யானைக் கதை

மொழியியல் பேராசிரியர் கியோம் வேர்னோ ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துவிட்டு, கேரளாவுக்கே சென்று ஆசான் வைக்கம் முகமது பஷீரை நேரில் தரிசித்து, பிரஞ்சு மொழியில் ஒரு நீள்கட்டுரை எழுதி வெளியிட்டவர். அநேகமாக பஷீர் சந்தித்த கடைசி வெள்ளைக்காரன் இவராகத்தான் இருப்பார். அந்தப் பேராசிரியரும் நானும் ஒரே இரயில் பெட்டியில், அதுவும் அருகருகாக அமர்ந்து பயணம் செய்வோம் என நான் ஒருபோதும் நினைத்திருந்ததில்லை. அவரைக் கண்டவுடன் நான் எழுந்து நின்றேன். எழுபது வயதைக் கடந்துவிட்ட பேராசிரியர் இருக்கையில் அமரும்வரை மரியாதையின் நிமித்தமாக நின்றுகொண்டேயிருந்தேன்.

பிரான்ஸிலுள்ள எல்லாப் பேராசிரியர்களையும் போலவே, இவரும் ஏராளமான ஆடைகளை அணிந்திருந்தார். தலையிலிருந்த சிவப்பு நிறமான, சிறிய குஞ்சம் வைத்த ‘பெரே’ எனப்படும் பிரஞ்சுத் தொப்பி, கழுத்தைச் சுற்றியிருந்த பின்னல் வேலைப்பாடுகளுள்ள நீளமான சால்வை, முழங்கால்களைத் தொடும் மேலங்கி, அதற்குள்ளேயிருந்த பூனை உரோமங்களோ, நாய் உரோமங்களோ அடர்த்தியாக ஒட்டிக்கொண்டு கிடந்த கருப்புக் கம்பளிச்சட்டை எல்லாவற்றையும் பேராசிரியர் பொறுமையாகக் கழற்றி, இருக்கைக்கு மேலேயிருந்த தட்டில் ஒவ்வொன்றாக வைக்கவே அய்ந்து நிமிடங்கள் ஆகிவிட்டன.

ஜன்னலோர இருக்கையில் பேராசிரியர் வசதியாக உட்கார்ந்த பின்பாக, நான் அருகேயிருந்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டேன். பேராசிரியரை நான் ஏற்கனவே சில பல்கலைக்கழகக் கூட்டங்களில் பார்த்திருக்கிறேனே தவிர, பேச வாய்ப்புக் கிடைத்ததில்லை.

கேரளாவுக்குப் போன பேராசிரியர் கியோம் வேர்னோ, மலையாள மொழியில் கவனத்தைச் செலுத்தாமல், தமிழ் மொழியில் கவனத்தைச் செலுத்தியது நம்முடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தன்னுடைய அறுபது வயதுக்கு மேல்தான் பேராசிரியர் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். பாரிஸிலுள்ள கீழைத்தேய மொழிகள் கற்கை நிலையமான ‘இனல்கோ’வில் தமிழ்த்துறையில் பயின்றவர். தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈர்ப்புள்ளவர். தமிழ் நவீன இலக்கியத்தில் வாசிப்பு உள்ளது மட்டுமின்றி, சில நவீன தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்தும் பிரஞ்சில் வெளியிட்டிருக்கிறார்.

ஜெர்மனியில் நடக்கவிருக்கும் ‘ஆசிய மொழிகள் இலக்கிய விழா’வில் கலந்துகொள்ளத்தான் இருவரும் இப்போது இரயிலில் பயணப்படுகிறோம். எங்களுக்கான இரயில் இருக்கைகளை அருகருகாகப் பதிவு செய்த, முகம் தெரியாத விழா ஏற்பாட்டாளர்களை நான் மனதால் வாழ்த்திக்கொண்டேன்.

இரயில் புறப்பட்டதும், பேராசிரியருடன் பேசுவதற்கான தருணத்தை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். பேராசிரியர்  முகத்தை மேலே அண்ணாந்தவாறு கண்களைச் செருகியிருந்தார். மழுங்கச் சிரைக்கப்பட்டிருந்த அவரது முகத்தில் சாந்தம் இருந்ததென்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு புன்னகையிருந்தது. உண்மையில் அவர் புன்னகைக்கவில்லை. அவரது முக அமைப்பே அப்படித்தான்.

ஒரு தருணத்தில், பேராசிரியர் கண்களைத் திறந்தவாறே, தனது மடியில் வைத்திருந்த பத்திரிகையை விரிக்கப் போனார். பெரிய சைஸில் ஏராளமான பக்கங்களைக் கொண்ட அந்த தினசரிப் பத்திரிகையை ஜெர்மனி போகும்வரை படித்தாலும் பக்கங்கள் முடிவுறாது. எனவே நான் முந்திக்கொண்டு, என்னைப் பேராசிரியர் கியோம் வேர்னோவிடம் அறிமுகம் செய்துகொண்டேன். நான் நினைத்திருந்தது போல அல்லாமல், பேராசிரியர் உரையாடுவதில் ஆர்வமுள்ளவராகவே இருந்தார். அவர் என்னுடைய ஒரு சிறுகதையைக் கூட இதுவரை படித்திருக்காதது எனக்கு நிச்சயமாக ஏமாற்றமாகவேயிருந்தது.

“நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்கள்?” என்று என்னிடம் கேட்டார் பேராசிரியர்.

இதற்குப் பதில் சொல்வது எனக்குக் கடினம்தான். சாதி, பெண்கள், பால்புதுமையினர், அகதி வாழ்வு, பயணம் என்றெல்லாம் நான் எழுதினாலும்; போரைப் பற்றி எழுதுபவன் என்றுதான் என்னைச் சொல்கிறார்கள். பேராசிரியரிடமாவது முழுப் பட்டியலையும் சொல்லிவிடலாம் என நினைத்து, எழுதும் வகைகளை அடுக்கினேன். இந்த ‘போர்’ விஷயத்தைப் பட்டியலின் கடைசியில் வைத்தேன்.

“யானையைப் பற்றி நீங்கள் எத்தனை கதைகள் எழுதியிருப்பீர்கள்?” என்று கேட்டார் பேராசிரியர். மிக ஆச்சரியம் தரக்கூடிய கேள்வி இது. ஆனால் பேராசிரியர் ஏதாவதொரு காரணத்தோடுதான் கேட்பார் என நான் எண்ணியதால், யானையைப் பற்றி எப்போது எழுதினேன் என ஞாபகப்படுத்திப் பார்த்தேன். அப்போதுதான், நான் இதுவரை ஒரேயொரு கதையில் கூட, ஓரிடத்தில் கூட யானையைப் பற்றி எழுதியதே இல்லை என்பது எனக்குத் தெரியவந்தது. எனவே நான் சிறு புன்னகையுடன் “இல்லை…நான் யானையைப் பற்றி எழுதியதே இல்லை” என்றேன்.

முந்நூறு கிலோ மீட்டர்கள் வேகத்தில் நாங்கள் பயணம் செய்துகொண்டிருந்த இரயிலே கவிழ்ந்துவிட்டது போல, பேராசிரியர் கியோம் வேர்னோ அதிர்ச்சியடைந்துவிட்டார். “என்ன சொன்னீர்கள்… நீங்கள் யானையைப் பற்றி எழுதியதே இல்லையா? அது எப்படிச் சாத்தியம்? என்னால் நம்ப முடியவில்லையே” என்று அவர் பதறினார். தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவன் ஓர் எழுத்தாளன் என்ற நம்பிக்கையே அவருக்குப் போய்விட்டது என்பது போலத்தான் தோன்றியது. இது என்ன விசித்திரம்!

“நான் என் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட யானையைப் பார்த்ததில்லை” என்ற உண்மையை நான் பேராசிரியரிடம் சொன்னேன். பேராசிரியரின் முகத்தில் இயற்கையாகவே ஒட்டிக்கிடந்த, அந்தப் புன்னகை கூட இப்போது காணாமல் போய்விட்டது. என்னுடன் பேசுவது நேர விரயம் என அவர் நினைத்திருக்க வேண்டும். பத்திரிகையை மறுபடியும் மடியில் பொத்தெனப் போட்டுக்கொண்டார். அவரது வாசிக்கும் மனநிலையைக் கூட நான் குழப்பிவிட்டேன் என்றே நினைக்கிறேன். பேராசிரியர் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு, முகத்தை அண்ணாந்துகொண்டார். அவர் கண்ணைத் திறந்தாரென்றால், யாழ்ப்பாணத்தில் யானையே இல்லை என்ற செய்தியை அவருக்குச் சொல்லிவிடலாம் என நான் பதற்றத்துடன் காத்திருந்தேன்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் காடும் கிடையாது, ஆறும் கிடையாது, மலையும் கிடையாது, யானையும் கிடையாது. ஆனால், யானை அவ்வப்போது அங்கே வந்து போனதுண்டுதான். எனக்குத்தான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

எனக்குப் பத்து வயதிருக்கும் என நினைக்கிறேன். புளியங்கூடல் அம்மன் கோயில் திருவிழாவுக்கு யானை வருவதாகப் பேசிக்கொண்டார்கள். யானைப் பாகன், வன்னியிலிருந்து யானையை நடத்தியே கூட்டிவருவான் என்ற தகவல் ஊர் முழுவதும் பரவியிருந்தது. யானையும் பாகனும் எங்களது ஊரைக் கடந்துதான் புளியங்கூடலுக்குப் போக வேண்டும் என்பதால், நாங்கள் நான்கைந்து நாட்களாக ஆவலுடன் தெருவில் ஒரு கண் வைத்திருந்தோம். நான் பள்ளிகூடம் போயிருந்த நேரமாகப் பார்த்து, பாகன் நைஸாக யானையைக் கூட்டிக்கொண்டு எங்களது ஊரைக் கடந்து போய்விட்டான். பள்ளிக்கூடமே வராத பொடியன்கள் யானையைப் பார்த்திருந்தார்கள். எனது அம்மாவும் அய்யாவும் கூடத் தூரத்திலிருந்து யானையைப் பார்த்திருக்கிறார்கள்.

போர் தொடங்குவதற்கு முன்னால், ஒருமுறை இந்தியாவிலிருந்து ஜெமினி சேர்க்கஸ்காரர்கள் வந்து, யாழ்ப்பாணம் முற்றவெளியில் முகாமிட்டுக் காட்சிகளை நடத்தினார்கள். அங்கே யானை மட்டுமல்லாமல் சிங்கம், புலி, கரடி எனப் பல மிருகங்கள் விளையாட்டுக் காட்டுவதாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். என்னையும் அழைத்துப் போகுமாறு வீட்டில் கேட்டபோது, டிக்கட் வாங்கப் பணமில்லை எனச் சொல்லிவிட்டார்கள். அன்று இரவு முழுவதும் நான் குமுறி அழுதாலும் யாரும் மனம் இரங்கவில்லை. யானை பார்க்க யாழ்ப்பாணத்தில் மிருகக் காட்சிச்சாலையும் இல்லை.

சின்ன வயதிலேயே புலிகள் இயக்கத்துக்குப் போய்விட்டேன். நான் இயக்க வேலை செய்த ஏழு தீவுகளிலும் ஒரு யானைகூட இல்லை. இயக்கத்திலிருந்து விலகிய பின்பு கொழும்புக்குப் போய்விட்டேன். அது கொடுமையான ஒரு காலகட்டமாக இருந்ததால், அறைக்குள்ளேயே அடைந்துகிடக்க வேண்டியதாகப் போய்விட்டது. அறையிலிருந்து நேரடியாக விமான நிலையம். அங்கிருந்து நேராக வெளிநாடு. நான் இப்போது வசிக்கும் பிரான்ஸிலும் யானை இல்லை. மிருகக் காட்சிச்சாலைக்குப் போக இதுவரை ஏனோ வாய்ப்பும் அமையவில்லை. உண்மையைச்  சொன்னால், பாரிஸ் நகரத்தில் மிருகக் காட்சிச்சாலை எங்கேயிருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. தாய்லாந்துக்குக்கு, இந்தியாவுக்கு எல்லாம் அடிக்கடி போயிருக்கிறேன். அது என்ன சாபமோ எனக்கும் யானைக்கும் பொருந்தவேயில்லை. அது என் பார்வையில் படவேயில்லை. முந்தைய பிறவியில் கொடூரமான யானை வேட்டைக்காரனாக இருந்திருப்பேன் போலிருக்கிறது.

பேராசிரியர் கியோம் வேர்னோ, மறுபடியும் கண்களைத் திறந்து பத்திரிகையைக் கையிலெடுத்தார். இந்தமுறை அவரை எப்படியாவது, எதையாவது சொல்லிக் கவர்ந்துவிடுவது என நான் முடிவெடுத்துக்கொண்டேன். அவர் பத்திரிகையை விரிப்பதற்கு முன்பாகவே “நீங்கள் யானையைப் பற்றிக் கேட்டதால் எனக்கொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. யானை என்ற வார்த்தையைக் கேட்டாலே, அந்தச் சம்பவம் என் ஞாபகத்திற்கு வந்துவிடும். ஆனால், அந்தச் சம்பவம் உங்களுக்குச் சுவாரஸியமாக இருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது” என்று சவ்வாக இழுத்தேன்.

பேராசிரியரின் முகம் படாரென வெடித்து மலர்ந்தது. யானையை பற்றிய கதையென்றாலே அதில் விஷயமிருக்கிறது என்பதுபோல அவரது கண்கள் மின்னின. அவர் ஆர்வ மிகுதியால், சிரமப்பட்டுத் தனது உடலை நடுப்பகுதியில் திருகிக்கொண்டு, இடுப்புக்கு  மேலான பகுதியை முழுவதுமாக என்னை நோக்கித் திருப்பிக்கொண்டார். கதை கேட்பதில் ஆர்வமுள்ளவர்களைப் பார்த்தாலே, நமக்கும் ஓர் உற்சாகம் தொற்றிக்கொண்டு கற்பனை கண்டபாட்டுக்கு வந்து விடுகிறது. ஆனால் இந்தக் கதையில் கூட்டிக் குறைத்துச் சொல்வதற்கு இடமில்லை. அது ‘வித்ரோ’ ஜேம்ஸுக்குச் செய்யும் துரோகமாகிவிடும்.

2

அது 1984-ம் வருடத்தின் மழைக்காலம். யாழ்ப்பாணத்துக்கு மேலே ஏழு தனித்தனித் தீவுகள் இருப்பது உங்களுக்குத் தெரியும்தானே. ஒவ்வொரு தீவுக்கும் டெல்வ்ற், வெல்ஸன், லைடன் என்ற மாதிரியாக டச்சுப் பெயர்களுண்டு. ஒல்லாந்தர்கள் இலங்கைக்கு வந்தபோது கொடுத்த பெயர்கள். அந்தத் தீவுகளுக்கான  இயக்கப் பொறுப்பாளராக வெள்ளைச் சந்திரன் இருந்தார். நான் அவருக்கு வலது கை மாதிரி என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது எனக்குப் பதினேழு வயதுதான். வெள்ளைச் சந்திரனுக்கு  வயது இருபதுக்கு மேலேயே இருக்கும். நானொரு தேர்ந்த நீச்சல்காரன். என்னை விட்டால், இந்தியாவுக்குக் கூடக் கடலால் நீந்திப் போய்விடுவேன் என்ற  நம்பிக்கை எனக்கு அப்போதிருந்தது. நீச்சல்காரர்கள் பல வேலைகளுக்காக இயக்கத்துக்குத் தேவைப்பட்டார்கள். அப்போது நாங்கள் நிலத்தில் அல்லாமல் கடலிலேயே அதிகமும் திரிந்தோம். அதனால், வெள்ளைச் சந்திரன் என்னை எப்போதும் அவருக்குப் பக்கத்திலேயே வைத்திருந்தார்.

தீவுப்பகுதிக்கான எங்களது முகாம் லைடன் தீவிலிருந்தது. முகாமென்றதும் நீங்கள் பெரிதாகக் கற்பனை பண்ணிக்கொள்ளத் தேவையில்லை. ஒரு கைவிடப்பட்ட குடிசையில், வெள்ளைச் சந்திரனும் நானும் இன்னும் இரண்டு பையன்களும் தங்கியிருந்தோம். வெள்ளைச் சந்திரனிடம் ஒரு புராதன ரிவோல்வர் இருந்தது. என்னிடம் ‘விளக்கு’ எனச் சொல்லப்படும் ஒரு சாமான் இருந்தது. சோளம் பொத்தி வடிவிலும் அளவிலுமிருக்கும் கையெறி குண்டு அது. திரியில் நெருப்பு வைத்து எறிய வேண்டும். எறிந்தால் அது வெடிப்பதும் வெடிக்காததும் நம் கையில் இல்லை. அப்போது இலங்கைப் படையினரின் நடமாட்டம் அதிகமும் இருந்ததால், இரவில் புகையிலைத் தோட்டங்களுக்குள்தான் தூங்குவோம். அங்கிருந்துகொண்டுதான் மற்றைய தீவுகளிலும் இயக்கத்தைப் பரப்ப முயற்சி செய்துகொண்டிருந்தோம்.

ஆழ்கடலுக்கு நடுவே ‘அசேன்’ என்றொரு தீவுள்ளது. மிகச் சிறிய தீவு. ஒரு கரையில் நின்று பார்த்தால், மறுகரை நடமாட்டங்கள் மிகத் தெளிவாகவே தெரியும். அரிதாகக் காணப்படும் பனை, தென்னையைத் தவிர வேறு மரங்கள் அங்கே கிடையாது. அதுவொரு வெட்டவெளி உப்புத் தண்ணித் தீவு. அப்போது அங்கே கிட்டத்தட்ட நூற்றைம்பது குடும்பங்கள் வசித்தன. அந்தத் தீவிலிருந்து பவானந்தன் என்றொருவன் எங்களோடு தொடர்பாகயிருந்தான். இயக்கப் பிரசுரங்கள், வெளியீடுகள் எல்லாவற்றையும் அவன்தான் அந்தத் தீவுக்கு எடுத்துச் சென்று இரகசியமாக விநியோகிப்பான். அந்தத் தீவுக்கு வடக்காகவும் தெற்காகவுமுள்ள இரண்டு தீவுகளிலும், இலங்கைக் கடற்படையின் முகாம்கள் இருந்தன. அசேன் தீவைச் சுற்றியுள்ள கடலில், கடற்படை வேகப் படகுகளின் கடுமையான கண்காணிப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆனாலும் அசேன் தீவு மக்கள் படகுகளில் மற்றைய தீவுகளுக்குப் பயணம் செய்தார்கள். அந்தக் கடலில் மீனவர்களின் படகுகளும் தொழில் செய்தன. சிலவேளைகளில் கடலில் வைத்து பயணிகளோ, மீனவர்களோ கடற்படையால் தாக்கப்பட்டார்கள். உப்புத் தண்ணீரோடும் ஆபத்துகளோடும் வாழ்வது அந்தத் தீவு மக்களுக்குப் பழகிப்போய்விட்டது. உயிருக்கு அஞ்சிப் பட்டினியாகவா சாக முடியும்!

சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். பவானந்தன், அசேன் தீவில் எட்டுப் பொடியன்களை எங்களது இயக்கத்துக்கு ஆதரவாகச் சேர்த்துவிட்டான். அந்தப் பொடியன்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று பவானந்தன் விரும்பினான். இல்லாவிட்டால் அந்தப் பொடியன்கள் கலைந்து வேறு இயக்கங்களுக்குப் போய்விடக் கூடும் என எங்களிடம் சொன்னான். அப்போது நாங்கள் ‘லோக்கல் ட்ரெயினிங்’ எனப்படும் ஒரு வாரகால அடிப்படை ஆயுதப் பயிற்சியை, கிராமங்களுக்குச் சென்று இளைஞர்களுக்கு இரகசியமாக வழங்கத் தொடங்கியிருந்தோம். எனவே அசேன் தீவிலும் அதை வெள்ளைச் சந்திரன் ஏற்பாடு செய்தார். அந்தப் பயிற்சியை வழங்குவதற்காக ‘வித்ரோ’ ஜேம்ஸ் யாழ்ப்பாணத்திலிருந்து எங்களிடம் அனுப்பிவைக்கப்பட்டார். அவரை நான் கடல் வழியாக, அசேன் தீவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

அப்போதெல்லாம் விடுதலைப் புலிகள் பற்றி மக்களுக்கு அதீத கற்பனைகளிருந்தன. ஒரு விடுதலைப் புலியை அவர்கள் நேரில் பார்க்க வாய்த்திருக்காவிட்டால் கூட, ஒரு புலிவீரன் எப்படியிருப்பான் என்ற கற்பனை அவர்களிடமிருந்தது. அந்தக் கற்பனையின்படி எங்களில் பெரும்பாலானோர் இருப்பதில்லை. ஏப்பை சாப்பைகளும் நோஞ்சான்களும் கூட இயக்கத்தில் இருந்தோம். ஆனால், மக்களின் கற்பனையில் உள்ளது உள்ளபடியே ‘வித்ரோ’ ஜேம்ஸ் இருந்தார்.

சற்றுக் குட்டையான கன்னங்கரேலென்ற தேகம். பயில்வான் போன்ற உடற்கட்டு. சுருட்டைத் தலைமுடி. முறுக்கிவிடப்பட்ட மீசை. கூர்மையான கண்களும் சிறிய உதடுகளும். அவருக்கு இருபத்தைந்து வயதிருக்கும். கரகரவென்ற ஒரு முரட்டுக் குரல். வாயைத் திறக்காமலேயே உரக்கச் சிரிக்க அவருக்குத் தெரியும். அப்படிச் சிரிக்கும்போது புலி உறுமுவது போலவேயிருக்கும். அவரது தோளில் தொங்கிய துணிப்பைக்குள் ஒரு ஸ்டேர்லிங் உப இயந்திரத் துப்பாக்கியிருந்தது. ‘லோக்கல் ட்ரெயினிங்’கில் சுடுவதற்கு எல்லாம் சொல்லிக்கொடுக்க மாட்டோம். தேகப் பயிற்சியுடன், துப்பாக்கியை எப்படிப் பிடிப்பது, எப்படி ‘பொஸிசன்’ எடுப்பது என்பதைத்தான் சொல்லிக்கொடுப்போம்.

லைடன் தீவின் மெலிஞ்சிமுனையில், ஒரு தோணியை நான் எற்பாடு செய்து வைத்திருந்தேன். எங்களது இயக்க ஆதரவாளரான தோணிக்காரர் என்னையும் ‘வித்ரோ’ ஜேம்ஸையும் அசேன் தீவுக்கு அழைத்துச் சென்றார். தோணியில் இயந்திரம் பூட்டி ஓடினால், ஹெலிகொப்டரிலிருந்து அடித்து விடுவார்கள். எனவே தோணிக்காரர் தாங்கு கம்பையும், கம்பு நிலத்தில் எட்டாத இடங்களில் துடுப்புக் கட்டைகளையும் உபயோகித்தே தோணியைச் செலுத்தினார். உடைகளைக் கழற்றிவிட்டு, மீனவர்களைப் போலவே உள்ளாடைகளுடன் நாங்கள் பயணித்தோம். எங்களைப் பத்திரமாக அசேன் தீவுக் கரையில் இறக்கிவிட்டு, சரியாக எட்டாவது நாள் மாலையில் வருவதாகச் சொல்லித் தோணிக்காரர் எங்களிடம் விடைபெற்றார்.

அங்கே பவானந்தன் எங்களுக்காகக் காத்திருந்தான். அந்தச் சின்னஞ் சிறிய தீவிலும்,  ஆட்கள் நடமாட்டமில்லாத, சற்றே ஒதுக்குப்புறமான இடத்தை அவன் கண்டுபிடித்து வைத்திருந்தான். அது முக்கால்வாசி இடிந்து கிடந்த தேவாலயம். டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டு, இப்போது கைவிடப்பட்டுக் கிடந்த அந்தக் கோயிலுக்குள் பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. ஜேம்ஸும் நானும் பவானந்தனின் நண்பர்கள் என்ற பெயரில் அவனது வீட்டிலேயே தங்கிக்கொண்டோம். அந்த வீட்டில் பவானந்தனுடன் அவனது முதிய பெற்றோர்கள் மட்டுமேயிருந்தார்கள். அந்தத் தீவின் சனங்களுக்கும் நாங்கள் யாரென்பது சாடைமாடையாகத் தெரிந்தேயிருக்கும். ஆனாலும் அதை அவர்கள் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் சொல்லும் பொய்களை நம்புவது போலவே நடிப்பார்கள். இயக்கப் பொடியன்கள் எது செய்தாலும், அதிலொரு அர்த்தமிருக்கும் என அவர்கள் நினைத்தார்கள்.

அடுத்தநாள் காலையில், ‘வித்ரோ’ ஜேம்ஸ் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். ஒருநாளைக்கு நான்கு மணிநேரங்கள் மட்டும்தான் பயிற்சி. பவானந்தனோடு சேர்த்து எல்லாமாக ஒன்பது பொடியன்கள் பயிற்சி பெற்றார்கள். நான் மொடல். துப்பாக்கியோடு என்னை நிலையெடுக்க வைத்து, என்னைக் காட்டி ஜேம்ஸ் புதியவர்களுக்குக் கற்பித்தார். எப்போது பயிற்சிக்கு வந்தார்களோ, அப்போதிலிருந்து அந்தப் பொடியன்கள் எங்களது இயக்க உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். எங்களது இயக்க விதிகளின்படி, இனி அவர்கள் வேறு அரசியல் இயக்கங்களில் சேர முடியாது. சாகும்வரை சேரக் கூடாது. இந்தக் கறாரான விதிகளையெல்லாம் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு நான் தான் அங்கே சொல்லிக்கொண்டிருந்தேன். ஜேம்ஸோ அதிக நேரமும் பையன்களுடன் கதைத்துச் சிரித்துக் குழந்தைபோல விளையாடிக்கொண்டிருந்தார். கண்டிப்பு என்பது அவரிடம் துப்புரவாக இல்லை. இவரிடம் பயற்சி பெற்றால், பத்தடி தூரத்திலிருக்கும் பனையைக் கூடக் குறிபார்த்துச் சுட முடியாது என நான் நினைத்துக்கொண்டேன்.

‘வித்ரோ’ ஜேம்ஸ், ஆயுதப் பொறிமுறைகளையும் போர்த் தந்திரங்களையும்  கசடறக் கற்றவர்தான். அதில் சந்தேகமேயில்லை. இல்லாவிட்டால் தலைமை இவரை ஊர் ஊராக அனுப்பி, புதிய உறுப்பினர்களுக்குப் பயிற்சியளிக்க வைக்காது. ஆனால் இவரைப் பற்றி ஒரு வேடிக்கையான கதையும் இயக்கத்துக்குள் உண்டு.

இயக்கம், ஏதோவொரு பொலிஸ் நிலையத்தைத் தாக்குவதற்காகச் சென்றிருக்கிறது. ஜேம்ஸுடன் ஏழு பேர்கள் தாக்குதல் குழுவில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் இருளில் பொலிஸ் நிலையத்தை நெருங்கித் தாக்குதலுக்குத் தயாரானபோது, ஏதோவொரு வெடிச் சத்தம் எழுந்திருக்கிறது. அதைக் கேட்டவுடனேயே ”வித்ரோ” எனக் கூச்சலிட்டவாறே ஜேம்ஸ் திரும்பி ஓடியிருக்கிறார். ஜேம்ஸின் கர்ண கடூரமான கூச்சலைக் கேட்டதும், பொலிஸ்காரர்களும் விழுந்தடித்து ஓடிப்போய்க் காட்டுக்குள் ஒளிந்துகொண்டார்கள். ஒரு துப்பாக்கிக் குண்டோ, உயிர்ச் சேதமோ இல்லாமல், அன்று அந்தப் பொலிஸ் நிலையத்தை இயக்கம் கைப்பற்றியது. ஓடிப்போன ஜேம்ஸ் எங்கெல்லாமோ சுற்றியலைந்து, அடுத்தநாள் காலையில்தான் முகாமுக்கு வந்தாராம். கேட்ட வெடிச்சத்தம் இரண்டு மைலுக்கு அப்பாலிருந்து கேட்டதாகச் சொன்னார்கள். அன்றிலிருந்து ‘வித்ரோ’ என்ற அடைமொழி ஜேம்ஸோடு ஒட்டிக்கொண்டது.

ஜேம்ஸ் என்னை ‘தம்பியா’ என்றுதான் கூப்பிடுவார். ஒருமுறை என்னுடன் பேசிக்கொண்டிருந்த போது “தம்பியா… உயிர்ச் சேதம் இல்லாமல் தமிழீழம் பிடித்தால்தான் அது வெற்றி” என்றார். “பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் கைகளில் எரியும் மெழுகுவர்த்திகளை ஏந்திக்கொண்டே அணிவகுத்துச் சென்று சர்வாதிகாரியின் கோட்டையை வீழ்த்தினார்கள்” என்றும் சொன்னார். பயிற்சி பெறும் இந்த இளைஞர்களை, இங்கிருந்து எப்படியாவது ஓட்டிக்கொண்டு போய், வன்னியிலோ மன்னாரிலோ விட்டுவிட வேண்டும் என்று நான் திட்டம் போட்டுக்கொண்டிருந்தேன். சொந்த ஊரிலேயே இருந்தால், குடும்பப் பாசம், காதல் அது இதுவென்று மனம்மாறி விடுவார்கள். ஜேம்ஸோ, “தமிழீழத்திற்குக் கல்விமான்களும் அவசியம். இந்தப் பயிற்சியை முடித்துக்கொண்டு நீங்கள் படிப்பைத் தொடர வேண்டும்” என்றெல்லாம் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லி, எனது திட்டத்தை நாசம் செய்துகொண்டிருந்தார்.

பயிற்சி தொடங்கிய இரண்டாவது நாளில், பலத்த மழை பெய்யத் தொடங்கியது. விட்டுவிட்டுப் புயலும் வீசியது. அடாது மழை பெய்தாலும் விடாமல் பயிற்சி நடைபெற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். “துவக்கு நனைந்து விடுமே தம்பியா” என்று ஜேம்ஸ் பொறுப்பில்லாமல் பேசினார். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன், நான் நனைந்தாலும் துவக்கு நனையாது” என்று நான் சொன்னேன். அது போதாதென்று, மழையைக் காரணம் காட்டி அரைவாசிப் பொடியன்கள் பயிற்சிக்கு வராமல் கள்ளம் ஒளித்துவிட்டார்கள். நானும் பவானந்தனும் ஒவ்வொரு பொடியனின் வீடாகப் போய், ஒவ்வொருத்தராகக் கூட்டிக்கொண்டு வந்தோம்.

நான்காம் நாள் காலையில், மழையும் புயலும் ஓய்ந்து வானம் வெளி(ளு)த்திருந்தது. நாளைக் காலையில் வெள்ளைச் சந்திரன் பயிற்சிகளைப் பார்வையிட வருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே நான் அதிக பரபரப்பாகயிருந்தேன். பயிற்சி அளிக்கப்படும் முறையில் ஏதாவது அதிருப்தி இருந்தால், வெள்ளைச் சந்திரன் என்னைத்தான் திட்டுவார். ஜேம்ஸைத் திட்டுவதற்கு அவருக்கு அதிகாரம் போதாது.

விடிந்தும் விடியாப் பொழுதில், ஒரு பொடியன் பரபரப்பான செய்தியைக் கொண்டு வந்தான். அசேன் தீவின் கரைக்கு இரண்டு சிங்களவர்கள் வந்திருக்கிறார்களாம். வந்தவர்களில் ஒருவன் அரைகுறையாகத் தமிழ் பேசுகிறானாம். “தம்பியா…வா! போய்ப் பார்க்கலாம்” என்றார் ஜேம்ஸ். நான் துப்பாக்கியை எடுத்துத் தயார் செய்து, பைக்குள் வைத்து ஜேம்ஸிடம் நீட்டினேன். “சனங்கள் கூடி நிற்பார்கள், சாமான் வேண்டாம்” என்றார் ஜேம்ஸ். அரைமனதோடு துப்பாக்கியை வைத்துவிட்டுப் புறப்பட்டேன். செய்தி கொண்டு வந்த பையனைத் துப்பாக்கிக்குக் காவலாக ஜேம்ஸ் நியமித்தார். பொறுப்பற்ற செயல்.

கடற்கரையில் கிராமத்து மக்கள் குழுமி நின்றார்கள். அவர்களுக்கு நடுவே, நடுத்தர வயதான இருவர் மணலில்  உட்கார்ந்திருந்தார்கள். இருவரது தேகத்திலும் அரைக் காற்சட்டைகள் மட்டுமேயிருந்தன. அவர்கள் மிகவும் உறுதியான உடற்கட்டைக் கொண்டவர்கள். தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது. ‘கடற்படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், புயலில் சிக்கி விசைப் படகு விபத்துக்குள்ளாகியோ, அல்லது ஏதாவதொரு இயக்கத்தின் தாக்குதலிலிருந்து தப்பித்தோ இந்தக் கரைக்கு நீந்தி வந்திருக்கலாம்’ என்றவாறு நான் ஊகித்தேன். ஜேம்ஸின் உத்தரவுக்காகக் காத்திருந்தேன். கண்ணைக் காட்டினாரென்றால், சிங்களவர்கள் மீது பாய்ந்துவிடுவேன்.

ஆனால், மானங்கெட்ட ‘வித்ரோ’ ஜேம்ஸ் என் பக்கமே திரும்பாமல், அந்தச் சிங்களவர்களிடம் போய் “ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்… என்னுடைய பெயர் ஜேம்ஸ். உங்களுடைய பெயர் என்ன? எந்த ஊர்?” என்று கேட்டார். இந்த ஜேம்ஸுக்கு மூளை கெட்டுவிட்டாதா என்ன? நான் அசேன் தீவில் மட்டுமல்லாமல், பவானந்தனிடமும் பயிற்சி பெறும் பையன்களிடமும் இவரது பெயரை மறைத்து வைத்திருக்கிறேன். ‘மாஸ்டர்’ என்றுதான் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளேன். இவரோ சிங்களவர்களிடம் தனது பெயரை இளித்துக்கொண்டே சொல்கிறார்.

அந்தச் சிங்களவர்களுடைய பெயர்கள் சந்திரபாலாவோ இந்திரபாலாவோ… இப்போது எனக்குத் தெளிவாக ஞாபகமில்லை. அவர்கள் இருவரும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். அரைகுறையாகத் தமிழ் பேசத் தெரிந்தவன் பேச, மற்றவன் வாயை மூடி அழுதுகொண்டிருந்தான். அவர்கள் கற்பிட்டியைச் சேர்ந்த மீனவர்களாம். மன்னார் குடாவில் கட்டுமரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, புயலில் சிக்கிக் கட்டுமரம் காற்றில் இழுத்துவரப்பட்டதாம். புயலால் கொந்தளித்த அலைகளின் வேகத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், நேற்றே கட்டுமரம் பிரிந்துவிட்டதாம். பிரிந்த ஒரு மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு, அசேன் தீவுக் கரையில் ஒதுங்கினார்களாம்.

“எங்கே அந்த மரக்கட்டை” என நான் கேட்டேன். “நிலத்தில் கால் எட்டுமளவு தண்ணீருக்குள் வந்தவுடன் அதை விட்டுவிட்டோம், அதையும் இழுத்துக்கொண்டு கரைக்கு வர எங்களிடம் பெலமில்லை” என்றான் அந்தச் சிங்களவன். அதை என்னால் நம்ப முடியாமலிருந்தது. கற்பிட்டி எங்கேயிருக்கிறது, அசேன் தீவு எங்கேயிருக்கிறது! நடுவிலுள்ள தீவுகளிலோ கரைகளிலோ ஒதுங்காமல் எப்படி இவர்கள் இங்கே வந்தார்கள்? அதுவும் இங்கே பயிற்சி நடக்கும் நேரத்தில்?இவர்கள் புலனாய்வுத்துறையினராகக் கூடயிருக்கலாம்.

நான் இப்படியெல்லாம் மண்டையைக் கசக்கி யோசித்துக்கொண்டிருக்க, ஜேம்ஸோ வந்தவர்களை உபசரிப்பதில் மும்முரமாகயிருந்தார். தனது சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்து ஒரு சிறுவனிடம் கொடுத்து, தேநீரும் பிஸ்கெட்டும் வாங்கிவரச் சொன்னார். யாரையாவது கொலை செய்யும் முன்பு, அவர்களைப் பசியாற வைப்பது இயக்கத்தில் ஒரு நடைமுறை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜேம்ஸ் என்னதான் விளையாட்டுத்தனமாக இருத்தாலும் விஷயகாரன்தான் என நினைத்தேன். இல்லாவிட்டால் இயக்கம் இவரைப் பயிற்சியாளராக நியமித்திருக்காதே.

அப்போதெல்லாம், எங்களது பகுதிக்குள் தெரிந்தோ தெரியாமலோ நுழைந்த எந்தச் சிங்கள மனிதரும் உயிரோடோ பிரேதமாகவோ திரும்பிப் போனதில்லை. ஓர் இயக்கம் பாவம் பார்த்துவிட்டாலும், அடுத்த இயக்கத்திடம் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். சிலநாட்களுக்கு முன்பு, சமாதானத்தை நாடுவதாகச் சொல்லிக்கொண்டு வந்த ஒரு புத்த பிக்கு, யாழ்ப்பாண நகர வீதிகளிலே உடுக்கு மாதிரி ஒரு சிறிய மேளத்தைத் தட்டிக்கொண்டு திரிந்தார். அவரையே இயக்கம் காணாமற்போகச் செய்துவிட்டது. கொல்லும் முன்பு நல்லவிதமாகக் கவனித்து உணவு கொடுத்திருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். எங்களது பகுதிக்குள் நுழையும் சிங்களவருக்கு இறுதி உணவு எங்களாலேயே வழங்கப்படும். அதுதான் நடைமுறை.

இது தெரியாமல், மணலில் குந்தியிருந்த இரண்டு சிங்களவர்களும் தேநீரில் தோய்த்து பிஸ்கட்டைத் தின்றுகொண்டிருந்தார்கள். ஜேம்ஸ், பவானந்தனை அழைத்து, வீட்டில் கொடியில் கிடக்கும்  இரண்டு சாரங்களையும் இரண்டு சட்டைகளையும் எடுத்துவரச் சொன்னார். அதில் ஒரு சாரமும் சட்டையும் என்னுடையது. உணவு கொடுத்துவிட்டுக் கொல்வது மனிதாபிமானம். ஆனால் உடுத்திப்படுத்தித்தான் கொல்ல வேண்டுமென்று எந்த நடைமுறையும் இல்லை. நாங்களே ஆளுக்கு ஒரு சாரமும் ஒரு காற்சட்டையும் ஒரு மாற்றுச் சட்டையும் ஒரு ஜட்டியும்தானே வைத்திருக்கிறோம். என்னிடம் செருப்புக் கூடக் கிடையாது. ஜேம்ஸ் டவுனிலிருந்து வந்திருப்பதால் அவரிடம் செருப்பிருந்தது.

இதற்குள் யாரோ ஒருவர், ஓலைப் பெட்டி நிறையப் புட்டும் சம்பலும் கொண்டுவந்து சிங்களவர்களுக்குக் கொடுத்தார். அவற்றையும் முழுவதுமாகச் சிங்களவர்கள் சாப்பிட்டு முடித்தார்கள். இரண்டு நாட்களாகப் பட்டினியோடு கடலில் தத்தளித்தவர்கள், உப்புத் தண்ணீர் முழுங்கியே வயிறு ஊதிப் போய்க் கிடப்பார்கள். அவர்களால் வாந்தி எடுக்க முடியுமே தவிர சாப்பிட முடியாது. ஆனால், இந்த இந்திரபாலாவும் சந்திரபாலாவும் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுகிறார்கள். அவர்களும் இதுதான் தங்களது இறுதி உணவென்று உணர்ந்திருப்பார்கள் என்றே நினைத்தேன்.

உடைகள் வந்ததும், சிங்களவர்கள் அவற்றை அணிந்துகொண்டார்கள். காலை எட்டு மணிக்கு, அசேன் தீவிலிருந்து ஒரு பயணிகள் இயந்திரப் படகு புறப்படும். அந்தப் படகு சுற்றிவளைத்துக்கொண்டு காரைதீவு கடற்படை முகாமுக்குச் சென்று, அங்கே சோதனைகளை முடித்துக்கொண்டுதான் லைடன் தீவுக்குப் போகும். அந்தப் படகில் ஏற்றிச் சிங்களவர்களை அனுப்பிவைப்பதாக ‘வித்ரோ’ ஜேம்ஸ் முடிவெடுத்தார். நான் அவரை எதிர்த்து எதுவும் பேச முடியாது. ஆனாலும் அவரிடம் “கற்பிட்டியிலிருந்து இவ்வளவு தூரம் இவர்கள் வர வாய்ப்பில்லையே” என்று மெதுவாக முணுமுணுத்தேன். “ஒல்லாந்தரே இங்கே வந்திருக்கும் போது, இவர்கள் வரமாட்டார்களா?” என்று நேரகாலம் தெரியாமல் ஜேம்ஸ் பகிடி விட்டார்.

சிங்களவர்கள், அசேன் தீவு இறங்குதுறையிலிருந்த ஒவ்வொருவரைப் பார்த்தும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள். கற்பிட்டிப் பக்கம் வந்தால் வீட்டுக்கு வருமாறு அழைப்பு வேறு கொடுத்தார்கள். அந்தச் சிங்களவர்களிடம் “காரைதீவு கடற்படை முகாமில் இறங்கினால், கடற்படையினர் பத்திரமாக உங்களைக் கற்பிட்டிக்கு அனுப்பி வைப்பார்கள், வேறெங்காவது போனீர்கள் என்றால் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்” என வழிக்கு வழி சொல்லி ஜேம்ஸ் அனுப்பிவைத்தார்.

சிங்களவர்களை ஏற்றிச் சென்ற இயந்திரப் படகு அந்தப் பக்கம் விரைந்து போக, இந்தப் பக்கத்தால் வெள்ளைச் சந்திரனும், செல்வதி என்ற எங்களது ஆதரவாளனான பொடியனும் மரத் தோணியில் வந்தார்கள். செல்வதி தோணி செலுத்துவதில் வல்லவன்.

வெள்ளைச் சந்திரன் பயிற்சியைப் பார்வையிடத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார். ஆனால் பயிற்சியாளர் ஜேம்ஸ், கரையில் நின்று சிங்களவர்களுக்கு ‘டாட்டா’ காட்டிக் களைத்துப் போயிருந்தார். வெள்ளைச் சந்திரனை அழைத்துக்கொண்டு, ஜேம்ஸ் பயிற்சி நடைபெறும் இடிந்த  கோயிலுக்குப் போனார். நானோ துப்பாக்கியை எடுத்து வருவதற்காக, பவானந்தன் வீட்டை நோக்கி ஓடினேன்.

நான் கோயிலுக்குத் துப்பாக்கியோடு போனபோது, வெள்ளைச் சந்திரனும் ஜேம்ஸும் அமைதியாக, ஆனால் ஆளையாள் விட்டுக்கொடுக்காமல் தர்க்கித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது வெள்ளைச் சந்திரன் என்னைப் பார்த்த பார்வைக்கு அர்த்தம் “நாயே நீயும் இதற்கெல்லாம் உடந்தையா?” என்பதுதான் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

“ஜேம்ஸ்! நீங்கள் அந்தச் சிங்களவர்களை அப்படியே விட்டது சரியற்றது… அவர்கள் காரைதீவு கடற்படை முகாமில் உங்களைப் பற்றி உளவு சொல்வார்கள். நாங்கள் ஏற்கனவே ஆபத்திலுள்ளோம்.”

ஜேம்ஸ் தலையைக் குறுக்குமறுக்காக ஆட்டிக்கொண்டே சொன்னார்:

“இல்லை…அவர்களுக்கு நாங்கள் புலிகள் என்று தெரியாது…”

“ஒரு புத்தியுள்ள புலனாய்வாளனுக்கு உங்களது நடவடிக்கைகளிலிருந்தே, ஒரே நிமிடத்தில் உங்களை அடையாளம் கண்டுவிட முடியும். அதுவும் ஒன்றுக்கு இரண்டு பேராக வந்திருக்கிறார்கள்”.

“அப்படியானால் நான் அவர்களை என்னதான் செய்திருக்க முடியும் மச்சான்?”

வெள்ளைச் சந்திரன் ஒருகணம் ஜேம்ஸையே உற்றுப் பார்த்தார். சந்திரனது வாய் இகழ்ச்சியாகக் கோணிக்கொண்டது. “ஏன் இந்த ஊரில் ஒரு மண்வெட்டி கிடைக்காதா உங்களுக்கு?”

“அவர்களை உயிருடன் புதைத்திருக்க வேண்டும்… அப்படித்தானே”?

வெள்ளைச் சந்திரன் கடலைப் பார்த்துக்கொண்டு சொன்னார்:

“ஐயோ! அந்தப் பாவம் ஏன் நமக்கு? அதுதான் சாமான் வைத்திருக்கிறீர்களல்லவா. இரண்டு குண்டுகளைச் செலவழித்திருந்தாலும் இயக்கத்துக்கு நட்டமல்ல. அது உண்மையிலேயே லாபம்தான்”

ஜேம்ஸ் அமைதியாக நின்று கொண்டிருந்திருந்தார். அவரது இடது கால் மணலைக் கிளறியபடியிருந்தது. பின்பு மெதுவாகச் சொன்னார்:

“ஒரு பிரேதத்தோடு என்னால் புழங்க முடியாது!”

‘கிழிந்தது போ’ என நான் நினைத்துக்கொண்டேன். வெள்ளைச் சந்திரனும் அப்படித்தான் நினைத்திருப்பார். எப்படியும் இந்த விஷயத்தை வெள்ளைச் சந்திரன் தலைமைக்கு அறியக் கொடுப்பார். ‘வித்ரோ’ ஜேம்ஸ் வீணாகச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். உயிர்ச் சேதம் இல்லாமல் தனிநாடு பிடிக்கிற ‘தியரி’யை ஜேம்ஸ் எங்கிருந்து கண்டுபிடித்தார் என எனக்குத் தெரியவில்லை. ஒருநாளைக்கு நேரம் கிடைக்கும்போது, இதுபற்றி அவரிடம் கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள் காலம் முந்திக்கொண்டது.

பயிற்சியை நிறுத்திவிட்டு, ஜேம்ஸையும் என்னையும் அங்கிருந்து அழைத்துச் செல்லப் போவதாக சற்றே எரிச்சலுடன் வெள்ளைச் சந்திரன் சொன்னார். ஜேம்ஸ், சந்திரனது கையைப் பிடித்து முரட்டுத்தனமாக ஆட்டியவாறே “இன்னும் இரண்டு நாள்தானே… முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று சிரித்தார். அன்று மாலையில் அசேன் தீவிலிருந்து வெள்ளைச் சந்திரன் கிளம்பும் போது, “கவனமாக இருங்கள்” என மறுபடியும் மறுபடியும் எச்சரித்துவிட்டே போனார்.

அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. அந்தச் சிங்களவர்களைப் பற்றியே நினைத்துக்கொண்டு படுத்திருந்தேன். துப்பாக்கியைத் தயாராகத் தலைமாட்டிலேயே  வைத்திருந்தேன். ஜேம்ஸோ குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை நான்கு மணியளவில், ஒரே நேரத்தில் அசேன் தீவின் நாய்களெல்லாம் ஓலமிட்டுக் குரைக்கத் தொடங்கின. நான் துள்ளியெழுந்து பாயில் உட்கார்ந்தேன். வெளியே சிலர் நடமாடும் சரசரப்பைக் கேட்டேன்.

துப்பாக்கியை இறுகப் பற்றியவாறே வாத்து நடையில் பதுங்கிப் பதுக்கி வெளியே போனேன். பவானந்தனின் வீடு தெருக்கரையோரமாகவே இருந்தது. வேலியோரத்தில் குந்திக்கொண்டு, வேலியின் கருக்கு மட்டை இடைவெளிக்குள்ளால் தெருவைப் பார்த்தேன். நான்கைந்து டோர்ச் லைட்டுகள் தெருவில் அலைந்தன. சிங்களத்தில் கிசுகிசுப்பது அதிகாலை அமைதியில் தெளிவாகவே கேட்டது. கடற்படை அசேன் தீவுக்குள் இறங்கிவிட்டது.

அப்படியே நகர்ந்து பக்கவாட்டு வேலிக்குப் போனேன். பக்கத்து வீட்டு வளவுக்குள் சிலர் ஓசைப்படாமல்  செல்வதை உணர்ந்தேன். காதலியைக் காதலன் கூப்பிடும் தொனியில் “ஜேம்ஸ்…ஜேம்ஸ்” என அழைத்துக்கொண்டே அந்த வீட்டுக் கதவை மெதுவாகத் தட்டும் சத்தம் கேட்டது. வாத்து நடையில் போன நான், ஓநாய் பாய்ச்சலில் பவானந்தனின் வீட்டுக்குள் பாய்ந்தேன். ஜேம்ஸைத் தட்டி எழுப்பினேன். முனகிக்கொண்டே எழுந்த ஜேம்ஸின் கையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு “கடற்படை சுற்றி வளைத்துவிட்டது” என்றேன். ஜேம்ஸ் மறுகணமே என் காதில் “வித்ரோ” என்றார்.

நாங்கள் வீட்டின் பின்பக்கத்து வேலிக்குள்ளால் புகுந்து வெளியே வந்தோம். அங்கே படையினரின் நடமாட்டமில்லை. அப்படியே இருளோடு இருளாகப் பதுங்கிப் பதுங்கிக் கடற்கரையை நோக்கி நகர்ந்தோம். தெற்குக் கடலுக்குள்ளிருந்து வெளிச்சம் பாய்ச்சியபடியே எழுந்த ஹெலிகொப்டர் ஒன்று அசேன் தீவுக்கு மேல் சுற்றத் தொடங்கியது.

நாங்கள் இருவரும் கடற்கரையோரமாக இருந்த ஈச்சம்  புதருக்குள் மறைந்திருந்தோம். எப்போது வேண்டுமானாலும் இந்தப் புதரை கடற்படையினர் சுற்றி வளைத்துவிடலாம். இல்லாவிட்டாலும் இன்னும் ஒரு மணிநேரத்தில் சூரிய வெளிச்சம் இந்தத் தீவின் மீது விழுந்துவிடும். அந்த வெளிச்சத்திற்குள் நாங்கள் ஒளிந்திருக்க வாய்ப்பேயில்லை. கடற்படையினருக்கு ஜேம்ஸ் இங்கே இருப்பது தெரிந்துவிட்டது. பேர் சொல்லித் தேடுமளவுக்கு ஆகிவிட்டது. இவரைப் பிடிக்காமல் அவர்கள் திரும்பப் போவதில்லை. அப்போது தீவின் கிழக்கு முனையில் இரண்டு வெடிச் சத்தங்கள் கேட்டன.

“அந்தச் சிங்களவர்கள் செய்த வேலை” என ஆத்திரத்தோடு ஜேம்ஸிடம் சொன்னேன்.

“இல்லை தம்பியா… அவர்கள் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் மீன்பிடிகாரர்கள்” என்றார் ஜேம்ஸ்.

“உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று எரிச்சலோடு கேட்டடேன்.

“ஒரு மீனவனுக்கு இன்னொரு மீனவனை அடையாளம் தெரியாமல் போகாது தம்பியா” என்றார் ஜேம்ஸ்.

இப்போது அசேன் தீவின் நடுவாக வெடிச் சத்தம் கேட்டது. ஹெலிகொப்டர் ஊர்வது போல, மிகத் தாழ்வாக ஊர்மனைக்குள் பதிந்து எழுந்துகொண்டிருந்தது. மேற்கேயிருந்த  வெல்ஸன் தீவின் கலங்கரைவிளக்கம் ஒளிர்வது அவ்வப்போது எங்களது கண்களுக்குத் தெரிந்தது. “இங்கிருந்து  வெல்ஸன் தீவு எவ்வளவு தூரம்?” எனக் கேட்டார் ஜேம்ஸ். “மூன்று மைல்களுக்கும் குறைவுதான்” என்றேன். “நிலம் வெளிக்க முன்பாகக் கடலுக்குள் இறங்கி நீந்திப் போய்விடுவோம்” என்றார் ஜேம்ஸ். எங்கள் முன் வேறு எந்த வழியுமேயில்லை.

நானும் ஜேம்ஸும் ஆடைகளைக் களைந்துவிட்டு ஜட்டியோடு நின்றோம். துப்பாக்கியையும், கையெறிகுண்டையும் உடைகளில் சுற்றி, மணலில் குழி தோண்டிப் புதைத்தோம். பின்பு மணலில் பதுங்கிப் போய்க் கடற்தாயின் மடிக்குள் புகுந்துகொண்டோம். எங்களுக்கு வெல்ஸன் தீவின் கலங்கரைவிளக்கம் வழி காட்டிக்கொண்டிருந்தது.

தடுத்து வந்த அலைகளின் மீது ஏறி ஏறி முன்னே சென்றுகொண்டிருந்தோம். திடீரென ஜேம்ஸ் “தம்பியா…இருவரும்  சேர்ந்து போவது நல்லதல்ல” என இரைந்து சொல்லிவிட்டு, என்னிடமிருந்து பிரிந்து போனார். மறுபடியும் இருவரும் எந்த இடத்தில், எப்போது சந்திப்பது என்பது பற்றியெல்லாம் நாங்கள் எதுவும் தீர்மானம் செய்யவில்லை. அப்படிச் செய்யவும் முடியாது. நீரின் தடங்கள் சுழலாலானவை.

அலைகளோடு மோதி மோதி நான் வெல்ஸன் தீவை நெருங்கும்போது, தொழில் முடிந்து மீன்பிடி வள்ளங்கள் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றில் ஏறிக்கொண்டேன். வள்ளத்திலிருந்த மீனவர்கள், அசேன் தீவைச் சுற்றிக் கடற்படையின் விசைப் படகுகள் திரிகின்றன என்றார்கள். என்னைப் பத்திரமாக லைடன் தீவுக்கு அந்த மீனவர்களே கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.

நான் லைடன் தீவின் கண்ணகையம்மன் துறையை நெருங்கும்போதே, அங்கே செல்வதி நின்றிருப்பதைப் பார்த்தேன். அவன் என்னைக் கண்டதும் பாய்ந்து ஓடிவந்து “வெள்ளைச் சந்திரனை கடற்படை பிடித்துவிட்டது” என்றான். எனக்கு அய்ந்தும் கெட்டு அறிவும் கெட்டுவிட்டது.

நேற்று மாலை, செல்வதியும் வெள்ளைச் சந்திரனும் அசேன் தீவிலிருந்து புறப்பட்டுத் தோணியில் வந்துகொண்டிருந்த போது, லைடன் தீவுக்கு ஒரு மைல் தூரத்தில் வைத்து, கடற்படையினரின் விசைப் படகொன்று இவர்களை நோக்கி வந்திருக்கிறது. அந்தப் படகு இவர்களைத் துரத்திக்கொண்டுதான் வருகிறது என்பது உறுதியானவுடனேயே, வெள்ளைச் சந்திரன் ரிவோல்வரையும் சயனைட் குப்பியையும் கடலுக்குள் வீசிவிட்டுக் கைகளை உயர்த்திக்கொண்டே தோணிக்குள் எழுந்து நின்றுவிட்டாராம். செல்வதி தோணியைக் கைவிட்டுவிட்டுக் கடலுக்குள் குதித்து முழ்கிவிட்டான்.

நான் ‘வித்ரோ’ ஜேம்ஸுக்காகக் காத்திருந்தேன். வெல்ஸன் தீவுக்கு ஆளனுப்பி விசாரித்தபோது, அங்கே அவர் போயிருக்கவில்லை என்பது தெரியவந்தது. ஜேம்ஸிடமிருந்து ஏதாவது செய்தி வரும் என லைடன் தீவிலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். மூன்று நாட்களின் பின்பு அந்தச் செய்தி வந்தது. பருத்தியடைப்புக் கரையில் ஒரு பிரேதம் அடைந்திருப்பதாக மக்கள் பேசிக்கொண்டார்கள். உப்பு நீருக்குள் ஊறிப்போய், ஊதிப் பெருத்திருந்த அந்த பிரேதம், ஒரு யானையைப் போல கடற்கரையில் கிடக்கிறது எனச் சொன்னார்கள். நான் அந்தப் பிரேதத்தைப் பார்க்க விரும்பவில்லை.

பேராசிரியர் கியோம் வேர்னோ தனது உடலை நேராக்கிக்கொண்டு அண்ணாந்து பார்த்தார். மூக்குக் கண்ணாடியைக் கழற்றிச் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டே “உண்மைதான்… ஒரு யானையை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு, யானையைப் பார்த்திருக்க வேண்டியதில்லை” என்றார். அவரது முகத்தில் அந்தப் புன்னகை அப்படியேயிருந்தது.

16 comments for “யானைக் கதை

  1. Velmurugan lyricist
    January 1, 2021 at 1:44 am

    Wow.super.

    • நெல் மலர் கருந்துளை
      January 19, 2021 at 5:24 pm

      அருமையான த்ரில் நிறைந்த கதை,சிறப்பு

  2. Appu
    January 1, 2021 at 1:57 am

    கதையின் இறுதி வரை படித்து வருவதற்குள் எனக்கு மூன்று நான்கு முறை இவர் யானையைப் பற்றி குறிப்பிட வில்லையே என்ற கேள்வி எழுந்தது அதுவே இந்த சிறுகதையின் இறுதியில் தாக்கத்தில் நிறைவடைந்துவிட்டது, துக்கத்துடன்!

  3. January 1, 2021 at 8:03 am

    உண்மைதான் யானையை ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு அதைப் பார்த்திருக்க வேண்டியதில்லை.
    பேராசிரியரின் பார்வையில் நோக்கின் நான் தப்பித்துவிட்டேன் ”பணிக்கன்” என்றொரு நாவல் அத முழுக்க முழுக்க யானை பிடித்தலைப் பற்றியது.

  4. அருட்செல்வன். செ.
    January 1, 2021 at 2:27 pm

    யாழ்ப்பாணத்துச் சொல்லாடல்கள் பரிச்சயம் என்பதால், கதையின் ஒவ்வொரு நகர்வையும் முழுமையாக ரசிக்க முடிந்தது. யானையை விட, ஜேம்ஸின் இயல்பான செயல்பாடுகளும், கதாசிரியரின் நியாயமான ஐயப்பாடுகளும், கடைசி வரை ஒரு த்ரில்லரைப் போல என்னை இழுத்துச் சென்றது. சிங்களர்கள், ஜேம்ஸ் நம்பியது போலவே மீனவர்களாகவே இருந்துவிட வேண்டும் என்ற நப்பாசை இருந்துகொண்டே இருந்தது. போர்ச்சூழலை மையமாகக் கொண்ட இது போன்ற அற்புதமான கதைகள் வாழ்வு குறித்த நிறைய கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருக்கின்றன. ஆண்டின் முதல் நாளில் வாசித்த முதல் கதை, முத்தான கதை.

  5. ஸ்ரீகாந்தன்
    January 1, 2021 at 5:47 pm

    ‘வித்ரோ’ ஜேம்ஸ். பெயரும், பாத்திரமும் அருமை. வெள்ளைச் சந்திரனால் விஷயம் மேலிடத்திற்கு போக, முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிந்திருந்ததாலோ தானாக எல்லோரிடமிருந்தும் ‘வித்ரோ’ ஆகிப் போனாரோ?..

  6. January 2, 2021 at 4:05 am

    அற்புதம். கடைசி பந்தியைக் காணும்வரை ‘எங்கு இன்னும் கண்ணுல காட்டலையே?’ என்றே வாசித்து முடித்தேன். அற்புதம்.

  7. Jegan -Canada
    January 4, 2021 at 11:41 pm

    அருமை- மிகவும் ரசனையான வாசிப்பு ! யானையையும், இயக்கப் போர் கால நிகழ்வுகளையும் ஒரு புள்ளியில் இணைத்து புனைவு கதை சொல்லும் திறமை ஷோபா சக்தியின் தனித்துவம் !

  8. sv
    January 5, 2021 at 12:35 pm

    எழுத்துநடை மகிழ்வூட்டுகிற அழகிய சிறிய வாக்கிய நடை. நகைச்சுவையும் வலியும் நிறைந்த அருமையான சிறுகதை.
    நான் இக்கதையில் புரிந்துகொண்டது, இவ்வளவு போராட்டமும் எந்த பலனும் அளிக்காமால் வீணாய் போனது என்பதுவே. எவ்வளவு இடர்பாடுகள். எத்தனை எத்தனை இழப்புகள். வாழ்வா சாவா என்கிற போராட்டங்கள் நிறைந்த காலகட்டம்.
    இதற்குமேல் யானையை இங்கே நுழைத்திருப்பது, யானை இருந்தாலும் பொன், இறந்தாலும் பொன் என்பதைப்போல, போர்க்காலம் என்பது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டாலும், அதன் சுவடு என்பது காலத்திற்கும் அழியாதது. அது மட்டுமல்லாமல் அங்கே பங்கேற்றவர்களை வரலாறு போற்றும். மற்றும் தொடர்ந்து அச்சூழல் பல பரிமாணங்களைத் தன்னுள் தேக்கி பல பரிணாமங்களைக் காணும் என்பதும் காலத்தின் அவசியம்.
    வலிகளையும் வேதனைகளையும் எப்படி வாசக இதயத்தைக் கட்டிப்போடுகிற எழுத்தாக மாற்ற முடியும் என்கிற உத்தியை நன்கு அறிந்து எழுதும் ஆற்றலுள்ள படைப்பாளி ஷோபாசக்தி.
    வாழுத்துகள்.

    ஸ்ரீவிஜி

    • sv
      January 5, 2021 at 12:39 pm

      //வாழ்த்துகள்//

  9. கதிர்பாரதி
    January 8, 2021 at 9:26 pm

    நல்ல கதை

  10. Maniramu Maniramu
    February 3, 2021 at 3:24 pm

    நிற்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது யானையின் பிளிறல். ஆனால் பக்கத்தில் யானை இல்லை!

  11. Maniramu Maniramu
    February 3, 2021 at 8:34 pm

    செவிப்பாறைகளில் எதிரொலிக்கிறது
    யானையின் பிளிறல்!

  12. S.v.k
    February 6, 2021 at 11:25 pm

    Good story

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...