தேக்காவில் ஒரு பாலம் இருந்தது

இந்தப் பொழுதில் இங்கே தனியாகநிற்கிறோம். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்து நரம்புகள் வெலவெலத்தன. உய்யென்று காற்று சத்தத்ததோடு கடந்து செல்லவும் பயந்து கண்களை மூடிக்கொண்டேன். அக்காவும் நானும் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் கேம்பிலிருந்து தப்பித்து வந்திருந்தோம். எங்களைப் பார்த்த இடத்தில் ஐஎன்ஏகாரர்கள் சுட்டுவிடலாம். ஜப்பான்காரன் கழுத்தை வெட்டி இந்த தேக்கா பாலத்தில் கண்காட்சி வைப்பான். “ஐஞ்சாம் படைக்கு சூத்தாம்பட்டையிலும் கண்ணிருக்கு,” என்று காலையில் என்னை எச்சரித்துவிட்டு, இப்போது நட்டநடு வீதியில் அக்கா மார்ச்சிங் வந்தததை நினைக்க பொல்லாத கோபம் வந்தது.

நாங்கள் பதுங்கியிருந்த பெருமாள் ரோடு சந்து வீட்டிலிருந்து அணிவகுப்பில் நடப்பதுபோல கையை நேராகத் தூக்கி, இறக்கி, ஒவ்வோர் அடிக்கும் காலை நீட்டி மடக்கி வைத்து நடந்து அக்கா நடந்து வந்ததை யாராவது பார்த்திருந்தால்…

திரும்பவும் உய்யென்று காதுக்குள் சத்தமிட்டபடி காற்று வேகமாக கடந்து சென்றபோது கண்ணைத் திறந்தேன். மேலும் கீழும் கம்பியில் கோக்கப்பட்ட முகாமின் சன்னல் திரை காற்றில் படபடப்பதுபோல தேக்கா பாலத்தின் விளிம்பு ஓரமாக நின்றுகொண்டிருந்த அக்காவின் புடவை  மழைக் காற்றுக்கு படபடத்துக்கொண்டிருந்தது. கொடிக்கம்பத்தில் பறக்கும் ஐஎன்ஏ கொடிபோல செருகப்படாத முந்தானை தோளிலிருந்து விரிந்து பறந்துகொண்டிருந்தது. கொஞ்சம் வளர்ந்துவிட்டிருந்த அக்காவின்  தலைமுடி நாலா பக்கமும் அலைந்து முகத்தை மறைத்தது. மாரியம்மன் கோயில் தேர்க் கயிறுபோல அத்தனை முடி அக்காவுக்கு. கேம்பில் ஒருநாள் காய் வெட்டும் பெரிய கத்தியால் அவரே வெட்டிவிட்டார். அவர் முகத்தை கொஞ்சநாள் என்னால் பார்க்கவே முடியவில்லை. அக்கா பாலத்தின் நடுவில் நின்றிருந்தார். தடுமாறி விழுந்து விடுவோரோ என்ற பதற்றத்தோடு, அவருக்கு ஒரு பத்தடி தள்ளி பாலத்தின் முனையில் நான் நின்றுகொண்டிருந்தேன். அப்படி அக்கா விழுந்தால் என்ன செய்ய வேண்டும் எனக் குழப்பமாக இருந்தது. அவர் அருகில் செல்லவும் பயமாக இருந்தது.

பாலத்துக்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த ரோச்சோர் ஆற்றில் பெரும்பாலும் தண்ணீர் நிறைந்து சலசலவென்று ஓசையுடன் ஓடும். மழை பெய்தால், அல்லது கடல்நீர் மட்டம் அதிகரித்தால் தண்ணீர் இன்னும் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில்  சிராங்கத்தின் சாலைகளில்  வெள்ளம் வந்துவிடும். அப்போது ஆறு ததும்பி ஓடும். அப்போதெல்லாம் படகில்தான் பள்ளிக்கூடத்துக்குப் போவோம். பல நாட்கள் நாங்கள் அப்புசாமியின் படகில் போயிருக்கிறோம். “உன்னோட உடைஞ்ச படகில வர்றதுக்கு நீதான் எங்களுக்கு காசு கொடுக்கனும்,” என்று அக்கா எப்போதும் அவரோடு சண்ட போடும். “வாயாடிப் பிள்ளைகங்கள முதலக்கு தூக்கி போட்டுடுவேன் சாக்கிரத” என்று அப்புசாமி மிரட்டுவார். நாங்கள் ஒரு தடவைகூட முதலையை இந்த ஆற்றில் பார்த்ததில்லை. சப்ப மூக்கன் அதுகளையும் பிடித்துத் தின்றிருப்பான். ஆனால் ரோச்சோர் ஆற்றில் அப்புசாமிபோல யாராலும் படகை நெளித்து வளைத்து ஓட்ட முடியாது. இது ஒரு கால்வாய்தான். என்றாலும் அந்தக் காலத்திலிருந்து  ஆறு என்றுதான் சொல்லிப் பழக்கம்.  

அன்றைக்கும் ஆறு  வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. காற்று வீசியபோதெல்லாம், வட்டவட்டமான சிறு அலைகள் இரவுக் காட்டின் மின்மினிப் பூச்சிகள்போல பளிச்பளிச்சென்று மினுக்கி மினுக்கி மறைந்துகொண்டிருந்தன. ஆற்றுநீர், நாங்கள் கிளம்பிய அன்று இருந்த காட்டு வானம் போல கட்டக்கருப்பாய் ஓடிக்கொண்டிருந்தது. கரையோரங்களில் மழையினால் அங்கங்கு தண்ணீரில் சரிந்து கிடந்த நாணல் புதர்களில் குப்பைகள் சேர்ந்து அந்த இரவில் குட்டி குட்டித் தீவுகள்போல் தெரிந்தன. ஒரு வாரமாக அப்படி ஒரு மழை. அந்த இரவுதான் வானம் கொஞ்சம் மூடியிருந்தது. ஆனாலும் காற்றில் குளிர் இருந்தது. எலும்புக்குள் நுழையும் ஊசிக்குளிர். வெடவெடத்தது.

எந்தப் பக்கம் பார்த்தாலும் இருட்டாகவே இருந்தது. சாலை விளக்கும் எரியவில்லை. விளக்குக்காரன் சாயந்திரம் ஏற்றாமல் இருந்திருக்க முடியாது. நெளிவெடுத்தால் சப்பான்காரன் குச்சியாலேயே நெம்பி சுளுக்கெடுப்பான். பேய்க்காற்றில் வானமே கவிழ்ந்து கிடக்கிறது. இந்தத் துக்குணூன்டு கூண்டு விளக்கு எப்படித்தாங்கும்… வீடுகளிலும் வெளிச்சம் இல்லை. யாராவது வருகிறார்களா என்றும் தெரியவில்லை. ரோந்து வரும் கட்டையன் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற நினைக்கும்போதெல்லாம் முள்ளந்தண்டு சில்லிட்டது. இந்த ஜப்பான்காரன் கொல்லைப்புறமாக வந்து நாட்டைப் பிடிப்பதற்கு முன்னாடி சிராங்கம் இப்படி செத்த பாம்புபோல சவுத்துக்கிடாக்காது. வேலையாட்கள் இரவு வேளைகளில் இங்கே உட்கார்ந்து கள் குடித்துக்கொண்டிருப்பார்கள். அடிக்கடி சண்டை நடக்கும். ராத்திரியில் நாங்கள் வெளியில் வரவேமாட்டோம்.

மழைக்கு போத்தப்பட்டிருந்த சாக்குகளுடன் கண்டாங் கர்பாவ் பசார் பக்கமாக நிறுத்தப்பட்டிருந்த ரிக்‌ஷா வண்டிகளை இங்கிருந்து பார்க்க, பூதங்கள் வரிசையாக குந்தி இருப்பதைப்போல இருந்தது. அச்சம் காணும் அனைத்திலும் பட்டு வேறொன்றாகப் பிரதிபலித்தது. பாசாரிலிருந்த கோழிகள் படபடப்போடு கீச்சிட்டன. எதிர் தெருவில் பண்ணையிலிருந்து மாடுகளின் கதறின. கட்டையன்தான் புகுந்திருப்பான். அவனுக்குத்தான் கேள்விமுறையே கிடையாதே. யாராவது பார்ப்பதற்குள் இங்கிருந்து போய்விடவேண்டுமென மனது பரபரத்தது. சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்த நான், பாலத்தில் நின்றிருந்த அக்கா, கீழே தண்ணீரை எட்டிப் பார்க்கவும் பதறிவிட்டேன். “அக்கா!” என்று கத்தினேன். சத்தம் வெளியே வரவில்லை. கால்கள் தன்னாலேயே ஆடி. நகர மறுத்தன. நின்ற இடத்திலேயே நின்றேன்.

***

எங்கள் படை ஜோகூருக்குக் கிளம்பத் தயாரானதும் நாங்கள் பாடாங்கிலிருந்து அணிவகுத்து இந்த தேக்கா பாலத்தில்தான் வந்து நின்றோம். நான்கு தெருக்களின் சந்திப்பு முனையம் இந்த ஆறும் பாலமும். ஆற்றுக்கு இந்தப் பக்கம் சிராங்கூன் ரோடு அந்தப் பக்கம்  சிலிகி ரோடு, ஆற்றோடு நேராக மேற்கில் புக்கிட் தீமா ரோடு, எதிர்திசையில் ரோச்சர் ரோடு. பக்கம் பக்கமாக இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தனி ஊர்தான். ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் வேறு வேறு வியாபாரங்கள் செய்பவர்களும், பொதுமக்களும் எல்லாரும் வந்து நின்று எங்களை வழியனுப்பினார்கள். சில சீனத் தலைகளைக்கூட நான் பார்த்தேன்.

வழி நெடுகிலும் மக்கள் வரிசையாக நின்று தைப்பூசத்தில் காவடி பார்ப்பதுபோல அணிவகுப்பை வேடிக்கை பார்த்தார்கள். இந்தியர்கள் ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த் என்று ஆரவாரம் செய்து எங்களுக்கு உற்சாகம் கொடுத்தார்கள். இந்தப் பாலத்தைச் சுற்றிலும் இந்தியக் கொடி பறப்பது போலவும், ரோச்சர் ஆற்றில் சந்திரபோசுடன் நாங்கள் எல்லாரும் படகுகளில் பாடியபடி வெற்றி உலா வருவதுபோலவும் அப்போது எழுந்த நினைவுகள் சுகமானது.

“நாம இன்னிக்கு இங்கேயிருந்து கிளம்புறோம்,” என்று அக்கா சொன்னபோது, எங்கள் படை ஜோகூர் கிளம்புவதைப் பற்றிச் சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். “எப்போதும்போல சாதாரணமா இரு, ஒன்னோட பெரிய கண்ண முழிச்சி முழுச்சி காட்டிக்கொடுத்திடாத” என்றதும்தான் புரிந்தது. ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு கேப்டன்களின் வழக்கமான நடவடிக்கை திட்டங்களுக்கான கூட்டத்தில் என் பக்கத்தில் வந்து நின்ற அக்கா என்னைப் பார்க்கமாலே, “ஒரு மணிக்கு பிறகு பூன மூனு முறை கத்தும். துப்பாக்கியை எடுத்துகிட்டு கக்கூஸ் பக்கம் வா. நாலாவது முறை கத்திச்சின்னா, வெளியவே வராதே,” என்றார். அதன் பிறகு பிரார்த்தனை கூட்டத்திலிருந்து கிளம்பும்போது, “புடவயைக் கட்டிக்கிட்டு அதுமேல பேண்ட், சட்டையைப் போட்டுக்க. சாக்கிரதை. ஏன் பேண்ட், சட்டையோட படுக்கிறேன்னு யாரும் கேக்க மாட்டாங்க, அப்படிக் கேட்டாலும் எதுவும் பதில் சொல்லாத. பேசாம படுத்திரு,” என்றார்.

நான் வந்ததும் அக்கா கேம்பின் பின் வாசல் பக்கம் நடந்தார். அங்கு இரண்டு பேர் காவலுக்கு நின்றார்கள். ஒருவரிடம் அக்கா இந்தியில் ஏதோ ரகசியம் பேசினார். பிறகு என்னைத் திரும்பிப் பார்க்காமலே முன்னால் நடந்தார். நானும் நடப்பதா என்று யோசித்துக்கொண்டே அவர் பின்னால் நடந்தேன். நீளத் துப்பாக்கியை கையில் ஏந்தியபடி இரண்டு தெருக்களைத் தாண்டி மெதுவாகவே நடந்தார். அது அக்காவே செய்த பெரிய மரத் துப்பாக்கி. கேம்பில்  ஒரு கொஞ்ச நேரம் கிடைத்தாலும் அக்காதுப்பாக்கி செய்யத் தொடங்கிவிடுவார்.  நீளமான விறகு அல்லது மரக்கொம்புகள் கிடைத்தால் அதை கத்தியால் சீவி, துப்பாக்கி வடிவத்துக்குச் செதுக்குவார். கேம்பைக் கூட்டிப் பெருக்கும்போது கிடைக்கும் இரும்புக் கம்பிகள், ஸ்பிரிங்குகளைச் சேர்த்து லிவர் செய்வார். அதை ரப்பர் அல்லது கம்பியால் மரத்தோடு இணைத்து துப்பாக்கியாக்கி விடுவார். பொடி கல், இரும்புத் துண்டு என்று அதில் போட்டு குறிபார்த்துச் சுடலாம். நாலைந்து துப்பாக்கிகள் செய்திருப்பார். இது அக்காவுக்கு பிடித்த துப்பாக்கி. எப்போதும் தன்னோடே வைத்திருப்பார். “நம்ப அப்பா, மாமா  போல நமக்கு இது ஒரு பாதுகாப்பு” என்று அடிக்கடி சொல்வார்.கேம்பில் எங்களை யாரும் பெரிதாகக் கவனிக்க மாட்டார்கள். அதனால் அக்கா துப்பாக்கியை யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஜாலான் புசார் பக்கம் வந்ததும், சட்டையையும் பேண்டையும் கழற்றி, இரண்டு துப்பாக்கிகளையும் அதில் சுருட்டிக்கொண்டார். இதனால் சுட முடியுமோ தெரியாது. ஆனால் ஓங்கி அடித்தால் பட்ட இடம் எத்தனை கெட்டியாக இருந்தாலும் உடைந்துவிடும். நரசிம்ம பெருமாள் கோயில் வாசலுக்கு வந்தபோது, கமுகு மரத்திலிருந்து ஓலை விழுந்தது. உடனே அதில் துப்பாக்கி மூட்டையை சுருட்டி, பேண்ட், சட்டை எதுவும் வெளியில் தெரியாதபடிக்குக் கட்டினார். புல்லுக்கட்டுபோல அதை தலைக்கு மேலே வைத்துக்கொண்டு நடந்த அக்காவை நினைத்தால் இந்த பயத்திலும் சிரிப்பு வருகிறது.

நாங்கள் வந்த இடத்தை வீடு என்று சொல்லமுடியாது. ஓட்டு வீட்டை ஒட்டியிருந்த பலகைத் தடுப்பு. நாலு பேர் நிற்கலாம். இரண்டு பேர் படுக்கலாம். அதில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டை அக்கா ஒரே இழுப்பில் உடைத்துவிட்டார். இருட்டில் ஏதோ ஓடியது தெரிந்தது. பாம்பா, பல்லி என்று தெரியவில்லை. “படு, விடிந்ததும் யோசிப்போம்,” என்று துப்பாக்கி மூட்டையில் ஒரு ஓரத்தை என் பக்கமாக நீட்டி, மற்ற ஓரத்தில் அவர் தலையை வைத்துப் படுத்துவிட்டார்.

“இந்த இடம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” நான் வாய்க்குள்ளேயே கேட்டது அக்கா காதில் விழுந்துவிட்டது. அக்காவுக்கு பூச்சிக் காது.

“என் வீட்டுக்காரர கேளு, சொல்லுவாரு. ஊரு மேயறவளுக்கு தெரியாத ஒழுங்கையான்னு”.

இரண்டு நாள் கழித்து, மாலை நேரத்தில் அக்கா வீட்டுக்காரரும் என் அப்பாவும் நாங்கள் இருந்த இடத்துக்கு வந்தார்கள். அக்கா யாரிடம் எப்போது எப்படி சேதி சொல்லி அனுப்பினார் என்று புதிராக இருந்தது. நாங்கள், எங்கள் வீட்டுக்குப் போகவில்லை. ரோவல் ரோடிலிருந்த அக்கா வீட்டுக்காரர் தெரிந்தவர் ஒருவரின் வீட்டுக்கு வந்தோம். அங்கே அக்கா தங்கினார். நான் எதிரிலிருந்த ஒரு பாட்டியின் வீட்டில் தங்கினேன். ராத்திரி பாட்டி கொடுத்த அவித்த கம்புக்கிழங்கை பார்த்தபோது, கேம்பின் சுண்ணாம்பு அரிசிச் சோறு நினைவுக்கு வந்தது. கேம்பை பற்றியே சிந்தித்துக்கொண்டு தூங்கிவிட்டேன். துப்பாக்கியைப் பிடித்தபடி நாங்கள் காட்டுக்குள் பதுங்கிப் பதுங்கி நடக்கிறோம். கொத்திப் பிடுங்கிய பூச்சிகளையும் அட்டைகளையும் தடித்த பெரிய கொசுக்களையும் சமாளித்து  இரவு முழுக்க, மரங்களையும் கொடிகளையும் தாண்டித் தாண்டி நடந்துகொண்டே இருந்தோம். யானை, பாம்பு, குரங்கு என்று மிருகங்கள் வருகின்றன. நாங்கள் பயப்படாமல், சேத்துக்குள் கால் புதைய நடக்கிறோம். இம்பால் எல்லைக்கு வந்துவிட்டீர்கள். சண்டைக்குத் தயாராகுங்கள் என்கிறார் சந்திரபோஸ். துப்பாக்கியைத் தூக்க கையை அசைத்தபோது விழிப்பு வந்தது. பக்கத்தில் படுத்திருந்த அக்காவைக் காணோம்.  தூக்கம் முழுதாக கலைந்துபோக, எழுந்து வெளியில் வந்தபோதுதான், அக்கா நடப்பதைப் பார்த்தேன். அவருக்குப் பின்னால் வந்தேன். அப்படிதான் இத்தனை காலமும் நடந்திருக்கிறேன்.

அக்காவுக்கு 18 வயது இருக்கும், எனக்கு 16. அக்காவுக்கு கல்யாணமாகி இருந்தது. ரேஸ் கோர்ஸ் ரோட்டில் ஒரு பேப்பர் கடை இருக்கும். அங்கு பத்திரிகைகளோடு, வெத்திலை, பாக்கு, புகையிலை, பலகாரங்கள் போன்ற சில்லறைப் பொருட்களையும் விற்பார்கள். அங்குதான் அக்கா வீட்டுக்காரர் வேலை பார்த்தார். அதன் அருகில் தமிழர்களின் சங்கம் ஒன்று இருக்கும். மாலை நேரங்களில் அங்கு பலர் இலவச பேப்பர், புத்தகங்கள் படிக்கவும் ஊர் சேதிகளைத் தெரிந்துகொள்ளவும் கூடுவார்கள். அக்கா வீட்டுக்காரர் அங்கு வருபவர்களுக்கு ஆங்கிலம், கணித வகுப்புகளை நடத்துவார். அவர் எச்எஸ்ஸி படித்தவர். எப்போதும் எதையாவது வாசித்துக்கொண்டே இருப்பார். அவர்தான் பேப்பர்களில் வரும் ஊர் சேதிகளை எல்லாருக்கும் சொல்வார். வானொலியில் ஆங்கில ஒலிபரப்புகளில் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தமிழில் விளக்குவார். மாலை நேரங்களில் அங்கு எப்போதும் கூட்டங்கள் நடக்கும். பெரும்பாலும் அக்கா வீட்டுக்காரர்தான் பேசுவார். அன்றைய பேச்சில், மறுநாள் நேதாஜி சந்திரபோஸ் பாடாங்கில் பேசப் போவதாக அவர் சொன்னார். பிரிட்டிஷாருடன் சண்டை போட்டு இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தர அவர் பெரிய படையைத் திரட்டப்போவதாகவும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டால் நாம் இங்கு கஷ்டப்பட வேண்டியதில்லை, எல்லோரும் ஊருக்குத் திரும்பிப் போய்விடலாம் என்றும்  உணர்ச்சிபொங்கப் பேசுவார்.

நாங்கள் அவர் பேசியதைக் கேட்கவில்லை. அவர் அக்காவை சங்கத்துக்கு கூட்டிக்கொண்டு போகமாட்டார். நானும் போவதில்லை. பக்கத்து வீட்டுத் தம்பிதான் எங்களுக்குச் சேதி சொன்னான்.

மறுநாள் சந்திரபோஸ் கூட்டத்துக்கு நானும் அக்காவும் போனோம். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அன்று ஜூலை தேதி 9. 1943வது வருஷம்.  இந்த கோடியிலிருந்து கடற்கரை வரையிலும் கூட்டம். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று பாடாங் நிறைந்து வழிந்தது.  எங்கு பார்த்தாலும் தலைகள். நிற்கக்கூட இடமில்லை. இங்கு வாழும் அத்தனை இந்தியர்களும் திரண்டு வந்திருந்தார்கள். சந்திரபோஸ் அமைதியான குரலில், கம்பீரமாகப் பேசினார். அவர் ஆங்கிலத்தில்தான் பேசினார். ஆனால், அவர் குரலில் இருந்த உறுதியும் தெளிவும் திடமும் என்னவோ செய்தது. யாரும் அசையாமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்றார்கள். அவர் பேசுவதை ஒருவர் தமிழில் உணர்ச்சி பொங்க உரத்த குரலில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். ஆனால் எங்கள் காதுகளும் கண்களும் நேதாஜியிடமே இருந்தது. அவர் பேசுவதைக் கேட்கக் கேட்க எங்களுக்கு உரு வந்ததுபோல் ஆகிவிட்டது. அப்போது அவர் சொன்னார், “நீங்கள் ரத்தம் கொடுங்கள் நான் சுதந்திரத்தை தருகிறேன்.” அவர் சொல்லி முடித்ததும் எல்லாரும் ‘ஜெய் ஹிந்த்’என்று உரத்த குரலில் கோஷம் எழுப்பினார்கள். நானும் அக்காவும்  ‘ஜெய் ஹிந்த்’ என்று  தொண்டை வலிக்குமளவுக்கு கோஷம் போட்டோம்.

உடல் வலுவுள்ள அத்தனை இந்தியர்களும் இந்திய தேசிய படையில் சேர வேண்டும் என்ற அவர், பெண்களும் வாளெடுத்துப் போர் புரியவேண்டும் என்று சொன்னபோது, அதுவரையில்  கைதட்டிக்கொண்டு இருந்த பலரும் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். பலரது மெல்லிய முணுமுணுப்பு பெரும் சலசலப்பாகி, போஸ் பேசுவதை கேட்க முடியாமல் இருந்தது.

நாங்கள் அங்கிருந்து கிளம்பியபோது, படை திரட்ட எல்லாரும் நகை, காசு என்று கையில் இருந்ததையெல்லாம் சந்திரபோஸிடம் கொடுப்பதைப் பார்த்தோம். அக்காவும் கையில் கிடந்த ஒற்றை வளையலையும் காதுத் தோட்டையும் கழற்றிக் கொடுத்தார். நான்  என்னிடமிருந்த ஒரே தங்கமான தோற்றைக் கழற்றிக் கொடுத்தேன்.

வீட்டுக்கு போனதும் அக்கா வீட்டுக்காரர் அக்காவோடு பேசவே இல்லை. முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தார். நாங்கள் கூட்டத்துக்கு போனதா அல்லது நகைகளைக் கழற்றிக் கொடுத்ததா எதற்கு கோபம் என்று தெரியவில்லை. அக்கா ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.  தன்பாட்டில் வேலைகளைப் பார்க்கத்தொடங்கிவிட்டார். அக்கா வீட்டுக்காரர் கோபமாக இருந்தால் அவர்கள் வீடு ரொம்ப அமைதியாக இருக்கும். அப்போது நாங்கள் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இருந்த கடை வீடு ஒன்றில் குடியிருந்தோம். அந்தமாதிரி கடை வீடுகள் குறுகலாக, நீட்டமாக இருக்கும். அறை அறையாக பலகையால் தடுத்திருப்பார்கள். ஒவ்வொரு அறையிலும் ஒரு குடும்பம் குடியிருக்கும். கொஞ்சம் சத்தமாகப் பேசினாலும் பக்கத்து அறைக்குக் கேட்கும். அக்காவில் குரல் வெளியில் கேட்கவேகேட்காது. பின்னால் இருந்த  குசினியில்தான் எல்லாரும் சமைப்பார்கள். அங்கு குடியிருந்தவர்கள் பெரும்பாலும் காலிகள். ஆண்கள் புழங்கும்போது பெண்கள் அங்கு போகமுடியாது. அதனால் அவர்கள் வேலை முடிந்து வருவதற்கு முன்னரே அக்கா சமைத்து எடுத்து வந்துவிடுவார்.

அக்கா சாப்பாடு எடுத்து வைத்தார். கட்டக்கிழங்கும் கருவாட்டுக் குழம்பும்.  அக்கா வீட்டுக்காரர் முதலில் சாப்பாடு வேண்டாமென்றார். நல்லநாளிலேயே அவருக்கு மரவள்ளிக்கிழங்கு உள்ளே இறங்காது. கருவாட்டுக் குழம்பென்றால் அவர் எதையும் சாப்பிடுவார். அக்கா எடுத்துப்போட்டு சாப்பிடத் தொடங்கியதும், வாசனை மூக்கில் ஏற, தானே போட்டு சாப்பிட்டுட்டு வெளியில் போய்விட்டார். அக்கா எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. நாங்கள் அக்காவின் அறைக்கு எதிரிலிருந்த அறையில்தான் குடியிருந்தோம். எங்க வீட்டில் எட்டுப் பேர்.

பின்புறத்தில்தான் குளிக்கும் இடமும் கக்கூசும் இருக்கும். கக்கூசுக்குப் போனபோது அக்காவை எட்டிப் பார்த்து என்ன நடந்தது என்று கேட்டேன். அது எதுவுமே நடக்காததுபோல், தைத்துக்கொண்டிருந்த தையல் வேலையைக் காட்டி “நல்லாருக்காடி” என்றார். நான் அதை வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, “நாளைக்கு நாம டாக்டர் லெட்சுமியை பாக்கப் போறோம்,” என்றார்.

“அக்கா… அப்பாட்ட நா இன்னும் கேக்கல..”

“பத்து மணிக்கு ரெடியாயிடு. சிவப்பு கலர் தாவணிய போட்டு வா. அது உன்னயக் கெம்பீரமாக காட்டும்.”

அடுத்த நாள் நான், அக்கா, அடுத்த தெருவில் குடியிருந்த காளியம்மா, பவுனு எல்லாரும் போனோம். சத்தியவதியும் வந்திருந்தார். அந்த ஆபீசில் இரண்டு பேர், மேசை போட்டு அமர்ந்து  வந்தவர்களைப் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். அக்காவுக்கு ஆங்கிலம், மலாய், ஹாக்கியன், வங்காளி மொழி, ஜப்பான் மொழி என்று பல மொழிகள்  தெரியும். ஆனால், அன்று அவர்களிடம் தமிழிலில்தான் அக்கா பேசினார். எங்கள் பெயரை கேட்டதும் முதலில் அவர்கள் எங்களைப் படையில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று கூறினார்கள்.  பிறகு அங்கு வந்திருந்த வீரப்ப மாமா சொன்னதும்தான் சேர்த்துக்கொண்டார்கள். வீரப்ப தேவர்ன்னா எல்லாருக்குமே தெரியும். அவர் எங்களுக்குச் சொந்தமில்லை. சின்ன வயதிலிருந்து பழக்கம். அவரை மாமா என்றுதான் முறை வைத்துக் கூப்பிடுவோம். அவரும் எதுவும் சொல்லமாட்டார். அவர் வித்தியாசம் பார்க்காத மனிதர். எல்லாரையும் ஒன்றாகவே பார்ப்பார்.

அக்கா அவர்கள் கொடுத்த பத்திரத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததும் அவர் கணவரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்றார்கள். “அவங்கதான் என்னைய போகச் சொன்னதே” என்றார் அக்கா. பிறகு அவர்கள் எங்களை எதுவும் கேட்கவில்லை.

அன்று இரவு வீட்டுக்கு வந்தவர் பாடிக்கொண்டு இருந்த ரேடியோவைத் தூக்கிப்போட்டு உடைத்தார். அவர் சிறுக சிறுக காசு சேர்த்து வாங்கிய ரேடியோ அது. அவர் அதில் ஆங்கிலச் செய்திகளைக் கேட்டு எல்லாருக்கும் சொல்வார். பொக்கிஷமா வைத்திருந்தார். எப்போதும் அவர் காதோடுதான் அந்த ரேடியோ இருக்கும். அவரே அதை கீழே தூக்கிப்போட்டு உடைத்துவிட்டார். அப்படியும் ஆத்திரம் அடங்காமல் அக்காவின் கன்னத்தில் அறைந்தார். எட்டி உதைத்தார். அக்கா வாயே திறக்கவில்லை. எப்போதும்போலவே தன் வேலையைச் செய்தார். சோறு சமைத்து அவருக்கு எடுத்து வைத்தார். தானும் சாப்பிட்டார்.

நான் மாலையில் அக்கா வீட்டுக்குப் போனபோது அக்காதான் இதையெல்லாம் சொன்னார். எனக்கு படபடப்பாகிவிட்டது. அக்கா வீட்டுக்காரருக்கு இவ்வளவு கோபம் வரும் என்று அன்றுதான் எனக்குத் தெரிந்தது. “அக்கா இப்ப என்னக்கா செய்யிறது?” என்றேன்.

“ஒழுங்கா சாப்பிட்டு உடம்ப தெம்பாக்கிக்க. சண்ட போட பெலம் வேணும்” என்றார்.

“அப்ப நாம படையில கட்டாயம் சேரப் போறமா?”

அக்கா ஒன்றும் சொல்லவில்லை. அப்படியானால் அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது. அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. சுதந்திர இந்தியா எவ்வளவு செழிப்பாக இருக்குமென்று கற்பனை செய்து பார்த்தேன். வெள்ளக்காரன் தோற்று போனால், சிங்கப்பூரை யார் ஆள்வார்கள்? இது ஜப்பான்காரன் நாடாகிவிடும், பிறகு, நாமெல்லாரும் ஜப்பான் மொழிதான் பேச வேண்டும், படிக்க வேண்டும் என்று கவலையாக இருந்தது. கட்டையனோடு காலம் தள்ள முடியாது. ஆனால் நாம்தான் இந்தியா போய்விடலாமே என்று மனதுக்குள் சந்தோஷமாகவும் இருந்தது. தூங்கினால் துப்பாக்கியை தோளில் மாட்டிக்கொண்டு சாலைகளில் ஓடுவதுபோலவும் எல்லாப் பக்கத்தில் இருந்தும் பலரும் தாக்குவது போலவும், ஜப்பான்காரன் காப்பாற்றச் சொல்லி அக்காவிடம் கெஞ்சுவது போலவும் கனவு.

நாங்கள் நினைத்ததுபோல படையில் சேர்வது அவ்வளவு லேசான காரியமாக இருக்கவில்லை. படையில் சேர அப்பா என்னை அனுமதிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் சந்திரபோஸ் மீது ரொம்ப மரியாதை வைத்திருந்தார். ஊருக்கு ஒருமுறைகூட அவர் போனதில்லை என்றாலும் இந்தியா என்றால் அவருக்கு உயிர். அவரது தாத்தா, கைதியாக சிங்கப்பூருக்கு சங்கிலியால் கட்டி கொண்டுவரப்பட்டவர். அவருடைய வேலைத் திறமையையும் நேர்மையையும் பார்த்து கொஞ்சநாளில் கையில் பூட்டியிருந்த சங்கிலியைக் கழற்றிவிட்டார்களாம். வேலை செய்துவிட்டு அவரே சிறைக்குள்போய் தன்னைப் பூட்டிக்கொள்வாராம். “இங்கேயிருக்கிற எல்லா ரோட்டையும் போட்டது எங்க தாத்தாதான்னு,” என்று அப்பா சொல்லும்போது பெருமையில் அவர் கண்கள் விரியும். விடுதலையானதும் அவரைப் போலவே கைதியாக இங்கு வந்த அம்மாயியை கல்யாணம் செய்துகொண்டார். ஊருக்குப் போய், தன் தாத்தா, ஆத்தாவின் சொந்தபந்தங்களைப் பார்க்க வேண்டும் என்று அப்பாவுக்கு நீண்டகால ஆசை. ஆனாலும் நான் படையில் சேரக்கூடாது என்று கண்டிப்பாக இருந்தார். “உன்னையெல்லாம் அங்க சேத்துக்கமாட்டாங்க. அங்க போவ வேணாம்” என்று தடுத்தார்.

நாங்கள் படையில் சேர்ந்தபோது, லட்சுமி டாக்டர் பயிற்சி முடித்து விட்டிருந்தார்கள். அவர், கேப்டன் சிங், இன்னும் சில பேர் எங்களுக்குப் பயிற்சி எடுப்பார்கள். சேலையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு, முதுகில சுமையைத் சுமந்து, துப்பாக்கிய கையில ஏந்தியபடி எல்லாரும் ஓடுவதைப் பார்க்கும்போதெல்லாம், “ஏன் அக்கா நம்ப அந்தப் படையில இல்ல? எப்பவுமே குசினிலதான் வேலை செய்யப்போறமா?” என்று கேட்பேன். அதற்கு, “நாம முதல்ல கரண்டிய தூக்கிட்டு பிறவு துப்பாக்கிய பிடிப்போம், இவங்க முதல்ல துப்பாக்கிய பிடிச்சிட்டு பிறவு கரண்டியப் பிடிப்பாங்க,” என்பார்.

நாங்கள் பள்ளிக்கூடக் கட்டத்தில் தங்கியிருந்தபோது, காலையில பயிற்சி செய்துவிட்டு வருபவர்களுக்கு உருண்டைச் சோறும், கோப்பித்தண்ணியும் கொடுப்பதுதான் எங்கள் வேலையாக இருந்தது.  நாங்கள்  முதலில் கிழங்கு தோல் சீவுவது, அரிசியில் கல் பொறுக்குவது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளைத்தான் செய்தோம். “நம்ப வீட்டிலேயே இருந்திருக்கலாம்,” என்று நான்தான் புறுபுறுப்பேன். அக்கா வாய் திறக்க மாட்டார். “வேலை தெரியாதவ விரலு வீங்கித்தான் கிடக்கும்,” என்பார். உட்லண்சிலிருந்த சீனனின் ரப்பர் தோட்டங்களை ஜப்பான்காரன் எடுத்துக்கொண்டதும், அங்கு வேலை செய்த பலர் படைக்கு  ஓடி வந்துவிட்டார்கள். அவர்களில் ஒரு குழுவினருக்கு கேப்டன் சிங்  சமையல் வேலையை கொடுக்கவும் எங்களுக்கு அங்கே வேலை இல்லாமல் போனது. அந்தநேரத்தில்தான் அக்காவையும் என்னையும் இன்னும் சில பேரையும் சாப்பாடு எடுத்துக்கொடுக்கும் வேலைக்கு மாற்றினார்கள். முதல் நாள் நாங்கள் சாப்பாடு பரிமாறியபோது, எங்களை ஒரு மாதிரி பார்த்தார்கள். சிலர் நாங்களே எடுத்துக்கொள்கிறோம் என்றார்கள். சிலர் எங்களைப் போட விடாமல் கையால் மறித்தார்கள். சில பேர் சாப்பிடாமல்  போனார்கள். முதலில்தான் அப்படி இருந்தது. பிறகு எல்லாரும் பயிற்சியில் மும்முரமானதும் மற்றதை எல்லாம் மறந்துவிட்டார்கள். காலையில் எல்லாருக்கும் உருண்டைச் சோறு கொடுக்கும்போது அக்கா முகம் ரொம்ப பிரகாசமாக இருக்கும். ஐஎன்ஏ படைக்கு ஜப்பான்காரனின் அரசி ரேஷன் முதலில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கறுப்பட்டிச்சீனி சேர்த்த சமைத்த அந்த சோறு ருசியாக இருக்கும். ஒரு உருண்டைதான் ஒருவருக்கு. அதை எல்லாரும் அமுதம்போல சாப்பிடுவார்கள். அதைப்பார்த்து அக்கா சந்தோஷப்படுவார். அக்கா நல்ல உயரம். நீளமான முடிய இறுக்கமாகப் பின்னி, கறுப்பு கலர் ரிப்பன் வைத்து மடித்துக் கட்டியிருப்பார். அவர் சிரிக்கும்போது அப்பளம் உப்பிப் பொரிந்து வருவதுபோல அழகாக இருக்கும். அக்கா எல்லாரிடமும் பேசுவார். ஆனால் அங்கே கொஞ்சப்பேர்தான் எங்களை முகப் பார்த்துப் பேசுவார்கள். பாதிப் பேர் முகட்டைப் பார்த்தபடி வேலை ஏவுவார்கள். இன்னும் கொஞ்சப் பேரிடம் அதுவும் இருக்காது, எதிரில் வந்தால் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள். அக்காவிடம் ஒருநாள் கேட்டபோது, “நான் தளபதி ஆனாப் பிறவு பாரு,” என்பார். அக்கா என்னைக் கேலி செய்கிறார் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

டாக்டர் லெட்சுமிக்கு அக்காவை ரொம்பப் பிடித்துவிட்டது. மருத்துவப்படையில் அக்காவையும் என்னையும் சேர்த்தார். அதன் பிறகு நாங்கள் தாதியாக பயிற்சி பெறத் தொடங்கினோம். அப்போதுதான்  அக்கா  டாக்டர் லெட்சுமிபோல முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டார். சந்திரபோஸ் பர்மாவில் காட்டுக்குள் சென்று கொரில்லா சண்டைபோட பெண்கள் படையைத் தயார் செய்தார். அதனால், படையில் இருந்த எல்லாருக்கும் குண்டு வீசுவது, துப்பாக்கி சுடுவது என்று எல்லாவற்றிலும் இரவு பகலாக பயிற்சி கொடுத்தார்கள். அக்கா இரவு நேரத்தில் தான் செய்த துப்பாக்கியை கையில் ஏந்திக்கொண்டு மறைந்திருந்து தாக்கவும், தாக்க வருவோரை எதிர்க்கவும் எனக்குச் சொல்லித் தருவார்.

எங்கள் படை ஜோகூர் கிளம்பத் தயாரானபோது, நிதி திரட்டுக்காக நாடகம் போட முடிவு செய்தார்கள். நாடகத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் தாரா பாய்.  உணர்ச்சிகரமான நாடகமாக இருக்க வேண்டும் என்று அவர் நிறைய விடுதலைப் பாடல்களைச் சேர்த்திருந்தார்.  ஒரு பாட்டு வாத்தியாரும் கவிஞர் ஒருவரும்  எல்லாருக்கும் பயிற்சி கொடுத்தார்கள். நானும் அக்காவும் நாடகத்தில் பங்கேற்றவர்களுக்கு காபியும் தேநீரும் போட்டுக்கொடுத்து விட்டு அங்கேயே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம். அக்காவுக்கு பாடப் பிடிக்கும். அவருக்கு நல்ல குரல். அவர்களோடு சேர்ந்து பாடிக்கொண்டே இருப்பார். ‘சாலோ டெல்லி’  என்ற அந்த நாடகம் விக்டோரியா தியேட்டர் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்தது. புதன்கிழமை நாடகத்தில் முக்கிய வேடமேற்ற மாதவிக்கும் இன்னும் இரண்டு பேருக்கும் வாந்திபேதி. அவர்களால் படுக்கையிலிருந்து ஓரடி எடுத்துவைக்கத் தெம்பில்லாமல் போய்விட்டது. என்ன செய்வது என்று எல்லாரும் தவித்துக்கொண்டிருந்தபோது, அக்கா, “நான் வேண்டுமானால் நடிக்கவா,” என்று கேட்டார்.  தாரா பாய் அக்காவைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ஆனால், அக்கா வருத்தப்படவில்லை. அவர் பாட்டுக்கு எப்போதும்போல வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார். டாக்டர் லெட்சுமிதான் அக்காவைக் கூப்பிட்டு சாலோ டெல்லி பாட்டைப் பாடச் சொல்லிக்கேட்டார்.

அக்காவுக்குத்தான் ஹிந்தி தெரியுமே.

அக்காவின் உச்சரிப்பும் குரலும் டாக்டர் லெட்சுமிக்கு பிடித்துப்போய் விட்டது. முக்கிய வேடத்தில் அக்காவையே நடிக்கச் சொல்லிவிட்டார். அது நீளமான நாடகம். இறுதிக்காட்சியில் “அம்மா, அப்பா போய் வருகிறோம்” என்று ஒரு பாட்டு. ஒத்திகையின் அக்கா அந்தப் பாட்டைப் பாடும்போது அங்கிருந்த எல்லாருமே அழுதுவிட்டோம். மறுநாள் நாடகத்தன்று, புட்டாமாவு எல்லாம் பூசி, அக்கா மேடையில் நின்றுகொண்டிருந்தார். திரை விலகியதும் அக்கா பாடியபடி உள்ளே நுழைய வேண்டும். திரை விலக, அங்கே நின்றுகொண்டிருந்த தாரா பாய் கையை நீட்டி அக்காவை மேடைக்குப் போகவிடாமல் தடுத்தார். எதிர்ப் பக்கத்திலிருந்து சீக்காகிப் படுத்திருந்த மாதவி நோஞ்சான் குரலில் பாடிக்கொண்டு வந்தாள். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நான் அக்காவின் முகத்தைப் பார்க்கவில்லை. நாடகம் முடியும் வரையில் அக்கா அங்கேயே நின்றுகொண்டிருந்தார். நகரவே இல்லை. இறுதிக்காட்சியில், அம்மா, அப்பா போய் வருகிறோம் பாட்டை நாடகம் பார்க்க வந்தவர்களோடு எல்லாருமே சேர்ந்து பாடினார்கள். நானும் கூடப் பாடினேன். அக்காவின் குரல் கேட்கவேயில்லை. பாதியில் நான் அவர் முகத்தைப் பார்த்தபோது இப்போது இங்கே பாலத்தில் நிற்கும் இதே முகத்தோடு கைகளைக் கட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்.

***

தண்ணீரை எட்டிப் பார்த்த அக்கா, சில கணங்கள் அப்படியே நின்றார். பிறகு வலது கையில் வைத்திருந்த சட்டையை ஆற்றில் வீசினார். அது நீரில் ஓடுவதை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு பைக்குள்ளிலிருந்து பாண்ட், சட்டைகள், சப்பாத்துகள் என்று ஒவ்வொன்றாக இரு கைகளாலும் தலைக்கு மேலே தூக்கி, கருமாதி சாமான்களைக் கடலில் தூக்கியறிவதுபோல தலையைச் சுற்றி தூக்கிப்போட்டார். அங்கொன்றும் இங்கொன்றுமாக கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த பம்ப் படகுகளில் விழாமல் சரியாக தண்ணீரில் விழுந்து ஓடிய சப்பாத்துகளில் என்னுடைய எது என்று அடையாளம் காண முயன்றேன். நீரில் இரு கால்களை விரித்து  நீளமும் குட்டையுமாக மிதந்த பாண்டுகள், ஆற்றின் மெல்லிய அலையில் லேசாக அசைந்துகொண்டிருந்த படகுகளில் முட்டிமோதி நீரோட்டத்துடன் ஓடியன. என்னைப் போலவே அக்காவும் அதைப் பார்த்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். அதுஇருட்டில்கலந்துவிட்டதும், முதுகில்மாட்டியிருந்தநீளத் துப்பாக்கியைக்கழற்றினார். அவருக்கு எதிரே நிற்கவைத்தபோது ஓர் ஆள்போல விறைப்பாக நின்றது. அக்கா படையில் பேர் கொடுத்த அன்றைக்கு  மாமா இப்படித்தான் அக்கா முன்னால்  உக்கிரமாக நின்றிருப்பார். இரண்டு கைகளாலும் பிடித்தபடி துப்பாக்கியை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு அதைத் தூக்கி, தலையை ஒரு சுற்றுச்சுற்றி அம்பு எரிவது போல ஆற்றில் வீசினார். தொபுக் என்ற சத்தத்துடன் நேராக நீரின் கருமைக்குள் சென்று மறைந்தது. சட்டென்று நான் நிமிர்ந்தபோது அக்காவும் நிமிர்ந்தார். அப்போதுதான் அவர் என்னைப் பார்த்தார்.

கழுவித் துடைத்துவிட்டதுபோல் தெளிவாகத் தெரிந்த அவர் முகத்தில் மினுக்கி மினுக்கி எரிந்துகொண்டிருந்த தெருவிளக்கின் கடந்தபோன விட்டில்பூச்சி போல கலக்கம் ஏற்பட்டு மறைந்ததைக் கவனித்தேன். புடவையை இழுத்து நேராக்கிக்கொண்டார். “நீ ஏன் இங்க வந்தே? உன்னைய வெளியில வராதேன்னல்ல,” என்று அதட்டும் தொனியில் கேட்டார்.

நான் திகைத்தேன். என் அருகில் வந்துவிட்ட அவர்,  “நம்பள ஒன்னா எங்கயும் போகக்கூடாதுன்னு அவரு சொன்னாரில்ல?” என்றார்.

அவர் குரலில் குறைந்திருந்த இறுக்கம் கொஞ்சம் தைரியம் தந்தது. “ஏன் எல்லாத்தயும் தூக்கி வீசிட்டிங்கக்கா? கஷ்டமாயிருக்கு!”

“….”

“எல்லாத்தையும்விட, துப்பாக்கி நமக்கு எப்போதும் துணையிருக்கும் என்பீங்களே அதையும் எறிஞ்சிட்டீங்க…”

“…”

“நாம சண்ட போடப் போறதில்லையா?”

“போடத்தான் வேணும்,” என்றார்.

4 comments for “தேக்காவில் ஒரு பாலம் இருந்தது

  1. சை.பீர்முகம்மது
    January 1, 2021 at 8:31 pm

    அருமையான INA கால போராட்ட வரலாறு கண்முன்னே நிறுத்துகிறது.தேக்கா பாலாம் வர்ணனைகள் 1946ல் நான் முதன் முதலில் பார்த்த பாலம். டிரம் வண்டிகள் ஓடும் சிராங்கூன் சாலை. சண்முகச் செட்டியாரின் கிட்டங்கி .அங்கே தான் தங்கியிருந்தோம்.பெரியத்தாவின் வெற்றிலை வியாபாராம். சண்முகம் செட்டியாருக்கு மொத்தாமாக கோலாலம்பூரிலிருந்து பெரியத்தா பாசன்ஜார் ரயிலில் அனுப்புவார். அது அன்றாட திருவிழாபோல் நான் பார்ப்பேன். போர்காலத்தில் அரிசி சாப்பாட்டுக் கிடங்கில் பெரியத்தாவுக்கு மூட்டை தூக்கூம் வேலை பொட்டுக் கொடுத்து ஒரு நாளைக்கு ஒரு கந்தம் அரிசி சம்பளமாகப் போட்டுக் கொடுத்தான் ஜப்பானிய அதிகாரி. என் அத்தாவை மரண ரயில் போட சியாமுக்குக் கொண்டு போய் விட்டான் ஜப்பான்காரன். மரவள்ளிக் கிழங்கில்லாமல் மூன்று வேளையும் சோறு சாப்பிட வைத்த ஜப்பானிய அதிகாரியை அம்மா வாயார புகழ்வாள். பெரியத்தாவின் அரிசி சம்பளம் அருகில் வசித்தவர்களுக்கு பசியை அடக்கியது.
    நேதாஜி வந்த பிறகு இந்திய மரண ரயில் கட்டாயத் தொழிலாளர்கள் திரும்பி வந்தார்கள். அதில் என் அத்தாவும் அடக்கம். ஒரு சிறந்த படைப்பு மெழுகுவார்த்தி போல பல படைப்புகளின் மெழுகுவார்த்திகளை ஏற்றி நெருப்பு தரும். லதாவின் தேக்கா பாலம் என்னுள் உறங்கிக் கிடந்த பால்ய ஜப்பானிய கால நினைகளை தட்டி எழுப்பிவிட்டது. 3 வயதில் நான் கண்ட அனைத்தும் ஞாபகத்தில் ஓடுகின்றன. ஆம் அடுத்த நாவலுக்கான தொடக்கத்தை லதா எடுத்துக் கொடுத்து விட்டார். நன்றி லதா.

  2. பொன் சுந்தரராசு
    January 2, 2021 at 7:36 am

    அருமையான கதை.
    என் இளவயது நினைவுகளைக் கிளறிவிட்ட கதை. அந்தத் தேக்கா பாலத்தில் நானும் நின்றிருக்கிறேன். அருகில் ‘கண்டாங் கிருபாவ்’ காவல் நிலையமும் அதன் எதிரில் தேக்கா பஜாரும் இருந்தது. ரெக்ஸ் திரையரங்கிற்குப் பின்னால் இருந்த சிறு கடையில் ‘செண்டோல்’ சாப்பிட எனக்குப் பிடிக்கும்.
    லதாவுக்குப் பாராட்டுகள்!

  3. January 2, 2021 at 1:03 pm

    அருமையான கதை! மிகவும் பிடித்திருந்தது.

    வட இந்தியர் – தென்னிந்தியர் நிலையில் தாழ்வு, தமிழர்களுக்குள் சாதிப் பிரிவினைத் தாழ்வு, ஒரே சாதிக்குள்ளும் பெண்ணினம் என்பதால் தாழ்வு, குடும்பத்திலும் வன்முறைக்குள்ளாவதால் அடிமை நிலை என்று எல்லாத் தளங்களிலும் சிறுமைக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளாகும் யதார்த்தம் ‘அக்கா’வை கீழே இழுக்க, அவரது மேலான அரசியலறிவும், அறிவுத்திறனும், மொழித்திறமும், உடற்திறனும் விடுதலைப் போராட்டத்தில் மேலே இழுக்க, பொறுத்துப்பொறுத்துப் பார்த்து அல்லாட்டங்களுக்கும் இழிவுக்கும் ஆளான நிலையில், தான் முதலில் குடும்ப, சமூக அளவில் முதலில் போராடவேண்டியிருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்.

    வரலாற்றுக்களமும், புனைவுமொழியும், யதார்த்தமும் ஒன்றையொன்று வளப்படுத்தியிருக்கும் இப்புனைவு, பெண்ணியம் என்பதை அதன் சரியான பொருளில் புரிந்துகொள்ளப்பட்டு எழுதப்பட்டுள்ளதால், எவரையும் உள்சென்று தொடும்படியாகவும் வாசிப்பவரிடம் ஒரு சிறு சிந்தனை மாற்றத்தையாவது உண்டாக்கும்படியான தாக்கமுடையதாகவும் இருக்கிறது.

    எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...