திரைப்பாடல்களைக் கூர்ந்து கேட்பதும், அவை மனதில் பதிந்ததும், சன்னமாக முனகிக்கொள்வதும் எனக்கு சுமார் பத்துவயதிலிருந்தே வழக்கமாக இருந்தது. ஆனால் இசையை முறையாகக் கற்கவேண்டும் என்றோ இசைக்கருவிகளை வாசிக்கவேண்டும் என்றோ தோன்றியதில்லை. பின்னாளில் ஶ்ரீபெரும்புதூரில் வேலைக்குச் சென்றபோது கிடார் வாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை பிறந்துவிட்டது. ஏன் குறிப்பாக கிடாரைத் தேர்வுசெய்தேன் என்பதற்கு இன்றுவரை காரணம் கிடைக்கவில்லை.
நான் வேலைசெய்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் நன்றாக கிடார் வாசிப்பார் என்று கேள்விப்பட்டேன். அவர் மலையாளி. என்னுடைய வசிப்பிடத்திலிருந்து இரண்டுதெரு தள்ளிதான் அவருடைய அறை. அவரைச் சந்திக்க விரும்பினேன். அவருடன் நேரடிப்பழக்கமில்லை என்பதால் இருவருக்கும் பொதுநண்பர் ஒருவரைத் துணைக்கு அழைத்தேன். பொதுநண்பர் என்னை மேலும்கீழும் பார்த்து, ‘இப்ப எதுக்கு இந்த வேலயத்த வேல?’ என்றார். வற்புறுத்தி அழைத்துக்கொண்டு போனேன்.
இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க அந்த மலையாளி எங்களை வரவேற்றார். கூச்சசுபாவியாக இருந்தார். அளந்து அளந்து பேசினார். பேச்சைத் தொடங்கும்போதெல்லாம் மெல்லிய சிணுங்கல் போன்றொரு சிரிப்பை உதிர்த்தார். சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தபின், ‘கிடார் வாசிச்சிக் காட்டமுடியுமா?’ என்றார் பொதுநண்பர். ‘ஓ, நிச்சயமா’ என்று சொல்லித் தன் கிடாரை எடுத்துக்கொண்டுவந்தார்.
சுருதி சேர்க்க ஆரம்பித்தவர் கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகியும் முடிக்கவில்லை. இடையில் ஒரு சொல்லும் பேசவில்லை. நான் பொறுமையை முற்றாக இழந்துவிட்டேன். ஆனால் இலகுவாக இருந்த அவருடைய முகபாவம் கையில் கிடாரை எடுத்ததிலிருந்து கடுமையாக மாறிவிட்டதைப்போலத் தெரிந்ததால் இடையில் குறுக்கிடவும் அச்சமாக இருந்தது. வானத்தில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கிய கதையாக இப்படி அழைத்துவந்து சிக்கவைத்துவிட்டானே என்று பொதுநண்பர்வேறு என்னையே முறைத்துக்கொண்டிருந்தார். நான் அதைக் கவனிக்காததுபோல இருந்தேன்.
ஒருவழியாக சுருதி சேர்ந்தது. தேடிவந்து வாசிக்கச்சொல்லிக் கேட்ட எங்களைத் தேர்ந்த இசை ரசிகர்கள் என்று அவர் மதிப்பிட்டிருக்கவேண்டும். மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதத்தை மழையாகப் பொழிந்தார். செவிக்கு இனிமையாக இருந்தாலும் அவர் சரியாகத்தான் வாசிக்கிறாரா என்பதைக் குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அவர் வாசிக்கும் இசைத்துணுக்கு இன்னதென்று தெரிந்தால்தானே?
ஐந்து நிமிடம் இசைமழை பொழிந்து அவர் நிறுத்தியதும், நல்லவேளையாக, பொதுநண்பர் சற்றுத்துணிந்து, ‘லஜ்ஜாவதியே வாசிக்கமுடியுமா?’ என்றார். அந்த மலையாளத் திரைப்பாடல் அப்போது வெளியாகி கேரளம் மட்டுமின்றி தமிழகத்திலும் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. ஞானசூன்யங்கள் என்று அவர் நினைத்திருக்கலாம். இருந்தாலும், ‘ஓ, நிச்சயமா’ என்றார். அற்புதமாக வாசித்தார். அதிலும் ‘மனச கொட்டார கெட்டினகத்துள்ள ரோஜா ராஜ ராணி’ என்ற இடத்தைக் குழைவாக அவர் வாசித்தவிதம் பாடலின் அசல்வடிவத்தை விடவும் மேம்பட்ட வடிவமாகத் தோன்றியது. அவரது தாய்மொழிப்பாடல் என்பதால் தோய்ந்து வாசிக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
அவர் வாசித்து முடித்ததும் இனி பொறுப்பதற்கில்லை என்று, ‘நானும் கிடார் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்றேன். ‘ஓ, நல்லது’ என்றார். உங்களிடமே கற்றுக்கொள்ளலாமா? என்றேன். ‘இல்லை. மன்னிக்கவும். நான் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். மேலும் எனக்கு நேரமுமில்லை’ என்றார். அவருக்குக் கற்பிப்பதில் ஆர்வமில்லை என்பதைப் புரிந்துகொண்டு, ‘உங்களைப்போல வாசிக்கவேண்டுமென்றால் தோராயமாக எவ்வளவு நாளாகும்? என்றேன். ‘ஐந்தாறு ஆண்டுகள் ஆகலாம். ஆளைப்பொறுத்தது. இரண்டு ஆண்டுகளில்கூட கற்றுக்கொண்டவர்கள் இருக்கின்றனர்’ என்றார். நானும் பொதுநண்பரும் நன்றிசொல்லி விடைபெற்றோம்.
அவ்வளவு அருகில் அமர்ந்து, நேருக்கு நேராக கிடார் இசையை அனுபவித்தது அதுவே முதன்முறை. அந்த இசைக்கருவியில் ஏதோ மாயத்தன்மை இருந்ததாகப் பட்டது. கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது. அதன்பின் கேட்ட திரைப்பாடல்களில் எல்லாம் கிடாரின் ஒலி மட்டும் எனக்குத் தனியாகப் பிரிந்து கேட்கத்தொடங்கியது. உள்ளிருந்த சிறு கிடார் வேட்கைப்பொறி கொழுந்தனலாகச் சுடர்விட ஆரம்பித்தது. எப்பாடுபட்டாவது கிடார் கற்றே தீர்வது என்று சங்கல்பம் செய்துகொண்டேன்.
அந்தவார இறுதியில் சென்னையிலுள்ள ஓர் இசைப்பள்ளிக்குச் சென்றேன். கிடார் வகுப்பு குறித்து விசாரித்த என்னை அவர்கள் வீணை வகுப்பில் சேரச்சொல்லி வலியுறுத்தினர். நான் விடாப்பிடியாக கிடார்தான் வேண்டும் என்றேன். அடுத்த கிடார் வகுப்பு தொடங்க மேலும் சில மாதங்கள் ஆகும் என்பதால் பிறகு தகவலனுப்புவதாகச் சொல்லிவிட்டனர். நான் வேறிடத்தில் கேட்கலாம் என்று வெளியே வந்தேன்.
நான் விசாரித்ததை அங்கே வந்திருந்த இளைஞர் ஒருவர் தற்செயலாகக் கேட்டிருப்பார் போலும். வெளியே வந்த என்னை அழைத்துப்பேசிய அவர், தான் வீட்டில் கிடார் வகுப்புகள் நடத்திக்கொண்டிருப்பதாகச் சொன்னார். மாதாந்திரக் கட்டணம், வீட்டு முகவரி போன்ற விவரங்களை அளித்து, நான் விரும்பினால் அடுத்த வாரத்திலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது என மகிழ்ந்து சம்மதித்தேன். அன்றே சென்னையில் ஒரு கிடாரையும் வாங்கிக்கொண்டு ஶ்ரீபெரும்புதூர் திரும்பினேன்.
அதற்கடுத்த வாரத்திலிருந்து என்னுடைய கிடார் வகுப்பு அவரது வீட்டில் தொடங்கியது. அவர் கையில் வெண்ணையைப்போல வழுக்கி மேற்கத்திய செவ்வியலிசையை மதுரமாகப் பொழிந்த கம்பிகள் நான் உக்கிரமாகப் பிடித்து அழுத்தினாலும் சிறு சத்தத்தைக்கூட எழுப்ப மறுத்தன. ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும் என்றவர் அன்றாடம் ஓரிரு மணி நேரமாவது பயிற்சி செய்யச்சொன்னார். நானும் தொடர்ந்து பயிற்சி செய்தேன்.
இடதுகை விரல்நுனிகள் சிவந்து, தடித்து, காய்ப்பேறி, தோலுரிந்தன. பிறகுதான் ஓரளவுக்குச் சத்தம் வந்தது. அடிப்படைத் தாளக் கணக்குகளைப் பழகுவதிலும் கம்பிகளிலிருந்து சுத்தமான ஒலி எழுப்புவதிலுமே சில மாதங்கள் ஓடிவிட்டன. இசைக்குறியீடுகளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே ஒவ்வொரு ஸ்வரமாக கிடாரில் எழுப்பும் பயிற்சி எரிச்சலாக இருந்தது.
அன்றாடம் ஓய்ந்த பொழுதிலெல்லாம் கிடாரை எடுத்துவைத்து ஒரேவிதமான சப்தங்களை எழுப்பியது என்னுடன் அறையைப் பகிர்ந்துகொண்டிருந்த நண்பர்களை வெகுவாக இம்சித்தது. எள்ளுதான் எண்ணெய்க்குக் காய்கிறது, எலிப்புழுக்கை ஏன் காயவேண்டும்? இந்த மேற்கத்திய செவ்வியலிசையை விட்டுவிட்டு ஏதாவது தமிழ்த் திரைப்பாடல் சொல்லிக்கொடுக்கச் சொல்லிக் கேட்கலாமா என்று யோசித்தேன். ஆனால் துணிச்சலில்லை. இளையராஜாவே இசை கற்றுக்கொண்டிருந்தபோது திரையிசைப் பாடலொன்றை வாசிக்கப்போய் தன்ராஜ் மாஸ்டரின் கோபத்திற்கு ஆளானார் என்று படித்திருக்கிறேன். நாமெல்லாம் எம்மாத்திரம்?
அப்படி விருப்பும் வெறுப்புமாக பயிற்சி நகர்ந்துகொண்டிருந்தபோதுதான் கிடார் வாசிக்கத் தெரிந்த இன்னொரு இளைஞரின் நட்பு வாய்த்தது. நான் வேலைசெய்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெங்காலி இளைஞர் அவர். கிடாரில் ‘கார்ட்ஸ்’ வாசித்துக்கொண்டே நன்றாகப் பாடவும் செய்தார். ஆனால் அவர் இசையை முறையாகக் கற்றவரில்லை என்பதால் இசைக்குறியீடுகளைப் பார்த்து வாசிக்கத்தெரியாது.
அவருக்கு நான் இசைக்குறியீடுகளைச் சொல்லிக்கொடுப்பது என்றும் எனக்கு அவர் சில பாடல்களை எளிமையான கார்ட்ஸ்களோடு கற்றுக்கொடுப்பது என்றும் ஒப்பந்தமாயிற்று. பீட்ல்ஸ், ஈகிள்ஸ், லெட் ஸெப்பலின், ரோலிங் ஸ்டோன்ஸ், ஸ்கார்ப்பியான்ஸ், குவீன் போன்ற பல்வேறு மேலை இசைக்குழுக்களின் பாடல்களடங்கிய குறுவட்டுகளைக் கொடுத்து என்னைக் கேட்கச்சொன்னார். நானும் கேட்டேன். சில கார்ட்ஸ்களையும் பயின்றேன்.
ஒருநாள் ஈகிள்ஸ் குழுவினரின் ‘டேக் இட் ஈஸி’ என்ற பாடலைப் பாடவும் அதற்குப் பொருத்தமான கார்ட்ஸ் வாசிப்பதையும் கற்றுக்கொடுத்தார். எனக்கு ஓரளவுக்குப் பாடவந்தது ஆனால் கிடார் வாசிப்பு சரியாக வரவில்லை. அவரும் விடாப்பிடியாக மணிக்கணக்கில் பயிற்றுவித்தார். அப்படியும் எனக்குத் துலக்கமாக வரவில்லை.
அடிக்கடி புகைக்கும் வழக்கமிருந்த அவர், ஒருகட்டத்தில் ஏதோ நினைத்துக்கொண்டு, ‘ம்.. இதை இழுத்துப்பார்.. இசை சரியாக வரும்’ என்று சிகரெட்டை நீட்டினார். நான் மறுத்தேன். ‘இசையை நமக்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்கவேண்டும். நீ அதைத் தடுத்து சோதித்து உள்ளே அனுப்ப நினைக்கிறாய். அதுதான் பிரச்சனை. உனக்கு நீயே தடையாக இருக்கிறாய். சிகரெட் புகையை முதலில் உள்ளே அனுமதி. தடையை உடை. யாருக்குத் தெரியும்? ஒருவேளை அது இசையிலும் உதவக்கூடும். முயன்றுபார்’ என்றார். அவருடைய ஆங்கிலம் வசீகரமாக இருக்கும். இருந்தாலும் சிகரெட் மோசமான வஸ்து என்பதால் நான் மசியவில்லை. அப்பாடலை வசப்படுத்திக்கொண்டு மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அடுத்த ஒருவாரம் கடுமையாகப் பயிற்சிசெய்தேன். கிடாரில் வெறுமே உயிரற்ற ஒற்றை ஸ்வரங்களாக எழுப்பிக்கொண்டிருந்தவன், திடீரென்று கோர்வையான சப்தங்களை எழுப்பி கூடவே ஆங்கிலத்திலும் பாடுவதைக்கண்ட அறை நண்பர்கள் ‘பரவாயில்லையே’ என்று உற்சாகமூட்டினர். ஒருவழியாக முட்டிமோதி அப்பாடலைத் தேற்றிவிட்டேன். அவரிடம் சென்று வாசித்துக்காட்டியபோது ‘அட.. மோசமில்லையே’ என்றுசொல்லி, ஜான் டென்வரின் ‘டேக் மி ஹோம்’ உட்பட மேலும் சில பாடல்களை அடுத்தடுத்து கற்றுத்தந்தார். நேரடியாக ஒரு பாடலையே பழகிக்கொள்ள வழிசெய்யும் அவரது கற்பித்தல் முறை பிடித்திருந்ததால் சென்னை கிடார் வகுப்பை நிறுத்திவிட்டேன்.
யாரையாவது கிடாருடன் பார்த்தால் தமிழர்கள் ‘இளையநிலா பொழிகிறதே’ பாடலை வாசிக்கச்சொல்லிக் கேட்பார்கள். என்னையும் நண்பர்கள் கேட்டனர். எனக்கும் ஆசைதான். என் பெங்காலி ஆசானிடம் தெரிவித்தேன். அவர் பாடிக்காட்டு என்றார். முதல்வரியைக் கேட்டதுமே, ‘இது எனக்குத் தெரியுமே…இதோ பார்’ என்றவர், ‘நீலெ நீலெ அம்பர் பர் சாந்த் ஜப் ஆயே’ என்று இந்தியில் பாடத்தொடங்கினார். சிற்சில வேறுபாடுகளுடன் இளையநிலா போலவே ஒலித்தது. அடிக்கடி வரும் நேயர் விருப்பத்திற்காக அதையும் ஓரளவுக்குப் பயிற்சிசெய்து கொண்டேன். ஆங்காங்கு பிசிறு தட்டினாலும் ஒருவேளை இந்தியில் அப்படித்தான்போல என்று கேட்பவர் நினைத்துக்கொள்வர். எப்படியோ கிடார் சடாரென பிடிபட்டுவிட்டதைப்போல இருந்தது. அந்த மகிழ்ச்சியிலேயே ஓராண்டு கடந்தது.
ஆயினும் மாயத்திரை விரைவிலேயே விலகியது. எந்தப் பாடலைக் கேட்டாலும் அதை அப்படியே கிடாரில் வாசிக்கும் அளவுக்கு ஆளாகவேண்டுமே ஒழிய, குறுக்குவழியில் நான்கைந்து ஆங்கிலப் பாடல்களையும் ஓர் இந்திப்பாடலையும் கற்று வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டக்கூடாது என்ற ஞானம் பிறந்தது.
ஆனால் பழைய சென்னை வாத்தியாரிடம் மீண்டும் செல்ல விருப்பமில்லை. முறையான பயிற்சியை மீண்டும் தொடங்கவும் வேண்டும். வேறொரு குருவைத் தேடினேன். காஞ்சிபுரத்தில் ஒருவர் கிடார் பயிற்றுவிப்பதாக அந்தப்பகுதியில் வசித்த ஒரு நண்பர் தகவல் சொன்னார். என் அடுத்தகட்ட கிடார் முயற்சி காஞ்சிபுரத்தில் தொடங்கியது.
கிறிஸ்தவரான அந்த இசை ஆசிரியர் பல தலைமுறைகளாக தேவாலயத்தில் இசைக்கும் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். எளிமையின் சின்னம். மாதத்திற்கு, நான்கு வகுப்புகளுக்கும் சேர்த்தே, இருபது ரூபாய் மட்டுமே கட்டணம் என்றார். நான் சென்னை வகுப்பிற்குச் செலுத்திய கட்டணத்தோடு ஒப்பிடும்போது பத்தில் ஒருபங்கு கூட இல்லை.
‘ஏன் இவ்வளவு குறைவு?’ என்று கேட்டேன். ‘கட்டணமில்லாமல் வித்தை கற்பிக்கத்தான் ஆசை. ஆனால் இலவசம் என்றால் சாலையில் போகிறவர்களும் சும்மா கொஞ்சநேரம் பொழுதுபோக்க வேடிக்கை பார்க்கலாமே என்று வந்து அமர்ந்துவிடுகின்றனர். கற்பிக்கும் மனநிலையையும் சூழலையும் கெடுத்துவிடுகின்றனர். அவர்களைத் தவிர்க்கவே அந்தக் கட்டணம்’ என்றார். இசை கற்பித்தலை ஒரு சேவையாகச் செய்துகொண்டிருந்தார்.
இவர் மேற்கத்திய செவ்வியல் இசையோடு தமிழ்த் திரையிசைப் பாடல்களையும் வகுப்பில் பயன்படுத்தினார். மாணவர்களையும் திரையிசை வாசிக்க ஊக்கப்படுத்தினார். ஒருவழியாக சரியான இடத்திற்கு வந்துசேர்ந்துவிட்டோம் என்று நிம்மதியானேன். ஏற்கனவே இசையின் அடிப்படைகளை நான் அறிந்திருந்ததால், ‘மேஜர் ஸ்கேல்’, ‘மைனர் ஸ்கேல்’ எனப்படும் அமைப்புகளைப் பயின்றுகொள்ளச் சொன்னார். அதற்கான எளிமையான வழிகளையும் காட்டித்தந்தார். அவற்றை வைத்துக்கொண்டு பல்வேறு திரைப்பாடல்களைச் சொந்தமாகவே ஓரளவுக்கு வாசிக்கமுடிந்தது. முழுமையாக இல்லாவிட்டாலும் இங்கொரு வரி அங்கொரு வரியாக நானே ஸ்வரங்களைக் கண்டடைந்து வாசித்ததில் ஓரளவுக்கு நிறைவு கிடைத்தது.
அப்படியாக மேற்கத்திய செவ்வியலிசை, ஆங்கில ‘ராக்’ மற்றும் ‘கண்ட்ரி’ இசை, தமிழ்த் திரையிசை என்று தாவித்தாவி அலைபாய்ந்து கொண்டிருந்ததில் சுமார் மூன்றாண்டுகள் ஓடியிருந்தன. அந்தச் சமயத்தில்தான் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. காஞ்சிபுரம் ஆசிரியரிடம் விடைபெற்றுக்கொண்டேன். சிங்கை வந்து முதல்மாத ஊதியம் கிடைத்ததும் கையோடு ஒரு கிடாரை வாங்கிவிட்டேன். ஈராண்டுகள் பணிஒப்பந்தம் முடித்து இந்தியா திரும்பும்போது முழுமையான கிடார் கலைஞனாகத் திரும்புவது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.
அப்போது உட்லண்ஸில் வசித்து வந்ததால் அங்கே ஓர் இசைப்பள்ளியில் சேர்ந்தேன். இசை ஆசிரியர் ஒரு மலாய்க்காரர். கிரேக்க இசைக்கலைஞர் யானியைப் போலத் தோள்களில் புரளும் கேசம். எப்போதும் விளையாட்டுத்தனமாகவே பேசுவார். தமிழிலிருக்கும் கெட்டவார்த்தைகள் அத்தனையையும் மனப்பாடமாக ஒப்பிப்பார். அதுவரை ‘கிடார்’ என்று சொல்லிப்பழகிய நான் அவரிடமிருந்து ‘கீதார்’ என்று பேசக் கற்றுக்கொண்டேன். புதிய சூழலில் இசைக்குறிப்புகளோடு என் போராட்டம் மீண்டும் தொடங்கியது.
பாடங்களைப் பொறுத்தவரை தொடர்ந்து முன்னேற்றங்களை அடைந்தேன் என்றாலும் கிடார் பயிற்சி ஒரு சுகானுபவமாக இல்லை. மேலும் மனதிலிருக்கும் இசையைக் கம்பிகளில் அப்படியே கொட்டிக்காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கமும் ஏக்கமும் வளர்ந்துகொண்டே போனது. ஒருவித கழிவிரக்கமும் வெறுப்பும்கூட உண்டாக ஆரம்பித்தது. ஆனால் பயிற்சியை விட்டுவிடவும் மனமில்லை.
எங்கிருந்து இப்படி ஓர் இசைவெறி ஆட்கொண்டது என்பது புதிராகத்தான் இருந்தது. குடும்ப முன்னோர்களை அலசிப் பார்த்தபோது எவரும் இசைப்பயிற்சி பெற்றதாகவோ வாத்தியங்கள் வாசித்ததாகவோ தெரியவில்லை. குடும்பத்தில் இசையோடு கொஞ்சம் நெருங்கிவந்தவர் என்றால் என் அப்பாவழி சின்னதாத்தா மட்டும்தான், அதுவும் ஒரு ரசிகராக. அவருக்கு நாதஸ்வரம் கேட்பதில் மோகமிருந்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வீட்டில் ‘டேப் ரிகாடர்’ வாங்கியபோதுதான் அது எனக்குத் தெரியவந்தது.
ஷேக் சின்ன மௌலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், திருவிழா ஜெயசங்கர் ஆகியோரின் நாதஸ்வரக் கச்சேரி ஒலிநாடாக்களை மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு அமர்ந்திருப்பார். அதுவும் திருவிழா ஜெயசங்கர் – வலையப்பட்டி சுப்பிரமணியம் இணையின் கச்சேரி என்றால் கேட்கக்கேட்க ஏதோ தானே வாசிப்பதுபோல அவரது முகத்தில் ஜொலிப்பு கூடியபடியே இருக்கும்.
ஒலிநாடா ஒருபக்கம் அரைமணி நேரம் முடிந்ததும் அவருக்கு அதைத் திருப்பிப்போடத் தெரியாது. நான் அந்த வேலையைச் செய்வேன். அதற்குமேல் அந்த வயதில் கர்நாடக இசையில் எனக்கு ஆர்வமிருந்ததில்லை. தாத்தாவுக்குத் திரையிசையில் அடியோடு ஆர்வமில்லை. காருகுறிச்சி அருணாசலம் நாதஸ்வரம் வாசித்தார் என்பதால் ‘சிங்காரவேலனே தேவா’ மட்டும் பிடிக்கும். எது நாதஸ்வரம், எது குரல் என்று தெரியாத அளவுக்கு அப்பாடலின் பெண்குரல் (ஜானகி) ஒலிப்பதாக ஒருமுறை பாராட்டினார்.
சிங்கையில் மேலை செவ்வியலிசை கிடார் பயிற்சி சீராக முன்னேறி, தொடக்க நிலையிலிருந்து, இடைநிலை மாணவனாக உயர்ந்தேன். ஒருகட்டத்தில் தன்னுடன் இணைந்து கிடாரில் ‘டூயெட்’ வாசிக்குமாறு ஆசிரியர் பணித்தார். அது பிதோவானின் புகழ்பெற்ற ‘எலீசாவுக்காக’ இசைத்துணுக்கு. நான் மேல்ஸ்தாயி ஸ்வரங்களை வாசிக்கும்போது அவர் இணையான கீழ்ஸ்தாயி ஸ்வரங்களை வாசிப்பார்.
வீட்டில் நன்றாகப் பயிற்சிசெய்துகொண்டு போவேன் ஆனால் அவரோடு அமர்ந்ததும் ஒன்று தாளம் தப்பும் இல்லையேல் ஸ்வரம் தப்பும். அந்த ஒன்றரை நிமிட இசைத்துணுக்கு பிழையின்றி வசப்பட ஒன்றரைமாத காலம் ஆகியது. இசைக்குறிப்புகளைப் பார்த்துக்கொண்டே வாசிப்பதாக நான் அவரிடம் பாவனைதான் செய்தேன். அப்படி என்னால் வாசிக்கவே முடியவில்லை. மொத்த இசைத்துணுக்கும் மனப்பாடமாக ஆக்கிக்கொண்டுதான் வாசித்தேன். மென்மேலும் இசைக்குறிப்புகள் கடினமாகிக்கொண்டே வந்தபோது மனப்பாட உத்தியை வைத்து ஈடுகொடுக்கவியலாமல் ஒருகட்டத்தில் கிடார் வகுப்பை நிறுத்திவிட்டேன். வீட்டில் பயிற்சி செய்வதையும் கைவிட்டேன்.
வண்ணக் கனவுகளுடன் தொடங்கிய என் இசைப்பயணம், சிங்கையில் அறையைப் பகிர்ந்துகொண்டு வசித்த ஆறு நண்பர்களுக்கும் சேர்த்து ஆண்டில் ஆறுமுறை பிறந்தநாள் கொண்டாட்டம் வரும்போது மட்டும் ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ வாசிப்பதாகச் சுருங்கியது. பிறகு, அறுக்கமாட்டாதவன் இடுப்பில் அம்பத்தெட்டு கருக்கரிவாள் எதற்கு என்று கையிலிருந்த இரண்டு கிடார்களையும் இசை பழகிக்கொண்டிருந்த நண்பர்களுக்கு அன்பளிப்பாக அளித்து என் கிடார் பயணத்தை அதிகாரபூர்வமாக முடித்துக்கொண்டேன்.
தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் சிங்கையில் இரண்டாண்டுகள் என ஐந்தாண்டுகள் மல்லுக்கட்டியபிறகும் அந்த மிருகத்தை நான் நினைத்தபடி பழக்கமுடியவில்லை. ‘வேலயத்த வேல’தான் என்பதைக் கண்டுகொள்ள ஐந்தாண்டுகள் ஆயின. அவ்வப்போது அதைக்குறித்த உறுத்தல் எழும்போதெல்லாம், கிடார் கற்கமுயன்றதன் ஊடாக இசையை மேலும் நெருங்கிக் கேட்கும் ரசிகனாக ஆகமுடிந்தது என்பதால் இது ஒரு வெற்றிகரமான தோல்வி என்றும், ஒரு கலைவடிவம் கைகூடவில்லையென்றால் கலைவாணி இன்னொன்றைக் கொடுப்பாள் என்றும், ஜெயகாந்தன்கூட வீணை ஓரளவுக்குக் கற்று பிறகு கைவிட்டவர்தான் என்றெல்லாம் பல சமாதானங்களை எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
கலைஞர்கள் பிறக்கிறார்களா உருவாக்கப்படுகிறார்களா என்கிற பழைய கேள்விக்கு, கலைஞர்களாகப் பிறப்பவர்கள்தாம் உருவாக்கப்படமுடியும் என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. கலைஞர்கள் கடுமையாக உழைக்கத்தான் வேண்டும். ஆனால் கடுமையாக உழைப்பதால் மட்டும் ஒருவர் கலைஞராக உருவாகிவிட முடியாது. முதலில் நான் சந்தித்த அந்த மலையாளி இசைஞர், இரண்டே ஆண்டுகளில் கற்றுக்கொண்டவர்களும் உண்டு, இருபதாண்டுகளாக நகராமல் தேங்கிப் போனவர்களும் உண்டு என்றுதான் சொல்லவந்திருப்பார். ஏனோ முற்பாதியை மட்டும் சொல்லி மீதியை மறைத்துவிட்டார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் பகுதிநேர மேற்படிப்பு, திருமணம், குழந்தை, வாசிப்பு, எழுத்து என்று, கிடாரை விட்டொழித்துப் பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இசை கேட்பதுகூட வெகுவாகக் குறைந்துவிட்டது. இப்போது யோசிக்கும்போது கிடார் கற்கும் முயற்சிகள் ஏதோ முன்ஜென்ம நினைவுகளைப்போல நிழலாடுகின்றன. இதையெல்லாம் இப்போது எழுதத் தூண்டியது அண்மையில் நடந்த வேறொரு சம்பவம்.
தன் தோழியின் வீட்டுக்கு விளையாடச்சென்ற என் ஒன்பது வயது மகள் வீடுதிரும்பியதும், ‘அப்பா, இன்று சுவாரஸ்யமான ஒன்று நடந்தது’ என்றாள். கணினியில் வேலையில் ஆழ்ந்திருந்ததால் தலையைத் திருப்பி என்ன என்பதைப்போலப் பார்த்தேன். ‘அகியின் அப்பா எங்களுக்குக் கிடார் கற்றுக்கொடுத்தார். நான் உடனே கற்றுக்கொண்டு ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ ஒருவரி வாசித்துவிட்டேன். எனக்கு ஒரு கிடார் வாங்கித் தர்றியா?’ என்றாள்.
அதைக்கேட்ட மாத்திரத்தில் ஏதோ ஆவேசமும் பரவசமும் பதற்றமும் கலந்துகட்டி அடியாழத்திலிருந்து பொங்கியெழுந்து என்னை நிறைத்தது. அவளை அருகில் அழைத்து இறுக்கிக் கட்டியணைத்து உச்சிமுகர்ந்தேன். சொற்கள் ஏதும் கிளம்பவில்லை. இந்த மனிதன் இதுவரை இப்படி நடந்துகொண்டதே இல்லையே என்ற குழப்பத்தில் அவளும் ஏதும் பேசவில்லை.
***
அற்புதமான எழுத்தாக்கம். வாழ்த்துக்கள். உங்களை நான் இசைக்கலைஞனாக பார்க்காத்தால் ஒரு கேள்வி எழுகிறது. உண்மையாகவா?
அருமை ?
இசைத்துறையில் தங்கள் வாரிசு பரிமளிக்க எனது நல் வாழ்த்துகள்.