தூமகேது

சுந்தரம் சைக்கிளை வேகமாக மிதித்தான்.  நான் பின்னால்,  ஒரே பக்கமாக இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். வலது  கையால் சுந்தரத்தின் தோளை இறுகப்பிடித்துக் கொண்டேன்.  மருத்துவமனை மேடு தெரிந்ததுமே தலையைச் சாய்த்து ஜப்பான் கல்லில்  சுருட்டுத்தாத்தா உட்கார்ந்திருக்கிறாரா என்று பார்த்தேன்.  அவர் எப்போதும் போல அங்கேதான் உட்கார்ந்திருந்தார். வாயில் துண்டு சுருட்டு நெருப்பு  இல்லாமல் துருத்திக்கொண்டிருந்தது. சட்டை போடாத அவர் உடலில் மாலை நேர சூரிய ஒளிபட்டு மினுமினுப்பாக நெளிந்தது.

 

சண்முகம் சார் சொன்ன தகவல்களை மனதில் சரிபார்த்துக்கொண்டேன். ஒரு வால் முளைத்த நட்சத்திரம் பற்றி தாத்தாவிடம் சொல்லி அவரை கலவரப்படுத்திப் பார்க்க ஆர்வமாக இருந்தது. 

சுந்தரம் சைக்கிளை ஜப்பான் கல் அருகே நிறுத்தினான். அவன் கவனம் எதிரில் விரிந்து கிடந்த திடலில் பந்தை உதைத்துக்கொண்டிருந்த குழுவின் மேல் குவிந்திருந்தது. ஆய்… ஊய்… என்று ஒரே இரைச்சலாக அவர்கள் திடலின் எல்லா திசையிலும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.  

நான் சைக்கிளில் இருந்து மெல்ல சாய்ந்து இடது காலை கீழே வைத்து வலது காலுக்குjg துணையாக ரோத்தான் கெளவையை வைத்துக் கொண்டு சாய்வாக நின்றேன். அவன் “சரிடா…” என்று மட்டும் சொல்லிவிட்டு விருட்டென சைக்கிளை மிதித்துக்கொண்டு திடலுக்கு விரைந்தான்.  

நான் சுருட்டுத் தாத்தா அமர்ந்திருந்த கல்லுக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு வட்டக்கல்லில் அமர்ந்துகொண்டு இரும்பு கம்பிகளால் இணைத்து நட்டுகள் பொருத்தப்பட்டிருந்த வலது காலை மெல்லத் தூக்கி நேராக வைத்துக்கொண்டேன். மூங்கில் கெளவையை பக்கத்தில் சாய்த்து வைத்தேன். பக்கத்தில் வளர்ந்திருந்த அத்திமரத்தின் நிழல் தரையில் படிந்திருந்தது. 

சுருட்டுத் தாத்தா வழக்கம்போல கண்களை இடுக்கி என்னைப் பார்த்தார்.  ஒரு பக்கமாக பட்ட வெய்யிலில் அவரின் நரைத்த புருவ முடி பளபளப்பாக மின்னியது.  தலைமுடி கலைந்து கிடந்தது.  பந்தைவிட சற்று பெரிதாக உருண்டிருந்த தன் வயிற்றைத் தடவிக்கொண்டு “வாடா இரும்பு மனுஷா” என்றார் புன்னகைத்தபடி. எனக்குத் தாத்தாவின் அந்த கேலி கோபமூட்டவில்லை. நான் ஒரே இளிப்பாக சிரித்து பல்லைக் காட்டிக்கொண்டு அமர்ந்தேன்.    “சாப்பிட்டியாடா…  அம்மா என்னா கறி வச்சா?”  என்று எப்போதும் கேட்கும் அதே கேள்வியைக் கேட்டுவிட்டு கம்மிய குரலை கனைத்து சரிபடுத்திக்கொண்டார்.

எனக்கு அன்றைக்கு வீட்டில் என்ன குழம்பு என்பது சட்டென்று மறந்து விட்டது. யோசித்து  “சாம்பார் கறி” என்று குத்துமதிப்பாகச் சொன்னேன். தாத்தா சுருட்டை மீண்டும் வாயில் திணித்துக்கொண்டு திடலில் ஓடும் சிறுவர்களைப் பார்த்தபடி இருந்தார்.  நானும் தாறுமாறான அந்த விளையாட்டைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். சுந்தரம் அதில் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பெரும் புயலில் சிக்கிய காகிதம் போல  ரப்பர் பந்து அவர்களிடையே சிதறிப் பறந்துகொண்டிருந்தது.  இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே விளையாட்டு வேகம் எடுக்கும். 

நான் அப்பா வேலை முடிந்து வரும் வரை அங்குதான் அமர்ந்திருப்பேன்;  விளையாட்டைப் பார்த்துக்கொண்டும் தாத்தாவுடன் பேசிக்கொண்டும். அப்பா ஸ்பீனிங் தொழிற்சாலையில் இருந்து மாலை ஆறு மணி வாக்கில் வருவார்.  அப்போது அப்பாவுடன் மீண்டும் சைக்கிள் கேரியரில் அமர்ந்துகொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுவேன்.  கடந்த ஆறு மாதங்களாக  அதாவது நாங்கள் அந்த கம்பத்து வீட்டுக்குக் குடிவந்தது முதல் இதுதான் வாடிக்கை. தாத்தா எப்போது வீட்டுக்குப் போவார் என்று நான் யோசித்ததில்லை. அவர் தனி ஆளாக அந்தப் பழைய அத்தாப்பு வீட்டில் இருக்கிறார் என்று அப்பா சொன்னார். அம்மாகூட சமயங்களில் டப்பாவில் சோறும் கறியும் வைத்து தாத்தாவுக்கு கொடுத்துவர அண்ணனை அனுப்புவார். அவருடைய வீடு  மருத்துவமனை செல்லும் பாதையில் இருந்தது.  வீட்டுக்கு முன்னே தாத்தா பயிர் செய்த பச்சைமிளகாய் செடிகள் வரிசையாக வளர்ந்திருக்கும். 

இங்கு அப்பா வீடு பார்த்து குடிவந்ததே பக்கத்தில் இருக்கும்  அந்த மருத்துவமனைக்காகத்தான். சீனர்கள் அதிகமாக அந்த கம்பத்தில் இருந்தனர். திடலுக்கு பக்கத்தில் செல்லும் மேட்டில் ஏறினால் குறுக்கு பாதையில் மருத்துவமனைக்கு போய்விடலாம்.  மருத்துவமனைக்கும் சின்னக் குன்றின் மேல் இருந்தது.  அது சற்றே நவீன வசதிகள் கொண்ட பழைய மருத்துவமனை.  பிறக்கும் போதே என் வலது கால் வளைந்து சிறுத்து இருந்தது ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை.  அப்பாபாட்டி ஏதேதோ காரணம் சொல்லி அம்மாவை ஏசிக்கொண்டிருப்பார். வெதுவெதுப்பான வடிகஞ்சிப் பானையில் என்னை உட்காரவைத்து, காலை உருவிவிட்டுக் குளிப்பாட்டும் போதெல்லாம்  அப்பாபாட்டியின் ஆத்திரமும் வசையும் வேகமாக அம்மா மேல் பாயும். ஒரு ராகத்தோடு அவர் அம்மாவை ஏசுவது வினோதமாக இருக்கும்.  நான் வயிற்றில் இருக்கும்போது அம்மா தோட்டத்தில் இருந்த வெற்றிலைக் கொடியை வேரோடு பிடுங்கி வீசிவிட்டதுகூட அப்பாபாட்டி சொல்லும் காரணங்களில் ஒன்றாக இருந்தது. வெற்றிலைக் கொடியைப் பிடுங்கினால் கால் எப்படி வளையும் என்று நான் அம்மாவிடம் ரகசியமாகக் கேட்டதுண்டு. அம்மா அதற்குப் பதிலே சொல்லவில்லை. 

என்னை அடிக்கடி சிகிச்சைக்கு அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. சில நேரங்களில் காலையிலும் சில நேரங்களில் மாலையிலும் டாக்டர்கள் வரச்சொல்வார்கள்.  அந்த மருத்துவமனையின் மருந்து வாசனை எனக்கு நன்கு பழக்கமாகி விட்டது. எனக்கு பிடித்த வாசனையாகவும் அந்த நெடி மாறிவிட்டிருந்தது.  அங்கிருந்த ஒரு டாக்டர் கூட எனக்கு தெரிந்தவராகி விட்டார். “தம்பி பயம் வேணாம்” என்று அவர் கஸ்டப்பட்டு தமிழில் சொல்லிவிட்டுச் சிரிப்பார்.  

வளைந்த என் காலை நேராக்க மருத்துவர்கள் என்னென்னவோ செய்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பெரியவன் ஆனதும் நடக்க வாய்ப்புள்ளது என்று சிலர் சொன்னார்கள்.  ஆனால்  பள்ளி செல்லும் வயது வந்த பின்னரும்கூட என் வலது கால் தனியாக ஆடிக் கொண்டுதான் இருந்தது. நான் என் இடது காலைப் பலமாக ஊன்றி,  குச்சியைப் பிடித்துக்கொண்டு தாவித் தாவி நகரப் பழகிக் கொண்டுவிட்டேன்.  அந்த கொஞ்ச வசதியுடனே நான் காலையில் இருந்து மாலைவரை வீட்டைச் சுற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில் என்னால் ஒரு இடத்தில் அமைதியாக இருக்க முடிந்ததே இல்லை.   

மருத்துவர்களும் தாதிகளும் சிகிச்சை செய்யும்போது நான் அம்மாவின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொள்வேன். “தம்பி வலிக்கிதா?  தம்பி வலிக்குதா?” என்று சில தாதிகள் கேட்பதுண்டு. நான் இல்லை என்று தலையாட்டுவேன். எனக்கு அப்போது வலி இருக்காது.  அழாமல் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருப்பேன். 

ஆனால், சில நாட்களில், இரவில் வளைந்த கால் வலி எடுக்கும். அது ஒருவிதமான குடைச்சலாக கெண்டங்காலில் தொடங்கி கால் முழுவதும் பரவும். அப்போது மட்டும் என்னால் அழாமல் இருக்க முடிந்ததில்லை. அம்மா தென்னைமரக்கொடித் தைலத்தை மண்ணெண்ணெய் விளக்கில் சூடு காட்டித்தேய்த்துவிடுவார். ஆற்றுமணலில் புறா எச்சத்தை கலந்து பெரிய கொய்யாப்பழம் போல துணியில் மூட்டைகட்டி வைத்திருப்பார்.  அந்த மூட்டையை சூடாக்கி கால் முழுக்க ஒத்தடம் கொடுப்பார்.   அந்த நேரத்தில் அம்மாவும் அழுவதை நான் கவனித்திருக்கிறேன்.  வெகுநேரம் முனகிக்கொண்டு இருந்துவிட்டு தூங்கிவிடுவேன். யாரோ சொன்னதால் அப்பா ஆட்டுக் கால் சூப்பும், பன்றிக் கால் சூப்பும் சம்பளம் போட்டதும் மறக்காமல் வாங்கிக்கொண்டு வருவார். கால் எலும்பு சூப் காலுக்கு பலம் கொடுக்குமாம்.  எனக்கோ,  கீற்றுக் கீற்றாக நறுக்கிய பன்றி இறைச்சி போட்ட மீசூப்பில்தான் ஆசை அதிகம். 

கடைசியில், சில அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு இரும்புக் கம்பிகளை தொடையில் இருந்து கணுக்கால் வரை  பொருத்தி காப்பு போன்ற பூட்டுகளை மருத்துவர்கள் போட்டுவிட்டனர். தொடையிலும் முட்டிக்குக் கீழும் நீண்ட வெட்டுகளும் தையல்களும் இருந்தன.  தையல்கள் பூராண்போல வரி வரியாக இருந்தன. முட்டியைச் சுற்றி ஸ்டோக்கின் போல ஓர் உறை இருந்தது.  கொஞ்சக் காலத்துக்கு நான் அந்த கம்பிகளுடனே இருக்க வேண்டும் என்று  பெரிய டாக்டர் சொல்லிவிட்டார்.  எனக்கு அது பெரிய தொல்லையாக இருந்தது. குறிப்பாக கழிவறை போகும்போது ஒரு பக்கமாக சாய்ந்து அமரவேண்டியிருந்தது. அதனால், மலம் சில நேரங்களில் காலில் பட்டுவிடும். பிறகு அப்பா நான் மலம் போக ஒரு வாலியில் மணல் போட்டு கொடுத்தார். அது கொஞ்சம் சிரமத்தைக் குறைத்தது.   

வீட்டில்,  சண்டை வந்தால், அண்ணனும் அக்காவும் என்னை ‘சிக்ஸ் மில்லியன் டாலர் மேன்’ என்று கிண்டல் செய்தனர். எனக்கு அது ஏனோ பெரிய அவமானமாக இருந்ததால் கத்தி ஆர்பாட்டம் செய்து அம்மாவின் கவனத்தைப் பெறுவேன்.  அம்மா ஆவேசமாக அண்ணனையும் அக்காவையும் விளாசுவதைக் கண்டு குஷியாகச் சிரித்துக்கொள்வேன். பின்னர்  “சிக்ஸ் மில்லியன் டாலர் மேன்” என்பது எல்லாருக்கும் பிடித்த படம் என்பதை தெரிந்து கொண்டபின்  அந்தச் சொல் எனக்கு மகிழ்ச்சியையே தந்தது.  அதை ஒரு பாராட்டுப்போல ஏற்றுக் கொண்டேன்.  நானும் அந்த இயந்திர மனிதன்போல மிக வேகமாக ஓடுவதாகக் கற்பனை செய்வது மிக மகிழ்ச்சியாக இருக்கும். 

நான் முதலாம் ஆண்டில் சேர வேண்டிய வயதில் பள்ளிக்கே போக முடியவில்லை. வீட்டிலும் மருத்துவமனையிலும் மாறி மாறி ஒரு வருட காலத்தை முடித்திருந்தேன். அம்மாவும் அண்ணனும் அ, ஆ, இ, ஈ சொல்லிக்கொடுத்து கொஞ்சம் வாசிக்க வைத்தனர்.  ஏ, பி சி டி யும் மனனமாகச் சொல்ல முடிந்தது.  அக்காவின் புத்தகத்தை எழுத்துக் கூட்டி வாசிக்க முடிந்தபோது மருத்துவமனையில் டாக்டர் கூடப் பாராட்டியது ஞாபகம் இருக்கிறது. காலில் இரும்புக் கம்பிகள் பொருத்திய பிறகு நேராக இரண்டாம் ஆண்டில்  சேர்ந்துவிட்டனர்.  வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கு  நானும்  அக்கா  அண்ணனுடன் போய்வர முடிந்தது.  அண்ணனின் சைக்கிளில் பின்னால் அமர்ந்து போய் வருவது வசதியாகத்தான் இருந்தது.  

தொடக்கத்தில் புதிய பள்ளிச் சீருடையும் பையுமாகப் பள்ளிக்கு போவது உற்சாகமாகவே இருந்தது. மருத்துவமனையில் கொடுத்த பெரிய காலணியை போட்டுக்கொண்டேன். பள்ளியில் ஆசிரியர் எனக்கு முன் வரிசையில் இடம்கொடுத்தார். ஆனாலும் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தவை எதுவும் எனக்குப் புரியவில்லை. குழப்பமாக அவர்கள் வாய் அசைவையே பார்த்துக்கொண்டிருப்பேன்.  என்னால் வேக வேகமாக எழுதவும் முடியவில்லை. எழுத்துக் கோணிக் கோணிப் பூச்சிகள்போல இருந்தன. ஆகவே நோட்டுப் புத்தகங்களின் பின்னால் ஏதாவது படங்கள் வரைவேன்.  இல்லையென்றால் மற்ற மாணவர்கள் பேசுவதையும் செய்வதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருப்பேன். வீட்டுக்குப் போகும்போது மட்டும்தான் அண்ணனுடனும் அக்காவுடனும் அதிகம் பேசுவேன்.  

பள்ளியில் இருக்கும் சொற்ப நேரத்தில் எனக்கு அறிவியல் பாடம்தான் அதிகம் பிடித்திருந்தது.  அதற்கான சரியான  காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும் அடிக்கடி மருத்துவமனை செல்லும் என்னை பலரும் ‘சிக்ஸ் மில்லியன் டாலர் மேன்’ என்று சொன்னதும்  ஒரு காரணமாக இருக்கலாம் என்று நானே யூகித்துக்கொண்டேன்.  

கடந்த வாரம் வகுப்பில் சண்முகம் சார், அவர்தான் எங்களின் அறிவியல் ஆசிரியர், ஒரு புதுத் தகவலைச் சொல்லி எங்களைப் பரபரப்பாக்கினார். அவர் எப்போதும் அப்படி ஏதாவது அதிசயச் செய்திகளைச் சொல்லி எங்களை பரபரப்பாக்குவார். ஒருமுறை ‘பறக்கும் தட்டுகள்’  என்ற ஒன்றைப் பற்றி மர்மப்படம்போல கதை சொல்லி நாங்கள் வாய்பிளந்து நிற்பதை ரசித்தார். அந்த வாரம் முழுவதும் பலரும் பறக்கும் தட்டைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.  சிலர் காகிதத்தில் ‘பறக்கும் தட்டுகள்’ செய்து வகுப்பு முழுவதும் பறக்கவிட்டனர். உணவு நேரத்தில் சேகர் காலிதுதட்டை வீசி எறிந்து “பறக்கும் தட்டு வந்திருச்சி” என்று கூச்சலிட்டதற்காக ஆசிரியரிடம் தண்டனை பெற்றதுடன் பறக்கும் தட்டுகளின் நடமாட்டம் நின்று போனது. 

இந்தமுறை   “ஆகாயத்தில் ஒரு பெரிய அதிசயம் நிகழப்போகிறது. அதுவும் இந்த பிப்ரவரி மாதம்” என்ற அவரின் பீடிகை எனக்குப் பல்வேறு கற்பனைகளை கொடுத்தது.  நிலா கீழே விழுந்துவிடுவது போலவோ, அல்லது சூரியன் அணைந்து விடுவது போலவோ பல மாதிரியாக யோசித்துக்கொண்டிருந்தேன்.  அல்லது ‘அல்ட்ரா மேனில்’ வருவது போன்ற வேற்றுக் கிரக அரக்கர்கள் வருவார்களோ என்ற பயமும் கிளம்பியது.  

“இந்த மாதம் ஒரு பெரிய வால்நட்சத்திரம் வானத்தில் பறக்கப் போகிறது. அதற்கு மிக நீண்ட வால் இருக்கும்….. எழுபத்தி ஐந்து வருடத்துக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிக்கொண்டு வரும் வால்நட்டத்திரம் அது”  என்ற அவரின் விளக்கம் எனக்கு ஓரளவுதான் புரிந்தது.  வானில் வால் உள்ள ஒரு நட்சத்திரம் பறக்கப்போகிறது என்பதாக  ஓரளவு புரிந்துகொண்டேன். 

சண்முகம் சாரே மேலும் விளக்கினார்…. ”நாம் அதை சாதாரணமாகவே  இந்த வாரம் வானத்தில் பார்க்கமுடியும்.  அதன் பெயர் ஹேலி” என்று அவர் சொன்னதும் நாங்கள்  முன் நாற்காலியில் அமர்ந்திருந்த ஹேலனைப் பார்த்துச்  சிரித்துக் விட்டோம்.  “ஹேலனுக்கு வால் மொளைச்சிடுச்சி” என்று யாரோ சொன்னதும், அவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். நாங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டிருந்தோம்.  

ஆயினும்,  பின்னர் எனக்கு ஹேலி வால் நட்சத்திரம் பற்றிய பரபரப்பு அதிகம் ஒட்டிக்கொண்டது.  தூங்கும் முன், ஹேலி  எப்படி இருக்கும் என்று பல மாதிரி கற்பனைச் செய்தபடி உறங்குவது பிடித்துபோனது. புத்தகங்களின் காலி பக்கங்களில்,   ஐந்து முனைகள் கொண்ட ஒரு நட்சத்திரம் வரைந்து அதற்கு பூனையின் வாலை வரைந்து வைத்தேன்.  அண்ணனிடமும் அக்காவிடமும் அதைப் பற்றியே தினமும் வியப்பாக பேசினேன். 

அண்ணன் “வால் நட்சத்திரம் ஆபத்தானதாம்…. அது பூமியை மோதி வெடிக்கப் போகுதாம். நாம எல்லாரும் செத்துடுவோம்” என்று  பயம் காட்டினான்.  ஆனால் எனக்கு சண்முகம் சார் “இதன் பிறகு 2061 வருஷம்தான் மறுபடி ஹெலி வால்நட்சத்திரம் வரும்” என்று கூறியது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. 2061-ஐ அடைய மிக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது யார் யார் எல்லாம் உயிருடன்  இருப்பார்கள் என்ற குழப்பமான ஆய்வை அக்கா செய்து சொல்லிக்கொண்டிருந்தார்.  “நாம எல்லாருமே செத்துப் போயிடுவோம்”  என்று அக்கா சொன்னதை நான் முழுமையாக நம்பவில்லை. அண்ணன் கணக்குப் போட்டு, ஹேலி மீண்டும் வரும்போது யாருக்கு என்ன வயதிருக்கும் என்று வியந்து வியந்து சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது நான் எப்படி இருப்பேன் என்று ஆழ்ந்து யோசித்தும் விடை கிடைக்கவில்லை.  வால்நட்சத்திரம் பற்றி,  சுருட்டுத் தாத்தாவிடம்  சொல்லிவிட வேண்டும் என்று தவிப்பாக இருந்தது.  

தாத்தாவிற்கு பல கதைகள் தெரிந்திருந்தது. சாமிக் கதைகள், சண்டைக் கதைகள், மிருகங்களின் கதைகள் என பலவித கதைகளை அறிந்தவராக தாத்தா இருந்தார். மாலை நேரத்தில் அவர் சில கதைகளைச் சொல்வார்.  “அப்படியா தாத்தா!, அப்படியா தாத்தா!” என்று கேட்டபடி நான் கதை கேட்பேன். அவ்வளவு சுவாரஸ்யமாக அவர் கதைகள் இருக்கும். ஜப்பான்காரன் கதைகளை அவர் பல சமயங்களில் சொல்லுவார்.  நாங்கள் எப்போதும்  அமரும் கற்கள் மூன்று துண்டுகளாக அடிமரத்தண்டுகள்போல இருக்கும். அந்த கற்களைப்  பற்றி ஒருமுறை கதை சொன்னார். 

“டேய் பையா இந்தக் கல்லு இருக்கே இங்கதாண்டா ஜப்பான்காரன் ஒக்காந்து நாட்டாம பன்னுவான்.  நான் அப்ப ரயில் சடக்குல வேலை செஞ்சேன். இந்தப் பக்கம் அடிக்கடி வருவேன். அப்படிப் பார்த்தது. ஜப்பான்காரன் எல்லாத்தையும் வரிசையா நிப்பாட்டி என்னமோ சொல்லுவான்… ஒன்னுமே புரியாது… கரா புரானு அதட்டுவான்.  பிறகு, தப்பு செஞ்சவன அந்த தெடலு இருக்கே அங்கன இழுத்துட்டுப் போயிடுவான்.  அப்ப அங்க  புளியமரங்க ரெண்டு இருந்துச்சி. அதுங்க கீழதான் தண்டன கொடுக்கிறது. அதுக்குனு நாலு பேர் இருப்பானுங்க… 

“ரோத்தான்ல அடிப்பாங்கலா தாத்தா?”  என்று அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டேன். 

“ரோத்தான்லையா… அதெல்லாம் உங்க ஸ்கூல்லடா… ஜப்பான்காரன்   தலைய வெட்டிப் போட்டுடுவான்.” 

எனக்கு நடுக்கமாக இருந்தது. “நீங்க பாத்திருக்கீங்களா தாத்தா?”

“எல்லாம் பார்த்து பழகிப்போனதுதான்…”

“அதனாலதான் இந்த கல்லுக்கு இப்பவும் ஜப்பான்காரன் கல்லுனு பேரு.  நாட்டவிட்டு ஓடுனப்ப எல்லாத்தையும் எடுத்துப் போனவனால இந்த மூனு கல்ல தூக்கிட்டு போகமுடியல பாத்தியா…. அதுங்க இங்கேயே கிடக்குதுங்க.  இப்ப நாம ஒக்காந்து ராஜாங்கம் பன்றோம்…” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கலகலவெனச் சிரித்தார்.  

இன்று வால் நட்சத்திரம் பற்றிச் சொன்னால் தாத்தா என்ன சொல்வார்… நிச்சயம் வியந்து போவார். அப்படி ஒன்றை அவர் பார்த்திருக்க மாட்டார்.  என்று நினைத்துக்கொண்டேன். 

சுருட்டுத் தாத்தாவிடம் சொன்னேன்…. “தாத்தா இந்த மாசம் ஹாலி வால்நட்சத்திரம் வருதாம்… சார் சொன்னார்.” 

அவர் என்ன என்பதுபோல என்னைப் பார்த்துவிட்டு வெள்ளைமுள் தாடையை தேய்த்துக்கொண்டார். 

நான் மீண்டும் சொன்னேன்… “தாத்தா இந்த வாரம் வானத்துல ஒரு பெரிய வால் முளைச்ச நட்சத்திரம் பறந்து போகுமாம்… எழுவத்தஞ்சி வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் அது வருமாம்… இதோட அது 2061ஆம் வருஷம்தான் பூமிக்குத் திரும்ப வருமாம்!” 

தாத்தா அமர்ந்தபடியே வேட்டியை தளர்த்தி இருக்கிக் கட்டிக் கொண்டார்.

அவரிடம் பெரிய ஆர்வம் எழாதது எனக்கு எரிச்சலாக  இருந்தது. 

“பூமி மேலே மோதினா அவ்ளோதான். பூமி வெடிச்சிடும்…”  நான் தாத்தாவின் கவனத்தை எப்படியாவது ஈர்க்க முயற்சி செய்தேன். 

தாத்தா என்னை உற்றுப் பார்த்துவிட்டு… “அதெல்லாம் மோதாது… அது பாட்டுக்கு போயிடும்,” என்றார்.

“ஏன்  மோதாது… அண்ணன் மோதிடும்னு சொன்னானே… பூமி வெட்டிசிடுமாம்!”

“வால் நட்சத்திரம்னா என்னன்னு நெனச்ச… அது பிரம்மா வீட்டு காவல் குதிரடா… அது யாரையும் சீண்டாது… அது பாட்டுக்கு அப்பன் வீட்டு தோட்டத்தை சுத்திட்டு திரும்பப் போயிடும்,” என்றார். 

நான் வரைந்த நட்சத்திரத்துக்கு பூனை வால் வைத்தது பிழை என்றும்… குதிரை வால் வரைந்திருக்க வேண்டுமோ என்றும் தோன்றியது.

“அது குதிரை மாதிரி இருக்குமா தாத்தா?  சார் பாறைக்கல்லுனு சொன்னாரே?” என்றேன்

 “உங்க வாத்தி வானம் ஏறி பார்த்தாராக்கும்…. அது குதிரைதாண்டா… இரும்பு மனுஷா,  ஆனா காலே இல்லாத குதிரை!”  என்றார் தாத்தா.

நான் அவரைக் குழப்பத்துடன் பார்த்தேன். கால் இல்லாத குதிரை இவ்வளவு பெரிய வானத்தில் ஓடுவது வியப்பாக இருந்தது.  

“உனக்கு வால் நட்சத்திரத்தோட கதை தெரியுமா…” என்று தாத்தா கேட்டதும் ஆர்வத்தோடு அவர் அருகில் நெருங்கி அமர்ந்துகொண்டேன். அவர் மேல் சுருட்டு நாற்றம் வீசியது. வியர்வை உலர்ந்து உடல் சில்லென்றிருந்தது.  திடலில் எழுந்து எழுந்து அடங்கிக்கொண்டிருந்த கூச்சல் எனக்குப் பொருட்டாகத் தெரியவில்லை.   

“பிரம்மா புழு பூச்சிய பூமியில படைக்கிறதுக்கு முன்னாடியே வால்நட்சத்திரத்தை படைச்சிட்டார். அதை  தூமகேதுன்னும் சொல்வாங்க. அதுதான் வால் நட்டத்திரத்துக்கெல்லாம் தலைவன்.  கொடிமாதிரி புகைவீசிக்கிட்டு போறதால அதுக்கு அந்தப் பெயர் வந்துச்சி. அதுக்குக் கால் இல்லாட்டியும் அதால ஆகாயம் பூரா போக முடியும். நீந்தி நீந்தி விலாங்கு மாதிரி போவ முடியும். ஆனா பிரம்மா அதுக்கு கழுத்தெலும்பு வைக்க மறந்துட்டாரு. அதனால,  காட்டுப் பன்றி மாதிரி ஒரே நேர் கோட்டுலதான் விருட்டுனு  அதால போக முடியும். அங்கின இங்கின திரும்ப முடியாது. ஒரு நாள் தூமகேதுக்கு ஆகாயத்தோட எல்லைக் கோட தொட்டுடனும்னு ஆசை வந்திடுச்சி. அது ஒடனே புறப்பட்டு முன்னோக்கி போனுச்சி.  அந்தப் பெரிய அண்டத்துல அது எங்கியோ ஆரம்பிச்சி முடிவே தெரியாம போய்கிட்டே இருந்துச்சி.  அண்டத்துக்கு முடிவு இருக்கா என்ன? ரொம்ப நீண்ட பயணம். ஆயிரக்கணக்கான வருஷமா பயணம் போயும் அதுக்கு ஆகாயத்தோட முடிவு தெரியாம அது சோர்ந்து போயிடுச்சி. ஆரம்பிச்ச இடத்துக்கும்  அதால போக முடியல….”

தாத்தா கதையை சட்டென்று நிறுத்தி விட்டு திடலைப் பார்த்தார். மாலை வெய்யில் வெகுவாக குறைந்து விட்டிருந்தது.  ஆனால் சிறுவர்களின் கும்மாளம் குறையவில்லை.  எனக்கு அப்பா வேலை முடிந்து வந்துவிடுவாரோ என்ற கவலை தொற்றிக்கொண்டது. தாத்தா இன்னும் கதையை முடிக்காமல் இருப்பது தவிப்பாக இருந்தது. நான் தாத்தாவின் கையைப் பற்றி இழுத்தேன். “அப்பறம் என்னாச்சு தாத்தா?” என்றேன். 

தாத்தா என்னைப் பார்த்து மெல்ல சிரித்தார்… என் தோளில் கைகளை வைத்துக் கொண்டார்

“அப்பறம் என்னாச்சினா… ஒருநாள் சிவன் ஆகாயத்துல நடந்து போய்கிட்டிருந்தார்.  அவர் வேக வேகமா\  சக்தியைப் பார்க்க போய்கிட்டிருந்தார். அப்ப அந்தப் பெரிய வால்நட்டத்திரம் அவர் போற பாதைக்கு நேரில வந்திட்டிருந்தது.  சிவன், தூமகேதைப் பார்த்து  “விலகிப் போ”ன்னு சத்தமாச் சொன்னார். ஆனா வால் நட்சத்திரத்துக்குதான் கழுத்து இல்லையே… அதால வளைய முடியல.  நேரா சிவனுக்கு எதிரா வேகமா வருது. சிவனுக்கு எக்கச்சக்கமா கோபம் வந்துடுச்சி. சிவனுக்கு கோபம் வந்தா என்ன செய்வார்…? நெத்திக்கண்ணால எரிச்சிபுடுவார்ல… . வால் நட்டத்திரத்துக்கு  பயம் வந்துடுச்சி… அதுக்கு என்ன செய்யிறதுனே தெரியல… கடைசியா ‘ஓ’ னு கத்தி அழ ஆரம்பிச்சிட்டது. 

நான் தாத்தாவின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன். தூமகேதுக்கு என்ன ஆகுமோ என்று பதற்றமாக இருந்தது.

“சிவனுக்கு தூமகேது அழறத பாத்ததும் பாவமா போச்சி… ஏன் அழறனு கேட்டப்பதான் வால்நட்சத்திரத்துக்கு கழுத்து இல்லைனு தெரிஞ்சது.   உடனே, கழுத்து  வளைஞ்சி ஓட முடியற வரத்தைத் தந்தார். அதோட ஆகாயத்தையும் சூரியனையும் வட்டமடிச்சி பாத்துக்குற பெரிய பொறுப்பையும் வால்நட்சத்திரத்துக்கு கொடுத்தார்.  அன்னில இருந்து அந்த தலைவனும் அவனோடு தலைமுறையும் ஆகாயத்தையும் சூரியனையும்  வட்டமடிச்சி பாத்துகிறாங்க. இப்ப சொன்னிய இந்த வால்நட்சத்திரமும் அதுங்களோட புள்ளதான்… பூமியை ஒன்னும் பன்னாம  பாத்துட்டு போயிடும்,” என்று சொல்லிவிட்டு தாத்தா மீண்டும் வேட்டியை சரிசெய்து கொண்டார்.  அவர் வேறு எதையோ தீவிரமாக யோசிப்பதுபோல முகம் இறுக்கமாக இருந்தது. 

சார் சொன்ன தகவல்கள் வேறுமாதிரி இருந்தாலும்,  எனக்குத் தாத்தா சொன்ன கதை பிடித்திருந்தது. ஆகாயத்தில் ஓடும் பலநூறு கால் இல்லாக் குதிரைகளை கற்பனை செய்தேன். ஹேலி பூமி மீது மோதாமல் போய்விடும் என்ற முடிவு பிடித்திருந்தது.  

“தாத்தா வானத்துல நாளைக்கு ஹேலி வால்நட்சத்திரம் பாருங்க. எல்லாரும் பாக்கலாமாம்… அழகா இருக்குமாம்… ” என்று நான்  உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தபோது அப்பா சைக்கிளில் வருவதைக் கவனித்தேன். 

தாத்தா வேகமாக சிரித்தார். கருப்பு பற்கள் இரண்டு தெரிந்தன. “இப்ப பாக்காட்டி என்ன? எழுவத்தஞ்சி வருஷம் கழிச்சுப் பாத்தா போச்சு…” என்று மீண்டும் பல் தெரிய சிரித்தார்”   

நான் “முடியுமா தாத்தா?” என்று அப்பாவியாகக் கேட்டேன்

 “இந்த காத்தவராயன் லேசுபட்டவன்னு நெனைச்சியா… எனக்கு சூச்சமம் தெரியுண்டா… தூமகேதுக்கு சிவன் வரம் கொடுத்த மாதிரினு வச்சிக்க.. பாக்குறது என்னா… நாளைக்கு ராவுல  அந்த குதிரையில  ஏறி ஆகாயத்தை ஒரு சுத்து சுத்தப் போறேன் பாரு” என்று சொல்லிவிட்டு மிக அழகாகச் சிரித்தார்.   

“ஆனா இது ரகசியம்….. பெரிய ரகசியம். யார் கிட்டையும் சொல்லக்கூடாது. திரும்ப குதிர வரும்போது  பூமியில வந்து குதிச்சிடுவேன்…” என்று சொல்லிவிட்டு என் தலைமுடியைக் கலைத்துவிட்டார். நான் கண்கள் விரிய அவரைப் பார்த்தபோது கண்களைச் சிமிட்டி “இதெல்லாம் பெரிய ரகசியம்டா பையா… யார் கிட்டையும் சொல்லிடாத. சூட்சமம் வேலை செய்யாது,” என்று காதில் கிசுகிசுத்தார்.  எனக்கு அவரின் குரல் கனவுக்குள் இருந்து கேட்பதுபோல் ஆழத்தில் கேட்டுத் திடுக்கிடச் செய்தது.  

அப்பா வழக்கம்போல தாத்தாவிடம் ரெண்டு வார்த்தை பேசிவிட்டு என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நகர்ந்தார்.  நான் தாத்தாவை பார்த்தபோது அவர்  சுருட்டைப் பற்றவைக்க தீவிரமாக முயன்றுகொண்டிருந்தார். காற்று அவரின் முயற்சிக்கு இடைஞ்சல் செய்துகொண்டிருந்தது.  அத்திமரத்தின் நிழல் முழுமையாக அவர்மேல் படிந்திருந்தது. 

நாங்கள் அந்த வாரம் முழுவதும் இரவில்  ஹேலி வால் நட்டத்திரத்தை பார்க்க வீட்டுக்கு வெளியே நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அண்ணனும் அக்காவும் இடும் கட்டளைகளுக்கு ஏற்ப முன் வாசலுக்கும் பின் வாசலுக்கும் நகர்ந்து ஹேலியைத் தேடிக் கொண்டிருந்தேன்.  கிழக்குத் திசையில்தான் ஹேலியின் பயணத்தைப் பார்க்கமுடியும் என்று  அண்ணன்  சொன்னான். கைகளை விரித்து திசைகளை முடிவு செய்து கிழக்குப் பக்கம் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தோம்.  சின்னதாக தோன்றி மறைந்த மின்னல்களை ‘அதோ அதோ அதான்..” என்று சொல்லி பின்னர் ஏமாந்தோம்.  ஆனால் வழக்கமாக  புள்ளி புள்ளியாக மினுங்கும் நட்சத்திரக் கூட்டங்களைக் கூட அந்த வாரம் பார்க்க முடியாதபடி அடர்மேகம் வானத்தை மறைத்துக்கொண்டிருந்தது. 

சில தினங்கள் கழித்து நான் மாலையில் சுந்தரத்துடன் திடலுக்குச் சென்றபோது சுருட்டுத்தாத்தா அங்கு இல்லை. நான் தனியாகவே அமர்ந்துவிட்டு அப்பாவுடன் வீட்டுக்குக் கவலையோடு வந்தேன்.  

சுந்தரம் “தாத்தா டவுனுக்குப் போய்விட்டார்,” என்றான்.  “தாத்தா அவர் உறவுக்காரர் வீட்டுக்குப் போய்விட்டார்,” என்று அம்மா சொன்னார். அண்ணன்கூட வேறு என்னவோ சொன்னான்.  

நான் வாயே திறக்கவில்லை. எழுபத்தைந்து வருடத்துக்கு கட்டிக்காக்க வேண்டிய ரகசியம் என்னிடம் இருந்தது. 

2 comments for “தூமகேது

  1. ஸ்ரீகாந்தன்
    January 6, 2021 at 12:07 pm

    மிகவும் சிலாகித்து படித்தேன். அப்பம்மா அம்மாவுக்குமான பனிப்போர், சுருட்டுத்தாத்தாவின் கற்பனை வலமிக்க புரட்டு, சொல்லும் செய்தியை அப்படியே நம்பிடும் இரும்பு மனிதனான – சிறார்களுக்கே உரிய – பேதைமை, சிக்ஸ் மில்லியன் டாலர் மேன், இரும்பு மனிதன், சுட்டுத்தாத்தா போன்ற பட்டப்பெயர்கள், அருமை.
    வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...