தடக்…. தடக்… தடக்…
இரயில் வண்டியின் ஒட்டுமொத்த சப்தம் வேறொன்றாக இருப்பினும், மூன்றாம் வகுப்புக்கென்று சில பிரத்யேக சப்தங்கள் உண்டு. அதன் நெரிசலும் பிதுங்கலும் கொதிக்கும் மரப்பலகை இருக்கைகளும் ரயிலின் போக்கோடு இணைந்துக் கொண்டாலும் சில சமயம் ரயிலின் சத்தமும் சில நேரம் ஆட்களின் சத்தமும் ஒன்றையொன்று விஞ்ச முனைந்தன. நானும் அம்மாதிரியான முயற்சியில்தான் ஈடுப்பட்டுருக்கிறேன் என்பதை உணர்வீர்களா மகாத்மா? ஆனால் என் முயற்சி வெற்றிப் பெறவில்லை. வெற்றிப்பெறாது என்று முன்கூட்டியே நான் தீர்மானித்தும் விட்டேன். எண்ணங்களின் விசை மூன்றாம் வகுப்பு பெட்டியின் ஓசையை வெற்றிக் கொண்டு விடுகிறது.
சில சமயங்களில் மறதியும் நல்லதுதான். ஆனால் நீங்கள் மறதியை விரும்ப மாட்டீர்கள். ஒருமுறை நீங்கள் கூறியிருந்த நான்கு வேலைகளில் ஒன்றை மறந்து விட்டேன். நீங்கள் அதை உன்னிப்பாக நினைவில் வைத்துக் கொண்டு “நான்காவதாக நான் சொன்னதை உன் வசதியை கருதி மறந்து விட்டதாக நான் எண்ணிக் கொள்ளலாமா” என்றீர்கள். ஆனால் அவ்வேலை எனக்கு உண்மையிலுமே மறந்திருந்தது. அதற்கு பதிலாகவும் யோசனையாகவும் நீங்கள் சொன்னது இப்போதும் நினைவிலிருக்கிறது. ஞாபகத்தில் இருத்திக் கொள்ள முடிந்தவற்றை மட்டும் மனதில் ஏற்றிக் கொள்ளுமாறும் நினைவில் வைத்துக்கொள்ள அதிகம் தேவைப்படாத விஷயங்களை குறிப்பு எடுத்துக் கொள்ளுமாறும் கூறினீர்கள். அப்படி செய்தால்தான் ஞாபகசக்தியை பேணி வளர்க்க முடியும் என்றீர்கள். ஆனால் ஏதொன்றும் செய்யாமலேயே உங்களுடன் அனுபவப்பட்ட எல்லா விஷயங்களும் எனக்கு ஞாபகத்தில் இருந்துக் கொண்டேயிருக்கிறது. சொல்லப்போனால் என் அவஸ்தையே உங்களை எப்படி மறப்பது என்பதுதான். அதுவும் உங்கள் இறப்புக்கு பிறகு அந்நினைவுகளெல்லாம் புது ஜனனம் கொண்டு என்னை சித்திரவதை செய்துக் கொண்டிருக்கிறது அண்ணலே.
நீங்கள் மூன்று குண்டுகளை தாங்கி நிலத்தில் சரிந்து உங்கள் வாழும் கடனை கழித்து விட்டீர்கள். ஆனால் நீங்கள் விட்டுச்சென்ற கடமைகள் செயல்களாகுமா என்ற சந்தேகம் எங்களை போலவே உங்களுக்கும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் உங்கள் இறுதி யாத்திரையை நவகாளிக்கு செல்வதிலிருந்தே துவங்கி விட்டீர்கள். அப்போதெல்லாம் கூட்டத்திலிருந்தாலும் மிகுந்த தனிமையுணர்வு கொண்டிருந்தீர்கள். நினைத்திருந்தால் கடவுள் பற்றுள்ள நீங்கள் ஹிமாலயத்திலுள்ள குகைக்கு ஓடியிருக்கலாம். கடவுளை நான் மட்டும் தனிமையில் காண முடியாது. மக்களோடு இருக்கவும், பணிப்புரியவும் விரும்புகிறேன் என்று சொன்னவரல்லவா நீங்கள்? மக்கள் தொண்டின் மூலமாகக் கடவுளுக்குச் சேவை செய்யலாம் என்பதுதான் நீங்கள் கீதையிலிருந்து எடுத்துக் கொள்ளும் சாரமாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விடுத்து இப்போது எங்கோ சென்று விட்டீர்களே அண்ணலே…
இப்போது கூட உங்களின் மெலிதான குரல் காற்றில் மிதந்து வந்து காதுகளில் ஒலிப்பதுபோலவே எனக்கு தோன்றுகிறது. அது பற்களற்ற பொக்கைக்குள் புகுந்து காற்றை சுமந்து கொண்டு வரும் மெல்லியக்குரல். உங்கள் தோற்றம் கூட எலும்புகள் கூடி எழுந்து நிற்பனபோல பலவீனமானதுதான். உங்களின் ஆளுமையை எண்ணி வருபவர்களுக்கு உங்களின் அரை நிர்வாண உடலும் எலும்புகள் வளைந்து விட்டால் மொத்த உடலும் கொட்டிப் போய்விடும் போன்ற தோற்றமும் பெருத்த அதிர்வை உண்டாக்கிவிடும். ஆனால் உங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த எண்ணம் மறைந்து அழகான ஆங்கிலம் பேசும் மனிதரை கண்டுக்கொள்வார்கள். நகைச்சுவையான உங்கள் மொழியும் சதா சிரித்துக் கொண்டும் மக்களைப்பற்றி ஆழ்ந்த அபிமானத்துடன் பேசிக்கொண்டுமிருக்கும் மனிதர் புலப்பட தொடங்குவார். அப்போது உங்கள் கண்களுக்கு ஒரு வசீகரத்தன்மை வந்து விடும். நீங்கள் எழுதும்போது அவை மேலும் கூர்மையாகி விடும். ஆனால் பின்னாட்களில் உங்கள் கண்கள் துயரம் தோய்ந்தவையாக மாறி விட்டன. இராட்டையின் முன்னமர்ந்திருக்கும்போது கூட அவை ஏதோவொன்றை எண்ணி அலைப்பாய்வதை நான் கவனித்திருக்கிறேன். கண்கள் உங்கள் மனதை பிரதிபலிக்கின்றன. முன்பெல்லாம் நீங்கள் உறங்கும்போது அவை உள்ளடங்கலாக அதிகம் முட்டாததாக இருக்கும். உறக்கத்தில் மட்டுமல்ல, எந்த செயலிலும் ஆழ்ந்துபோகும் தன்மை உங்களுக்கிருக்கும். ஆனால் உங்களின் இறுதி நாட்கள் அப்படியாக இல்லை.
நீங்கள் மிகுந்த கவலையில் இருந்தீர்கள். உங்கள் உற்சாகம் குன்றியிருந்தது. நீங்கள் உற்சாகமாக இருந்த நாட்களிலும் உங்கள் அருகில் இருந்திருக்கிறேன். உங்களை சுற்றி எப்போதும் பெருங்கூட்டமிருக்கும். உங்களோடு தனித்து உரையாடுவது கடினமாக இருக்கும் என்றாலும் உங்களோடு யாரிருப்பினும் அவர்களோடு உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் அசாதாரண திறன் உங்களுக்கிருந்தது. ஒருமுறை உங்களிடம் “பெரும்பாலான மக்கள் உங்களைப் பின்பற்றி நடக்கக்கூடிய அளவுக்கு அப்படியென்ன ஆற்றல் உள்ளது உங்களிடம்?” என்று கேட்டேன். “இந்த தேசத்து மனிதன் என்னை பார்க்கின்றபோது நான் அவனை போல வாழ்ந்து வருவதை உணருகிறான். என்னையும் அவனில் ஒருவனாக மதிக்கிறான்” என்றீர்கள். ஆனால் அதை விட நான் அறிந்துக் கொண்ட ஒன்றுண்டு. நீங்கள் எல்லோருக்கும் எளியவராக எவரும் எந்நேரத்திலும் அணுகக்கூடியவராக இருந்தீர்கள். மிகமிகச் சாதாரண மனிதன் மிகமிகச் சாதாரண வேண்டுகோளோடு வரும்போது அவன் கருத்துக்கு செவிசாய்ப்பதையும் அவனோடு உரையாடுவதையும் நாட்டின் பிரதிநிதியாக வைஸ்ராயோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதையும் நீங்கள் ஒன்றெனவே கருதிக் கொண்டீர்கள். உங்களை அதிகம் அறிந்திராதவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையை வெறுத்து உலகத்தைத் துறந்த அன்பில்லாத ஒருவர் என்ற கருத்துத்தான் ஏற்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட தன்மையுள்ளவர் அல்லர். எல்லாவற்றையும் எவ்வளவு தூரம் எளிமையாகச் செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் செய்ய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஏனெனில் வாழ்க்கையின் எளிமையான பொருள்கள்தாம் உண்மையில் சிறந்த பொருள்களைக் காட்டிலும் சிறந்தவை என்று கருதுபவர்.
நீங்கள் அப்படியொன்றும் அழகுள்ளவர் அல்ல. உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வதில்லை, சவரம் செய்யும் நேரங்களில் கூட. ஆகாகான் மாளிகையில் கண்ணாடிகள் நிறையவே இருந்தன என்றீர்கள். இந்த உருவத்துக்கா மக்கள் இத்தனை மயங்கிப் போகிறார்கள் என்று நகைத்தது இன்றும் நினைவிலிருக்கிறது. உங்கள் தோற்றத்திலும் கூட மிடுக்கோ அதிகாரத்தோரணையோ கிடையாது. இயல்பான பேச்சுத்திறனும் உங்களிடமில்லை. ஆனால் உங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டீர்கள். ஒரு சிறுவன் கூட உங்களை ஒரு தட்டுத்தட்டி தள்ளி விட முடியும் என்பீர்கள். ஆனால் உங்கள் பலமற்ற உடலில் பயமின்மை உறுதியாக நிலைப்பெற்றிருந்தது. அதை நீங்கள் கடவுள் என்றும் உள்ளுணர்வு என்றும் வரையறுத்துக் கொண்டீர்கள். நீங்கள் ஒருமுறை இந்த உலகமே எனக்கு எதிரானாலும், என் பலத்தில் நான் தனித்து நிற்பேன் என்று கூறியதை நான் இன்றும் நினைத்துக் கொள்கிறேன் அண்ணலே. அதை நீங்கள் உங்கள் ஆடையை முடிவு செய்த விதத்திலிருந்து கூட அறிந்துக் கொள்ளலாம். நீங்கள் அரசரைக் காண செல்லும்போது கூட அரையில் முழம் வேட்டி கட்டிக் கொள்வதைதானே விரும்பினீர்கள். பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசரிடம், இந்தியா எப்படி இருக்கிறது என்பதை என்னை பார்த்தே அறிந்துக் கொள்ளுங்கள் என்றீர்கள்.
உங்கள் நடைமுறை வாழ்க்கை கூட அப்படிதான். எளிமையாக இருந்தாலும் கடினமாக இருந்தது என்றுதான் கூறுவேன். சபர்மதி ஆசிரமம் மிகவும் எளிய முறையில் எந்தவிதமான கலையுணர்வும் ஆடம்பரமுமின்றி கட்டப்பட்ட குடிசைகளின் தொகுப்பாகதானிருந்தது. வெளித் தாழ்வாரத்தையும், உள்ளே சிறிய அறையையும் கொண்ட உங்கள் மண்குடிசையில் என் நினைவிற்கு எட்டியவரை இருந்த ஒரே படம் இயேசுவினுடையதுதான். அதற்கடியில் ‘அவர் நமது அமைதி’ என்ற குறிப்பிருந்தது. ஆசிரமத்தில் சமைக்கவும் பெருக்கவும் துப்புரவு செய்யவும் கழிவறையை சுத்தம் செய்யவுமாக உங்கள் நேரத்தை வீணாக்கிக் கொள்கிறீர்களோ என்று எனக்கு தோன்றியிருக்கிறது. ஆனால் நீங்கள் பலதுறைகளையும் முயன்று பார்ப்பவர். எப்பணியையும் அருவருப்பின்றி செய்யக்கூடியவர். ஆசிரமத்திலிருந்துதான் நாங்கள் தீண்டாமை ஒழிப்பு, கையினால் நுால் நுாற்றல், கிராம பொருளாதாரம், ஆதாரக்கல்வி என அத்தனைக்குமான விதைகளை எடுத்துக் கொண்டோம். வார்தாவிலும் இவை தொடர்ந்தன. இவ்வழிமுறைகள்தான் உங்களை புறக்கணிக்கப்பட்ட பாமர மக்களோடு இணைத்திருக்கலாம். இம்மாதிரியான சமூகநலப்பணிகள்தான் அந்நியரது ஆட்சிக்கு எளிதில் இரையாவதற்கு காரணமாக இருந்த மக்களது மனோபாவங்களை மாற்றக்கூடிய சாதனங்களாகவும் வேலைகளாகவும் நீங்கள் கருதியிருக்கக் கூடும். சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது தனிமனிதனின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது என்றீர்கள்.
இந்த தேசத்திற்கு உங்கள் வாழ்நாளுக்குள் விடுதலையை பெற்றுத்தர வேண்டுமென்று நீங்கள் செய்துக் கொண்ட முடிவையொட்டி உங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டீர்கள். அதனாலேயே தேவைக்கு மீறிய சகிப்புத்தன்மையுடன் வேலை செய்தீர்கள். அதேநேரம் நீங்கள் சாதுவும் அல்ல. உங்களால் முட்டாள்களை பொறுத்துக் கொள்ள முடியாது. உங்களைப்போலவே மற்றவரையும் கருதினீர்கள். நம்பிக்கை வைத்தீர்கள். அது அதிகப்படியான நம்பிக்கையும் கூட. போலவே அதிகப்படியான பாசத்தையும் கொட்டினீர்கள். நாங்களோ சிறு பாத்திரங்களையே கையில் ஏந்தியிருந்தோம். அதில் ஏற்கனவே சுயதேவைகளையும் விருப்பு வெறுப்புகளையும் கோபதாபங்களையும் நிரப்பிக் கொண்டிருந்ததால் அது விரைவிலேயே நிரம்பி விட, திருப்தியற்றவர்களாக இருந்தோம். சபர்மதி ஆற்றின் ஒரு கரையில் உங்களின் எளிய ஆசிரமமும், முரணாக, மறுகரையில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட அகமதாபாத் மில்கள் நிறைந்த தொழில் வளமும் அமைந்திருந்தது. உங்கள் வாழ்விலும் இப்படியான நிறைய முரண்களுண்டு. ஒரு துறவியை போல ஒட்டாதவராகவும் பற்றற்றவராகவும் இருக்கும் நீங்கள் பெரும் பணக்காரரான பிர்லாவை உங்கள் மகனாகவே பாவித்தீர்கள். உங்கள் நிலைப்பாடு எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லையோ என தோன்றுகிறது. எந்த நேரத்தில் எது சரியென்று படுகிறதோ அதை செய்வதுதான் நேர்மையின் வழி என்பீர்கள். அதனால்தான் சபர்மதி ஆசிரமத்தில் கன்றுக்குட்டியின் துன்பத்தை காண சகியாமல் அதற்கு விடுதலையளிக்க முடிவு செய்தீர்கள். அகிம்சையை போதிக்கும் ஒருவர் கன்றின் உயிரை கொல்வதா என்று சர்ச்சைகள் எழுந்தன. பயமுறுத்தல் கடிதங்கள் கூட வந்தன. ஒரு ஜைன நண்பர் தன்னுடைய கடிதத்தில் “காந்தி! நீங்கள் ஏதுமறியா கன்றுக்குட்டியை கொன்று விட்டீர்கள். அதற்கு பதிலாக உங்களை நான் கொல்லாவிடில் நான் ஒரு ஜைனனே அல்ல… என்று எழுதி அனுப்பியிருந்தார். நீங்கள் வாய் விட்டு வெகுநேரம் சிரித்தீர்கள். உங்களின் இறுதிக்காலங்களில் நீங்கள் அவ்வாறு சிரிப்பதேயில்லை. வாழ்க்கையும் கடமைகளுள் ஒன்றாகி விட்டதை போலிருந்தது. நூற்று இருபத்தைந்து வருடங்கள் வாழ வேண்டும் என்று கூறி வந்தவர் சாவின் நிழலுக்கு ஏங்கத் தொடங்கியிருந்தீர்கள்.
நீங்கள் மூடக்கொள்கையாளர் அல்லர் என்றாலும் உங்களுடைய கருத்தை சரியென்று நம்பினீர்கள். போலவே உங்கள் வழி நடப்பவர்கள் சரியானதைதான் செய்ய வேண்டும் என்று விரும்பினீர்கள். ஆக, உங்கள் பேச்சை கேட்பதை தவிர அவர்களுக்கு வேறு ஒரு மார்க்கம் இருக்கலாகாது. ஆனால் உங்கள் மார்க்கம் வெற்றிக்கான வழியென்பதை சுதந்திரம் பெற்று தந்ததன் மூலம் நிரூபித்து விட்டீர்கள். உங்களுடைய ஒற்றை வார்த்தைக்காக நாடு காத்துக் கிடந்ததை நீங்கள் பெரிதாக கருதிக் கொள்ளவில்லை. அதேசமயம் ஒற்றை சக்தியாய் மாபெரும் உருக் கொண்டிருந்த நீங்கள் பெரும்பாரமாய் மாறி போய் விட்டது காலத்தின் கோலமா? பஞ்சாப் பிரிவினைக்கு பிறகு பெருங்கொடுமைக்கு ஆளாகிய டில்லியை, பாகிஸ்தான் தவறு செய்து கொண்டிருக்கிறது என்பதற்காக நீங்கள் தவறு செய்வீர்களானால் இரண்டு தவறுகளும் சேர்ந்து ஒரு சரி ஆகிவிடுமா? இந்த அர்த்தமற்ற செயல்களையெல்லாம் நிறுத்திவிடுங்கள். எல்லா முகமதியர்களும் இந்தியர்கள். உங்களது சகோதரர்கள். அவர்கள் நீண்டகாலமாக இங்கு வாழ்ந்து வருபவர்கள். ஆகையால் அவர்களை எவ்விதத் தொந்தரவுகளுக்கும் ஆளாக்கக் கூடாது. சுடுவது, கொல்வது ஆகிய எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என்று நீங்கள் கூறியபோது தேவையற்ற சுமையாகிப் போனதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் அண்ணலே. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஏதோ ஒரு குழந்தை வீறிட்டு அலறியது. நெரிசலில் பயந்திருக்க வேண்டும். ரயில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போதுதான் நிறுத்தத்தை கடந்திருக்க வேண்டும். அங்கு நிற்கவில்லையா அல்லது நின்று விட்டுதான் கிளம்புகிறதா என்று உணர்வெல்லாம் எனக்கில்லை. நீங்கள் இருந்திருப்பின், ரயில் நிறுத்தத்தில் காத்துக்கிடக்கும் ஏராளமானோர் இன்னேரம் என் கவனத்தை கலைத்திருக்கலாம். நீங்களே இல்லாதபோது எந்த கூட்டம் தங்களை தேடி வரும் மகாத்மா? யாரோ ஒருவர் என் கண்களிலிருந்து வழிந்த நீரை கண்டு மனம் இரங்கியிருக்க வேண்டும். என் கண் முன்னே நீண்ட ரொட்டியை வாங்கி வைத்துக் கொண்டேன். ஒருமுறை ஆசிரமத்தில் என் வேலையில் ஏற்பட்ட தவறுக்காக நீ்ங்கள் என்னை கடுமையாக நடத்தினீர்கள். அன்றும் இதுபோல எனக்கு கண்ணீர் வந்து விட்டது. நீங்களோ “உன் கண்ணீருக்கு நான் இரங்கமாட்டேன். ஏனெனில் கண்ணீர் கோபத்தின் அறிகுறியே தவிர வருத்தத்தின் அறிகுறி அல்ல. கோபத்தையும் வருத்தத்தையும் மயிரிழைக் கோடுதான் இனம் பிரிக்கிறது“ என்றீர்கள். நீங்கள் கடுமையாக நடந்துகொண்ட நேரங்கள் அனைத்திலும் நான் பொறுமையை இழந்திருக்கிறேன். நீங்களும்தான். ஆனால் பொறுமையை இழந்துவிட்டோம் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளக்கூடிய அளவுக்குப் பெருந்தன்மை வாய்ந்தவராக இருந்தீர்கள்.
நீங்கள் என் காதுகளுக்குள் மெல்லிய குரலால் கிசுகிசுக்கிறீர்கள். “குழப்பத்திலிருக்கும்போதும் உன்னை பற்றிய எண்ணங்கள் உன் உள்ளத்தை நிறைக்கும்போதும் நீ அறிந்தவர்களில் மிகுந்த ஏழ்மையில் இருக்கும் மிக எளியவனின் முகத்தை நினைத்துப் பார். அடுத்து நீ என்ன செய்யவேண்டும் என்று நினைத்திருக்கிறாயோ அது அவனுக்கு பயன்படுமா என்று உன்னையே கேட்டுக் கொள். அதனால் அவனுக்கு நன்மை ஏதேனும் ஏற்படுமா? தனது வாழ்க்கையையும் விதியையும் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை அவனுக்கு அது பெற்று தருமா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பிக் கொள்ளும்போது அதில் நம் குழப்பங்களும் தன்னுணர்வும் கரைந்தேபோகும்“
இவற்றையெல்லாம் உங்களுக்குள் பரிசோதித்துக் கொண்ட பிறகே கூறியிருப்பீர்கள். அதனால்தான் உங்கள் செயல்கள் தெளிவுடன் குழப்பமின்றி இருந்தன. ஆனால் இறுதி நாட்களில் நீங்கள் சற்று தெளிவற்று இருந்தீர்கள். ஒரு தரப்பினரின் மோசமான நடவடிக்கைகள் மற்றொரு தரப்பின் எதிர் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. முஸ்லிம்லீக் கட்சியை மதப்பிரிவினைவாத சக்தி என்று சொல்லும் காங்கிரசும் அதே செயலில் தானே ஈடுபடுகிறது என்ற உங்களின் தெளிவான சிந்தனை உங்களை இந்துகளுக்கு விரோதியாக்கி விட்டது.
1947 ஆம் வருஷம் ஆகஸ்ட்மாதத்தின் அந்த நள்ளிரவில் வாழ்த்துக் கோஷங்கள், ஒளிரும் விளக்குகள், பண்டிதநேருவின் உணர்ச்சி மிக்க உரை என பல காலமாக சுதந்திரத்தை நோக்கி தவித்துக் கொண்டிருந்த இந்தியாவின் ஆன்மா கொண்டாட்டமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. ஒன்றுப்பட்ட இந்தியா தனித்தனியான இரு சுதந்திர நாடுகளாக பிரிந்திருந்தன. இந்தியாவை சேர்ந்த மாகாணங்களிலும் டில்லியிலும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்தியாவின் சுதந்திரக்கொடியை ஏற்றி வணக்கம் செய்தனர். கிராமங்களிலும் நகரங்களிலும் வீடுதோறும் கொடிகளாலும் தோரணங்களாலும் மின்சார விளக்குகளாலும் அலங்காரம் செய்திருந்தனர். ஆனால் அப்போது நீங்கள் கல்கத்தாவின் இருண்ட மனங்களுக்கிடையே ஒளியூட்ட முயன்றக் கொண்டிருந்தீர்கள். இதை நீங்கள் ஜுலை மாதத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திலேயே, நாம் அடையவிருக்கும் சுதந்திரத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கான விதைகள் அடங்கியிருக்கின்றன. இதனை என்னால் ஒளியேற்றி கொண்டாடவியலாது… என்று கூறியிருந்தீர்கள்.
உங்கள் முகத்தில் கூட ஒளி குறைந்திருந்தது. ஆனால் அது அன்றிலிருந்து தொடங்கியதல்ல. ஒருவேளை பாகிஸ்தான் என்ற தங்களின் தனிநாடு கோரிக்கையை வலுப்படுத்த முஸ்லிம்லீக் கட்சி நேரடி நடவடிக்கை நாளொன்றை அறிவித்தபோதே அது நிகழ்ந்திருக்கலாம். அன்று ஜின்னாவின் அழைப்பை ஏற்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் நடந்த அணிவகுப்பு ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு, நேரடி நடவடிக்கை நாளை அனுசரிக்க வரும் லீகர்களுக்கு வழங்குவதற்கான உணவை சேகரித்துக் கொண்டதும் ஆயிரங்கணக்கான முரட்டு மனிதர்களை வரவழைத்ததும், எல்லாமே திட்டம்தான். கல்கத்தாவில் இந்துக்களின் வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டன. ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அதையடுத்து இந்து மகாசபை இயக்கம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும் இதுபோன்ற வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டபோது நீங்கள் துவண்டுப் போனீர்கள். கல்கத்தாவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கான பழி வாங்கும் நடவடிக்கையாக வங்கத்தின் நவகாளி பகுதியில் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்தபோது காலமெல்லாம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக உழைத்ததெல்லாம் வீணாகப்போனதன் வலி உங்கள் முகத்தில் தென்பட தொடங்கியது.
நீங்கள் செல்ல வேண்டிய இடம் நவகாளி என்று நீங்கள் முடிவு செய்துக் கொண்டதுதான் புறவுலகிற்கு தெரியும். ஆனால் அது உங்களுக்கான இறுதி யாத்திரை என்பதை முடிவு செய்துக் கொண்டதை போன்ற அதிதீவிரத்தன்மை உங்களுக்குள் குடிக்கொண்டது. அக்டோபர் இறுதியில் நீங்கள் தொண்டர்களோடு கல்கத்தா வந்தபோது நகரே சுடுகாடு போன்றிருந்தது. நீங்கள் அங்கிருக்கும்போதே பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது ஏவிய வன்முறை உங்கள் காதுகளுக்கு வந்து சேர்ந்தது. இத்தனைக்கும் பீகாரில் காங்கிரஸ் ஆட்சி நடந்துக் கொண்டிருந்தது. மாறாத வலியை விழுங்கிக் கொண்டு பிரம்மபுத்திராவின் படுகையில் அமைந்த சதுப்பான பகுதிக்கு பயணப்படுகிறீர்கள். அப்போது உங்கள் வயது எழுபத்தேழு இருக்கலாம். பெரும்பாலும் முஸ்லிம்கள் வீட்டிலேயே தங்கிக் கொண்டீர்கள். நீங்கள் நடத்திய கூட்டங்களில் முஸ்லிம்கள் கலந்துக் கொண்டாலும் தங்கள் தலைவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக கூட்டம் குறைய தொடங்கியது.
ஆனாலும் நீங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. நீங்கள் செல்லுமிடங்களில் உங்களுக்கு எதிர்ப்பும் வரவேற்பும் கிடைத்தன. நீங்கள் தங்கியிருந்த வீட்டை முஸ்லீம் கலகக்காரர்கள் தாக்கினார்கள். கண்ணாடி கதவுகள் சேதமடைந்தன. மேசை நாற்காலிகளின் கைகால்கள் துண்டுதுண்டாகின. சற்றும் அச்சப்படாத நீங்கள் “வங்காள மக்கள் சாதுவானவர்கள். அதனால்தான் என்னை கொல்லாமல் பொருட்களை மட்டும் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர். ஆனால் அவற்றில் ஒன்று கூட எனக்கு சொந்தமில்லை என்பது அவர்களுக்கு தெரியாது” என்றீர்களாம். சபர்மதியை ஒரே நாளில் கலைத்து விட்டு செல்வதற்கான நெஞ்சுரம் கொண்டவருக்கு இவையெல்லாம் எம்மாத்திரம்? அந்த உறுதிதான் கடுங்குளிர்காலத்தில் அந்த சேற்று நிலத்தில் வெற்றுக்கால்களுடன் நடக்க வைத்தது. கற்கள் முற்களை போல குத்தியிருக்கும். ஆனால் அதைவிட பெருவலியை தாங்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் உங்களுக்கிருந்தன. நீங்கள் உபதேசித்த அகிம்சா நெறியை பின்பற்றி கால் நுாற்றாண்டாக வேலை செய்து வந்த காங்கிரஸ் மகாசபை மாகாணத்தேர்தலுக்கு பிறகு கிடைத்த பதவி மயக்கத்தில் சேவா உணர்ச்சியும் கட்டுப்பாடும் மறைந்து பொருளுக்காகவும் அதிகாரத்திற்காகவும் தவறான காரியங்கள் செய்து வருவதை நீங்கள் கேள்வியுற்றிருந்தீர்கள். காங்கிரஸ் பின்பற்றி வந்த உன்னதமான லட்சியங்கள் அத்தனை சீக்கிரத்தில் மறைந்து வருவதையும் நீங்கள் பொறுத்துக் கொண்டீர்கள்.
தடக்… தடக்… தடக்… ஒலி அதிகமானபோதுதான் ரயில் நின்று கிளம்பி வேகமெடுப்பதையும் நான் இறங்க வேண்டிய இடம் நெருங்கி வருவதையும் உணர்ந்தேன். நெரிசல் குறைந்து வெளிக்காற்று முகத்தில் வீசியபோது பசியுணர்வு எழும்ப, ரொட்டியை எடுத்து கடித்தேன். நான் உண்பதை, அதை கொடுத்தவர் கவனித்திருக்க வேண்டும். இன்னொன்றை எடுத்து நீட்டியபோது நான் மறுக்காமல் வாங்கிக் கொண்டேன். ரயில் பயணத்தில் ஒருமுறை உங்கள் உணவுக்காக அல்லாடியது நினைவுக்கு வருகிறது அண்ணலே. நீங்கள் வரும் சேதி அறிந்துக் கொண்டு ஒவ்வொரு நிறுத்தத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மகாத்மா காந்திக்கு ஜே! காந்தி வாழ்க! என்ற கோஷங்கள் காதைப் பிளந்தன. உங்களை காணும் ஆவலில் முண்டியடித்தவர்கள் உங்களை கண்டதும் உணர்ச்சியின் ததும்பலில் கண்ணீர் வடிப்பதும் ஹரிஜன நிதிக்காக பணம் கொடுப்பதும் பெண்கள் தங்கள் அணிகளை அளிப்பதும் சிலர் உங்களிடம் பணம் கொடுத்து கையெழுத்துப் பெற்றுக் கொள்வதுமாக உங்கள் பயணம் தொடர்ந்தது. இரு நிறுத்தங்களுக்கு நடுவே நீங்கள் கீழே படுத்து ஓய்வெடுத்துக் கொண்டீர்கள். சில சமயம் உறங்கியும் போனீர்கள். உங்கள் வயிறு குழைந்திருந்தது. அப்போதுதான் மதிய உணவு மாலை ஐந்தான பிறகும் வந்து சேரவில்லை என்பது நினைவுக்கு வர, எப்படியோ அடுத்த நிறுத்தத்தில் உங்கள் உணவை ஏற்பாடு செய்து விட்டோம். இப்போதும் என் கண்கள் இயல்பாக வெளியே ஆட்களை தேடுகின்றன. வெறிச்சோடிய வெளியில் காற்று மண்ணை தூற்றிக் கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த பிறகு நீங்கள் நாடு முழுமைக்கும் இம்மாதியான பயணங்களை மேற்கொண்டு வெட்டவெளிகளுக்கு ஜீவன் உண்டாக்கினீர்கள்.
அன்று நவகாளி ஜில்லாவில் கிராமம் தோறும் வீதிதோறும் வீடுதோறும் சென்று ஆறுதல் கூறியும் கூட்டங்கள் நடத்தியும் போதனை செய்தீர்கள். உங்கள் சுற்றுப்பயண விபரங்கள் முன்னரே அறிவிக்கப்பட்டதால் சிலர் நீங்கள் போகும் வழிகளில் ஆணிகளையும் கண்ணாடித்துண்டுகளையும் பதித்து வைத்த போது நீங்கள் புண் நிறைந்த காலுடன் “ஆண்டவன் என்னை பாதுகாத்தால் எவர் என்னை அழிக்க முடியும்“ என்றீர்கள். ஆனால் உங்கள் பேச்சு உரத்தக்குரலில் முணுமுணுப்பது போலிருந்தது. உங்கள் உடல் அத்தனை தொய்வாக இருந்தது. உங்களுடன் வரும் இளம்பெண்களின் பாதுகாப்பு குறித்து மற்றவர்கள் அஞ்சியபோது லட்சக்கணக்காக இந்து பெண்களை தைரியமாக இருக்கும்படி சொல்லி விட்டு என் பேத்திகள் மட்டும் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று நினைப்பது சரியில்லை என்றீர்கள். நீங்கள் எப்போதும் உங்கள் குரலை உயர்த்துவதேயில்லை. ஆனால் அது ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்த குரலாக இருக்கும். பொதுக்கூட்டங்களிலோ பிரார்த்தனைக் கூட்டங்களிலோ நீங்கள் முன் கூட்டி தயாரித்துக் கொள்ளாத உரையை உங்கள் உள்ளத்தின் தொனியிலிருந்து பேசுகிறீர்கள். அதனால்தான் அவை அமைதியாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. ஆனால் அதனை முதல் இரண்டு அல்லது மூன்று வரிசைகளுக்கு மேல் எட்டாத பலவீனமான குரல் என்கிறான் கௌர். ஆனந்த்கௌர். அவன் உங்கள் இறப்பிலிருந்தே ஆனந்தமாகதான் இருக்கிறான்.
நவகாளியில் முஸ்லிம்களிடம் பெற்ற எதிர்ப்பையும் அச்சுறுத்தலையும் பீகாரில் இந்து அமைப்புகளிடமிருந்தும் பெற்றீர்கள். நடந்த வன்முறைக்கு இந்துக்களை குற்றம்சாட்டக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டீர்கள். நீங்களோ, சக இந்துக்களின் தவறுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என்றால் நான் என்னை இந்துவாக அழைத்துக் கொள்ள அருகதையற்றவனாவேன் என்று பதிலளித்தீர்கள். உங்களுக்கு எதிராகத் தோன்றிய எதிர்ப்பு சக்திகளை நீங்கள் குறைவாக மதிப்பிடவில்லை. உங்கள் மீது நடந்த தாக்குதல்கள் தோல்வியுற்றபோது “எல்லா தடவைகளிலும் அவர்கள் தோற்றுக் கொண்டே இருக்கமாட்டார்கள் அல்லவா?” என்றீர்கள். அப்போது நீங்கள் அமைதியாக இராட்டையில் நுால் நுாற்றுக் கொண்டிருந்தீர்கள்.
அது ஒரு யக்ஞம். ஒரு யோகிக்கு மட்டும் இவையெல்லாம் சாத்தியப்படும். உங்கள் தவத்தை மேலும் மேலும் கடுமையாக்கிக் கொண்டீர்கள். உங்கள் காரியங்கள் கவனிக்க வந்தவர்களை ஆளுக்கொரு புறமாக சேவைக்கு அனுப்பிவிட்டீர்கள். தங்கள் வீட்டுக்கூரைகளின் மீது நின்றுக்கொண்டு நவகாளியில் இந்துக்கள் வெட்டி சாய்க்கப்படுகிறார்கள் என்றும் அவர்களை காக்க வேண்டும் என்றும் உரக்கக் கூவும் தைரியசாலிகள் நிறைந்த தேசத்தில் எங்களிடம் ஒரேயொரு காந்தி நீங்கள் மட்டுமே இருந்தீர்கள். உங்கள் அணுக்கத் தொண்டர்களின் தியாகம் நீங்கள் விதைத்த விதையின் வீரியத்தை சொன்னது. தண்டிக்கு அருகே காரடி என்ற கிராமத்தில் வாழ்ந்த உங்கள் சீடரொருவர் வரிக்கொடா இயக்கத்தில் பங்கேற்றமையால் அவரின் வீட்டையும் நிலங்களையும் ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. இந்தியா சுதந்திரம் பெறும்வரை தன் உடமைகளை திரும்பக் கோர மாட்டேன் என்று உறுதியிருந்தது அவரிடம். 1937ல் மும்பை ராஜதானியில் காங்கிரஸ் அரசு உருவானபோது முதல்வர் அவரிடம் கையகப்படுத்தப்பட்ட உடமைகளை திருப்பியளிக்க தயாராக இருந்தபோதும் அவர் தன் நிலையிலிருந்து மாறவில்லை. 1947ல் சுதந்திரம் கிடைத்த பிறகும் கூட அவருக்கு அதே நிலைப்பாடுதான். அவர் உங்களிடம் “நீங்கள் கனவு கண்ட சுதந்திரத்தை இந்தியா அடைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா மகாத்மா?” என்றார். நீங்கள் “துரதிஷ்டவசமாக இல்லை என்றே கூற வேண்டும்” என்று பதிலுரைத்தீர்கள். அப்போது உங்கள் கண்களில் வலியின் சாயல் ஓடியது. சில அவநம்பிக்கைவாதிகள், நீங்கள் ஏற்கவில்லையென்றால் என்ன? உங்களுடைய மரணத்துக்கு பிறகு உங்கள் மனைவியும் பிள்ளையும் அதை ஏற்றுக் கொள்ளதான் போகிறார்கள் என்றனர். அவர் அதற்கும் பதில் தயாராகவே வைத்திருந்தார். “இப்படி ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்திருந்ததால் நான் திருமணமே செய்துக் கொள்ளவில்லை” என்றார். இப்படியான மகத்தான சீடர்களை நாடு முழுமைக்கும் பெற்றிருந்த உங்களுக்கு எதிராகவும் ஒரு நிலைப்பாடு இருக்கதானே செய்தது?
என் நண்பர் கூறுகிறார், காந்தியை முழுவதும் நம்ப மாட்டேன் என்று. இருப்பினும் அவரைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ஒருவித சமாதானத்தையும், ஒருவித சக்தியையும் அடைகிறேன் என்கிறார். மீராபென்னோ உங்கள் கண்களில் ஒளியை தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்றார். பட்டேல் உங்களுடன் இணக்கமாவதற்கு முந்தைய நாட்களொன்றில் அவரும் மாவ்லங்கரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த அறைக்குள் நீங்கள் நுழைந்தபோது மாவ்லங்கர் எழுந்துக் கொள்கிறார். பட்டேல் ஏனென்று புருவம் உயர்த்த, அவர் “காந்தி வருகிறார். அதான் எழுந்தேன்” என்கிறார். பட்டேல், அதற்கு பதிலாக இந்த விளையாட்டை கவனித்தால் நீங்கள் எவ்வளவோ கற்றுக் கொள்ளலாம். அவரிடம் உள்ள யாவும் முழு முட்டாள்தனமான கொள்கைகள் என்றாராம். இத்தனைக்கும் நீங்கள் தென்னாப்பிரிக்காவில் உங்களை நிரூபித்திருந்தீர்கள். நீங்கள் இந்தியாவிற்கு வந்தவுடன் கோகலேயை காணச் சென்றீர்கள். கோகலேயின் இந்திய சமுதாயச்சேவை சங்கத்தில் சில காலம் பயிற்சியாளராக பணி செய்வது என்று முடிவாயிற்று. அங்கு நீங்கள் கழிப்பறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தபோது உங்களை சுட்டிக்காட்டி “உங்களின் இந்த புதிய சீடரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கோகலேயிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் நாமெல்லாம் போன பிறகு அவரே இந்தியாவின் தலைவராக வரப்போகிறார் என்றாராம்.
ஆனால் நீங்கள் சிலவற்றில் தடுமாறிதான் போனீர்கள். தனிநாடு கோரிய முஸ்லிம்களை உங்களால் வெற்றிக்காண முடியவில்லை. தவிர்க்கவியலாத நிலை உருவாகி வருவதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள். வாழ்நாள் முழுவதும் சுதந்திரத்திற்காக பாடுபட்டதன் பலன் முடிவில் துண்டாடப்படாத இந்திய விடுதலையாக விடியப்போவதில்லை என்று அழுத்தும் இதயசுமையை சமாளித்துக் கொண்டு பிரிவினையால் தீர்வு காணாமல் விடப்பட்ட பூசல்களை கூட சமாதான முறையிலேயே அணுகினீர்கள். உங்கள் வழிமுறைகள் சுலபமானதல்ல. ஆனால், உங்கள் கொள்கை எப்போதும் சமாதானத்தை புறக்கணிக்காததாகவே இருந்தது. உங்களது ஆழ்ந்த கருத்து வெறும் அரசியலை பற்றியதாக மட்டும் இருக்கவில்லை. காங்கிரஸ் மகாசபையை சேர்ந்தவர்கள் உங்களிடம் மன வேறுபாடு கொண்டிருந்த ஒரு சமயத்தில் நீங்கள் “என்னை தலைவனாக தேர்ந்தெடுப்பதும் எடுக்காததும் உங்களை பொறுத்தது. நீங்கள் விரும்பும்போது என்னை வெளியில் தள்ளுவதும் கூட உங்களை பொறுத்ததுதான். நீங்கள் விரும்பினால் என் தலையை வெட்டி விடுவதும் கூட உங்களை பொறுத்தேதான் உள்ளது. ஆனால் நான் உங்களுக்கு தலைவனாக இருக்கும்வரை இத்தகைய கட்டுப்பாட்டு விதிகள் இருக்கதான் செய்யும்” என்றீர்கள். மிக எளிமையும் மிக மரியாதையும் எஃகு போன்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும் கொண்ட விசித்திரமான உத்தரவுகள் உங்களிடமிருந்து வந்துக் கொண்டேயிருந்தன. பிரிட்டிஷாரின் உறவோடும் துணையோடும் முழு சுதந்திரம் பெற முடியும் என்றபோது அவர்கள் உங்களை மதிப்பு வாய்ந்த அரைப்பயித்தியம் என்று கூட எண்ணினர்.
அன்று உங்களுடன் நடைப்பயிற்சி முடித்து விட்டு திரும்பியபோது நீங்கள் சிறிதும் பெரிதுமாக கற்களை பொறுக்கிக் கொண்டீர்கள். ஆச்சரியப்பட்டு வினவியபோது இங்கிருக்கும் வயலுக்கு குறுக்கே முக்கியமான பாதை வரைக்கும் இணைப்புப்பாதை அமைக்க வேண்டியுள்ளது. ஒப்பந்தக்காரருக்கு சாமான்களுக்கும் கூலிக்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். நாம் சிறிதுசிறிதாக கற்களை சேகரித்து வைத்தால் பாதி பணம் மிச்சமாகும் என்றீர்கள். நான் சற்று மிகையாக எண்ணுவதாக வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். இச்செயல், குடத்தில் நீரையள்ளி சென்று ஆற்றை நிரப்பும் முயற்சி என்றெண்ணிக் கொண்டேன். ஆனால் அதைதான் நீங்கள் திட்டமிட்டிருந்தீர்கள். சாதி, மதம், ஆண்டான்அடிமை சமூகம், சமஸ்தானம், மன்னராட்சி என்றெல்லாம் ஒழுங்கற்று கிடந்த இந்திய சமுதாயத்தின் மீது வாகாக ஏறியமர்ந்து கொண்டிருக்கும் அந்நிய ஆட்சியை அகற்ற எத்தனை உறுதி தேவைப்பட்டிருக்கும் உங்களுக்கு? அதுவும் சாத்வீக முறையில். கடலில் இறங்கி விட்ட பிறகு கரை எத்தனை தொலைவு என்பதை நீங்கள் கண்டுக் கொள்ளவேயில்லை அண்ணலே.
உங்கள் குறிக்கோளும் நீங்கள் அடையவிரும்பும் இலக்கும் தேசாபிமானிகள் நியாயமாக எண்ணுவதுதான். ஆனால் அதற்கு நீங்கள் கையாளும் முறை புதுமையானது, விந்தையானது. வெற்றிகரமானதும்கூட. உங்கள் நடவடிக்கைகள் யாரோ செய்த கொடுமைகளுக்காக யாரிடமோ போராடுவது போன்ற எண்ணத்தை கூட ஏற்படுத்தலாம். தீண்டாதாரிடமுள்ள குறைகளை களைந்து அவர்களை இந்து சமயத்திற்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று நீங்கள் விருப்பம் கொண்டீர்கள். அம்பேத்காரோ அவர்களைப் பாதுகாக்க தனிச்சமூக அமைப்பு வேண்டும் என்று விரும்பினார். இது உங்களுக்கு ஒழுக்க முறையில் தவறாகவும், அரசியல் முறையில் அபாயகரமாகவும் தோன்றிற்று. ஒரு திட்டத்தைப் பற்றியோ ஒரு கொள்கையைப் பற்றியோ முடிவெடுக்கும் விஷயத்தில் எவ்வித ஆடம்பர அலங்காரமுமின்றி மேலெழுந்த வாரியாகத் தர்க்கம் செய்யாமல் நீங்கள் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவீர்கள்.
ஆனால் எல்லாமே உங்களின் கைகளை மீறி சென்றுக் கொண்டிருந்தது. காங்கிரஸாருக்கு கூட இப்போது நீங்கள் தேவையில்லாத பாரமாக போய் விட்டீர்கள். நாலாபக்கமும் வன்முறை வெறியாட்டம் போடும் இத்தருணத்தில் யாருமற்ற தனியனான, ஏழை முதியவனான நான் செய்யக்கூடியது என்ன? என் உயிரை தவிர தருவதற்கு இனி என்ன இருக்க முடியும்? உண்மையில் இறக்க வேண்டும் என்ற முடிவோடு நான் எந்த உண்ணாவிரதத்தையும் துவங்கியதில்லை. என் மனச்சத்தியை மேம்படுத்தவும் பிறர் தம் தவறுகளை திருத்திக் கொள்ளவுமே அதை அகிம்சையின் ஆயுதமாக பயன்படுத்தினேன். வெறுப்புணர்வு மண்டிக் கிடக்கும் இன்றைய என் மக்களை பார்க்கையில், இவ்வளவு காலமாக நான் உயர்த்திப் பிடித்த கொள்கைகள் மண்ணில் வீழ்ந்து மட்குவதை உணர்கிறேன். இவ்வளவு வன்மமும் குரூரமும் உள்ளுக்குள்ளேயே இத்தனை நாள் பதுங்கிக் கிடந்ததா? நேரம் வாய்த்தவுடன் அது மனிதகுல சாபமாக வெளிவந்து விட்டதா? நான் வேண்டுவது சகோதரத்துவம் நாடும் அமைதிச்சூழலையே. அதற்கு விலை என் உயிரென்றால் அதுவும் சம்மதமே. செய் அல்லது செத்து வீழுங்கள் என்பதே இனி எனக்கான உபதேசம் என்று நீங்கள் வெதும்பியபோது உங்கள் கண்கள் ஒளி மங்கி ஜீவன் இழந்திருந்தது. கடவுளின் அனுக்கிரகம் இல்லாமல் ஒரு இலைக்கூட மரத்திலிருந்து விழாது என்பீர்கள் அடிக்கடி. இதுவும் கடவுளின் அனுக்கிரகம்தானா அண்ணலே?
ரயில் நின்றபோது காற்றும் நின்றுப் போயிருந்தது. இரண்டாவது வட்டமேசை மாநாட்டின்போது சிம்லாவிலிருந்து கால்காவுக்கு புறப்படுவதற்கான ரயில் தவறி விட்டதால் வைஸ்ராய் உங்களுக்காக விசேட ரயிலை ஏற்பாடு செய்திருந்தார். புறப்படுவதற்கு முன் நீங்கள் ஆற்றிய உரையில், வட்டமேசை மாநட்டிற்கு ஒற்றை பிரதிநிதியாக என்னை தேர்ந்தெடுத்ததன் மூலம் தேசம் என்மீது எவ்வளவு திடமான நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதை நான் அறிவேன் என்றீர்கள். நடப்புச் சூழலையும் நீங்கள் அறிந்தே வைத்திருந்தீர்கள்.
நீங்களோ, வங்காளம் எரிந்துக் கொண்டிருக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றனர். இருண்ட கல்கத்தாவில் ஒலிக்கும் அவர்களின் அழுக்குரல்களை மறந்து நான் எங்ஙனம் ஒளியில் மிளிரும் டில்லிக்கு வர முடியும். தேவைப்பட்டால் என்னுயிரை கொடுத்தாவது இங்கு அமைதியையும் இணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றீர்கள். உங்களின் கனமான இந்த வார்த்தைகளை ஏந்திக் கொண்டு புறப்பட எத்தனித்த அந்த தூதுவரை நீங்கள் வழியனுப்ப மரத்தினடிக்கு வந்தீர்கள். அப்போது மரத்திலிருந்து காம்பை விடுத்த இலையொன்று கீழே விழ, நீங்கள் அதை எடுத்து அந்த அன்பரிடம் கொடுத்து “நண்பரே என்னிடம் அதிகாரமோ செல்வமோ ஏதுமில்லை. இந்த உலர்ந்த இலையை நேருவிடமும் பட்டேலிடமும் எனது சுதந்திர தின பரிசாக கொடுத்து விடுங்கள்” என்றீர்கள். நீங்கள் இதை சொன்னபோது அவ்வார்த்தைகளின் வலி அந்த அன்பரின் கண்களில் கண்ணீராக வழிந்தது. நீங்களோ “இறைவன் எத்தனை மகத்தானவன். உலர்ந்த இலையை அனுப்புவதில் அவருக்கு விருப்பமில்லை என்பதால் அதை கண்ணீரால் ஈரமாக்கி விட்டார்” என்றீர்கள். இதை கூறும்போது உங்கள் முகம் சிரிப்பால் மலர்ந்திருந்தது. “பாருங்கள்.. இந்த இலை இப்போது சிரிப்பால் மிளிர்கிறது. இதை அவர்களிடம் என் பரிசாக கொண்டு சேருங்கள்” என்றீர்கள்.
சுதந்திரத்திற்கு சில வாரங்களுக்கு முன் கல்கத்தாவில் தங்கியிருந்த உங்களை சந்திப்பதற்காக தூதுவர் ஒருவர் வந்திருந்தார். அவரை நேருவும் பட்டேலும் தங்கள் விருப்பத்தை கோரும் கடிதத்துடன் உங்களிடம் அனுப்பி வைத்திருந்தனர். “நீங்கள் இந்திய தேசத்தின் தந்தை. இந்தியா சுதந்திரம் பெறும் தினத்தன்று நீங்கள் டில்லிக்கு வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்றிருந்தது அக்கடிதத்தின் வாசகங்கள்.
வெட்டவெளியில் எழுந்த காற்று என் கண்ணீரின் ஈரத்தை உலர்த்தி கன்னத்தை கறையாக்கியிருந்தது. ரயில் சீரான தாளகதியில் தடக்கு…. தடக்கு…. தடக்கு… என்று சென்று கொண்டிருந்தது.
என் உள்ளத்தில் எழும் நினைவுப்பதிவுகள் போல நீங்கள் அன்று கூறிய மொழிகளை உங்கள் குரல் பதிவுகளாக்கிக் கொண்டார்கள். “என்னைச் சுற்றிலும் உள்ள ஒவ்வொரு பொருளும் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கையில், மாற்றம் ஏதுமில்லாத ஒன்று, இந்த மாற்றங்களிலெல்லாம் ஊடுருவி பாய்ந்திருப்பதை நான் இலேசாக மங்கலாக காண்கிறேன். அது எல்லாவற்றிலும் ஊடுருவிச் சென்று உற்பத்தி செய்கிறது. கரைகிறது. மீண்டும் உற்பத்தி செய்கிறது..”
ஆம் அண்ணலே. மாற்றமில்லாதவொன்று, இந்த மாற்றங்களிலெல்லாம் கரைந்து மீண்டும் உற்பத்தி செய்கிறது. அது நீங்கள் விதைத்தது.
ரயில் வண்டி நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தை கடந்து சென்று விட்டது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி அதற்கான பயணக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டேன்.
***