எழுத வருபவருக்கு ஒரு கையேடு. இவரது மொழிநடையை காப்பி அடிப்பது எளிதல்ல, ஆனால், இவர் கதைகளில் செய்யும் யுத்திகளை ஆர்வமிருப்பவர் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். நல்ல கதைகள் ஒரே வாசிப்பில் தன்னை முழுதும் வாசகருக்குத் திறப்பதில்லை.

ஷோபா சக்தியின் யானைக்கதையும் கதைக்குள் கதை, அது சொல்லும் விசயமே முக்கியமானது. எல்லா இயக்கத்திலும் வெள்ளைச்சந்திரன் போன்றவர் தான் முன்னுக்கு வருவார்கள்.  அட்டைக்கத்தி வீரர்கள். ஜேம்ஸின் Strategic decisions குறித்து எந்த விளக்கமும் இல்லாதது இந்தக் கதையில் சிறப்பு. கதையின் முடிவு அதனாலேயே அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. யானையைப் பார்க்காது யானைக்கதை எழுதும் எழுத்தாளர்கள் எம்மிடையே நிறையவே இருக்கிறார்கள். ஷோபா சக்தியின் கதைகளில் புனைவுக்கும் நிஜசம்பவத்திற்கும் மெல்லிய இழைகூட இடைவெளி இல்லாது இரண்டும் ஒன்றே என்று மயங்க வைக்கும்.  தன் படைப்புகள் குறித்த பொதுவான கருத்தை எள்ளல் செய்கிறார். ஆமாம் அன்னம் போன்ற நடை என்கிறோம், அன்னத்தை எங்கே பார்த்தோம்! யானையை நினைவில் இருத்திவைக்க யானையைப் பார்த்திருக்க வேண்டியதில்லை தான்.

சு.வேணுகோபாலின் ஆறுதல் தாத்தா- பேரன் கதை. தாத்தாவும் பேரனும் வரும் கதைகளுக்கு ஒரு தனிக்கவர்ச்சி இருக்கிறது தக்கையின் மீது நான்கு கண்கள் கதை போல. சிறுவர்களின் உலகம் தனி. இதைக் கேட்கலாம் இதைக் கேட்கக்கூடாது என்ற நிலைமை தெரியாது. அதே போல் அம்மாவின் குற்றஉணர்வு அடிப்பதில் முடிவது. இந்தக்கதைக்கு அம்மா இரண்டாவது கல்யாணம் செய்தது குறித்த தகவல்கள் எதுவுமே தேவையில்லை. சம்பவங்களைச் சொல்லும் விதத்திலேயே அது தெரிந்து விடுகிறது. எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சொல்லும் தகவல்கள் கதைகளைப் பொருத்தவரை Extra luggage. வேணுகோபால் எப்போதும் அநாவசியமான விளக்கங்களை அவருடைய கதைகளில் அளிப்பதில்லை. அம்மாவின் குற்றஉணர்வை வாசகர் அவர்கள் வாசிப்பனுபவத்தின் மூலமாகவே தெரிந்து கொண்டால் கதையுடன் கூடுதல் நெருக்கம் கிடைக்கும்.

ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் நிசப்தத்தின் அருகில் ஒரு திரில்லர் கதை. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தமிழகத்தின் தென்கோடியில் நடக்கும் கதை. தமிழில் அசல் திரில்லர் கதைகள் வெகுகுறைவு. இது போல் நிறைய வரவேண்டும். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் நிறைய வாசகரை ஈர்க்கும். ‘போ’வின் சாயலில் நம் மண்ணின் கதை. அந்த மாளிகை குறித்த செய்திகளும், அமானுஷ்ய சூழ்நிலையை வரவழைக்கும் விவரனைகளும் கதையின் பலம். கடைசியில் கொலையாளியைக் கண்டுபிடித்து விட்டீர்கள் தானே!

அ.பாண்டியனின் தூமகேது அறிவியலும் Fantasyயும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் கதை. கதையில் சிறுவனுடைய உடல்ஊனம் ஒரு முக்கியமான விசயம். மற்ற சிறுவர்களுக்கு அந்த வயதில் இருக்கும் exposure அவனுக்கு இருக்க வாய்ப்பில்லை. இருந்திருந்தால் இந்தக் கதையே இல்லை. மலேயா போனாலும் மாமியார் மருமகள் சண்டை ஓய்வதில்லை. ஆமாம், வெற்றிலைக் கொடியை பிடுங்கினால் கால் எப்படி வளையும்? தாத்தா தான் இந்தக்கதையின் முக்கியமான கதாபாத்திரம். தாத்தா வாயைத் திறந்தால் பொய்தான், ஆனால் ஜப்பான்காரனைப் பற்றி அவர் சொன்னது உண்மையாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

லதாவின் தேக்காவில் ஒருபாலம் இருந்தது கதை ஒரு நாவலில் செய்ய வேண்டிய விசயத்தை சிறுகதையில் செய்திருக்கிறார் . சுதந்திரத்திற்கு முந்தைய INA காலத்து சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்க்கை திருத்தமாகப் பதிவாகியிருக்கிறது. இந்தியசுதந்திரத்திற்கு பிரிட்டிஷ் தோற்க வேண்டும். பிரிட்டிஷ் தோற்றால் சிங்கப்பூரில் ஜப்பான்காரனிடம் காலம் தள்ள வேண்டும். Catch 22 situation. இதில் வரும் அக்கா ஒரு சுவாரசியமான கதாபாத்திரம். நெடுநாளைக்கு நினைவில் இருப்பார். இந்தக் கதையின் இடங்கள், வரலாற்று நிகழ்வுகள், INA வில் ஆர்வத்துடன் சேர்ந்த பெண்களின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் எல்லாமே உண்மை, கதை மட்டும் கற்பனை. கதையின் கடைசி பாகம் கவிதை போல் விரிகிறது.

சண்முகசிவாவின் ஒரு அழகியின் கதையில் அவரது தனித்துவம் தெரிகிறது. இது ஓரு வித்தியாசமான கவுன்சிலிங். எந்த சிகிச்சையும் இல்லாத Confession போன்ற ஒன்று. அதற்காக நிபுணரைத் தேர்ந்தெடுத்தது தான் சுவாரசியமானது.  எந்தப் பெண்ணும் வாழ்ந்திரமுடியாத ஒரு வாழ்க்கை. நல்ல கதை. இந்தக்கதை எனக்கு ஒரு நாவலுக்காக எழுதப்பட்ட குறிப்புகள் போல் முதலில் தோன்றியது. உண்மையில் இது நாவலுக்கான Subject. இவர் கவனிக்க வேண்டியது எழுத்துப்பிழைகள். 

முடிவின்மையின் வடிவம் – சுரேஷ் பிரதீப்- இவருடைய பூனைகள் கதை போல் மீண்டும் ஒரு Dystopian story. இக்கதைகளுக்குத் தேவைப்படும் அழிவும், வன்முறையும் இந்தக் கதையில் வந்திருக்கிறது. கடைசிப்பத்தியில் ‘யூ டர்ன்’ எடுத்தது போல் கதையின் போக்கே மாறுகிறது. Pandemic ஒருவேளை அடுத்தடுத்த மோசமான கட்டங்களுக்குப் போயிருந்தால் இந்தக்கதையின் பல காட்சிகள் நிதர்சனமாகியிருக்கக் கூடும். இந்த Genreல் சிறப்பாக கதை எழுதும் வெகுசிலரில் சுரேஷ் பிரதீப்பும் ஒருவர்.

வள்ளலாரின் வாக்கு Litetalஆக மாறிவிடுகிறது, பாவம். சிவன் முதுகில் விழுந்த அடிபோல் சூட்டுக்கோல் இழுப்பு. ஒரே வீட்டில் தீவுகளாய் மூன்றுபேர் அவரவர் கற்பனை உலகத்தில். மூன்று பேருமே Fantasize செய்கிறார்கள். இருவரின் Fantacy ஒரு புள்ளியில் வந்து முடிகிறது. நீலப்படங்களின் Addiction ஐ மறைக்கவே அருட்பெருஞ்சோதி. இதில் பாண்டியன் அவனது வட்டத்தை விட்டு வராதவரை கனகதுர்காவும் வட்டத்திற்குள் வரப்போவதில்லை. சுனில் கிருஷ்ணனுக்கே உரித்தான நுட்பமான சித்தரிப்பு. மனம் செல்லும் பாதையில் உடல் செல்வதில்லை பாண்டியனுக்கு. உடல் வேண்டும் பாதையில் மனம் செல்வதில்லை கனகதுர்காவிற்கு.(பசித்திரு, விழித்திரு, தனித்திரு– சுனில் கிருஷ்ணன்)

அரவின் குமாரின் சிண்டாய்– சிண்டாய்லா பாடலே ஒரு Metaphor போல ஆனது. வித்தியாசமான கதை. கதையில் காமமே முக்கிய கதாபாத்திரம். மலேயக் குடும்பம் ஒன்றின் கதையை அப்படியே படம்பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார். சு.வேணுகோபாலின் கதையில் இரண்டாம் கணவன் காட்டும் அதே உணர்வுகள் இந்தக் கதையிலும் அப்படியே பிரதிபலிக்கிறது. மேலைநாடுகளில் Stepfatherஐ Biological fatherஐ விட அதிகமாக நேசிக்கும் சூழல் போல் கீழைநாடுகள் எதிலும் இல்லை. ஒரு இடைவெளியை இருவரில் ஒருவர் உருவாக்கிக் கொள்கின்றனர். புதிதாக எழுதும் எந்த அறிகுறியும் இவர் எழுத்தில் இல்லை. சின்னக்கதையில் மலேயசமூகம் நன்கு சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

ஸ்ரீகாந்தனின் நான்னா, ஒரு Nostalgic கதை. மூன்று தலைமுறை குடும்ப வரலாற்றை சிறுகதையில் சொல்வது எளிதல்ல. அப்பா நிறையப்பேருக்கு சிறுவயதில்Terror ஆக மாறிவிடுகிறார். வளர்ந்தபின் அவர்களால் நெருக்கம் கொள்ள முடிவதில்லை. ஆனால் கதைசொல்லி தாத்தா மாற்றுவழியில் குழந்தைகளை வளர்த்தும் அதே முடிவு தான். கலாச்சாரம் மாறுகையில் உறவுகளின் அலைவரிசையும் மாறுகிறது. மூத்த மருமகள் குறித்த சித்திரம் முற்றிலும் உண்மை. எது எப்படியானாலும் இவர் மறைவுக்குப்பின் படம் வைத்துக் கும்பிட யாரும் இருக்கப் போவதில்லை.

ம.நவீனின் ஞமலியில் நாய் தான் முக்கிய கதாபாத்திரம். நாய் வளர்ப்போருக்கும் நாய்க்கும் உள்ள உறவும், அக்கம்பக்கத்தினர் உணர்வும் எதிரெதிர் துருவங்கள். நாய் குரைப்பது கூட சிலரது ரத்த அழுத்தத்தை ஏற்றும். தடைசெய்யப்பட்ட வீட்டு வாசல் தான் போப்பிக்கு விலக்கப்பட்ட கனியின் மீதிருக்கும் விருப்பம். தனிமையும் முதுமையும் மனச்சமநிலையைக் குலைக்கவல்லவை. இதில் பேரன் இறந்த அநாவசியப்பழியும் கிழவர் மேல். தனிமை தகர்க்கப்பட்டு போப்பி அவர் வாழ்க்கைக்குள் ஒருநாளேனும் நுழைந்தது தான் அவரது திடீர் முடிவிற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும். ஒருபக்கம் நாயின் கதையும் இன்னொரு பக்கம் கிழவரின் கதையும் சேர்ந்து வருகிறது. மூத்திரம் போவதற்கு சத்தம் போடுவது கூட தனிமையில் இருந்து வெளியே வந்து சமூகத்துடன் தொடர்பு கொள்ளச் செய்யும் யத்தனங்களாக இருக்கக்கூடும்.

பென் ஒக்ரி கதை சொல்லும் முறை தனித்துவமாக இருக்கிறது. சிறுவனின் பார்வையில் பெரியவர் கதை. சித்தப்பா எல்லா ஆண்களையும் போல் Best of both the worldsஐ அனுபவிக்கப் பார்த்திருக்கிறார். நைஜீரியச் சமூகத்தில் பெண்களின் அவலநிலையும், பிள்ளைபெறும் இயந்திரங்களாக அவர்கள் கருதப்படுவதையும் பல ஆசிரியர்கள் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள். ரிஷானின் நல்ல மொழிபெயர்ப்பு.

வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழில் ஏற்கனவே சாதனைகள் செய்து புகழின் உச்சியில் இருக்கும் எழுத்தாளர்களின் கதைகளும் இருக்கின்றன. அதிகம் வெளியில் தெரியாத, அறிமுக/வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் கதைகளும் இருக்கின்றன. எல்லாக் கதைகளுக்கும் பொதுவான அம்சம் இவை சராசரித்தரத்தை மிஞ்சியவை. மொத்தத் தொகுப்பில் ஒருகதையும் சோடை போகாத தேர்வும் ஒரு சாதனை தான்.

இன்னொன்று இணைய இதழ்கள் அந்த மண்ணின் மணத்தை சுமந்து வருவது. அகழ் இதழ் ஈழமண்ணின் வாசனையை ஏந்திவருதல் போல், வல்லினம் மலேயமண்ணின் கலாச்சாரம், வாழ்க்கை போன்றவற்றைப் பதியும் கதைகளைக் கொண்டு வருகிறது. இது ஒரு நல்ல தொடக்கம். தமிழ் பல கலாச்சாரங்களை ஒன்றிணைக்கிறது.

அடுத்தது ஜெயமோகன், சு.வேணுகோபால் போன்றோர் தங்களது புதிய பங்களிப்புகளை இணைய இதழ்களுக்குத் தொடர்ந்து அளிப்பது. சுனில் கிருஷ்ணனின் புதிய சிறுகதைத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் இணைய இதழ்களில் வந்தவையே. இணைய இதழ்களில் வரும் கதைகளைப் புத்தகமாகப் போட்டால், யாரும் விலைக்கு வாங்க மாட்டார்கள் என்ற Mythஐ உடைத்ததில் பெரும்பங்கு ஜெயமோகனுக்கும், எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் இருக்கிறது.

கடைசியாக கதைகளின் தரம். பெரிய எழுத்தாளர்கள் எந்த பத்திரிகைக்கும் ஒரே மாதிரி தான் எழுதப்போகிறார்கள். ஆனால் முதலில் அச்சில் வரும் புத்தகங்களை விட இணைய இதழ்களில் வரும் கதைகளின் தரசதவிகிதம் அதிகமாக இருப்பதற்கு முழுபங்கு உழைப்பு இணைய இதழ்களின் ஆசிரியர் குழுவையே சார்ந்தது. ஒருவரோ, குழுவோ அவர்கள் மனதிற்கு ஒவ்வாதவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. வல்லினம் தொடர்ந்து பலசிறப்பிதழ்கள் கொண்டுவர வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...