
“நான்கைந்து நாட்களாக இருள் மூண்டிருந்த பெங்கூலு வீட்டு வளைவைக் கடக்கும்போதுதான் கருப்பு நிற மேகம் போன்ற திரள் ஒன்றைப் பார்த்தோம். அப்போது சஹாக் சித்தி நூர்ஹாலிசாவின் சிண்டாய்லா பாடலைப் பாடிக் கொண்டிருந்தான். ‘என் தலையணை தங்கத்தாலானது, ரத்தின உறை கொண்டது, கைமுட்டியைத் தலையணைத்து உறங்குகிறேன்’ என்ற வரிகளை அவன் பாடும் போது எனக்கு ஒருவித எரிச்சலாக இருந்தது. ஆனால் பல்லைக்கடித்துக்கொண்டேன்.” என்றான் அவாங்.
பெங்கூலு வீட்டு வளைவில் இருந்த தெருவிளக்கில் அமர்ந்திருந்த மீன் கொத்தியைக் கம்பத்துப் பையன்கள் சிலர் லஸ்டிக்கால் அடிக்கப் போய் விளக்கைப் பதம் பார்த்திருந்ததை நானும் அறிவேன். இரண்டு நாட்களுக்கு முன் அப்பகுதியைக் கடக்கும்போது எனக்கும் மெல்லிய குளிர் எடுக்கவே செய்தது.
“சிண்டாய் என்றால் ‘மலாய் பட்டு’ என்று சஹாக் அன்றுத்தான் சொல்லியிருந்தான். அந்தப் பட்டுத் துணியில் இரண்டு வகை இருக்கிறதாம். சிறிய தலைப்புடன் இருப்பது பெண்பட்டு. பெரிய தலைப்புடன் இருப்பது ஆண்பட்டு. அரிய வகையான அந்தப் பட்டு கண்ணுக்குப் புலப்படாத பூனியான் உலகத்தில்தான் கிடைக்கும் என்று சஹாக் சொன்னான். பாட்டின் நடுவில் சித்தி கிறக்கத்துடன் பாடும் குரல் ஜின்னுடையது” என்றான்.
எனக்கு அந்தக் கதையெல்லாம் தெரியும். ஆனால் மறந்தும் கதைகளில் அவன் விட்டுள்ள தகவல்களை சொல்லக்கூடாது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இந்தோனேசியாவின் மினாங்கபாவ் நகரிலிருந்து குடியேறி வசிக்கும் மக்களின் மொழியில் சிண்டாய் என்றால் பூனியான் உலகத்து இளவரசி என்றுதான் பொருள். அவாங் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வார்டு ஓரத்திலிருந்த சுவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களை அலையவிட்டு என் கண்களை எதிர்கொள்கிறபோது தலையைத் தாழ்த்திக் கொண்டும் வலி முனகலுடன் அவாங் மெதுவாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“இந்தப் பாடலை இரவில் பாடக்கூடாது என்ற கதை உனக்கும் தெரிந்திருக்கும்தானே.” என்றான்.
மினாங் மக்கள் நிறைந்திருந்த என்னுடைய கம்பத்தில் நீண்ட நாட்களாகவே பிரபலமாக இருந்த கதை ஒன்று உலாவியது. மேடை நிகழ்ச்சி ஒன்றில் ஒருவன் அந்தப் பாடலின் முதல் வரியான ‘சிண்டாய் எங்கே’ என்று பாடியபோது மேடையின் பின்னாலிருந்து யாரோ ‘சிண்டாய் இங்கேதான்’ என்று பெண்குரலில் பாடியதாக பல காலமாகச் சொல்லி வந்தனர்.
“அந்தப் பாடலைக் கேட்கத்தான் அன்று ‘சித்தியும் பிரதமரும்’ என்ற நிகழ்ச்சிக்கே சென்றான். எனக்கு விருப்பம் இல்லை எனச் சொல்லியும் கேட்கவில்லை. படங்களில் பார்ப்பதைப்போல் இல்லாமல் கொஞ்சம் உடல் பெருத்துப் போய்தான் சித்தி இருந்தாள். நிகழ்ச்சி ஆரம்பத்தில் பிரதமருடன் ஒரு டூயட் பாடலைப் பாடினாள். ‘தேர்தலுக்காக எல்லா வித்தைகளையும் செய்வார்கள். தேர்தல் முடிந்தபின் பூனியான் போல மறைந்து போய்விடுவார்கள்’ என்று சஹாக் நிகழ்ச்சியின்போதே காதில் கிசுகிசுத்தான். நிகழ்ச்சியின் இறுதியில்தான் சிண்டாய்லா பாடலைப் பாடினாள் சித்தி. அந்தப் பாடலின் கிறக்கமான கீழ்ஸ்தாயியில் பாடும் போது மைக்கைக் கூட்டத்தின் முன்னால் நீட்டினாள். ஒட்டுமொத்தக் கூட்டமே சித்தியுடன் சேர்ந்து சிணுங்கலுடன் பாடலைப் பாடியது. அதில் அப்படி என்னதான் இருக்கிறதோ. கூட்டத்திலிருந்த அத்தனைப் பேரின் குரலும் ஒற்றைப் பெருங்குரலாக ஒலித்தது. புறாக்கள் ஒரிடத்திலிருந்து பறந்து செல்கின்ற போது எழுகின்ற சிறகுகளின் இடைவிடாத அசைப்பாகவே அந்தக் குரல் இருந்தது.
அந்த கருநிற மேகத்திரளும் புறாக்களின் பெரும் சிறகசைப்பும் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. அப்போதுதான் கியா வீட்டுக்கு முன்னால் இருந்த கான்கீர்ட் வாய்க்காலில் கால் மாட்டிக் கொண்டதை உணர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் உடலில் காலே இல்லாத மாதிரியாக இருந்தது. மெல்ல மெல்ல காலை ஏதோ ஒன்று முழுமையாகப் பின்னி அழுத்துவதைப் போல பெரும் வலி எடுத்தது. அந்த வலியில் சுற்றிலும் சிண்டாய்லா பாடலின் சிணுங்கல் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. சித்தியின் பாடல் மனதுக்குள் பேரொலியாக எழுந்து அச்சூழலில் திகிலை உண்டாக்கியது. உன்னிடம் நான் சொன்னதில்லை. நினைவு மறந்து நான் உறங்கும் இரவுகளில் அந்தக் குரலை நான் பலமுறை கேட்டிருப்பதாகவே ஆழ்மனம் சொன்னது. அது என் கற்பனையா என்று கூட தெரியவில்லை.” இப்படியாக, தன் கால் உடைந்த கதையை மருத்துவமனையிலிருந்த மூன்றாவது நாள்தான் அவாங் என்னிடம் கூறினான்.
“மயக்க மருந்து கொடுத்துள்ளதால் அப்படியெல்லாம் கற்பனைகள் தோன்றும். எல்லாமே எப்போதோ நடந்ததுபோல எண்ணங்கள் வரும். நான் முதல் பிரசவத்தின்போது அதையெல்லாம் அனுபவித்திருக்கிறேன்” என்றேன். எனக்கு குப்பென வியர்த்தது.
நடந்தவைகளைத் தொகுத்துக்கொண்டிருந்தவனிடம் சாலையைக் கடந்த எருமை மாடுகள் மீது மோட்டார் மோதித்தான் சஹாக் இறந்துவிட்டான் என்று தாதி ஒருத்தி அவாங்கிடம் சொன்னபோது நான் அவன் முகத்தைப் பார்க்கவில்லை. எனக்கு அப்போது உடனடியாக செய்ய வேலை ஏதாவது தேவைப்பட்டதால் சிந்திக்கிடந்த உணவுகளை வழித்து தட்டில் வைத்தேன்.
முதல் இரு நாட்களாய் மருத்துவமனையில் வலிக்கிறது என்பதைக் முகக்குறிப்புகளால் காட்டவோ வலி மேலிட்டால் கத்தவோ செய்வான். எல்லாவற்றுக்கும் எரிந்து விழுந்தான். மற்ற நேரங்களில் எதையாவது வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட பச்சை நிறக் கைலியை அணிந்து கொண்டு இருந்தான். சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் கைலியில் படரும் ஈரத்தைப் பார்த்துத் தண்ணீர் பாட்டில்களைக் கூட இரண்டு மூன்று முறை எடுத்து வீசினான். இரண்டாவது நாள்தான் இரும்பு கம்பிகளை அண்டையில் செருகி மெதுவாக நடந்து சென்று வார்டு ஓரத்தில் நீள்வாக்கில் இருந்த தாழ்வாரத்தில் அமர்ந்தான். திருமணம் ஆகி ஏழாண்டுகளில் மூன்று நாட்களுக்கு மேலாக அசைவற்று ஒரே இடத்தில் அவாங் இருப்பதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
முதல் கணவன் அலியாஸ் இறந்தபிறகு பிறந்து நான்கு மாதங்களே ஆன அடாமுடன் வீட்டுக்கே திரும்பி வந்தேன். சிறுநீரகம் கெட்டுப்போன தம்பி ஒருவனும் வீட்டில் இருந்தான். நான் வந்தபின்னால் அவனுக்கான உணவு, பணிவிடைகள் என எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொண்டேன். அது இறந்துபோன அம்மாவை நினைவுறுத்துவதாகச் சொல்வான்.
அரசாங்க நிலத்திட்டமான பெல்டா கம்பத்தில் இருந்த அப்பாவுக்குச் சொந்தமான நிலத்தில் செம்பனைக் குலைகளை குத்தகைக்கு வெட்ட வந்தான் அவாங். ஒரு மதிய நேரத்து வெயிலில் வெளிறி நைந்து போயிருந்த சட்டையைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு காற்சட்டை முழுவதும் செம்மண் அப்பியிருக்க செம்பனைக் குலைகளை அறுக்கும் அலக்குடன் வீட்டு முன் நின்று கொண்டிருந்தான். முடியெல்லாம் பரட்டையாக இருக்க கட்டான உடலில் திட்டுத் திட்டான வெண்புள்ளிகள் கூட முதுகெங்கிலும் பரவி இருந்தன. என் கைப்பேசியிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த சித்தியின் பாடலைக் கேட்டு சம்பந்தம் இல்லாத தோரணை காட்டி போய்விட்டான். அந்த மதிய நேரத்து வெயிலின் வெளிச்சத்தைக் காட்டிலும் கூடுதலாகவே மினுங்கும் வியர்வைத் துளிகளுடன் இருந்தான். வேலை இல்லாத நேரங்களில் கடைக்கு முன்னால் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து அப்பாவுடன் பேசி கொண்டிருப்பான். அப்பாவுடன் சேர்ந்து மீன் பிடிக்க, குருவி பிடிக்க எனச் சென்றுவிடுவான். வீட்டுக்குப் பின்னால் தகரத்தால் ஆன தடுப்புகளுக்குள்தான் மணிலா வாத்துகளையும், ஆங்சாக்களையும் அப்பா வளர்த்து வந்தார். அப்பாவும் அவாங்கும் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் மரங்களில் குறிபார்த்துக் குருவிகளை லஸ்டிக்கால் அடித்து வீழ்த்தும் போது வாத்துகள் சேற்றை காலால் விசிறியடித்தும் ஆங்சாக்கள் கழுத்துகளைச் சிலுப்பிக் கொண்டும் அலறும். அவனுடன் பெரியதாக எதுவும் பேசிக்கொண்டதில்லை என்றாலும் வீட்டுக்கு வரும் போதெல்லாம் என்னைத் தவறாமல் பார்த்துவிட்டுச் செல்வதை அறிந்தே வைத்திருந்தேன். அவனாகத்தான் என்னைத் திருமணம் புரிய அப்பாவிடம் சம்மதம் கேட்டான். எங்கள் வீட்டைத் தாண்டி ஐந்தாவது வீட்டில் ஒருவருடம் தங்கியிருந்தோம். ஹாரிஸ் பிறந்தவுடந்தான் அப்பா அவாங் உடன் அவன் கம்பத்துக்குச் செல்ல அனுமதித்தார்.
காலையில் செம்பனைத் தோட்டத்தில் வெட்டிக் கிடக்கும் செம்பனைக் குலைகளை லாரியில் ஏற்றுவதற்குச் சென்றுவிடுவான். ஒரு நாளைக்கு இரண்டு டன் பழங்கள் வரை ஏற்றிவிடுவான். செம்பனை மரத்திலிருந்து வெட்டிக் குவிக்கப்பட்டிருக்கும் செம்பனைக்குலைகளை நீள்முள்ளால் குத்தித் தூக்கி லாரியில் வீச வேண்டும். வீசிய செம்பனைக் குலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க வேண்டும். உடல் மேல் ரோமங்கள் இன்றி வியர்வை நசநசப்புடனே சஹாக் இருந்தான். மாதத்தில் எப்படியும் மிஞ்சி போனால் இருபது நாட்கள் வேலைத்தான் இருக்கும். மழைநாளில் வேலை பெரும்பாலும் இருப்பதில்லை. பழங்களை ஏற்றியப் பின் வீட்டில் இருக்கும் நேரங்களில் குருவிகளைப் பிடிப்பான். வீட்டின் முன்னால் இருந்த செர்ரி பழ மரத்தின் கீழ் மெல்லிய இழைகளிலான நரம்புகளைச் சிறு சிறு வட்டங்களாகப் பின்னி வைத்துவிடுவான். நரம்பு முனையை இரும்பு கம்பியால் பிணைத்து நிலத்தில் ஊன்றி விடுவான். அந்த நரம்புகள் மிகச் சிறியவை என்பதால் அருகில் சென்று பார்த்தால்தான் தெரியும். நரம்பு வலையில் பெட்டை மணிப்புறாவைப் பிணைத்து வைத்துவிடுவான். பெட்டை மணிப்புறாவின் குனுகல் ஒலியைக் கேட்டு இன்னொரு புறா வந்து கீழே சிவந்த தோல் நீங்கி சிதறியிருக்கும் செர்ரி பழங்களைத் தின்னும். அந்தப் பழங்களைத் தின்னும் போது கீழேயிருக்கும் வலையில் அதன் கால்கள் சிக்கிக் கொள்ளும். புறாக்களைக் கவர்தல் என்றுதான் இதைச் சொல்வான். அப்படிச் சிக்கிய புறாக்கள் மாலை வரை தலையைத் தாழ்த்தி வட்டத்துக்குள்ளே நடக்க முயலும். அந்த வட்டத்தை மீறி அவை பறக்க முயல்வதில்லை.

செர்ரி மரத்தின் கிளைகள் சிறிய இலைகளால் நிறைந்திருப்பதால் மிக விரைவாகவே பொழுது அடைந்து போயிருப்பதாக இருக்கும். மாலையே வெயில் மறைந்து மெல்லிருள் கவ்விய நிழலில் புறாக்களின் குனுகல் ஒலி மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும். அந்தச் சூழலுக்கு முற்றிலும் அந்நியமாகச் சித்தியின் குரலில் ஒலிக்கும் பாடல்கள் எனக்குள் எதோ சிறு ஒளியைப் பாய்ச்சிச் செல்வதாகவே இருக்கும். அவன் காதில் அவ்வொலி விழுகிறதா என்று தெரியாது. நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அசையாமல் புறாக்களின் அசைவை மட்டுமே பார்த்துக் கொண்டு மாலையில் அதனைப் பிடிப்பான். வாயில் எந்நேரமும் ஓயாத சிகரெட் புகையுடனே இருப்பான். பின்னர் எப்போது படுக்க வருவான் எனத் தெரியாது. ஆனால் படுத்தவுடன் அவனும் புறாவைப் போலவே குனுகத்தொடங்குவான்.
போனவாரம், செர்ரி மரத்திலிருந்த வலையில் இரண்டு புறாக்களை பிடித்திருந்தான். அந்தப் புறாக்களைப் பிரம்பால் பின்னப்பட்ட கூண்டில் அடைத்து வைத்தான். ஒருவாரத்தில் புறாக்கள் சூழலுக்கு பழகி குனுகல் ஒலி எல்லாம் அடங்கி மிக அமைதியாகக் கூண்டில் அடைந்திருந்தன. இன்னும் இரண்டொரு நாளில் அட்டைப்பெட்டியில் மேலே மட்டும் சிறுதுவாரம் விட்டு அவற்றை அதில் அடைத்து விற்றுவிடுவான். அவன் யாரையும் தேடிச்செல்ல வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு எப்படியும் விசயம் போயிருக்கும்.
பிள்ளைகள் இருவருடன்தான் இரவில் படுத்து வந்தேன். பகலில் மட்டுமே அறையில் படுப்பேன். அவாங் படுத்து எழுந்த இடம் மட்டுமே குழிவாக இருக்கும். சிகரெட் மணமும் வியர்வை மணமும் நிறைந்திருக்கும் படுக்கையின் மேல் மெத்தை விரிப்பு ஒன்றை விரித்துத்தான் படுப்பேன். திருமணம் ஆனப் புதிதில் இரவில் மட்டுமே அவாங்கை வேறு ஒரு நிலையில் பார்த்திருக்கிறேன். முரடு தட்டிய உள்ளங்கைகளால் பிணைத்து, இரும்பு போன்ற கால்களால் கிடுக்குப் பிடிகள் போட்டு என் மேல் இயங்கி செல்லும் போது அவாங் முகத்தில் காலையில் தெரிந்த எந்தவிதமான களைப்பும் இருப்பதில்லை. அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு கூட இருக்கும். அல்லது அவன் கண்கள் மெல்ல விரிந்து மூடிக் கொள்வதை நான் சிரிப்பாக நம்பியிருந்தேன். இப்போது அந்த சிரிப்பு எப்படி இருக்கும் என்பது குத்துமதிப்பாகவே நினைவில் உள்ளது.
அடாமின் மீது அவாங்குக்கு உள்ளூர எரிச்சல் இருந்ததாகவே எனக்குத் தெரிந்தது. அடாம் பேசுகின்றபோது எல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பான். அவாங்கின் நாற்காலிக்குக் கீழ் இருந்த சிகரெட் கங்குகள் கொண்ட டின், கவிழ்ந்து அடாமின் தொடை சுட்டு வீறிட்டழுத போது கூட என்னைதான் அழைத்துப் பார்க்கச் சொன்னான். அப்பொழுது ‘ஹராமுக்குப் பொறந்தவன்’ என்ற வார்த்தையைக்கூட சொன்னான். அவன் வளர வளரதான் அவாங் அதிகம் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான். அவன் வீட்டுக்குள் வராமல் இருக்க எதையாவது செய்தாக வேண்டியிருந்தது என்றே நினைத்துக்கொண்டேன்.
முதலில் என்னிடம் ‘அனிசா… அவாங்கும் சஹாகும் அடிப்பட்டு இறந்துவிட்டார்கள்’ என்றுதான் எண்டோன் அழுதுகொண்ட சொன்னாள். பள்ளிவாசலில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது இமாம் ஹூசேன்தான் இவர்களைப் பார்த்திருக்கிறார். காதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிற இசைத்துணுக்கு ஒன்று திடீரென நின்றுவிட்டால் ஏற்படும் கணநேர மெளனம் தவிர எனக்குள் பெரிய மாற்றம் எதுவுமில்லை. மருத்துவமனைக்குச் செல்லும் வழியில்தான் அவாங் பிழைத்துக் கொண்டான் எனத் தெரியவந்தது. என்னை மகிழ்ச்சிப்படுத்துவதாகச் மோட்டாரில் வந்து சொல்லிவிட்டு சென்ற இளைஞனிடம் என்னால் அடுத்து எதுவும் கேட்க முடியவில்லை. வேறு ஏதும் நற்செய்தி சொல்வார்களா என எதிர்படுபவர்கள் முகங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு மூன்று மாதம் தரையில் கால் படக்கூடாது என்று அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பினார்கள். அவாங் வீட்டுக்குள் நுழைந்தவுடன் மூத்தவன் அடாம் மூக்கைச் சுழித்து ஏதோ வாடை வீசுவதாகச் சொன்னான். அவாங்குக்கு முன்னரே நீரிழிவு இருந்ததால் அவன் காயத்திலிருந்த எழுந்த மணம் அழுகிய இறைச்சியின் கவிச்சி மணமாக வீடு முழுவதும் வீசியது. மருத்துவமனையில் வீசிய மருந்து நெடியிலும் கூட தனித்தறிய கூடியதாக வீசியது. “ஆமா. அடேக்குக்கும் அப்படித்தான் இருக்கு” என்று சின்னவன் ஹாரிஸ் சொன்னான். இருவரும் ஒவ்வொரு அறையாகச் சென்று நுகர்ந்து கொண்டிருந்தார்கள். அவாங்தான் அது பின்னால் இருக்கும் முயல்களின் பீ வாடை என்று முயல் கூண்டைக் காண்பித்துச் சொன்னான். முயல் பீயின் மணம் பச்சை மணமாக இருக்கும். சிறிது நேரத்தில் இருவரும் அதனை நம்பி அமைதியாகினர். வீட்டுக்கு வந்தவுடனே கைப்பேசியைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே இருந்த பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். நாற்காலிக்குக் கீழ் பால் டீன்னை வைத்துக் கொண்டான். சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு அதன் கங்கை டின்னில் தட்டி விட்டுக் கொண்டிருந்தான். நான் சித்தியின் பாடலைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் குரல் எனக்குள் திரண்டு வரும் அழுகையை உள்ளே சுருட்டி வைக்க உதவியது.
நான் சித்தியின் பாடல்களை வெறிபிடித்தவள் போல பள்ளி நாட்களில் சேகரித்து வைத்திருந்தேன். பெண்கள் காதல் துயருடன் அழுவது போன்ற பாடல்களையோ அல்லது பாப் இசையில் துள்ளலாகப் பாடும் பாடல்கள்களையோதான் எப்பொழுதும் வானொலியில் கேட்க முடியும். சித்தியின் குரலை வானொலியில் கேட்டபோது வேறொரு உலகத்துப் பெண்ணின் குரலாக இருந்தது. தேவதைக் கதைகளில் எழுந்த பெண்ணின் குரலாக இருந்தது. அந்தப் பாடல்கள், மனதுக்குள் ஏற்கனவே இருந்த இசையை வெளியே ஒலிக்கச் செய்வதாகவே இருந்தது. சிண்டாய் பாடலைக் கேட்கும் போது சோகத்தை விரும்பி ஏற்ற அழகான பெண்ணின் குரலாக அது ஒலித்தது நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த மெல்லிய சோகம் திரும்ப திரும்ப அந்தப் பாடலைக் கேட்கச் செய்தது. அலமாரியில் கீழாக அடுக்கப்பட்டிருக்கும் பழையத் துணியின் மணமாகத்தான் சித்தியின் பாடல்கள் மனத்தில் மாறி போயிருந்தன.
அந்தப் பாடலின் நடுவில் வரும் ‘என்னால் வெல்லமுடியாத உயரமே’ என்ற வரிகளுக்குப் பின்னான சிணுங்கல் ஒலித்தபோது அவாங் தடுமாறி உள்ளே வந்து எட்டிப்பார்த்தான். எனக்கு அருவருப்பாகவே இருந்தது. சமையலறை அலமாரியின் கீழிருந்த எலிப்பொறியை வெளியே எடுத்துச் சென்றான். சிறிய எலியொன்று அதில் மாட்டியிருந்தது. சிறிய கருமணி கண்கள் பரபரக்க பொறியில் சுற்றிக் கொண்டிருந்தது.
புண் ஆறுவதற்கு விரால் மீன் நல்லது என பக்கத்து வீட்டு எண்டோன்தான் கொடுத்தாள். அந்த மீன்களின் மீது கல் உப்பைத் தூவி எலுமிச்சைச் சாற்றையும் பிழிந்து ஊற வைத்து எடுத்தப் போதும் ரத்த மணம் வீசியது. தேங்காய் பாலும், ஊசி மிளகாய்களும் கொஞ்சமாக மஞ்சளும் சேர்த்து விரால் மீன் சொதியை வைத்தேன். சமையலறையில் இருந்த போது சித்தியின் பாடலில் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டேன். எவ்வளவு பிரக்ஞையுடன் இருந்தும் அப்பாடல் உதடோடு ஒட்டியபடியே வந்தது.
வேலையைச் செய்து முடித்து அணிந்திருந்த துடோங்கைக் கழற்றிய போது முடியில் ஒட்டியிருந்த வியர்வை மணத்தில் கூட அவாங்கின் மேல் வீசிய கவிச்சி நாற்றம் இருந்தது. நன்றாக ஆராய்ந்தபோது நான் அணிந்திருந்த ஆடையில் கூட மெல்ல அந்த மணம் படிந்து போயிருந்ததாக இருந்தது. மாலைக்குள் வீட்டின் எல்லா இடங்களிலும் அந்த நாற்றம் பரவி போயிருந்தது. அடாம் என் மீதுதான் அந்த மணம் எழுகிறதென்று அருகில் கூட வரவில்லை. அவாங் சாப்பிட மட்டும் உள்ளே நுழைந்து சாப்பிட்டு விட்டு வெளியே போய் உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு செய்ய வேறொன்றும் இல்லை என்பதே பெரும் உளைச்சலாவதை உணர்ந்தேன். குழாயினடியில் வாளியை வைத்து நீரைத் திறந்து வைத்தான். நீர் நிரம்பியிருந்த வாளியில் எலிப் பொறியை வைத்து விட்டு நீரை முழுமையாக நிரப்பி அமர்ந்தான்.
இரவு நேரத்துத் தொழுகையின் பின்னால் உணவு உண்பதற்கு மறுபடியும் உள்ளே வந்தான். சாப்பிட்டு விட்டு இரவில் இரு கை அண்டைகளிலும் இரும்பு கம்பிகளைச் செருகி மெதுவாக நடந்து வந்து படுக்கையில் படுத்தான். அவன் உடலில் இருந்து எழுந்த மணம் கொஞ்ச நேரத்தில் நாசியில் நுழைந்து உடலில் அசைவுகளை உருவாக்கியது. அந்த மணம் என்னிலிருந்துதான் வீசி கொண்டிருப்பதைப் போல உடல் முழுவதும் நிறைந்திருந்தது. பின்னாலில் இருந்து மெல்ல என் முதுகைத் தொட்டு அணைத்துக் கொண்டான். நான் பிணமாவதைப் போல உணர்ந்தேன். கால்கள் இயல்பாக நடுங்கி தளர்ந்தன.
இடக்காலை மட்டும் தொங்க விட்டு உடலில் இயங்கி கொண்டிருந்தான். உச்சக்கட்ட இயக்கத்தில் ‘சிண்டாய்லா’ என்ற சிணுங்கல் மெல்லியதாக வெளிப்பட்டபோது வலது கையால் என் வாயைப் பொத்தி இடது கையால் அவன் கழுத்தை இழுத்து அணைத்துக்கொண்டேன்.
J தளத்தில் இன்று இக்கதை குறித்து எழுதியிருந்தார். ஏமாற்றாத நல்ல கதை. பெண்ணின் காமம் நாகம் போல சுழன்று ஊர்ந்து செல்வதை கதை முழுவதும் காண முடிகிறது. நுண்ணிய குறியீடுகள். வாழ்த்துகள் அரவின்