நிசப்தத்தின் அருகில்

“அவள் ஒரு மோகினி!” என்று மெழுகு தாளில் மை தொட்டு எழுதியிருந்த கையெழுத்துப் பிரதியின் முதல் வரியைப் படித்த பின்னர்தான் ராவ் மனதுள் துணுக்குறல் பிறந்தது. அந்த பங்களாவின் மேல் தளத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஹென்றியின் அறையிலுள்ள தனிப்பட்ட நூலகத்தில் அந்த கையெழுத்துப் பிரதியினை அவர் தேடிக் கண்டடைந்திருந்தார். நீளமான தாள்களை இரண்டாக வெட்டி எழுதி, நூலினால் தைத்து கனத்த அட்டையால் போர்த்தி ஒட்டி புத்தகவடிவில் அமைக்கப்பட்டிருந்த ஹென்றியின் தனிக் குறிப்புகள் அவை. அந்த கனத்த அட்டையின் வெளியே சிறு காகிதத்தில் ஜே ஹென்றி என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.

அதன் முதல் வரியின் கவர்ச்சியே ராவை அதனுளிழுத்தது. ஆனால் அந்த அத்துவான காட்டின் நிசப்த தனிமையில் வாசித்தபோது எழுந்த எச்சரிக்கை உணர்வு அதனை வாசிப்பதிலிருந்து அவரை விலக்கியது.

மலைக்காட்டின் இரைச்சலில் யாருமற்ற அந்த தனிக் காட்டுப் பங்களாவில், மூன்று வருடங்களுக்கு முன்பு கோபால் ராவ் இப்போது இருக்கும் அதே அறையில்தான் ஹென்றி என்றழைக்கப்படும் லெப்.ஜேம்ஸ் ஹென்றி சந்தேகத்துக்குரிய வகையில் இறந்து கிடந்தார். முதலில் அது ஒரு தற்கொலை என்ற கோணத்திலேயே பார்க்கப்பட்டது. ஆனால் அவரது தற்கொலைக்கான எந்த வலுவான காரணமும் அப்போது யாருக்கும் கிடைக்கவில்லை. இந்த வழக்கை வழக்கம் போல் சில இனம் தெரியாதத் தொற்று நோயின் பெயரிலேயே எழுதி முடிக்க விரும்பினர்.

விஷயம் பிரிட்டன் ராணியின் மேசையைத் தொட்ட பின்னர் நிலைமை தலைகீழாகியது. இறந்தவர் பிரிட்டன் ராணிக்கு அணுக்கமானவர்களுள் ஒருவரென்பதால் ஹென்றியின் கொலை சந்தேகத்திற்கு உரியதென்றும் அது விசாரித்தே தீரவேண்டுமென்றும் மதராஸ் மாகாண கவர்னரிடமிருந்து திருநெல்வேலி கலெக்டருக்கும் அவரிடமிருந்து தென்காசி கலெக்டருக்கும் மாறி மாறி அழுத்தம் வந்து கொண்டேயிருந்தது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இறுதியாக பிரிட்டன் ராணி மதராஸ் மாகாணத்திற்கு கடைசி எச்சரிக்கை செய்ததன் பெயரில் சமாதியான ஒரு கொலையை தூசு தட்டி எடுத்தனர்.

இரத்தம் உரைய கிடந்த ஹென்றியின் சடலத்தைப் பார்த்து, இவர் இயற்கையாக மரணம் எய்தியிருக்கலாம் என்று முதலில் சொன்னவர் டாக்டர் பிரமோத் தான். அதுவும் ஒரு ஊகத்தின் பெயரில். தற்கொலைக்கோ, கொலைக்கோ எந்த தடயமும் அங்கே கிடைக்கவில்லை. வனவிலங்கோ, விஷப்பூச்சியோ, பாம்போ தீண்டியதற்கான எந்த அடையாளமும் அவரது உடம்பிலில்லை.

ஹென்றிக்கு எதிரான அரசியல் காரணங்களாக இருக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. அவரது வயது சாகக்கூடிய வயதிற்கு மிகவும் தொலைவிலிருந்தது. அவரின் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் குறிப்புகளும் தெளிவாக இருந்தன. ஆனால் அதனை மறுத்தே பிரமோத் தன் பக்க ஆய்வை எழுதியிருந்தார். அவர் ஏதாவது கண்டடையப்படாத நோயால் இறந்திருக்கலாம் என ஊகித்தார். அங்குள்ள மலை வாழ் மக்களிடம் விசாரித்த போது யூகங்கள் வேறு பக்கம் சென்றன. நாட்கள் நகர அங்கிருந்தவர்கள் ஹென்றியின் கொலைக்கான காரணத்தில் மேலும் அமானுஷ்யத்தை ஏற்றியிருந்தனர்.

“ரெத்தங் குடிச்சது யெசக்கியாக்கும். யசக்கிக்கா வெளங்க மாட்ட போறீக.”

“பொல்லா கண்ணுள்ள நீலியாக்கும் அவ”

“மோகினி…”

“காந்தாரி…”

“காலகர்ணி…”

வெவ்வேறு வகையில் அந்த கதை உருமாறி காற்றில் பரவத் தொடங்கியது. ஒவ்வொன்றும் சுடலைமாடன், சங்கிலி கருப்பு கதைப்போல் ஒரு தனிக் கதைப் பாடலாக வடிவம் கொண்டன. மக்களுக்கு ஒவ்வொரு மர்மத்திற்குப் பின்னாலும் ஒரு அமானுஷ்யம் தேவைப்படுகிறது. ஒவ்வொன்றையும் தங்கள் கற்பனையால் வளர்த்து வளர்த்து ரசிக்கப் பழகுகிறார்கள். மேலும் இவை கூட்டுக் கற்பனைகள் என்பதால் அதன் அசாத்தியமான எல்லை வரை சென்று நீண்டது.

இவையனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு நிலை எய்திய பின்னர்தான் ராவிடம் இவ்வழக்கு வந்து. கொலையா?, இயற்கை மரணமா? என்றறிய முடியாமல் எந்த பின்புலமோ, தடயமோ கிடைக்காமல் எல்லாம் முட்டி நின்ற நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து அதன் விசாரணையை அவர் தொடங்கினார்.

“மிஸ்டர் கோபால் ராவ், பிளீஸ் டேக் இன்சார்ஜ் ஆப் திஸ் கேஸ். ஹோப் யூ நோ த சிவியாரிட்டி” எனச் சொல்லி அவர் தோளைத் தட்டி, அது அவர் திறமைக்கான அங்கீகாரமென வால்ஷ் துரை எல்லோர் முன்னிலையிலும் சொன்னாலும் அதற்கான உண்மை காரணத்தை அங்கிருந்த ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர்.

மக்கள் அக்கொலையின் மேல் ஏற்றி வைத்த அச்சம் ஆங்கிலேயருக்கும் பரவியிருந்தது. மேலும் அவர்களுக்கு இந்திய நிலமே பேய்களின் நிலம். காசி விஸ்வநாதர் கோவிலிலுள்ள ஒவ்வொரு கற்சிலைகளும் அவர்களுக்கு அவ்வண்ணமே பொருள் கொண்டன. இப்பரந்த நிலத்தில் கடவுளென்ற ஒன்றை அவர்கள் கண்டதே அரிது.

துரை அவர்களும் அந்த கொலைக்கான காரணத்தை உள்ளூர நம்பி பயந்திருந்தார். கொலையாளி ஒரு அகால மரணமடைந்த பெண்ணின் ஆவியென மதராஸ் கவர்னர் வரைச் சொல்லப்பட்டது. அவள் மீதான பயம் அந்த கதையை அறிந்தவர்களின் ஒவ்வொரு முக ரேகையிலும் அப்பியிருந்தது. ஆனால் அதனை எப்படிக் குற்றப்பத்திரிகையில் எழுதி பிரிட்டன் அனுப்புவது என்று தெரியாமல் தவித்தனர்.

“ஜீஸஸ்!” என்ற பெரு மூச்சோடு கனத்த பெரிய கோப்புகளைத் துரை நீட்டினார். ஆக, பல காரணத்தால் ஒவ்வொரு கையாக மாறி ராவின் பொறுப்பில் இறுதியாக அவை வந்தமர்ந்தன. அவர் சென்று அந்த காட்டுப் பங்களாவில் தங்கிச் சோதனையிட்டு ஆறு மாதத்தில் கேஸை முடிக்கும்படியான இறுதி உத்தரவின் பெயரில் அங்கே அந்த பங்களாவிற்கு கிளம்பினார்.

மர்மமான ஒரு சாவு நிலத்தை அந்த கணத்திலேயே உறைய வைத்துவிடுகிறது. அதன் பின் அவை புழக்கமில்லாமல் மெல்ல தனித்து பழங்கதைகளாகிவிடுகின்றன. விசாரணைக்கு அவை தோதும் கூட. எந்த தடையமும் அழியாமல் அகலாமல் அங்கேயே இருக்கும்.

களக்காட்டிற்கும் சிங்கம்பட்டிக்கும் இடையேயான மலைக்காட்டுப் பகுதியில் மனித நடமாட்டம் அண்டாத தனித்த பங்களா. களக்காட்டை தாண்டிய சிறிது நேரத்திலேயே மண் சாலை முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு இருபுறமும் சந்தன மரம் அடர்ந்திருந்த சருகு புதரண்டிய சிறு ஒற்றையடிப் பாதை தான். தூரம் செல்லும் போதே பாதை மேலும் சுருங்கிக் கொண்டு வந்தது. இறுதியாகப் புல்லும், புதரும் அண்டிய வழியிலேயே ஜீப் சென்றது. அருகில் செல்லும் வரை அந்த பகுதியில் கட்டிடத்திற்கான எந்த தடயமும் தென்படவில்லை. பத்தடி தூரத்தை அடைந்த போது தான் அந்த அகன்ற பங்களாவை காண முடிந்தது. வீட்டின் முன்னரே ஒரு அடர்ந்த அரச மரம் கிளை விரித்துச் செழித்து நின்றிருந்தது. அதற்கு பின்னேயுள்ள பெரிய இரும்பு கதவைத் தாண்டி ராவ் உள்ளே சென்றார்.

ஆங்கிலேயருக்கே உரியப் பாணியில் அகலமான பெரிய கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாகப் பாவி அமைக்கப்பட்ட கற்கட்டிடம். கிட்டத்தட்ட முப்பது அறைகளுக்கு மேலுள்ள பிரமாண்ட வீடு. இதில் ஒத்தையில் ஒருவராக ஹென்றி தங்கியிருந்திருக்கிறார். இங்கு அசையும் கிளையின் சத்தமும், விலங்கின் ஒலியும் தவிர உதவிக்கு என்று பெயரளவில் கூட ஒருத்தர் இருக்கவில்லை.

ராவின் சமையலுக்கும், தேவைக்குமென சிங்கம்பட்டி மலைக் காட்டில் வாழும் சின்னய நாயக்கனும் அவனது மகள் சின்ன தாயும் வந்தனர், அதுவும் ராவின் பேரிலுள்ள தனிப்பட்ட மதிப்பின் காரணமாக. அவர்களும் மாலை அந்திக் கருக்களுக்குள் அங்கிருந்து கிளம்பிவிடுவார்கள் என்ற முன் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அதற்கு உடன்பட்டனர். முன்பு சின்னயனிடம் அந்த இடத்தைப் பற்றி பொதுவாக கேட்ட போது அவனும் அதையே சொன்னான், அந்த காட்டுப் பகுதியே வனமோகினியின் உலவிடமாக அவர்களெல்லோரும் நம்பி வந்தனர். ஹென்றி மிகவும் ஆசையாக அமைத்த இக்கட்டிடத்தால், அவளிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாலேயே அவரை அவள் கொன்றாள் என நம்பத் தலைப்பட்டனர்.

ராவ் பங்களாவினுள் நுழைந்த போதே தூசு போர்த்திய பொருட்கள் ஒவ்வொன்றாக கண்ணில் பட்டன. மேற்கத்திய பாணி கலைநயத்துடன் வரையப்பட்ட ஓவிய சட்டகத்தின் தொடர் முன் அறையின் சுவர் முழுவதும் நிறைந்திருந்தன. ராவ் ஒரு ஓவியத்தை துடைத்துவிட்டு பார்த்த போது அதனுள் நான்கைந்து நிர்வாணப் பெண்கள் ஒருவரடுத்து ஒருவராக வெவ்வேறு நிலையில் நின்றிருந்தனர், மற்றொன்றில் ஒரு பிச்சைக்காரன் கையில் கிட்டார் வைத்து வாசித்துக் கொண்டிருந்தான். மூன்றாவதில் இரண்டு, மூன்று மனித உருவங்களும் மிருக உருவங்களும் கலந்திருந்தன. ஒவ்வொன்றாக பார்த்து ஹென்றியின் மனவோட்டத்தை அறிய விரும்பினார் ராவ். ஆனால் அவையனைத்தும் அக்கால புகழ் பெற்ற மேற்கத்திய ஓவியங்களின் சாயலாக இருந்தனவே தவிர அதில் ஹென்றியின் மனநிலையைச் சுட்டும் எந்த தனிப்பட்ட ஓவியமும் தென்படவில்லை. உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்து வந்தார். பாதிக்கு மேல் காலியாகவே இருந்தன.

பெரும்பாலும் ஹென்றி தரைதளத்து அறைகளை உபயோகப்படுத்தவேயில்லை. மேலே முதல் தளத்தில் ஹென்றியின் தனியறை அமையப் பெற்றிருந்தது. அங்கு மரத்தாலான நீண்ட கட்டில் ஒரு மூலையிலும் அங்கிருந்து கதவு வரை இருபுறமும் புத்தக அலமாரியில் புத்தகங்கள் நிறைந்திருந்தன. அங்கு சென்ற உடனேயே ராவிற்கு உள்ளே செல்ல மனம் வரவில்லை.

கீழ் தளத்திற்கு சென்று தனக்காக கட்டிலிருந்த ஒரு அறையை சுத்தம் செய்து தயாரித்துக் கொண்டார். மண்டையைச் சுழற்றும் குழப்பம், வந்த பயணக் கலைப்பு என அனைத்தும் ஒரு சேர அறையில் நுழைந்தவுடன் ராவ் அந்த பஞ்சு மரக்கட்டிலில் சாய்ந்தார். நினைவிழந்தவன் போல் தூக்கத்தில் ஆழ்ந்த கணம், எங்கென்று அறியாத நிசப்த வனம், காரிருளை தன்னுள் பூசி அமிழ்ந்து ராவ் மட்டும் அங்கே நடந்து கொண்டிருந்தார். நடை அகல அகலப் பாதை விரிந்தது. பறந்து விரிந்த அதன் எல்லையிலிருந்த சுனையில் அவளமர்ந்திருந்தாள்.

முதல் பார்வையில் மங்கலாக தெரிந்த உருவம் நிலவின் உதவியில் தெளிந்து வந்தது. அவளைக் கண்ட நொடியே ராவ் நடை தளர்ந்து மெல்ல அவளிடம் தன்னிச்சையாகச் சென்றார். நெருங்கிச் செல்லும் போதே அந்த குளத்தில் இறங்கி நீராடினாள். தாமரை இதழ் விரிப்பது போல் மல்லாந்து கைகளை அசைத்துச் சென்று கொண்டிருந்தாள். அந்த விசும்பல் ராவின் காதை நிறைத்து நினைவைத் தட்டிய கணம் விழித்துக் கொண்டார். அதே நேரம் கனவில் அந்த சுனையின் அருகே சென்று அவள் பின்னால் நின்றிருந்தார்.

திடீர் விழிப்பும், கற்பனைக்கு அப்பாலுள்ள கனவும் ஒரு சேர தலையைப் பிடித்தது. சட்டை பாக்கெட்டினுள் கையை விட்டு மணியைப் பார்த்தார். இரண்டை தொட்டுக் கொண்டு நின்றது. அப்போது அந்த விசும்பலோசை மிகத் தெளிவாக கேட்டது. மயிலின் அகவலென்றே முதலில் எண்ணினார். இரை தேடி அழும் தனித்த செந்நாயின் குரல், பாதி ராவில் பாதையை மறந்த காட்டுப் பன்றியின் கதறல் சத்தமென ஒன்றின் பின் ஒன்றாக எழுந்தது, பின் அந்த அலை தெளிந்து பெண்ணின் அழுகையாக உயிர் பெற்றது.

விழித்த நொடியே தூக்கம் வந்து அவர் மண்டையை அறைந்தது. மீண்டும் அதே சுனையின் அருகில் இப்போது மிகவும் நெருக்கமாக அவளருகில் நின்றிருந்தார். பறந்து விரிந்த அந்த கூந்தல் நிலத்தை அலைந்தது. ஏனென்று தெரியாத ஒரு ஏக்கக் குரல் எழுந்து சுனையை நிறைத்தது. விண்மீன்கள் ஒவ்வொன்றாக தொட்டு தொட்டு கலைந்தன. வட்டவடிவிலிருந்த அந்த பெரிய விண்மீன் ஒவ்வொரு அலையாகத் தொட்டகன்றது. அலையகன்று விலகிச் செல்லும்தோறும் கேவல் சத்தம் நிறைத்துக் கொண்டே சென்றது. தெளிவில்லாத அவளின் முகம் சுனையின் ஓரத்தில் நிழலடித்து தெளிந்த போது எழுந்த அழுகுரல் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பியது.

இறுதியாக நினைவு வந்து மண்டையைத் தொட்ட போது, “கச்சராவு1, நல்ல கூத்து இங்கன வந்து ஏங் கெடக்கேக?” என்றான் சின்னயன். அப்போது தான் கவனித்தவர் போல் வாசல் திண்ணையிலிருந்து எழுந்தார்.

முன்னிரவு நடந்ததெல்லாம் ஒரு கனவு போல் தொடரில்லாமல் விரிந்தது. அவற்றுள் எது கனவு எது நிஜமென பிரித்தறிய இயலவில்லை. அவர் அங்கு வெளியே வரை நடந்து வந்ததும் அவருக்கு ஓர்மையில்லை. ஒன்றொன்றாக நினைவில் பிரித்து மீட்டிய வண்ணமிருந்தார்.

“கச்சராவே, வேண்டாம் அவ பொல்லா மோயினியாக்கும், அவ கூட்டியாந்தது ஒசரமாக்கும் ராவு இங்கன கெடக்கது. உங்க நல்லதுக்கு நா சொலுதேன். இங்கன இருப்பு செரியில்ல. கச்சராவு இத விட்டு திரும்பி போவணும்.” என்றான் முகம் பாராமல் தரையில் விழிகளை அழுத்திய படி.

“மோகினியா? ஏலெ நீ அத பாத்திருக்கியா?” என்றார் அவனை மிரட்டும் தொனியில். உண்மையில் அப்போது அந்த அதிகாரம் தன்னை தானே விடுவித்துக் கொள்ள அவருக்கு தேவைப்பட்டது.

“நாங் கண்டதில்ல ஆனா அவ இருப்பு நெசமாக்கும். சனங்க கண்டதொசரம் சொல்லுதேன், ஒரு தரம் நம்ம வைத்தியரு சுந்தரலிங்கம், வெட்டி வேறு பறிக்கதுக்காக இந்த வழியா வந்திருக்காக. திரும்பி போகும்போது ஆளு சுருதியே கொள்ளல எண்ணி பத்தாவது நாளு ஆளு கண்ணுல காங்காம பெய்ட்டாரு” என்றான் சின்னயன்.

சுந்தரம் பிள்ளையைப் பற்றி ராவும் அறிந்திருந்தார். அவர் பிறவியிலேயே நோய்வாய் பட்டவர். சொங்கிய உடல்வாகு, அவரிடம் ஏதோ ஒரு வாதையிருந்தது அதற்கான முறையான மருத்துவமும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அதனை இதோடு இணைத்து ஊர்க் கதையைக் கட்டியிருந்தது.

“முன்ன இங்க இருந்த தொர சாமி என்னானாருன்னு கொஞ்ச நெனச்சிப் பாக்கணும்” தொடர்ந்தான் சின்னயன். அவையனைத்தையும் அவனருகில் நின்ற அவன் மகள் பெரிய விழிகளை உருட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தார் ராவ். மாறாக அவள் அமைதியாக நின்றாள். கருநிலவின் மௌனமாக நின்ற அவள் மீது பார்வை சென்று, அத்தனை சந்தடியிலும் அவர் மனம் அவள் குரலுக்காக ஏங்கியது.

அவளிடம் செல்லும் பார்வையை யதார்த்தமாக்க, “இவளப் பாத்தா தான் மோகினிக் கணக்கா முழிச்சிட்டு கெடக்கா” என்றார் கண்களிரண்டும் அவள் மேல் அலைப்பாய.

சின்னயன் மீண்டும் ஏதோ பேசத் தொடங்கிய போது, அவனது தர்க்கத்திடம் உரையாட அவருக்கு மனமில்லை. அவர்கள் இருவரையும் உள்ளே செல்லும் படி கைகாட்டிவிட்டு திரும்பி நடந்த போது தான் அந்த குளத்தின் அருகே சென்றது நினைவிலெழுந்தது.

“ஏடே, இங்க குளமெதும் பக்கத்தில இருக்காடே?” என்றார் உள்ளறைக்குள் நடந்து கொண்டிருந்தவனை நோக்கி.

“இங்கண பக்கத்தில அப்படியெதுவும் இல்லைங்கலே. ஆத்துக்கு போனுனாக்க அந்தால செமீனை தாண்டி தான் போகணும்” என்றான்.

அவனை தவிர்த்து அங்கிருந்து நடந்தார். அவ்விரவின் நினைவுகளை மீண்டும் ஓடவிட்ட போது, அவற்றில் எது நிகழ்வு, எது கனவென அவரால் பிரித்தறிய முடியவில்லை. எல்லாம் தனித்தனி சரடாக எழுந்து நின்றது. விடிந்தும் விடியாத அந்த நேரத்தில் நேராகச் சென்று தென்காசியிலிருந்த பிரமோத்துக்கு ட்ரங் கால் செய்தார். அவர் குளித்து காலை உணவை முடித்து வரவும் பிரமோத்தின் இணைப்பு கிடைக்கவும் சரியாக இருந்தது. அவர் போனை எடுத்த பின் அம்பாசமுத்திரம் சென்று அங்கிருந்து பிரமோத்துக்கு இணைக்கப்பட்டது.

“பிரமோத் ஹியர்” என்றார் நிதானக் குரலில்.

“ராவ் பேசுதேன்” என அவரை அறிமுகம் செய்துக் கொண்டார். அந்த பங்களாவிற்கு வருவதற்கு முன்பாக அவரிடம் நேரில் சென்று இதனைப் பற்றிய விவரங்களை ராவ் கேட்டறிந்திருந்தார். பிரமோத்தும் சிந்தனைக்கு எட்டாத அந்த ஹென்றியின் வழக்கு இன்றளவும் தனக்கு அவிழ்க்கப்படாத ஒரு புதிரின் மர்மமாக இருப்பதைப் பற்றியும் அதற்கான மருத்துவக் காரணங்களை ஆராய்ந்துக் கொண்டிருப்பது பற்றியும் ராவிடம் முன்பு விவாதித்திருந்தார். அதனால் இரு பரஸ்பரம் உடன்பட்டு விஷயத்திற்குள் செல்ல எந்த இடைஞ்சலுமிருக்கவில்லை.

மங்கலாக நினைவிலிருந்த முன்னிரவின் அனுபவங்களை  கோர்வையில்லாமல் ராவ் சொன்னார். ஒவ்வொன்றாய் தொட்டெடுத்து மீட்டி அதனைச் சொல்லும் போதே கோர்வையாக்க முயற்சித்தார். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, “பாக்கெட்டில எப்பவுமே கெடிகாரத்த விச்சிருப்பீகளோ” என்றார் பிரமோத்.

எதற்கும் சம்பந்தமில்லாமல் எழுந்த கேள்வி அதுயென தோன்றிய கணமே ராவின் கை சட்டை பாக்கெட்டை சென்று தொட்டது, “இல்ல படுக்கும் போது பெட்டில வச்சிருவேன்” என்றார் ராவ்.

“இப்ப எங்கெ இருக்கு பாருங்கோ?” என்றார் பிரமோத். தேடிப் பார்த்த போது கடிகாரம் முந்தைய இரவு மரப்பெட்டியில் வைத்த இடத்தில் அதே மாதிரியே இருந்தது.

அவரிடம் ராவ் அதனைச் சொன்ன போது சிரித்தார். தன் குரலின் இயல்பிற்கு மீறிய சிரிப்பு.

சீண்டலான குரலில், “அப்போ நேத்து உங்க கனவுல வந்த பொண்ணு தான் ஹென்றிய கொன்னுருக்கும்னு சொல்றீங்க இல்லையா?” என்றார். ராவிடமிருந்து எந்த மறுமொழியும் வரவில்லை.

“மிஸ்டர். ராவ் அது நீங்க எல்லோர் சொல்றதையும் நம்ப ஆரம்பிச்சதால வந்த பிரச்சனை” என்றார் பிரமோத்.

“இல்ல நா அதே நம்பல” என்றார் ராவ். அப்போது கடிகாரம் பெட்டியிலிருந்தது ராவிற்கு ஒருவிதத்தில் நிம்மதியாகவே இருந்தது.

“செரி நீங்க நம்பல ஆனா ஒங்கன மனசு நம்ப ஆரம்பிச்சிருச்சி பாத்தீங்களா” என்றார்.

“இல்ல அது ஏதோ கனவு, செரியா புரியாம” என உதிரி உதிரியாக ராவிடமிருந்து மறுமொழி வந்தது. 

“பதட்டப்படாம நா சொல்லுகத கேளுங்க, மேக்கே உள்ள மருத்துவத்துல இத பத்தி நிறைய ஆராச்சி நடந்திருக்கு ஒரு முக்கியமான நோய் கூறு. ஜான் ஹக்லிங்ஸ் ஜாக்ஸன் இதை நம்ம நரம்புல ஏற்படுற பாதிப்புன்னு சொல்லுதாரு. சிக்மண்ட் பிராய்ட் இத இன்னும் தெளிவா சொல்லுதாரு. ’தி இண்டர்பிரிடேஷன் ஆஃப் டிரிம்ஸ்’ ன்னு புத்தகத்துல இத பத்தி தெளிவா எழுதிருக்காரு. நம்ம ஒவ்வொரு செயலுக்கும் உண்டான தர்க்க, அதர்க்க வடிவம்னு இரண்டு உண்டு. அதாவது நாம ஒரு செயல செஞ்சிருக்க மாட்டோம் அனா செஞ்ச மாறி நம்புவோம். அதே நம்ம அதர்க்க மனம் மட்டும் தான் அறிஞ்சிருக்கும், அதே மாறி ஒன்ன செஞ்சிருப்போம் ஆனா அது நம்ம நியாபகத்துலயே இருக்காது. இதே மாதிரி தான் கனவும். இன்னைக்கி நீங்க தூக்கத்துல நடந்து போன மாதிரி. ஒரு விஷயத்துல மனசு குழம்பி போயிருக்கும் போது, இல்ல ஒன்னையே தர்க்கமா நம்பும் போது இது நடக்கும். ஒங்களுக்கு புரியிற மாதிரி சொல்லுதேனே. ஒங்க தூக்கத்துல அழகான பொண்ணு ஒன்னு ஒங்க மேல படுத்திருக்கு நீங்க அவ முலைய தடவிட்டிருக்கும் போது திடீர்ன்னு விழிப்பு வந்து பாத்தா ஒங்க விந்து சிந்திருக்கும் பாருங்க. அது எப்படி நடந்துச்சி, நீங்க கனவு தானே கண்டீக. கனவு கூட மனசும், உடம்பும் புரியாத ஒரு தொடர் சரடு மூலமா தொடர்பு கொள்ளும் பாருங்க” என்றார். அவர் சொல்லவதை ராவ் தன் டைரிக் குறிப்பில் எழுதிய வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தார்.

பிரமோத் தொடர்ந்தார், “நேத்து நடந்ததும் எல்லார் சொல்றதும் நீங்க நம்பலன்றது எந்த அளவு உண்மையோ அதே அளவுக்கு உண்மை உங்க மனசு இத நம்பறது. அசாதாரணமான நிலையில தான் இது உண்டாகும். இந்த கேஸையே யோசிச்சு பாருங்க. உங்களுக்கு வேற வழியில்லாம முட்டி போய் நிக்கிறீங்க, நா கூட தான் ஆனா எனக்கு ஒரு தெளிவு இருக்கு. அதனால உங்க மனசே ஒரு பாவனைய உருவாக்கிகிது. எல்லாருக்கும் தெரிஞ்ச எல்லாரும் நம்புற ஒரு எளிய பாவனை அது. உங்க மனசு அதெ ஏத்துகிறதுக்கு எளிய வழியுங் கூட. அத கொஞ்சங் கொஞ்சமா நீங்களும் நம்பத் தொடங்குறீங்க. இன்னும் நாள் போனா நீங்களே இதுதான் உண்மைன்னு நம்பி நிறுவுவீங்க பாருங்க.” என்றார் சிறிய சிரிப்போடு.

ராவின் அமைதியைப் புரிந்துக் கொண்டவராக, “இது மெது மெதுவா வளரும். வளந்து ஒன்னொன்னா நீங்க எல்லாதையும் நம்ப ஆரம்பிப்பீங்க. அத தான் நோய் கூறுன்னு மொதல்ல சொன்னேன். ஹென்றிக்கு கூட அப்படி ஒன்னு நடந்திருக்க வாய்ப்பிருக்கு. எதுக்கும் என்ன வந்து ஒருக்க பாருங்க, அங்கன இருந்து கொஞ்சம் தள்ளியிருக்கது நல்லது. எதுனா கூப்பிடுங்க” என இணைப்பை துண்டித்தார் பிரமோத்.

ஹென்றியின் இறப்பிலிருந்து பதிவு செய்யப்பட்ட கோப்புகளை ஒவ்வொன்றாக வாசித்தார் ராவ். பின் அங்கு தனக்கு நிகழ்ந்தவற்றை, பின் பிரமோத் தன்னிடம் சொன்னவற்றை. எல்லாம் ஒரு தொடர் கன்னிப் போல் ஒன்றை ஒன்று இணைந்தும், அனைத்தும் ஒன்றாமல் தனிதனியாகவும் நின்றது. சுத்தி மூடியிருக்கும் மலைப்பாறையிலிருந்து வெளியே வர வழித்தேடாமல் மண்டையால் உடைப்பது போலத்தான் இது. ஒவ்வொன்றும் அவரை அதன் பிடியிலேயே நிலைத்துவைத்திருந்தது. அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்து கொண்டு புதிதாகத் தொடங்க எண்ணினார் ராவ். சிறிய தூக்கம் ஒன்று அவரை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டிருந்தது.

எழுந்து வெளிய வந்தபோது விடியல் மறைந்து இருட்டின் பொட்டுக்கள் ஆங்காங்கே தொட்டிருந்தது. சின்னயனும், சின்னதாயும் அவரிடம் விடைப் பெற்று சென்றபோது ராவின் கண்கள் சின்னதாயின் பின்புறத்தையே வெறித்திருந்தது. அதன் கடைசி பார்வை வரை மறைந்த பின் மீண்டு வந்தவராக ஹென்றியின் தனியறைக்கு சென்றார். அப்படித் தேடிக் கண்டுபிடித்ததுதான் அந்த புத்தகம். அங்கே நடந்த முதற்கட்ட விசாரணையிலேயே அந்த புத்தகத்தைப் பற்றி பதிவு செய்யப்பட்டிருந்தது ஆனால் அப்போது அதனை ஒரு முக்கிய குறிப்பாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.

“அவள் ஒரு மோகினி” அதன் முதல் வரியே ராவின் மண்டையில் ஓடியது. அதனை முதலில் பிரமோத்திடம் சொல்ல நினைத்து பின் வேண்டாம் ஹென்றிக்கு நோய்க் கூறு என்று புதிய சித்தாந்தத்தை அவர் உருவாக்கவும் வாய்ப்பிருக்கிறது என தவிர்த்தார். இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்தால் எதுவும் துப்புத் துலங்கலாம். ஆனால் அந்த முதல் வரி அவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்தது.

அதனை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று அதன் வெளிப்புற அட்டையையே பார்த்துக் கொண்டிருந்தார். திறந்து அந்த முதல் வரியை மட்டும் படித்தார். அதற்கு மேல் செல்ல கண்கள் தயங்கியது. அந்த புத்தகத்தை தன்னோடு வைத்து கொண்டே நாட்களைக் கடத்தினார். நாட்கள் நகர அதன் நினைவு அவருள்ளிருந்து அகன்றது. அதை இயல்பாக அவர் விரும்பினார். எதிலும் ஈடுபாடில்லாமல் அந்த காட்டையே சுற்றி வந்து கொண்டிருந்தார். அவருக்கு வரும் ஒவ்வொரு ட்ரங் காலையும் தவிர்த்தார். அது பிரமோத்தென்றே அவரது உள்மனம் சொல்லியது. பகல் முழுவதும் சின்னதாயின் இருப்பு அவருள்ளத்தை நிறைத்தது. அவளின் அருகாமையை அவர் விரும்பினார். மனதை அவள் பக்கம் கொண்டு செல்லும் தோறும் தன்னால் அனைத்திலிருந்தும் விடுபட்டு புதிதாக ஒரு வழியை யோசிக்கமுடியுமென நம்பினார்.

ஆனால் கண்கள் கொண்ட காமத்தை உடல் தொடுமளவிற்கு தைரியம் அவருள் எழவில்லை. இரவெல்லாம் கை போன போக்கில் வண்ணம் தீட்டினார். அவள் உருவத்தை வரைய எண்ணினார். பின் அதிலிருந்தும் விலகி, அதனை தன் பெட்டியினுள் வைத்து பூட்டினார்.

செயலற்று, சிந்தையற்று நித்திரையிலிருந்த அந்த இரவில் மீண்டும் அந்த அழுகுரலைக் கேட்டார். இப்போது மிகத் தெளிவாக மிகவும் அருகாமையில் விசும்பலற்ற தெளிவான அழுகை. அந்த அறையிலே அவர் அருகிலேயே ஒலிப்பது போன்ற பிரம்மை, பின் ஒவ்வொரு அறையாக விலகிச் சென்றது. சுற்றி வந்து மறுநாள் காலை வாசல் முற்றத்தில் கிடந்தார். தானாக எழுந்த போது கண்களில் தூக்கச் சோர்வு நிறைந்திருந்தது, ஒருவித எரிச்சல் அவருள் பரவியது.

நேராகச் சென்று தன் மேஜை மீதிருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். அவை தெளிவான பிரிட்டன் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு சுவாரஸ்யமற்ற நினைவுகளின் கோர்வை. ஷெல்லியின் கவிதை போல பல இடங்களில் புரியாமல் விழி பிதுங்க வைத்தது. ஒவ்வொரு பக்கமும் ஒரு கவிதை போல ஹென்றியின் நாட்குறிப்புகள் நீண்டு சென்றது.

ராவின் கனவைப் போலவே ஹென்றியின் கனவிலும் ஒரு குளம் வந்திருக்கிறது. அதில் ஒரு பெண்ணைக் கண்டிருக்கிறார். அதன் பின்பான அழுகை குரல் கேட்டதை அவரும் பதிவிட்டிருக்கிறார். அதுவே அவரை அவளுள் முழுதும் ஈர்த்திருக்கிறது. அதன்பின் நீண்ட நாட்களாகக் கேட்காத அழுகைக் குரலால் ஏமாற்றம் கொண்டு அவள் யாரெனத் தேடி அழைந்திருக்கிறார்.

இங்குள்ள கிராம மக்களிடம் அவளை பற்றி விசாரித்திருக்கிறார். முதலில் கேட்ட போது அங்குள்ளவர்களின் கண்கள் மாறுபடுவதை, “நீரினுள் வீசப்பட்ட கூழாங்கல் போல் அங்குள்ள ஒவ்வொரு விழிகளும் துள்ளித் துள்ளி அசைந்தது” எனத் தன் குறிப்பில் எழுதியிருந்தார்.

ஹென்றி அங்கெல்லாம் சுற்றி அழைந்து விசாரித்ததின் பெயரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்லியிருக்கின்றனர். “அவள் பெயர் பொம்மி” என்றும் முன்னால் உயிரோடு அங்கே அவள் புதைக்கப்பட்டாள் என்றும் அவர்கள் சொன்னதை, “தீஸ் இண்டியன்ஸ் ஆர் சோ வொயில்ஃட் ஆண்ட் புரூட்டல்” என்று அவர் ஆங்கில கூட்டெழுத்தில் எழுதியிருக்கிறார்.

அந்த புத்தகத்தின் இரண்டாம் பகுதியில், அவளைப் பற்றி அவர்கள் சொன்ன கதையைச் சுருக்கமாக அவர் கற்பனைக் கொண்டு எழுதியிருக்கிறார். ஆனால் இங்குள்ள சாதிய முறைமைகள் சடங்குகள் எல்லாம் அவருக்குப் புரியவில்லை. ஏன் காதலுக்காக ஒரு பெண் கொல்லப்பட்டாள் என்பது அவருக்குத் தெளிவாகப் புரியவில்லை. அவற்றை வெறும் பெயர்க் குறிப்பாகவே எழுதி வைத்திருக்கிறார். இப்படி பைரனின் நீள் கவிதை போல் அவை அவளைப் பற்றி வளர்ந்து கொண்டே சென்றது. ஆனால் அவற்றுள் ஒன்று மட்டும் தெளிவாக எல்லாப் பக்கங்களின் அடியிலுமிருந்தது. அவள் ஒரு தூய ஆவியென்றும் அவளின் அருகாமையை அவர் உணர்ந்ததாகவும், அவர் தினம் அவளுக்காக பிரார்த்தனை செய்ததாகவும் குறிப்பிருந்தது. அதனை அப்படியே ராவ் அறிக்கை குறிப்புகளுள் நிரப்பிக் கொண்டார்.

இதனை பிரமோத்திடம் சொன்ன போது, முதல்முறை வெளிபட்ட அதே சிரிப்பு சத்தம்தான் அவரிடமிருந்து பதிலாக வந்தது.

“ராவ், தனிமை என்பது அனைத்து அமானுஷ்யங்களுக்கும், கற்பனைகளுக்கு நம்மை நாம் ஆட்படுத்திக் கொள்ளும் எளிய வழி. நீங்க இத்தன நாள் என்ன செஞ்சீங்கன்னு யோசிச்சு பாருங்க, ஹென்றி அதனையே வேறுவிதத்தில் செய்திருக்கிறார். அங்கே அவருக்கு என்ன பொழுதுபோக்கு சொல்லுங்கோ, அந்த அத்துவான வனத்துல ஒக்காந்திட்டு அவரு இதெ விட்டா வேற என்ன செஞ்சிருக்க முடியும் சொல்லுங்கோ” என்றார்.

“ஆனால் அந்த அழுகுரல். அத நானும் கேட்டேனே. ஒன்னுக்கு ரெண்டு மட்டம் கேட்டேன்.” என்றார் ராவ்.

“அத தான் நான் அன்னைக்கே சொன்னேனே, ரெண்டும் ஒரே கேஸ் தான், ஒங்க மனசு செஞ்சுண்ட பாவனையது. லக்கீலி இரண்டு ஒத்துப் பொயிடுத்து பாருங்கோ” என்றார், அதே மலர்ந்த சிரிப்புடன்.

அவர் தொடர்ந்தார், “அப்போ ஒரு மோகினிதான். நீங்க சொன்னீங்களே பொம்மீ. அந்த மோகினி தான் அவள கொன்னுட்டதா நீங்க நம்புறீங்க இல்லயா?” என்றார்.

ராவ் மறுப்பதுபோல் தலையசைத்தார். அதற்கான எந்த ஆதாரமும் அந்த புத்தகக் குறிப்பில் இல்லை. ஒரு இருப்பை அவர் உணர்ந்ததை அல்லது உணர்ந்ததாகக் கற்பனை செய்து கொண்டதைத் தவிர வேறெதுவும் இல்லை. எல்லாம் முட்டி பழைய நிலைக்கே வந்து நின்றது.

“ஒரு வேலை அவர் தன் அதீத கற்பனையை வளர்த்து அதுவே அவர் இறப்புக்குக் காரணமாயிருக்கலாம் இல்லையா?” என்றார் பிரமோத்.

“இதெ பத்தி நாம் நிறையா பேசியாச்சு பாத்துக்கோங்கோ. நீங்க கொழப்பிக்காம அங்கெருந்து வெளிய வாங்கோ எதாச்சு சாக்குச் சொல்லி லீவ்ல கூட போங்கோ அது தான் உங்களுக்கு நல்லது. இதெ ஆராஞ்ச்சி நெறைய புத்தகம் கூட வந்திருச்சி” என்று இரண்டு, மூன்று புத்தகங்களை எடுத்து ராவிடம் நீட்டினார். எல்லாம் சிக்மண்ட பிராய்ட் மூளை மனம் மற்றும் அதன் இயங்கியல் சம்பந்தமான புத்தகங்கள்.

“செரி பாக்கறேன்” என்று அவரிடமிருந்து விடைப் பெற்றுக் கிளம்பினார் ராவ்.

தென்காசியிலிருந்து திரும்பும் போது, இதனை தானே ஒரு வகையாக ஜோடித்துக் கொண்டிருப்பதாக அவருக்கு பட்டது. அது அவரை நீர்த்தவளைப் போல் அதே குட்டையில் சென்று அமிழ்த்தியது. மூன்று மாதங்களாக உண்மையில் ஒன்றுமே அவர் செய்துவிடவில்லை. அதற்கு முன்னரும் அப்படிதான் இருந்தது. ஆனால் அப்போது வால்ஷ் துரைக்கு எந்த நெருக்கடியுமில்லை. இப்போது அவர் வேலைக்கே உலைவைத்துவிடும் நிலைக்குச் சென்றுவிட்டது. அவரின் கெடு நெருங்கத் தொடங்கியதும் ராவிற்கு அழுத்தத்தைக் கூட்டிவிட்டார். தினமும் தென்காசியிலிருந்து ஒரு ட்ரங் கால். ராவ் எடுக்காத நாட்களில் நேரில் சென்று பார்க்க ஆட்கள் வந்தனர்.

பிரமோத் சொன்னது போல் ஒரு வாரத்தில் யார் மீதாவது குற்றத்தைச் சுமத்தி இதனை முடித்துவிட வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார் ராவ். ஒரு வாரத்திற்குள் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவர் மனம் எல்லாக் கணக்கையும் கூட்டி கழித்து வந்த நிலையில் ஜீப் அந்த பங்களாவின் வாசலில் நின்றது. அதன் வாசல் படிகளில் கைகளிரண்டையும் கால் முட்டியில் அமர்த்தி கன்னத்தை அதன் மேலே வைத்து சின்னதாயி மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள்.

அவளருகே சென்று, “உங்க அப்பார எங்கட்டீ?” எனக் கேட்டார்.

கரும் முகத்தில் பாவிய வெள்ளை பற்களின் ஈறு தெரிய ராவைப் பார்த்துச் சிரித்து “அவக காட்டுக்கு பெயிருக்காக வந்திருவாக” என்றாள் எழுந்து ஒரு ஓரமாக நின்று கொண்டு.

இங்கு வந்த இத்தனை நாட்களில் முதல்முறையாக அவள் குரலைக் கேட்டதே அவருள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. வனப்பு மிக்க கருமையின் அழுகு பொருந்திய முகத்திற்கு ஏற்ற மென் குயிலின் குரல். அதே ஈறு தெரியச் சிரித்த வண்ணமிருந்தாள்.

அவளை உள்ளே அனுப்பிவிட்டு ராவ் சென்று தன் அறையில் அந்த புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ஹென்றியின் குறிப்புகளின் மேல் கண்கள் வரிவரியாக அலைபாய்ந்தது. வாசிக்கும் தோறும் அவருள் அந்த அழுகையின் குரல் கேட்பது போலவே இருந்தது. மனம் விம்மிக் கொண்டேயிருந்தது. அப்போது ஹென்றியின் புத்தகத்திலுள்ள சிறு குறிப்பு கீழே விழுந்தது. எடுப்பதற்காக இடதுபுறம் குனிந்த போது தான் அந்த நிழலின் அருகாமையை உணர்ந்தார்.

நிமிர்ந்து பார்த்த போது சின்னதாயி அங்கே நின்று கொண்டிருந்தாள். அமைதியாக அவள் இரு விழிகள் மட்டும் அவரை கூர் தீட்டி நோக்கிக் கொண்டிருந்தன. முகத்தில் மாறாத அதே சிரிப்பு. அவர் அந்த காகிதத்தை எடுக்க எழுந்த போது அவர் முன்னால் சென்று அந்த காகிதத்தை குனிந்து எடுத்தாள். அவள் உடலின் குலைவு குலுங்கிய கணம் அவருள் ஏதோ செய்தது. தன்னுள் விரைப்பதை அவர் உணர்ந்தார்.

அவள் அதனை எடுத்துக் கொண்டு, “கச்சராவு, அப்பாரு சொன்னது நெசமாக்கும். அவ இருப்பு இங்கன இருக்கு” என்றாள் அந்த கண்கள் விரித்தகல. அவளது பேச்சில் இப்போது ஒரு குழந்தைத்தனம் கூடியிருந்தது.

ராவ் “செரி” என்றார்.

“கச்சராவ் இங்கிருந்து போகணும், தாமதிக்காம இங்கிருந்து போகணும்” என்று மீண்டும் அதையே சொன்னாள்.

ராவ் சரி என்பது போல் தலையசைத்தார். அவள் மௌனமாக அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் அவரை நோக்கி நெருங்கி வருவது போல் பிரம்மை அவருள் ஏற்பட்டது. திரும்பிய போது அவள் அந்த மரக்கதவின் அருகில் முன்பு போல் நின்றிருந்தாள். அதே புன்னகை மாறா விழிகள். அப்போது தான் முதல் முறையாக அவள் அழகை கவனிப்பது போல் அவள் மேல் திரும்பிய அவர் கண்கள் ஓடி ஓடி மேலும் கீழும் இறங்கின. மூடப்படாது உயர்ந்து நீண்ட முலைக்கண்கள் இரண்டும் திரண்டு அவரை நோக்கி வா வா என்றது. காட்டுக்கே உரிய செழுமை நிறைந்த உடம்பு. அவள் பின்னால் சரியவிட்டிருந்த தன் நீள் முடியை இழுத்து இடப்பக்கமாக முன்னாலிட்டாள். அவள் முகம் அவரை வேண்டி சிரித்துக் கொண்டே இருந்தன.

கையிலிருந்த காகித்தை அவரிடம் நீட்டினாள் அதனை மேசையில் வைத்துவிட்டு எழப்போகும் போது அவ்வரியை வாசித்தார், “அந்த கணத்தில் அவள் ஒரு மோகினி” என்று ஆங்கிலத்திலிருந்தது.

பேனாவை எடுத்து பிரமோத்துக்காக தனிக் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டு, காமமே உருவென்று நின்ற அந்த வனமோகினியை நோக்கி அவர் கால்கள் தன்னிச்சையாக நடந்தன.

1.         கச்சராவு – நாயக்கர்

3 comments for “நிசப்தத்தின் அருகில்

  1. K.Param
    January 5, 2021 at 8:21 pm

    இந்தக் கதையை வாசித்தபின் இவரது பிற கதைகளையும் வாசித்தேன். இக்கதையே கவர்ந்தது.

  2. Kumar shanmugam
    January 10, 2021 at 12:50 pm

    வரலாற்றின் நிகழ்வு பின்புலத்தில் கதை நகர்வது,இன்னும் நெருக்கமாக உணர வைக்கின்றது.கொஞ்சமல்ல நன்றாகவே கதையோடு அது உருவாக்கும் திகில் பயம் உணர முடிந்தது.நல்ல கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *